பண்டாரநாயக்க - சோல்பரி - டட்லி சேனநாயக்க |
சோல்பரி பிரபு தமிழர்களுக்கு நேர்ந்த அநீதிக்கு தானும் உடந்தையாகிப் போனதையிட்டு வருந்தி பிற்காலத்தில் சுந்தரலிங்கத்துக்கு எழுதிய கடிதமொன்ரை எழுதியிருக்கிறார். (அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பு பெட்டிச்செய்தியாக காணலாம்) அது ஒரு ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமல்ல ஆங்கிலேய ஆட்சியாளர்களால் கூட சகிக்க முடியாதுபோன தமிழர் அவலத்தைச் சொல்லும் முக்கிய ஆவணம். சோல்பரி அதில் இப்படி குறிப்பிடுகிறார்.
“சிங்கள தமிழ் சமூகங்களுக்கு இடையில் இந்தளவு கசப்பான பிளவு ஏற்படும் என்று நான் இலங்கையின் ஆளுநராக கடமையாற்றிய காலத்தில் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. தமிழ் மக்களை ஜோன் கொத்தலாவலவும் தமிழ் மக்களுக்கு சவுக்கைக் கொண்டு அடித்தார் என்றால், மறைந்த பண்டாராநாயக்கவோ தேளைக் கொண்டு கொட்டினார் என்றே கூற வேண்டும்.”
உண்மைதான் மாறி மாறி வந்த அத்தனை அரசாங்கங்களும், ஆட்சியாளர்களும் தமிழர் பிரச்சினையை அரசியல் பந்தாடி வந்திருக்கின்றனர். சென்ற வாரம் “மகேந்திரா ஒப்பந்தம்” பற்றி பார்த்தோம்.
1925 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் செய்துகொள்ளப்பட்ட மகேந்திரா ஒப்பந்தமும் அர்த்தமே இல்லாது போனது. இரண்டாவது தடவையாகவும் ஏமாற்றப்பட்ட சந்தர்ப்பம் அது. இதே காலத்தில் பண்டாரநாயக்க சமஷ்டி கோரிக்கையை வலியுறுத்தி வந்தபோதும் தமிழர் தரப்பில் அதற்கு ஆதரவு இருக்கவில்லை.
இலங்கைக்கு சிறந்த அரசியல் முறைமை சமஷ்டி தான் என்று பண்டாரநாயக்க தீவிரமாக கருத்து வெளியிட்ட காலம் அது. சிலோன் மோர்னிங் லீடர் பத்திரிகையில் அவர் 1926 மே மாதம் தொடர் கட்டுரைகளை (மொத்தம் 6 கட்டுரைகள் மே The Ceylon Morning Leader, May 19–June 30, 1926) எழுதி அதற்கான நியாயங்களை நிறுவினார். அது மட்டுமன்றி இந்தியாவின் சேர்ந்து கூட்டாட்சியாக இருப்பது இலங்கைக்கு பாதுகாப்பானது என்றார். ஆனால் இந்த கருத்தை தமிழர் தரப்பில் இருந்து ஜேம்ஸ் டீ ரத்னம் கடுமையாக எதிர்த்து வாதிட்டார். ஜேம்ஸ் டீ ரத்னம் இலங்கையின் தேர்ந்த அரசியல், வரலாற்று புலமையாளர். தொழிற்சங்கவாதி. பண்டாரநாயக்கவின் நெருங்கிய நண்பரும் கூட பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து “முற்போக்கு தேசியவாதிகள் கட்சி” (Progressive Nationalist Party) என்ற கட்சியை ஆரம்பித்தார். சமஷ்டி விடயத்தில் அக் கட்சியின் அங்கீகாரம் கூட கிடைத்தது. ஆனால் ரத்னம் போன்ற தமிழ் தலைவர்கள் அதனை ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் இருவரும் இந்த விடயத்தில் முரண்பட்டு நின்றார்கள். அதுமட்டுமன்றி புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்காக அனுப்பப்பட்ட டொனமூர் தலைமையிலான ஆணைக்குழுவின் முன் கண்டி தேசிய சங்கம் சமஷ்டி கோரிக்கையை வலியுறுத்தியது. அப்போதும் கூட தமிழர் தரப்பில் அதனை ஆதரித்து இருக்கவில்லை.
ஆனால் சரியாக 30 வருடங்களில் பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்ததும் அவர் யாழ்ப்பாணத்தில் அன்று வெளியிட்ட சமஸ்டிக் கொள்கையை எஸ்.ஜே.வி செல்வநாயகம் கோரியபோது, முற்றாக நிராகரிக்கும் அளவுக்கு மாறியிருந்தார் பண்டாரநாயக்க.
1925 இல் மகேந்திரா ஒப்பந்தம் நிகழ்ந்து அதன் பின்னர் 1956 பண்டா – செல்வா ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும் வரையான காலப்பகுதியில் தமிழர்களின் அரசியல் இருப்புக்கு ஏற்பட்ட அநியாயங்கள் சிறிதல்ல.
தமிழர்களின் அரசியல் எதிர்காலத்துக்கு உத்த்ரவாதமிளிக்கக் கூடியது இனவாரிப் பிரதிநிதித்துவமே என்று 1931 டொனமூர் ஆணைக்குழுவின் முன் தமிழர் தரப்பில் வழியுறுத்தப்பட்டபோதும் டொனமூர் ஆணைக்குழு இலங்கை தேசிய காங்கிரஸ் முன்வைத்த தொகுதிவாரி பிரதிநிதித்துவத்தையே தெரிவுசெய்தது. கவர்னருக்கு கூடிய அதிகாரம் வழங்குவதற்கு ஊடாக சிறுபான்மையினருக்கு அநீதி இளைக்க முடியாதபடி செய்ய முடியும் என்றது டொனமூர் ஆணைக்குழு அறிக்கை.
பழமைவாத தமிழ் தலைமைகளின் போக்கில் வெறுப்புற்ற யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் 1931 தேர்தலை பகிஷ்கரித்ததுடன் அதனை நிராகரிக்கும்படி தமிழ் தலைவர்களைக் கேட்டுக்கொண்டது. மகேந்திரா ஒப்பந்தத்தில் தமிழர் தரப்பில் கையெழுத்திட்ட வைத்தியலிங்கம் துரைசாமியின் வீட்டுக்கும் சென்று பூரண சுதந்திரம் வேண்டி நிற்கின்றோம் போட்டியிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். துரைசாமியும் தேர்தலில் இருந்து விலகினார். ஒருபுறம் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் முற்போக்கு பாத்திரம் கொள்கையளவில் வலுவுள்ளதாக இருந்தபோதும் நடைமுறையில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை பாதித்தது.
தெரிவானோரில் 38 சிங்களவர், 5 பேர் தமிழர், 2 ஐரோப்பியர், ஒரு முஸ்லிம். யாழ் குடா நாட்டுக்கான நான்கு இடங்களும் காலியாக இருந்தன. இந்த நிலைமையை சரி செய்வதற்காக மீண்டும் தமிழர் தொகுதிகளில் உப தேர்தல் வைக்குமாறு கேட்டுக்கொண்டபோது தேர்தலை நிராகரித்த தமிழர்களின் மீது இருந்த கசப்பில் அக்கோரிக்கையை நிராகரித்தார். 1933 ஜனவரியில் 2 யாழ்ப்பாணத்தில் பல அமைப்புகள் கூடி மாநாடு நடத்தி தேர்தல் நடத்தும் கோரிக்கையை முன்வைத்ததன் பின்னர் தான் தேர்தலை நடத்த ஆளுநர் ஒப்புக்கொண்டார். அதன் பிரகாரம் 1934 இல் நடந்த உப தேர்தலில் தான் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் அரசியல் பிரவேசமும் நிகழ்ந்தது. காங்கேசன்துறை தொகுதியில் வெற்றிபெற்ற ஜி.ஜி.பொன்னம்பலத்தின் கைக்கு மெதுவாக தமிழ் அரசியல் தலைமை வந்து சேர்ந்தது.
ஆனால் 1936 இல் மீண்டும் நடந்த பொதுத்தேர்தலின் மூலம் தனிச் சிங்கள மந்திரிசபை அமைக்கப்பட்டது. ஒரு தமிழருக்கும்ம் அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை. இதில் சேனநாயக்கவின் பங்கு அதிகம். ஆரம்பத்திலிருந்து தொகுதிவாரிப்பிரதிநித்துவத்தை மெதுமெதுவாக வலியுறுத்தி, அதில் வெற்றி கண்ட சிங்களத் தரப்பு பாராளுமன்றத்தில் அதி பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்திக்கொண்டதுடன், தமிழரல்லாத மந்திரிசபையையும் உருவாக்கிக்கொண்டது.
இதற்கிடையில் இரண்டாவது உலகப்போர் 1945 வரை நடந்து முடிந்தது. இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து வழங்க முடிவு செய்த பிரித்தானிய அரசு இடைக்கால அரசியலமைப்பை உருவாக்கும்படி மந்திரிசபையைக் கேட்டுக்கொண்டது. இலங்கை பல்கலைக்கழக உபவேந்த சேர் ஐவர் ஜென்னிங்க்ஸ் உதவியுடன் பிரிட்டிஷ் அமைச்சரவை அரசாங்க ஆட்சிமுரயாகக் கொண்ட யாப்பை டீ.எஸ்.சேனநாயக்க தயாரித்தார். அது சிங்களவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இலங்கைக் கொண்டுவரும் சகல வழிகளையும் கொண்டிருந்தது.
அதேவேளை இலங்கையரின் சுயாட்சிக் கோரிக்கையை ஆராய்வதற்காக சோல்பரி பிரபுவின் தலைமையில் ஒரு ஆணைக்குழுவை 1944 இல் நியமிக்கப்பட்டது. கோரிக்கைகளை ஒற்றுமையாக முன்வைப்பதற்காக கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் ஒன்றுகூடினர். அங்கு ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையில் உருவானது தான் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்.
சுதந்திர ஒப்பந்தம் கைச்சாத்திடல் |
சோல்பரி ஆணைக்குழுவிடம் சமபல கோரிக்கையை முன்வைத்து விளக்கப்படுத்தினார். சோல்பரி ஆணைக்குழுவின் அறிக்கை 1945 ஜூலை 11 அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட வேளை ஜி.ஜி.பொன்னம்பலம் அவ்வரிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காக இங்கிலாந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் பார்த்து 08.11.1945 சோல்பரி யாப்பின் மீதான விவாதம் ஆரம்பிக்கப்பட்டது. சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நான்கு வழிகள் உள்ளடக்கப்பட்டதாக கூறப்பட்டது.
29வது பிரிவின் படி ஓர் இனத்தையோ அல்லது சமூகத்தையோ பாதிக்ககூடிய எச் சட்டங்களையும் பாராளுமன்றம் இயற்றக்கூடாது என இப்பிரிவு கூறுகின்றது. யாப்பைத் திருத்துவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும், கவர்னருக்கு கூடுதல் அதிகாரம், அரசாங்க சேவை, நீதிச் சேவை ஆணைக்குழுக்களின் உருவாக்கம் ஆகிய நான்கு காரணிகளும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால் வெகு விரைவில் அனைத்தும் மீறப்பட்டது. 04.02.1948 இல் இலங்கைக்கு சுதந்திரமும் கிடைத்தது. ஆனால் மேற்படி பின்னணியில் அந்த சுதந்திரம் என்பது அதிகாரங்களை சிங்களவர்களுக்கு கைமாற்றும் ஒரு நிகழ்ச்சியாகவே முடிந்தது. சிங்களமயப்படுத்துவதற்கான அனுமதிப்பத்திரமாகவே சுதந்திர சாசனம் அமைந்தது.
ஜோன் கொத்தலாவல - நேரு |
சுதந்திரம் கிடைத்து ஒரு சில மாதங்களில் இலங்கையின் சனத்தொகையில் 11 வீதமாக இருந்த இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. ஜனத்தொகையில் சிங்களவர்களுக்கு அடுத்ததாக இருந்த அம்மக்கள் இன்று ஜனத்தொகையில் நான்காம் இடத்தில் உள்ளனர். 1948இல் பிரஜாவுரிமைச் சட்டத்தின் மூலம் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1949 இல் இந்திய பாகிஸ்தானிய சட்டமும் கொண்டு வரப்பட்டது. 1949 - பாராளுமன்ற தேர்தல் திருத்த சட்டம், 1952ஆம் ஆண்டு வாக்குரிமைச் சட்டம் கொண்டு வந்ததன் மூலம் இறுதியாக மலையக மக்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கூடாக அதிகாரத்திலிருந்து அவர்களை ஓரங்கட்டும் அந்த திட்டத்தின் அடுத்த அங்கமாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தமிழர் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டன. இது நீண்ட கால நோக்கில் தமிழ்மக்களின் அரசியல் பிர்திநிதித்துவத்தை சுருக்கும் நோக்கத்தைக் கொண்டது. தேசியக் கொடி அமைக்கப்பட்ட போது அது சிங்கள பௌத்தர்களின் தேசியக் கொடியாக அமைக்கப்பட்டது. இந்திய வழ்சாவழி மக்களுக்கெதிரான நாடு கடத்தும் ஒப்பந்தம் (நேரு-கொத்தலாவல-30.10.1954) செய்து கொள்ளப்பட்டது.
இப்படி குறுகிய காலத்தில் அடுக்கடுக்கடுக்காக ஒரு இனத்தின் மீது அநீதிக்கு மேல் அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் சோல்பரி யாப்பு எந்த பாதுகாப்பையும் எதற்கும் வழங்கவில்லை. அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்ட பாதுகாப்பே இந்தளவு மோசமாக மீறப்பட்ட போது அதைவிட பாதுகாப்பு வேறெங்குதான் இருக்க முடியும்.
ஐக்கிய தேசியக் கட்சி மைத்த வழியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பயணிப்பது கடினமாக இருக்கவில்லை. அந்த வழிகளை மேலும் பலப்படுத்தி, விரிவுபடுத்தி, உறுதிபடுத்தும் அடுத்த கட்ட “சிங்களமய” வேலைத்திட்டத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதிகாரத்தை கைமாற்றிக்கொண்டது. நாங்களும் சளைத்தவர்களா என்ன எங்களால் முடியாதா என்ன பாணியில் இனங்களுக்கிடையேயான விரிசலை மேலும் இழுத்துப் பிரித்தது.
அந்த அடுத்த துரோகம் தொடரும்
சோல்பரி - சுந்தரலிங்கம் |
சோல்பரி பிற்காலத்தில் வருந்தி எழுதிய கடிதம்அன்புடன் திரு சுந்தரலிங்கம் அவர்களுக்கு!
எனது கோவையில் இருந்த ஆவணங்களை வாசித்தததன் பின்னர் அவற்றை இத்துடன் திருப்பி அனுப்புகிறேன். அவை ஆர்வமிக்கதும் கவலை தரத்தக்கதும் கூட.
சிங்கள தமிழ் சமூகங்களுக்கு இடையில் இந்தளவு கசப்பான பிளவு ஏற்படும் என்று நான் இலங்கையின் ஆளுநராக கடமையாற்றிய காலத்தில் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதற்கான பொறுப்பு கூற வேண்டியது சேர் ஜோன் கொத்தலாவலவும் அவரது அரசாங்கமுமே என்கிற உங்கள் கூற்றுடன் நானும் உடன்படுகிறேன். அவர் தமிழ் மக்களுக்கு சவுக்கைக் கொண்டு அடித்தார் என்றால், மறைந்த பண்டாராநாயக்கவோ தமிழ் மக்களை தேளைக் கொண்டு கொட்டினார் என்றே கூற வேண்டும்.
தமிழ் மக்கள் மீது சிங்கள மக்கள் மிகவும் குறுகிய நோக்கத்துடனும் முட்டாள்தனமாகவும் நடந்துகொண்டுள்ளார்கள். 1945ஆம் ஆண்டு அறியல் யாப்பு சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவராக நான் கடமையாற்றிய காலத்தில் இந்த இரு சமூகங்கள் குறித்து நிறையவே ஆராய்ந்தேன். அப்போது இலங்கையின் பொருளாதாரத்திற்கு தமிழ் மக்கள் ஆற்றியிருக்கும், ஆற்றிக்கொண்டிருக்கும் பங்களிப்பைக் கண்டு பூரித்திருக்கிறேன். அதுபோல சிங்களவர்களை விட தமிழ் சமூகம் மிகவும் கல்வியும், திறமையும் உடையவர்கள் என்பதையும் புரிந்துகொண்டேன். இங்கிலாந்தின் பொருளாதாரத்திற்கு ஆரம்பத்திலும், தற்போதும் ஸ்கொட்லாந்து மக்களின் பங்களிப்புக்கு ஒப்பானது அது.
உண்மையைச் சொல்லப்போனால் 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்தவர்களைப் பார்த்து இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் பொறாமைப்பட்டார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களை விட ஸ்கொட்லாந்தவர்கள் சன விகிதாசாரத்தை விட அதிகமாக தொழில்வாய்ப்பைப் பெற்றிருந்தார்கள். ஸ்கொட்லாந்தைச் சேர்ந்தவர்கள் கல்வியும் திறமையையும் கொண்டிருந்ததே அதற்கான காரணம் என்று நான் நம்புகிறேன். அவர்கள் தெற்கைச் சேர்ந்தவர்களை விட கடும் உழைப்பையும் கொடுத்தார்கள். அந்த மண்ணும், காலநிலையும் உந்துசக்தியாக இருந்திருகிறது. இது எப்படியிருந்தபோதும் ஸ்கொட்லாந்து மக்களை பகைத்துக்கொள்ளுமளவுக்கு ஆங்கிலேயர்கள் முட்டாள்களாக இருக்கவில்லை. தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்கள் நடந்துகொண்டது போல ஆங்கிலேயர்களும் நடந்துகொண்டிருந்தால் உள்நாட்டிலும், வெளிநாடுகளில் பிரித்தானிய பேரரசும் கொண்டிருந்த செழிப்பு ஒருபோதும் கிடைத்திருக்காது.
18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்தும், ஸ்கொட்லாந்துக்கும் இடையில் ஒரு கூட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட காலத்தில் “ஆங்கிலம் மட்டும்” என்பதை அரச கொள்கையாக ஆங்கிலேயர்கள் கோரியிருந்தால் ஸ்கொட்லாந்து இனத்தவர்கள் அனைவரும் அவர்களின் கெலிக் (Gaelic) மொழியை வழியுறுத்தியிருப்பார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் புத்திசாலித்தனமாக ஆங்கிலேயர்கள் சகல ஸ்கொட்லாந்து தாய்மாரும் தமது குழந்தைகளை ஆங்கிலம் கற்றுக்கொள்ளக் கூடியவகையில் வழிசெய்தார்கள். அப்போது அதிக வேளை வாய்ப்புகள் இங்கிலாந்திலேயே இருந்தது.
சிங்கள இனத்தவர்களும் கூட அதுபோல நடந்துகொண்டிருந்தால், மேற்குறிப்பிட்ட காரணத்தாலேயே சகல தமிழ் தாய்மாரும் தமது பிள்ளைகளை சிங்களம் கற்றுக்கொள்ளக் கூடிய வழிவகைகளை செய்திருக்கக் கூடும். இப்போது இதற்கு சிறந்த தீர்வு எது என்று எனக்குத் தெரியாது. அப்படி ஒரு தீர்வு இப்போது இருக்கிறதா என்று கூட எனக்கு தெரியாது.
நான் முன்மொழிந்த அரசியல் யாப்பில் சிறுபான்மையினருக்காக போதுமான பாதுகாப்பு இருப்பதாகவே தெரிந்தது. ஆனால் அரசியல் யாப்பின் 29வது சரத்து எதிர்பார்த்தளவு பலனளிக்கவில்லை என்பதும் உண்மையே. இந்திய அரசியல் யாப்பிலும் இன்னும் வேறு நாடுகளில் உள்ள அரசியலமைப்புகளிலும் இருக்கும் மனித உரிமைகள் பிரிவையும் சேர்த்திருக்கலாம் என்று கூட தோன்றுகிறது. அதேவேளை வேறு நாடுகளில் இருக்கக் கூடிய சமஷ்டி அமைப்போ அல்லது தமிழர் தன்னாட்சிஅலகு முறையோ சாத்தியப்படும் என்று நான் நம்பவில்லை. சமஷ்டி முறை கடினமானது. நடைமுறைப்படுத்துவதும் கஷ்டமானது. தமிழ் தன்னாட்சி அலகு நடைமுறை சாத்தியமற்றது.
இந்த நேரத்தில் நான் கூறக்கூடியது; பொறுமையுடன் நடந்துகொள்ளுங்கள் என்பதும், பாராளுமன்ற நடவடிக்கைகளில் சிறப்பாக கடமையாற்றும்படி கேட்டுக்கொள்வதே. அயர்லாந்து எங்களிடம் இருந்து பிரிவதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் அயர்லாந்து கட்சியின் நடத்தையை நீங்களும் பின்பற்றலாம். பாராளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் டட்லி சேனநாயக்கவுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டது விவேகமற்றது என்றே நான் நினைக்கிறேன். டட்லி சேனநாயக்கவை ஆட்சியில் தக்கவைத்திருக்கச் செய்திருக்கலாம்.
மலையகத் தமிழ் தொழிலாளர்களின் நிலைமை கவலையைத் தருகிறது. இந்தளவு பெருந்தொகையான ஆண்களுக்கும்ம் பெண்களுக்கும்ம் வாக்குரிமையை இல்லாது செய்தது வருந்தத்தகது. தமது பிரதேசத்தில் நிரம்பியிருக்கிற மக்கள் கூட்டத்தினருக்கு வாக்குரிமை இருப்பது கண்டி பிரதேச மக்களுக்கு பெறும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது. ஆனால் அந்த தமிழ் மக்களுக்காக மட்டும் நான்கு அல்லது ஐந்து தனி ஆசனங்களை ஒதுக்கியிருந்தால் இன்னும் நியாயமான தீர்வாக இருந்திருக்கும். அவர்கள் எந்த பிரதேசங்களில் வாழ்கிறார்கள் என்பது முக்கியமல்ல. எப்படியிருந்தபோதும் நான் குறிப்பிடுவது வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்கள் பற்றியதே.
உங்களுக்காகவும் உங்கள் இனத்தவர்களுக்காகவும் நான் மிகவும் வருந்துகிறேன். எற்றுக்கொள்ளக்க்கூடிய ஒரு தீர்வை என்னால் வழங்க முடியுமென்றால் நான் மகிழ்ச்சியடைவேன். உங்கள் நிலையில் நான் இருந்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வளைக்கக்கூடிய அனைத்து ஆதரவையும் நான் வழங்குவேன். தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
சோல்பரி
30.04.1964
*இந்த கடிதம் செ.சுந்தரலிங்கம் எழுதிய “ஈழம்: சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பம்” (“Eylom: Beginning of the Freedom Struggle; Dozens Documents” by C Suntherlingham) என்கிற நூலில் உள்ள கடிதத் தொகுதியில் ஒன்று இது. தமிழ் ஈழம் என்கிற சொற்றொடரை முதலில் பயன்படுத்தியவர் சேர் பொன் அருணாச்சலம். அதன் பின்னர் தமிழ் ஈழக் கொள்கையை முன்வைத்து முதன் முதலில் அரசியல் களத்தில் பணியாற்றத் தொடங்கியவர்கள் சுந்தரலிங்கமும், வீ.நவரத்தினமும். தமிழர்கள் தரும் வாக்குகள் தமிழீழத்த்தை பிரகடனப்படுத்தும் வாக்குகள் என்றவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம். அந்தத் தமிழீழ போராட்டத்துக்கு ஆயுத வடிவம் கொடுத்தவர்கள் ஈழப் போராட்ட இயக்கங்கள்.
நன்றி - தினக்குரல்
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...