மலையக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வாக்களித்த 2019 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியானது எதிர்பார்க்காத ஒன்றாக அவர்களுக்கு அமைந்து விட்டது. ஆனால் அது அவர்களின் வாழ்க்கையை சூனியமாக்கிவிடும் என்பது அர்த்தமல்ல. தற்போது தேர்தல் வெற்றிகளுக்குப்பின்னர் தோற்றவர்களின் பிரசாரம் அவ்வாறே அமைந்திருக்கின்றது. இலங்கையின் ஜனாதிபதியானவர் மக்கள் விருப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டாலும் அவர் சகல மக்களுக்கும் பொதுவானதொரு தலைவராகவே இருக்கிறார். ஆனால் தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுவிட்டதால் மலையக மக்களின் எதிர்காலம், அபிவிருத்தி, பாதுகாப்பு என்பன கேள்விக்குரியதாகிவிட்டதாக பலரால் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், வாக்களிக்கச் சென்றவர்களில் பலர் மீண்டும் தலைநகரங்களுக்கு தொழிலுக்கு செல்வதற்கே தயக்கம் காட்டிவரும் சூழல் காணப்படுகின்றது. இதில் அரசியல் தலைவர்களும் உள்ளடங்குகின்றனர். இவ்வாறான நிலையில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் மக்களுக்கு வழங்கிய தேர்தல்கால வாக்குறுதிகளை முறையாகப் பெற்று சமூகத்தை முன்னேற்றுவதற்கே அனைவரும் உழைக்க வேண்டும்.
தற்போது ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுவிட்டதால் தாம் சிரமங்களை எதிர்கொண்டுவிடுவோமோ என்பதே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கவலையாக இருக்கின்றது. அவ்வாறே அவர்களை அரசியல் தலைவர்கள் வழிநடத்தி வைத்திருக்கின்றார்கள். இந்த ஜனாதிபதி தேர்தலில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் பரவலாக பேசப்பட்டது. 1000 1500 ரூபா வரையில் சம்பளவுயர்வுகள் வழங்கப்படுமென தேர்தல் பிரசாரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய ஜனாதிபதியும் பதவியேற்றிருக்கின்றார். எனவே வாக்களித்த மக்கள், வாக்களிக்காத மக்கள் என்ற அடிப்படையில் நிவாரணங்களும் அபிவிருத்திகளும் பங்கிடப்படாமல் சகலரும் அபிவிருத்தியினை பெற்றுக்கொள்ளும் நிலையினை உறுதிப்படுத்த வேண்டும். இதுவே சிறந்த ஆட்சியாளர்களின் பொறுப்பாகும்.
கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் வரிகளை குறைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுத்தருவதாக அறிவித்திருந்தார். இவை வெறும் ஏமாற்று வார்த்தையாக அமைந்துவிடக்கூடாது. 2015 ஆம் ஆண்டு முதல் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக 1000 ரூபா சம்பள உயர்வுக்காக தொடர்ந்தும் போராடி வருகின்றனர். ஆனால் 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தின் போதும் இந்த 1000 ரூபா பேச்சுக்கள் வெற்றியளிக்கவில்லை. அதன்பின்னர் அரசில் பங்காளிகளாகவிருந்தவர்களின் 50 ரூபா சம்பளவுயர்வும் பல கட்ட அமைச்சரவை அங்கீகாரத்துக்குப்பின்னரும் வழங்கப்படவில்லை. அத்தோடு தீபாவளிப்பண்டிகைக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்ட 5000 ரூபாவும் இறுதி நேரத்தில் வழங்கப்படாமல் தீபாவளி பிற்கொடுப்பனவாக வழங்கப்படுமென கூறப்பட்ட போதும் இன்று வரையும் அதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்படவில்லை. இனிமேலும் அவை கிடைப்பதற்கான வாய்ப்பில்லை. எனவே இவ்வாறான தொடர்ச்சியான ஏமாற்று நடவடிக்கைகளினால் மலையக மக்கள் குறைந்த வருமானத்தில் அதிக சுமையினை சுமக்க வேண்டிய நிலை காணப்பட்டது. அதனை நீடிக்க விடாமலும் 2021 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் வரை காத்திருக்காமலும் உடனடியாக பெருந்தோட்ட முதலாளிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்திகள் எவ்வகையிலும் தடைபட்டு விடாமலும் கட்சி சார்பில் முடங்கிவிடாமலும் இருப்பதையும் இன்னும் அதிகமான அபிவிருத்திகள் கிடைக்கப்பெறுவதையும் அரசியல் தலைமைகள் உறுதிப்படுத்த வேண்டும். தற்போது பெருந்தோட்டங்களில் பெருமளவில் இந்திய வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவற்றில் முறைகேடுகள் இருப்பதாகவும் தரமற்ற வகையில் வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை இனங்கண்டு சரி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்தினை தவிர இலங்கை அரசாங்கத்தின் நிதியொதுக்கீடுகளில் பெருந்தோட்டத்தொழிலாளர்கள் பெருமளவில் நன்மையடையவில்லை. இது பாரபட்சமான செயற்பாடாகும். நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுவதாக கூறப்பட்ட 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் தற்போது இல்லையென்றாகிவிட்டது. அதேவேளை மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் மலையக மக்களுக்கு வழங்குவதாக கூறப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத்திட்டமும் இல்லையென்ற நிலையில் தற்போது அவர்களுடைய ஆட்சி மலர்ந்துள்ளதால் மீண்டும் அவை கிடைக்கப்பெறுவதற்கு வழியேற்படுத்த வேண்டும்.
இவற்றை விடவும் பிரதானமாக தேர்தல்காலத்தின் போது மலையக மக்களுக்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் முழுமையாக நிறைவேற்றுவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இன்னும் பழைய விடயங்களை பேசிக்கொண்டும், வசைபாடுவதாலும் மக்கள் அபிவிருத்தி அடைந்துவிடப்போவதில்லை. யார் ஆட்சிபீடமேறினாலும் மக்கள் தங்குதடையின்றி அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே நல்லாட்சியாகவும் கருதப்படும். மக்களும் அதனையே விரும்புகின்றனர். மீண்டும் பாராளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியத் தேவை இருப்பதால் மீண்டும் மக்களை திசைதிருப்புவதற்கு முயற்சிக்கலாம். அதற்கு வழியேற்படுத்திக்கொடுக்க வேண்டாம். "நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கையை நான் அவ்வாறே காப்பாற்றுவேன்' என்று புதிய ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். ஆனால் பெரும்பாலான பெருந்தோட்ட மக்கள் புதிய ஜனாதிபதிக்கு தேர்தலின் போது ஆதரவு தெரிவித்திருக்காவிட்டாலும் அவர்களை பின்த்தள்ளி அபிவிருத்திகளை செயற்படுத்த முடியாது. இனிவரும் காலங்களிலும் அவர்களை புறந்தள்ளி அபிவிருத்திகளை முன்னெடுக்கக்கூடாது.
கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் வாக்குறுதிகள்
தேயிலை கைத்தொழில்துறையை அடிப்படையாகக் கொண்ட தமிழ் தோட்ட சமூகத்தை சமமான உரிமைகளை அனுபவிக்கும் ஒரு சமூகமாகவே கருதுகிறோம். எமக்கு அவர்கள் மீது வாக்கு பெறுமதிக்கு அப்பால் சென்று சகோதர வாஞ்சயே உண்டு. இதனால் நாம் கட்டியெழுப்பும் சுபீட்சமான தேசத்தில் அவர்களுக்கு மகிழ்ச்சியாக வாழக்கூடிய பொருளாதாரம், உயர் தரத்திலான வீடுகள், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை கொண்ட சொகுசான வாழ்க்கைக்கு அவர்களது தேவை மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
- தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
- சம்பளத்திற்கு மேலதிகமாக சகல குடும்பங்களுக்கும் மேலதிக வருமானத்தை பெற்றுக்கொள்வதற்காக தோட்டங்களில் தற்போது பயன்படுத்தப்படாத காணிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் கேள்வியாக உள்ள மல்லிகை பூ மற்றும் வேறு மலர் வகைகள், சேதன பசளையை கொண்டு செய்கை பண்ணப்படும் மரக்கறிகள் மற்றும் பழவகைகளை பயிர் செய்யும் வேலைத்திட்டம் மற்றும் காலநிலைக்கு பொருத்தமான இடை பயிர்களையும் பயிரிடுவதற்கான வேலைத்திட்டங்கள் உருவாக்கப்படும்.
- பெருந்தோட்ட மக்கள் வாழும் பகுதிகளில் தற்போது குறைபாடாக காணப்படும் உயர்தர விஞ்ஞானம் மற்றும் வணிக பாடங்களை கற்பிப்பதற்கான வசதிகள் உயர்தர கல்வி போதிக்கப்படும் சகல பாடசாலைகளுக்கும் தேவையான மனித மற்றும் பௌதிக வழங்களை பெற்றுக்கொடுப்பதுடன் கடந்த காலங்களில் முறையற்ற வகையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.
- பயிர்நிலங்களை பாதுகாக்கும் வகையில் நீண்ட காலம் நிலவி வரும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பெருந்தோட்ட மக்களின் வீடில்லா பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு தற்போது வாழும் தோட்டபுறங்களை அண்டிய பகுதிகளில் கொங்கிரீட் கூரைகளை கொண்ட வீடமைப்புத்திட்டம் ஒன்றையும் அரச மற்றும் தோட்ட உரிமையாளர்களின் பங்களிப்புடன் அறிமுகப்படுத்தப்படும். இந்த வீடமைப்புத் திட்டத்தில் சகல வசதிகளும் கொண்ட சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் அனைத்து தோட்ட தொழிலாளர்களுக்கும் சகல வசதிகளும் கொண்ட வீடுகள் பெற்றுக்கொடுக்கப்படும்.
- கர்ப்பிணி தாய்மார் மற்றும் சிறுவர்களின் போசாக்கு நிலையை மேம்படுத்துவதற்கு கிராமங்கள் மற்றும் தோட்ட மட்டத்தில் புதிய போசாக்கு திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் அதேநேரம் சகல தோட்ட மருத்துவமனைகளுக்கும் தேவையான அனைத்து பௌதிக மற்றும் மனித வளத்தை வழங்கி சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும்.
- விவசாய ஆராய்ச்சி அறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப பயன்பாட்டை இளைஞர் யுவதிகளுக்கு வழங்குவதற்காக விவசாய கல்லூரி ஒன்று உருவாக்கப்படுவதோடு சகல வசதிகளை கொண்ட தமிழ் மொழி மூல ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்று அப்பகுதியில் உருவாக்கப்படும். பெருந்தோட்டத்துறை இளைஞர் யுவதிகளுக்கு தேவையான தொழிற்கல்வியை வழங்குவதற்காக திறந்த பல்கலைக்கழக கிளை ஒன்று அட்டனில் ஏற்கனவே அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- இந்த பிரதேசங்களில் தற்போது மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகளை கண்டறிந்து தோட்டத் துறையை உள்ளடக்கும் வகையில் புதிய கைத்தொழில் வலயம் ஆரம்பிக்கப்படும்.
- அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களில் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக மீள் பயிர் செய்கை மற்றும் உர பயன்பாட்டுக்கு தேவையான மூலதனத்தை விநியோகிப்பதுடன் பொருத்தமான முகாமைத்துவ முறையொன்று அறிமுகப்படுத்தப்படும். இந்த தோட்டங்களில் உள்ள பழைய தோட்ட பங்களாக்கள் மற்றும் கைவிடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலைகளை சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய வகையிலான பங்களாக்களாக மாற்றுவதற்கு தேவையான செயற்பாடுகள் உருவாக்கப்படும்.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...