Headlines News :
முகப்பு » » கொள்கை வாக்குறுதி நிஜமாகிறது : தோட்ட தொழிலாளர்களுக்கான காணி உரித்து வழங்கல். - எம்.வாமதேவன்

கொள்கை வாக்குறுதி நிஜமாகிறது : தோட்ட தொழிலாளர்களுக்கான காணி உரித்து வழங்கல். - எம்.வாமதேவன்

 எம்.வாமதேவன்
-ஆலோசகர்- மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு


முகவுரை

பெருந்தோட்ட சமூகத்தினரின் வீடு மற்றும் நில உரிமைக்கான கோரிக்கையானது மிக நீண்டகாலமாக இருந்து வருகின்ற ஒன்று. அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் இந்த மக்களுக்கான வீடு மற்றும் நில உரிமைக்காக மிக நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.வீட்டுரிமை குறித்து முன்னைய அரசாங்கங்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளன. எனினும் இவை வீட்டு நிர்மாணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததே அன்றி வீட்டு உரிமைக்கு அல்ல. முதன்முறையாக 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னால் நூறுநாள் நிகழ்ச்சி திட்டத்தின் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நில உரிமை வழங்கி லய காம்பராக்களுக்கு பதிலாக பொருத்தமான வீடுகளை வழங்குதல் என்ற ஒரு நடவடிக்கை சேர்த்துக்கொள்ளப்பட்டது. இக்காலப்பகுதியில் தோட்டங்களில் வாழும் சட்ட ரீதியான குடியிருப்பாளர்களுக்கு ‘பசுமை பூமி’ என்ற வசிப்பிட உரித்து வழங்கப்பட்டது. எனினும் இந்த செயன்முறை தொடரப்படவில்லை. 2016 செப்டேம்பர் மாதத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரின் முயற்சியால் பெருந்தோட்ட கைத்தொழில்கள் மற்றும் காணி அமைச்சர்களோடு இணைந்து சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் மூலமாக தோட்டத்தில் வாழும் தொழிலாள குடும்பங்களுக்கு 7 பேர்ச் நிலத்திற்கான தெளிவான காணி உறுதி வழங்குவதற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் பெப்ரவரி மாதம் 9ம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டுவள்ளி தோட்டத்தின் பெங்கட்டன் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 71குடியிருப்பாளர்களுக்கு தெளிவான காணி உறுதி வழங்கப்படவுள்ளது. இவ்வழங்களானது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகவும் பெருந்தோட்ட சமுதாயத்தின் நிலை மாற்றத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதலாம்.

பின்புலம்
பெருந்தோட்ட சமூகமானது பிரதானமாக தேயிலையை மையப்படுத்திய பொருளாதார முறைமைக்குள் உட்படுத்தப்பட்டு அடைபட்ட ஒன்றாக விபரிக்கப்பட்டது. உழைப்பு செறிவுமிக்க இவ்வுற்பத்தி முறைமையில்     வசிப்பிட தொழிலாளர்கள் ஒரு முற்தேவையாக உருவானார்கள். எனவே பெருந்தோட்ட நிர்வாகம் தொடர்ந்து தொழிலாளர் நிரம்பலை பேணுவதற்காக அவர்களுக்கு எல்லா வசதிகளையும் மிக குறைந்த மட்டத்தில்  வழங்கி வந்தது. இந்த வகையில் அடைபட்ட தொழிலாளர்கள் ஏனைய துறைகள் மற்றும் சமூகங்களோடு அதிகளவில் தொடர்பற்று சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இலங்கை சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்பட்டு அதனை தொடர்ந்து வாக்குரிமையும் பறிபோனது. இதனால் இவர்கள் அரசியல் ரீதியாக 40 ஆண்டுகளாக பலமற்று காணப்பட்டனர். எனவே தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தில் எல்லாவற்றிற்கும் தங்கியிருக்கவேண்டிய ஒரு நிரப்பந்தத்துக்கு உட்பட்டனர். அரசாங்கத்தால் வழங்கப்படும் பொதுச்சேவைகள் இவர்களுக்கு அரசியல் பேரம்பேசும் சக்திக்கேற்ப மிக மெதுவாகவே சென்றடைந்தது. எனவே இந்த மக்கள் தேசிய நீரோட்டத்தின் ஒன்றிணைவது ஒரு பொதுவான கோரிக்கையாக உருவானது. தேசிய நீரோட்டத்தில் இவர்கள் இணைவதற்கு பிரதான பிரச்சினையாக இருப்பது வீட்டு உரிமையாகும். இவ்வுரிமை இருக்கும் நிலையில் கட்டுண்ட தொழிலாளர்கள் சுதந்திர தொழிலாளராக மாறி வீடுகளை உரிமையாக்கி கொண்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்வது ஒரு பிரச்சினையாக இருந்தது. மேலும் தோட்டப்புறத்தில் காணப்படும் குறைந்த மட்டத்திலான கல்வி மற்றும் திறன்கள் இந்த சமுதாயத்தின் மேல்நோக்கிய மற்றும் பரவலாக்கப்பட்ட அசைவினை மட்டுப்படுத்திய. தொடர்ச்சியாக இலவசமாக வீடு வழங்குதல் இத்தொழிலுக்கான தொழிலாளர் நிரம்பலை தொடர்ந்து வழங்குவதில் அதிக அளவிற்கு வசதிப்படுத்தியது.

கொள்கை வாக்குறுதிகள்
கடந்த காலங்களில் முன்னைய அரசாங்கங்கள் வீட்டுரிமை குறித்து பல கொள்கை உறுதிமொழிகளை வழங்கியுள்ளன. 2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட மகிந்த சிந்தனை முதன் முறையாக காணியுரிமை பற்றி பின்வருமாறு கூறுகின்றது.
'ஒவ்வொரு தோட்ட தொழிலாளர்களுக்கும் காணி துண்டொன்றை வழங்குவேன் இத்தகைய வலுவூட்டல் ஊடாக சொத்துரிமை உள்ள ஏனைய குடிமகனை போல சொந்த காலில் சுயமாக நிற்பதற்கு தோட்ட சமுதாயத்திற்கு நான் ஆதரவு வழங்குவேன்' 'தற்போது தோட்டதொழிலாளர்கள் வாழுகின்ற நிலங்களுக்கு சுதந்திரமாக உரித்துகளை வழங்குவதற்கு கொள்கை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.'

எனினும் 2006-2010ம் ஆண்டு காலப்பகுதியில் இதை நிறைவேற்றுவதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீண்டும் 2010ம் ஆண்டு  எதிர்காலத்துக்கான தொலைநோக்கு ஆவணத்தில் இந்த வாக்குறுதி பின்வருமாறு எடுத்துரைக்கப்பட்டது.'என்னுடைய பிரதான நோக்கங்களில் ஒன்று தோட்ட சமுதாயத்தை குடியுருப்புகளை சொந்தமாக கொண்ட சமூகமாக மாற்றுவதாகும். இதன்படி தற்போது லயன் அறைகளில் வாழுகின்ற ஒவ்வொரு தொழிலாள குடும்பமும் 2015ம் ஆண்டளவில் அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒரு புதிய வீட்டிற்கான பெருமிதம் மிக்க சொந்தகாரர்களாக மாற்றப்படுவர். ஆனால் 2010-2015ம் ஆண்டு காலப்பகுதியில் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அத்தோடு தேசிய திட்டமிடல் திணைக்களம் தயாரித்த 2006-2016 ஆண்டுகளுக்குரிய அபிவிருத்தி தோற்ற சட்டகத்தில் காணப்படுகின்ற 'தோட்ட சமுதாயத்திற்கு புதிய வாழ்வு' என்ற பகுதியில் சுகாதாரம், கல்வி, வீடுகள், பாதை, நீர்வழங்கள் போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் வீடுகளின் உரிமை பற்றி எவ்விதமான குறிப்பும் இடம்பெறவில்லை.

இதே மாதிரியான வாக்குறுதி தற்போதைய அரசாங்கத்தினாலும் வழங்கப்பட்டது. மாண்புமிகு பிரதம மந்திரி 2015ம் ஆண்டு   நவம்பரில் பாராளுமன்றத்தில் வெளியிட்ட கொள்கை அறிக்கையில் தோட்ட தொழிலாளர்களுக்கான நிலவுரிமை பற்றி விசேடமாக குறிப்பிட்டுள்ளார். இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய தவணைக்கால திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட முக்கிய விடயம் கிராமிய மற்றும் தோட்டத்துறைகளுக்கு நிலவுரிமையை உறுதிசெய்தல் ஆகும். மேலும் இவ்வறிக்கையில் நிலவுரிமையை பற்றி குறிப்பிடும் போது அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.'தோட்ட லயன்களில் 10 வருடங்களுக்கு மேற்பட்டு வாழுகின்ற தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு வீடும் சிறிய காணிதுண்டும் வழங்கப்படும்.'

2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இந்த கொள்கை அறிக்கையானது மீண்டும் வலியுறுத்தப்பட்டு, 229வது பந்தியில் அரசாங்கத்துக்கு சொந்தமான வீடுகளிலும் தோட்டபுறங்களில் உள்ள வீடுகளில் 10 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர்களுக்கு சொந்த உரிமை வழங்கப்படும். மேலும் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. 'பெருந்தோட்டத்துறை தொழிலாளர் குடும்பங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு முக்கியமான பங்கினை வகிக்கின்றனர். அவர்கள் லயன்களில் வாழுகின்ற நிலைமைகளில் இருந்து அவர்களை விடுவிக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7பேர்ச் நிலத்திற்கு தெளிவான காணி  உறுதி வழங்கப்படும்.' கடந்த 10ஆண்டுகளாக முன்னைய அரசாங்கங்களால் நிறைவேற்றப்படாமல் போக தற்போது இந்த வாக்குறுதி நிஜமாகக்கூடிய நிலை தோன்றியுள்ளது.

கொள்கைகள் நிறைவேற்றப்படாமைக்கான காரணம்
ஏன் இந்த காணியுரிமையானது இவ்வளவு காலம் இழுத்தடிக்கப்பட்டது என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும். இதற்கு பல காரணங்கள் கொடுக்கப்பட்டாலும் முக்கியமானவை மூன்று ஆகும். முதலாவது பெரும்பான்மை கட்சிகளின் அரசியல் நிலைபாடுகள். இரண்டாவது பெருந்தோட்ட கைத்தொழிலின் எதிர்ப்புகள.; மூன்றாவது சமுகத்தின் அரசியல் தலைமைகளில் காணப்பட்ட குறைவான அக்கறை. பெரும்பான்மை கட்சிகள் இம்மக்களின் இந்திய அடையாளம் காரணமாக எழுந்த அரசியல் எதிர்ப்புணர்வாகும். இதன் காரணமாகவே அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்பட்டதோடு,  இச்சமூகத்தின் அரை வாசி எண்ணிக்கையினர் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் இந்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தேசிய அரசியல் இச்சமூகத்தை உள்வாங்கி கொண்டமையானது மிக மெதுவாகவே இடம்பெற்றது. நிலவுரிமையோடு கூடிய பூரண உரிமையுள்ள மக்களாக இவர்களை கருதுவது பிரதான கட்சிகளின் நிகழ்ச்சி நிரலில்2006 ம் ஆண்டு வரை இடம்பெற்றிருக்கவில்லை. இந்தநிலை பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து அரசாங்கத்தை அமைப்பதில் சிறுபான்மை கட்சிகளின் பங்களிப்பு மற்றும் சிறுபான்மை மக்களின் வகிபாகத்தின் முக்கியத்துவம் காரணமாக பெரும்பான்மை கட்சிகள் தங்களது நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டுவர நிர்பந்திக்கப்பட்டன.

பெருந்தோட்ட கைத்தொழில் துறையானது தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரித்து வழங்குதல் என்பது உசிதமான ஒன்றல்ல என கருதுகிறது. ஏனெனில் தொழிலாளர்கள் தங்களது சொந்த வீட்டில் வசித்துக் கொண்டு வேறு இடங்களில் வேலைகளுக்கு செல்ல முடியுமாக இருப்பதால் தோட்டத் தொழிலுக்கு தேவையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு அது தோட்டத்துறைக்கு பாதகமாக அமைந்துவிடும் என்பதாலாகும். அத்தோடு தோட்ட நிர்வாகம், வீட்டுக்கான காணி உறுதியை பெற்றுக்கொண்டதன் பின்னால் அவற்றை வெளியாருக்கு விற்பனை செய்ய முடியுமாதலால் வெளியாரின் உள்நுழைவு தோட்டங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என கருதுகிறது. அடுத்ததாக இந்தகாலப் பகுதியில் (2006-2016) அரசாங்கத்தோடு இணைந்து இருந்த இந்த சமூகம் சார்ந்த அரசியல் தலைமை கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை செயல் வடிவமாக மாற்றக்கூடிய பலமற்று காணப்பட்டமையாகும்.

காணி உரித்துரிமையின் முக்கியத்துவம்
காணி உரித்து வழங்களானது தோட்டங்களை கிராமமாக மாற்றுகின்ற செயன்முறைக்கு வழிவகுக்கும். தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி என்று முன்னர் அமைந்திருந்த அமைச்சின் பெயர் தற்போது தோட்ட வீடமைப்பு என்பது மலைநாட்டு புதிய கிராமங்கள் என மாற்றப்பட்டு இந்த அமைச்சுக்கு தோட்ட பிரதேசங்களில் புதிய கிராமங்களை உருவாக்குவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய கிராமமாக மாற்றப்படுவதற்கு முக்கிய முன் நிபந்தனையாக இருப்பது வீடுகளின் உரிமையாகும். இதன் அடிப்படையிலேயே புதிய கிராமங்கள் ஏனைய மரபு ரீதியான கிராமங்களோடு ஒரு சமநிலை அந்தஸ்தை பெறுவதோடு ஏனைய வசதிகளை பெற்று பட்டினங்களாக மாறுவதற்கு வழி ஏற்படும்.

ஏனைய துறைகளோடு ஒப்பிடும்போது தோட்டத்துறைக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற பொதுச் சேவைகள் முழுமையாக போய் சேருவதில்லை. அடிக்கடி எடுத்துக்காட்டப்படுகின்ற உதாரணம் பிரதேச சேவைகள் பற்றியதாகும். பிரதேச சபைகளின் சேவைகள் தோட்ட நிர்வாகத்தின் சம்மதத்துடனேயே வழங்கப்படக்கூடிய நிலை காணப்படுகின்றது. சொந்த உரிமையுள்ள வீடுகளை கொண்ட புதிய கிராமங்கள் அமைக்கப்படுமிடத்து பிரதேச சபையானது சுயமாக செயற்படக்கூடிய நிலை ஏற்படும். இதனை ஏனைய அரச நிறுவனங்களும் பின்பற்றக்கூடியதாக இருக்கும்.

சுதந்திரமான தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் சிறு நிலவுடமையாளர்களாக மாறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தோட்ட தொழிலாளர்களின் கூலி உயர்வு பிரச்சினையை தீர்க்கும் முகமாக தோட்டதுரைமார் சங்கத்தினர் 'வெளியாருக்கு வழங்குதல்'  என்ற மாதிரியை முன்வைத்துள்ளனர். இது தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றது. காணி உரித்தோடு சட்டரீதியான உரிமையை கொண்டுள்ள சுதந்திரமான தொழிலாளர்களுக்கு தோட்ட வேலைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது. 'வெளியாருக்கு வழங்குதல்' என்ற மாதிரியானது ஒரு நிலைமாறும் காலத்துக்கு பொருத்தமான ஒன்றாகும். இறுதியான மாதிரி என்பது அவர்களை சிறுவுடமையாளர்களாக மாற்றுவதே. இத்தகைய புதிய மாற்றங்களுக்குகேற்ப தோட்ட முகாமைத்துவ முறைமை மாற்றி அமைக்கப்படவேண்டிய ஒன்றாகும். இது அரசியல் மற்றும் சமூக ரீதியாக ஒரு உணர்வு மிக்க பிரச்சினையானது என்பதும் மனங்கொள்ளத்தக்கது.

பிரச்சினைகள்
தற்போது காணி உறுதி வழங்களானது தொழிலாளர் குடும்பங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் தோட்டங்களிலே தொழிலாளர் குடும்பங்களின் இருந்து வந்து சட்டரீதியாக வாழ்பவர்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களை வெளியே பெற்றுக்கொண்டு தோட்டங்களிலேயே தொடர்ந்து வாழுகின்றனர். பெற்றோர்களுடன் இருக்கும் இவர்கள் அவர்களது மறைவிற்கு பின்னால் எங்கே செல்வார்கள்? என்ற கேள்வி எழும்புகிறது. அடுத்ததாக தோட்ட உத்தியோகத்தர்கள் இவர்களுடைய எண்ணிக்கை குறைவாக இருப்பினும் பெரும்பான்மையோர் தோட்டங்களிலே வேர் கொண்டவர்கள். இவர்கள் வெளியாட்கள் அல்ல.

கடந்த காலத்தில் பல வீடமைப்பு திட்டங்களின் ஊடாக ஏறத்தாழ31ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 3900 பேர் கடன்களை பெற்று முழுமையாக அதனை மீள்செலுத்தியுள்ளனர். அத்தோடு பல வீடுகள் அமைச்சினது வழமையான வீடமைப்பு திட்டத்தின் படியும் இந்திய வீடமைப்பு திட்டம் என்பவற்றின் ஊடாக வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ்1098 வீட்டுடமையாளர்களுக்கு வசிப்பிட உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய பிரிவினரும், காணி உறுதியை பெறுவதற்கு உரித்துள்ளவர்கள் ஆவர் என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

சந்தை பொருளாதாரத்தின் வீடுகள் விற்பனை செய்வதன் மூலம் எழும் பிரச்சினை தவிர்க்க முடியாத ஒன்றாகும். இது பெரிய அளவில் இடம்பெறும்போது வெளியாட்களின் வருகை அதிகமாகி தோட்டங்களில் பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கலாம். ஒரு தூய காணி உறுதியில் விற்ககூடாது என நிபந்தனைகள் விதிப்பது என்பது மனித உரிமை மீறலாகும். ஆனால், இவ்விடயம் ஆராயப்பட வேண்டியவொன்றாகும்.

முடிவுரை
தோட்டப்புறங்கள் காணி உரித்துள்ள வீடுகளை கொண்ட புதிய கிராமங்களை உருவாக்கும் நோக்கமானது சவால்கள் நிறைந்த ஒன்றாகும். காணி உரிமை வழங்குதல் என்பது ஆரம்பம் மட்டுமே. இது சட்டரீதியாக உரித்துள்ள ஏனைய பிரிவுகளுக்கும் வழங்கப்படவேண்டும். இல்லையெனில், அது சமூகத்தில் பிரிவினைகளை ஏற்படுத்திவிடும். தோட்டங்களில் வீடமைப்புக்கு உகந்த காணிகள் அடையாளம் காணப்பட்டு, அவை சூழலுக்கு ஏற்றவையாக அங்கீகரிக்கப்பட்டு, உரிய பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு இவை அனைத்ததையும் உள்ளடக்கிய பெரும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இந்த நிகழ்ச்சி திட்டத்தில் மக்கள் மீது நம்பிக்கை வைக்கப்பட்டு அவர்களை ஆரம்பம் முதல் ஈடுபடவைக்க வேண்டும். நிதி வளங்கள் அமுலாக்கல் இயல்திறன், மக்களுடைய ஈடுபாடு, நிர்வாகம் மற்றும் குறிப்பாக அரசியல் தலைமைகளின் விருப்பத்தன்மை என்பவை விரும்பப்பட்ட நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு முக்கியமான தேவைகளாகும்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates