Headlines News :
முகப்பு » , , » சிங்களத் தீண்டாமைச் சாதியாக - “தமிழ் கத்தற” சாதி | என்.சரவணன்

சிங்களத் தீண்டாமைச் சாதியாக - “தமிழ் கத்தற” சாதி | என்.சரவணன்


மைக்கல் ரொபர்ட்ஸ் (Michael Roberts) இலங்கையின் சமூக வரலாற்றறிஞர். ஒரு மூத்த சமூகவியல் ஆய்வாளர். என்னுடைய தலித்தியம் பற்றிய கட்டுரைகளை அறிந்து என்னோடு தொடர்புகொண்டு உரையாடிக்கொண்டிருக்கையில் அவர் “Demala Gattara” என்கிற பதத்தைப் பயன்படுத்தியிருந்தார். சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் இலங்கையின் சாதியம் குறித்து  பலநூற்றுக்கணக்கான நூல்களை வாசித்து கடந்து வந்திருக்கிறேன். ஆனால் இந்தப் சொல் எனது கவனத்துக்கு வந்திருக்கவில்லை.

ஆர்வமிகுதியால் அவர் சொன்ன நூலிலும் மேலும் பல இடங்களிலும் தேடத்தொடங்கினேன். சிங்களத்தில் தேடுவதற்காக சிங்கள உச்சரிப்பை சிங்களத்தில் எழுதித்தரும்படி சில சிங்கள எழுத்தாள நண்பர்களிடம் தனிப்பட்ட ரீதியில் கேட்டேன். அவர்கள் எவரும் இது பற்றி அறிந்திருக்கவில்லை. இது என்ன என்று என்னிடம் திருப்பிக் கேட்டார்கள். தங்களுக்கும் இதைப்பற்றி தேடும் ஆர்வம் வந்திருப்பதாக சிலர் கூறினார்கள். இறுதியில் சிங்களத்தில் “දෙමළ ගත්තර” (தெமல கத்தற) என்று அழைக்கப்படுவதாக ஒரு நண்பர் தேடிச்சொன்னார்.

“தெமல கத்தற” குறித்து சிங்களத்தில் மிகவும் சொற்பமான விபரங்களே உள்ள போதிலும் சமூகவியல், சாதியம் என்பவை குறித்து ஆராய்பவர்கள் இதைப் பற்றி அறிந்திருத்தல் அவசியம் என்று தோன்றிற்று. மேலதிகமாக தோண்ட விளைபவர்களுக்கு சில மூலத்தகவல்களை இங்கு பகிரவிரும்புகிறேன்.

தமிழ்ச் சமூகத்தில் வெள்ளாளர் சாதிக்கு நிகரான சிங்கள விவசாய சாதியாக சிங்கள சாதியமைப்பில் “கொவிகம” சாதி காணப்படுகிறது. எப்படி வெள்ளாள சாதி தமிழ்ச் சமூகத்தில் பெரும்பான்மைச் சாதியோ அதுபோல சிங்கள சமூக அமைப்பிலும் கொவிகம” சாதி பெரும்பான்மைச் சாதி. ஒரு பாரம்பரிய விவசாயப் பண்பாட்டைக் கொண்ட நாடு என்கிற வகையில் “பெரும்பான்மை விவசாய சாதி” என்கிற பண்புக்கு வாய்ப்பு இருக்கவே செய்கிறது

“கொவிகம” சாதிக்குள் இருக்கின்ற உபபிரிவுகளில் “பொறவகார”, “பட்டி”, “கத்தற”, “வஹால்” ஆகிய சாதிகள் இன்று வழக்கொழிந்து போய்விட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுவது வழக்கம். “கத்தற” என்பதன் நேரடி அர்த்தம் கைதிகள் எனலாம். அதே போல “வஹால்” என்பது  “அடிமைகள்” என்று பொருள். 

கொவிகம சாதிக்குள் இவர்கள் எப்படி வந்தார்கள் என்கிறீர்களா? கத்தற சாதியினர் கொவிகம சாதியாக ஆனார்கள் என்பதை விட கொவிகம சாதியினர் “கத்தற” சாதியாக எப்படி ஆனார்கள் என்பதை வரலாற்று மூலங்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

“கத்தற” என்கிற சாதியைப் பற்றி சாதிய ஆய்வுகளில் குறிப்பிடும் போதெல்லாம் இவர்களை தீண்டப்படாத சாதியக் குழுமமாகவே குறிப்பிட்டிருக்கின்றனர். இலங்கையில் பல இடங்களில் “கத்தற” கிராமங்கள் இருந்திருக்கின்றன. அல்லது அரச ஆணைகளின் பேரில் “கத்தற” கிராமங்களாக ஆக்கப்பட்டுள்ளன.

“கத்தற” என்பதை சிங்களத்தில் பல இடங்களில் “தெமல கத்தற” என்று தான் அழைக்கிறார்கள். பிற்காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து வந்து சிங்கள சமூகத்தோடு கலந்துவிட்ட தமிழர்களையும் சிங்களச் சூழலில் “கத்தற தெமல” என்கிற சாதியக் குழுமமாகத தான் அடையாளப்படுத்துகிறார்கள். இன்றைய இலங்கையில் “கத்தற” என்பதை அறிந்த சாமான்ய சிங்களவர்கள் வெகு குறைவினரே. அப்படி அறிந்தவர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் இனவாத ரீதியில் திட்டுவதற்கும் “கத்தற” என்கிற பதத்தைப் பயன்படுத்தி வருவதைக் இப்போதும் காணமுடிகிறது காண முடிகிறது. சமீபத்தில் ரவி கருணாநாயக்கவை “தெமல கத்தற” என்று திட்டியதை ஒரு இணையத்தளத்தில் காண முடிந்தது. அந்தளவு வலியைத் தரக்கூடியதா இந்த “தெமல கத்தற” என்கிற சொல்?

இலங்கையில் பண்டைய கல்வெட்டுகளில் “கத்தற” என்கிற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில ஆய்வுகளில் “Gattara” என்றால் சிங்கள சாதியமைப்பில் விவசாயத் தொழிலைச் செய்பவர்கள் என்று பொதுவாக கூறப்பட்டிருக்கிற போதும் (1) விவசாய சாதியாக “கொவிகம” சாதியைத் தான் சிங்கள சமூகத்தில் குறிப்பிடுவது வழக்கம்.

பண்டைய சிங்கள அரசர்களின் படைகளில் சேவகம் செய்வதற்காக தமிழகப் பகுதிகளில் இருந்து வந்த மறவர், கள்ளர் சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இவர்கள் கருதப்படுகிறபோதும் இவர்கள் ஆங்கிலேயர் காலத்தில் இலங்கைக்கு  வந்து குடியேறியவர்களே என்று வாதிடுபவர்களும் உண்டு. அதில் ஒரு பகுதி உண்மையும் உண்டு.

சிங்களவர்களுடனான போரில் கைது செய்யப்பட்ட தமிழ் அடிமைச் சாதிகளையே “தெமல கத்தற” என்று அழைக்கப்படுவதாகவும், அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்றும் வில்லியம் கில்பர்ட் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார். (2)

சிங்கள சாதியமைப்பு குறித்து ஆராய்பவர்களுக்கு முக்கிய நூலாக இன்றும் பயன்படும் நூல் பிரைஸ் ரயான் (Bryce Ryan) எழுதிய “நவீன இலங்கையின் சாதியம்” (Caste in Modern Ceylon – The Sinhalese System in transition) என்கிற நூல். இந்த நூல் முதன்முதலில் வெளிவந்த ஆண்டு 1953. இலங்கையில் நிலவிய சாதிகளை அதற்கு முன்னர் வெளியான நூல்கள் பல எவ்வாறு வரிசைப்படுத்தி தொகுத்திருந்தன என்பது பற்றிய விபரங்களை இந்த நூலில் தந்திருக்கிறார். “கத்தற” பற்றி பிற்காலத்தில் எழுதியவர்கள் பலரும் பிரையனின் நூலைத் தான் ஆதாரம் காட்டி வந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

ரயான் அந்த நூலில் “தெமல-கத்தற” என்கிற தனித் தலைப்பில் இது பற்றிய குறிப்புகளை பதிவு செய்திருக்கிறார். கரையோரப் பிரதேசமான அளுத்கம பிரதேசத்தில் விவசாய கிராமத்தில் ஆயிரக்கணக்கான “தமிழ் கத்தற” சமூகத்தவர்களை அடையாளம் காண முடிந்தது என்கிறார். அவர்கள் ஒதுக்கப்பட்ட சாதியினர் என்றும் சிங்கள கலாசாரத்துடன் கலந்துவிட்டவர்களாக அவர்களைக் காணமுடிகிறது என்றும் அவர்களை குறிப்பாக அழைக்க சில இடங்களில் “குலுபொத்து தெமல” (Kulupothu Demala) என்றும் அழைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இவர்கள் நெல் தூற்றல், கூடைப் பின்னுதல் போன்ற தொழில்களை பிரதானமாக செய்து வந்திருக்கிறார்கள் என்றும் ரொடி சாதியினருக்கு நிகராக அவர்கள் கருதப்பட்டாலும் ரொடி சாதியினர் அளவுக்கு ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார். சிங்கள சாதியமைப்பில் கடைநிலை சாதியாகவும், தீண்டப்படாத சாதியாகவும் ரொடி சாதியினரைக் குறிப்பிடுவது வழக்கம்.

“சலாகம” போன்ற சாதியினர் கொவிகம சாதியினரோடு பிற்காலத்தில் சேர்ந்து கலந்தாலும் அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினராகத் தான் கருதப்படுகின்றனர். அது போலத்தான் “கத்தற” சாதியினரும் ஒரு தாழ்த்தப்பட்ட சாதி என்கிற நிலைக்கும் கீழ் தான் வைக்கப்பட்டார்கள். மேலும் அயலவர்கள் அவர்களை கள்வர்களாகவும், அசிங்கமான மொழிப்பிரயோகத்தைக் கொண்டவர்களாகவும், முரட்டுத்தனமானவர்களாவும் கருதினார்கள். சில இடங்களில் கொவிகம சாதியினருக்கும் இவர்களுக்கும் இடையில் சாதி வெறுப்பைக் கொண்ட மோதல்கள் அடிக்கடி இடம்பெற்றன. அண்டைய கிராமங்களுடன் எப்போதும் சண்டையை உருவாக்குபவர்களாக இந்த தாழ்த்தப்பட்ட தமிழர்கள் (Tamil Outcastes) கருதப்பட்டார்கள். என்கிறார் ரயான். (3)

இந்த “தெமல கத்தற” சாதியினரின் தோற்றம் எல்லாளன் – துட்டகைமுனு சண்டைக் காலத்தைச் சேர்ந்தது என்று அடையாளம் காண முடிகிறது என்றும்  துட்டகைமுனு – எல்லாளன் சண்டையில் எல்லாளன் படை தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் கைதுசெய்யப்பட்ட எல்லாளனின் படையினர் சிங்களவர்களைத் திருமணம் செய்துகொண்டு கலந்து உருவான சந்ததியினரே தமிழ் “கத்தற” என்கிற நம்பிக்கை பிரையனிடம் அதிகம் காணப்படுகிறது. 

சிங்கள சாதியமைப்பில் பொரவக்கார, ஒலி, பலி, ஹின்ன மற்றும் தெமல கத்தற ஆகிய சாதிகள் நாளடைவில் பரவலாக சிதறி; சமூகத்தில் இரண்டறக் கலந்துவிட்டதை ரயான் மட்டுமன்றி பல ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையின் சிவில் சேவையில் பணியாற்றிய கொட்ரிங்டன்  (H.W.Codrington) பண்டைய இலங்கையில் பயன்படுத்தப்பட்ட அரசியல் வரலாற்று கலைச்சொற்களின் அகராதியொன்றைத் தயாரித்து 1924 ஆம் ஆண்டு வெளியிட்டார். பிற்காலத்தில் பல ஆய்வாளர்களும் அதை ஒரு முக்கிய ஆவணமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவரின் வரைவிலக்கணத்தின்படி “மன்னரால் ‘கீழ் சாதியாக்கப்பட்ட’ வெள்ளாளர்கள் என்று குறிப்பிடுகிறார்.(4)  மேலும் அவர் தெற்கு மாகாணத்தில் எந்தெந்த கிராமங்களில் “தமிழ் கத்தற” மக்களை இனங்காணக் கூடியதாக இருந்தது என்பதையும் பட்டியலிட்டிருக்கிறார்.(5)  சாரம்சத்தில்; தெற்கு, தென் மேற்கு மாகாணங்களிலேயே இவர்கள் அதிகம் வாழ்ந்ததாக பல ஆய்வாளர்களும் குறிப்பிட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

இதேவேளை “தமிழ் கத்தற” என்கிற குழுமமானது போர்த்துக்கேயர் காலத்திலேயே கருவாப் பயிர்ச்செய்கைத் தொழிலுக்காக இந்தியாவில் இருந்து வந்த கூலிகள் என்கிற கருத்தும் உண்டு. ஒரு வகையில் இதை உறுதிசெய்யும் வகையில் தோமஸ் வான் ரீ (Thomas Van Rhee) என்கிற போர்த்துகேய  கவர்னர் 1697 இல் எழுதிய நினைவுக் குறிப்பில் தகவல்கள் காணக்கிடைக்கின்றன. (6)

இவர்களை சாலியர்கள் (Chialias) என்று போர்த்துக்கேயர் காலத்தில் அழைக்கப்பட்டனர். ஆங்கிலத்தில் Chalias, Saliya என்றும் அழைக்கின்றனர். இவர்கள் தான் டச்சுக் காலத்தில் “சலாகம” என்கிற சாதியாக அடையாளம் பெற்றனர். தோமஸ் வான் ரீ யின் நூலில் கறுவாத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட “கத்தற:” சமூகப் பிரிவினர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இவர்கள் ஆரம்பத்தில் புல் வெட்டும் தொழிலைச் செய்தவர்களாக இருந்ததாகவும் பின்னர் கருவா உரிக்கும் தொழிலுக்கு அமர்த்தப்பட்டதாகவும் வலவிட்ட கோறளையில் தொடங்கப்பிட்டி (Dodangpapittie) கிராமத்தில் ஆற்றுக்கு அருகில் நிலைகொண்டார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார். (7)

“தமிழ் கத்தற”, “ஹின்ன” (சலவைத் தொழில் செய்யும் சாதி) ஆகிய சாதிக்குழுமங்கள் “சலாகம” சாதியுடன் தொடர்புபட்டு கறுவாத் தொழிலை மேற்கொண்டார்கள் என்கிறார் ரயான். சலாகம சாதிக்குள்ளேயே ஊழியக்காரர்கள் (Ulyakarayo) என்கிற பிரிவினராக இருந்ததாகவும் பின்னர் அது வழக்கொழிந்து போய்விட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

“ஆனாலும் "தமிழ் கத்தற” சமூகம் “ஹின்ன” சமூகத்திலிருந்து மிகவும் வேறுபட்டது. தொழிலாலும் கூட. அதேவேளை இவர்களுக்கு இடையில் திருமணத் தொடர்புகள் காணப்படுகின்றன. மேலும் “தமிழ் கத்தற” சாதியினர் “ஹின்ன” சாதியோடு கலப்பதை பெருமிதமாகக் கொள்ளவில்லை... சமகால இலங்கையில் இவர்கள் தமது போர்க்குணமும் ஒற்றுமையுமுள்ள  பாரம்பரியத்தை பெருமிதமாகப் பகிர்ந்துகொள்ளும் குழுமம்” என்கிறார் ரயான்.

ஆனால் “தெமல கத்தற” என்கிற சாதி குறித்து கண்டிய ராஜ்ஜியத்தில் வேறொரு பண்பும், அடையாளமும் இருக்கிறது.

ஜோன் டேவி (John Davy) எழுதிய  1821இல் வெளியிட்ட நூலில் (8) இலங்கையில் அவர் கண்ட சாதிகளைப் பட்டியலிட்டுள்ளார். அந்த வரிசையில் தாழ்த்தப்பட்ட கடைநிலை சாதிகள் இரண்டை அவர் குறிப்பிடுகிறார். அதில் ஒன்று “ரொடி”, மற்றது “கத்தற”. இந்த இரு சாதியினரும் தீண்டப்படாத சாதியினராக நடத்தப்பட்டதையும் அவர் பதிவு செய்திருக்கிறார். ஜோன் டேவி கண்டி ராஜ்ஜிய காலத்தில் ஆங்கிலேயர்கள் கண்டியைக் கைப்பற்றுவதற்கு நடத்திய போரின் முக்கிய சாட்சி. அவர் அப்போது இராணுவ சத்திரசிகிச்சை நிபுணராக பணியாற்றினார். அதேவேளை அவர் இலங்கை பற்றியும் கண்டி ராஜ்ஜியம் குறித்தும் எழுதிய இந்த நூல் (An Account of the interior of Ceylon and of its inhabitants) முக்கிய நூல்களில் ஒன்று. டேவியின் இந்த நூலைப் பயன்படுத்தாத வரலாற்றாசிரியர்கள் அரிதென்றே சொல்லலாம்.

“சாதிக்குறைப்பு” ஒரு தண்டனையாக!
கண்டி ராஜ்ஜிய காலத்தில் சாதியம் பற்றிய விசித்திரமான நடைமுறைகள் இருந்ததை அறிந்திருக்கிறோம். குறிப்பாக உயர்ந்தபட்ச தண்டனையாக “ரொடி” அல்லது “கத்தற” சாதியாக ஆகிவிடும்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளன. அத்தண்டனை மரணதண்டனைக்கு நிகராகக் கருதப்பட்டது. வரி செலுத்தாதவர்களையும், ஆணைகளை நிறைவேற்றாதவர்களையும் கூட “கத்தற” சாதியாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார் டேவி (John Davy). இதே கருத்தை 1842 இல் சார்ல்ஸ் பிரீதமும் (Charles Pridham) இதே விளக்கத்தை அளித்துள்ளார். சாதியம் என்பது பிறப்பால் நிர்ணயிக்கப்படுகிறது என்கிற இந்திய சாதியமைப்பின் இயல்பிலிருந்து மாறுபட்ட நடைமுறை இது. அதாவது குற்றவாளியாக கருதப்படும் ஒருவரை தாழ்த்தப்பட்ட கடைநிலை சாதியாக மாற்றும் அதிகாரம் கண்டிய சட்டத்தில் இருந்திருக்கிறது. சிங்கள சாதியமைப்பும் பிறக்கும்போது அனைவரும் சாதியாகத் தான் பிறக்கிறார்கள் என்கிற பண்பைக் கொண்டது தான். ஆனால் உயர் சாதியைச் சேர்ந்த சாதியினரை தண்டனையின் மூலம் “தாழ்த்தப்பட்ட: சாதியாக ஒரு அரச ஆணையின் மூலம் மாற்ற முடியும் என்கிற நடைமுறை கண்டி ராஜ்ஜியத்தில் மட்டுமல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புராதன இலங்கையின் வரலாற்றுக் கதைகளில் இருந்தும் அறிந்துகொள்ள முடிகிறது.

அதேவேளை தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து உயர்த்தப்பட்ட சாதிக்கு மாற்றும் வகையிலான பரிசோ அல்லது விருதோ இருந்திருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகத் தெரிகிறது. மேற்படுத்தப்பட்ட சாதியை தீண்டப்படாத சாதியாக மாற்றும் தண்டனை மட்டுமே நடைமுறையில் இருந்திருக்கிறது.

2000 வருடங்களுக்கு முன்னர் “சாதிக்குறைப்பு” தண்டனை
“பிறந்த ஆண் குழந்தையை தன்னந்தனியாக கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறாள் ஒரு தாய். ஊர் கிராமத் தலைவனும் அவனின் மனைவும் அவளுக்கு இருப்பிடத்தை அளித்து ஆதரவளிக்கிறது. அந்தச் சிறுவனை ஊரில் உள்ள மற்ற சிறுவர்கள் எப்போதும் இழிவாக அவமானப்படுத்துகின்றனர். இந்த அவமானங்களோடு முரட்டுத்தனமாக வளர்ந்து இளைஞனாகிறான். ஒரு நாள் தாய் கிராமத் தலைவனின் மனைவிடம் வந்து கொஞ்சம் நெல் மணிகளை கேட்டு மன்றாடுகிறாள். மேலதிக நெல்மணிகள் வீட்டில் இல்லையென்றும் ஆனால் பரணின் மேல் இருப்பதாகவும் அதை எடுத்துத் தருவதற்கு அங்கு பணிபுரிபவர்கள் எவரும் இல்லை என்றும் தோளில் மீது ஏற உதவி செய்தால் தான் ஏறி எடுத்துவிடுவேன் கிராமத் தலைவனின் மனைவி கூறுகிறாள். அதற்கு சம்மதித்து அதன்படி தோளில் ஏறி அந்த நெல்லைக் கொடுக்கிறாள். இந்த சம்பவத்தை அறிந்த மகன் அன்று தாய் கொடுத்த உனையும் அருந்தாமல் உணவையும் தள்ளிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்று வேதனையுடனும் ஆத்திரத்துடன் ஓரிடத்தில் அமர்கிறான்.

தூரத்தில் அரச ஊர்வலத்தின் மேளதாளங்கள் கேட்கின்றன. அரச யானை, அரச அதிகாரிகள் சகிதம் அந்த ஊர்வலம் அவன் இருந்த பாதை வழியே வருகிறது. யானை அவனை நோக்கி வந்து அவனின் கழுத்தில் ஒரு மாலையைப் போடுகிறது. ஊர்வலத்தில் வந்த அதிகாரிகள் அனைவரும் மண்டியிட்டு வணக்கம் செலுத்தி இத்தனை காலம் நாடு முழுவதும் அலைந்து திருந்ததில் உங்களைத் தான் யானை இனங்காட்டியுள்ளது நீங்கள் தான் இனி எங்கள் அரசர் என்கின்றனர். அந்த இளைஞன் அரசனாகிறான். அவனின் கடந்த கால துயரங்களை எண்ணிப் பார்க்கிறான் அவனின் “வலகந்தெனிய” என்கிற கிராமத்துக்குள் சென்று கிராமத் தலைவனையும், அவனின் மனைவியையும் ஒரு மரத்தில் தூக்கிலிடுகிறான். அவனை அவமானப்படுத்திய 60 சிறுவர்களை வயலுக்குள் புதைத்து யானையைக் கொண்டு அதனை மட்டமாக்கிறான். அது மட்டுமன்றி அந்த “கொவிகம” சாதிக் கிராமத்தையே “கத்தற” கிராமமாக பிரகடனப்படுத்துகிறான். இந்த “கத்தற” கிராமத்தவர்களுடன் எந்த கொடுக்கல் வாங்கல் செய்பவர்களும் அதே தண்டனைக்கு உள்ளாவார்கள். நீர் கூட அவர்களிடம் வாங்கிப் பருகக் கூடாது என்பது ஆணை.”
இந்தக் கதையை “வலகம்பா”வின் கதையாக டீ.ஜே.ஜயதிலக்க 110 வருடங்களுக்கு முன்னர் “The Ceylon National Review” என்கிற ஆய்விதழில் எழுதியிருக்கிறார்.(9) இந்த ஆய்விதலின் ஆசிரியராக இருந்தவர் ஆனந்த குமாரசுவாமி. அதை மைக்கல் ரொபர்ட்ஸ் போன்ற ஆய்வாளர்களும் கூட ஆதாரம் காட்டியிருக்கிறார்கள். இந்தக் கதையின் படி வலகம்பா காலத்திலேயே அதாவது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே “சாதிக்குறைப்பு” ஒரு தண்டனையாக மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரிகிறது. ஜயதிலக்க இந்தக் கதைக்கான ஆதாரத்தை அதில் குறிப்பிட்டிருக்கவில்லை. ஆனால் வலகம்பாவுக்கு வேறொரு கதையுண்டு.

துட்டகைமுனுவின் மரணத்தின் பின்னர் அவரது மகன் சாலியவுக்கு அரச பதவி கிடைக்கவில்லை. சாலிய "தாழ்த்தப்பட்ட" சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்ததால் தான் சாலியவுக்கு அந்தப் பதவி வழங்கப்படவில்லை என்கிறது சிங்கள வரலாற்று இலக்கியங்கள். ஆகவே துட்டகைமுனுவுக்குப் பின் அரச பதவி அவரின் சகோதரன் சத்தாதிஸ்ஸவுக்கே போனது. சத்தாதிஸ்ஸவின் மரணத்துக்கு பின் அவரது மகன்கள் மாறி மாறி ஒருவரை ஒருவர் கொலை செய்து மாறி மாறி ஆட்சி செய்தனர். அவர்களில் கடைசி இளைய மகன் தான் வலகம்பா. “வட்டகாமினி” என்கிற பெயராலும் வரலாற்று நூல்களில் அறியப்படுபவர்.

அதே வேளை மேற்படி யானை மன்னரைத் தெரிவு செய்யும் கதை மகாவம்சத்தில் துட்டகைமுனுவின் கதையாகத் தான் வருகிறது. தமிழர்களுடன் சண்டை பிடிக்க துணியாத தகப்பனை தூற்றிவிட்டு துட்டகைமுனு மாளிகையை விட்டு வெளியேறி ஒரு கிராமத்தில் தனது அடையாளத்தை மறைத்தபடி ஒரு சாதாரணனாக வாழ்கிறான். அங்கேயே ஒரு விவசாயியாக இருந்தபடி திருமணம் புரிந்து ஒரு மகனையும் பெற்று குடும்பமாக வாழ்ந்து வந்த வருகிறார். ஒரு நாள் அரச யானையுடன் பெரும் மேளதாளங்களுடன் வந்து யானை அவனுக்கு மாலை அணிவித்து அவனை அரச பதவியை வந்து எற்றுக்குள்ளும்படி வந்தவர்கள் கேட்கின்றனர். அவன் அரசனாகிறான். எல்லாளனுடனான போருக்குத் தயாராகிறான் என்கிற மகாவம்சம்.

மேற்படி “வலகம்பா” கதையில் “கத்தற கிராமம்” உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் கதை வலகம்பாவின் கதை தானா என்கிற கேள்வியோடு நிறுத்திக்கொள்கிறேன். 

கண்டி ராஜ்ஜியத்தில் “காடி”
பிரபல சிங்கள இயக்குனர் பிரசன்ன வித்தானகே சமீபத்தில் வெளியிட்ட திரைப்படமான “காடி” என்கிற திரைப்படத்தின் மையக் கதை கூட இந்த கண்டி ராஜ்ஜியத்தில் நடைமுறையில் இருந்த “சாதி மாற்ற தண்டனை” பற்றியது தான். “காடி” என்பது “ரொடி” சாதியினர் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் பெயர். (10)

கண்டிய சட்டத்தின்படி தேசத்துரோக அல்லது சமூக விரோத குற்றங்களை செய்தவர்களுக்கும, அவர்களின் குடும்பத்தினருக்கும் “சாதி கீழிரக்கள்” தண்டனை கொடுக்கப்பட்டதை ரொபர்ட் நொக்ஸ் தனது குறிப்புகளில் எழுதியிருக்கிறார். அப்பேர்பட்ட செயலை செய்துவிட்டு ஒருவன்  தப்பியோடிவிட்டால் அதற்கான தண்டனையை அவரின் மனைவிக்கு கொடுத்தார்கள். அப்படித் தப்பிச்சென்ற உயர்குல பிரதானிகளின் மனைவிமாருக்கு கொடுக்கப்பட்ட தெரிவு ஒன்றில் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து சாவது அல்லது "ரொடி" சாதியாக ஆவது. கண்டி ராஜ்ஜியத்தில் பெண்கள் வெள்ளை ஆடைகளையே அணிந்தார்கள். ஆனால் “ரொடி” சாதிப் பெண்கள் குட்டையான வேறு நிற துணியை இடுப்புக்கீழ் மறைத்திருக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தர்கள். அவர்கள் தமது மார்பை மறைக்க உரிமையற்றவர்களாக இருந்தனர். மேற்படி தண்டனையின்படி அப்பெண்கள் அணிந்திருந்த கச்சையும் நீக்கப்பட்டு "ரொடி" சாதியாக ஆக்கப்பட்ட ஒரு பெண் படும் துன்பம் பற்றியது தான் “காடி” திரைப்படம்.

டேவியின் நூலுக்கு அடுத்தபடியாக “கத்தற” பற்றிய குறிப்புகளை ஜோன் ஆர்மர் எழுதிய கண்டிய சட்டத்தின் இலக்கணம் (Armour's Grammar of the Kandyan Law) என்கிற நூலில் தொகுக்கப்பட்டுள்ள சாதிகளின் பட்டியலிலும் காணப்படுகிறது. ஜோன் ஆர்மர், ஜோசப் மார்டினஸ் பெரேரா ஆகியோர் 1861 இல் வெளியிட்ட நூலிலும் “கத்தற” சாதி பற்றிய குறிப்புகள் காணக் கிடைகின்றன. (11)

1892 இல் வெஸ்லியன் மிஷன் வெளியிட்ட பெரிய அளவிலான சிங்கள – ஆங்கில அகராதியில் “Gattaraya” (ගත්තරයා) என்பதற்கு “கைதிகளின் வழிவந்தவர்கள்” என்றும் “தண்டிக்கப்பட்ட திருடர்கள்” என்றும் அர்த்தம் கூறப்பட்டுள்ளது. அதே வேளை இதே அகராதியில் தான் “தெமல கத்தறு” (දෙමලගත්තරු - Demala - gattaru) என்பதற்கான விளக்கமும் கூறப்பட்டுள்ளது. “சிங்கள அரசர்களால் சிறைப் பிடிக்கப்பட்ட தமிழர்கள” என்றும் அதில் கூறப்பட்டுள்ளதுடன் இந்த மக்கள் மேல் மாகாணத்தில் பஸ்துன் கோரளையில் உள்ள  இந்திகஸ்துடுவ, பொந்துபிட்டிய ஆகிய பிரதேசங்களிலும் பெந்தோட்டை வலல்லாவிட்டி  கோரளையில் வல்லம்பகல்ல, கல்கந்த ஆகிய இடங்ளிலும் காலியில் கங்கபத்து பிரதேசம் போன்ற இடங்ளிலும் காணக் கிடைக்கின்றனர் என்று அந்த அகராதியில் கூறப்பட்டுள்ளது. (12)

இதே அகராதியில் இன்னொரு முக்கிய விளக்கத்தையும் காண முடிகிறது. ஓரிடத்தில் “நொகமன்னு” (නොකමන්නු) என்கிற ஒரு சொல்லுக்கு விளக்கம் தரப்படுகிறது. “உண்ணக்கொடுக்கக் கூடாதவர்கள்” என்பதே “நொகமன்னு” என்பதன் நேரடி அர்த்தம். சோறு உள்ளிட்டவை உண்பதற்கு அரசால் தடை விதிக்கப்பப்பட்டவர்கள் என்று அந்த அகராதி அதற்கு விளக்கம் கூறுகிறது. அடைப்புக்குறிக்குள் “கத்தற”  என்று விளக்கப்பட்டுள்ளது. அதாவது “கத்தற” சமூகப் பிரிவினர் சோறு உள்ளிட்டவை உண்பதற்கு தடை செய்யப்பட்ட சமூகமாக இருந்திருக்கிறது என்றும் தெரிகிறது.

ஜே.பி.லூவிஸ் எழுதிய 1924 இல் “கண்டியக் குறிப்புகள்” ('Kandyan Notes') என்கிற கட்டுரையில் தள்ளிவைக்கப்பட்டவர்களின் கிராமங்கள் பற்றி பதிவு செய்திருக்கிறார். இரண்டாம் ராஜ சிங்கன் மன்னனின் வெலிகல என்கிற கிராமத்தில் தள்ளிவைக்கப்பட்ட “கத்தற” சமூகம் வாழ்ந்ததாகவும் குறிப்பிடுகிறார். அவரின் கட்டுரையில் சுவாரசியமான சில சம்பவங்களையும் பகிர்கிறார்.

“மேல் தும்பர என்கிற பிரதேசத்தில்  இருந்த மெதசியபத்து என்கிற பகுதியில் வாழ்ந்த ஒருவர் ஏழு தடவைகள் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். அவர் தேசிக்காயை கால்களுக்குள் மறைத்து வைக்க முயற்சித்தார். மெதசியபத்து வாசிகளால் அவை மன்னருக்கு அனுப்பப்படவேண்டியவை. இந்தக் குற்றத்தின் விளைவாக தண்டிக்கப்பட்டு இறுதியில் “தெஹிபாகன கத்தற” (தேசிக்காயை மிதித்த சனம்) என்கிற பெயருக்கு இலக்கானது அந்தப் பகுதி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யானைகளுக்கு உணவு வழங்கும் வெள்ளாள குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

இவர்கள் மீண்டும் தமது சாதியை மீட்டனர். எப்போதென்றால் பிரிட்டிஷ் துருப்புகள் கண்டியைக் கைப்பற்றுவதற்காக படையெடுத்துச் சென்றவேளை மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் இந்த கிராமத்தின் வழியாக சென்ற போது அவருக்கு உணவு பரிமாறியிருக்கின்றனர். அப்போது அவர்கள் தண்டையிலிருந்து மீட்கப்பட்டு மீண்டும் முந்திய உயர் சாதியாக ஆனார்கள்.”

“பம்பரபெத்த”, “மேல் தும்பர” பிரதேசங்களைச் சேர்ந்த வெள்ளாளர்கள் தாம் ஊவாவிலிருந்து அடிமைகளாக கொண்டு வரப்பட்டவர்கள் என்றும் அதன் காரணமாகவே தான் கலதேபோக்க (Galadebokke) தவிர்ந்த மற்ற கிராமத்தவர்களைத் தவிர ஏனைய வெள்ளாளர்களால் தனிமைப்படுத்தப்பட்டவர்களாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். அவர்கள் தங்களுக்குள்ளேயே அகமணம் செய்துகொள்கிறார்கள். என்றும் லூவிஸ் குறிப்பிடுகிறார். (13)

சார்ல்ஸ் பிரிதம் (Charles Pridham) 1842 இல் இலங்கையின் அரசியல் வரலாறு குறித்து எழுதிய நூலிலும் சாதிகளைப் பட்டியலிடும்போது “கத்தற”, “ரொடி” ஆகிய சாதிகளை தீண்டப்படாத Out – Caste சாதிகளாகத் தான் பட்டியலிட்டிருக்கிறார். Out – Caste சாதியினர் எனும்போது சூத்திரர்களுக்கும் கீழானவர்களாகத் தான் கொள்ளப்படுகின்றனர் என்பதை அறிவீர்கள். ஹென்றி சார்ல்ஸ் (Henry Charles Sirr) போன்றோரும் “கத்தற” சாதியை ஒதுக்கப்பட்ட சாதியாகவும், தீண்டப்படாத சாதிகளாக இருந்ததாகவும் தான் குறிப்பிடுகின்றனர். 

தண்டனையை அனுபவிப்பதற்கு முன்னர் இவ்வாறு அவமானப்படுத்தப்பட்ட (தண்டைக்குட்பட்டவர்) ஒருவர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தினர் ஒதுக்கப்பட்ட “கத்தற” சாதியாக ஆக்கப்படுவர். மன்னர் கருணை காட்டினால் அவர்கள் மீண்டும் தமது முன்னைய உயர் சாதிக்கு மாற்றப்படமுடியும். (14)

அரசரால் தண்டனை அளிக்கப்பட்டு சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களாக “கத்தற” சமூகத்தினர் காணப்பட்டனர் என்றும், அவர்களின் இன்பம் மன்னரால் பறிக்கப்பட்டிருக்கும் என்றும் அந்த நூலில் இன்னோர் இடத்தில் பிரிதம் குறிப்பிடுகிறார். 

அடிமைகள்
இலங்கையில் “வஹல்லு” என்கிற சிங்களச் சொல் அடிமைகளைக் குறிக்கும். “வஹல்லு” என்பதை ஒரு சாதியாகவே சிங்களச் சாதியைப் பட்டியலில் காணப்படுகிறது. அதுவும் தாழ்த்தப்பட்ட சாதியாக அவர்கள் அடையாளப்படுத்துவதில் வியப்பிருக்காது. அதேவேளை இலங்கையில் கோவியர், நளவர், பள்ளர் ஆகிய சாதிகள் வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்பட்ட அடிமைகளாக இருந்தார்கள் என்கிறார் பிரீதம். அப்படிப்பட்ட சாதிகளை எப்படி கையாளவேண்டும் என்கிற விதிமுறைகள் இருந்தன; அதனை எஜமானர்கள் புறக்கணிக்க முடியாது என்கிறார் ஆனந்த குமாரசுவாமி. மேலும் தன்னை விட உயர்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவரை அடிமையாக வைத்திருக்க முடியாது என்பது அப்படிப்பட்ட விதிகளில் ஒன்று என்கிறார் அவர். 

இலங்கையின் வரலாற்றில் பண்டைய யுத்த காலங்களில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் பெருந்தொகையானவர்கள் அடிமைகளாக ஆக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் ஒரு பகுதியினர் தான் “தெமல கத்தற” என்றும் குறிப்பாக இவர்களை தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் காணலாம் என்கிறார் பிரிதம். இதையே வில்லியம் கில்பர்ட் போன்றவர்களும் வரவிலக்கணப்படுத்துகின்றனர். (15)

குடித்தொகை மதிப்பீட்டில் “கத்தற”
1815 இல் ஆங்கிலேயர்கள் இலங்கையை முழுக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர். இலங்கையின்மூன்றே ஆண்டுகளில் அவர்கள் இலங்கைக்கான முதலாவது அரசியல் திட்டத்தையும் 1833இல்  முதலாவது அரசியலைப்பையும் அறிமுகப்படுத்தினார்கள். முதலாவது குடித்தொகை மதிப்பீடு 1824 ஆம் ஆண்டு செய்தனர். இந்தக் குடித்தொகை மதிப்பீடு செய்யும் போது இலங்கையை இனவாரி மதிப்பீட்டை செய்வதற்கு நிகராக சாதிவாரி மதிப்பீட்டையும் செய்ய முயற்சித்தினர். மக்கள் மத்தியில் அன்று காணப்பட்ட சாதி ரீதியிலான பிரிவினையையே இது காட்டுகிறது. “கத்தற” சாதியினர் குறித்து இந்த அதில் பதிவு செய்திருப்பதாக அறியக் கிடைக்கிறது. 1871 இலிருந்து தான் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை குடித்தொகை மதிப்பீட்டை கிரமமாக செய்யத் தொடங்கினார்கள்.

அந்த வரிசையில் 1901 ஆம் ஆண்டு குடித்தொகை மதிப்பீடு அன்றைய சிவில் அதிகாரியாக இருந்த சேர் பொன் அருணாச்சலத்தின் தலைமையில் தான் மேற்கொள்ளப்பட்டது. வழமையான மதிப்பீட்டிலிருந்து மேலும் அதிகமான நுணுக்க விபரங்களை அந்த மதிப்பீட்டில் காண முடிந்தது. ஆனால் அதற்கடுத்த மதிப்பீட்டை 1911 ஆம் ஆண்டு மேற்கொண்டவர் டென்ஹாம் (E.B.Denham).  இந்த மதிப்பீடு முன்னைய மதிப்பீடுகளை விட விபரமான புள்ளிவிபரங்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக இந்திய வம்சாவளித தமிழர், இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் என்றெல்லாம் முதற் தடவை வகுத்து புள்ளிவிபரங்களைத் தந்தது 1911 ஆம் ஆண்டு குடித்தொகை மதிப்பீடு தான். இந்த மதிப்பீட்டின் இன்னொரு சிறப்பு இதில் தான் “கத்தற” சமூகம் பற்றிய விபரங்களும் அரசு உத்தியோகபூர்வமான மேலதிக விபரங்களைத் தந்தது எனலாம்.

கண்டிய ராஜ்ஜியத்தில் சில கிராமங்களில் தாம் பிறந்துவிடக்கூடாது என்று கடவுளிடம் மன்றாடுவார்களாம். அவற்றில் ஒன்று “கத்தற – கிராமம்” (Gattaru-gam) என்று இந்த புள்ளிவிபர மதிப்பீட்டு நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (16)

இலங்கையின் முக்கிய சமூகவியல் ஆய்வளரான பேராசிரியர் கணநாத் ஒபேசேகர கொழும்பு ICES நடத்திய கருத்தரங்கொன்றில் முன்வைத்து பேசிய ஆய்வொன்றில்; கண்டி அரச தண்டனையின்படி இவர்களை சாதியிலிருந்து தள்ளிவைத்ததாக (Out-casted) புரிந்துகொள்வதை விட “சாதிக்குறைப்பு” (De-casted) செய்ததாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.(17) கண்டி ராஜ்ஜியம் குறித்த பல்வேறு வரலாற்றுக் கட்டுடைப்புகளை செய்தவர் பேராசிரியர் கணநாத் ஒபேசேகர. கண்டியில் காணப்பட்ட கத்தற கிராமம் பற்றியும் மிகச் சமீப காலம் வரை “தெமல கத்தாற” என்கிற சாதி சமூகத்தில் இருந்திருக்கிறது என்றும அவர் குறிப்பிடுகிறார்.

பின் வந்த ஆய்வாளர்களின் கவனத்துக்கு வராத ஒரு சாதியாக நாம் கத்தற சமூக்கத்தை இனங்காணலாம். அதுமட்டுமன்றி தமிழில் இதுவரை இவர்கள் பற்றிய முதல் கட்டுரையாகவும் தகவலாகவும் இந்தக் கட்டுரை தான் இருக்க முடியும். வேறு புதிய கோணங்களில் சாதியத்தை ஆராய்பவர்களுக்கு நிச்சயம் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவை திறப்புகளாக இருக்க முடியும். 

உசாத்துணை:

 1. Riswan, M - A Historical Survey of Social Class and Caste System in Sri Lanka -South Eastern University of Sri Lanka
 2. DR. William H. Gilbert - The Sinhalese Caste-System - The Ceylon Historical Journal Vol. II January & April - 1953
 3. Bryce Ryan - Caste in Modern Ceylon – The Sinhalese System in transition - Rutgers University Press - 1953
 4. Hubert Walter Codrington - Glossary of Native, Foreign, and Anglicized Words: Commonly Used in Ceylon in Official Correspondence and Other Documents - Colombo - 1924
 5. Indigastuduva and Bondupiṭiya in the Pasdun Korale of the Western Province; Vallambegala and Galkanda in the Bentota-Valallaviti Korale and Galahēnkanda and some other villages in the Gangaboda Pattu of Galle in the Southern Province.
 6. இதேவேளை டச்சு காலத்தில் “Chalias in the Demelegattere of the Iddagoda pattuwa” என்கிற ஒரு ஆவணம் வெளியிடப்பட்டிருப்பதை டச்சு அரசு வெளியிட்ட “The tombo-series of 1766 – 1771” ஆவணப் பட்டியலில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
 7. Thomas van Rhee (Ceylon Governor, 1692-1697) - Memoir of Thomas van Rhee, governor and director of Ceylon, for his successor, Gerrit de Heere, 1697.  Translator: Anthonisz, Sophia, H.C. Cottle, government printer, Colombo, 1915
 8. John Davy - “An Account of the interior of Ceylon and of its inhabitatants” – London - 1821 
 9. D. J. Jayatilleke - King Walagambahu (Some Sinhalese Traditions)-The Ceylon National Review No. 9.-March, 1910
 10. John Ferguson - Ceylon in 1893 - Observer Press, Colombo - 1893
 11. J. Armour, Joseph Martinus Perera - Armour's Grammar of the Kandyan Law: Methodically Arranged and Digested, with a Copious Index, Glossary, and Appendix the "Examiner" Press, 1861
 12. Rev. B. Clough - A Sinhalese-English dictionary, Wesleyan mission press, Colombo, 1892.
 13. J.P.Lewis - 'Kandyan Notes' The Ceylon Antiquary and Literary Register - Vol - VI - Published at the Office of the Times of Ceylon - Colombo - April - 1921
 14. Henry Charles Sirr - Ceylon And The Cingalese Their History, Government And Religion The Antiquities, Institutions, Produce Revenue And Capabilities .Of The Island With Anecdotes Illustrating The Manners And Customs Of The People - Vol. Ii - London - 1850
 15. William H. Gilbert, Jr. - The Sinhalese caste system of central and southern Ceylon. - Journal Of The Washington Academy Of Sciences Volume 35 No. Washington Academy Of Sciences - 4, April 15, 1945
 16. E. B. Denham - Ceylon At The Census Of 1911, Being The Review Of The Results Of The Census Of 1911 - The Royal Statistical Society, Colombo : H. C. Cottle, Government Printer, Ceylon. 1912
 17. Prof Gananath Obeyesekere - Caste Conflicts And Discourses During The Kandyan Kingdom: Evidence From The Matale District, Caste, Democracy and Social Justice: ICES Conference in Late November 2016
இக்கட்டுரை தமிழகத்தில் இருந்து வெளியாகும் தலித் சஞ்சிகை, ஈழத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி ஆகிவற்றின் 2020 மே மாத இதழ்களில் வெளிவந்தது.

Share this post :

+ comments + 2 comments

4:54 PM

சிங்களவர்களுக்கு தெரியாத சாதிஒன்றை ஏன் தமிழர்களுக்கு தெரிய வேண்டும், சாதி குறைந்த நாங்கள் தான் அதிகம் சாதிபற்றி கதைக்கின்றோம்

3:58 AM

Good well written article

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates