அரங்கம் 84 இதழ்களை எட்டியிருக்கிறது. அரங்கத்தின் முதலாவது இதழில் இருந்து எழுதுகிறேன். இதுவரை மொத்தம் 35 இதழ்களில் எழுதியிருக்கிறேன்.
அரங்கத்தை தொடக்குவதற்கு முன்னர் நண்பர் சீவகன் பத்திரிகை குறித்து என்னுடன் உரையாடிக்கொண்டே இருந்தார். அப்படியொரு பத்திரிகையில் அவசியத்தைப் பற்றி நிறையவே பகிர்ந்துகொண்டோம். என்னை எழுதச் சொல்லிக் கேட்ட போது எனக்கு மறுக்க முடியாமைக்கு சில காரணங்கள் இருந்தன. நண்பர் சீவகனை 90களின் நடுப்பகுதியில் இருந்து நான் அறிவேன். சரிநிகருடன் நெருங்கிய நட்பு கொண்டவராக அவர் அப்போது இருந்தார். அதன் பின்னர் பிபிசியில் இணைந்த பின் அவர் உலகம் அறிந்த பிரமுகராக ஆகிவிட்டார். அவரின் குரலை பிபிசி தமிழோசையில் தான் கேட்க முடிந்தது. பிபிசியில் இருந்து அவர் நீங்கிய பின்னர் இந்தப் பத்திரிகையை அவர் வியாபார நோக்கத்திற்காக கொண்டு வரவேண்டும் என்று நினைக்கவில்லை. இப்பேர் பட்ட ஒரு பத்திரிகையின் தேவை இருக்கிறது. அந்த இடைவெளியை நிரப்ப வேண்டும், முன்னுதாரண பத்திரிக்கை ஒன்றைக் கொணர வேண்டும் பிரக்ஞையாகவே இருந்ததை உணர முடிந்தது.
அவரின் அந்த பிரக்ஞைக்கு எனது ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டேன். அரங்கம் தொடங்கிய அதே காலப்பகுதியில் நான் தினக்குரலுக்கும், வீரகேசரிக்கும் வாராந்தம் எழுதிக்கொண்டிருந்தேன். எனவே இன்னொரு கட்டுரையும் வாராந்தம் கிரமமாக எழுதுவது என்பது பெரும் சவாலான விடயம். ஆனாலும் அந்த சவாலை என்னளவில் ஏற்றுக்கொண்டு எழுதத் தொடங்கினேன்.
எழுத்துச் சுதந்திரத்தைத் தராத எந்த ஊடகத்திலும் இதுவரை நான் எழுதியதில்லை. பிரதான பத்திரிகைகள் சில என்னை எழுதக் கேட்டுக்கொண்டபோதெல்லாம் அப்பத்திரிகைகளின் எழுத்துச் சுதந்திர லட்சணத்தை அறிந்தே நான் நாகரிகமாக தவிர்த்துக்கொண்டேன். தினக்குரலில் எனக்கு வழங்கப்பட்டிருந்த சுதந்திரத்தின் காரணமாக இந்த ஐந்து வருடங்களாக நான் ஞாயிறு வாரப் பத்திரிகைக்கு எழுதிவருகிறேன்.
ஆனால் சீவகன் போதுமான சுதந்திரத்தை எனக்கு அரங்கத்தில் தந்தார். நான் எந்தத் தலைப்பில் எழுதினாலும் அது அவசியமானதாகத் தான் இருக்கும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். எழுத்தின் எல்லை குறித்து எம்மிருவருக்கும் இருந்த பொதுப்புரிதல் எமது இணைவை சாத்தியப்படுத்தியது. ஆரம்பத்தில் மலையகம், கொழும்பு, மட்டக்களப்பு பற்றிய கட்டுரைகளை நான் எழுதுவதாகத் தான் பேசி உடன்பட்டிருந்தும் அதன் பின்னர் நான் எழுதுகிற எத்தலைப்பும் வரவேற்புக்குரியதாகத் தான் இருக்கும் என்கிற நம்பிக்கை நண்பர் சீவகனிடம் இருந்தது.
எனவே தான் எந்தத் தலைப்பில் எழுதவும் எனக்கு சுதந்திரம் தந்திருந்தார். அந்த சுதந்திரத்தை நான் நன்றாக பயன்படுத்திக்கொண்டேன். துஷ்பிரயோகம் செய்தது கிடையாது.
பெரும் பத்திரிகைகளில் எழுத முடியாத, அங்கு எழுத சந்தர்ப்பம் வாய்க்காத தலைப்புகளை இங்கு எழுதத் தீர்மானித்தேன். அத் தலைப்புக்கள் அனைத்தும் நான் எழுதுவதற்காக நெடுங்காலமாக காத்திருந்த தலைப்புக்கள். குறிப்பாக வரலாறு தொடர்பில் இதுவரை தமிழில் பேசப்படாத விடயங்களை எழுத ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டேன்.
நான்காவது கட்டுரையில் இருந்து எனது பக்கத்துக்கென்று நிலையான தலைப்பாக “பட்டறிவு” என்று இட்டுக்கொண்டேன். அதில் சுய அனுபவக் கட்டுரைகளாக எழுதவே எண்ணியிருந்தபோதும் சமூகம், வரலாறு, பண்பாடு சார்ந்து எழுதினேன்.
எனது எழுத்துக்கள் அனைத்துமே நூலுருவாக்க இலக்கைக் கொண்டவை. நூலை எழுதி முடிப்பது என்று தொடங்கிய திட்டங்கள் எப்படி காலவிரயமாகிப் போயின என்பது தொடர்பில் நிறைய கசப்பான அனுபவம் உண்டு. எனவே பத்திரிகைகளுக்கு எழுத ஒப்புக்கொள்வதன் மூலம் எனக்கான நிர்ப்பந்தத்தையும், கிரமத்தையும், ஒழுக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதேவேளை மேம்போக்காக எழுதாமல் நூலுக்கான கட்டுரை என்கிற ஆழத்துடனும், பிரக்ஞையுடனும் அக்கட்டுரைகளுக்கு அதிக அளவு உழைப்பைக் கொடுக்கவே செய்கிறேன். எனவே தான் அரங்கத்தில் வெளிவந்த கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
புதிய வாசகர்கள் எனக்கு அறிமுகமானார்கள். எனது கட்டுரை வெளிவராத வாரங்களில் “ஏன் உங்கள் கட்டுரை வெளிவரவில்லை? என்று ஏமாற்றத்துடனும், உரிமையுடனும் கேள்வி கேட்கும் வாசகர்களைப் பெற்றுக் கொடுத்தது அரங்கம்.
எனது கட்டுரைகளை உரிய நேரத்தில் கொடுக்க முடியாமல் கடைசி நேரம் வரை இழுத்தடித்திருக்கிறேன். அப்போதெல்லாம் பொறுமையுடன் எனக்காக காத்திருக்கிறார் நண்பர் சீவகன்.
இதுவரை எழுதிய கட்டுரைகள் அத்தனையும் முழுப் பக்கக் கட்டுரைகள். சில கட்டுரைகள் இரு பக்க கட்டுரைகளாகவும் இருந்திருக்கின்றன. இடப்பிரச்சினை இருந்தால் நீங்களே தயக்கமில்லாமல் சுதந்திரமாக வெட்டிக்கொள்ளுங்கள், எப்படியும் இது நூலில் பின்னர் இடம்பெறும், என்று சீவகனிடம் கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் முழுமையாகவே அவற்றைப் பிரசுரித்தார். எனது கட்டுரைக்கு முன்னுரிமை அளித்து வடிவமைப்பு செய்து முடித்த பக்கங்களைக் கூட தவிர்த்திருக்கிறார். பொதுவாக கட்டுரையாளர்கள் விரும்புவது வாசகர்களின் வினையாற்றல். பெரும்பாலும் அக்கட்டுரையாளர்களுக்கு அந்த வாசகர்களின் எண்ணங்கள் போய் சேருவதில்லை. ஆனால் அவ்வப்போது என் கட்டுரைகளுக்கு கிடைக்கும் வரவேற்பையும், எதிர்வினைகளையும், கருத்துக்களையும் சீவகன் பகிர்ந்து வந்திருக்கிறார். இதைவிட ஒரு கட்டுரையாளனுக்கு என்ன வேண்டும்?
அதுமட்டுமன்றி சென்ற ஆண்டு இலங்கை சென்றிருந்த வேளை மட்டக்களப்புக்கு என்னை அழைத்து அரங்கம் அலுவலகத்திலேயே வாசகர்களுடனான ஒரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்து அற்புதமான உரையாடலை மேற்கொள்ள வழிவகுத்தார். பேராசிரியர் மௌனகுரு தலைமையில் மேலும் முக்கிய எழுத்தாளர்களுடன் நடந்த அந்த சந்திப்பு எனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்தது.
அரங்கம் கிழக்கில் ஒரு புதிய ஊடக கலாசாரத்தை ஏற்படுத்தியிருகிறது என்பதை உறுதியாகக் கூற முடியும். அரங்கத்தின் உள்ளடக்கம் அப்படி.
கடந்த வாரம் அரங்கத்தின் இறுதி இதழ் இதுதான் சரா என்று என்னிடம் சீவகன் கூறியபோது நான் அதிர்ந்தே போனேன். ஒரு லட்சிய ஊடகக் கனவு தன்னை இடைநிறுத்திக் கொள்கிறது என்கிற செய்தியை இலகுவாக கடந்து போக முடியவில்லை. இந்த இழப்பு எனக்கோ, சீவகனுக்கான இழப்பல்ல மாறாக நமது மக்களுக்கும், தரமான வாசகர்களுக்குமான இழப்பு. அரங்கம் குறுகிய காலத்தில் அந்தளவு சாதித்துக் காட்டியிருக்கிறது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...