Headlines News :
முகப்பு » , , , » காதல் கோட்டை கட்டிய விஜேசிங்க முதலியார் (அறிந்தவர்களும் அறியாதவையும்) - என்.சரவணன்

காதல் கோட்டை கட்டிய விஜேசிங்க முதலியார் (அறிந்தவர்களும் அறியாதவையும்) - என்.சரவணன்


களுத்துறை ரிச்மன்ட் கோட்டை (Richmond Castle) என்று அறிந்திருப்போம். முதலியார் என்.டீ.ஆதர். த சில்வா விஜேசிங்க சிறிவர்தன (1889–1947) கட்டிய பிரமாண்டமான அரண்மனை. 42 ஏக்கர் பூங்காவுக்குள்  அமைக்கப்பட்ட இந்த அரண்மனை களுத்துறை நகரத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் களுகங்கையின் ஓரத்தில் அழகான சூழலில் இருக்கிறது.

இன்று அது அரசாங்கத்தின் பொதுச் சொத்தாக ஆக்கப்பட்டு பல பாடசாலை மாணவர்களும், சுற்றுலா பிரயாணிகளும் தினசரி வந்து பார்வையிட்டு செல்கிறார்கள். சுவாரஷ்யமான கதைகளை உள்ளடக்கியது இந்த மாளிகை.

விஜேசிங்க அந்த காலத்தில் களுத்துறை மாவட்டத்துக்கு முதலியாராக இருந்தவர். மிகப் பெரும் பணக்காரர். அவரின் தகப்பானார் பல தோட்டங்களுக்கு சொந்தக்காரர். விஜேசிங்க இங்கிலாந்தில் கல்வி கற்றதன் பின்னர் மன்னரால் மகாமுதலியார் பட்டம் அளிக்கப்பட்டு இலங்கை திரும்பி அந்த பதவியை வகித்து வந்தார். 9 முதலிமார்களுக்கு மகா முதலியாக இளம் வயதிலேயே பொறுப்பு வகித்தார். களுத்துறை மாவட்டத்தில் பொதுப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் பணியில் மூன்று தசாப்தகாலமாக பணியாற்றினார்.

இங்கிலாந்தில் பயின்ற காலத்தில் உலக நாடுகள் பலவற்றுக்கு சென்று வந்த விஜேசிங்க தனது பள்ளித் தோழனான இந்தியாவைச் சேர்ந்த ராமநாதபுரம் மகாராஜாவின் அரண்மனைக்கும் விஜயம் செய்தார். அந்த அரண்மனையின் அழகால் ஈர்க்கப்பட்ட விஜேசிங்க முதலியாரும் அதே வடிவத்தில் ஒரு அரண்மனையைக் கட்ட விரும்பினார். இந்த ஆசையை மகாராஜாவுக்கு கூறியபோது. அது மிகப் பெரும் பொருட் செலவுடைய நிறைவேற்றமுடியாத கனவு என்றே கருதினார். விஜேசிங்க அந்த அரண்மனையின் கட்டட அமைப்புமுறைத் திட்டத்தை கேட்டபோது மன்னர் அதனைக் கொடுக்கவில்லை வேண்டுமென்றால் பார்த்து அதனை வரைந்து கொள்ளும்படி கூறியிருக்கிறார். ஆனால் திறமையான ஒரு கட்டடக் கலைஞனை அனுப்பி அதனை வரைந்து எடுத்தார் முதலியார்.

களுத்துறையில் கலுகங்கையோடு ஒட்டிய மிகவும் ரம்மியமான, அழகான சுற்றுச் சூழலைக் கொண்ட  42 ஏக்கர் பரப்பைக் கொண்ட காணியில் வேலையைத் தொடங்கினார். 


கற்கள், ஓடுகளை இந்தியாவிலிருந்தும், தேவையான தேக்கு மரங்கள் பர்மாவிலிருந்து ஒரு கப்பலில் வந்தது. ஜன்னல்கள், கண்ணாடிகளை இத்தாலியிலிருந்தும், குளியல் அறை, மலசல கூடம், போன்றவற்றை இங்கிலாந்திலிருந்தும் வருவித்தார். இந்திய இலங்கை கட்டடக் கலைஞர்கள் வந்து பணிகளை மேற்கொண்டார்கள். வெளிநாடுகளில் இருந்து வந்த கட்டடப் பொருட்களை  கொழும்பிலிருந்து சிறு கப்பல்கள் மூலம் களுத்துறை ஊடாக கலுகங்கைக்குள் கொண்டு வந்து அரண்மனைக்கு அருகாமையிலேயே இறக்கியதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் மகாராஜா கட்டுவதற்கு எடுத்த காலத்திலும் பார்க்க அரைவாசி காலமே இதனைக் கட்டுவிக்க மகாமுதலி விஜேசிங்கவுக்கு எடுத்தது.

இரண்டு மாடிகளைக் கொண்ட கலை நுட்பம் கொண்ட இந்த அரண்மனையில் 99 கதவுகளும் 34 ஜன்னல்களும் மேடையுடன் கூடிய பெரிய விருந்தினர் வரவேற்பு மண்டபமும் உள்ளது. மண்டபத்துக்கு அடியில் நிலத்துக்கு கீழ் சிறிய காற்றோட்டத்துக்காக ஒரு சிறிய சுரங்கம் தொடங்கி களுகங்கையில் முடிகிறது. அரண்மனைக் குளிர்படுத்துவதற்காக நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டிருக்கிற இந்த நுட்பத்தை அனைவரும் ஆச்சரியாமாக பார்க்கின்றனர்.

சூழ உள்ள தோட்டத்தில் பெருமளவு தென்னை மரங்கள் மட்டுமன்றி பல வகையான பழ மரங்களும், பூ மரங்களுமாக சோலையைப் போல இன்றும் உள்ளது.

இந்த அரண்மனையை பாதுகாக்க 40 படையினரை அமர்த்தும்படி அன்றைய பிரிட்டிஷ் அரச குடும்பம் கவர்னர் ஜோர்ஜ் அண்டர்சனை கேட்டுக்கொண்டது. 

அப்படி அவர் கட்டிய மாளிகை தான் இந்த ரிச்மன்ட் அரண்மனை. வாழ்க்கைத் துணைக்காக தனக்கு இணையான களுத்துறை மாவட்ட நீதிபதியின் புதல்வி கிலேரிஸ் மெட்டில்டா மௌடே சூரியபண்டார எனும் பெண்ணை விவாகம் செய்தார். 1910 ஆம் ஆண்டு  மே 10 அன்று அவரது திருமணத்தையும் வீடு குடிபுகுதல் விழாவையும் ஒரு சேர பெரும் விழாவாக எடுத்தார். 

இலங்கை முழுவதுமிருந்து பல தனவந்தர்களும், அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தார்கள். கொழும்பிலிருந்து வருவதற்காக களுத்துறை வரை விசேட ரயிலில் பலர் வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்து அரண்மனை வரும் வரை களுத்துறை நகரத்தில் வீதியெங்கும் அழகுபடுத்தப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான குதிரைகளும், மோட்டார் வாகனங்களும் பவனியுடன் அரண்மனைகு வந்தடைந்தபோது அவரை வரவேற்றவர்களில் ஒருவர் இப்படி ஒரு அரண்மை சாத்தியமில்லை என்று அன்று கூறிய அதே ராமநாதபுரம் மகாராஜா. குறுகிய காலத்தில் இப்பேர்பட்ட மாளிகையைக் கட்டிமுடித்ததில் அவர் மிகுந்த ஆச்சரியமடைந்திருந்தார்.

திருமணத்துக்காக 18 உயர கேக் வெட்டப்பட்டிருக்கிறது. முதலாவது உலக யுத்த காலத்தில் பிரித்தானிய படையினருக்காக அன்றைய காலத்தில் 2500 ரூபாவைக் கொடுத்ததற்காக இராணி சார்பில் அனுப்பப்பட்ட நன்றிக் கடிதம் இன்றும் இந்த அரண்மனையில் காணலாம். 

தனது காதல் மனைவியுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வாழவென கட்டிய இந்த பெரிய மாளிகையில் அவர் மகிழ்ச்சியாக வாழவில்லை. குழந்தைகள் இல்லாதது மிகப் பெரும் ஏக்கத்தை அவருக்குத் தந்தது. வீட்டுப் பணியாளர் ஒருவருடன் மனைவி கொண்டிருந்த உறவு காரணமாக மனைவியை அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்தார். தனது உயிலில் மனைவி உயிருடன் இருக்கும் வரை மாதாந்தம் 300 ரூபா பணமும் காணியில் விளையும் தேங்காயில் 250ஐயும் கொடுக்குமாறும் இந்த அரண்மனை உள்ளிட்ட அனைத்து சொத்தையும் அனாதைச் சிறுவர்களின் நலன்களுக்காக பொதுச்சொத்தாக 1941இல் உயில் எழுதிக் கொடுத்துவிட்டு கண்டி குயின்ஸ் ஓட்டலில் 77 ஆம் இலக்க அறையில் அவர் இறக்கும் வரை அங்கேயே தனிமையில் தங்கி வந்தார். 1947 ஆம் ஆண்டு அவர் இறக்கும் போது அவரது வயது 58.

இன்றும் இந்த அரண்மனையில் சில அறைகளில் அனாதைச் சிறுவர்களுக்கான வகுப்புகள் நடக்கின்றன. அச்சிறுவர்களின் தங்குவிடுதி அரண்மனைக்கு வெளியில் இருக்கிறது.

சில பொலிவூட் திரைப்படங்களும் இங்கு எடுக்கப்பட்டிருக்கின்றன. விருதுகள் பெற்ற Vara: A blessing என்கிற படமும் அதில் ஒன்று.

விஜேசிங்க முதலியார் பற்றியும் இந்த அரண்மனை குறித்தும் பேச இந்த பத்தி போதாது. முடிந்தால் நேரில் சென்று ரிச்மன்ட் அரண்மனையை ஒருமுறை காணுங்கள். சென்ற வருடம் நான் சென்று பார்த்து விட்டேன்.

நன்றி - வீரகேசரி சங்கமம்



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates