“சட்டத்தின் ஆட்சி இல்லாத போது சுதந்திரத்தையும் எதிர்பார்க்கமுடியாது” கிரேக்க பழமொழி ஒன்று உள்ளது. இலங்கையில் ஒக்டோபர் 26 தொடக்கம் அடுத்த 50 நாட்கள் நிகழ்ந்து முடிந்தது அதுதான்.
அரசாங்கமொன்று இல்லை என்பதை உறுதிசெய்கின்ற ஹன்சார்ட் அறிக்கைகள் இரண்டு வெளிவந்தன. நவம்பர் 15, 16 ஆகிய இரண்டும் முக்கிய பதிவுகள்.
“நேற்று 14.11.2018 அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் மூலம் நான் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை”
என்கிற 15ஆம் திகதி சபாநாயகரின் அறிவிப்பு ஹன்சார்ட் பதிவு பெற்றது. அதுபோல சபாநாயகரி அந்த அறிவிப்பை பாராளுமன்ற சபைக்கூட்டத்தில் நிறைவேற்றுவதற்கான முன்மொழிவை நவம்பர் 16 அன்று ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க செய்ததுடன் அதை ஏற்றுக்கொள்வதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வழிமொழிந்து நிறைவேற்றினார். இதுவும் ஹன்சார்டில் பதிவுபெற்றது. அரசாங்கமில்லாத நாட்டை மீட்க இறுதியில் நீதித்துறையே இறுதித் தீர்ப்புவலங்கும் அளவுக்கு இந்த நிலைமைகள் இட்டுச்சென்றது.
இறுதியில் மீண்டும் இலங்கை மக்கள் அரசாங்கமொன்றை நீதிமன்றத்தின் மூலம் மீட்டெடுத்துள்ளனர். அரசாங்கமோ, இடைக்கால அரசாங்கமோ இல்லாத ஒரு கோமா தேசமாக கடந்த சில நாட்கள் இலங்கை காணப்பட்டது. அதேவேளை பலரும் நினைப்பதுபோல இலங்கையின் வரலாற்றில் இது தான் முதல் நிகழ்வு அல்ல.
உலகில் பல நாடுகள் இப்படியான நிலையைக் கடந்து வந்திருக்கிறது. இலங்கைக்கும் அந்த அனுபவம் உண்டு. ஒரு அரசை நடத்திக் கொண்டு போவது காலா காலத்துக்கு தெரிவாகும் அரசாங்கங்களே. நிலையான அரசுக்கு நிரந்தரமற்ற அரசாங்கங்கள் உரிய காலத்தில் அஞ்சலோட்டம் போல அரசாங்கங்கள் அடுத்தடுத்த அரசாங்கங்ககளுக்கு கைமாற்றிக்கொண்டே ஆட்சிகளை இழுத்துச் செல்வதே வாடிக்கை. சில குறிப்பான நெருக்கடி காலகட்டங்களில் அரசாங்கமற்ற ஆட்சிகள் நிலவியிருக்கின்றன.
டட்லியின் VS கொத்தலாவல
1947இல் இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தலின் மூலம் தெரிவான டீ.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க அரசாங்கம் இலங்கை 1948 சுதந்திரம் பெற்றபின்னரும் அப்படியே தொடர்ந்தது. 1952ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அடுத்த தேர்தல் நடத்தப்படவேண்டியிருந்தது. ஆனால் இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க 21 மார்ச் 1952 அன்று காலிமுகத்திடலில் குதிரைசவாரி செய்துகொண்டிருந்தவேளை அதிலிருந்து தவறி விழுந்து பின் அடுத்த நாள் 22ஆம் திகதி மரணமானார்.
டீ.எஸ். அரசாங்கத்தில் இரண்டாவது தலைமைக்குரியவராக அப்போது பண்டாரநாயக்கவே அறியப்பட்டிருந்தார். ஆனால் அவர் சுதந்திரக் கட்சியை ஆரம்பிக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக ஐ.தே.க வில் இருந்த மூத்த தலைவர் சேர்.ஜோன்.கொத்தலாவல. அதுமட்டுமன்றி அவர் முதலாவது அரசாங்க சபையிலிருந்தே அதில் அங்கம் வகித்துவருபவர். அதுவும் அவருக்கு மேலதிக தகுதியாக கருதப்பட்டது.
ஜோன் கொத்தலாவல, டட்லி, ஜே.ஆர் ஆகிய மூவரின் பெயர்களும் பிரதமர் பதவிக்காக முன்மொழியப்பட்டிருந்தது. ஜே.ஆருக்கு அப்போது அதில் அத்தனை பெரிய அக்கறை இல்லாதிருந்தபோதும் ஏனைய இருவருக்கும் இடையில் ஒரு பனிப்போர் இருக்கவே செய்தது. இப்படி இருந்த சூழ்நிலையில் தான் இறுதியில் சோல்பரி டட்லியை பிரதம் பதவி வகிக்கும்படி அழைப்பு விடுத்தார். அரசாங்கத்துக்குள்ளிருந்தே 19பேர் “ஜோன் வேண்டாம்” என்கிற கடிதத்தை அவருக்கே அனுப்பி வைத்திருந்தனர்.
அதுமட்டுமல்ல தமிழ் காங்கிரஸ் கட்சியும் கூட ஜோன் கொத்தலாவலயை விரும்பியிருக்கவில்லை. “டட்லி அரசாங்கத்துக்கு நாங்கள் உடன்படுகிறோம்” என்றார்கள். அதுமட்டுமன்றி பாராளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினர்கள் பலரும் கூட டட்லிக்கு ஆதரவை வழங்கினார்கள். 1952 மார்ச் 21 இலிருந்து நான்கு தினங்கள் நாட்டில் ஒரு பிரதமரற்ற ஒரு ஆட்சியே நிலவியது. அன்று இப்போது போல ஜனாதிபதி முறையும் இருக்கவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக ஆளுநர் முறை இருந்தது.
இந்த சம்பவத்தால் ஜோன் கொத்தலாவல தனது எதிர்பார்ப்பு கலைந்தது தொடர்பில் ஆவேசமடைந்தது பற்றிய குறிப்புகள் பல நூல்களில் காணப்படுகின்றன. 41 வயதுடைய டட்லி பிரதமர் பதவியை பதவியேற்றார். ஜோன் கொத்தலாவலவுக்கு அப்போது வயது 57.
நான் டீ.எஸ்.சேனநாயக்கவின் உறவுமுறை சார்ந்த வாரிசு, அப்படியிருந்தும் இந்த நாசத்தை ஏற்படுத்திய சோல்பரி பிரபுவை பழிவாங்குவேன். அது மட்டுமன்றி நான் இந்த அரசாங்கத்தில் எந்தவித பதவியையும் ஏற்கவும் மாட்டேன் என்று சத்தமிட்டு கூறிவிட்டு ஒதுங்கினார்.
கொத்தலாவலவின் “பிரதமர் சமர்” நூல்
ஆனாலும் டட்லி கொத்தலாவலவுக்கு அமைச்சுப் பதவியை வழங்கினார். ஆனால் கொத்தலாவல சூட்டோடு சூடாக கனடாவுக்கு சர்வதேச பாராளுமன்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக போய்விட்டார்.
இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கைகளுக்கு “Prime Minister’s Stakes - 1952” (பிரதமர் சமர்) என்கிற தலைப்பிலான 18பக்கங்களைக் கொண்ட நூல் பலரது கைகளுக்கு கிட்டியது. அது ரோனியோவில் பதிப்பிக்கப்பட்ட சொற்பப் பிரதிகளே. அதில் டீ.எஸ். சேனநாயக்கவின் இறப்பைத் தொடர்ந்து நிகழ்ந்த பல சம்வங்களை குறிப்பிட்டு அவை சதி முயற்சிகளே என்று நிறுவ முற்படும் ஆவணமாக வெளியிடப்பட்டிருந்தது. இதை வெளியிட்டவர் யார் என்று அதில் குறிப்பிடாவிட்டாலும் சேர் ஜோன் கொத்தலாவலவால் வெளியிடப்பட்டது என்பதை பலரும் அறிந்திருந்தனர்.
வோஷிங்டனிலிருந்த இலங்கை தூதுவரகத்தில் இருந்து கொத்தலாவலவுக்கு ஒரு அவசரத் தந்தி வந்து சேர்ந்தது. டட்லி சேனநாயக்கவின் பெயரில் வந்த அந்த தந்தியில் “பிரதமர் சமர்” நூலை நீங்கள் எழுதியதன் மூலம் நீங்கள் இதற்கு மேலும் அமைச்சுப் பதவியை வகிக்கத் தகுதியில்லாததனால் உங்கள் பதவி விலகல் கடிதத்தை வோஷிங்டன் தூதுவராலயத்தின் மூலம் இரகசியத் தந்தியாக பிரதமருக்கு அனுப்பி வைக்கும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.
கடிதத்தின் இறுதியில் “இத்தகைய நடவடிக்கையை எடுப்பதையிட்டு வருந்துகிறேன்” என்று முடிக்கப்பட்டிருந்தது.
அதை உன் “கு..”வில் சொருகிக்கொள்:”
“என்னது இராஜினாமாவா... அதை எடுத்து உன்னுடைய “கு..”வில் சொருகிக்கொள்:” என்று கத்தினார்.
“பிரதமர் அவர்களே!
உங்கள் தகவல் கிடைத்தது. அதை சுற்றி உங்கள் ..... வைத்துக்கொள்ளுங்கள்” என்று கொத்தலாவல பதில் அனுப்பினார்.
கொத்தலாவல உடனடியாக நாடு திரும்பி டட்லியை சந்தித்தார். ஒரு அறிக்கையும் வெளியிட்டார். “பிரதமர் சமர்” நூல் பற்றி பிரதமருடன் உரையாடினேன். அந்த நூலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எனது விளக்கத்தை பிரதமர் ஏற்றுகொண்டார்.”
இருந்தாலும் அதன் பின்னர் சில காலத்துக்குப் பின் கொத்தலாவல தனது சுயசரிதையை 1956 இல் எழுதி வெளியிட்டார். “ ஆசியாவின் பிரதமரொருவரின் கதை” (‘An Asian Prime Minister’s Story) என்கிற பேரில் எழுதிய அந்த நூலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
“தலைவர் என்னை விலக்கிவிட்டு அவரின் மகன் டட்லியை வாரிசாக பிரகடனப்படுத்தியதும் எனக்கு ஏற்பட்ட அயர்ச்சியை எண்ணிப்பாருங்கள். அது பொய்யென்று மட்டும்தான் நான் சொல்ல முடியும். நான் இந்தளவு நம்பியிருந்த ஒரு தலைவர் இந்தளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டிருப்பார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது” என்று அந்த நூலில் கூறும் அவர் இன்னொரு இடத்தில்...
“நான் பக்கசார்பற்று அந்த சம்பவத்தை நினைக்கையில் டீ.எஸ். அத்தகைய ஒரு பரிந்துரையை செய்திருக்க மாட்டார் என்றே நான் நம்புகிறேன்.”
ஜோன் கொத்தலாவல “சிரிகொத்த” என்கிற பெயரில் இருந்த தனது வீட்டை ஐ.தே.கவுக்கு எழுதிவைத்துவிட்டு இறந்தார்.
இவை எப்படி இருந்தாலும் டட்லி ஆட்சியமைத்தாலும் அந்த ஆட்சி 13 நாட்களைத் தாண்டவில்லை. “எனக்கு இப்போது வேண்டியதெல்லாம் மக்களின் என்னத்தை நாடிபிடித்தறிவதே. ஆகவே நான் மக்களிடம் செல்லப் போகிறேன்” என்று கூறி அரசாங்கத்தைக் கலைத்தார் டட்லி. ஒரு புறம் ஜோன் கொத்தலாவல போன்றோரின் நெருக்குதல், இன்னொரு புறம் பண்டாரநாயகவின் புதிய கட்சி சவால் என்பனவற்றின் மத்தியில் வாரிசு என்பதால் தான் தனக்கு இந்தப் பதவி கிடைத்தது என்கிற அவமானத்தை சரிசெய்ய ஒரு வாய்ப்பாக ஆக்கிக்கொள்ளலாம் என்று அவர் தேர்தலுக்குத் தயாரானார். 1952 மே 24-30 வரை தேர்தல் நடந்தது.
அந்தத் தேர்தலின் மூலம் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற முதல் அரசாங்கமாக டட்லி அரசாங்கம் ஆட்சியமைத்தது. ஆனால் அந்த ஆட்சியை ஒன்றரை வருடம் கூட டட்லியால் தக்கவைக்க இயலாமல் போயிற்று. 1953இல் நிகழ்ந்த ஹர்த்தால் போராட்டம் நாட்டையே உலுக்கியது. அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த பிரிட்டிஷ் கடற்படைக் கப்பலில் நடத்தியது அரசாங்கம் ஓகஸ்ட் மாதம் நடந்த ஹர்த்தாலில் 12பேர் கொல்லப்பட்டார்கள். இறுதியில் ஒக்டோபர் 12ஆம் திகதி டட்லி பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார். போக்குவரத்து அமைச்சராக இருந்த சேர் ஜோன் கொத்தலாவல பிரதமராக பதவியேற்றார். அடுத்த தேர்தல் 1956ஆம் ஆண்டு நிகழ்வதற்குள் இலங்கையின் இனத்துவ அரசியல் பெரும் வீச்சுடன் மேலெழுந்தது. 1956இல் SWRD பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றது. ஆனால் அந்த ஆட்சியும் முழுமைபெறவில்லை. பண்டாரநாயக்க 1959இல் பிக்குவால் கொல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு மார்ச்சில் தேர்தல் நடந்தது. மொத்தத்தில் 151 உறுப்பினர்களில் 50 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஐ.தே.க அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்கிற அடிப்படையில் ஆட்சியை அமைத்துக்கொண்டது. ஆனாலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை எதிர்க்கட்சிகளிடமே இருந்தது. 1960 ஏப்ரல் 22ந் திகதி சிம்மாசனப் பிரசங்க வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 93 வாக்குகளும் அளிக்கப்பட்டதனால் அரசாங்கம் தோல்வி கண்டது. விரைவிலேயே இன்னொரு தேர்தலையும் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது அரசாங்கம். 1960 யூலையில் மீண்டும் பொதுத்தேர்தல் நடந்தது. இடதுசாரிகளையும் இணைத்துக்கொண்ட சிறிமா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சி அமைக்கப்பட்டது. ஆனால் அந்த ஆட்சியையும் முழுமை பெறுமுன்னரே 1964 ஆம் ஆண்டு நவம்பரில் சிம்மாசனப் பிரசங்கத்தின் போது ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சிறிமாவா – டட்லியா
இந்த சந்தர்ப்பத்தில் தான் அரசாங்கமில்லாத இன்னொரு நிகழ்வுக்கும் இலங்கை இரண்டாவது தடவையாக முகம்கொடுத்தது.
“அம்மையார்! நீங்கள் பதவி விலகவேண்டாம் எதிர்வரும் 10 நாட்களில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து நம்பிக்கையை உறுதிபடுத்திவிடலாம்" என்று கொல்வின், என் எம் பெரேரா போன்ற தலைவர்கள் ஆலோசனை கூறினார்கள். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க போன்றோர் இராஜினாமா செய்துவிட்டு மக்கள் தீர்ப்புக்கு இடமளிப்போம் என்றார்கள். பதவிவிலகி அதிகாரத்தை ஒப்படைக்கும்படி ஐ.தே.கவினர் வீதிகளில் இறங்கினர். அதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் அலரி மாளிகைப் பாதுகாப்பதற்காக கூடியிருந்தனர். ஐ.தே.கவினர் கூட்டங்கள் ஊர்வலங்களை நடத்தியதுடன் சில இடங்களில் கைகலப்புகளும் ஏற்பட்டன.
சிறிமா அம்மையார் பதவிலகவும் தயார் இல்லை. ஐ.தேக.வினர் பின்வாங்கவும் இல்லை. இந்த சூழ்நிலையில் அதிகாரம் ஆளுநரின் கரங்களுக்குச் சென்றது. அத்தகைய சூழ்நிலைகளில் அவரே பிரதமரின் அதிகாரங்களையும் கொண்டிருப்பார்.
இது பற்றி பிறட்மன் வீரகோன் (இலங்கையின் வரலாற்றில் அரை நூற்றாண்டுகாலம் பிரதமர்கள், ஜனாதிபதிகள் உட்பட 9 அரச தலைவர்களுக்கு செயலாளராக இருந்த சிவில் அதிகாரி அவர்) எழுதிய “Rendering Unto Caesar” என்கிற நூலில் இந்த சம்பவத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.
“இதன் போது பாக்குவெட்டிக்கிடையில் சிக்கியது போல சிக்கியிருந்தவர் ஆளுநர் கோபல்லாவதான். ஒரு வகையின் அவர் சிறிமா அம்மையாரின் உறவினர். இன்னொரு பக்கம் அவர் நாட்டின் ஆளுநர். அப்படியான ஒரு சூழ்நிலையில் தான் அவர் அம்மையாரைச் சந்தித்தார்.
“நான் உங்களை இப்போது சந்திப்பது ஒரு ஆளுநராக மட்டுமல்ல, உங்களுக்கு நெருங்கிய வயதில் மூத்த உறவினராகவும் தான். சுருக்கமாகக் கூறிவிடுகிறேன். நாட்டுச் சூழ்நிலையை மேலும் சிக்கலுக்குள்ளாக்காமல் உடனடியாக பதவியிலிருந்து விலகுங்கள்.”
அந்த சந்திப்பின் பின் தான் பிரதமர் இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டார். சில நாட்களாகத் தொடர்ந்த அரசாங்கமற்று நாடு இருந்த அந்த சிக்கலான சூழல் அத்துடன் நிறைவுக்கு வந்தது.
இவர்கள் முழுமையாக ஆண்டதில்லை
ஆக இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து டீ.எஸ்.சேனநாயக்க, டட்லி, பண்டாரநாயக்க, சிறிமா ஆகியோர் வரிசையாக எவரும் ஏறத்தாழ 18 ஆண்டுகளில் முழுமையான ஆட்சிகாலத்தை எவருமே ஆளவில்லை. அதுவரையான அனைவரது ஆட்சியும் இடையில் முறிந்த ஆட்சிகள் தான்.
அரசாங்கம் இன்றியிருந்த அந்தக் காலப்பகுதிக்குப் பின் இப்போது தான் ஒக்டோபர் 26க்குப் மைத்திரிபால சிறிசேனவால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் நெருக்கடி மீண்டும் அந்த நிலையை ஏற்படுத்தியது. ஆனால் இம்முறை இரு தரப்பும் ஆட்சியை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று விடாப்பிடியாக இருந்த நிலையில் நீதிமன்றம் தலையிட்டு ஆட்சி சட்டப்படி யாருக்கு உரியது என்று தீர்ப்பு வழங்கி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
நன்றி - தினக்குரல்
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...