Headlines News :
முகப்பு » , , , » ஈஸ்டர் படுகொலைகளில் ஜனாதிபதியின் வகிபாகம்? - என்.சரவணன்

ஈஸ்டர் படுகொலைகளில் ஜனாதிபதியின் வகிபாகம்? - என்.சரவணன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய்ந்த பாராளுமன்ற விசேட குழுவின் அறிக்கை கடந்த ஒக்டோபர் 23 அன்று வெளியிடப்பட்டதை அறிவோம். ஜனாதிபதித் தேர்தல் இதே காலத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியதும் இந்த அறிக்கையின் முக்கியத்துவம் பின்தள்ளப்பட்டுவிட்டது. ஆனால் அனைவரும் அதுவரை எதிர்பார்த்து காத்திருந்த அறிக்கை இது.

இந்த அறிக்கை முக்கியத்துவமிழக்கப்பட்டதன் பின்னால் அரசியல் காரணங்கள் உண்டு. முக்கியமாக தற்போதைய சூழலில் ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்கும் சரிகட்டுவதற்கும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் திட்டமிட்டு மேற்கொண்ட ஒரு சதியோ என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதியன்று கூடிய அமைச்சரவைக் இந்த அறிக்கையை முற்றுமுழுதாக நிராகரிப்பதாகத் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி சிறிசேன. இதுவொரு அரசியல் அவதூறு செய்கிற ஒரு ஆவணம் என்றார் அவர். அந்த அறிக்கையை கடுமையாக விமர்சித்த அவர் அதுவொரு அமைச்சரவை ஏற்றுக்கொண்ட ஒரு ஆவணம் இல்லை என்பதைக் கருத்திற் கொள்ளுங்கள் என்றார். அந்த அறிக்கை குறித்து அமைச்சரவையில் உரையாடப்பட்டதாக மட்டும் குறிப்பிடுங்கள் என்றும் அதுவொரு மக்களை திசைதிருப்பும் ஒரு ஆவணம் என்றார்.

ஆக தனியொரு ஜனாதிபதியின் சுயவிருப்பு வெறுப்பின் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிக்கை வலுவற்றுப் போயுள்ளது. அரசாங்க அமைச்சர்களும் தேர்தல் காலமாதலால் ஜனாதிபதியோடு சமரசத்துடன் அணுகவேண்டிய காரணங்களால் ஜனாதிபதியோடு முரண்படாமல் பின்வாங்கினார்கள்.

இந்த விசாரணை அறிக்கை மிகவும் முக்கியமானது. பல கோணங்களில் தனித்தனியாக அலசும் அளவுக்கு ஏராளமான தகவல்கள் பொதிந்தது. ஜனாதிபதியின் வகிபாகத்தைப் பற்றி மட்டுமே இக்கட்டுரை ஆராய்கிறது.
தமிழில் எங்கே?
இந்த அறிக்கை ஒக்டோபர் 23 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதனை பிரசுரித்து வெளியிடும் கட்டளையும் அங்கு நிறைவேற்றப்பட்டது. அதனைப்படி மும்மொழியிலும் வெளியிடப்பட்டது. தமிழ் மொழியிலான அறிக்கை 242 பக்கங்களைக் கொண்டது. அதுபோல வாய்மொழி சாட்சியங்களை தனித்தனியாக இரண்டு பிரேத்தியக தொகுப்புகளாக வெளியிட்டிருக்கிறார்கள். முதலாவது தொகுதி 720 பக்கங்களையும், இரண்டாவது தொகுதி  655 பக்கங்களையும் கொண்டது. ஆக மொத்தத்தில் 1617 பக்கங்களைக் கொண்ட அறிக்கை இது. விசாரணையின் போது எந்தெந்த மொழியில் கேள்வி எழுப்பினார்களோ எந்தெந்த மொழியில் பதில் அளித்தார்களோ அதே மொழிகளில் தான் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆக மூன்று மொழியும் அறிந்தவர்களால் தான் இந்த விசேட அறிக்கையை விளங்கிக்கொள்ளவோ, ஆராயவோ முடியும்.

இந்த அறிக்கையின் மிகவும் முக்கிய குறைபாடு யாதெனில் இந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் யார் என்கிற தலைப்பில் அறிக்கையின் இறுதியில் மொத்தம் 153 விடயங்களைக் குறிப்பிட்டிருக்கிறது. அந்த 153 விடயங்களும் ஆங்கிலப் பிரதியில் மட்டும் தான் காணப்படுகிறது. அதுவும் ஆங்கிலப்பிரதியில் சிங்கள மொழியில் மட்டும் தான் காணப்படுகிறது.
பிரதிச் சபாநாயகர் சே. எம். ஆனந்த குமாரசிறியின் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த விசாரணைக் குழுவில் 
றவுப் ஹக்கீம்
ரவி கருணாநாயக்க
(டாக்டர்) ராஜித்த சேனாரத்ன
பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா
எம்.ஏ.சுமந்திரன் (ஜனாதிபதி சட்டத்தரணி)
(டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ
(பேராசிரியர்) ஆசு மாசிங்க
(கலாநிதி) ஜயம்பதி விக்கிரமரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி
ஆகியோர் அங்கம் வகித்தனர்

இந்த விசாரணைக் குழுவின் விசேட அறிக்கை குறித்து பல விடயங்களை வெளிக்கொணர வேண்டியிருக்கிறது. ஆனால் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கை தற்போது செல்லுபடியற்றதாகப் போகப்போகிறது. அதற்கான காரணம் அமைச்சரவையில் ஜனாதிபதி இதனை நிராகரித்திருப்பது தான். எனவே இந்த அறிக்கையில் ஜனாதிபதி குறித்த பகுதிகளை இக்கட்டுரையில் முக்கியத்துவப்படுத்துகிறது. இவை அனைத்துமே அறிக்கையில் உள்ள விபரங்களே.

இலங்கையில் 2019 ஏப்பிரல் 21 ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மூன்று தேவாலயங்களிலும் மூன்று ஹோட்டல்களிளும் இடம்பெற்ற தீவிரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்பட்ட தகவல்களின் பிரகாரம், ஆகக்குறைந்தது 277 ஆட்கள் கொல்லப்பட்டதுடன் (8 தற்கொலைக்குண்டுதாரிகள் உள்ளடங்களாக) 400 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இறந்தோரிடையே ஆகக்குறைந்தது 40 வெளிநாட்டவர்கள் மற்றும் ஆகக்குறைந்தது 45 சிறுவர்கள் உள்ளடங்குவதாக அறிக்கையிடப்பட்டது. இந்த ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களை நிறைவேற்றுவதில் பின்னின்று செயற்பட்ட பிரதான சந்தேகநபராக, தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் முன்னாள் தலைவர் ஸஹ்ரான் ஹாஷிமி என்பவரை விசாரணையாளர்கள் அடையாளம் கண்டனர். 
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, அகில இலங்கை தமிரசுக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 40 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பாராளுமன்ற

இந்த சம்பவங்களை ஆராய்வதற்கான விசேட பாராளுமன்ற குழுவொன்றின் (PSC) நியமனத்தைக் கோரும் தீர்மானமொன்று 2019 மே மாதம் 22 ஆம் திகதி வாக்கெடுப்பின்றிப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த பாராளுமன்ற விசேட குழு 2019 மே மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை 24 அமர்வுகளை நடத்தி, 55 பேரிடமிருந்து சாட்சியங்களை விசாரித்தது.

கத்தோலிக்க தேவாலயங்களும்,ஹோட்டல்களும், இந்திய துணை தூதரகமுமே தீவிரவாதிகளின் முக்கிய இலக்காக இருந்திருப்பதை பல்வேறு சாட்சியங்களில் இருந்து உறுதியாகின்றன.
சுயநலத்துக்கு நாடு பலி
இந்தத் தாக்குதல் நிகழ்த்தபடவிருக்கிறது என்கிற தகவல்கள் தெரியவந்தும் அது தொடர்பில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாதது வியப்பளிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் ஆரம்பத்திலிருந்தே பல அரச அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகளின் சாட்சியங்களின் போது ஜனாதிபதியின் தனது பொறுப்பிலிருந்து எப்படி தவறினார் என்பது குறித்த விபரங்கள் வெளியாகின. ஆப்போதிருந்தே ஜனாதிபதி இந்த குழு தனக்கெதிராக சதிசெய்கிறது என்று குற்றம் சாட்டினார்.

கூடவே தெரிவுக்குழு பிரதமரையும், ஜனாதிபதியையும் சாட்சியமளிக்க அழைத்தது. பிரதமர் ரணில் சாட்சியமளித்த போதும் ஜனாதிபதி சிறிசேன தான் நேரடி சாட்சியமளிக்க மாட்டேன் என்று இறுமாப்போடு மறுத்தார். பின்னர் வாக்குமூலமளித்தார்.

ஓகஸ்ட் 20ஆம் திகதியன்று  18வது தடவையாக இந்த விசேட குழு கூடியபோது; ஜனாதிபதியின் சாட்சியமானது இறுதி அறிக்கை தயாரிப்புக்கு முக்கியமானது என்றும் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோருவதற்கு தீர்மானித்ததுடன் அன்றே ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருக்கிறது.

ஈஸ்டர் தாக்குதல்கள் நடந்ததும் பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரை சந்திப்பதற்கு பிரதமர் அழைத்திருந்தபோதும் அவர்கள் எவரும் பிரதமரை சந்திக்காதது முக்கிய ஒழுங்கு மீறல் என்று சாட்சியமளித்திருக்கிறார் பிரதமர். அந்த சந்திப்புக்கு செல்ல வேண்டாம் என்று ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளரிடம் அறிவித்திருக்கிறார்.  அதேவேளை இந்த தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட அழைக்கப்பட்டிருந்தும்  நாட்டின் பிரதமர், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ஆகியோரை வரவிடாமல் தடுத்தது அப்பட்டமாக பாதுகாப்பு விடயங்களை தனிப்பட்ட கட்சி சார் அரசியலுக்காக துஷ்பிரயோகம் செய்யப்பட்டிப்பதையே வெளிப்படுத்துகிறது.. குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல் தினத்தன்று நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்திற்கு அவர்களை வரவிடவேண்டாம் என்கிற கட்டளைகள் தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் தரும் ஒன்றாக ஆகியிருக்கிறது.

தமக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்களை 11.04.2019 அன்றே ஜனாதிபதிக்கு அறிவித்துவிட்டதாக புலனாய்வுத் துறை தெரிவித்தது. 

பாதுகாப்புத்துறையும் புலனாய்வுத் துறையும் அரசியல்மயமாக்கப்பட்டதன் விளைவு குறித்து இந்த அறிக்கையில் 1.6 என்கிற பகுதியில் விளக்கப்படுகிறது

நாட்டின் தலைவர்களும் பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் மா அதிபர், முப்படைத் தளபதிகள், புலனாய்வுப் பிரிவின் தலைவர் உள்ளிட்டவர்கள்  கூடும் வாராந்தம் பாதுகாப்பு கவுன்சில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 26 அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் ஜனாதிபதியால் கூட்டப்படவில்லை. 2019 பெப்ரவரியில் மாத்திரம் ஒரு தடவை கூட்டப்பட்டிருக்கிறது.

மேலும் பாதுகாப்பு கவுன்சில் உட்பட நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஒக்டோபர் 26க்குப் பின்னர் பிரதமரை ஜனாதிபதி எதிலும் சம்பந்தப்படுதவுமில்லை, தொடர்புகொள்ளவுமில்லை.

தேசிய பாதுகாப்புச் சபை (NSC) ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்பு செய்யலாளரினார் கூட்டப்படுகிறது. யுத்த காலத்தில் வாராந்தம் கூட்டப்பட்ட இச்சபை யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அவ்வப்போது தான் இடம்பெற்றிருக்கிறது. 

ஏப்ரல் 4 ஆம் திகதியே “அதி இரகசியம்” (Top Secret) “அதி முன்னுரிமை” (Top Priority)  என்கிற வகைப்படுத்தப்பட்டு பாரதூரமான தன்மையி உடைய புலனாய்வுத் தகவல் கிடைத்திருக்கிறது. ஏப்ரல் 9 நடந்த கூட்டத்தில் புலனாய்வுப் பிரிவு தலைவர் இதனை ஏனையோருடன் பகிரவில்லை. அதே அன்று இது குறித்த கடிதங்கள் புலனாய்வு கட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் அனுபப்பட்டுள்ளதுடன் இராணுவம், அரசியல் தலைமை என்பவற்றுடன் பகிரப்படவில்லை. இதற்கிடையில் ஏப்ரல் 16 ஜனாதிபதி வெளிநாட்டுச் சுற்றுலாவுக்காக நாட்டிலிருந்து வெளியேறுகிறார். அதே நாள் காத்தான்குடி பாலமுனை பகுதியில் டெட்டனேட்டர் மூலம் ஒரு மோட்டார் சைக்கிள் வெடிக்க வைக்கப்படுகிறது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மேலதிக அக்கறையை செலுத்துகிறார் புலனாய்வுத்துறை பணிப்பாளர். ஆனால் அவர் இது குறித்து கிழக்கு மாகாண பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்திருக்கவில்லை. ஜனாதிபதியும் நாட்டில் இல்லாத நிலையில் பிரதமர் அல்லது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கவனத்துகோ கொண்டு வரப்படவில்லை.

ஜனாதிபதி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும்போது குறைந்தபட்சம் தனக்குப் பதிலாக இன்னொரு பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்கத் தவறியிருக்கிறார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்த அவசரகால நிலைமையின் போது உரிய கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு உரிய அரசியல் தலைமை இல்லாதது பெரும் குறைபாடு.
அதிகாரக் குவிப்பும் பொறுப்பின்மையும்
தாக்குதல்கள் நடக்கப்போவது குறித்து அறியக்கிடைத்த புலனாய்வுத் தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் பகிரப்பட்டிருக்கிற போதும் பாதுகாப்பு அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. அப்போது அவர் நாட்டில் இருந்தார். தாக்குதல் நடந்த அன்று அவர் நாட்டில் இருக்கவில்லை.  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதிக்கு உரிய தகவல்களை அறிவிக்கத் தவறியதாக இவ்வறிக்கை குற்றம் சாட்டியது. பின்னர் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கைது செய்யப்பட்டு இன்னமும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவது தெரிந்ததே.

அரச புலனாய்வுச் சேவை (SIS) தலைவர் சில வேளைகளில் ஜனாதிபதியை சந்திப்பதற்காக மூன்று மணித்தியாலங்கள் வரை காத்திருக்க நேரிட்டிருந்ததையும் ஜனாதிபதியை தான் சந்திப்பதற்கான வாய்ப்புகளும் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி பிரதான நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய பிரதான அரசியல் தலைவர்களை விலக்கி வைத்தமை பாதுகாப்பு சீர்குலைவு என்கிறது இந்த அறிக்கை. ஜனாதிபதியின் செல்வாக்குட்டிருப்பதும், அவர் பாதுகாப்பு கட்டமைப்புகளின் தொடர்பாடல் மார்க்கங்களை நலிவடையைச் செய்திருப்பதும் பாதுகாப்புத் துறையின் பலவீனத்துக்கு காரணமாக ஆகியிருகிறது.

2018 ஆம் ஆண்டு ஜனாதிபதி வர்த்தமானியின் மூலம் பொலிஸ் துறையை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தார். ஒக்டோபர் 26 சதிக்கிளர்ச்சியின் போது இதன் பாதகமான விளைவு வெளிப்பட்டது. ஜனாதிபதி அளவுக்கு மீறிய அதிகாரங்களை தனக்கு கீழ் கொண்டு வந்த போதும் அவற்றை முறையாக நிர்வாகம் செய்யவில்லை என்ரும் அறிக்கையில் இருந்து அறியக் கிடைக்கிறது. ஜனாதிபதியின் விருப்பு வெறுப்புக்கமைய தேசிய பாதுகாப்பு சபையை தொலைநோக்கில்லாமல் இயக்கியததானது அதன் செயற்திறனையும், வினைத்திறனையும் பாதித்திருக்கிறது.

மேலும் கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களை உரிய வகையில் பாதுகாப்போடு தொடர்புடைய அங்கங்கள் தமக்கிடையில் பரிமாறி, தேசிய பாதுகாப்புச் சபையைக் கிராமமாகக் கூட்டி உரிய கட்டளைகளைப் பிறப்பித்து  நடவடிக்கையில் இறங்கியிருந்தால் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தவிர்க்கப்பட்டிருக்கும் என்பதை வாக்குமூலங்கள் சுட்டிக்காட்டுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மலல்கொட அறிக்கை
இன்னொன்றையும் இங்கு குறிப்பிடவேண்டும், இந்த விசாரணைக் குழுவுக்கு முன்னர் இந்தத் தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியால் ஏப்ரல் 22 அன்று முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித மலல்¬கொட தலைமையில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செய¬லாளர் பத்¬ம¬சிறி ஜயமான்ன ஆகியோரைக்கொண்ட குழுவை நியமித்தார். இந்தக் குழுவில் ஜனாதிபதியும் வாக்குமோலம் வழங்கினார். இந்தக் குழு யூலை 10 அன்று 140 பக்கங்களைக் கொண்ட தமது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது. இந்த அறிக்கையிலும் ஜனாதிபதி மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்ததைக் கவனிக்க வேண்டும். விஜித் மலல்கொடவும் இந்தத் தெரிவுக்குழுவின் முன் அவர்களின் ஆணைக்குழு விசாரணை குறித்து ஓகஸ்ட் 20 அன்று வாக்குமூலம் வழங்கி இருந்தார்.

முழு உலகையும் உலுக்கிய இந்தத் தாக்குதல் சமபவம் குறித்து ஜனாதிபதி தனது கௌரவப் பிரச்சினை காரணமாகவும், பிரதமருடனான தனிப்பட்ட அரசியல் குரோதம் காரணமாகவும் தாக்குதலுக்கு முன்னரும், தாக்குதலுக்கு பின்னரும் தனது கடமையிலிருந்து மீறியிருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டிய போதும் ஜனாதிபதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதபடி அரசியலமைப்பு சட்டம் அவருக்கு வாய்ப்பையும், சலுகையையும் வழங்கியிருக்கிறது. ஆனால் அதிகாரிகள் மட்டுமே இன்று தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள். ஜனாதிபதியும் தன மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலகுவாக மறுத்துவிட்டு அதிகாரிகளின் மீது பழியை சுமத்திவிட்டு தப்ப முற்படுவதையே நாம் காண்கிறோம்.
ஜனாதிபதி தப்பலாமா?
இந்த அறிக்கையை புறக்கணிக்கும் அளவுக்கு இந்த குழுவோ, அல்லது குழுவின் விசாரணை நடவைக்கைகளோ, குழுவில் இருந்தவர்களோ அரசியல் பாரபட்சத்துடன் நடத்து கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சுமத்த முடியாது. இந்த குழு பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, அதுவும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கக் கூடிய வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட குழு. விசாரணைகள் அத்தனையும் பகிரங்கமானவை. சகல ஊடகங்களுக்கும் விசாரணைகளை அவதானிக்க வழிசெய்யப்பட்டதுடன், அத்தனையின் காணொளியும் நேரடியாக காண்பிக்கப்பட்டன. அவை இன்னமும் பகிரங்கமாக யூ டியூப் போன்ற தளங்களில் மீண்டும் மீண்டும் பார்க்க வழிசெய்யப்பட்டிருக்கின்றன. இப்படி ஒரு சம்பவத்தை முன்கூட்டியே தடுத்திருக்க கூடிய சக்திகள், வழிகள் பற்றி ஆராயப்பட்டு இனிமேலும் நிகழாமல் இருப்பதற்கான வாய்ப்புகளையும் சுட்டிக்காட்டுகின்றன. ஜனாதிபதி மட்டுமன்றி மேலும் பலரும் இதில் எவ்வாறு காரணகர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள் என்பது குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் உறுப்புரை 33 ஏ வின் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குப் பொறுப்புகூற கடமைப்பட்டவர். அப்படியிருக்கும் போது சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட பாராளுமன்ற விசாரணைக்குழுவின் அறிக்கைக்கு அவர் பதிலளிப்பதும், விதந்துரைப்புகளை நிறைவேற்ற வழிசெய்வதும் அவரின் பொறுப்பு. மாறாக அவர் தனது தவறுகளை மூடிமறைப்பதற்காக நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களை காவுகொடுப்பது முற்றிலும் அராஜகம். அநியாயம்.

இப்படி ஒரு முக்கிய விசாரணையை நாட்டின் பொது மக்களும், அரசியல் சக்திகளும், சர்வதேசமும் வேண்டியிருந்தன. அதனை முறையாக மேற்கொண்ட ஒரு குழுவின் இறுதி அறிக்கையை தன்னிச்சையாகயும், தற்றுணிவிலும் நிராகரித்த ஜனாதிபதியை கண்டிக்க தண்டிக்க என்ன பொறிமுறை உண்டு?

நன்றி - தினக்குரல்

அறிக்கைகளை இங்கிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்
https://www.parliament.lk/uploads/comreports/sc-april-attacks-report-ta.pdf
https://www.parliament.lk/uploads/comreports/sc-april-attacks-report-evidence-vol1.pdf
https://www.parliament.lk/uploads/comreports/sc-april-attacks-report-evidence-vol2.pdf
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates