Headlines News :
முகப்பு » , , , , , » பண்டாரநாயக்கவின் வர்க்க, வம்சாவளிப் பின்னணி - என்.சரவணன் (1956: 11)

பண்டாரநாயக்கவின் வர்க்க, வம்சாவளிப் பின்னணி - என்.சரவணன் (1956: 11)

1956 அரசியலை புரிந்துகொள்வதற்கு எந்தளவு பண்டாரநாயக்கவை சூழ இருந்த அரசியலை புரிந்துகொள்வது முக்கியமோ அதுபோல பண்டாரநாயக்கவின் வகிபாகத்துக்குப் பின்னால் இருந்த குடும்ப செல்வாக்கும், அக்குடும்பத்தின் பரம்பரை வழித்தோன்றலையும் அறிந்துகொள்வது முக்கியம்.

கோல்புறுக் அரசியல் திட்டத்தின் கீழ் சிங்கள, தமிழ், பறங்கி இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த உத்தியோகபற்றற்ற உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டார்கள். இவர்களில் தமிழ், சிங்கள உறுப்பினர்களாக ஆன இருவரது குடும்பங்களும் பிற்காலத்தில் இலங்கையின் அரசியலில் செல்வாக்கு படைத்த முதன்மைக் குடும்பங்களாக அவ்வவ் இனங்களில் ஆனார்கள். தமிழ் தரப்பில் கேட் முதலியார் குமாரசுவாமி குடும்பமும், சிங்களத் தரப்பில் பண்டாரநாயக்க – மகாமுதலி ஒபேசேகர – சேரம் என்கிற இரு பரம்பரைகள் தான் தொடர்ச்சியாக இரு இனங்கள் மத்தியில் அரசியல் செல்வாக்குள்ள சக்திகளாக ஒரு நூற்றாண்டுக்கும் மேல் கோலோச்சின.

அதன் அடிப்படையில் இலங்கையின் சட்டசபை மரபில் முதலாவது தமிழ் பிரதிநிதியாக ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியும், முதலாவது சிங்கள அங்கத்தினராக ஜே.ஜி.பிலிப்ஸ் பண்டிதரத்ன (Johannes Godfried Philipsz Panditharatne)  என்பவரும், ஜே.சீ.ஹீலபிரான்ட் முதலாவது பறங்கி இனத்து உறுப்பினராகவும் தெரிவானார்கள்.  அதாவது இலங்கையின் நாடாளுமன்ற மரபில் முதலாவது சுதேசியர்கள் இவர்கள் தான். இவர்களில் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

பிலிப்ஸ் பண்டிதரத்னவின் மகன் பிலிப்ஸ் கிஸ்பேர்டஸ் பண்டிதரத்ன (Philipsz Gysbertus Panditaratne). அவரின் மகள் அன்னா புளோரென்டினா பிலிப்ஸ் (Anna Florentina Philipsz). அன்னா புளோரென்டினாவை திருமணமுடித்தவர் கிறிஸ்டோபர் ஹென்றிகஸ் டயஸ் பண்டாரநாயக்க (Don Solomon's son, Don Christoffel Henricus Dias Bandaranaike). இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் அவர்களில் ஒரே ஒரு ஆண் அவர் தான் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க மகா முதலியார் (Sir Solomon Dias Abeywickrema Jayatilleke Senewiratna Rajakumaruna Kadukeralu Bandaranaike - 1862-1946). அவருக்கு பிறந்த மூவரில் ஒருவர் தான் SWRD பண்டாரநாயக்க.

பண்டாரநாயக்கவின் பூட்டன் டொன் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க

இதில் இன்னொரு கிளைக் கதையையும் கூறவேண்டும். மேற்படி கிறிஸ்டோபர் ஹென்றிகஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் தந்தை தான் தொன் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க முதலியார் (Don Solomon Dias Bandaranayake, Mudaliyar). கண்டி அரசன் 1815 இல் ஆங்கிலேயர்களால் சிறை பிடிக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட போது கண்டியிலிருந்தே மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் அன்றைய ஆளுநரின் பிரதான மொழிபெயர்ப்பாளராக இருந்தவரான மேற்சொன்ன ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி. அதுபோல அரசன் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவேளை  அவருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் இந்த தொன் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க முதலியார்.

பண்டாரநாயக்க குடும்பத்துடன் இலங்கையின் பெரிய செல்வாக்கும், வசதிகளையும் கொண்ட பரம்பரையினர் ஒரு சங்கிலியாக ஒரு வலைப்பின்னலுக்குள் இணைவதை அவர்களை மரவடிவில் (Family Tree) தொகுத்து  பார்க்கும் போது காண முடியும். பண்டிதரத்ன பரம்பரை, சேரம் பரம்பரை, ரத்வத்த பரம்பரை, ஒபேசேகர பரம்பரை, விஜேவர்தன பரம்பரை போன்றவர்கள் ஒன்றாக இணைவதைக் காண முடியும். இன்றும் இலங்கையின் அரசியல் அதிகாரம், வர்த்தக ஏகபோகம், ஊடக அதிகாரம் என அனைத்தும் இவர்களின் செல்வாக்கில் இருப்பதைக் காண முடியும்.

1915 கலவரத்தில் 

கண்டி திரித்துவக் கல்லூரியின் (Kandy Trinity College) அதிபர் பாதிரியார் எ.பீ.பிரேசர் அக் கல்லூரியில் தேசிய உடை அணிந்து கல்லூரிக்குச் சென்ற மாணவர்களை கதிரைக்கு மேல் ஏறச் செய்து தண்டித்து அவமதித்து மிரட்டியது பற்றி முந்திய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். அவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. ஆங்கிலேய அரசு பிரேசருக்கு சாதகமாகவே தீர்ப்பையும் வழங்கியிருந்தது. பிரேசர் வெள்ளைத்திமிர் கொண்ட அராஜக பாதிரியாராக இருந்திருப்பதை பல நூல்களும் பதிவு செய்திருக்கின்றன.


1915 கண்டி கலவரக் காலத்தில் ஹென்றி என்கிற அப்பாவி இளைஞனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவும் ஒரு காரணம். ஹென்றி செல்வாக்குள்ள செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அக்குடும்பத்தோடு இருந்த தனிப்பட்ட காழ்ப்பை இதன் மூலம் தீர்த்துக்கொண்டார் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க.

ஹென்றியை விடுவிக்கக் கூடாது என்று ஆளுநர் சார்மசுக்கு அழுத்தம் கொடுத்தவர்களின்  கண்டி திரித்துவ கல்லூரியின் கல்லூரியின் (Trinity College, Kandy) அதிபராக இருந்த பாதிரியார் ஏ.ஜே பிரேசர் (Alec Garden Fraser), மற்றும் "மகா முதலியார்" சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவும் முக்கியமானவர்கள். அவர் பேதிரிஸ் குடும்பத்தினர் மீது கொண்டிருந்த பொறாமையும் ஹென்றி மீது பழி தீர்க்கச் செய்தது என்கிற கருத்துக்களை பலர் எழுதியிருக்கிறார்கள். ஹென்றியின் மீது ராஜதுரோக குற்றம் சுமத்தி பதவியை பறித்து, கைது செய்யப்படுவதற்கு சொலமன் பண்டாரநாயக்காவின் அபாண்டமான குற்றச்சாட்டும் காரணமாகியிருந்தது. சொலமன் முதலி இலங்கையில் ஆங்கிலேயர்களின் முதன்மையான விசுவாசியாக அறியப்பட்டிருந்தது மட்டுமன்றி கலவரத்தின் போது அப்பாவி சிங்களவர்கள் பலர் தண்டனைக்கு உள்ளாகவும் அவர் காரணமானார். எனவே தான் இன்று வரை சொலமன் முதலியாருக்கு வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை சிங்களவர்கள் வழங்குவதில்லை. அதுபோல அவரை ஒரு  காட்டிக்கொடுப்பாளராகவும், துரோகியாகவுமே பல இடங்களில் இடம்பிடித்துள்ளார்.

பண்டாரநாயக்க தனது பெற்றோர், சகோதரிகளுடன்

பண்டாரநாயக்கவின் தாயார்

வேயங்கொட அத்தனகல்ல ஹொரகொல்ல “வலவ்வ”யைச் சேர்ந்த சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க மகாமுதலிக்கும் டேசி எசலின் ஒபேசேகர அம்மையாருக்கும் 1898
ஏப்ரலில் திருமணம் நிகழ்ந்தது. திருமணத்தின் பின்னர் டேசி டயஸ் பண்டாரநாயக்க என்று அழைக்கப்பட்டார். டேசி டயஸின் தகப்பனார் சேர் கிறிஸ்தோப்பல் ஒபேசேகர அரசாங்க சபை உறுப்பினர். பாரிய அளவு விவசாய நிலங்களுக்கு சொந்தமானவர். பெரிய தனவந்தர். அவர் திருமணம் முடித்ததும் அன்றைய அரசாங்க சபை உறுப்பினரான ஜேம்ஸ் த அல்விஸ்ஸின் மகள் எஸ்லின் மரியா அல்விஸ் என்பவரைத் தான்.

சேர் கிறிஸ்தோப்பல் ஒபேசேகரவின் மகள் தான் டேசி எசலின். அதுபோல டேசி எசலினின் சகோதரன் F.A.ஒபேசேகர 1924 இலிருந்து 1931வரை அரசாங்க சபையின் உறுப்பினராகவும் 1934-1935  காலப்பகுதியில் சபாநாயகராகராகவும் இருந்தவர். டேசியின் மூத்த சகோதரி கேட் முதலியார் சிமோன் வில்லியம் இலங்ககோனை (Gate Mudaliyar Simon William Ilangakoon) மணமுடித்தார்.

அதாவது டேசியின் தகப்பனார், சகோதரன், பாட்டனார், கணவர் அனைவருமே அரசாங்க சபை உறுப்பினர்கள். அதன் டேசியின் மகன் S.W.R.D.பண்டாரநாயக்கவும், அவரின் மனைவி சிறிமாவும், அவர்களின் பிள்ளைகள் சந்திரிகாவும், அனுரா பண்டாரநாயக்கவும கூட பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், ஆட்சியாளர்களாகவும் ஆனார்கள். டேசி சமூகத்தில் ஒரு செல்வாக்கு பெற்ற ஒருவராக இருந்தார்.

இந்த அனுபவம் தான் டொனமூர் அரசியல் திட்டக் காலத்தில் பெண்கள் வாக்குரிமைச் சங்கம் (WFU - Women’s Franchise Union) 07.12.1927 அன்று கொள்ளுப்பிட்டியில் நிகழ்ந்த கூட்டத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டபோது வாக்குரிமை கோரி தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் முதலாவது கையெழுத்தை வைத்து தொடக்கினார் டேசி. பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தின் முதலாவது தலைவியும் அவர் தான். டொனமூர் ஆணைக்குழு முன்னிலையில் டேசி உள்ளிட்ட குழுவினர் சென்று சாட்சியமளித்ததுடன். பல்வேறு இடங்களில் கூட்டங்கள் நடத்தி வாக்குரிமைக்காக போராடினார்கள். பெண்களுக்கான வாக்குரிமையை எதிர்த்த ஆண் ஆரசியல் தலைவர்களை எதிர்கொண்டு தக்க பதில் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். 1931 இல் டொனமூர் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் சமமாக சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டதற்கு இந்தச் சங்கமும் டேசியின் வகிபாகமும் முக்கியமானது. அப்போது எந்தவொரு பிரிட்டிஷ் காலனித்துவத்தின் கீழ் இருந்த எந்தவொரு நாட்டிலும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

சேர் சொலமன், டேசி ஆகியோர் திருமணமாகி ஒன்பதாவது மாதத்தில் 08.01.1889 அன்று கொழும்பு முகத்துவாரம் எலிஹவுஸ் இல்லத்தில் பண்டாரநாயக்க பிறந்தார். பண்டாரநாயக்கவுக்கு உடன் பிறந்த சகோதரிகள் இருவர்.

டொன் கிறிஸ்தோப்பர் டயஸ் பண்டாரநாயக்க

நிலப்பிபுத்துவ பின்னணி

SWRD பண்டாரநாயகவின் தகப்பனார் சேர் சொலமன் டயஸ் 22.05.1862 இல் பிறந்தார். சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க வளர்ந்த விதம் குறித்து பண்டாரநாயக்கவின் குடும்ப நண்பர் ஹென்றி அபேவிக்கிரம தனது நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.

“எப்போதும் உயர்குடி பழக்க வழக்கங்களையே அவர் கொண்டிருந்தார். தனது வீட்டில் உணவு அருந்தும்போது கூட கோர்ட் டை அணிந்தபடி தான் காணப்படுவார். ஒரு நாளைக்கு பல தடவைகள் உடையை மாற்றுவார். அவரின் கோர்ட் பையில் எப்போதும் அழகான பூவை இணைத்திருப்பார். தூர இடங்களுக்குச் செல்லும்போது இதற்காகவே பூக்களையும் கொண்டு செல்வார்.

அவர் பயணம் செய்கிற வேளைகளில் அவருடன் செல்லும் வேலைக்காரர்கள் அனைவரும் அழகாக அணிந்தபடி தான் அவரோடு செல்வார்கள். இங்கிலாந்துக்கு செல்லும்போது கூட அவருக்கு விசுவாசமான பணியாளர்களும் கூட அழைத்துச்செல்லப்படுவார்கள்.

பண்டாரநாயக்க குடும்பத்து பெண்கள்  பலர் பாடசாலைக்கு அனுப்பப்படவில்லை. மாறாக பாடசாலையையே வீட்டுக்கு கொண்டு வந்தார்கள் என்று தான் கூற வேண்டும். இலங்கையில் இருந்த கிறிஸ்தவ ஆயரின் துணைவி, ஆளுநரின் துணைவி என்போரின் ஏற்பாட்டில் இங்கிலாந்தில் இருந்து சிறந்த ஆசிரியர்கள் இங்கிலாந்தில் இருந்து வருவிக்கப்பட்டார்கள். அவர்கள் தங்கி கற்பிப்பதற்காக வசதியான முழு ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட்டன பண்டாரநாயக்க குடும்பம் செய்து கொடுத்தது.

சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவின் சகோதரிகளான ஏமி, எலிசா ஆகியோருக்கு எமி வான் டெடல்சன் என்கிற ஐரோப்பிய ஆசிரியை ஒருவர் தங்கியிருந்து கற்றுக்கொண்டுத்தார். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மிளிகளுடன் இசை, ஓவியம் போன்றவை அவர்களுக்கு விசேடமாக கற்றுக்கொடுக்கப்பட்டன. அவர்கள் பாடுவது, பியோனோ இசைப்பது, தையல் கலை, மேற்கத்தேய நடனம், என்பவற்றுடன் டெனிஸ், பூப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களையும் ஆடத் தெரிந்திருந்தார்கள். 1891இல் சொலமன் டயஸ் குடும்பத்துடன் இங்கிலாந்து பயணமானபோது அவர்களின் பிள்ளைகளின் தனிமையைப் போக்க உதவியாளர்களாக அவர்களின் இலங்கையில் அவர்களின் ஆசியர்களாக வேலைக்கமர்த்தப்பட்டிருந்தவர்களில் ஒருவரான சேர்ச் அம்மையாரையும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். 1894 ஆம் ஆண்டு பயணத்தின் போது எலிசா டயஸ் பண்டாரநாயக்க இங்கிலாந்தின் அரச மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இராணியை சந்தித்துவிட்டு வந்தார்கள்.  மகாமுதலியாரின் இன்னொரு சகோதரியான ஏமி ஐரோப்பிய சுற்றுலா செய்த முதலாவது சிங்களப் பெண் என்று குமாரி ஜெயவர்த்தன தனது நூலில் குறிப்பிடுகிறார்.

இத்தகைய மேட்டுக்குடி பெண்களுக்கு கணிதம், விஞ்ஞானம், வரலாறு, சமூகம் போன்றவற்றை கற்பிக்காமல் கலை சார்ந்தவற்றை மாத்திரம் கற்றுக்கொடுத்து வீட்டுப்பெண்களாக வைத்திருக்கக் கூடிய பாடங்களையே கற்றுக்கொடுத்தார்கள் என்கிற விமர்சனத்தையும் குமாரி ஜெயவர்த்தன விமர்சிக்கத் தவறவில்லை.

சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவின் மரணத்தின் போது இறுதி நிகழ்வுகள் எப்படி நிகழ வேண்டும் என்று கூட அவர் திட்டமிட்டிருந்தார். 6 ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்கி அதில் ஒரு உயர்ந்த கோபுரத்தையும் கட்டி அதன் கீழ் நேராக உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை விரிவாக தனது உயிலில் எழுதி வைத்திருந்தார்.

பிரித்தானிய ஆட்சியின் போது அவர் ஒரு பலம்பொருந்திய அதிகாரி. பிரித்தானிய விசுவாசத்துக்காக முகாந்திரம் பதவியிலிருந்த அவரை 1882 ஆம் ஆண்டு முதலியார் பதவியைக் கொடுத்தது. அதன் பின்னர் சில வருடங்களில் மகா முதலியார் பதவியும் வழங்கப்பட்டதுடன் அவரது சேவைவைப் பாராட்டி சேர் பட்டமும் இன்னும் பல முக்கிய பதவிகளையும் கொடுத்து கௌரவித்தது பிரிட்டிஷ் அரசு. பிரித்தானிய ஆட்சியில் மிகவும் இளம் வயதில் மகாமுதலியார் பதவியை வகித்தவர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க. அவர் அப்பதவியை பெற்றபோது அவருக்கு வயது 33.

இலங்கையின் பெரும் பணக்காரராக இருந்த அவரிடம் ஏராளமான நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட விவசாயத்திலிருந்து நிறைய வருமானம் அவருக்கு வந்தது. ஹொரகொல்ல வளவ்வையில் அன்று வேறெங்கும் கிடைக்காத பழங்கள் எல்லாம் அங்குள்ள மரங்களில் கிடைத்தன. அவரிடம் தரமான குதிரைகள் பல இருந்தன. தினசரி காலையில் குதிரைச் சவாரி செய்வதிலிருந்து தான் அவரின் அன்றைய நாள் ஆரம்பமாகும். தனது குதிரைகளை குதிரைப் பந்தயத்துக்கும் அனுப்பி வைப்பார். அவை வென்று கொண்டு வரப்படும் பரிசுக் கோப்பைகளை அழகாக வைப்பதற்காகவே மண்டபத்தில் ஒரு தனியான அறை இருந்தது.

சிங்கம், புலி, யானை என பல விதமான மிருகங்களை வளர்க்கும் ஆசை அவருக்கு ஏற்பட்டது. ஹொரகொல்ல காணியிலேயே ஒரு மிருகக்காட்சி சாலையை அவர் உருவாக்கினார். அந்தக் காலத்தில் இலங்கையில் எங்குமே ஒரு மிருகக் காட்சிசாலை இருக்கவில்லை. இதனால் இலங்கைக்கு வருபவர்கள் நாளாந்தம் இங்கு மிருகங்களைக் காண வந்தார்கள். இந்த மிருகக் காட்சி சாலையை சுற்றி வெளிநாடுகளில் இருந்து அவர் அவ்வப்போது கொண்டுவந்த அபூர்வமான மரங்களை வளர்த்தார். அப்படியான மரங்கள் பேராதனைப் பூங்காவில் கூட கிடையாது. அங்கு வருபவர்கள் இவற்றை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

எப்போதும் அவர் ஒரு ராஜ கம்பீர மிடுக்குடன் தான் காணப்பட்டார். அவருக்கான உடைகள் லண்டனில் தைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டன.

அவரது இறுதி உயில் பத்திரத்தில் ஹொரகொல்ல பங்களா காணியையும், ரோஸ்மீட் பங்களாவையும் பண்டாரநாயக்கவுக்கு எழுதிவைத்தார். நீண்டகாலமாக தனது வாகன சாரதியாக கடமையாற்றிய டீ.டீ.குனரத்னவுக்கு ஒரு சிறிய பங்களாவை எழுதிவைத்தார். தன்னுடன் எப்போதும் வெளிநாடுகளுக்கும், உள்நாட்டிலும் பயணிக்கும் பணியாளர்கள் சிலருக்கு இருபது, இருபத்தைந்து ஏக்கர் நிலங்களையும், ஏனைய பணியாளர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் என்கிற அடிப்படையில் எழுதி வைத்ததுடன், சமாதிக்கு அருகில் உள்ள அழகான ஐந்து ஏக்கர் தென்னங்காணியை கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கும் எழுதிகொடுத்தார். 1946 ஆம் ஆண்டு தனது 86 வது வயதில் அவர் மரணமானார்.

சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவுக்கு 1902 இல் பிரித்தானியவின் CMG (Companion of the Order of St Michael and St George) பட்டாள் வழங்கப்பட்டது அதன் பின்னர் அவருக்கு பிரித்தானிய அரசின் உயரிய பட்டமான நைட் பட்டமும் (KCMG – Knight Commander of the Order of St Michael and St George) வழங்கப்பட்டது. இந்தப் பட்டத்தைப் பெற்ற முதலாவது இலங்கையர் அவர் தான். உயர்குடிப் புத்திஜீவிகளின் பிரபலமான அமைப்பான “ராஜரீக கழகத்தின் இலங்கைக் கிளை”யில்  (Ceylon Branch of the Royal Asiatic Society) ஆயுட்கால உறுப்பினராகவும் அவர் இருந்து வந்தார்.

1947 ஆம் ஆண்டு அமைச்சரவை

இரு குடும்பங்களின் இணைவும் முரணும்

இந்த பின்னணியில் பிறந்த பண்டாரநாயக்க; அரசியல் அதிகாரத்துவ செயற்பாட்டில் இறங்குவதும் தனக்கான அரசியலையும், நிகழ்ச்சிநிரலையும் வடிவமைப்பதும் நிகழ்கிறது.

இலங்கையில் இன்னொரு பொருளாதார – அரசியல் செல்வாக்கு படைத்த குடும்பமான சேனநாயக்க குடும்பத்தினர் டொனமூர் அரசியல் திட்ட காலத்தில் மேலும் பலமான இடத்துக்கு வந்தடைந்தார்கள். இந்த காலப்பகுதியில் டீ.எஸ்.சேனநாயக்க, நுகவெல திசாவ, சேர் ஜோன் கொத்தலாவல, டீ.எச்.கொத்தலாவல, ஜே.எச்.மீதேனிய அதிகாரம், ஏ.எப்.மொலமூரே போன்றோர் அரசாங்க சபையில் அங்கம் வகித்தார்கள். 1936 ஆம் ஆண்டு அரசாங்க சபையில் அக்குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சிலர் அதிகரித்தார்கள்.

இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டு சுதந்திரத்துக்கான அறிகுறிகள் தென்பட்டவேளை இந்த இரு குடும்பங்களும் அரசியல் தலைமைக்காக ஒன்றிணைந்தன. ஆனால் அந்த இணைவு ஒரு சில ஆண்டுகளிலேயே பிளவுற்று இலங்கையை ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி என்கிற இரு கட்சி செல்வாக்குள்ள ஒரு பாரம்பரியத்துக்குள் கொண்டு சென்றது.

பண்டாரநாயக்க, ஜே.ஆர் ஜெயவர்த்தன ஆகிய இரு முக்கிய தலைவர்களின் குடும்பப் பின்னணியும் தமிழகப் பின்னணியைக் கொண்டதே என்கிற ஆய்வுக் கட்டுரைகளை இலங்கையின் தேர்ந்த அரசியல், வரலாற்று புலமையாளர். தொழிற்சங்கவாதியுமான ஜேம்ஸ் டீ ரத்னம் எழுதிய கட்டுரைகள் இவர்கள் வழிவந்த இன – மத - வர்க்க – சாதிய வழித்தடம் பற்றி ஆராய்பவர்களுக்கு பயன்படக்கூடியது. ஜேம்ஸ் டீ ரத்னம் பண்டாரநாயக்கவின் நெருங்கிய நண்பரும் கூட பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து  “முற்போக்கு தேசியவாதிகள் கட்சி” (Progressive Nationalist Party) என்ற கட்சியை ஆரம்பித்தவர் அவர்.

இலங்கையில் சுமார் இரண்டு நூற்றாண்டுகால பண்டாரநாயக்க குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு சந்திரிகா குமாரனதுங்கவுடன் 2005 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆனால் இலங்கையின் பிரதான அரசியல் நீரோட்டத்தின் திசைவழியை ஆட்டுவித்ததில் அக்குடும்பத்தினரின் செல்வாக்கு முக்கிய வரலாற்றுப்பதிவுகளாக கருதப்படவேண்டியது.

1956 அரசியல் அதிர்வுகளைத் தீர்மானிப்பதில் இக்குடும்பச் செல்வாக்கின் காரணிகளையும் புறந்தள்ளிவிடமுடியாது.

நன்றி - தினக்குரல் 18.10.2020

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates