“இசம்” என்பது தனித்துவமான நடைமுறை, அமைப்பு, அல்லது தத்துவார்த்த அரசியல் சித்தாந்த முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல். நாசிசத்திலிருந்து கொம்யூனிசம் வரை இசங்கங்களின் பரிமாணங்களும் அவற்றின் பரிணாமங்களும் தனித்த சுயபெறுமதிகளைக் கொண்டவை. இசம் என்பதை தமிழில் “இயம்” என்றும் அறிமுகப்படுத்தி பல காலமாகின்றன. பெண்ணியம், பார்ப்பனியம் என்பனவற்றை நாம் உதாரணங்களாகக் கொள்ள முடியும். தனிநபர் சார்ந்த கோட்பாடுகள், தத்துவங்கள் நடைமுறை என்பவற்றைக் கொண்டும் உலக அளவில் அந்தந்த சூழல்களில் “இசங்களை” சுட்டுவதும் வழக்கம், மாக்சிசம், லெனினிசம், ட்ரொஸ்கிசம், மாவோயிசம் என அடுக்கிக்கொண்டு போகலாம்.
இலங்கையில் ராஜபக்சவாதமும் (“ராஜபக்சயிசம்”) பலமாக கட்டியெழுப்பப்பட்டிருக்கிற சிங்கள பௌத்த தேசியவாத கூட்டுச் சிந்தனை தான். அதற்கென்று ஒரு சித்தாந்த வடிவம் கட்டமைக்கப்பட்டு நிறுவப்பட்டிருக்கிறது.
குடும்ப ஆட்சி
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் அரசியலில் ஈடுபடுவதில் தவறுமில்லை, தடையுமில்லை. ஆனால் எந்த அரசியல் தலைமையும் மக்கள் மத்தியில் இருந்து உருவாதல் அவசியம். மக்கள் பணிகளை முன்னெடுப்பதன் மூலம் அந்தத் தார்மீக அரசியல் இடத்தை பெற்றடையவேண்டும். மாறாக தனியொரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சியையும், அதிகாரத்தையும் சுற்றிவளைத்துப் போடும் கைங்கரியத்துடன் குடும்ப உறுப்பினர்கள் நேரடியாக தலைமைகளுக்கு கொண்டுவரப்படுவார்களாக இருந்தால் அதைத் தான் குடும்ப ஆட்சி என்று வரைவிலக்கணப்படுத்துகிறோம்.
இலங்கையின் அரசியலில் நிலபிரபுத்துவ, செல்வாக்கைக் கொண்ட பல குடும்பங்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்தியுள்ளன. சேனநாயக்க, பண்டாரநாயக்க, ரத்வத்த, ஒபேசேகர, எல்லாவல, கொத்தலாவல, விஜேவர்தன, மீதெனிய, ராஜபக்ச, குமாரஸ்வாமி, பொன்னம்பலம், தொண்டமான் போன்ற குடும்பங்களின் செல்வாக்கை குறிப்பாக நாம் சொல்லலாம்.
அந்த வரிசையில் ராகபக்ச குடும்பத்துக்கு வேறொரு பரிணாமமும். பரிமாணமும் உண்டு. மேற்படி எந்தவொரு குடும்பமும் கொண்டிராத செல்வாக்கை கட்டமைத்துக்கொண்ட ராஜபக்ச குடும்பம் மேற்படி குடும்பங்களிலிருந்து எங்கு மாறுபடுகின்றது என்றால் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் தமது குடும்ப வலைப்பின்னலை வளப்படுத்தியதும், பலப்படுத்தியதிலும் தான். மைய அரசியல் அதிகாரத்தை தமது குடும்ப உறுப்பினர்களிடமே மாறி மாறி வைத்துக்கொள்கின்ற அஞ்சலோட்ட பாணி அரசியல் அதிகார முறைமையையே அவர்கள் ஏற்படுத்திக்கொள்ள முனைந்தார்கள்.
போர் காலத்தில் வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் கூட அராஜக, சர்வாதிகார, ஊழல் மிகுந்த, கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்ட, குடும்ப ஆட்சியை மேற்கொண்டதன் மூலம் பயத்தாலேயே பலரை தமது கட்டுக்குள் வைத்திருந்தார்கள். போரை வெற்றிகொண்டதன் மூலம் சிங்கள பௌத்த தேசியவாதமயப்பட்ட மக்களை தம் வசம் கவரச் செய்தார்கள். புலிகளை ஒழித்துக்கட்டி போரை முடிவுக்கு கொண்டுவந்தவர்கள் என்கிற நாமம் அவர்களின் சகல அட்டூழியங்களுக்கும் தயவு காட்டும் லைசன்சாக ஆக்கப்பட்டது. அதுமட்டுமன்றி ராஜபக்சக்களே இலங்கையின் மீட்பர்கள், ஆபத்பாந்தவன்கள் என்கிற மாயையும் கட்டியெழுப்பப்பட்டது.
ஊழல்களால் நாட்டை சீரழித்து, கடனாளியாக்கி, எந்த நேரத்திலும் இலங்கை திவாலாகும் நிலைக்குத் தள்ளியபிறகும் கூட மகிந்தவாதிகள் இன்னமும் பலமாக இருக்கிறார்கள் என்றால் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பலம் அந்தளவு வலிமையானது என்று தான் விளங்க வேண்டியிருக்கிறது. “பிரபாகரனைக் கொன்றவர்கள் அவர்கள் தவறிழைப்பது தவறே இல்லை” என்று சொல்லிக்கொள்ளுமளவுக்கு மகிந்தவாத வழிபாடு தலைதூக்கியுள்ளது. யுத்தத்தில் அழிவுகளை சந்தித்த தமிழர் தரப்பு கூட சுய வடுக்களை மறந்தபோதும், யுத்தத்தில் வென்ற சிங்களத் தேசியவாதத் தரப்பு பத்தாண்டுகள் கழிந்தும் யுத்த வெற்றியின் பேரால் மகிந்தவை கொண்டாடி வருகிறது. பாதுகாத்து வருகிறது. பலப்படுத்தி வருகிறது. என்று தான் கூற வேண்டும்.
2015 இல் மகிந்தவின் ஆட்சியை மக்கள் மாறிய பின்னரும் கூட இந்த நான்கு ஆண்டுகளும் மகிந்தவை சிங்கள அரசியல் களத்தில் “ஜனாதிபதி அவர்களே” என்றும் “ஜனாதிபதி மகிந்த” என்றும் விளிப்பதை எங்கெங்கும் காண முடிந்தது. கடந்த நவம்பர் 8 ஆம் திகதி ஹிரு தொலைக்காட்சியின் “சலகுன” என்கிற பிரபல அரசியல் உரையாடலில் கலந்துகொண்ட போது பிரபல ஊடகவியலாளர்களும் கூட அவரை ஜனாதிபதி அவர்களே என்று தான் விளித்தார். மகிந்த கட்டியெழுப்பியுள்ள “மகிந்த வழிபாடு” அப்படி.
பிரபல அரசியல் ஆய்வாளரான பிரஹ்மா செல்லானி சமீபத்தில் “இலங்கை ஜனநாயகத்தின் முடிவு” என்கிற ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதில் அவர் “ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடு ஆபத்தில் இருக்கிறது.” என்று எழுதுகிறார். அக் கட்டுரையில் அவர் ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்ந்தும் நீதித்துரையினரிடம் இருந்து தப்பி வருவது குறித்து அலசியிருந்தார்.
ராஜபக்சவின் வேர்
“ருகுனே சிங்ஹயா” (ருகுணுவின் சிங்கம்) என்று கொடிகட்டிப் பறந்த டீ.எம்.ராஜபக்ச மகிந்த ராஜபக்சவின் பெரியப்பா. நிரூபமா ராஜபக்சவின் பாட்டனார். அதாவது மகிந்தவின் தகப்பன் டீ.ஏ.ராஜபக்சவின் கூடப் பிறந்த மூத்த சகோதரன்.
1936ஆம் ஆண்டு அரசசபைத் தேர்தலில் சுயேட்சையாக ஹம்பாந்தோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் டீ.எம்.ராஜபக்ச. தொகுதிவாரித் தேர்தல் நடந்த அந்தக் காலத்தில் பெயர்களுக்கு வாக்கிடுவதில்லை. அந்தந்த வேட்பாளருக்குரிய நிறத்தைக் கொண்ட பெட்டியிலேயே வாக்கிட்டனர். விவசாயத்தின் குறியீடாக நெல்லின் நிறமான பழுப்பு நிறத்தையே அவர் தெரிவு செய்தார். அதே நேரத்திலான தோல் துண்டொன்றை அவர் அணிந்து வந்தார். இந்த தோல் துண்டு தான் மகிந்த குடும்பத்தின் குறியீடாக ஊதா நிற துண்டாக இன்று மாறியிருக்கிறது.
டீ.எம்.ராஜபக்ச அரசியல் எதிரிகளால் வழக்கு தொடரப்பட்டு சிறை செய்யப்பட்டிருந்தார். அவர் ஹம்பாந்தோட்டையின் பிரதிநிதியாக தெரிவுசெய்யப்பட்ட வேளை அவர் சிறையில் இருந்தார்.
டீ.எம்.ராஜபக்ச என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டீ சில்வா போன்ற இடதுசாரித் தலைவர்களுடன் தான் தனது அரசியல் பணிகளை முன்னெடுத்தார். மக்கள் பணிகளுக்காக ஆங்கிலேய ஆட்சியாளர்களுடன் அவர் மேற்கொண்ட மோதல்களை இன்றும் பல நூல்கள் பதிவு செய்துள்ளன. தனது சுகவீனத்தைப் பொருட்படுத்தாது அவர் அரச சபை கூட்டத்தில் பங்கு கொள்ள சென்றிருந்த வேளை 18.05.1945 அன்று அரச சபையிலேயே மரணத்தைத் தழுவிக்கொண்டார்.
டீ.எம்.ராஜபக்சவின் திடீர் மரணத்தின் பின்னர் அவருக்குப் பதிலாக அவரின் சகோதரர் டீ.ஏ.ராஜபக்ச (மகிந்த ராஜபக்சவின் தந்தை) 1947 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றார். அதில் வென்றார்.
மகிந்தவின் தந்தையார் அரசியலுக்கு வரக் காரணமாக இருந்த டீ.எம்.ராஜபக்ச பற்றி மகிந்த குடும்பம் எங்கும் பிரஸ்தாபிப்பதில்லை.
மகிந்த குடும்ப ஆட்சியின் ஆரம்பம்
டீ.ஏ.ராஜபக்சவுக்கு 9 பிள்ளைகள். ஆறு ஆண்கள், மூன்று பெண்கள். மூத்தவர் சமல் ராஜபக்ச அடுத்ததாக ஜெயந்தி, மகிந்த, சந்திரா டியுடர், பசில், கோட்டபாய, டட்லி, ப்ரீதி, சாந்தனி ஆகியோர். டட்லி, சந்திரா டியுடர் ஆகிய இருவரைத் தவிர மிகுதி நால்வரும் அரசியலில் உள்ளவர்கள். தற்போதைய நிலையில் அவர்கள் நால்வருமே ஓய்வு பெரும் வயதையொட்டியவர்கள். மகிந்தவின் ஆட்சியில் சந்திரா டியுடருக்கு பெரும் அரச பதவிகள் வழங்கப்பட்டன. சென்ற 2018 இல் டியுடர் மரணமானார். டட்லி ராஜபக்ச அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அவர் சகோதர்களுடன் கைகோர்த்து ஆதரவளிக்க வந்திருந்தார்.
1951 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க ஐ.தே.கவிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் போய் அமர்ந்துகொண்டபோது அவரோடு சேர்ந்து சென்ற ஐவரில் (ஏனையோர் ஏ.பி.ஜெயசூரிய, ஜோர்ஜ் ஆர் டி சில்வா, ஜெயவீர குறுப்பு, டீ.எஸ்.குணசேகர) ஒருவர் டீ.ஏ.ராஜபக்ச. 1952 தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் பெலிஅத்த ஆசனத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1956 தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்டு அதே தொகுதியில் வெற்றிபெற்றார்.
56 ஆட்சிக்கு தலைமை தாக்கியவர் டீ.ஏ.ராஜபக்ச என்று இன்று மகிந்த பெருமை பேசினாலும் கூட 56 ஆட்சியில் டீ.ஏ ராஜபக்சவுக்கு பிரதி அமைச்சர் பதவி கூட வழங்கப்படாத அளவுக்கு செல்வாக்கற்றவராகத் தான் இருந்தார்.
பண்டாரநாயக்க கொலையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட 1960 மார்ச் தேர்தலில் சுதந்திரக் கட்சியில் இருந்து அவர் விலகி பிலிப் குணவர்த்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணியில் சேர்ந்து போட்டியிட்டு ஐ.தே.க.வால் தோற்கடிக்கப்பட்டார். 1960 யூலை தேர்தலின் போது மீண்டும் சுதந்திரக் கட்சியிடம் வந்து ஒட்டிக்கொண்ட டீ.ஏ. அத் தேர்தலில் பெலிஅத்த தொகுதியில் வென்றார். அதற்கடுத்து 1965 இல் நடந்த தேர்தலில் தோல்வியடைந்து அரசியலில் இருந்து விலகிக்கொண்டார்.
ஐ.தே.க.விலிருந்து சுதந்திரக் கட்சிக்கும் அதிலிருந்து மக்கள் ஐக்கிய முன்னணிக்கும் பின்னர் இரண்டே மாதத்தில் மீண்டும் சுந்ததிரக் கட்சிக்கு பல்டி அடித்துக்கொண்டிருந்தவர் தான் டீ.ஏ.ராஜபக்ச.
அவருக்கு கோடிக்கணக்கான அரச பணத்தில் கோட்டபாய தனியாக மியூசியம் கட்டிய வழக்கு இன்னமும் முடிவடையவில்லை என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.
1967ஆம் ஆண்டு தனது தகப்பனாரின் மரணத்தின் பின்னர் மகிந்தவை அழைத்து பெலிஅத்த தொகுதியின் அமைப்பாளராக ஆக்கினார் சிறிமா பண்டாரநாயக்க. அத் தொகுதியில் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு முதன்முறை சென்றார் மகிந்த.
1977 தேர்தலில் ஐக்கிய முன்னணிக்குக் கிடைத்த மொத்த ஆசனங்களே 7 தான். தோல்வியடைந்தவர்களில் மகிந்தவும் ஒருவர். கூடவே அவரின் சகோதரர் பசில் ராஜபக்ச முல்கிரி தொகுதியில் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1978இல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் பறிக்கப்பட்ட போது கட்சியை விட்டு அவரை துரத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட சதியில் சம்பந்தப்பட்ட பிரபல “13 பேர் கும்பல்” இல் பசிலும் ஒருவர். அப்போது மகிந்தவும் இந்த கும்பலுக்கு ஆதரவு கொடுத்திருந்தார். அந்த சதி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பசில் காமினி திசானாயக்கவுடன் ஒட்டிக்கொண்டு ஐ.தே.கவில் இணைந்தார். மகிந்த மீண்டும் மெதுவாகச் சென்று சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைந்துகொண்டார்.
பசிலின் குடியுரிமை பறிப்பு
1985ஆம் ஆண்டு முல்கிரிகல தொகுதியில் தொகுதியில் போட்டியிடுவதற்காக சிறிமாவோ பண்டாரநாயக்கவால் தெரிவு செய்யப்பட்டவர் நிரூபமா ராஜபக்ச. அவர் டீ.எம்.ராஜபக்சவின் பேத்தி. ஜோர்ஜ் ராஜபக்சவின் புதல்வி. (அதாவது மகிந்தவின் ஒன்று விட்ட சகோதரி) ஜோர்ஜ் ராஜபக்ச முல்கிரிகல தொகுதியில் போட்டியிட்டு 1960-1976 வரை பாராளுமன்ற உறுப்பினராகவும் சிறிமா அரசாங்கத்தில் பிரதி நிதி அமைச்சராகவும் இருந்தவர். நிரூபமாவின் கணவர் ஒரு தமிழர். 1985 தேர்தலில் சொந்தக் கட்சியில் இருந்தபடி மகிந்தவும், ஐ.தே.கவில் இருந்தபடி பசிலும் நிரூபமாவுக்கு தோற்கடிப்பதற்காக இயங்கினார்கள்.
இந்தத் இடைத்தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு முதற் தடவையாக பாராளுமன்றம் சென்றார் மகிந்தவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ச. அதிலிருந்து இன்று வரை தொடர்ந்தும் பாரளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். மகிந்த ஆட்சி காலத்தில் அவர் தான் பாராளுமன்ற சபாநாயகரமேற்படு முல்கிரிகல இடைத்தேர்தல் காலப்பகுதியில் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் மகிந்த சிறையில் அடைக்கப்பட்டு கொலையைக் கண்ணால் கண்ட சாட்சிகளிருந்தும் பின்னர் விடுதலையானார். மகிந்தவின் தாயாரின் இறப்பின் போது விலங்கிடப்பட்டு தான் மகிந்த ராஜபக்ச அழைத்து வரப்பட்டார். விடுதலையாகி 1983இல் வெளியே வந்ததும் திருமணம் முடித்துக் கொண்டார்.
நிரூபமாவுக்கு எதிராக அவதூறு செய்த வழக்கில் பசில் தண்டனை பெற்று ஐந்து ஆண்டுகள் குடியுரிமை பறிக்கப்பட்டது. நிரூபமாவுக்காக வாதாடி பசிலுக்கு அத்தண்டனையைப் பெற்று கொடுத்த வழக்கறிஞர் வேறு யாருமில்லை நிமல் சிறிபால டி சில்வா தான். அந்தத் தீர்ப்பின் படி அத் தேர்தலும் செல்லுபடியற்றதாக்கப்பட்டு மீண்டும் முல்கிரிகல தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவங்களின் பின்னர் நாட்டைவிட்டு அமெரிக்கா சென்று குடியேறி அமெரிக்கனாக ஆன பசில் மீண்டும் நாட்டுக்குள் பிரவேசித்தது மகிந்த அதிகாரத்தில் வந்த போது தான்.
மகிந்தவின் எழுச்சி
பின்னர் மகிந்த 1989 தேர்தலில் தான் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு வென்றார்.
அதன் பின்னர் 1994, 2000 இல் பொதுஜன ஐக்கிய முன்னணியின் சார்பில் ஹம்பாந்தோட்டை தொகுதியிலும், 2004ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2005, 2010 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ.ம.சு.மு சார்பில் போட்டியிட்டு இரு தடவைகளும் வென்றபோதும், மூன்றாவது தடவை 2015ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார். அதே ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தனது தொகுதியை விட்டுவிட்டு குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக ஆகி பின்னர் 2018ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவரானார். அதே ஆண்டு ஒக்டோபர் 26 சதி முயற்சிக்கு திரைமறைவில் தலைமை தாங்கி இரு மாதங்கள் பிரதமராக பதவி வகித்தார். நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அப்பதவி பின்னர் செல்லுபடியற்றதாக்கப்பட்டது.
மகிந்த குடும்பத்தின் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுன என்கிற கட்சியை மகிந்த தலைமை தாங்க முடியாது இருந்தது. இன்னொரு கட்சியில் சேர்வதாலும், அதற்கு தலைமை தாங்குவதனால் சுதந்திரக் கட்சியின் யாப்பின் படி நீக்கப்பட நேரிட்டால் சுதந்திரக் கட்சியுடன் இருந்த வரலாற்று பந்தமும், அதிகாரமும் நிலையாக இழக்க நேரிடும் என்கிற பீதியில் இருந்தார். ஆனால் சுதந்திரக் கட்சியின் தலைமையை தனது ஆதரவுக்குள் வைத்திருப்பதன் மூலம் அந்த விதிகளில் இருந்து தப்பி பொ.ஜ.முவுக்கு தலைமை வகிக்கத் துணிந்தார்.
மகிந்தவின் அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் ஒருபோதும் நேரடியாக சுதந்திரக் கட்சியின் சார்பில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றதில்லை எனலாம்.
சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் பண்டாரநாயக்க குடும்பத்தின் செல்வாக்கு பண்டாரநாயக்கவுக்குப் பின்னர் சிறிமா, அனுர, சந்திரிகா போன்றோரின் குடும்ப செல்வாக்கு இருந்த போதும் சுதந்திரக் கட்சியை குடும்பத்தின் கட்சியாக அவர்கள் ஆக்கிக்கொண்டதில்லை. அதுவும் பண்டாரநாயக்க குடும்பம் சுதந்திரக் கட்சியின் வளர்ச்சிக்காக தமது சொத்துக்களை ஏராளமாக இழந்திருக்கிறது.
ஆனால் மகிந்த குடும்பம் நேர்மாறானது கட்சியை சொந்தக் குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் அனைவரையும் அவர்களுக்கு கீழ் அடிபணிய வைத்து காரியம் சாதித்தவர்கள். கட்சி அதிகாரத்தையும் நாட்டின் அதிகாரத்தையும் அனாயசமாக துஷ்பிரயோகம் செய்தனர். ஊழலால் தம்மை பெருப்பித்துக்கொண்டனர்.
ராஜபக்ச குடும்பத்தினரின் பெயர்கள் நாட்டின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு வைக்கப்பட்டன. துறைமுகம், வீடமைப்பு, விளையாட்டரங்கம், வீதிகள் என மகிந்தராஜபக்ச குடும்பத்தின் பெயரை ஸ்தாபித்து வலுப்படுத்தும் பணிகளை தம்மிடம் இருந்த அதிகாரத்துவத்தைப் பயன்படுத்தி சாதித்துக் கொண்டனர். “மகிந்த சிந்தனை” என்பதை ஒரு வேலைத்திட்டமாக மட்டுமன்றி தத்துவமாகவே பரப்பினர். அந்த பெயரில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டனர்.
மகிந்தவுக்காக பாடல் அமைப்பது, அக்குடும்பத்தினரின் வீரப்பிரதாபங்களைப் போற்றுகின்ற படைப்புகள், இலக்கியங்கள் என்பவற்றை வெளிக்கொணர்ந்தனர், பிரபல சினிமா கலைஞர் ஜெக்சன் அன்ரனி நடத்திய ஒரு பெரு நிகழ்வில் மகிந்த துட்டகைமுனு பரம்பரையிலிருந்து வந்தவர் என்பதை நிறுவ முயற்சித்ததை பலரும் மறந்திருக்க மாட்டார்கள். மகிந்த வழிபாட்டை மெதுமெதுவாக பரப்பப்பட்டது. மகிந்தவின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதை ஒரு சம்பிரதாயமாகவே முன்னெடுப்பது எல்லாம் நிகழ்ந்தது. இதன் உச்சம் என்னவென்றால் வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன, நளின் த சில்வா போன்ற மூத்தவர்களும் கூட விழுந்து கும்பிடும் படங்கள் வெளிவந்தன. அதுவும் நாமல் ராஜபக்சவை 90 டிகிரிக்கு குனிந்து கும்பிடும் படங்களும் வெளியாகின.
மகிந்தவாதத்தின் வீழ்ச்சி
இந்த ராஜபக்சவாதத்துக்கு எதிராகத் தான் 2015 இல் மக்கள் தீர்ப்பு வழங்கினர். சுதந்திரக் கட்சியை தமது குடும்பக் கட்சியாக ஆக்கிக்கொள்ளும் கனவு 2015இல் தகர்ந்தது. அதுமட்டுமன்றி 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டது மட்டுமன்றி, மூன்றாவது தடவை ஜனாதிபதியாதல், இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் போட்டியிட முடியாதது, ஜனாதிபதி வேட்பாளர் வயதெல்லை 35 என்கிற ஏற்பாடுகள் மகிந்த குடும்ப செல்வாக்கை கட்டுப்படுத்தின.
சிங்கள பௌத்த இனவாத சக்திகளாலும், ஊழல், கொலை, கொள்ளை, போன்ற வழக்குகள் குவிக்கப்பட்டவர்களாலும் அணிதிரப்பட்ட மகிந்த தரப்பால் மகிந்த குடும்பத்தைத் தவிர்த்து வேறெவரையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடச் செய்ய முடியவில்லை. சிரேஷ்ட தலைவர்கள் எத்தனையோ பேர் இருந்தும் அமெரிக்காவிலிருந்து கோட்டாவை ஜனாதிபதித் இறக்க வேண்டியதன் காரணத்தை வேறென்னவென்று சொல்ல முடியும். மகிந்தவுக்கு அடுத்ததாக யுத்த வெற்றியை ஏகபோகமாக சொந்தம் கொண்டாடுகின்ற வல்லமை கோட்டாவுக்குத் இருப்பதை அவர்கள் நம்பினார்கள். போர் உக்கிரமமாக நடந்துகொண்டிருந்த காலத்தில் உளவியல் பிரச்சினை காரணமாக இராஜினாமா செய்வதாக கூறிவிட்டு இராணுவத்திலிருந்து தப்பி அமெரிக்காவில் குடியேறி அமெரிக்கராக ஆகிவிட்ட கோட்டாபயவின் தெரிவை ஏற்றுக்கொண்ட சிந்தனா முறையை நாம் ஆராயவேண்டும்.
சில வேளை வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் மாற்று வேட்பாளர் ஒருவரை தயார் செய்யப்பட போதும் கூட வேறெந்த சிரேஷ்ட தலைவர்களும் தெரிவாகவில்லை. மாறாக சொந்தக் குடும்பத்தில் இருந்து மூத்த சகோதரனான சமல் ராஜபக்சவைத் தான் தெரிவு செய்தார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.
இந்தத் தேர்தலும் கூட கோட்டாவுக்கு எதிரான அணிகளாக திரள்வதை விட ராஜபக்சவாதத்தை தோற்கடிப்பதற்காகவே தேர்தல் களத்தில் எதிரணிகள் பலமாக பிரச்சாரம் செய்தததைக் கண்டோம். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை விட அவர்களுக்கு முக்கியமானது பொதுத் தேர்தல் முடிவுகளே. எனவே ராஜபக்சவாதிகள் இரண்டாம் கட்டத் தேர்தல் போரை ஆரம்பிப்பார்கள். அதன் திசைவழியைத் தீர்மானிப்பதில் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் முக்கிய வகிபாகத்தை வகிக்கும். மகிந்தவாதத்தின் நீட்சியையும், வீழ்ச்சியையும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தான் பெரும் வகிபாகம் வகிக்கப் போகிறது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...