Headlines News :

“சாதியூறிய மொழி” - என்.சரவணன்


ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய “இலங்கைச்சரித்திர சூசனம்” என்கிற நூலைக் காணக் கிடைத்தது. இந்த நூல் 1883 இல் வெளியிடப்பட்டிருக்கிறது. 1903 இல் யாழ்ப்பாணத்தில் நாவலர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இரண்டாம் பதிப்பு மாத்திரம் இப்போது காணக்கிடைகிறது. ஈழத்து எழுத்தாளர், முதுபெரும் அறிஞர் வரிசையில் வைத்து போற்றப்படுபவர் அவர். பாட நூல்களிலும் கூட அவரைப் பற்றி கற்பிக்கப்படுகின்றன. சமயம், தமிழ் இலக்கியம், இலக்கணம், இலங்கை, தென்னிந்திய வரலாறு பற்றியெல்லாம் எழுதிய அவர் ஆங்கில-ஆங்கில-தமிழ் அகராதியும் எழுதியிருக்கிறார். அதுபோல அவர் “அபிதான கோஷம்” (The Tamil Classical Dictionary - 1902) ஒன்றையும் எழுதியிருக்கிறார். அதை அன்றைய தமிழ் லெக்சிகன் என்றும் கொள்ள முடியும்.

“இலங்கைச்சரித்திர சூசனம்”  ஆய்ந்துகொண்டிருந்த போது ஒரு விடயம் கண்ணில்பட்டது. அது “சாதி” என்கிற பதப்பயன்பாடு பற்றியது.
“இயக்கரும் நாகரும் தற்காலத்துச் சிங்களவரையும் தமிழரையும் போன்று இரு வேறு சாதியினராயிருந்திருக்கலாமென்றன்றி, அவர் இன்னசாதியினர், இன்னபாஷையினர் என்று துணிந்தற்கிடமில்லை.”
என்று அந்நூலின் 5 ஆம் பக்கத்தில் காண முடிந்தது. தமிழரையும், சிங்களவரையும் அவர் சாதியாகத் தான் குறிக்கிறார், சாதியாகத்தான் அடையாளப்படுத்துகிறார் என்று பொருளில்லை. ஆனால் அவருக்கு ஒரு சமூகக் குழுமத்தை அடையாளப்படுத்துவதற்கு “சாதி” என்கிற பதம் எப்படி மூளையில் நுழைகிறது என்பது தான் நமது மண்டைக்குள் குடைகிற விடயமாக இருக்கிறது.

ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை பல நூல்களை எழுதியிருக்கிற போதும் “இலங்கைச்சரித்திர சூசனம்” தான் அவரின் முதலாவது நூலாகக் காண முடிகிறது. இந்த வரிசையில் அவரின் “அபிதான கோஷம்” (தமிழ் கலைக்களஞ்சியம்) நூலில் “சாதி” என்பதற்கு அவரின் வரைவிலக்கணத்தை அறிய ஆவலாக இருந்தது. தமிழ் மொழியில் வெளிவந்த முதல் கலைக்களஞ்சியமாக அறியப்படுகிறது இது. அதை முடிப்பதற்கு அவருக்கு 16 ஆண்டுகள் எடுத்ததாக நூலின் முகவுரையில் குறிப்பிடுகிறார். தமிழ் எண்களின் படி தான் பக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்நூலில் பல இடங்களில் அவர் “சாதி” என்றும், இன்னும் வேறு இடங்களில் “ஜாதி” என்றும் பயன்படுத்தியிருக்கிறார்.

அது மட்டுமல்ல அதில் பல தனிநபர்களைப் பற்றி அவர் சுருக்கமாக எழுதும் இடங்களிலெல்லாம் அவர்களின் சாதி இன்னது என்பதை அடையாளப்படுத்தத் தவறவில்லை. ஓரிரு வரிகளில் விளக்கும் விடயத்தில் சாதிய அடையாளம் அந்தளவு ஏன் அவசியப்படுகிறது என்கிற கேள்வி வலிமையாக எழுகிறது. உதாரணத்திற்கு

ஏகன் - ஏகம்பவாணனை அளவிறந்த திரவியத்தோடு தன்னிடத்து ஒப்பித்திறந்த ஏகமபவாணன் தந்தைசொல்லை அற்பமே னும் வழுவாமற்காத்த சிறுவனை முற்ப்படவைத்த பண்ணையாள். இவன் சாதியிலே பறையனாயினும் எசமான் பக்திற் சிறந்தவன். (பக்கம் - ௪௮  - அதாவது 48)

கணியன்பூங்குன்றனார் - பேர்யாற்றருகேயுள்ள பூங்குன்று என்னுமூரிற்பிறந்து விளங்கிய புலவர். இவர் உக்கிரப்பெரு வழுதி காலத்துக்கு முன்னுள்ளவர். இவர் சாதியிற் கூத்தர். (பக்கம் – ௫எ  - அதாவது 57)

கலியுகம்: என்பதற்கு அவர் தரும் விளக்கத்தில் “சாதியாசாரம் சமயாசாரம் தலை தடுமாறப் பெற்வர்களாய்ப் பிறந்துழல்வார்கள்” என்கிறார். (பக்கம் – ௬௬  - அதாவது 66) அந்த நூலில் அவர் எழுதிய முன்னுரையில் காலத்தைக் “கலியுகம்” என்று தான் அழைக்கிறார் என்பதையும் கருத்திற்கொள்க.

காவிரிப்பூம்பட்டினத்துக்காரிக் கண்ணனார் - இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர். .... இவர் சாதியில் வணிகர். (பக்கம் 75)

சிவப்பிரகாசசுவாமிகள் : .... சாதியில் வீரசைவர். (பக்கம் - 147)

நேசநாயனார் - சாதியிற் சாலியராகிய இச்சிவபக்தர் (பக்கம் - 281)

பெருந்தேவனார் - இவர் சாதியிலே வேளாளர் (பக்கம் - 319)

ஒட்டக்கூத்தர் - ...இவர் ஜாதியிற் கைக்கோளர். (பக்கம் - 49)

கணிகன் - ... திருதராஷ்டிரன் மந்திரிகளுள் ஒருவன். இவன் ஜாதியில் துவிஜன். (பக்கம் - 55)

காளிதாசன் - .... ஜாதியில் அந்தணன். (பக்கம் - 79)

சுப்பிரபை - முதல் நாபாகன் பாரி. இவள் ஜாதியில் வைசிய ஸ்திரி. (பக்கம் - 158)

சேனாவரையர் - ஜன்மநாடு பாண்டிநாடென்றும் ஜாதியினால் அந்தணர் என்றுங் கூறுவார்கள். (பக்கம் - 171)

ஜரிதை - மந்தபாலன் பாரி. இவள் சாரங்க ஜாதிப்பெண். (பக்கம் - 179)

பெருங்குன்றூர்கிழார் - ...ஜாதியால் வேளாளர் (பக்கம் - 318)

விசுவாமித்திரன் - ... இவர் ஜாதியில் ஷத்திரியர். (பக்கம் - 374)

இப்படியெல்லாம் சாதியை அடையாளப்படுத்துபவர் “ஜாதி” என்பதற்கு பெரிய வரைவிலக்கணம் கொடுக்கிறார். அதன் இறுதியில் “இச்சாதிக்கிரமங் கூறுமாற்றால் இவர் உயர்ந்தோர் இவர் தாழ்ந்தோரென்பது எமதுமதமன்று” என்று தப்பிவிட முயல்வதைக் காணலாம். (பக்கம் – ௧௮ ௰ - அதாவது 180).


நாவலரின் மிகப்பெரும் அபிமானியான முத்துத்தம்பிப்பிள்ளை சென்னையில் இருந்து தொழில் செய்தபடி “சத்தியாபிமானி” என்கிற பத்திரிகையையும் நடத்தி, சொந்தமாக அச்சுகூடத்தையும் தொடங்கி சில நூல்களையும் வெளியிட்டார். 1893இல் யாழ்ப்பாணம் திரும்பி ஆறுமுகநாவலர் வாழ்ந்த வண்ணார்பண்ணை வீட்டை சொந்தமாக வாங்கி அதற்கு “நாவலர் கோட்டம்” என்றும் பெயரிட்டு நாவலர் அச்சுக் கூடத்தையும் ஆரம்பிக்கிறார். அந்த அச்சுக் கூடத்தில் தான் பின்னர் அவரின் முக்கிய நூல்கள் வெளிவந்தன. முத்துத்தம்பிப்பிள்ளையின் அபிமானம் நாவலரின் மீதான அபிமானத்தையும், தமிழபிமானத்தையும் சார்ந்ததா அல்லது அது சாதியபிமானத்தையும் சார்ந்தது தானா என்கிற ஐயம் நமக்கு வரவே செய்யும். காரணம் அவரின் எழுத்தில் ஊறிப்போயிருந்த “சாதி”ய மொழி. இதை அக்காலத்து எழுத்துச் சூழலோடு ஒப்பிட்டு பார்ப்பது முக்கியம் என்கிற ஒரு வாதத்தையும் சிலர் முன்வைக்கக் கூடும். அதே காலத்தில் வாழ்ந்த பல படைப்புகளை செய்தவர்களிடத்திலும் இதைக் காண முடியும் என்கிற வாதத்தை வைக்க முடியும்.

ஆனால் ஒன்றை மறத்தலாகாது. ஓலைச்சுவடிக்கு மாற்றாக எழுத்து என்பது கடுதாசிகளில் பதியத் தொடங்கிய காலமது. அச்சு இயந்திரம் அறிமுகமாகி மெல்ல மெல்ல நூல்கள் அச்சுக்கு வந்து பரவலானவர்களின் கைகளுக்கு கிடைக்கப் பெற்ற காலமும் கூட. அப்படியென்றால்  எழுத்து, மொழி அனைத்தும் இவர்களிடத்தில் தான் இருந்தது. இவர்களால் தான் தகவல் பதிவு செய்யப்பட்டதும், கருத்து பதிவுசெய்யப்பட்டதும். இன்னொருவகையில் கூறுவதென்றால் அன்றைய கருத்துவாக்கச் செல்வாக்கும் அதனை பதிவுசெய்யும் வல்லமையும் இவர்கள் போன்றவர்களிடத்தில் தான் இருந்தது. ஆறுமுகநாவலர் மாத்திரமல்ல முத்துத்தம்பிப்பிள்ளை போன்றவர்களும் தான் சாதிய மொழிவழக்கை அன்றே எழுத்தினூடே ஜனரஞ்சகப்படுத்தியிருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இன்றும் யாழ்ப்பாண மொழிவழக்கில் சாதாரண அரிசியை தரம் பிரிக்கக் கூட

இது இன்ன சாதி அரிசி..,
என்ன சாதி மீன் இது...?
இது இன்ன சாதி கார்..,

என்றெல்லாம் சகலதுக்கும் வகைப்படுத்தும் பழக்கத்தை காண முடியும். இப்படி அவர்களின் பேச்சு வழக்கில் “சாதி” மொழி அவர்களுக்கே தெரியாமல் கொலோச்சியிருப்பதை அவர்கள் அறிந்துகொண்டதில்லை. மிகவும் அநாயசமாக, சர்வசாதாரணமாக அது இன்றும் பேச்சுமொழியில் கலந்திருப்பதை அன்றாடம் கவனிக்க முடிகிறது. ஏனென்றால் சந்ததி சந்ததியாக கடத்தப்பட்டுவரும் பேச்சுவழக்கு அது.

நமது மொழி வழக்கில் மனைவி கூட “பெண்+சாதி” தான்

இதைத் தான் பெரியார்
நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்,
நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்,
நம் அரசாங்கம் - சாதி காப்பாற்றும் அரசாங்கம்,
நம் இலக்கியம் - சாதி காப்பாற்றும் இலக்கியம்,
நம் மொழி - சாதி காப்பாற்றும் மொழி,
என்றார்.

ஜாதி என்பது சம்ஸ்கிருத சொல். சாதி என்பது அதன் தமிழ் மருவல் தான். சமஸ்கிருதத்தில் ஜாதி (Jati)  என்பதன் நேரடி பொருள் “பிறப்பு” என்கிறது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அகராதி. பிறக்கும் போதே ஒவ்வொருவரும் சாதியோடுதான் பிறக்கிறார்கள் என்கிறது இந்துமத வர்ணாசிரம தர்மம். சாதி பிறப்பாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்றும் சாதி என்பது தெரிவுக்குரிய ஒன்றல்ல என்றும் அது போதிக்கிறது. அப்படியான சாதியின் படிநிலைப்படியே ஒவ்வொருவரினதும் நிலையும், தரமும், கௌரவமும் தீர்மானிக்கப்படுவதாகவும் சொல்கிறது மனுதர்ம சாஸ்திரம்.

இந்த அடிப்படை கருதுகோளிலிருந்து தான் சாதி என்கிற பதம் மக்கள் மத்தியில் ஆற்றிவருகிற செல்வாக்கையும் புரிந்துகொள்ளவேண்டும்.

முத்துத்தம்பிப்பிள்ளை போன்றோரின் நூல்களிலும் நூற்றாண்டுக்கு முன்னர் சமூக வகைபடுத்தலுக்கும், பொருள் வகைபடுத்தலுக்கும் “சாதி” என்கிற சொல்லுக்கு ஊடாகவே அணுகியிருக்கிறார்கள், அதையே நிறுவியிருக்கிறார்கள், ஜனரஞ்சகமாக நிருவனமயப்படுத்தியிருக்கிறார்கள் சரி. இன்றும் அதை ஏன் காவ வேண்டும், ஏன் அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும்.

“சாதி” என்பது வெறும் சொல் மட்டுமல்ல. அடக்குமுறை வடிவத்தின் “பொருள்”, பாரபட்சத்தினதும், சமூக அநீதியினதும், அநியாயத்தினதும் குறியீடு. நமது மொழி வழக்கிலிருந்தும் சாதியை சுயநீக்கம் செய்வதும் நமக்கான பணி தான் நண்பர்களே.

டிசம்பர் 2018 - காக்கைச் சிறகினிலே சஞ்சிகையில் வெளிவந்தது.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates