Headlines News :
முகப்பு » , » பொதுப்போக்குவரத்துக்களில் பெண்கள் எதிர்க்கொள்ளும் சேஷ்டைகள் - எம்.பவித்ரா

பொதுப்போக்குவரத்துக்களில் பெண்கள் எதிர்க்கொள்ளும் சேஷ்டைகள் - எம்.பவித்ரா

பாலினபாகுப்பாடு என்பது சர்வதேச அளவில் ஒரு பொதுப்பிரச்சினையாக நீடித்து வருகிறது. பெண்களும் மூன்றாம் பாலினரும் ஆணாதிக்கத்தின் அடக்குமுறைக்குள் சிக்கித் தவித்து வருகின்றனர். சமூக கலாசார பண்பாட்டு வழிமுறை இன்று வளர்ந்திருந்தாலும் கூட ஒரு பாலினம் மற்றையதை விட உயர்ந்தது என்கிற கருத்தியல் பலமாகத் தான் இன்றும் நிலவுகின்றது. பாலினவாதமானது பாலின கொடுமைகளை உடல், உள ரீதியில் பாதிப்பை செலுத்த காரணியாக வளர்ந்துள்ளது.   இப்பிரச்சினை தொடர்பாக புரிந்துக்கொள்ளப்படாத ஒரு சூழலே சமூகத்தில் காணப்படுகின்றது. இந்தச் சிக்கல்களை கையாள்வதற்கான ஆய்வுகளும் தரவுகளும் கூட குறைவாக காணப்படுவதும் இப்பிரச்சினையின் பண்புகளில் ஒன்று, எனவே இதற்கான தீர்வுகளை எட்டுவதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் கூட சிக்கல்கள் நிலவுகின்றன.

1969 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA - UNITED NATIONAL FUND POPULATION ASIA) நிறுவப்பட்டது. அப்போதிலிருந்து  ஆரோக்கியமான இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கான  சாத்தியங்களை விரிவுப்படுத்தும் செயற்பாடுகளில் இந்நிதியம் ஈடுபட்டு வருகின்றது. பெண்களின் மீதான வன்முறையற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் UNFPA இணைந்துள்ளது. தெற்காசிய நாடுகளில் இலங்கை  மிகக்குறைந்த மகப்பேறு இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. இலங்கை  சுகாதார சேவையில் முன்னேற்றத்தை கண்டுள்ளமைக்கு UNFPAயுடன் இணைந்து செயற்பட்டுவருவதும்  ஒரு காரணமாக அமைகிறது.  அத்தோடு UNFPA இலங்கையில் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான விடயங்களில் 2015ஆம் ஆண்டுக்கு பின்னர்  அதிக கவனத்தை எடுத்துவருகின்றது . 

இலங்கையுடன் இணைந்து UNFPA 2017ஆம் ஆண்டு  மேற்கொண்ட ஆய்வின் மூலம்  பெண்களின் மீதான பாலியல்  வன்முறைகள் தொடர்பாக அறிக்கையினை வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கை, இலங்கையின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு அளப்பரியதெனக் குறிப்பிடுகிறது. பெண்கள் தமது பொருளாதார தேவைக்காகவும், கல்வி நடவடிக்கைகாகவும் அன்றாடம் பொதுப்போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றார்கள்.  இவ்வாறு பொதுப்போக்குவரத்தை  பயன்படுத்தும் பெண்களில்  90 வீதமானவர்கள்  பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த துன்புறுத்தல்களின் விளைவாக  பெண்கள், சிறுமிகளின் வாழ்க்கையில் மட்டுமன்றி, அவர்களின் கல்வி, வாழ்வாதாரங்கள் என அனைத்து வழிகளிலும் பக்க விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்ப பெண்கள்  தமது அன்றாட பயண வழியாக பொதுப்போக்குவரத்தையே நம்பியேயுள்ளனர். 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி ஆய்வில் 15 க்கும் 35க்கும் இடைப்பட்ட பெண்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் பாதிபேர் தொழிலுக்குச் செல்வதற்காகவும், மேலும் 28 சதவீதமான பெண்கள் கல்வி நடவடிக்கைகாகவும்  பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

துஷ்பிரயோகம் என்பது வெறுமனே உடல் ரீதியான தொந்தரவுகளை மட்டும் குறிப்பவையல்ல.  சில சந்தர்ப்பங்களில் வாய்மொழி மூலம் மேற்கொள்ளப்படுகின்ற வசனங்களும், சுடுசொற்களும் கூட துஷ்பிரயோகங்களாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. பெரும்பாலும் பெண்களை கிண்டல் செய்தல், கடுமையான தொனியை பயன்படுத்துதல், கீழ்த்தரமான நகைச்சுவை போன்றதாகவும் அவை அமையும். பெண்களின் சுய மரியாதையை முற்றிலும் பாதிக்கும் சொற்களும் இதில் உள்ளடங்கும்.

74% பெண்கள் விரும்பத்தகாத தொடுகைக்கு உள்ளாவதாகவும், 60% பெண்கள் தங்களது தனிப்பட்ட இடங்களில் துன்புறுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதில்  52% பெண்கள் குறிப்பிடும்போது குற்றவாளிகள் பிறழ்வான நடத்தையில் ஈடுப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இவற்றில் 97% வீதமான ஆண்களே குற்றவாளிகளென அடையாளம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாய்வில் பங்கேற்ற 23 வயதான வருணி மானெல்ல என்பவர்  “பல சந்தர்ப்பங்களில், ஆண் பயணிகள் தகாத முறையில் சிறுவர் சிறுமிகளை தொட்டு சாய்ந்துக்கொண்டிருப்பதை நான் கண்டுள்ளேன். பேரூந்து நடத்துபவர்களும் பேரூந்தில் ஏறும் சிறு குழந்தைகளை தேவையில்லாமல் தொடுகின்றார்கள்”  என தெரிவித்துள்ளார்.  18 வயதான ராணிகுமாரி என்பவர் குறிப்பிடுகையில் “சுமார் 15 வயது சிறுவன் பாலியல் சேஷ்டை புரிந்தபோது நான் அசௌகரியமாக உணர்ந்தேன்”  என்றும் கூறியிருந்தார். இவ்வாறு அன்றாடம் தமது தேவைக்காக பொதுபோக்குவரத்தை பயன்படுத்தும் பெரும்பாலான பெண்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.

பொதுப்போக்குவரத்துகளில்  இடம்பெறும் துன்புறுத்தல்கள்  அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதித்ததாக 44சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர். 29 சதவீதம் பேர்  இது தங்கள் பள்ளி செயல்திறனில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், 37 சதவீதம் பேர் இது அவர்களின் பணி செயல்திறனை எதிர்மறையாக பாதித்ததாகவும் கூறியிருந்தனர். 

இந்த முறைகேடுகளும்,  அவை உருவாக்கும் சமத்துவமின்மையும், பெண்களின் பொருளாதார ஓரங்கட்டலுக்கு அதிக பங்களிப்பை செலுத்துகின்றன. 2006 இல் இருந்து 2014 வரையான காலப்பகுதியில் முறையே 6% இருந்து 35% மாக பெண்களின் தொழிற் பங்களிப்பு சரிந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில் இருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறான பிரச்சினைகள் வெறுமனே பெண்களின் பாதுகாப்பில்  மாத்திரம் தாக்கம் செலுத்துவதில்லை. பாலின வன்முறை, பெண்களின் உரிமைகள், பாலின சமத்துவம் என்பவற்றிலும் பாரியளவிலான செல்வாக்கை செலுத்துகின்றது.

2019 டிசம்பர் மாதம் 29ம் திகதி UNFPAஇன்  மற்றுமொரு அறிக்கையின்படி,   குடும்ப சுகாதார பணியகத்தின் புள்ளிவிவரங்களில், இலங்கையில் ஆண்டுதோறும் 20 வயதுக்குட்பட்ட 20,000 சிறுமிகள் துஷ்பிரயோகம் காரணமாக கர்ப்பமாகியுள்ளார்கள்  எனக் கூறுகின்றது. தேசிய இளைஞர் சுகாதார கணக்கெடுப்பின்படி, 50% இளைஞர்கள் முறையான பாலியல், இனப்பெருக்க சுகாதார கல்வியைபெற்றதில்லை. இதனால் 2015 ஆம் ஆண்டில் 15 வயதிற்குட்பட்ட 75 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் பொது இடங்களில் பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படுவதாக இவ்வாய்வு வெளிப்படுத்தியுள்ளது. பெண்கள் இதுபோன்ற அசௌகரியத்திற்கு உட்படுத்தப்படும்போது பயம், அவமானம்   போன்ற காரணங்களால் அருகில் உள்ளவர்களிடமோ அல்லது காவல்துறையினரிடத்திலோ  புகார் அளிக்க சங்கடப்படுகின்றார்கள். துஷ்பிரயோகங்கள் குறித்து புகாரளிப்பது தொடர்பில் பெண்களுக்கு வழிப்புணர்வு ஊட்ட யு.என்.எஃப்.பி.ஏ உடன் இணைந்து இலங்கை அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்தாண்டு பெப்ரவரி 27ஆம் திகதியன்று யு.என்.எஃப்.பி.ஏ  இலங்கையில் பாலின சமத்துவம், பாலியல்  வன்முறை தொடர்பாக இலங்கை சுகாதார அமைச்சுடன் முதல் கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. பாலின அடிப்படையிலான வன்முறை என்பது உலகில் பாரிய அளவில் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறலாகும். மூன்றுக்கு ஒரு பெண் தன் வாழ்நாளில் உடல் மற்றும் பாலியல் வன்முறைகளை அனுபவிப்பதாக மதிப்பீடுகளின் ஊடாக அறியமுடிகிறது. பெண்கள் அல்லது சிறுமிகள் வன்முறையில் பாதிக்கப்படும்போது தேவையற்ற கர்ப்பங்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் மற்றும் HIV உள்ளிட்ட பரவும் தொற்றுக்களுக்கும் உள்ளாக நேரிடுகிறது. 

இவ்வாறான வன்முறைகளினால் உளவியல் ரீதியான அதிர்ச்சியில் இருக்கும்  தரப்பினர்களுக்கான வலுப்படுத்தல் செயற்பாடுகளை ஆரம்பிக்கவேண்டும். பாலியல் அடிப்படையிலான வன்முறை குறித்த தேசிய வழிகாட்டல்களில் இலங்கை அரசுடன்  யு.என்.எஃப்.பி.ஏ இணைந்து செயற்பட தொடங்கியுள்ளது. துன்புறுத்தல் அல்லது அச்சுறுத்தல் பெண்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வைக் கட்டுப்படுத்துகின்ற ஒன்றாக அமைகின்றது.  

இக்குற்றங்களைச் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பெண்களின் மீதான வன்முறையாளருக்கு எதிராக புகார் செய்வதற்கான செயல்முறைகளும் நடைமுறைகளும் நெறிப்படுத்தப்படுகின்ற அதிகார அங்கங்களில் சட்டம் திறம்பட இயங்குதல் அவசியம். பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அனைவருக்கும் பாதுகாப்பானதொரு பொதுப்பயண கலாச்சாரத்தை உருவாக்குவதல் முக்கியமானதாகும்.

பெண்களின் மீதான தனித்துவமான சிக்கல்களை தீர்ப்பதற்கான பொறிமுறைகளை அடையாளம் காணும் வகையில் கொள்கை வகுப்பை மேற்கொள்வதற்கான சிறந்த வழிமுறைகள் இலங்கையில் இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக அதற்கான பெண்கள் பட்டயம் வலுவானதாகவும் இல்லை. பெண்களின் பிரச்சினைகளை கையாள்வதற்கான ஆணைக்குழுவை ஏற்படுத்துவது தொடர்பான உரையாடலும் வெறும் சிந்தனை மட்டத்தில் மாத்திரமே சுருங்கிவிட்டிருக்கிறது. அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான நிர்ப்பந்தங்கள் சமூக மட்டத்தில் இருந்து எழாதததும் இந்த பலவீனத்துக்கு காரணம் எனலாம். இது தொடர்பில் வெகுஜன பொது அபிப்பிராயத்தை கட்டியெழுப்புவது காலத்தின் கட்டாயம்.

நன்றி - தினகரன்



Share this post :

+ comments + 1 comments

👍 super akka

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates