Headlines News :
முகப்பு » , , , , , » “ஞான போதகம்” தமிழில் வெளிவந்த முதலாவது சஞ்சிகை - என்.சரவணன்

“ஞான போதகம்” தமிழில் வெளிவந்த முதலாவது சஞ்சிகை - என்.சரவணன்


தமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர்களின் கல்வி - புலமைத்துவ பரிணாம வளர்ச்சியிலும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் ஆற்றியிருக்கிற பங்களிப்புகள் மகத்தானவை. குறிப்பாக எழுத்துக்களை செம்மைப்படுத்துவது தொடக்கம், அச்சாக்கம், பதிப்புத் துறை பண்பாடு என அவர்கள் ஆற்றிய அந்த வகிபாகம் தான் தமிழையும், தமிழ் மக்களையும் அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றன என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.

தமிழில் மாத்திரமல்ல கிறிஸ்தவ மிஷனரிகள் கால்பதித்த பல நாடுகளிலும் இந்த வளர்ச்சியைக் காண முடியும். துரதிர்ஷ்டவசமாக நமது வரலாறு குறித்த தமிழ் சிந்தனை மரபானது இந்த கிறிஸ்தவ மிஷனரிகளை வெறும் மத, மொழி ஆக்கிரமிப்பாளர்களாக மட்டும் சுருக்கி வைத்திருக்கிறது. இந்த சிந்தனாமுறையானது கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆரோக்கியமான வினைத்திறன் மிக்க வகிபாகத்தை கண்டுகொள்ள விடாதபடி தடுத்துள்ளது. அதிலும் இந்த மாற்றத்தை நிகழ்த்துவதில் கிறிஸ்தவ பாதிரிமார்களின் நேரடிப் பாத்திரத்தை நாம் இனங்கண்டுகொள்ள வேண்டும். குறிப்பாக புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் அறிவுப் பண்பாட்டு வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை ஆற்றியிருக்கிறார்கள். இதைப் பற்றி பேராசிரியர் சிவத்தம்பி இப்படிக் குறிப்பிடுகிறார்.
“18ஆம் நூற்றாண்டிற் புரட்டஸ்தாந்திகள் தமிழ் நாட்டிற்கு வந்து சேர்வது, இரு நிலைப்பட்ட முக்கியத்துவத்தையுடையதாகின்றது. முதலாவதாக, இவர்கள் மூலமே, மறுமலர்ச்சிக் காலத்தின் பின்னர் தோன்றிய (சமூகத்தினைப் புதிய முறையிலே நோக்குகின்ற) ஐரோப்பிய மனோபாவங்கள் தமிழுக்குள் வந்து சேர்கின்றன. இரண்டாவதாக, புரட்டஸ்தாந்தம், முற்றிலும் எழுத்தறிவை அடிப்படையா‘கக் கொண்ட ஒரு மதம் என்ற வகையில், தமிழ்நாட்டில், 'அச்சுப் பண்பாட்டை' பெருமளவில் ஆரம்பித்து வைப்பதற்கு இவர்கள் காரணர் ஆகின்றார்கள். புரட்டஸ்தாந்திகள் மதமாற்றத்தைக் கல்வியுடன் இணைத்தனர். அவர்கள் கல்விமுறை, அச்சடித்த பாடபுத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு முன்னரே அச்சுமுறைமை தமிழுக்கு வந்து விட்டதென்பதும், 'மர அச்செழுத்தினை' முதன் முதலிற் பயன்படுத்திய இந்தியமொழி தமிழ் என்பதும் உண்மையே. ஆனால் அந்த அச்சு முறைமை, பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளிற் கிறிஸ்தவர்களால் நடத்தப்பெற்று, 'எழுத்தறிவுடைய' பல்லோரின் போஷனைக்கு உதவிய அச்சுமுறைமையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.” (1)
ஆங்கிலக் கல்வி முறையை தங்களது மதமாற்ற முயற்சிகளுக்கு பயன்படுத்திக் கொண்டதால், கிறிஸ்துவ மிஷனரிகள், வெஸ்லியன் (1814), அமெரிக்கர் (1816), சேர்ச் மிஷன் (1819) முதலான கிறிஸ்துவ மிஷனரிகள் முன்னிருந்தவர்களைக் காட்டிலும் பன்மடங்கு உத்வேகத்துடன் கல்வி பரப்புதலுடன், கிறிஸ்துவ சமயப் பரப்புதலையும் மேற்கொண்டனர்.

இப்படியெல்லாம் இருக்கும்போது முதலாவது தமிழ் சஞ்சிகை, முதலாவது தமிழ் நூல், முதலாவது தமிழ் பத்திரிகை எல்லாமே கிறிஸ்தவ மதம் பற்றியதாக இருந்ததில் ஆச்சரியமில்லை.

தமிழில் வெளிவந்த முதலாவது நூல் ‘தம்பிரான் வணக்கம்”. அது 1578 இல் தமிழகத்தில் வெளியானது. தமிழில் வெளிவந்த முதலாவது பத்திரிகை 1882 இல் சென்னையில் வெளிவந்த சுதேச மித்திரன் என்று கூறப்படுவது வழக்கம். ஆனால் தமிழில் வெளியான முதலாவது பத்திரிகை “உதயதாரகை”. அது இலங்கை - யாழ்ப்பாணத்தில் முதல் இதழ் 1841 ஜனவரி 7 ஆம் திகதி அமெரிக்க மிஷனால் வெளியிடப்பட்டது.

தமிழில் வெளிவந்த முதலாவது சஞ்சிகை “Tamil Magazine” என்றும் தமிழில் “ஞான போதகம்” என்றும் அழைக்கப்பட்ட சஞ்சிகையாகும்.

இச்சஞ்சிகை 1831 ஆம் ஆண்டு மே மாதம் மெட்ராஸ் “சன்மார்க்க புத்தக சங்க”த்தால் (The Madras Religious Tract Society) (2) சென்னை சேர்ச் மிஷன் அச்சகத்தில் (Church Mission Press) அச்சிட்டு வெளியிடப்பட்டது. அச் சஞ்சிகையின் முகப்பில் சென்னை மிஷன் அச்சகத்தில் அச்சிடப்பட்டதாக குறிப்பிட்டிருக்கிற போதும் அது “மெட்ராஸ் “சன்மார்க்க புத்தக சங்க”த்தால் வெள்ளியிடப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் கட்டுரையின் தொடக்கத்தில் M.R.T.S என்று இருக்கிறது. அது Madras Religious Tract Society ஐத் தான் குறிக்கிறது என்று கொள்ளலாம்.

மேலும் முதல் சஞ்சிகையில் முதல் கட்டுரையான “பூமியிலுள்ள பல தேசங்களையும் அவற்றிலுள்ள பலவகை மாக்கங்களையும் காட்டியது” என்கிற கட்டுரையில் உலகிலுள்ள நாடுகள் பலவற்றைப் பற்றிய குறிப்புகளும், அந்த நாடுகளில் கிறஸ்தவ மிஷன்களின் பணிகள் குறித்தும் விபரித்துச் செல்கிறது. அதில் ஓரிடத்தில் அப்படிப்பட்ட மிஷன் அமைப்புகள் ஒவ்வொன்றைப் பற்றியும் தனித் தலைப்புகளில் சிறு சிறு குறிப்புகள் உள்ளன.
  • Society for Promoting Christian knowledge
  • London Missionary Society
  • Church Missionary Society
  • The Methodist missionary Society
  • Wesleyan Missionary Society
  • The Scottish Missionary Society
  • The Netherland Missionary Society
  • The Religious Tract Society
இவற்றில் இறுதியாக சொல்லப்பட்டிருக்கிற The Religious Tract Society என்கிற சன்மார்க்க புத்தக சங்கத்தால் இதனை வெளியிடுவதாக அக்கட்டுரையில் காணக் கிடைக்கிறது.

சன்மார்க்க புத்தக சங்கம் (The Madras The Religious Tract Society)
Tract Soceity என்பது ஒரு கிறிஸ்தவ பிரச்சார பதிப்பு நிறுவனமாகத் தான் இயங்கியது. அது தனித்த ஒரு மிஷனரி அமைப்பின் பதிப்பகமாக இயங்கவில்லை மாறாக எங்கெல்லாம் மிஷனரி இயக்கங்கள் இயங்கினவோ அவற்றின் பிரச்சாரங்களுக்குத் தேவையான துண்டுப் பிரசுரங்கள், நூல்கள், சிறு கை நூல்கள் என்பவற்றை உள்ளூர் மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டன. அவற்றை சகல மிஷனரி இயக்கங்களும் பெற்று தமது கிறிஸ்தவ பரப்புரைகளை மேற்கொண்டன. ஒவ்வொரு தனித்தனி மிஷனரிகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பதிப்பிடும் போது ஏற்படும் செலவு இதனால் குறைந்தன. இதன் காரணமாக சன்மார்க்க புத்தக சங்கம் ஒரே பதிப்பை ஏராளமான அளவில் பிரசுரிக்க முடிந்தது. இத்தனைக்கும் பல இடங்களில் அவற்றுக்கென்று தனியான அச்சகங்கள் இருக்கவில்லை. மிஷனரிகளுக்கு சொந்தமான அச்சகங்களில் அவற்றை அச்சடித்தன.

பாதிரியார் ஜோர்ஜ் பூர்டர் (Rev. George Burder -1752-1832) லண்டனில் கிறிஸ்தவ பிரச்சார நூல்களைப் பதிப்பித்து வந்த ஒரு பதிப்பாளர். 1799 ஆம் ஆண்டு லண்டனில் நிகழ்ந்த மிஷனரிச் சங்கங்களின் ஆண்டுவிழாக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றார். அக்கூட்டம் முடிந்ததும் அங்கு கலந்துகொண்டவர்கள் சிலருடன் சேர்ந்து உரையாடியதில் உருவானது தான் “சன்மார்க்க புத்தக சங்கம்”.

இதன் கிளைகள் எங்கெங்கு இயங்கியதோ அந்த நகரங்களின் பெயர்களைக் கொண்டு இந்த சங்கங்களின் பெயர்கள் அழைக்கப்பட்டன. உதாரணத்துக்கு “மெட்ராஸ் சன்மார்க்க புத்தக சங்கம்”. இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் அமெரிக்க புத்தக சங்கத்தின் கிளையான “யாழ்ப்பாண சன்மார்க்க புத்தக சங்கம்” (J.R.T.S  - Jaffna Religious Tract Society) 1825இல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.(3) இந்தக் காலப்பகுதிகளில் இந்த புத்தக சங்கத்துக்கென தனியான அச்சங்ககள் இருக்கவில்லை. சென்னையில் ஞான போதகத்தை  சேர்ச் மிஷன் அச்சகத்தில் அச்சிட்டது போல யாழ்ப்பாண சன்மார்க்க புத்தக சங்கத்தின் நூல்கள்; மானிப்பாயில் அன்று இயங்கிய அமெரிக்க மிஷன் அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு குருவிவாக விளக்கம் (1829) “வேதப்பொழிப்பு” (1839), வேத பாலியர் (The Children of the Bible) – 1876 என்பவற்றைக் குறிப்படலாம்.

1835 ஆம் ஆண்டு மாத்திரம் 123,000 பிரசுரங்களை “யாழ்ப்பாண சன்மார்க்க புத்தக சங்க”த்தால் வெளியிட்டிருந்ததாக அதன் 1836 பெப்ரவரியில் வெளியிட்ட Missionary Register அறிக்கை குறிப்பிடுகிறது. 

அப்படி வெளியிடப்பட்ட சுவாரஷ்யமான ஒரு நூலை இந்தத் தேடலின் பொது கவனிக்க முடிந்தது. அது 1838 இல் வெளியிடப்பட்ட “தமிழ் பஞ்சாங்கம்” (Tamul Calendar). இதை சமஸ்கிருத ஆசானும், இந்து பஞ்சாங்க சாஸ்திரியுமான George Dashiell என்பவரால் கணிக்கப்பட்டது என்று முகப்பில் காணப்படுகிறது. பஞ்சாங்கப் பதிப்புகள் பல ஆண்டுகளாக பதிக்கப்பட்டிருப்பதை அதன் இன்னொரு அறிக்கையும் உறுதிபடுத்துகிறது.(4)  கிறிஸ்தவம் பரப்பும் பதிப்பகமொன்று பஞ்சாங்க பதிப்புகளையும் வெளியிட்டிருக்கிறது என்கிற செய்தியும் இங்கு கிடைக்கிறது.

“கொழும்பு சன்மார்க்க சங்கம்” 1825 இல் தொற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அது போல கொழும்பில் “சிங்கள சன்மார்க்க புத்தக சங்கம்” (The Singhalese Tract Society) இயங்கியிருக்கிறது.(5) கொழும்பு சன்மார்க்க சங்கத்தால் ஈ.டேனியல் (Rev. E. Daniel) என்கிற பாதிரியாரால் தமிழில் வெளியிடப்பட்ட மூன்று பிரசுரங்கள் பற்றிய குறிப்புகளை “The Catalogue of the Christian Vernacular Literature – 1870” காணப்படுகிறது. இதில் உள்ள வியப்புக்குரிய பிரசுரம் என்னவென்றால் முஸ்லிம்களையும் இலக்கு வைத்து வெளியிடப்பட்ட பிரசுரமும் தமிழில் வெளியிடப்பட்டிருப்பது தான். (6)
  • Address to Roman Catholics on the Dedication of the Church of St. Antonio. – 1834
  • On Salvation through Jesus Christ – For Muhammadans – 1832
  • My Friend – A Brief view of the way of salvation - 1832

யாழ்ப்பாணத்தில் இந்து சமயத்துக்கு எதிராகவும், கொழும்பில் பௌத்த மதத்துக்கும் இஸ்லாமிய மதத்துக்கு எதிராகவும் இந்த சன்மார்க்க புத்தக சங்கங்களால் பல பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. B.B.எட்வர்ட் வெளியிட்ட அவர்களின் அறிக்கையில் பௌத்த மதத்துக்கு எதிராக பிரசுரங்களை வெளியிட்டதை பெருமிதத்துடன் அறிக்கையிடுகிறார். (7)

இதேவேளை வேறு மிஷனரி சங்கங்களும் தமக்கான தனியான புத்தக சங்கங்களை (Tract Society) களை இயக்கிக் கொண்டிருந்தது. உதாரணத்துக்கு அமெரிக்க மிஷன் தமக்கான தனியான புத்தக சங்கங்களை வைத்திருந்தது.

முதலாவது தமிழ் சஞ்சிகை “ஞான போதகம்”
மெட்ராஸ் சன்மார்க்க புத்தக சங்கம் (The Madras Religious Tract Society) முதன் முதலில் 1818 இல் “The Religious Tract Association at Madras” என்கிற பெயரில் தான் தான் தொடங்கப்பட்டிருக்கிறது.  (8)

முதல் சஞ்சிகையே நான்கு அனாக்களுக்கு அன்று விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதுவே இந்திய மொழியின் முதலாவது சஞ்சிகை என்பது மட்டுமன்றி தென்னாசியாவின் முதலாவது சஞ்சிகையாக கருதக்கூடியது.

இச்சஞ்சிகையில் இதன் ஆசிரியர் யார் என்பது பற்றிய எந்தத் தகவல்களும் இல்லை ஆனால் 1845 இல் வெளியான “Appeal for the Hindu Addressed to British and other Christian foreigners residing in India” என்கிற நூலில் இந்த நூலின் ஆசிரியர் பாதிரியார் அலெக்சாண்டர் லீச் என்கிற தகவல் கிடைக்கிறது.  அரசாங்க ஆதரவுடன் வெளிவந்த இந்த சஞ்சிகை 1833 வரையான இரு வருடங்களே தாக்குப் பிடித்தன. மாதாந்த சஞ்சிகையாக வெளிவந்திருந்தபோதும் மொத்தம் எத்தனை சஞ்சிகைகள் வெளிவந்தன என்கிற தகவல்கள் உறுதியாகத் தெரியவில்லை. சில நூல்களில் 13 சஞ்சிகைகள் வெளிவந்ததாக தெரிவிக்கிற போதும் இந்தக் கட்டுரைக்காக தேடல்களின் பொது அவற்றில் ஆறு சஞ்சிகைகளைக் கண்டெடுக்க முடிந்தது.
  • முதலாவது 1831 ஆனி 
  • இரண்டாவது 1831 கார்த்திகை
  • மூன்றாவது 1832 தை
  • நான்காவது 1832 சித்திரை
  • ஐந்தாவது 1832 புரட்டாதி
  • ஆறாவது 1832 மார்கழி
இதன் படி 1831 இல் முதல் சஞ்சிகை வெளியாகி ஐந்து மாதங்களின் பின்னர் தான் அடுத்த சஞ்சிகை வெளியாகியிருப்பதை அவதானிக்க முடிகிறது.  1832ஆம் ஆண்டு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என்கிற ரீதியில் நான்கு சஞ்சிகைகள் கிரமமாக வெளிவந்திருக்கின்றன. டிசம்பர் மாதம் 6 வது  சஞ்சிகை வெளியாகியிருக்கிறது. அடுத்த ஆண்டு அது நின்றிருக்கிறது. 1845 ஆம் ஆண்டின் மெட்ராஸ் அமெரிக்க மிஷன் அறிக்கையின் படி “தமிழ் சஞ்சிகை” 36,000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. (9)

அன்றைய கால கட்டத்தில் சிறு சிறு பிரசுரங்கள் வெளிவந்துள்ளன அவற்றை Tract அன்று அழைப்பார்கள். அது போல மத கிறிஸ்தவ மத நூல்களை பொதுக் கட்டுரைகளை உள்ளடக்கிய “சஞ்சிகை” என்கிற வரையறைக்குள் அடக்குவதுமில்லை. ஆனால் இந்த “ஞான போதகம்” கிறிஸ்தவ பைபிள் குறித்த விடயங்களோடு மட்டுப்படுத்தியிருக்கவில்லை. மாறாக பொது மனித வாழ்க்கை, சமூக அறிவு சார் கட்டுரைகளையும் உள்ளடக்கியிருப்பதால் இதனை ஒரு சஞ்சிகை என்கிற வரையறைக்குள் நிச்சயம் சேர்க்கலாம் என்று இக்கட்டுரைக்காக பேராசிரியர் தமிழ்ப் பேராசிரியர் வீ.அரசு அவர்களோடு உரையாடிய போது கருத்து வெளியிட்டார்.

அதே 1831 இல் “தமிழ் பத்திரிகா” (Tamil Patrika) என்கிற பெயரில் ஒரு சஞ்சிகையும் “சன்மார்க்க புத்தக சங்கம்” (Religious Tract Society) அமைப்பால் ஆரம்பிக்கப்பட்டு அரசாங்கத்துக்கு சாதகமாக இயங்கி சில இதழ்களே வெளியாகி நின்றுவிட்டதாக பலநூறு ஆங்கில, தமிழ் ஆய்வு நூல்களிலும் தகவல்கள் இருந்தபோதும் அதற்கு மேல் இதைப் பற்றிய குறிப்புகள் எதுவும் எங்கேயும் கிடைப்பதாக இல்லை. குறிப்பாக அதன் உள்ளடக்கம், எத்தனை சஞ்சிகை வெளிவந்தன? ஏன் நின்றன? போன்ற விபரங்கள் இல்லை. அதாவது பலர் இதனை ஆராயாமலேயே வேறு யாரோ சொன்னதை கிளிப்பிள்ளை போலத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்று உணர்ந்துகொள்ள முடிகிறது.

இதை பற்றி “ஒரே வகையான” இரு வரிக் குறிப்பையே பல ஆய்வுகளிலும் கடத்தியிருக்கிறார்கள் என்றே சந்தேகம்கொள்ள வேண்டியிருக்கிறது. அதைவிட இந்த ஆய்வுகளில் “Tamil magazine” என்று சொல்லப்பட்டாலும் அது “ஞானபோதகம்” தான் என்று அங்குமே சொன்னது கிடையாது. இதை எப்படி தவற விட்டார்கள் என்கிற எளிமையான கேள்வி எழுகிறது. எனவே அவர்கள் அரைகுறை பிழையான தகவல்களுடன் குறிப்பிட்டிருப்பது “ஞான போதகம்” சஞ்சிகையைத் தான் என்கிற முடிவுக்கும் வர வேண்டியிருக்கிறது.(10)

மேலும் “தமிழ் பத்திரிகா” என்கிற ஒரு சஞ்சிகை வெளிவந்ததா என்பது ஐயமாகவே இருக்கிறது. அல்லது “Tamil magazine” என்கிற பேரில் வெளியான “ஞான போதகம்” சஞ்சிகையைத் தான் குறிப்பிட்டு வந்திருக்கிறார்களா என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

1955 இல் வெளியான “இந்திய ஊடகத்துறையின் வரலாறு” (History of Indian Journalism) என்கிற நூலில் ஜே.நடராஜன் சற்று வித்தியாசமாக 1831 இல் வெளியான முதலாவது சஞ்சிகை “Tamil magazine” என்று குறிப்பிட்டாலும் அது “ஞான போதகம்” என்று குறிப்படவில்லை.(11) அதே நூலில் அவர் 1833 இல் இப்பத்திரிகை நின்று, பின் மீண்டும் சில வருடங்களுக்குப் பின் தொடர்ந்ததாக தெரிவிக்கிறார்.

இதேவேளை 1835 ஆம் ஆண்டு “The Madras Religious Tract Society” யானது “Tamil Magazine” ஐ வெளியிடுவதற்கான துணைக்குழுவொன்றை நியமிக்கப்போவதாகவும் காலாண்டு சஞ்சிகையாக வெளிக்கொணரப்போவதாகவும் நான்கு பிரதிகளுக்குமாக ஒரு ரூபா சந்தாவையும் நிர்ணயிப்பது குறித்த பதிவையும்  1835 இல் வெளியான The Culcutta Christian Observer  காண முடிகிறது. (12)

ஆக, The Madras Religious Tract Society என்கிற அமைப்பு “Tamil Magazine” 1833 இல்  நின்ற பின்னர் மீண்டும் 1835 இல் வெளிக்கொணர்வது குறித்து உரையாடியிருப்பதை காண முடிகிறது. எப்படி இருந்தபோதும் மேற்படி குறிப்பிடப்பட்ட “Tamil Magazine” ஐ 1835 இல் The Madras Religious Tract Society மீண்டும் வெளிக்கொணர்ந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் சில வருடங்களின் பின்னர் “தமிழ் சஞ்சிகை” வெளிவந்திருப்பதை 1845ஆம் ஆண்டு அமெரிக்க மிஷன் அறிக்கையில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

அந்த அறிக்கையில் லீச் மெட்ராசில் உள்ள தமிழர்கள் பற்றிய தனது புலனாய்வு விபரங்களை அறிக்கையிட்டிருக்கிறார். 20.01.1844 எழுதிய அறிக்கையில் தமிழர்கள் இந்துக் கடவுள்களை வணங்கும் வடிவத்தைப் பற்றி விமர்சிக்கிறார். அது அரக்கத்தனமாக இருந்ததாகவும் குறிப்பாக காலி, துர்கை வழிபாடு பற்றிய உதாரணங்களையும் விளக்குகிறார். “ஞான போதகம்” சஞ்சிகையில் இந்து வழிபாடு குறித்த கிண்டல்களின் பின்னணியையும் நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது.

1844ஆண்டுக்கான 26 வது அறிக்கையில் 40,000 தமிழ் சஞ்சிகை பிரதிகள் வெளியிடப்பட்டதாகவும் அவை சன்மார்க்க புத்தக சங்கங்களின் கிளைகளுக்கு என்னென்ன எண்ணிக்கையில் அனுப்பப்பட்டுள்ளன என்கிற தகவல்களும் உள்ளன. அந்த வரிசையில் பெங்களூர், மொரிசியஸ், யாழ்ப்பாணம் என்பவையும் அடங்கும். 1844 இல் யாழ்ப்பாணத்துக்கு 2750 வெளியீட்டுப் பிரதிகள் அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த அறிக்கையில் 89ஆம் பக்கத்தில் அன்று யாழ்ப்பாணத்து சன்மார்க்க சங்கத்துக்கு பொறுப்பாக இருந்த டீ.புவர் (Rev.D.Poor) என்கிற பாதிரியார் யாழ்ப்பாணத்திலிருந்து மெட்ராஸ் பிரிவுக்கு எழுதிய கடிதம் காணப்படுகிறது. அதில் அவர் தான் அந்த வருடத்துடன் (1844) 29 ஆண்டுகள் சேவையில் இருந்துவிட்டதைஇட்டு பெருமிதம் கொள்வதாக குறிப்பிடுகிறார்.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும் “ஞான போதகம்” வெளியாகி 23 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் 1855 இல் “ராஜவிருத்தி போதினி” என்கிற தமிழின் இரண்டாவது சஞ்சிகை வெளியாகியிருக்கிறது.

அதுபோல 1897-1905 காலப்பகுதியில் “ஞான போதினி” என்கிற மாதாந்த சஞ்சிகை  மெட்ராசில் இருந்து ‘வீ.ஜி.சூரிய நாராயண சாஸ்திரி’யை ஆசிரியராகக் கொண்டு ஒரு சஞ்சிகையும் வெளிவந்திருக்கிறது.(13) எனவே “ஞான போதகம்” என்பதையும் ஞான போதினி” என்பதையும் கூட குழப்பிக் கொள்ளக் கூடாது என்பதால் இந்தத் தகவலை இங்கு குறிப்பிடுவது முக்கியம் என்று கருதுகிறேன்.
முதலாவது தமிழ் சஞ்சிகையின் ஆசிரியர் அலெக்சாண்டர் லீச்
பாதிரியார் அலெக்சாண்டர் லீச்
அலெக்சாண்டர் லீச் 27.02.1816 இங்கிலாந்தில் (Edinburgh) எடின்பேர்க்கில் பிறந்தவர்.(14) லண்டன் மிஷனரி சபையின் (London Missionary Society) பணிக்காக தனது இளம் வயதிலேயே 1839 ஆம் ஆண்டு யூன் 12ஆம் திகதி அச்சபையின் கிளைகளுக்கு சில பாதிரியார்கள் பொறுப்பாக நியமிக்கப்பட்டு 1839 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 24 ஆம் திகதி கப்பலின் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டார்கள். அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் சித்தூர் கிளைக்கு நியமிக்கப்பட்ட அலெக்சாண்டர் லீச் (Rev. Alexander Leitch) என்கிற பாதிரியாரும் அவரின் துணைவி கத்தரீனும் 07.01.1840 இல் வந்தடைந்தார்கள். (15)

1842 அவர்கள் அங்கிருந்து மெட்ராஸ் கிளைக்கு மாற்றப்பட்டார்கள். அவர்களின் இடத்துக்குத் தான் ரொபர்ட் கால்டுவெல் நியமிக்கப்பட்டார். திராவிட மொழிகளின் தனித்துவத்தையும் தமிழ் மொழி பற்றிய முக்கிய ஆய்வுகளையும் செய்த கால்டுவல் பற்றி அறிந்திருப்பீர்கள்.

1843 ஆம் ஆண்டு திருமதி லீச் சுகவீனமுற்று இங்கிலாந்துக்கு திரும்பினார். மீண்டும் அவர் 1846 ஜனவரி 5 அன்று மெட்ராசுக்கு திரும்பினார்.  1847 மே மாதம் லீச் கடும் சுகவீனமுற்றார். தனது மனைவியுடன் இங்கிலாந்துக்கு டிசம்பர் வந்தடைந்தார். அதன் பின்னர் மிஷனரிப் பணிகளில் இருந்து ஒதுங்கிவிட்டார். 1848 இல் அவர் ஓய்வுபெற்றார். அவரைப் பற்றிய இந்தக் குறிப்புகள் 1877 இல் வெளியான Register of Missionaries என்கிற அறிக்கையில் விபரமாக இருக்கிறது. ஆனால் அதற்கு மேல் அவரைப் பற்றிய குறிப்புகள் இல்லை. குறிப்பாக அவரது இறப்பு குறித்த தகவல்கள் இல்லை. (16)

லீச் நீண்ட காலமாக “ஞான போதகம்” சஞ்சிகைக்கு பொறுப்பாசிரியராக இயங்கியிருக்கிறார். மெட்ராஸ் சன்மார்க்க சங்கத்தின் 25 வது அறிக்கையில் இப்படி குறிப்பிடப்படுகிறது.

“பாதிரியார் லீச்சீன் கீழ் ‘தமிழ் சஞ்சிகை’ இயங்கிக்கொண்டிருக்கிறது. மிகவும் பெறுமதியான விடயங்களின் மொழிபெயர்க்கப்பட்ட களஞ்சிய வெளியீடாக அது தொடர்ந்து வருகிறது. அதன் ஆசிரியரான பாதிரியாரின் (லீச்) குறிப்பிடுவதன் பிரகாரம் ‘தமிழ் சஞ்சிகை’ இந்தியாவில் ஆரம்ப நிலையிலுள்ள பல தேவாலயங்களுக்கு பெரும் ஆசீர்வாதமாக திகழ்கிறது”.... இது மக்களுக்கு தகவலுடன் சேர்த்து இலக்கிய சுவையையும் பரப்புகிறது மேலும் ஆண்டுதோறும் அதன் செயல்திறனையும் அதிகரித்து வருகிறது...” (17)

1வது ஞானபோதகத்தின் உள்ளடக்கம்
ஞான போதகம் எனும் போதே “ஞானத்தைப் பற்றிய போதனை என்கிற அர்த்தம் கொள்ளச் செய்கிறது. அதாவது அறிவு பற்றி போதிப்பது. முதலாவது சஞ்சிகையின் தலைப்புக்கள் இப்படி அமைகின்றன.

அந்தக் காலத்தில் மெய் எழுத்துக்களுக்கு மேலே புள்ளிகள் இடாமல் பயன்படுத்தப்பட்டன. இச்சஞ்சிகையில் சில இடங்களில் மாத்திரம் அப்படி மேலே குத்து இடப்பட்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலான இடங்களில் குத்துக்கள் இல்லை. உதாரணத்துக்கு முதலாவது அத்தியாயத்தின் தலைப்பு
“பூமியிலுளள பல தேசங்களையும் அவற்றிலுள்ள பலவகை மார்க்கங்களையும் காட்டியது.”
அதே வேளை முதற்பக்கத்தில்

“இதன் விலை நான்கு அனா” என்பது குத்து இடப்பட்ட சொற்களாக இருக்கின்றன.

இந்த முதலாவது அத்தியாயத்தில் உலகம் பற்றியும், உலக நாடுகள் பலவற்றைப் பற்றியும் சுருக்கமாக எழுதப்பட்ட 15 பக்கங்களைக் கட்டுரையாகும். அந்த நாடுகளின் அமைவிடம், அருகாமையிலுள்ள நாடுகள், அவற்றின் சிறப்புகள் என்பவற்றை கூறுவதுடன் சில நாடுகளில் உள்ள வேற்று மதங்களை விமர்சிக்கவும் செய்கிறது. கட்டுரையின் இறுதி சாராம்சத்துக்கு வரும் போது கிறிஸ்தவத்தின் தோற்றம், இயேசுவின் மகத்துவம், அவற்றை உலகம் முழுவதும் பரப்ப மேற்கொள்ள எடுக்கப்படுகிற முயற்சிகள் என்பவற்றைக் கூறி அப்படியான மிஷன்களில் ஒன்று தான் தமது “சன்மார்க்க புத்தக சங்கம்” என்று நிறைவடைகிறது.

இரண்டாவது அத்தியாயம் “திநதாலினுடைய சரித்திரம்” என்கிற 10 பக்கக் கட்டுரை. பைபிளை முதல்முதலில் ஹீப்ரு மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் வில்லியம் திந்தாலி (William Tyndale - 1494–1536). அந்த முதல் மொழிபெயர்ப்பு 1535 இல் வெளியானது. அதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் பற்றியது அக்கட்டுரை. பைபிளை மூல மொழியில் இருந்து மொழிபெயர்ப்பது குற்றம் என்று கருதப்பட்ட காலம் அது. எனவே அதை அவர் ஜெர்மனுக்குச் சென்று இரகசியமாக ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து ஆறாயிரம் பிரதிகளை வெளிக்கொண்டுவந்தார். அந்த பிரதிகள் அனைத்தையும் கத்தோலிக்கச் திருச்சபையே முன்னின்று தேடித் தேடி கொள்வனவு செய்து அழித்தது. அனால் திந்தாலி அப்பணத்தைக் கொண்டு மேலதிகமாக திருத்திய பதிப்பை வெளிக்கொண்டு வந்தார். அவரை ஐரோப்பா முழுவதும் தேடியலைந்தது அரசு. இறுதியில் அவரை சிறைபிடித்து ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் தூக்கிலிடப்பட்டு கழுத்து நெரித்துக் கொன்றார்கள். பின்னர் உடலையும் எரித்துவிட்டார்கள்.
திந்தாலி கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சபை அந்த பைபிளை அங்கீகரித்தது. ஆனால் திருச்சபை திந்தாலியின் பைபிளை முழுவதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின்னர் தான் திருச்சபை “கிங் ஜேம்ஸ்” பைபிளை வெளிக்கொணர்ந்தது. ஆனால் கிங் ஜேம்ஸின் மொழிபெயர்ப்பில் புதிய ஏற்பாடு 83% வீதமும், பழைய ஏற்பாடு 76% வீதமும் திந்தலின் மொழிபெயர்ப்பைத் தான் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

மூன்றாவது அத்தியாயம் “பெண்பிள்ளைகள்” என்கிற 5 பக்கக் கட்டுரை. பெண்களுக்கு கல்வி வழங்குவது எத்தனை அவசியம் என்பது பற்றி விளக்கும் மதச் சார்பற்ற கட்டுரை.

நான்காவது கட்டுரை :இயேசுக் கிறிஸ்துவின் சரித்திர மேன்மை”  என்கிற தலைப்பில் அமைந்த 7 பக்கக் கட்டுரை. இயேசுநாதரின் வாழ்க்கை வரலாற்றின் சிறப்பு குறித்து பேசுகிறது.

ஐந்தாவது கட்டுரை “பேதமையகற்றல்” என்கிற தலைப்பில் அமைந்த 12 பக்கக் கட்டுரை. இக்கட்டுரையில் இந்து மத நம்பிக்கையாளர்களையும், அவர்களின் நம்பிக்கைகளையும், சடங்குகளையும், நடைமுறைகளையும் மோசமாக கேலியும், விமர்சனமும் செய்யப்படுகிறது. கட்டுரையின் இறுதியில்

“நீங்களும் அவைகளை நம்பிக் கெட்டுப்போகாமல் சுவிசேஷத்தை நன்றாய் ஆராய்ந்து பார்த்து அதையேற்றுக்கொண்டு அதின்படியே நடந்துவருவீர்களாக. அதற்கு வேண்டிய உதவியை தமது பரிசுத்தாவியைக் கொண்டு உங்களெல்லோருக்கும் உதவி செய்யக் கடவர்” என்று முடிகிறது.

ஐந்தாவது கட்டுரை “ஆத்துமநஷடம்” என்கிற தலைப்பில் அமைந்த 6 பக்கங்களில் அமைந்த இரு கதைகளைக் கொண்டது. ஒன்று அமெரிக்க செல்வந்த குடும்பம் தீய பழக்கங்களுக்கு கெட்டு சீரழிவதாகவும் அடுத்த கதை கிரேக்க தேசத்து இரு சகோதரிகள் வாழ்வில் நிகழும் சீரழிவு குறித்தும் பேசிவிட்டு இதில் இருந்து இரட்சிப்பு பெற இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் முடிகிறது. 
இறுதியாக ஆறாவது அத்தியாயத்தில் “ஞானப்பாட்டுகள்” என்கிற தலைப்பில் இரண்டு கிறிஸ்தவப் பாடல்கள் உள்ளன. ஒரு பாட்டின் இடையில் வரி இப்படி இருக்கிறது.
ஆ தமிழரே! எப்போது
இருட்டைவிட்டு ஆசையோடு
இப்பாவியைத் தேடவே
நீங்கள் புத்தியையடைந்து
மெய்வேதத்தை நன்றாயாறாய்ந்து
செம்பொன்னைப்பார்க்க எண்ணவே
எப்போது நேருமாம்?
என்று தொடர்கிறது.
ஆறு சஞ்சிகைகளிலும் இதே வடிவத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளன. உலக நாட்டு அறிவு, ஒரு உபதேச கட்டுரை, கிறிஸ்தவர் அல்லாதவர்களின் நம்பிக்கைகளை சாடுவது, சிறு கதைகள், ஞானப்பட்டுகள் என்கிற அமைப்பில் இச்சஞ்சிகைகள் திட்டமிடப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த அமைப்பு முறை அதற்கு முந்திய கிறிஸ்தவ பிரச்சார நூல்களில் இருந்து வேறுபடுகிறது. முன்னைய கிறிஸ்தவ நூல்கள் நேரடியாக பைபிள் கதைகளைக் கொண்டனவாக காணப்பட்டன.

மேலும் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஏனைய மத நம்பிக்கைகளின் மீதான தாக்குதல் “ஞானபோதகம்” சஞ்சிகையில் இருந்துதான் தொடங்கியதா? அல்லது அதற்கு முன்னரே வெளிவந்ததா என்பதை தனி ஒரு ஆய்வாக செய்வது நல்லது.

தமிழ் மொழியில் சஞ்சிகை வரலாற்றின் பரிணாம வளர்ச்சியை நாம் ஞான போதகத்திலிருந்து தான் பார்க்க வேண்டும். மேலதிகமாக ஆய்வை விரிக்க விரும்புபவர்களுக்கு இந்த ஆய்வுக்கட்டுரை பயன்படட்டும்.

நன்றி - காக்கைச் சிறகினிலே

உசாத்துணை
  1. கார்த்திகேசு சிவத்தம்பி - தமிழில் இலக்கிய வரலாறு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் - 1988
  2. “Religious Tract Society” என்பதற்கான தமிழ்ப்படுத்தல் “ஞானபோதகம்” நூலிலேயே “சன்மார்க்க புத்தக சங்கம்” காணப்படுவதால் அதையே தொடர்ந்து இங்கு பயன்படுத்துகிறேன்.
  3. Annual Report of the American Tract Society - Volume 19, Boston - Printed by Perkins & Marvin - 1833
  4. The Seventy - Eighth Annual Report of the Religious tract society - Religious tract society - 1877 - p.214
  5. The Ceylon Almanac and Annual Register for the Year of Our Lord – Colombo, Skeen, Government Printer, Ceylon - 1855
  6. John Murdoch - Catalogue of the Christian Vernacular Literature of India: With Hints on the management of Indian Tract Societies - Madras Caleb Foster - 1870
  7. B.B.Edwards - Quarterly register and journal of the American education society, Vol. VI, Boston - 1834
  8. Appeal for the Hindu Addressed to British and other Christian foreigners residing in India – Madras American Mission Press - 1845
  9. Appeal for the Hindu Addressed to British and other Christian foreigners residing in India – Madras American Mission Press – 1845 – p.7
  10. J V Vilanilam - Mass Communication In India: A Sociological Perspective - SAGE Publications, 2005
    1. A. Ganesan - The Press in Tamil Nadu and the Struggle for Freedom, 1917-1937 - Mittal Publications, 1988
    2. T. Rathakrishnan, M. Israel Thomas, L. Nirmala - Communication Techniques in Farm Extension - Scientific Publishers, Feb 1, 2010
    3. N. Jayapalan - History of India - Atlantic Publishers & Distri, 2001
    4. Bhanwarlal Nathuram Luniya - Evolution of Indian Culture: From the Earliest Times to the Present Day - Lakshini Narain Agarwal, 1967
  11. Natarajan, J - History of Indian Journalism - Publication Division, Ministry of Information and Broadcasting, Govt. of India - p.79
  12. The Culcutta Christian Observer – Vol. IV – Printed at the Baptist Mission Press - 1835
  13. L.D.Barnett - A catalogue of the Tamil books in the library of the British Museum – 1909 
  14. பாதிரியார் அலெக்சாண்டர் லீச் என்கிற பெயரில் இன்னொருவரும் இருக்கிறார். ஏறத்தாள ஒரே பெயர், ஒரே காலத்தவர்கள் என்பதால் ஆய்வுகளின் போது இவருவரையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. இக்கட்டுரைக்காகன உழைப்பிலும் சில நாட்களை அந்த குழப்பகரமான பெயரால் சில நாட்கள் பிழையாக காலம் விரயமானது. உறுதி செய்துகொள்ள மூன்று உழைப்பை விழுங்கிக் கொண்டன..
  15. The Evangelical Magazine and Missionary Chronicle 1839 - London, Published by Thomas Ward & Co. - P.519
  16. James Sibre - Register of Missionaries, Deputations, Etc. From 1796 to 1823 - London Missionary Society 1877
  17. Madras Tract and Book Society – 27th Report –  1843 – American Mission Press - 1844


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates