“தேர்தலுக்குப் பிறகு இலங்கையில், ஒருவித பதற்றம் குறைந்து வருவதாகத் தெரிகிறது . அங்குள்ள இந்தியர்களின் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. ஆனால் தற்போதைய இலங்கை அரசாங்கம் ஒரு தீர்வை நோக்கி ஏதாவது செய்ய விரும்புகிறது என்பதற்கு சில அறிகுறிகள் தெரிகின்றன. இலங்கையில் உள்ள இந்தியர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றி இந்திய மக்கள் அறிகின்ற போது வினையாற்ற தலைப்படுகிறார்கள். அது இயல்பானதே. எங்கள் அரசியல்வாதிகள் அதையிட்டு உக்கிரமான உரைகளை ஆற்றி வருகிறார்கள். நமது பத்திரிகைகளும் கடுமையாகவே எழுதிவந்திருக்கின்றன. இது எனக்குத் தவறான அணுகுமுறையாகத் தெரிகிறது. நாம் நமது கவனமான அணுகுமுறையை இழந்துவிடக்கூடாது. இலங்கை இந்தியாவின் முனையில் ஒரு சிறிய தீவு. கலாச்சார ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் இது கிட்டத்தட்ட இந்தியாவின் ஒரு பகுதியாகும். புத்தரின் நாடாக இருப்பதால் சிங்களவர்கள் இந்தியாவை தங்கள் புனித பூமியாகப் பார்க்கிறார்கள். ஆனால் இந்த பெரிய ராட்சத நாட்டைப் பற்றி அவர்கள் சற்று பயப்படுவதால் அவர்களைத் தவறான அணுகுமுறைக்கு வழிவகுக்கிறது. நாங்கள் அவர்களை அச்சுறுத்தினால், அவர்களின் பயத்தை மட்டுமே அதிகரிக்கிறோம். எனவே தான் நான் அச்சுறுத்துகின்ற மொழியில் பேசுவதைத் தவிர்த்துக்கொள்கிறேன். அவர்கள் முறையற்ற முறையில் நடந்து கொண்டாலும் கூட அவர்களுடன் நட்பாக இருக்க முயற்சிக்கிறேன்.”
05.07.1952 இல் நேரு எழுதியது
கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலமாக (1930களில் இருந்து - 1960கள் வரை) இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினையில் முக்கியமான வகிபாகத்தை ஆற்றிய இந்தியத் தலைவர் நேரு. இப்பிரச்சினை குறித்து அவரது குறிப்புகள், ஆவணங்கள், கடிதங்களில் “இலங்கை – இந்தியப் பிரச்சினை” என்கிற பதத்தையே பயன்படுத்தியிருக்கிறார் என்றால்; அந்தளவுக்கு இலங்கை இந்திய உறவைத் தீர்மானிக்கிற பிரதான சிக்கலாக இந்திய வம்சாவளியினரின் பிரச்சினை இருந்திருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
இலங்கைக்கு முதன் முதலாக மகாத்மா காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்துக்கென நிதி சேகரிப்பதற்கான பயணத்தை மேற்கொண்டார். அதன் அங்கமாக 1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு மகாத்மா காந்தி நிதி திரட்டுவதற்காக வந்தார். இது அரசியல் ரீதியான விஜயமல்ல. 1927 ஆம் ஆண்டு நவம்பர் 12ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த காந்தி மூன்று வாரங்கள் தங்கியிருந்து கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மாத்தளை, பதுளை, காலி, சிலாபம், ஹட்டன் உட்படப் பல முக்கிய இடங்களுக்கு விஜயம் செய்தார். அப்போது தான் இலங்கையில் வாழும் இந்தியர்களின் நிலைமையை அவர் நேரில் விளங்கிக் கொண்டார். இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு உரியத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க தமது பாத்திரத்தை வழங்க வேண்டும் என்கிற அக்கறை அப்போது அவருக்கு ஏற்பட்டிருந்தது.
புதிதாக சுதந்திரம் கிடைத்த இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்கவை 7 October 1948 அன்று இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு லண்டன் விமானநிலையத்தில் வரவேற்றபோது |
நேருவின் முதல் பயணம்
19-20.டிசம்பர் 1927 - நேருவின் முதல் விஜயம். இரு நாட்கள் மட்டுமே தங்கியிருந்தார்.
இரண்டாவது பயணம்
23 ஏப்ரல் 1931 அன்று இலங்கை வந்து 22 மே வரை ஒரு மாத காலம் தங்கியிருந்தார். துணைவி கமலாவோடும், மகள் இந்திரா காந்தியோடும் அவர் வந்திருந்தார். இந்த விஜயம் பற்றி அவரின் சுயசரிதையில் இப்படி எழுதுகிறார்.
“எனது வைத்தியர்கள் என்னை ஒரு மாற்றத்துக்காக எங்கேயாவது போய் ஓய்வெடுக்கும்படி வலியுறுத்தினார்கள். இந்தியாவில் அப்படி ஒரு ஓய்வெடுக்க அரசியல் சூழல் ஒத்துழைக்காத. அருகாமையிலுள்ள நாடு இலங்கையே கமலாவையும், இந்திராவையும் அழைத்துக்கொண்டு நான் இலங்கை சென்றேன்.”
காந்தி 28.07.1924 அன்று நேருவுக்கு எழுதிய கடிதத்தில்
“சகல பணிகளையும் உடனேயே நிறுத்திவிட்டு முழுமையான ஓய்வை எடுங்கள். குறைந்தபட்சம் இலங்கைக்குச் சென்றால் வித்தியாசமான சூழலை அனுபவிப்பீர்கள்” என்கிறார்.
இலங்கை வந்திருந்த நேரு அரசியல் மற்றும் பொதுப் பணிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கும்படி ஆலோசனை கூறப்பட்டிருந்தபோதும் அவரால் அப்படி இருக்க முடியவில்லை. அவர் சில சுற்றுப்பிரயாணங்களையும் ஓய்வையும் மேற்கொண்டார். நுவரெலியாவில் தங்கியிருந்தார். கண்டி, அனுராதபுரம் உள்ளிட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குப் பயணித்தார்.
அன்று முற்போக்கு பாத்திரத்தை ஆற்றியிருந்த யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் அழைப்பின் பேரில் அவர் அகில இலங்கை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் அங்குரார்ப்பண கூட்டத்தில் கலந்து கொண்டார். இது கொழும்பில் - வெள்ளவத்தை பிளாசா திரையரங்கத்தில் நிகழ்ந்தது. அரசசபைத் தேர்தலைப் பகிஷ்கரிக்கும் படி யாழ்ப்பாணத்தில் பெரும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருந்த காலம் அது. அந்த பகிஷ்கரிப்பின் பின்னணியில் நேருவின் பங்கு இருந்ததாகத் தென்னிலங்கையில் குற்றச்சாட்டு இருந்த நிலையில் இந்த வெள்ளவத்தைக் கூட்டத்தை நேரு அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டை மறுப்பதற்குப் பயன்படுத்திக்கொண்டார்.யாழ்ப்பாணத்திலும் அவர் வாலிபர் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கே அவர் யாழ்ப்பாணத்தில் சர்வஜன வாக்குரிமைக்கு எதிராகவும் தொழிலாளர்களுக்கு எதிராகவும் சில தலைவர்கள் உள்ளனர் என்று குற்றம் சாட்டினார். இந்தியத் தொழிலாளர்கள் குறித்து போதிய அக்கறை செலுத்தப்படாதது குறித்தும் தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார். யாழ்ப்பாண இளைஞர்களை நோக்கி
“இளைஞர்கள் செயல் வீரர்களாக இருந்தாலேயொழிய அவர்கள் வெறுமனே பேசிக் கொண்டிருப்பதில் பயனற்றதாகி விடும்” என்றும் எச்சரித்திருக்கிறார்.
நேரு தனது சகோதரி கிருஷ்ணா நேரு ஹூத்சிங் என்பவருக்கு யாழ் விஜயத்தைப் பற்றி எழுதிய கடிதத்தில் இப்படி குறிப்பிடுகிறார்:
“வட முனையிலிருக்கும் யாழ்ப்பாணத்துக்கு நாம் புகையிரதம் மூலம் சென்றோம். அங்குப் பிரமாண்டமான வரவேற்பு எங்களுக்கு அளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத் தமிழரது மிக ஆக்ரோஷமான இளைஞர் குழுக்களினதும் மையமாக விளங்குகிறது. அங்கே எங்களுக்கு நிறையக் கருமங்கள் செய்யவிருந்தன. அயல் பிரதேசங்கள் எங்கும் மோட்டார் வாகனத்தில் சுற்றித்திரிந்து, கடலில் குளித்து இந்தியாவை நோக்கி நீந்தினோம். இந்தியா 16 மைல் தொலைவிலேயே உள்ளது.”
1939 யூலை 15-25 வரையான நாட்கள் இலங்கையில் தங்கியிருந்தார்.இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் பிரச்சினைகளைக் கவனிப்பதற்காக மகாத்மா காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை வந்திருந்தார்.
இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிராக தொடரப்பட்டு வந்த நெருக்கடிகள் காரணமாக அப்போதைய இந்திய வம்சாவளி பிரதிநிதிகளான வைத்தியநாதனும், பெரய்ராவும் இந்த நிலைமைகள் குறித்து மகாத்மா காந்தியிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதன் விளைவாக ஏற்பாட்டின் பேரில் 1939 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு மகாத்மா காந்தியின் சிறப்புப் பிரதிநிதியாக இலங்கைக்கு வந்தார். நேரு இலங்கை வந்து டீ.எஸ்.சேனநாயக்க போன்றோருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் போதிய திருப்தியளிக்காத நிலையில் இந்திய வம்சாவளி மக்களின் நலன்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
நேருவின் இந்த விஜயத்தின் போது இங்குப் பல அமைப்புகள் சாதி அமைப்புகளாகப் பிளவுபட்டு இயங்கி வந்ததை அடையாளம் கண்டார். அவ்வமைப்புகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார் நேரு.
இலங்கை வாழ் இந்தியர்களின் பிரச்சினைகளை அவர்களே சுயமாகத் தீர்த்துக்கொள்ளும் வகையில் ஒரு அரசியல் இயக்கத்தின் தேவையை அவர் வலியுறுத்தினார். அதன் விளைவு தான் “இலங்கை இந்தியர் காங்கிரஸ்” என்கிற இயக்கத்தின் தோற்றம். 25-07.1939 ஆம் ஆண்டு இது தொடக்கப்பட்டது. பாரத் சேவா சங்கம் நாடார் மகாஜன சங்கம், பாண்டிய வேளாளர் சங்கம், ஹரிஜன சேவா சங்கம் என்பவற்றின் இணைவே இலங்கை இந்தியர் காங்கிரஸ். அதன்படி மலையக மக்களுக்கான முதன் முறை ஒரு அரசியல் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டுச் சரியாக இவ்வருடத்துடன் 80 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதன் ஸ்தாபகப் பொதுச்செயலாளராக இராஜலிங்கம் நியமிக்கப்பட்டார்.
காந்தி, நேரு ஆகியோரின் இலங்கை விஜயத்தின் போதெல்லாம் அவர்களைச் சந்தித்து வரவேற்பளித்தவர் அவர். அவர்களின் ஆசியுடனேயே பொதுச்செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. தனது பேச்சை உரைபெயர்ப்பதற்கு இராஜலிங்கத்தையே நேரு அழைப்பார்.
இலங்கை -இந்திய காங்கிரஸ் ஆரம்பத்தில் தோட்டத் தொழிலாளர்களையும் இலங்கை முழுவதும் வாழ்ந்த நகரச் சுத்தி தொழிலாளர்களையும் சாதியின் பெயரில் ஏற்க மறுத்தது. இந்திய மேட்டுக்குடி அதிகாரத்துவ அரசியலையே முதலில் முன்னெடுக்க தலைப்பட்டார்கள்.
பின்னர் கொழும்பு 04. பொன்சேகா பிளேஸ், சீயன்னா என்ற செட்டியார் வீட்டில் அமரர் நேரு தலைமையில் பெரிய விவாதமே இடம் பெற்றது. நேருவின் தலையீட்டால் இறுதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பெருந்தொகை தொழிலாளர் வர்க்கத்தை ஒன்று கலக்கச் செய்யாமல் அரசியல் தலையீடு செய்ய முடியாது என்பது குறித்து அங்கு விரிவான உரையாடல் இடம்பெற்றது.
1948 ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இலங்கை-இந்தியன் காங்கிரஸின் பெயர் மாற்றப்பட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாறியது.
இந்த இயக்கம் தான் 02.05.1954 இல் கம்பளையில் நடந்த 14வது மாநாட்டில் வைத்து “இலங்கை ஜனநாயகக் காங்கிரஸ்” என்றும், பின்னர் அது பிளவடைந்து 1954இல் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் காங்கிரஸ் என்பவை உருவாகி தனித்தனியாக இயங்கத் தொடங்கிய வரலாற்றை அறிவீர்கள்.
1940இல்“வாழ்விடத் தெரிவு பிரஜைகளைப் பதிவு செய்தல்” சட்டத்தை கொண்டு வந்தது இலங்கை அரசாங்கம். இச்சட்டத்தின் மூலம் மலையகத் தமிழர்கள் தாங்கள் எந்தப் பகுதி மற்றும் குடியிருப்புகளில் தங்கி வாழ்கின்றனர் என்பதைப் பதிவு செய்தல் வேண்டும். அது மட்டுமல்லாது அவர்களின் நடமாட்ட விஸ்தரிப்பும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் சில விதிகள் கடுமையாக்கப்பட்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
உருள வள்ளித் தோட்ட ஹர்த்தால்
1946 ஆம் ஆண்டு அன்றைய காணி, விவசாய அமைச்சராக இருந்தவரும் பின்னர் இலங்கையின் முதலாவது பிரதமராக ஆன டீ.எஸ்.சேனநாயக்க நேவ்ஸ்மியர் (KINAVESMIRE) தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களை விரட்டிவிட்டு அங்கு சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தினார். “நேவ்ஸ்மியர் ஜனபதய” என்கிற குடியேற்றம் உருள வள்ளித் தோட்டத்தையும் உள்ளடக்கியது. கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டையில் அமைந்துள்ளது இந்த உருள வள்ளித்த் தோட்டம். இந்த குடியேற்ற அக்கிரமத்தை எதிர்த்து மலையகத்தில் நிகழ்ந்த பெரும் ஹர்த்தால் போராட்டம் குறித்து அறிந்த நேரு இலங்கைக்குத் தனது கண்டனத்தையும், தீர்வுக்கான அழுத்தத்தையும் கொடுத்தார்.
இந்த ஹர்த்தால் பெரியளவு பேசப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும்வரை இந்த ஹர்த்தால் பங்களித்திருந்தது. நேரு இது தொடர்பில் “த இந்து” பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இப்படி குறிப்பிடுகிறார்.
“...இலங்கை அரசாங்கத்தின் இந்த குடியேற்றத்திட்டம் ஒன்றும் மோசமில்லை. அதுவொரு நல்ல திட்டம். அந்தத் திட்டத்தை நான் எதிர்க்கவில்லை. ஆனால் இந்த திட்டத்தில் இந்திய வம்சாவளியினர் புறக்கணிக்கப்படுகிறார்கள். எந்தவொரு ஒழுங்கான மாற்று எற்பாடுமின்றி பெருந்தொகை மக்களை அந்த நிலங்களிலிருந்து எந்தவொரு அரசாங்கமும் வெளியேற்ற முடியாது.
...ஒரு மாதத்துக்கு முன்னர் பொது வேலைநிறுத்தம் அங்குள்ள இந்தியர்களின் தொழிற்சங்கத்தால் தொடக்கப்பட்டது. பெரிய அளவிலானோர் கலந்துகொண்ட அந்த அமைதியான ஹர்த்தால் நீண்டகாலத்துக்குப் பேசப்படக்கூடிய வகையில் குறிப்பிடத்தக்கதொரு ஹர்த்தால்.
இந்தியர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் கசப்பை நாம் உருவாக்கிக்கொள்ளக் கூடாது. இந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் ஹர்த்தால்கள் தொடர்பில் இலங்கைக்கு பாரிய அழுத்தம் கொடுப்பது இந்தியாவுக்கு மிகவும் எளிதானது, ஏனெனில், கணிசமான அளவு இலங்கையின் பொருளாதாரம் இந்தியாவில் தங்கியிருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக இலங்கை வாழ் இந்திய பிரஜைகளின் எண்ணங்களையும் மீறி சமீபத்தில் இலங்கை எதிர்கொண்ட நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவ இந்தியா உணவு அனுப்பியது. எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் இலங்கைக்கு ஒரு பெரிய அண்ணன் - அளவிலும் மற்றும் பொருளாதார நிலையில் பெரியவர்கள்...
ஆறு வருடங்களுக்கு முன்னர் அங்கு சென்றிருந்த போது கூட அவர்களோடு சண்டை பிடிக்கவோ, எச்சரிக்கவோ இல்லை. மாறாக நல்லெண்ணத்தையே வெளிக்காட்டினேன். ஆனால் இலங்கையில் இன்று நடப்பவை என்னை எரிச்சலடையச் செய்கிறது....”
நேருவின் இந்த நேர்காணல் வெளிவந்தது 4 நாட்களின் பின்னர் (14.07.1946) நேருவின் தொடர்பாளர் அரியநாயகத்துக்கு எழுதிய கடிதத்திலும் இந்தப் போராட்டம் பற்றியும், உரிய வசதிகள் அவர்களுக்குச் செய்து கொடுக்கப்படாமல் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற விடக்கூடாது என்பதையும் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.
01.07.1947 அன்று அரச சபையில் நேவ்ஸ்மியர் சிக்கல் குறித்து உரையாற்றிய சேனநாயக்க இது பத்தாண்டுகளாக இழுபறிபட்டுவரும் பிரச்சினை என்றார். இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள் அந்த நிலத்திற்கு உரித்துடையவர்கள் அல்லர் என்றும் அவர்களுக்கு உள்ளூர் கிராமிய குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்குக் கூட வாக்குரிமை அற்றவர்கள் என்றும் வாதிட்டார்.
நேவ்ஸ்மியர் பிரச்சினை இலங்கை இந்திய உறவில் இந்தக் காலப்பகுதியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தவே செய்திருக்கிறது.
நேரு 30.09.1046 அன்று பொதுநலவாய திணைக்களத்தின் செயலாளருக்கு இது குறித்து எழுதியதுடன் அக்கடிதத்தில் இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிராக இலங்கை குற்ற வழக்கு தொடுத்திருப்பதன் அதிருப்தியையும் வெளியிட்டதுடன் இலங்கைக்கு இது குறித்து ஒரு தந்தியை அனுப்புமாறு அச் செயலாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அங்கிருந்து வெளியேறாத தொழிலாளர்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடுத்தது அரசாங்கம். தீர்ப்பு தொழிலாளர்களுக்கு பாதகமாகவே அமைந்தது. பின்னர் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் ஒருவரான சின்னசாமி செல்வநாயகம் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்தார். அத் தீர்ப்பின்படி செல்வநாயகத்தின் மீதான் தண்டனையைத் தள்ளுபடி செய்தது. சிங்கள பௌத்த பேரினவாதம் மலையக மக்களின் எதிர்கால வாழ்வைக் குழிதோண்டிப் புதைக்க இந்தப் போராட்டமே அவர்களைத் தூண்டியிருந்தது.
நான்காவது பயணம்
1950 ஜனவரி 8-15 வரையான நாட்களில் தங்கியிருந்த அவர் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தார். ஜனவரி 12 அன்று இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முக்கிய உரையொன்றையும் ஆற்றினார்.
ஐந்தாவது பயணம்
1954 ஏப்ரல் 27-மே 03வரை அவர் தங்கியிருந்தார். கொழும்பில் 28 ஏப்ரல் முதல் மே 2 வரை நடந்த தென்னாசிய அரச தலைவர்களின் மாநாட்டில் அவர் கலந்துகொண்டார்.
நேருவின் 1957ஆம் ஆண்டு விஜயத்தின் போது “ஜெயந்தி மாவத்தை” என்கிற வீதியைத் திறந்து வைத்தபோது |
18.05.1957 பிரதமர் பண்டாரநாயக்கவினால் அனுராதபுரத்திலுள்ள புத்தர் சிலை காண்பிக்கப்பட்ட போது... இந்த சிலை அவரை எந்தளவு பாதித்தது என்பது பற்றி அவரது குறிப்புகளில் உள்ளன |
இலங்கையில் புத்த ஜெயந்தி கொண்டாட்டங்களையிட்டு 18.05.1957 அன்று அனுராதபுரத்தில் புத்தர் சிலையைத் திறந்து உரையாற்றிய நேரு. அருகில் பிரதமர் பண்டாரநாயக்கவும், இந்திரா காந்தியும். |
ஆறாவது பயணம்
1947 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் பிரதமரான பின்னர் நேரு தனது மகள் இந்திராவுடன் இலங்கை விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயம் 1957 மே 17-20 திகதிகளில் நிகழ்ந்தது. இலங்கைப் பிரதமரின் சிறப்பு அழைப்பின் பேரில் புத்த ஜெயந்தி கொண்டாட்டங்களுக்காக வந்திருந்த அவர் மகள் இந்திராவையும் அழைத்துக்கொண்டு அனுராதபுரத்துக்கு இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்கவுடன் உற்சவங்களுக்காகச் சென்றார். கண்டிக்கும் இந்தப் பயணத்தில் சென்றிருந்தார்.
இது ஒரு அரசியல் மற்றும் ஆன்மீக விஜயமாக அமைந்தது. புத்த ஜயந்தியின் 2500 ஆண்டைக் கொண்டாடும் முகமாக நேருவுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்தது. இதன் போது அனுராதபுரத்திற்கு விசேட ரயிலில் பயணம் செய்த நேரு, அங்கு ஜயந்தி மாவத்தை எனும் புதிய நகரத்தையும் திறந்து வைத்தார். அங்கு தான் புத்த ஜயந்தி நிகழ்வின் பிரதான நிகழ்வுகள் எற்பாடாகியிருந்தன.
ஏழாவது இறுதிப் பயணம்
1962 ஒக்டோபர் 13-16 வரையான விஜயமே இலங்கைக்கான அவரின் இறுதி விஜயம். “பண்டாரநாயக்க நினைவு ஆயுள்வேத ஆராய்ச்சி நிலையத்தை” திறந்துவைப்பதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். இந்திய வம்சாவளியினர் பற்றிய பிரச்சினைகளைப் பற்றி இரு தரப்பு புரிதலை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டார்.
நேருவின் காலப்பகுதியில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினருக்குக் குறைந்தபட்சம் இருந்த பாதுகாப்பு அதன் பின்னர் அற்றுப்போனது என்பது உண்மையே. இதே காலப்பகுதியில் இலங்கை இந்திய வம்சாவளியினரின் வாக்குரிமையைப் பறித்து, பிரஜாவுரிமையும் பறித்து, நாடற்றவர்களாக்கி, அரசியல் பிரதிநிதித்துவத்தை மோசமாக இல்லாமல் செய்து, சிங்களக் குடியேற்றங்களைத் தோட்டங்களில் மேற்கொண்டு அவர்களை விரட்டியடித்ததும் நிகழ்ந்தது. இந்தியாவின் பொறுமையை அதிகமாக சோதித்த காலம் காலம் இது. இலங்கையைப் பகைத்துக்கொள்ளாமலும் அதே வேளை காரியங்களை நிதானமாகவும், இராஜதந்திரமாகவும் அணுகவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
நேருவின் காலப்பகுதியில் நேருவுக்கும் இலங்கை பிரதமர் கொத்தலாவலவுக்கும் இடையில் நிகழ்ந்த ஒப்பந்தத்தின் பின்னணியை இந்த வரிசையில் பதிவு செய்வது அவசியம்
"நேரு – கொத்தலாவல" ஒப்பந்தப் பின்னணி
இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை பற்றிய பிரச்சினையைப் பற்றி 1953ஆம் ஆண்டு லண்டனில் ஒரு பேச்சுவார்த்தை நிகழ்ந்தது. 1953 யூன் மாதம் 3-9 வரையான நாட்களில் லண்டனில் நிகழ்ந்த பொதுநலவாய நாட்டுத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த போதே நேருவும், டட்லியும் இந்தப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருந்தனர். அதன்படி இந்தியா 3 லட்சம் பேரை ஏற்க வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் பேசப்பட்டது. இதில் 3 லட்சம் மக்களை கட்டாயமாக நாடு கடத்த நேரிடும் என்றும் டட்லி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அன்று நேரு ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை.
17.10.1953 அன்று பிரதமர் நேருவிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. இந்திய-இலங்கைப் பிரச்சினைகள் குறித்து சேர் ஜோன் கொத்தலாவலவுடன் உரையாடுவதற்கான அழைப்பு அது. அதன்படி 1954 ஜனவரி சந்திக்கலாம் என்று முடிவானது.
“It is possible that Sir John might visit Delhi some time in the future for a discussion of the lndo-Ceylonese problem.” (17.10.1953 கடிதத்தில்) என்கிறார்.
அந்தளவு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிரதான “பிரச்சினை”யாகத் தான் இது சூடு பெற்றிருந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
இந்த ஒப்பந்தம் குறித்து கொத்தலாவல தனது சுயசரிதையில் (1956) இப்படி எழுதுகிறார்.
“துரதிர்டவசமாக அந்நிய முதலாளிகள் எங்கள் செலவிலேயே பெருமளவு எங்கள் நிலங்களைக் கொண்டு பொருளீட்டியுள்ளனர் . எங்கள் அனுமதியின்றி இந்திய தொழிலாளர்களை இறக்குமதி செய்திருக்கின்றனர்.
இலங்கையிலிருக்கும் 9 லட்சம் இந்திய பிரஜைகளைக் குறைக்காவிட்டால் எங்கள் மக்கள் பிச்சையெடுப்பதிலிருந்தும், இலங்கையர் என்கிற அடையாளத்தை இழப்பதிலிருந்தும் மீட்க முடியாத அபாயம் இருக்கிறது.
இந்தியத் தொழிலாளர்களை நாடு கடத்தவேண்டும் என்று அன்றைய அரசாங்க சபையின் தலைவர் சேர் பாரொன் ஜெயதிலக்கவுடன் உரையாடினேன். அவர் அதனைக் கண்டுகொள்ளவில்லை. பின்னர் திறைசேரிக்குப் பொறுப்பான பிரிட்டிஷ் அதிகாரியான எச்.ஜே.ஹுக்ஸ்ஹம் (H. J.Huxham) என்னுடைய திட்டத்துக்கு ஆதரவளித்தார். 14 வருடகாலமாக சாத்தியமாகாத எனது திட்டத்தை நான் பிரதமாரானதும் நேரு/கொத்தலாவல ஒப்பந்தத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டேன்.”
இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொள்வதற்கான குழுவில் முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்காவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்கவும் இருந்தார்கள்.
18.01.1954 அன்று செய்துகொள்ளப்பட்ட நேரு - கொத்தலவால ஒப்பந்தத்தின்படி 1955 ஆம் ஆண்டுக்குள் இந்திய வம்சாவளி மக்களைப் பதிவு செய்வதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் மலையக தமிழ் மக்களுக்கு பிரஜா உரிமை வழங்க இலங்கை அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாது, நேரு காலமான பின்பு, இந்திய வம்சாவளியினரை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்புவதிலேயே இலங்கை கவனமாக இருந்தது.
சிங்களவர்களாக மாற வேண்டும்?
நேரு-கொத்தலாவல ஒப்பந்தத்தின் பிரகாரம் மலையகத் தமிழர்கள் சிங்களம் கற்று சிங்களவர்களோடு ஒன்று கலந்திட வேண்டும் என்று ஒரு ஏற்பாடு இருந்ததாக இன்றும் பல சிங்கள தேசியவாதிகள் எழுதியும், பேசியும் வருகிறார்கள். இது பற்றி பலர் கட்டுரைகளையும், நூல்களையும் சிங்களத்தில் வெளியிட்டுள்ளனர். அவர்களில் ஹரிச்சந்திர விஜேதுங்க முக்கியமானவர்.
அவர் எழுதிய நூல்களில் ஒன்று “நேரு - கொத்தலாவல ஒப்பந்தத்தை அமுல்செய்” (නේරු-කොතලාවල ගිවිසුම ක්රියාත්මක කරමු - 1993) என்கிற நூல். இந்த நூல் அடிப்படையில் இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிராக எழுதப்பட்ட வன்மம் நிறைந்த நூல். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியர்களை விரட்டும் கருத்தை மீள அரசியல் தளத்தில் பேசுபோருளாக்கியவர்.
இதே கருத்தை மேலும் பலர் இன்னமும் எடுத்துச் செல்கின்றனர். ஆனால் ஒப்பந்தத்தில் அப்படி ஒரு ஏற்பாடும் இல்லை என்பது தான் உண்மை.
நேருவும் இலங்கையும் (Nehru and Sri Lanka) என்று 2002 இல் வெளியான ஒரு நூலில் இலங்கையுடன் அவர் மேற்கொண்ட பெரும்பாலான ஆவணங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் நேரு-கொத்தலாவல ஒப்பந்தம் மட்டுமன்றி அதனோடு சம்பந்தப்பட்ட இன்னும் பல கடிதங்களும், இந்திய அரசாங்க அறிக்கைகளும் உள்ளடங்கியுள்ளன. அதில் எங்கும் இப்படி ஒரு ஏற்பாடு பற்றி குறிப்பிடப்படவில்லை.
மலையகத் தமிழர்கள் தமது நிலங்களையும், தொழில் வாய்ப்புகளையும் பறித்துக்கொண்டார்கள் என்கிற புனைவையும் ஐதீகத்தையும் தொடர்ச்சியாகப் பரப்பி வந்ததில் இன்று வரை அவர்களுக்கு எதிரான பாரபட்சமும் வெறுப்புணர்ச்சியும் பல்வேறு வடிவங்களில் நீடிக்கவே செய்கிறது.
நேரு இலங்கை இந்திய வம்சாவளி மக்களை மீள இந்தியாவுக்குத் திரும்பி வருவதை மறுத்தார் - எதிர்த்தார் என்கிற ஒரு பொதுக் குற்றச்சாட்டு இன்றும் உண்டு. ஆனால் அவர் இந்த விடயத்தில் சரியான தூரநோக்குடன் தெளிவாகவே இருந்தார் என்று தோன்றுகிறது.
இலங்கையிலுள்ள இந்திய வம்சாவழி மக்களைப் பற்றிய பிரச்சினை இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது பிரதமர் நேரு இப்படிக் கூறினார். (9-4-1958).
"இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினை இலங்கை அரசாங்கத்தின் பிரச்சினையாகும். ஏனென்றால் இந்த மக்கள் இந்தியாவின் குடிமக்கள் அல்லர். இவர்கள் இலங்கைக் குடிமக்களே. இது அவர்களின் பிரச்சினை. நம்முடைய பிரச்னை அல்ல. இலங்கையிலேயே பிறந்து அங்கேயே பல ஆண்டுகளாக வாழ்ந்த மக்களை அங்கிருந்து வெளியேறி இந்தியாவுக்குச் செல்லுமாறு கூறுவது ஏற்க முடியாதது. இதை ஓர் அரசியல் பிரச்சினையாகவோ, தகராறாகவோ கருதாமல் மனிதாபிமானப் பிரச்சினையாகக் கருதவேண்டும்.''
நேரு உயிருடன் இருக்கும் வரை அந்த ஒப்பந்தம் உரியபடி நடைமுறைப்படுத்தாது காலம் தாழ்த்தப்பட்டது.
1963 இல் சிறிமா சீனாவுடன் செய்துகொண்ட கடற்படை ஒப்பந்தம் இந்தியாவை முகம் சுளிக்கச் செய்தது. இந்திய – சீன எல்லைச் சண்டையிலும் சீன ஆதரவு நிலைப்பாட்டை இலங்கை எடுத்திருந்தது. இந்தியாவின் எதிரியைத் தனது காலடியிலேயே கொண்டு வந்து சேர்த்தது போன்ற சம்பவங்களால் இலங்கையை சரிகட்டும் தேவை இந்தியாவுக்கும் இருந்தது.
1963ஆம் ஆண்டு இரு பிரதமர்களுக்கிடையே ஒரு சந்திப்பை ஏற்படுத்த வேண்டும் என்று ஸ்ரீமாவோ பண்டாநாயக்க நேருவுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் நேரு 27.05.1964 அன்று மாரடைப்பால் இறந்து போனார். அதனைத் தொடர்ந்து புதிய இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரிக்கும் ஸ்ரீமாவோ பண்டாநாயக்காவுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. 22.10.1964 இல் சிறிமாவும் டி.பி.இலங்கரத்ன, பீலிக்ஸ்.ஆர்.டி.பண்டாரநாயக்க, என்.கியூ.டயஸ் ஆகிய அமைச்சர்களுடன் இந்தியாவுக்கு விரைந்தார். ஒருவார காலம் அவர்கள் தங்கியிருந்து தொடர் பேச்சுவார்த்தை நடத்தி 29.10.1964 இல் செய்துகொள்ளப்பட்டது தான் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம்.
இந்திய வம்சாவளியினரை இந்தியாவுக்கு திருப்பியனுப்பிவிடும் நோக்கத்தை சட்டப்பூர்வமாக நிறைவேற்றிக்கொள்ள இலங்கை அரசு தொடர்ந்து செய்துவந்த நச்சரிப்பில் தான் அந்த ஸ்ரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம் உருவானது. யாரையும் கட்டாயப்படுத்தி இந்தியாவுக்கு திருப்பியனுப்பக்கூடாது என்கிற நிலைப்பாடு கொண்டிருந்த நேரு 1964ல் காலமானதையடுத்து இந்தியப் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி இந்திய வம்சாவளி மக்களைப் பொறுப்பேற்க சம்மதித்தார்.
இந்த அரசியல் அதிகார பீடங்கள் தமக்குள்ள செய்துகொண்ட இந்த உடன்பாடுகளில் சம்பந்தப்பட்ட மக்களின் எந்த அபிலாஷைகளும் கணக்கிற் கொள்ளப்படவில்லை. அரசியல் தலைவர்களால் வலுக்கட்டாயமாக இந்த உடன்படிக்கைகள் திணிக்கப்பட்டன.
மலையக அரசியல் வரலாற்றை ஆராய்பவர்கள் நேருவின் வகிபாகத்தை மேலும் விரிவாகவும், காய்தல் உவத்தல் இன்றியும் மீளாய்வுக்கு உட்படுத்துவது முக்கியம். ஏனென்றால் இந்தக் காலப்பகுதியின் முக்கியத்துவம் அப்படி.
உசாத்துணை:
- Gopalakrishna Gandhi - Nehru and Sri Lanka - A collection of Jawaharlal Nehru's speeches and writings covering three decades - Vishva Lekha. - Sri Lanka – 2002
- சாந்தசீலன் கதிர்காமர் – “யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்” – குமரன் புத்தக இல்லம் - 2012
- 10.07.1946அன்று The Hindu பத்திரிகையில் வெளியான நேருவின் இந்த நேர்காணலானது “Selected works of Jawaharlal Nehru - Volume 15, A Project of the Jawaharlal Nehru Memorial Fund - Published by Sujit Mukherjee – 1982” என்கிற தொகுப்பில் பிற்காலத்தில் வெளியானது
- “Selected works of Jawaharlal Nehru - Volume 15, A Project of the Jawaharlal Nehru Memorial Fund - Published by Sujit Mukherjee – 1982 (P – 549-550)
- BRITISH DOCUMENTS ON THE END OF EMPIRE - Series B Volume 2, Sri Lanka - Editor KM DE SILVA - Part 11 - TOWARDS INDEPENDENCE - 1945--1948, Published for the Institute of Commonwealth Studiesin the University of London (P-220)
- Selected Works of Jawaharlal Nehru, Second Series, Volume 01 - General editor, Shri S. Gopal - A Project of the Jawaharlal Nehru Memorial Fund - 1984
- Gopalakrishna Gandhi - Nehru and Sri Lanka - A collection of Jawaharlal Nehru's speeches and writings covering three decades - Vishva Lekha - Sri Lanka – 2002 (இந்த நூலைத் தொகுத்தவர் மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி. அவர் இலங்கையில் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக 2000-2002 காலப்பகுதியில் கடமையாற்றியவர்)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...