Headlines News :
முகப்பு » , , , » ஜே.வி.பி: இருபதாண்டு கால விட்டுக்கொடுப்பு? - என்.சரவணன்

ஜே.வி.பி: இருபதாண்டு கால விட்டுக்கொடுப்பு? - என்.சரவணன்

“கடந்த 71வருடங்களாக முயற்சித்தும் உங்களால் இந்த ஆட்சியாளர்களை மாற்ற முடியவில்லை. எனவே இனி நீங்கள் மாறுங்கள். அவ்வாறு நீங்கள் மாறினால் நவ.16 பாரியதொரு மாற்றமொன்றை நாம் நிகழ்த்த இயலும்.”
ஜனாதிபதி வேட்பாளரும் ஜே.வி.பியின் தலைவருமான அனுர குமார திசாநாயக்க கருத்து வெளியிட்டிருந்தார். அவர் மட்டுமல்ல இந்த 71 வருட காலம் ஆட்சி செய்த சக்திகளும் அதே 71 ஆண்டுகால ஆட்சியை விமர்சிப்பது தான் இந்தத் தேர்தலின் அதி உச்ச நகைச்சுவை.

இலங்கையின் வரலாற்றில் அதிகளவானோர் போட்டியிடும் தேர்தலாக இது அமைந்திருக்கிறது. அதேவேளை இத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கான எந்த வாய்ப்புமில்லை என்று அறிந்தவர்களும் கூட போட்டியிடுவது ஒரு வகையிலான ஜனநாயக கேலிகூத்துத் தான். இத்தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களில் வெறும் ஒரு வீதத்துக்கும் குறைவாக வாக்கு பெறக்கூடியவர்கள் பலர் போட்டியிடுவது அனாவசிய சிக்கல்களையும், அனாவசிய தேர்தல் செலவுகளை அதிகரிக்கின்ற செயலும் கூட. மேலும் இந்த வேட்பாளர்களில் கணிசமானோர் பிரதான வேட்பாளர்களால் களமிறக்கப்பட்டவர்கள். தேர்தல் நெருங்கும் வேளையில் இரண்டாவது தெரிவை இன்னாருக்கு வழங்குங்கள் என்று வாக்குகளை இன்னொருவர் மூலமாக அபகரிக்கும் கைங்கரியம் என்பது இன்று அம்பலப்பட்டுள்ளது.

ஜே.வி.பி ஏன் போட்டியிடுகிறது.
இடதுசாரி சக்திகளைப் பொறுத்தளவில் பாராளுமன்ற ஜனநாயக முறைமையில் இருக்கக் கூடிய வாய்ப்புகளைத் தவற விடகூடாது என்பதற்காக போட்டியிடும் ஒரு அரசியல் நியாயத்தை முன்வைப்பது வழக்கம்.
“ஒரு நாட்டில் நிலவும் முதலாளித்துவ நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகாத வரை அதைப் புறக்கணிக்கக் கூடாது. அதை ஒரு பிரச்சார மேடையாகப் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் பயன்படுத்த வேண்டும்” என்றார் லெனின். (‘இடதுசாரி கம்யூனிசம் - சிறுபிள்ளைத்தனமான கோளாறு’)
தமது அரசியல் கருத்துக்களை மக்கள் முன் கொண்டு சேர்ப்பதற்கான அவகாசம் தாரளமாக கிடைக்கின்ற காலமே தேர்தல் காலம். எனவே தேர்தல்களில் பங்குபற்றுவதும், பிரச்சார கூட்டங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்பு, ஊடகங்களில் கிடைக்கும் பிரச்சார வசதி, பல்லூடகங்களின் கவனிப்புக்கு உள்ளாதல், துண்டுப்பிரசுரம், போஸ்டர்கள், வெளியீடுகள், என்பவற்றை பரப்ப கிடைக்கின்ற அவகாசம் என்பவற்றை ஒரு உத்தியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே இக்கருத்தின் உட்பொருள். ஏனைய காலங்களில் இதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

இந்த வகையில் தான் ஜே.வி.பி.யும் தாம் வெல்லாவிட்டாலும் இத்தேர்தலை ஒரு பெரு முதலீடாக்கிக்கொள்ள வேண்டும் என்று இறங்கியிருக்கிறது.
இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982 ஆம் ஆண்டு நடந்தபோது அதில் மணி சின்னத்தின் ஜே.வி.பியின் தலைவர் ரோகண விஜேவீர போட்டியிட்டார். அந்தத் தேர்தலை ஜே.ஆர்.அரசை அம்பலப்படுத்த முக்கிய ஆயுதமாக ஆக்கிக்கொண்டார் விஜேவீர. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் ஆபத்தையும், திறந்த பொருளாதார கொள்கை இலங்கையை ஏகாதிபத்தியத்திடம் ஒப்படைத்துவிட்டத்தையும் அவர் அம்பலப்படுத்தினார். இத்தேர்தலில் போட்டியிட்ட 6 பேரில் விஜேவீர மூன்றாவது அதிகப்படியான வாக்குகளைப் பெற்றார். 273,428 வாக்குகளைப் பெற்று மொத்த வாக்குகளில் 4.19% வீதத்தைப் பெற்றுக் கொண்டார். இதுவரையான இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலிலேயே பிரதான போட்டியாளர்கள் இருவரைத் தவிர மூன்றாமவர் பெற்ற அதிகப்படியான வாக்கு வீதமாகும். 

அடுத்த வருடம் 83 கலவரத்தை ஜே.ஆர் ஆரசு ஜே.வி.பி உள்ளிட்ட மூன்று இடதுசாரிக் கட்சிகளின் தலையில் பழியை போட்டு அவ்வமைப்புகளை தடைசெய்ததன் மூலம் ஜே.வி.பி தலைமறைவு அரசியலுக்கு தள்ளப்பட்டதுமில்லாமல் ஆயுதக் கிளர்ச்சிக்கும் தள்ளப்பட்டது. 1988 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜே.வி.பி கிளர்ச்சிக்காலமாதலால் அத்தேர்தலை ஜே.வி.பி பகிஷ்கரித்ததுடன், அத்தேர்தலில் வாக்களிக்கும் முதல் 12பேர் கொல்லப்படுவார்கள் என்று அறிவித்தது. பலத்த பாதுகாப்பின் மத்தியிலும் அவசரகால நிலையிலும் தான் அந்தத் தேர்தல் நடத்தப்பட்டது.


1989 இல் ஜே.வி.பி மோசமாக அழிக்கப்பட்டு மீண்டும் 1993இல் பத்து வருடங்களில் பின்னர் பகிரங்க அரசியலுக்கு மீண்டும் வந்து சேர்ந்தது. ஜே.வி.பி மீது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த பயத்தை துடைக்கவும், ஜனநாயக அரசியலில் ஈடுபடப்போவது குறித்த நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்கான பிரச்சார களமாக 1994 ஜனாதிபதித் தேர்தலை பயன்படுத்திக்கொண்டது. ஜே.வி.பி சார்பில் அத்தேர்தலில் போட்டியிட்ட நிஹால் கலப்பத்தி மொத்தம் 22,749 (0.30%) வாகுகளை மட்டுமே பெற்றுக்கொண்டார். போட்டியிட்ட 6 பேரில் ஆகக் குறைந்த வாக்குகள் ஜே.வி.பிக்கு தான் கிடைத்திருந்தாலும் அத் தேர்தல் ஜே.வி.பி.யை மீண்டும் அரசியலில் நிலைநிறுத்த சிறந்த முதலீடாக அமைந்தது.

அதற்கடுத்த தேர்தல் 1999 இல் நடந்தபோது நந்தன குணதிலக்க ஜே.வி.பி யின் சார்பில் நிறுத்தப்பட்டார். அத்தேர்தலில் போட்டியிட்ட 13 பேரில் முதல் பிரதான போட்டியாளர்களுக்கு அடுத்ததாக மூன்றாவது அதிகப்படியான வாக்குகள் 344,173 (4.08 %) ஜே.வி.பிக்குத் தான் கிடைத்தது.

1999 க்குப் பின்னர் ஜே.வி.பி. ஜனாதிபதித்தேர்தல் வேட்பை மற்றவர்களுக்கு தியாகம் செய்தது என்று தான் கூற வேண்டும். 

2005 ஆம் ஆண்டு தேர்தலில் மகிந்தவை வெல்லவைப்பதற்காக தமது தரப்பில் வேட்பாளரை நிறுத்தாததுடன் மகிந்தவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்கள்.

2010ஆம் ஆண்டு தேர்தலில் மகிந்தவை தோற்கடிப்பதற்காக ஜனநாயக மக்கள் இயக்கத்தின் சார்பாக பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு  ஆதரவளித்தது ஜே.வி.பி. ஆனால் மகிந்த ராஜபக்ச அத தேர்தலில் வென்றார்.

அதன் பின்னர் மீண்டும் 2015 ஆம் ஆண்டு அதே மகிந்தவை தோற்கடிப்பதற்காக தமது தரப்பில் எவரையும் நிறுத்தாததுடன் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேனவை வெல்ல வைப்பதற்காக கடுமையாக உழைத்தனர்.

இந்த இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் முதற் தடவையாக ஜே.வி.பியின் ஆதரவாளர்களுக்கு தமது வேட்பாளருக்கு  வாக்களிக்கும் சந்தர்ப்பங்கம் கிட்டியிருகிறது. இந்த இடைக்காலத்தில் மக்களின் பொது அபிலாசையை நிறைவேற்றுவதற்காக இரண்டு தசாப்தகாலத்தை விலையாக கொடுத்த நிலையில் தான் இனி இந்தப் போக்கு ஒரு வகையில் அரசியல் தற்கொலை என்கிற முடிவுக்கு வந்து இம்முறை களத்தில் இறங்கியிருக்கின்றனர்.

அது மட்டுமன்றி ஜே.வி.பியைப் பொறுத்தளவில் இந்த ஜனாதிபதித்தேர்தலை விட முக்கியமானது இன்னும் ஒரு சில மாதங்களில் நடத்தப்படவிருக்கிற பாராளுமன்றப் பொதுத்தேர்தல். அத் தேர்தலுக்கு முன்னர் தமது கட்சியைப் பலப்படுத்துவதும், வாக்காளர்களை அதற்காக தயார்படுத்துவதும், தமது கொள்கைகளையும் திட்டங்களையும் இப்போதே மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கும் இந்தத் தேர்தல் முக்கியமானது. இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் இலக்கத் தயாரில்லை. இதற்கு மேலும் அவர்களை விட்டுக்கொடுக்கும்படியும், தியாகம் செய்யும்படியும் கோர எந்த அரசியல் சக்திகளுக்கும் தார்மீக பலமோ, உரிமையோ கிடையாது. அதேவேளை மோசமான பிரதான வேட்பாளராக அவர்கள் கருதும் கோத்தபாயவுக்கு எதிராக இரண்டாவது விருப்பு வாக்கு வாக்கை வழங்கலாம் என்று இப்போது சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அதன் மறு அர்த்தம் சஜித்துக்கு இரண்டாம் தெரிவை வழங்கி கோத்தபாயவை தோற்கடியுங்கள் என்பது தான். ஏனென்றால் இம்முறை வரலாற்றில் முதல் தடவையாக இரண்டாவது வாக்குக் கணிப்புக்கும், இரண்டாவது வாக்குத் தெரிவுக்கும் பெரும் பலம் உண்டு என்பதை அரசியல் அவதானிகள் பலரும் நம்புகின்றனர். 

ஆச்சரியங்கள்
எப்படியிருந்தபோதும் இம்முறை எவரும் 50%க்கு அதிகமான வாக்குகளைப் பெறப்போவதில்லை. எப்படியோ இம்முறை பெரும்பாலானோர் விரும்பாத ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாவது உறுதி. அதாவது பெரும்பாலானவர்களால் வெறுக்கப்படும் ஒருவர் தெரிவாவார். வரலாற்றில் இப்படி முதற் தடவை நிகழப்போகிறது.

41 பேர் வரை போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியிருந்தபோதும் இறுதியில் 6 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. கோத்தபாய ராஜபக்சவின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம் என்கிற ஐயத்தில் ராஜபக்ச தரப்பில் மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்சவுக்கு கட்டுப்பணம் செலுத்தி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தபோதும், கோத்தபாயவின் வேட்புமனு ஆட்சேபனயின்றி எற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதும் சமல் ராஜபக்சவின் வேட்பு மனு தவிர்க்கப்பட்டது. அவர்களின் தரப்பில் மூத்த அரசியல் தலைவர்கள் பலர் இருந்தும் கூட மீண்டும் அவர்களுக்கு ராஜபக்சகளில் ஒருவரைத் தவிர வேறொருவரை தெரிவு செய்ய தயாரில்லாததைப் பற்றி அரசியல் களத்தில் விமர்சிக்கப்பட்டது.

இம்முறை சகல இனத்தவர்களும், மதத்தவர்களும் போட்டியிடும் தேர்தல் இது. மேலும் வேட்பாளர்களில் இருவர் பிக்குமார்.

முன்னைய அரச தலைவர் ஒருவர் போட்டியிடாத ஒரு தேர்தல். மொத்த 35 பேரில் இரண்டு பேர் தான் பாராளுமன்ற உறுப்பினர்கள். ஒருவர் சஜித் பிரேமதாச மற்றவர் அனுரகுமார திசாநாயக்க. பிரதான கட்சிகளின் சொந்தச் சின்னங்களே இல்லாத தேர்தலும் இது தான்.

சுதந்திர இலங்கையில் அதிக காலம் ஆட்சி செய்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முதற் தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கியிருக்கிறது. மைத்திரியின் சாதனைகளில் ஒன்று.

பெண்கள்
முதல் தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் 1988 இல் தான் பெண்ணொருவர் போட்டியிட முன்வந்தார். அவர் வேறுயாருமல்ல உலகில் முதல் தடவையாக பிதமராக தெரிவான சிறிமாவோ பண்டாரநாயக்க. அதில் அவர் தோல்வியடைந்தாலும் அதற்கடுத்த தேர்தல் 1994 இல் நடத்தப்பட்ட தேர்தலில் அவரின் மகள் சந்திரிகா பண்டாரநாயக்க போட்டியிட்டு வென்றார். ஜனாதிபதித் தேர்தலிலேயே அதிக வாக்குவீதம் (62.28%) பெற்றவர் அவர் தான். அதற்கு முன்பும், பின்னரும் அந்த இலக்கை எவரும் அடைந்ததில்லை. 1999 ஆம் ஆண்டு தேர்தலிலும் அவர் இரண்டாவது தடவை போட்டியிட்டு வென்றார். அதன் பின்னர் இரண்டு தசாப்தகாலமாக எந்தவொரு பெண்ணும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்த இரண்டு தசாபதத்திற்குப் பின்னர் இத்தேர்தலில் தான் இலங்கை சோஷலிச கட்சியின் சார்பில் கலாநிதி அஜந்தா பெரேரா என்கிற பெண் களமிறங்கியுள்ளார். அவர் ஒரு இடதுசாரியாக மட்டுமன்றி ஒரு சூலழியலாளராக அறியப்பட்டவர்.

அமெரிக்க வேட்பாளர்
இன்னமும் பிரதான வேட்பாளர்களில் ஒருவரான கோத்தபாய அமெரிக்கரா, இலங்கையரா என்கிற ஐயத்துக்கு இன்னும் தெளிவான பதில் இலங்கை மக்களுக்கு கிடைக்கவில்லை. அப்படி நிகழ்ந்தால் வரலாற்றில் முதல் தடவை அந்நிய நாட்டுப் பிரஜை ஒருவர் ஜனாதிபதியாக ஆனதாக பதியப்படுவார். அவரின் பாரியார் கூட இன்னமும் அமெரிக்கர் தான். ஆக இலங்கையின் முதற் பெண்மணியும் அமெரிக்கராக இருப்பார். கோத்தபாயவின் குடும்பமும், சொத்துக்களும் அமெரிக்காவிலேயே உள்ளன என்பது அறிந்ததே.

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை அவர் தெரிவாகி சில வருடங்களின் பின்னர் அவர் வெளிநாட்டவர் தான் பறிக்கப்பட்டது.

ஜனாதிபதியாக தெரிவான ஒருவர் பின்னர் அவர் வேறொரு நாட்டுப் பிரஜை என உறுதியாகும் பட்சத்தில் அல்லது அவரின் பதவி பறிக்கப்படும் நிலையோ பாரதூரமான பிரச்சினை. ஆனால் இன்னமும் தான் இரட்டைப் பிரஜை இல்லை என்பதை உறுதிபடுத்துகின்ற பொறுப்பை தட்டிக் கழிப்பது மக்கள் விரோத செயலாகவே பார்க்கப்படுகிறது. நீதித்துறையை விட சம்பந்தப்பட்ட தனிநபருக்கே இதனை நிரூபிக்கும் பொறுப்பு அதிகம் இருக்கிறது.

கோத்தபாய இரட்டைக் குடியுரிமையை முறைகேடாக இலங்கையில் பெற்றுக்கொண்டது பற்றிய பல விபரங்கள் அது தொடர்பிலான வழக்கில் வெளியாகின. அதற்கான விண்ணப்பம் முறைப்படி மேற்கொள்ளப்பட்டதா? அதற்கான கட்டணம் கட்டப்பட்டிருக்கிறதா? போன்றவை நிரூபிக்கப்படவில்லை என்பது கவனிக்கவேண்டும். கோத்தபாயவின் “ஜனாதிபதி சகோதரன்” அந்த இரட்டைக்குடியுரிமையை பெற்றுக்கொடுத்தார் என்கிறார்கள். அப்படியென்றாலும் கூட நாட்டின் எந்த சாதாரண பிரஜைக்கும் கொடுக்கப்படாத ஒரு வழிமுறை கோத்தாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பது பொருள்

அமெரிக்க பிரஜை ஒருவர் இன்னொரு நாட்டில் இரட்டை குடியுரிமை பெறுவதாயின் அமெரிக்காவில் பூரனப்படுத்தவேண்டிய சில வழிமுறைகள் உண்டு. கோத்தபாய அவற்றைக் கூட முழுமையாக செய்து முடித்தாரா என்பது இன்றும் சந்தேகத்திற்கிடமாகவே இருக்கிறது.

விக்டர் ஐவன்
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் குறித்து பிரபல அரசியல் ஆய்வாளர் விக்டர் ஐவன் SriNews என்கிற செய்திச் சேவைக்கு நவம்பர் 3ஆம் திகதி வழங்கிய சிங்கள நேர்காணலில்  இப்படி கூறுகிறார்.
“புதியதொரு ஜனாதிபதி தெரிவாகிவிட்டார் என்பதற்காக இலங்கை தற்போது எதிர்கொண்டிருக்கும் பாரிய நெருக்கடியில் பெரிய மாற்றமெதுவும் நிகழப்போவதில்லை. அதி அவசியமான சீர்திருத்தங்களை அலட்சியப்படுத்தியே வந்திருக்கிற நாடு நம்நாடு. இத் தேர்தலுக்கு 700 கோடி ரூபாய் செலவாகிறது என்பதை நாம் அலட்சியப்படுத்திவிடமுடியாது. அனைத்து வேட்பாளர்களும் உண்மையான போட்டியாளர்கள் கிடையாது. பாரிய குற்ற வழக்குகளைக் கொண்டிருப்பவர்கள் போட்டியாளர்களாக இருக்கிறார்கள். அப்படியானவர்களை அரச சேவையில் ஒரு உத்தியோகம் கூட கொடுக்கமாட்டார்கள். ஒரு லிகிதர் வேலையைக் கூட கொடுக்கமாட்டார்கள். அனைத்து சிக்கல்களையும் கொண்ட நாடு. அரசியல் அறம் என்பது சுத்தமாகக் கிடையாது. எங்கேயோ ஒரு நாசத்தை தேடிச்சென்றுகொண்டிருக்கின்ற நாடு.
கோட்டா ஒரு சிறந்த பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு சிலவேளை பொருத்தமாக இருக்கலாம். ஆனால் ஒரு நாட்டின் தலைவராக ஆக எந்தத் தகுதியும் கிடையாது. கோத்தபாயவுக்கு இன்னமும் இராணுவ  மனநிலை தான் இருக்கிறது. அவரைச் சுற்றி இருப்பவர்கள் கூட ஓய்வு பெற்ற இராணுவத்தினர் தான். சிவில் மனநிலை அவருக்கு கிடையாது. சரத் பொன்சேகாவை போது வேட்பாளராக நிறுத்தியபோது கூட அதை எதிர்த்து இதே கருத்தை முதலில் சொன்னவனும் நான் தான்.
அடுத்தது கோத்தபாய ஒரு சீர்திருத்தவாதி கிடையாது. தன்னை சீர்படுத்தவேண்டும் என்று நேர்மையாக நினைத்தது கிடையாது. செய்த தவறுகளை ஒரு போதும் ஒத்துக்கொண்டது கிடையாது. அத் தவறுகளை நிதமும் நியாயப்படுத்திக்கொண்டிருப்பவர். சகலரும் தவறுகளைச் செய்யக் கூடியவர்கள் தான். தவறு என்று உணர்ந்தால் சுயவிமர்சனம் செய்துகொள்ளவேண்டும், வருந்தவேண்டும். இது எதுவும் அவரிடம் கிடையாது. அப்படி இருக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி நீதி வழங்கமுடியும்.” என்கிறார்
இவையெல்லாவற்றையும் விட முதலில் இத்தேர்தல் பிரச்சாரங்களில் கூறப்படுகிற வாக்குறுதிகளுக்கு சட்ட வலுவோ, செல்லுபடி பெறுமதியோ, உண்டா என்கிற கேள்வியை வாக்காளர்கள் கேட்கமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் போலி வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள் வேட்பாளர்கள். 19வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களே. அமைச்சரவையின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முழு அதிகாரமும் பாராளுமன்றத்துக்கும், பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட அரசாங்கத்துக்குமே உண்டு. அப்படி இருக்கையில் ஜே ஆர் ஜெயவர்த்தன கூறிய “ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றும் சக்தியைத் தவிர அனைத்து இந்த ஜனாதிபதி முறையால் செய்ய முடியும்” என்கிற அதிகாரங்கள் எதுவும் தற்போதைய ஜனாதிபதியிடம் இல்லை என்கிற உண்மையைக் கூறியாக வேண்டும்.

நன்றி - தினக்குரல்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates