Headlines News :
முகப்பு » , , , , , , » மலையக வாழ்வியலை திசைதிருப்பிய உருளவள்ளி போராட்டம் - என்.சரவணன்

மலையக வாழ்வியலை திசைதிருப்பிய உருளவள்ளி போராட்டம் - என்.சரவணன்


பொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு மலரில் வெளியான கட்டுரை இது.
1940 களில் மலையக மக்களின் சமூகத் திரட்சி, தொழிற்படை, அவர்களின் தன்னெழுச்சி, அரசியல் உத்வேகம் என்பவை இலங்கையின் மைய இனவாத அரசியல் தலைமைகளுக்கு பீதியைக் கிளப்பியது. அதன் விளைவே மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிப்பது, குடியுரிமையை இரத்து செய்வது, நாட்டை விட்டுத் துரத்துவது, பரம்பரையாக வாழ்ந்த அவர்களின் வாழ்விடங்களில் இருந்து “அபிவிருத்தி குடியேற்றம்” என்கிற பெயரால் அவர்களை துரத்தியடிப்பது என்பன 1940 களில் தொடக்கப்பட்டன.

இனவாத அரசு அச்சமுறுவதற்கு உடனடிக் காரணமாக அமைந்த உருளவள்ளி போராட்டம் குறித்ததே இக்கட்டுரை.

டீ.எஸ்.சேனநாயக்கவின் திட்டம்
1939-1947 க்கு இடையில் மலையகத்தில் கிராம அபிவிருத்தி என்ற பெயரில் வழங்கப்பட்ட 148 562 ஏக்கர் நிலத்தில் ஒரு துளி கூட, மலையக மக்களுக்கு வழங்கப்படவில்லை. 1942ஆம் ஆண்டு டீ.எஸ்.சேனநாயக்க காணி, விவசாய அமைச்சராக தெரிவுசெய்யப்பட்டார். 1947 ஆம் ஆண்டு வரை  அப்பதவியை அவர் வகித்தார். விவசாய அபிவிருத்தி என்கிற பெயரில் அவர் மேற்கொண்ட திட்டமிட்ட இன சுத்திகரிப்பு குடியேற்றங்கள் குறித்து புதிதாக சொல்வதற்கில்லை. இந்தக் காலப்பகுதியில் அவர் மேற்கொண்ட  குடியேற்றங்களில் காகம, சேனபுர (சேனநாயக்க என்கிற தனது பெயர் பொதிந்த), சீ போர்த் (C Fourth) என்பவற்றுடன் நேவ்ஸ்மியர் என்கிற குடியேற்றமும் அடங்கும். “நேவ்ஸ்மியர் ஜனபதய” என்கிற குடியேற்றம் உருளவள்ளி தோட்டத்தையும் உள்ளடக்கியது. கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டையில் அமைந்துள்ள இந்த உருளவள்ளி தோட்டப் பகுதியில் திட்டமிட்ட குடியேற்றத்தின் போது மலையக மக்கள் சொந்த வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். “சீ போத் ஜனபதய” என்னும் பெயரில் பழம்பாசி தோட்டத்தையும் குடியேற்ற பிரதேசமாக்கியது. (1)

1945 இல் நேவ்ஸ்மியர் (KINAVESMIRE) தோட்டத்தில் 400 ஏக்கர் காணியை இனவாதிகள் பலாத்காரமாக பறிக்க முற்பட்டபோது, அது கடுமையான எதிர்ப்பினால் தடுக்கப்பட்டது. அப்படி அது நிறுத்தப்பட்டதற்கு இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் எம்.எஸ்.அனியின் (M S Aney) அழுத்தமும் காரணம். (2)

இந்த பாரபட்சம் குறித்து அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்துக்கு நீண்ட  பதில் கடிதத்தையும் Sir R Drayton எழுதியிருக்கிறார்.

இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்றும் டீ.எஸ்.சேனநாயக்க ஏற்கெனவே ஊடகங்களுக்கு அளித்த விளக்கங்களின்படி தோட்டத் தொழிலுடன் தொடர்பில்லாத 2000 தொழிலாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டது என்றும் அனியின் (M S Aney) கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

சேனநாயக்க அரசாங்கம் உருளவள்ளி தோட்டத்தில் மலையக மக்களை வெளியேற்றி சிங்கள குடியேற்றத்தை நடத்த முற்பட்ட போது, இதை எதிர்த்து மலையக மக்கள் போராட்டத்தை நடத்தியது. தொடர்ச்சியான குடியேற்றங்களை இலங்கையில் இன அழிப்பு வரலாற்றின் ஒரு பகுதியாக மலையகத்திலும் திட்டமிட்டு நடத்தப்பட்டது.

இலங்கை அரசாங்கம் யட்டிந்தோட்டை உருளவள்ளி தோட்டத்தை கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுவீகரித்து, அங்கு வாழ்ந்த தொழிலாளர்களை வெளியேற்ற முயற்சி எடுத்தது. அதனை எதிர்த்து தொழிற்சங்கத் தலைவர் கே.ஜி.எஸ். நாயர் தலைமையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினார்கள். அப்போராட்டத்திற்கு ஆதரவாக டிக்கோயா, கேகாலை, களனி பள்ளத்தாக்கு, அட்டன் போன்ற பகுதிகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தார் சி.வி.வேலுப்பிள்ளை. மலையக மக்களின் போராட்ட வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுக்கொண்ட போராட்டம் அது. 

1946ம் ஆண்டு வெற்றிலையூர், உருளவள்ளி போராட்டம்.
1946ஆம் ஆண்டு புளத்கோபிட்டிய எனப்படும் வெற்றிலையூருக்கு அருகில் உருளவள்ளி என்கிற தோட்டத்தில் நடத்தப்பட்ட இப்போராட்டமே இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கம் நடத்திய முதலாவது போராட்டம். உருளவள்ளித் தோட்டத்தில் வசித்த தொழிலாளர்கள் அருகேயிருந்த காட்டை வெட்டி சுத்தப்படுத்தி தமக்கான தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்காக மரக்கறித் தோட்டம் அமைத்து பராமரித்து வந்தார்கள். ஆனால் அரசு அப்பகுதியைச் சுவீகரித்து சிங்கள கிராமங்களைச் சேர்ந்த மக்களைக் குடியமர்த்த முடிவெடுத்தது. தொழிலாளர்கள் வெளியேற மறுக்கவே அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் அத்துமீறல் குற்றத்திற்காக 1000 ரூபா அபதாரம் அல்லது 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சௌமியமூர்த்தி தொண்டமான் தொழிற்சங்க நடவடிக்கைகளில் கலந்துகொண்ட முதலாவது போராட்டமாக உருளவள்ளி போராட்டம் குறிப்பிடப்படுகிறது. யட்டியாந்தோட்டையை அண்மித்த உருளவள்ளி தோட்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டு கிராமிய பெரும்பான்மை இன மக்களை அங்கு குடியேற்றுவதற்காக பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் அரசு மேற்கொண்ட முயற்சி காரணமாகவே இம்மாபெரும் போராட்டம் வெடித்தது.

கிழக்கிலங்கையில் அல்லை, கந்தளாய், கல்லோயா என குடியேற்றத்திட்டங்களை உருவாக்கிய அரசு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்களையும் விட்டு வைக்கவில்லை. 

உருளவள்ளி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஹட்டன், இரத்தினபுரி, எட்டியாந்தோட்டை, கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 25 ஆயிரம் தோட்டத் தொழிலாளர்கள் 1946 யூன் 21 முதல் யூலை 9 வரை இந்த வேலைநிறுத்தத்தை மேற்கொண்டிருந்தனர். (3)

மக்களின் தன்னெழுச்சியானது இலங்கை இந்தியர் காங்கிரஸ் அமைப்பை மேலும் உத்வேகப்படுத்தியது அதன் விளைவாக நான்கம்ச கோரிக்கையை இந்த ஹர்த்தாலில் முன்வைத்தனர்.
  1. தீவின் மற்ற மக்களுக்கு சமமான உரிமையைப் பெறுதல்;
  2. 5 வருடங்கள் குடியிருந்த சகல இந்தியர்களுக்கும் குடியுரிமை.
  3. தொழில் மேற்கொள்ளக்கூடிய ஒழுங்குகளை நேவ்ஸ்மியர் திட்டத்திலும் அது போன்று ஏனைய தோட்டங்களிலும் எதிர்காலத்தில் ஏற்பாடு செய்தல்.
  4. உரிமையையும், குடியியல் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான நிர்வாக நடவடிக்கைகளை எடுப்பதுடன் இலங்கை வாழ் இந்தியர்களுக்கு எதிரான பாகுபாடான அனைத்து நிர்வாக நடவடிக்கைகளையும் இடைநிறுத்துதல்.(4)

புதிய யாப்பு சீர்திருத்தப் பணிகள் இதே காலத்தில் நிகழ்ந்துகொண்டிருந்ததால் அது முடிக்கப்படுவதற்கு முன்னர் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இலங்கை இந்தியர் காங்கிரஸ் வலியுறுத்தியது.

பிரிவிக் கவுன்சில் வழக்கு
நேவ்ஸ்மியர் தோட்டத்துக்கு சுப்பிரண்டண்டாக டீ.ஆர்.எம்.ராஜபக்ச என்பவர் 26.06.1946 ஆம் ஆண்டு அன்றைய ஆளுனரால் நியமிக்கப்பட்டிருக்கிறார். அன்றைய அரசாங்க அதிபர் ஹென்டர்சன் (Henderson) இவர்களின் கூட்டு ஏற்பாட்டின் பேரில் தான் தொழிலாளர்களை அந்தத் தோட்டத்திலிருந்து அப்புறப்படுத்தும் பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன.

ஹென்டர்சன் அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த 243 வீடுகளைச் சேர்ந்தவர்களை 31.05.1946 க்கு முன்னர் அப்புறப்படுத்தும்படி பணித்திருக்கிறார். செல்வநாயகமும் அதில் ஒருவர். செல்வநாயகம் அங்கிருந்து வெளியேற மறுத்திருக்கிறார். செல்வநாயகம் தனது தாய் தந்தை மற்றும் அவரின் மனைவியுடன் அந்த வீட்டில் வாழ்ந்துவந்திருக்கிறார். 70 வருடத்துக்கும் மேலாக அவரின் குடும்பம் வழிவழியாக அங்கு வாழ்ந்துவந்திருக்கிறது. இறுதியில் ஹென்டர்சன் சட்டத்துக்கு புறம்பாக அந்த நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறார் என்று செல்வநாயகத்தின் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் பெரும் நெருக்கடியாக இருந்தது. இரண்டாம் உலக யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தகாலம் ஆதலால், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு வேறு பல கடமைகளும் சுமைகளும் அதிகரித்திருந்த காலம். (5)

இந்தத் தொழிலாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தது அரச தரப்பு அந்த வழக்கில் தொழிலாளர்கள் குற்றவாளிகளெனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் சின்னசாமி செல்வநாயகம் அந்த வழக்கை அன்று உச்ச நீதிமன்றமாக தொழிற்பட்ட லண்டனில் இருந்த பிரிவிக் கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்தார். அந்த வழக்கின் தீர்ப்பு 26.07.1950 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதன்படி அவர் விடுவிக்கப்பட்டார். இக்கட்டுரைக்காக அத்தீர்ப்பின் மூலப் பிரதியை கண்டெடுக்க முடிந்தது.

“...மேற்கூறிய காரணங்களுக்காக, இந்த முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டு 1946 ஜூன் 28 ஆம் திகதி கேகாலை நீதவான் நீதிமன்றம் நிறைவேற்றிய தண்டனை தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்றும் தாழ்மையுடன் மாட்சிமைக்கு அறிவுறுத்துவார்கள்...” என்று அததீர்ப்பின் இறுதியில் குறிப்பிடப்பட்டது

நேருவின் அக்கறை
இந்த ஹர்த்தால் பெரியளவு பேசப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்படும்வரை இந்த ஹர்த்தால் பங்களித்திருந்தது. நேரு இது தொடர்பில் “த இந்து” பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இப்படி குறிப்பிடுகிறார். (6)
“...இலங்கை அரசாங்கத்தின் இந்தக் குடியேற்றத்திட்டம் ஒன்றும் மோசமில்லை. அதுவொரு நல்ல திட்டம். அந்தத் திட்டத்தை நான் எதிர்க்கவில்லை. ஆனால் இந்த திட்டத்தில் இந்திய வம்சாவளியினர் புறக்கணிக்கப்படுகிறார்கள். எந்தவொரு ஒழுங்கான மாற்று எற்பாடுமின்றி பெருந்தொகை மக்களை அந்த நிலங்களில் இருந்து எந்தவொரு அரசாங்கமும் வெளியேற்ற முடியாது.

...ஒரு மாதத்துக்கு முன்னர் பொதுவேலைநிறுத்தம் அங்குள்ள இந்தியர்களின் தொழிற்சங்கத்தால் தொடக்கப்பட்டது. பெரிய அளவிலானார் கலந்துகொண்ட அந்த அமைதியான ஹர்த்தால் நீண்டகாலத்துக்கு பேசப்படக்கூடிய வகையில் குறிப்பிடத்தக்கதொரு ஹர்த்தால்.

இந்தியர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் கசப்பை நாம் உருவாக்கிக்கொள்ளக் கூடாது. இந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் ஹர்த்தால்கள் தொடர்பில் இலங்கைக்கு பாரிய அழுத்தம் கொடுப்பது இந்தியாவுக்கு மிகவும் எளிதானது, ஏனெனில், கணிசமான அளவு இலங்கையின் பொருளாதாரம் இந்தியாவில் தங்கியிருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக இலங்கை வாழ் இந்திய பிரஜைகளின் எண்ணங்களையும் மீறி சமீபத்தில் இலங்கை எதிர்கொண்ட நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவ இந்தியா உணவு அனுப்பியது. எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் இலங்கைக்கு ஒரு பெரிய அண்ணன் - அளவிலும் மற்றும் பொருளாதார நிலையில் பெரியவர்கள்.

ஆறு வருடங்களுக்கு முன்னர் அங்கு சென்றிருந்த போது கூட அவர்களோடு சண்டை பிடிக்கவோ, எச்சரிக்கவோ இல்லை. மாறாக நல்லெண்ணத்தையே வெளிக்காட்டினேன். ஆனால் இலங்கையில் இன்று நடப்பவை என்னை எரிச்சலடையச் செய்கிறது....”
நேருவின் இந்தப் நேர்காணல் வெளிவந்தது 4 நாட்களின் பின்னர் (14.07.1946)  நேருவின் தொடர்பாளர் அரியநாயகத்துக்கு எழுதிய கடிதத்திலும் இந்தப் போராட்டம் பற்றியும், உரிய வசதிகள் அவர்களுக்கு செய்து கொடுக்கப்படாமல் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற விடக்கூடாது என்பதையும் அழுத்தமாக தெரிவித்திருக்கிறார். (7)

01.07.1947 அன்று அரச சபையில் நேவ்ஸ்மியர் சிக்கல் குறித்து உரையாற்றிய சேனநாயக்க இது பத்தாண்டுகளாக இழுபறிபட்டுவரும் பிரச்சினை என்றார். இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் அந்த நிலத்திற்கு உரித்துடையவர்கள் அல்லர் என்றும் அவர்களுக்கு உள்ளூர் கிராமிய குழு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்குக் கூட வாக்குரிமை அற்றவர்கள் என்றும் வாதிட்டார். (8)

நேவ்ஸ்மியர் பிரச்சினை இலங்கை இந்திய உறவில் இந்தக் காலப்பகுதியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தவே செய்திருக்கிறது.

நேரு 30.09.1046 அன்று பொதுநலவாய திணைகளத்தின் செயலாளருக்கு இது குறித்து எழுதியதுடன் அக்கடிதத்தில் தொழிலாளர்களுக்கு இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிராக இலங்கை குற்ற வழக்கு தொடுத்திருப்பதன் அதிருப்தியையும் வெளியிட்டதுடன் இலங்கைக்கு இது குறித்து ஒரு தந்தியை அனுப்புமாறு அச் செயலாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். (9)

பழி தீர்க்கப்பட்ட மலையக மக்கள்
மலையகத் தோட்டத்தொழிலாளர்கள்  பற்றிய எரிச்சலையும், அச்சத்தையும் இலங்கையின் சிங்கள அரசியல் தலைமைகள் மத்தியில் ஏற்படுத்தியதில் உருளவள்ளி போராட்டத்திற்கு முக்கிய பங்குண்டு.

இந்த போராட்டம் கொடுத்த உத்வேகம் தான் 1947இல் நிகழ்ந்த முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பில் 7 பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகினர்.

இதில் கே.ராஜலிங்கம் (நாவலப்பிட்டி), சௌமியமூர்த்தி தொண்டமான் (நுவரெலியா), சி.வி.வேலுப்பிள்ளை (தலவாக்கலை) பி.ராமானுஜம் (உடநுவர), எஸ்.எம.சுப்பையா (பதுளை), எம்.ஆர்.மோத்தா (மஸ்கெலியா), கே.குமாரவேல் (கொட்டகலை ). அன்று மலையகத் தமிழர் அடைந்திருந்த எழுச்சியை அவதானித்த இலங்கை அரசாங்கம் அடுத்த வருடமே பிரஜாவுரிமை சட்டத்தைக் கொண்டு வந்து மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்தது. 

1947 தேர்தலின் மூலம் பதிய அரசாங்கம் ஆட்சியமைத்தது. பிரதமராக அதே டீ.எஸ்.சேனநாயக்க தெரிவானார். ஒரு சில மாதங்களில் அதாவது 1948இல் இலங்கைக்கு சுதந்திரமும் கிடைத்தது. சேனநாயக்க மேலும் பலமான அதிகாரங்களைக் கொண்ட பிரதமராக இருந்தார். அவரின் அமைச்சரவை குடியேற்றங்களைத் தொடர்ந்தது. சுதந்திரம் அடைந்த அதே ஆண்டு கிழக்கிலங்கையில் அல்லை, கந்தளாய், கல்லோயா என குடியேற்றத்திட்டங்களை உருவாக்கியதுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்களையும் விட்டு வைக்கவில்லை.

இந்த நேவ்ஸ்மியர் குடியேற்றப் பிரச்சினையின் பிரதான சூத்திரதாரியும் பின்னர் இலங்கையின் முதலாவது பிரதமராக தெரிவானவருமான டீ.எஸ். சேனநாயக்க இந்திய தோட்டத் தொழிலாளர்கள் மீது கொண்டிருந்த பகைமையை நிரூபிக்க பல ஆவணங்களையும், ஆதாரங்களையும் காட்ட முடியும். சுதந்திரமடைந்து சில மாதங்களிலேயே பல லட்சக் கணக்கான மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்தது இதன் விளைவு தான்.

அடிக்குறிப்புகள்
  1. Planters' Association of Ceylon 1854 - 1954, Colombo, 1954, p. 39.
  2. இது தொடர்பில் அனி இலங்கை ஆளுநர் சேர் ஹென்றி மூருக்கு எழுதிய கடிதம் “BRITISH DOCUMENTS ON THE END OF EMPIRE - Series B Volume 2, Sri Lanka - Editor KM DE SILVA - Part 11 - TOWARDS INDEPENDENCE - 1945--1948, Published for the Institute of Commonwealth Studiesin the University of London. என்கிற நூலில் தொகுக்கப்பட்டுள்ளது
  3. S.Nadesan- A HISTORY OF THE UPCOUNTRY TAMIL PEOPLE - NANDALALA PUBLICATION SRI LANKA 1993
  4. BRITISH DOCUMENTS ON THE END OF EMPIRE - Series B Volume 2, Sri Lanka - Editor KM DE SILVA - Part 11 - TOWARDS INDEPENDENCE - 1945--1948, Published for the Institute of Commonwealth Studiesin the University of London (P-223)
  5. A HUNDRED YEARS OF CEYLON TEA - 1867-1967 - By D. M. FORREST - CHATTO & WINDUS - LONDON – 1967 (P-244)
  6. 10.07.1946அன்று The Hindu பத்திரிகையில் வெளியான நேருவின் இந்த நேர்காணலானது “Selected works of Jawaharlal Nehru - Volume 15, A Project of the Jawaharlal Nehru Memorial Fund - Published by Sujit Mukherjee – 1982” என்கிற தொகுப்பில் பிற்காலத்தில் வெளியானது. 
  7. “Selected works of Jawaharlal Nehru - Volume 15, A Project of the Jawaharlal Nehru Memorial Fund - Published by Sujit Mukherjee – 1982 (P – 549-550)
  8. BRITISH DOCUMENTS ON THE END OF EMPIRE - Series B Volume 2, Sri Lanka - Editor KM DE SILVA - Part 11 - TOWARDS INDEPENDENCE - 1945--1948, Published for the Institute of Commonwealth Studiesin the University of London (P-220)
  9. Selected Works of Jawaharlal Nehru, Second Series, Volume 01 - General editor, Shri S. Gopal - A Project of the Jawaharlal Nehru Memorial Fund - 1984
Share this post :

+ comments + 3 comments

8:51 PM

It is true. Every time the extremist Sinhala element acted against Tamil community.

10:49 AM

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நன்றிகள் ஐயா

6:14 PM

இது மிக முக்கியமான வரலாற்று அம்சமாகும். மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாடுகளில் இது முற்றிலும் வெளிக்கொண்டு வருவதன் முக்கியத்துவம் வழியுருத்தப்படும்.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates