Headlines News :
முகப்பு » » ஜனாதிபதித் தேர்தல் 2019 : மலையக மக்களின் தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்? - க.பிரசன்னா

ஜனாதிபதித் தேர்தல் 2019 : மலையக மக்களின் தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்? - க.பிரசன்னா


ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் மலையக மக்களிடம், அரசியல் தலைமைகள் விரும்பும் ஜனாதிபதி வேட்பாளரை கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகள் கட்சி ஆதரவாளர்களால் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மக்கள் விரும்பும் ஒருவரை, மக்கள் சுயமாக சிந்தித்து தேர்ந்தேடுப்பதற்கான உரிமையை காலாகாலமாக அரசியல் தலைமைகள் அவர்களிடமிருந்து தட்டிப்பறித்து கொள்கின்றார்கள் என்பது வெளிப்படையான உண்மை. கடந்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் நடைபெற்ற ஆட்சியை தேர்ந்தெடுத்தவர்களும் இதே மக்களே. எனவே அந்த ஆட்சியில் மக்கள் எந்தளவுக்கு தங்களுடைய உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொண்டார்கள் என்பதின் அடிப்படையிலேயே மக்களுடைய அடுத்த தெரிவு அமைந்திருக்க வேண்டும். ஆனால் எமது மக்களுக்கு அவ்வாறான வாய்ப்புகள் எவையும் வழங்கப்படுவதில்லை. அதனை அவர்கள் விரும்புகின்றார்களா என்பதை நம்மில் பலரும் தெரிந்து கொள்வதும் இல்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியை இன்று மக்களின் சார்பாக வெறோருவரே தொடர்ந்தும் தேர்ந்தெடுத்து வருகின்றார். அதற்கு இம்முறை தேர்தலிலும் வழிவிட்டுவிடக்கூடாது. மக்கள் சுயமாக சிந்தித்து நாட்டினுடைய தலைவரை தெரிவு செய்வதற்கு பங்களிக்க வேண்டும். அந்தவகையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பிரதானமாக மூவரே போட்டியாளராக காணப்படுகின்றனர். அதில் புதிய ஜனநாயக முன்னணி சார்பாக சஜித் பிரேமதாஸ, சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பாக கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்பாக அனுரகுமார திசாநாயக்க என்போர் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஒருவரே அடுத்த ஜனாதிபதியாகும் வாய்ப்பு காணப்படுவதாக கணிப்புகள் தெரிவித்திருக்கும் நிலையில் மக்கள் எவ்வாறான தெரிவை மேற்கொள்ள விரும்புகிறார்கள் என்பது அவர்களது சுய விருப்பாக காணப்படும் நிலையில் அதில் நாம் தலையிட விரும்பவில்லை.

ஆனால் ஜனாதிபதியாக தேர்வாகும் ஒருவர் மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தகுதியாக இருப்பாரா என்பதை சிந்திக்க வேண்டும். இதேபோலவே பலராலும் பல சந்தர்ப்பங்களிலும் மலையக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அவை எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். கடந்த கால நிகழ்வுகளை மட்டும் வைத்துக்கொண்டு மக்களிடம் வாக்குகளை கேட்டு செல்லமுடியாது. இனிவரும் காலங்களில் அவர்களுக்கு எவ்வாறான அபிவிருத்திகள் உறுதியாக கிடைக்கும் என்பதை பொறுத்தே தெரிவுகள் அமைய வேண்டும். இந்நிலையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்கள் மூவர் எவ்வாறான சாத்தியமான வாக்குறுதிகளை முன்வைத்திருக்கின்றார்கள் என்பதை பின்வருமாறு நோக்கலாம்.

அனுரகுமார திஸாநாயக்க

*தோட்டத்திலுள்ள தமிழர்கள் இந்த நாட்டின் சம குடிமக்கள் என்பதையும் ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் மனித கௌரவம் அவர்களுக்கு உண்டு என்பதையும், அவர்களுக்கு ஒரு தனித்துவமான கலாசார மற்றும் கலாசார அடையாளம் இருப்பதையும் ஏற்றுக்கொள்வது.

*பெருந்தோட்டத்துறையில் குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூபா 1000 க்கும் மேலதிக கூடுதல் கொடுப்பனவுகளும் கொடுக்க வேண்டும்.

*பெருந்தோட்டத்துறையிலுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வாழ்விட உரிமைகள் குறித்த தேசிய கொள்கைக்கான சிறப்பு குழுவை அமைத்தல்.

*உற்பத்தித்திறன் என்பது தோட்டத்துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரு பொதுவான காரணியாகும். அதனால் அரசு, தோட்டத்தொழில், ஆராய்ச்சிப்பிரிவுகள், ஏற்றுமதி மேம்பாடு, பல்கலைக்கழகங்கள், தோட்டத்தொழிலாளர்கள் அமைப்பு போன்றவை உற்பத்தித்திறனை அதிகரிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

*தோட்டத்துறையில் தற்போதுள்ள கல்வி சிக்கல்களை நீக்கி, அனைத்து குழந்தைகளுக்கும் சம வாய்ப்புகளை உருவாக்குவோம்.

*மருத்துவ மற்றும் மருத்துவமனை வசதிகளின் சான்றிதழ்.

*அனைத்து தேசிய இனங்களுக்கும் சமமான குடியுரிமை உரிமைகளை ஏற்றுக்கொள்வது.

*அனைத்து மதங்களின் மதிப்புகள் மற்றும் கலாசாரங்களை ஒரு சீரான மத பொருள் மூலம் புரிந்துகொள்வது.

சஜித் பிரேமதாஸ
*பெருந்தோட்டத் தமிழ் மக்களின் கௌரவம், அபிவிருத்தி, சமத்துவம் மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.

*நிலமற்ற தன்மை மற்றும் தங்குமிடம் போன்ற பிரச்சினைகளை தீர்ப்போம்.

*தோட்டத் தமிழர்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம். மேலும் தொழில்துறை மற்றும் சேவைத்துறைகளில் நவீன வேலைகளுக்கு அவர்கள் மாறுவதை ஆதரிப்போம்.

*அனைத்து தோட்ட தமிழ் குடும்பங்களும் தங்களது சொந்த நிலத்தை 7 பேர்ச்சஸ் அறுதி நிலமாகவும், அந்த நிலத்தில் ஒரு வீட்டையும் வைத்திருக்க முடியும் என்பதை உறுதி செய்வோம். ஒதுக்கப்பட்ட நிலத்தில் தங்குமிடம் இல்லாத ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு தங்குமிடம் வழங்கப்படும்.

*தோட்டத் தமிழ் விவசாயிகளுக்கு ஒரு நிலையான வருமானத்தை உத்தரவாதமளிக்க, இந்த விவசாயிகளிடமிருந்து வழக்கமான விளைபொருட்களை வாங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கும் அவுட்க்ரோவர் திட்டங்களை நிறுவ தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுடன் கூட்டு சேருவோம்.

*நியாயமான மற்றும் சமாதான சம்பளத்தை (1500 ரூபா) நாங்கள் உறுதி செய்வோம்.

*மேலும் தோட்ட சமூகங்களிலுள்ள பொது சுகாதார சேவைகள் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள சேவைகளுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கும் என்பதை உறுதி செய்வோம்.

*தோட்டப் பகுதிகளில் பத்து தேசிய பாடசாலைகளையும், உயர்கல்விக்கான வாய்ப்பை மேம்படுத்த ஹைலேண்ட் பல்கலைக்கழகத்தையும் திறப்போம்.

*இளைஞர்களுக்காக இந்தப் பகுதிகளில் தொழில்துறை வலயங்கள் மற்றும் அதோடிணைந்த தொழில் பயிற்சி நிலையங்களை உருவாக்குவோம்.

*நாடு முழுவதும் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் தோட்டத் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான ஒரு சீர்திருத்த செயலாக்கத்திட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வரும்.

*நாம் உலக அரங்கில் போட்டிபோடக்கூடிய நவீன, இலாபகரமான பெருந்தோட்டத்துறையொன்றை கட்டியெழுப்புவோம். உலகளவில் பெயர் கொண்ட பல்கலைக்கழகங்களோடு இணைந்து புதிய தொழில்நுட்பங்களையும் செயன்முறைகளையும் எம் தோட்டங்களில் அறிமுகம் செய்ய ஆய்வுக்கொடைகளை பகிர்ந்தளிப்போம்.

*பெருந்தோட்டச் செய்கையில் ஈடுபட்டிருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் விவசாய கல்லூரிகளை நிறுவி, சரியான பயிற்சி மற்றும் திறன்களை கற்பித்து 21 ஆம் நூற்றாண்டிற்குப் பொருத்தமான தோட்டத் தொழிலாளரை உருவாக்குவோம்.

கோத்தாபய ராஜபக்ஷ
*தேயிலை கைத்தொழில்துறையை அடிப்படையாகக் கொண்ட தமிழ் தோட்ட சமூகத்தை சமமான உரிமைகளை அனுபவிக்கும் ஒரு சமூகமாகவே கருதுகிறோம். எமக்கு அவர்கள் மீது வாக்கு பெறுமதிக்கு அப்பால் சென்று சகோதர வாஞ்சயே உண்டு. இதனால் நாம் கட்டியெழுப்பும் சுபீட்சமான தேசத்தில் அவர்களுக்கு மகிழ்ச்சியாக வாழக்கூடிய பொருளாதாரம், உயர் தரத்திலான வீடுகள், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை கொண்ட சொகுசான வாழ்க்கைக்கு அவர்களது தேவை மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

*தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

*சம்பளத்திற்கு மேலதிகமாக சகல குடும்பங்களுக்கும் மேலதிக வருமானத்தை பெற்றுக்கொள்வதற்காக தோட்டங்களில் தற்போது பயன்படுத்தப்படாத காணிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் கேள்வியாக உள்ள மல்லிகை பூ மற்றும் வேறு மலர் வகைகள், சேதன பசளையை கொண்டு செய்கை பண்ணப்படும் மரக்கறிகள் மற்றும் பழவகைகளை பயிர் செய்யும் வேலைத்திட்டம் மற்றும் காலநிலைக்கு பொருத்தமான இடை பயிர்களையும் பயிரிடுவதற்கான வேலைத்திட்டங்கள் உருவாக்கப்படும்.

*பெருந்தோட்ட மக்கள் வாழும் பகுதிகளில் தற்போது குறைபாடாக காணப்படும் உயர்தர விஞ்ஞானம் மற்றும் வணிக பாடங்களை கற்பிப்பதற்கான வசதிகள் உயர்தர கல்வி போதிக்கப்படும் சகல பாடசாலைகளுக்கும் தேவையான மனித மற்றும் பௌதிக வழங்களை பெற்றுக்கொடுப்பதுடன் கடந்த காலங்களில் முறையற்ற வகையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.

*பயிர்நிலங்களை பாதுகாக்கும் வகையில் நீண்ட காலம் நிலவி வரும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பெருந்தோட்ட மக்களின் வீடில்லா பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு தற்போது வாழும் தோட்டபுறங்களை அண்டிய பகுதிகளில் கொங்கிரீட் கூரைகளை கொண்ட வீடமைப்புத்திட்டம் ஒன்றையும் அரச மற்றும் தோட்ட உரிமையாளர்களின் பங்களிப்புடன் அறிமுகப்படுத்தப்படும். இந்த வீடமைப்புத் திட்டத்தில் சகல வசதிகளும் கொண்ட சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் அனைத்து தோட்ட தொழிலாளர்களுக்கும் சகல வசதிகளும் கொண்ட வீடுகள் பெற்றுக்கொடுக்கப்படும்.

*கர்ப்பிணி தாய்மார் மற்றும் சிறுவர்களின் போசாக்கு நிலையை மேம்படுத்துவதற்கு கிராமங்கள் மற்றும் தோட்ட மட்டத்தில் புதிய போசாக்கு திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் அதேநேரம் சகல தோட்ட மருத்துவமனைகளுக்கும் தேவையான அனைத்து பௌதிக மற்றும் மனித வளத்தை வழங்கி சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும்.

*விவசாய ஆராய்ச்சி அறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப பயன்பாட்டை இளைஞர் யுவதிகளுக்கு வழங்குவதற்காக விவசாய கல்லூரி ஒன்று உருவாக்கப்படுவதோடு சகல வசதிகளை கொண்ட தமிழ் மொழி மூல ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்று அப்பகுதியில் உருவாக்கப்படும். பெருந்தோட்டத்துறை இளைஞர் யுவதிகளுக்கு தேவையான தொழிற்கல்வியை வழங்குவதற்காக திறந்த பல்கலைக்கழக கிளை ஒன்று அட்டனில் ஏற்கனவே அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

*இந்த பிரதேசங்களில் தற்போது மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகளை கண்டறிந்து தோட்டத் துறையை உள்ளடக்கும் வகையில் புதிய கைத்தொழில் வலயம் ஆரம்பிக்கப்படும்.

*அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களில் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக மீள் பயிர் செய்கை மற்றும் உர பயன்பாட்டுக்கு தேவையான மூலதனத்தை விநியோகிப்பதுடன் பொருத்தமான முகாமைத்துவ முறையொன்று அறிமுகப்படுத்தப்படும். இந்த தோட்டங்களில் உள்ள பழைய தோட்ட பங்களாக்கள் மற்றும் கைவிடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலைகளை சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய வகையிலான பங்களாக்களாக மாற்றுவதற்கு தேவையான செயற்பாடுகள் உருவாக்கப்படும்.

மேற்கூறியவாறு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் வாக்குறுதிகள் அமைந்திருக்கும் நிலையில், இவற்றிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுப்பது மக்களின் உரிமையாக இருக்கின்றது. ஜனாதிபதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதுமே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பாகவே முதலாவது அறிவிப்பினை அவர்கள் முன்வைத்திருந்தனர். 1000 ரூபா முதல் 1500 ரூபா வரை இவர்களுடைய கணிப்பு காணப்படும் நிலையில் நடைமுறையில் அவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு கூட்டு ஒப்பந்தத்தை மீறி செயற்படுவதற்கு அரசாங்கத்தால் முடியாது என்பது அனைவரும் தெரிந்திராத ஒன்றல்ல. அவ்வாறு முடியுமெனில் அதனை கடந்த ஒப்பந்தங்களிலேயே செய்திருக்கலாம்.

மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம் தொடர்பில் தசாப்தங்களாக குரலெழுப்பப்பட்டு வரும் நிலையில் தற்போது இரு வேட்பாளர்கள் தனி பல்கலைக்கழகமும் ஒருவர் திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய நிலையத்தை அமைப்பதற்கும் வாக்குறுதியளித்திருக்கிறார்கள். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது அவசர அவசரமாக மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக ஆராய்வதற்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் அவை தேர்தலுடன் முடிந்து போன விடயமாகியது. பின்னர் 2017 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்குப் பதிலாக வளாகம் அமைப்பது தொடர்பில் ஜப்பானிய குழு ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாக அப்போதைய கல்வி இராஜாங்க அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டது. அதற்கான எந்த நடைமுறைகளும் இன்று வரை பூர்த்தி செய்யப்படவில்லை.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இந்திய வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவே தவிர இலங்கை அரசாங்கத்தினால் 100 நாள் வேலைத்திட்டத்துக்குப்பின் பாரிய அபிவிருத்திக்கான நிதிகள் தோட்ட மக்களுக்காக ஒதுக்கப்படவில்லை அல்லது செலவு செய்யப்படவில்லை. வழங்கப்படும் 7 பேர்ச் காணி அளவீட்டிலும் ஒப்பந்ததாரர்களின் தெரிவிலும் முறைகேடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. ஐ.தே.க. அரசினால் வரவு செலவுத்திட்டத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட 25 ஆயிரம் வீடுகள் தொடர்பில் இன்றுவரையும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மஹிந்த அரசாங்கத்தினால் வாக்குறுதியளிக்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் தொடர்பில் எவ்விதமான விளக்கமும் இல்லை. அக்காலத்தில் அமைக்கப்பட்ட மாடி வீட்டுத்திட்டமும் உறுதியானதாக இல்லை. ஆனால் மீண்டும் மாடி வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் முடிவும் இருக்கிறது.

இவ்வாறு கடந்த காலங்களிலும் நிகழ்காலங்களிலும் பல்வேறு ஏமாற்றங்களுடனேயே மலையக மக்கள் பயணித்திருக்கின்றார்கள். இதனை மீண்டும் தொடராது மக்களுக்கு சேவையாற்றக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய ஒருவரை தெரிவு செய்ய வேண்டியது மக்களுடைய பொறுப்பாகின்றது. அதற்கு இன்னும் ஐந்து நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் மக்கள் மிகவும் தெளிவுடனும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும். அதைவிடவும் கட்டாயமாக வாக்களிக்கவும் வேண்டும். வாக்களிப்பது நமது கடமையும் உரிமையுமாகும்.

நன்றி - தினக்குரல்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates