இன்று 13.12.2018இல் வெளியாகியிருக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு 19வது திருத்தச் சட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கூற முடியும். நீதிமன்றங்களின் சுயாதிபத்தியத்தை உறுதிசெய்வதில் 19வது திருத்தச் சட்டத்தின் வகிபாகம் முக்கியம். சுயாதீன ஆணைக்குழுக்கள் பல உருவாக்கப்பட்டதும் அந்த திருத்தச் சட்டத்தில் தான்.
சிவில் சேவைத்துறை ஊழலும், அரசியல்/அதிகாரத்துவ தலையீடும், பணத் தலையீடுகளும் நிறைந்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி அயோக்கியர்களால் சூறையாடப்பட்டுக்கொண்டிருப்பதை தடுப்பதகாகத் தான் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதற்கான அவசியத்தை வலியுறுத்தி பல ஆண்டுகளாக சிவிலியன்கள் தரப்பில் இருந்து பல கோரிக்கைகளும், வேண்டுகோள்களும், போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.
சமீபத்தில் குற்றப்புலனாய்வு திகாரி நிஷாந்த சில்வாவை ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் மா அதிபர் இடமாற்றம் செய்திருந்ததும் அந்த இடமாற்றத்தை தடுத்து நிறுத்தியது சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு தான் என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டும். மகிந்த காலத்தில் இடம்பெற்ற கொலை, ஆட்கடத்தல், கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகளை விசாரித்து வருபவர் நிஷாந்த சில்வா. தற்போது மகிந்தவை குறுக்குவழியில் பிரதமராக்கியதும் முதலில் மகிந்த மைத்திரி கூட்டு செய்தவேளை; தங்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து தம்மை மீட்பதற்கான முதல் கட்டமாக அந்த குற்றங்களை விசாரித்துவரும் அதிகாரியை அந்த விசாரணைகளிலிருந்து அகற்றியது. ஆனால் இந்த சுயாதீன ஆணைக்குழுவால் தான் ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர் போன்றோரின் ஆணைகளையும் கூட தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது.
நல்லாட்சியின் 19
2015 “நல்லாட்சி” எனும் பேரில் பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படுகையில் அவர்களின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று இந்த சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்கும் யோசனையாகும். அதை அரசியலமைப்பு ரீதியில் செய்வதற்கு அதுவரை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை. அரசியலமைப்பு மாற்றத்தை மேற்கொள்வதற்கு அதுவரை இருந்த தடையை இக்கட்சிகள் சேர்ந்து ஆட்சியமைத்தன் மூலம் சரிசெய்ய முனைந்தன. காலம் இழுபறிபட்டுக்கொண்டு போன நிலையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் யோசனை கைவிடப்பட்டு அரசிலமைப்புக்கான 19வது திருத்தச் சட்டமாக அது சுருங்கியது. 19வது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்கு தீர்வு தரும் எதுவித அம்சங்களும் இருக்கவில்லை. ஆனால் அத்திருத்தச் சட்டம் செய்த முக்கிய நல்ல அம்சங்களில் ஒன்று சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தது.
1978 அரசியலமைப்பை விட 2000 இல் சந்திரிகா அரசாங்கத்தின் போது (தற்போது இருப்பதை விட) முன்னேறிய அரசியலமைப்பொன்று சமர்ப்பிக்கப்பட்டது. அன்றைய எதிர்க்கட்சி ஐ.தே.க பாராளுமன்றத்திலேயே வைத்து அதனை கிழித்தும், எரித்தும் அந்த முயற்சியை கைவிடச்செயதனர்.
1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கட்டற்ற அதிகாரங்களை இதுவரை வந்த அனைத்து ஜனாதிபதிகளும் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். அந்த நிலைமையை ஒழிப்பதாகக் கூறி வந்த சந்திரிகா, மகிந்த, மைத்திரிபால ஆகியோர் அனைவரும் அந்த அதிகாரத்தில் ருசிகண்டு அனுபவித்தார்கள். மேலதிக அதிகாரங்களைக் தமக்குக் குவித்துக்கொள்ள பேராசைப்பட்டார்கள். அவர்களிடம் குவிந்திருந்த அதிகாரங்களைக் கொண்டு சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடித்தார்கள். தான் தோன்றித்தனமாக நடந்துகொண்டார்கள்.
அந்த அதிகாரங்களைக் குறைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட 19வது திருத்தச் சட்டத்தத்தால் கூட ஜனாதிபதியின் எச்சசொச்ச சர்வாதிகாரத்தையும், அதிகார பேராசையையும் கட்டுபடுத்த முடியவில்லை என்பதைத் தான் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
கடந்தகால சில உதாரணங்கள்:
78 தொடக்கம் 1994 வரையான 16 ஆண்டு காலம் நிறைவேற்று ஜனாதிபதிகளாக ஜே.ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க ஆகியோர் இருந்திருக்கிறார்கள். 1994இலிருந்து இதுவரையான 24ஆண்டுகள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களே நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்கள்.
1980இல் இடம்பெற்ற பொதுவேலை நிறுத்தத்தையும், தொழிற்சங்கங்களையும் அடக்கியொடுக்குவதற்கும் அது முதன் முதலில் தான்தோன்றித்தனமாக, பயன்படுத்தப்பட்டது.
1983 கறுப்பு யூலையையும், யுத்தத்தையும் ஆரம்பிப்பதற்கு இந்த நிறைவேற்று அதிகாரம் பயன்படுத்தப்பட்டது.
இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்கவென 1987இல் இந்தியாவுடன் இலங்கை உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டு அதன் பின்னர் 13ஆவது திருத்தத்தின் மூலம் மாகாணசபைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி அந்த ஒப்பந்தம் அமுலாக்கப்படவில்லை. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மாகாணசபையும் கலைக்கப்பட்டது.
அதன் பின்னர் தொடர்ச்சியாக மோசமான அநீதியான அரசியல் முடிவுகள் நிறைவேற்று அதிகார ஜனாதிமுறையால் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன
சுயாதீன ஆணைக்குழுக்களின் தனித்தன்மை
19ஆவது திருத்தத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளைப் போல தொடந்தும் மேற்கொள்ள முடியாது. பாராளுமன்றத்தின் மூலம் உருவாக்கப்பட்ட “அரசியலமைப்பு பேரவை”க்கு கட்டுப்பட்டிருக்கும் இந்த ஆணைக்குழுக்கள்.
சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகளில் எல்லாம் அந்த ஆணைக்குழுக்களை நியமிப்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவரே தவிர பாராளுமன்றமல்ல. உதாரணத்திற்கு இந்திய அரசியலமைப்பின் 316 (1) இன் படி அரச சேவை ஆணைக்குழுவுக்கும், 324 (2) இன் படி தேர்தல் ஆணைக்குழுவுக்குமான உறுப்பினர்களை இந்திய ஜனாதிபதியே நியமிப்பார். நமது நாட்டிலும் ஆரம்பத்தில் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட காலத்திலிருந்தே அப்படித்தான் இருந்தது. 1972 யாப்பின் பிரகாரம் எல்லை நிர்ணய ஆணைக்குழு, அரச சேவை ஆலோசனைச் சபை, அரச சேவை ஒழுக்காற்று சபை, நீதித்துறை ஆலோசனைச் சபை என்பவற்றுக்கான உறுப்பினர்களை ஜனாதிபதியே நியமித்தார். 17வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் வரை ஜனாதிபதியிடம் தான் அதற்கான அதிகாரம் இருந்தது.
ஜனாதிபதியின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட வேண்டுமென, பரந்துபட்ட மக்களின்; கோரிக்கையின் விளைவாக 17ஆவது திருத்தம் 2001 ஒக்டோபரில் கொண்டுவரப்பட்டது ஆனால் அத்திருத்தமும் உரிய அதிகாரங்களை ஜனாதிபதியிடம் இருந்து பறிக்கவில்லை. 17 வது திருத்தச் சட்டத்திற்கு ஜே.வி.பி ஆதரவளித்திருந்தது ஜே.வி.பியின் அழுத்தத்தின் காரணமாகத் தான் முதன்முறையாக சுயாதீன ஆணைக்குழுக்கள் அத்திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டன. ஆனால் தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்படாமை மூலம் 17ஆவது திருத்தம் முதல்முறையாக மீறப்பட்டது. தான்தோன்றித்தனமான முறையில் அதிகாரம் தொடர்ந்தும் மக்கள் விரோத வழிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன.
ஜனாதிபதியின் தான்தோன்றித்தனம்
அரசியலமைப்பு பேரவையில் பரிந்துரையின்றி எந்த ஒரு உறுப்பினரையும் ஆணைக்குழுக்களுக்கு நியமிக்க முடியாது என்கிற விதியை மீறி ஜனாதிபதி அந்த அதிகாரங்களை தன் கையில் எடுத்துக்கொண்டு அனைத்து நியமனங்களையும் எதேச்சதிகாரமாக நியமித்தார்.
மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையை நிறைவேற்றுவதாகக் கூறிக்கொண்டு 18வது திருத்தச் சட்டம் 2015 ஏப்ரல் கொண்டுவரப்பட்டபோதும்; அத்திருத்தச்சட்டத்தின் மூலம் ஜனாதிபதி மேலதிக அதிகாரங்களை தனக்கு குவித்துக்கொள்வது தான் நிகழ்ந்தது. நீதிமன்றங்களின் அதிகாரங்கள் சில பறிக்கப்பட்டன. நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் மீது கூட தலையீடு செய்யப்பட்டன. சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாதொழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக கண்துடைப்புக்காக அதிகாரமற்ற சபைகள் உருவாக்கப்பட்டன. நீதிமன்றமும் பொலிசும் ஜனாதிபதியின் தேவைக்கேற்ப செயற்பட்டன.
ஜனாதிபதி அமைச்சரவையின் பிரதானி ஆவார். பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதிகள் ஆகிய அனைவரையும் ஜனாதிபதியே நியமித்தார். அதேசமயம் பாதுகாப்பு அமைச்சுப் பதவியையும், நிதியமைச்சுப் பதவியையும் அவரே வைத்துக்கொண்டார். முதலீட்டுச் சபை, தென்னிலங்கை அதிகாரசபை, அதிவேக நெடுஞ்சாலைகள், துறைமுகம், மின் உற்பத்தி நிலையங்கள் ஆகிய அனைத்தும் எதுவித சட்டமுமில்லாமல் ஜனாதிபதி தன்வசமாக்கிக் கொண்டார்.
18வது திருத்தச் சட்டத்தின் மூலம் ஒருவர் ஜனாதிபதிப் பதவியில் இரண்டு தடவைகள் மட்டுமே வகிக்க முடியும் என்கிற விதியை மாற்றி எத்தனை தடவை என்றாலும் வகிக்க முடியும் என்று மாற்றினார். ஏற்கெனவே ஜனாதிபதிக்கு இருந்த பெருமளவு அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டதுடன், அதுவரை இருந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாது செய்யப்பட்டன.
19வது திருத்தச் சட்டம் இந்த விதிகளை மாற்றியது. இரண்டு தடவைகள் மாத்திரமே ஒருவர் ஜனாதிபதிப்பதவியை வகிக்க முடியும் என்று மாற்றியது. அத்துடன் இல்லாதொழிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மீண்டும் உருவாக்கப்பட்டதுடன் அந்த ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தை உறுதிசெய்யும் வகையில் மேலதிக அதிகாரங்களை வழங்கியது.
நீக்கப்பட்டிருந்த ஆணைக்குழுக்களை நியமிப்பதற்காக இருந்த அரசிலமைப்புப் பேரவை மீண்டும் உருவாக்கப்பட்டதுடன் ஆணைக்குழுக்களின் மீதான ஜனாதிபதியின் தலையீடு முறிக்கப்பட்டது.
அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள்
- தேர்தல் ஆணைக்குழு
- அரச சேவை ஆணைக்குழு
- தேசிய பொலிஸ் ஆணைக்குழு
- மனித உரிமைகள் ஆணைக்குழு
- இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு
- நிதி ஆணைக்குழு
- எல்லை நிர்ணய ஆணைக்குழு
- கணக்குச் சேவை ஆணைக்குழு
- தேசிய பெறுகை (விலைமனுகோரல்) ஆணைக்குழு
ஆணைக்குழுக்களின் நம்பகம்
விசாரணை ஆணைக்குழுக்களுக்கும் நிரந்த ஆணைக்குழுக்களுக்கும் வித்தியாசம் இருக்கவே செய்கின்றன. இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் பாராளுமன்றத்திற்கு கட்டுப்படுவதுடன் பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறலைக் கொண்டிருத்தல் வேண்டும். இந்த ஆணைக்குழுக்களில் தேர்தல்கள் ஆணைக்குழு மாத்திரம் பாராளுமன்றத்திற்கு எவ்விதத்திலும் பொறுப்புக்கூறுவதற்கான அவசியம் கிடையாது என்ற வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்துவிட்டோம் என்று தம்பட்டம் அடித்தால் மட்டும்போதாது. அது இயங்குகிறதா? உரியவர்களுக்கு, உரிய நேரத்தில், உரிய வகையில் நீதி கிடைக்கச் செய்கிறதா என்பதை கையாளும் பொறிமுறை அரசிடம் இல்லை. அதுவே அதன் அர்த்தமற்ற தன்மைக்கு கட்டியம் கூறுகிறது.
அந்த ஆணைக்குழுக்கள் தாம் இயங்குவதற்கு போதிய வளங்களை அரசாங்கம் ஒதுக்குவதில்லை என்கிற குற்றச்சாட்டை சுமத்தி வந்திருக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆட்சியில் கொண்டுவந்த 1990/15ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம், அரச நியமனங்களில் இன விகிகதாசாரத்தைப் பேணும் வழிமுறைகளை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும் பின்பற்றுவதற்கு ஏற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், இந்த ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் தெரிவிலும் இந்த இன விகிகதாசாரம் பேணப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த சுற்றறிக்கை இரத்தாக்கப்பட்டதில்லை. ஆனால் அதற்கு செயல் வடிவம் கொடுத்ததில்லை அரச நிறுவனங்கள். இந்த பாரபட்சங்களை சரி செய்வதற்கு இந்த ஆணைக்குழுக்களுக்கு இருக்கும் பொறிமுறை என்ன? இந்தக் கேள்வியை பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் வினவி வருபவர் டக்ளஸ் தேவானந்தா மட்டும் தான்.
கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்களின் விசாரணைகளும், பரிந்துரைகளுக்கும் என்ன நடந்தன என்பது பற்றி நாம் அறிவோம். வெறும் கண்துடைப்பு ஆணைக்குழுக்களாக அவ்வப்போது மக்களின் கோரிக்கைகளையும், கவனத்தையும் திசைதிருப்பும் ஆணைக்குழுக்களாகவே இலங்கையின் ஆணைக்குழுக்கள் வரலாறு முழுக்க இருந்திருகின்றன. எனவே ஆணைக்குழுக்களை நம்பிக்கையுடன் பார்க்கும் காலம் கடந்துவிட்டது. சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தை உறுதிசெய்வதும், அதற்கான வளங்களை ஒதுக்கி வேகமாக செயற்பட ஒத்துழைப்பதும், அரசியல் தலையீடற்றதாக அதனை பேணுவதற்கு உத்தரவாதமளிப்பதும் அரசின் கடமை. பாரிய பொறுப்பும் கூட. அரச அமைப்பு முறை மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை சரிசெய்வதற்கு இருக்கின்ற முக்கிய பொறிமுறை இந்த ஆணைக்குழுக்கள். அந்த பொறிமுறை சீர்கெட்டால் மக்களின் இறுதி நம்பிக்கையும் சீர் கெட்டுவிடும் என்பது உறுதி.
நன்றி - தமிழர் தளம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...