கொரோனா பேரிடருக்குப் பிறகான பொருளாதார நெருக்கடி நமது யூகங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் எனத் தோன்றுகிறது. பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் அதற்கு தம்மைத் தகவமைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஊடகத்துறையாகும். அதிலும் அச்சு ஊடகத்துறை மிக மோசமாக இந்தப் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய ஊடகக் குழுமங்களின் உரிமையாளர்கள் தற்போது ஒவ்வொரு கட்சியின் தலைவரையும் சந்தித்து சில கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அச்சுக் காகிதத்தின் மீதான சுங்க வரியை ரத்து செய்வது; அரசு தர வேண்டிய விளம்பர கட்டண பாக்கியை உடனே தருவது; விளம்பரக் கட்டணங்களை 100 சதவீதம் உயர்த்தி வழங்குவது முதலான கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். இதை மத்திய அரசு இப்போதைய சூழலில் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இந்நிலையில் பல அச்சு ஊடக நிறுவனங்களும் தமது அலுவலகங்களை மூடுவது, ஊழியர்களைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இன்னும் சில மாதங்களில் பல பத்திரிக்கைகள் முழுமையாக மூடப்பட்டாலும் வியப்பதற்கில்லை. இந்நிலையில் ஆனந்தவிகடன் குழுமத்திலிருந்து சுமார் 180 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டனர் என்ற செய்தி வந்துள்ளது.
ஆனந்த விகடன் நிறுவனம் ஒரு வணிக நிறுவனம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் முன்னெடுத்த பல்வேறு பொதுநலப் பணிகளும், விருதுகள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் அந்த வணிகத்தின் அங்கம்தான்.இப்போது அவர்கள் ஆட்குறைப்பு செய்வதால் ஏற்கனவே இருந்த அற மதிப்பீட்டில் இருந்து அவர்கள் வழுவிவிட்டார்கள் என்று பார்ப்பது அந்த நிறுவனத்தின்மீது வைத்த பிழையான நம்பிக்கையால்தான்.
பேரிடர் காலத்தில் அச்சு ஊடகங்கள் மட்டுமல்ல, எந்த ஒரு தனியார் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்வது, பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவது என்று நடவடிக்கை எடுப்பது அந்த நிறுவனங்களை நம்பி இருந்தவர்களின் குடும்பங்களை மிகப்பெரிய சிக்கலில் ஆழ்த்தும். அவர்களுக்கான பணிப் பாதுகாப்பை வலியுறுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஆனால், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டிய அரசோ தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய்வதிலே இறங்கியுள்ளது. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வழங்கிய எட்டு மணிநேர வேலையும் இப்போது பல மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டு 12 மணி நேரமாக ஆக்கப்பட்டுள்ளது.அரசு ஊழியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இவை எல்லாமே எதிர்க்கப்பட வேண்டியவை. இவ்வளவு நாள் போராடிப் பெற்ற தொழிலாளர்களின் பாதுகாப்பு உரிமைகள் ஒன்றைக் கூட நாம் விட்டுத்தர முடியாது. அது மட்டுமின்றி இது வரை பாதுகாப்பு இல்லாமல் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கும் கூட சிறப்பு சட்டத்தை உருவாக்கவேண்டுமெனப் போராட வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.
தமிழ்நாட்டில் 1960களிலிருந்து தீவிர சிந்தனைகளை விதைப்பனவாக சிற்றிதழ்களே இருந்து வந்துள்ளன. இந்தப் போக்கு புத்தாயிரம் துவங்கும் வரையிலும்கூட இருந்தது. அதற்குப் பிறகான டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வரவும், தாராளமயமாக்கலும் பல புதிய வாய்ப்புகளைத் திறந்து விட்டன. இலக்கியம் பண்டமாக்கப்பட்டு இலக்கிய நுகர்வோரின் எண்ணிக்கைப் பெருகியது. ஆனந்த விகடன், குமுதம் போன்ற குழுமங்கள் அதை அடையாளம் கண்டு இலக்கியத்திற்கெனத் தனி இதழ்களைத் துவக்கின. உயிர்மை, காலச்சுவடு போன்ற நடுவாந்தர இதழ்களும் தமது வாசகப் பரப்பை விரிவுபடுத்தின. ஆனால், இனி வரும் காலங்களில் இந்த நிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என நான் எதிர்பார்க்கிறேன். பெரிய நிறுவனங்களால் நடத்தப்பட்ட இலக்கிய இதழ்கள் டிஜிட்டல் வடிவத்துக்கு மாறிவிட்டன. இரண்டு வடிவங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கிற நடுவாந்தர இதழ்கள் இனி அச்சு வடிவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அவையும்கூட காலப்போக்கில் டிஜிட்டல் வடிவத்துக்குப் போவதற்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது. அதுபோலவே நூல் வெளியீடும் மின்நூல்களாக மாற்றம் பெறக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இலக்கிய இதழ்கள் வெளிவருவது தமிழுக்குப் புதிதும் அல்ல, தவறும் அல்ல. ஆனால் அவை எந்த அளவுக்கு ஆழமான வாசிப்பை ஊக்குவிக்கும், சிந்தனையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. ஆங்கிலத்தில் வருகிற ‘சீரியஸான’ டிஜிட்டல் இதழ்களும் கூட எத்தனை பேரால் வாசிக்கப்படுகின்றன என்ற கேள்வி எனக்கு உண்டு.அதுமட்டுமின்றி டிஜிட்டல் வடிவம் என்றாலே அதை இலவசமாகத் தரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இலவசமாகத் தருவதை அவர்கள் வாசிப்பார்களென்றும் சொல்லமுடியாது.
நீண்ட விரிவான ஆய்வுக் கட்டுரைகளை வாசிப்பதற்கு இப்போதும் உகந்த வடிவமாக அச்சு வடிவமே இருக்கிறது. அச்சில் ஒன்றை வாசிப்பதற்கும் டிஜிட்டல் திரையில் வாசிப்பதற்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது என்பதை எவரும் ஒப்புக்கொள்வர்.எனவே தீவிரமான வாசிப்புக்கு அச்சுத் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருப்பது தவிர்க்க முடியாதது.தீவிர வாசிப்புக்கான இதழ்களை நடத்த விரும்புகிறவர்கள் மீண்டும் அச்சுத் தொழில்நுட்பத்தையும், சிற்றிதழ் வடிவத்தையும் நாடுவது தவிர்க்க முடியாது என்பது எனது நம்பிக்கை. பண்டமாக்கப்பட்ட இலக்கியத்தை சந்தையிலிருந்து மீட்பதற்கும், நுகர்வோரிடமிருந்து வாசகரை நோக்கித் திரும்புவதற்கும், உற்பத்தியாளர்கள் குறைந்து படைப்பாளிகள் அதிகரிப்பதற்கும் இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நான் இப்போது போதி, தலித் ஆகிய இரு இதழ்களையும் மீண்டும் வெளியிடத் தொடங்கி இருக்கிறேன்.ஆய்வு இதழாக மணற்கேணி இதழை நடத்திவருகிறேன். தீவிர
வாசிப்புக்கான வெளி காணாமல் போவதற்குமுன் அதை இட்டு நிரப்ப வேண்டியதும், விரிவுபடுத்த வேண்டியதும் நமது கடமை என்று உணர்கிறேன். இந்த நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்பவர்களை என்னோடு பயணிக்க அழைக்கிறேன்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...