Headlines News :
முகப்பு » , , , , , » "சமஷ்டி எனும் பயங்கரவாதம்" (99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு– 4) - என்.சரவணன்

"சமஷ்டி எனும் பயங்கரவாதம்" (99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு– 4) - என்.சரவணன்


“சமஷ்டி என்கிற தங்கையைக் காட்டிவிட்டு ஈழம் எனும் அக்காவை மணமுடித்து வைத்தல்” இப்படித்தால் பிரபல இனவாத பத்திரிகையான திவயின ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது. (02.08.2015)

புதிய அரசியலமைப்பு இனப்பிரச்சினைக்குமான தீர்வையும் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் இன்றைய முயற்சியில் இத்தகைய பிரச்சாரங்கள் இதுவரையான ஒப்பந்தங்களையும், தீர்வுகளையும், உடன்படிக்கைகளையும் தோற்கடிக்கச் செய்தபோதெல்லாம் பின்புலமமைத்த சக்திகளும் அவற்றின் வியூகங்களும் தான் நினைவுக்கு வருகின்றன. இது அடுத்த துரோகத்துக்கான முன்னேற்பாடுகளா என்கிற ஐயம் நம்மெல்லோருக்குமே உண்டு.

இந்த சமஷ்டி பற்றிய இன்றைய ஒவ்வாமைக்கு தூபமிடப்பட்டது 1957 பண்டாரநாயக்கவால் தான். இலங்கையில் பண்டாரநாயக்கவை சமஷ்டியின் தந்தை என்பார்கள். (“Father of Federalism/Federal Idea” in Ceylon )

“ஆயிரத்தொரு எதிர்ப்புகள் சமஷ்டி முறைக்கு எதிராக எழலாம். ஆனால் அந்த ஆட்சேபனைகள் இல்லாது போகும் ஒரு சந்தர்ப்பத்தில் சமஷ்டி முறையே ஒரே தீர்வு என்பதை நாம் புரிந்து கொள்வோம். – 1926 இல் பண்டாரநாயக்க.

கண்டி தேசிய சங்கத்தில் 1927 இல் உரையாற்றும்போது அமெரிக்காவில் உள்ளதைப் போல ஒரு சமஷ்டி முறையே முன்மொழிகிறேன் என்றார்.

சமஷ்டி பீதி
சமஷ்டி பற்றிய சிங்கள மக்களுக்குள் ஏற்படுத்தியிருக்கிற பீதி இன்று நேற்றல்ல. பிரதான கட்சிகளான ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க ஆகிய இரண்டும் ஒன்று சமஸ்டியை பிரேரிக்கும் போது மற்றது அதனை “நாடு பிரிக்கும் சதி” என்றே பிரச்சாரம் செய்து வந்திருக்கிறது. இந்த பிரசாரம் இன்று மக்கள் மயப்படுத்தப்பட்டு நிறுவனமயப்பட்டிருக்கிறது. இன்று இரு கட்சிகளுமே ஒன்று சேர்ந்து சமஸ்டியை நிறைவேற்ற நினைத்தாலும் கூட அவர்களால் வளர்த்துவிடப்பட்ட “சமஷ்டி போபியா” அவர்களை விடப்போவதில்லை.

ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் போது தமிழீழத்துக்கு மாற்றாக சமஸ்டியை ஒப்புக்கொண்ட சிங்கள அரசு இன்று அந்த சொல்லை விபத்தாகக் கூடப் பாவித்து விடாதீர்கள் என்று மிரட்டும் நிலை தற்செயல் நிகழ்வல்ல. யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் சமஷ்டியும் கூட “ஈழத்துக்கு” நிகரான பிரிவினைவாத பதமாக புனையப்பட்டு அந்த பதமும் அரசியல் அரங்கில் தீண்டத்தகாத சொல்லாக ஆக்கப்பட்டது வெறும் தற்செயல் அல்லவே.

தாம் பிரிவினைவாதத்தையோ (“அதிகாரப்பரவலாக்கம்”), பயங்கரவாத்தையோ (“உரிமைபோராட்டம்”), இனவாதத்தையோ (“தேசியவாதம்”) ஆதரிப்பதில்லை என்று பேரினவாதச் சூழலிடம் சத்தியம் செய்து கொடுக்கும் அவல நிலை தமிழர் அரசியலுக்கு உருவாகியுள்ளது. இது ஒரு கையறு நிலை மாத்திரமல்ல. அரசியல் தற்கொலைக்கு ஒப்பான பயங்கர நிலை.

தமிழ் காங்கிரஸ் அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்த மயில்வாகனம் நாகரத்தினம் என்பவர் சோல்பரி ஆணைக்குழுவுக்கு சமஷ்டி திட்டம் பற்றி 30.01.1945 அன்று மனு கொடுத்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவரை பணி நீக்கம் செய்த மூவரில் இருவர் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் மற்றவர் தந்தை செல்வா. ஆனால் அதே தந்தை செல்வா காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று 18.12.1949 அன்று புதிய கட்சி தோற்றுவித்தபோது அக்கட்சிக்கு சமஷ்டி கட்சியென்றே ஆங்கிலத்தில் பெயரிட்டார்.

தமிழில் இலங்கை “தமிழ்+அரசு” கட்சி என்று அழைக்கப்படும் அதே வேளை ஆங்கிலத்தில் «Federal party» (சமஸ்டிக் கட்சி) என்றே எப்போதும் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. 1970 ஆண்டு பொதுத் தேர்தலில் கூட சமஷ்டி அரசியலமைப்பை முன்வைத்தே போட்டியிட்டது.  1977இல் வடக்கு கிழக்கு பகுதிகளில் தனித் தமிழீழத்துக்கான மக்கள் ஆணை பெறப்பட்டது.

ஆனால் இன்றைய நிலையில் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு பேராபத்தான சொல்லாக மாற்றப்பட்டிருப்பது சிங்கள சூழலில் மாத்திரமல்ல. தமிழ் சூழலிலும் தான். எங்கே தப்பித்தவறியும் அச்சொல்லை பயன்படுத்தினால் அதை வைத்தே தமக்கு எதிரான பிரச்சாரத்தை செய்தது விடுவார்களோ, குறைந்தபட்ச கோரிக்கைக்கும் ஆப்பு வைத்து விடுவார்களோ என்று தமிழ் அரசியல் சக்திகள் எண்ணுகின்றனர். அது போல் எங்கே சமஸ்டியை ஆதரித்து விட்டால் அதை வைத்தே தம்மை அரசியலில் ஓரங்கட்டிவிடுவார்களோ என்று சிங்களத் தரப்பும் எண்ணுமளவுக்கு அது அதிபயங்கரவாத சொல்லாக ஆக்கப்பட்டுள்ளது.

இனவாத நிர்பந்தத்தால் 1957 இல் பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட பின்னரும் கூட 1960 இல் மீண்டும் ஆட்சியமைப்பதற்கு  தமிழரசுக் கட்சியிடம் ஸ்ரீ.ல.சு.க ஆதரவு கோரிய போது ஒரு உடன்பாடு காணப்பட்டது. அதனை தெளிவாக அடுத்த வாரம் பார்க்கலாம். ஆனால் சமஷ்டி என்கிற “பயங்கரவாத” பதத்தைக் கைவிடச் செய்த ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
பண்டா செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திட்டு வெளியே வரும்போது

1960 இரண்டு தேர்தல்கள் நிகழ்ந்தன. மார்ச் மாதம் நடந்த தேர்தல் முடிவில் டட்லி அரசு ஆட்சிமைப்பதை தோற்கடித்தது தமிழரசுக் கட்சி. இந்த ஆத்திரத்தில் மீண்டும் அதே வருடம் நடந்த ஜூலை தேர்தலில் டட்லி தலைமையிலான ஐ.தே.க இனவாதப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைக்கபோகிறது என்றும் நாட்டை தமிழர்களுக்கு விற்கப் போகிறது என்றும் பிரச்சாரம் செய்தது. ஸ்ரீ.ல.சு.க இந்த பிரசாரத்தை கண்டு பீதியுற்றது. தமக்கும் தமிழரசுக் கட்சிக்கும் எந்தவித உடன்படிக்கையும் இல்லை என்று இரங்கி கேட்டுக்கொண்டது. அறிக்கையும் விட்டது. மேடைகளிலும் முழங்கினர்.  இது போதாதென்று தமிழரசுக் கட்சியிடம் சென்று அப்படி ஒரு உடன்பாடும் இல்லை என்று உறுதிபடுத்தும் வகையில் அறிக்கை விடும்படி எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை வேண்டினர்.

இறுதியில் தமிழரசுக் கட்சிக்கும் ஸ்ரீ.ல.சு.க வுக்கும் இடையில் அப்படி ஒரு ஒப்புமில்லை உறவுமில்லை என்கிற சாரத்தில் ஒரு அறிக்கை விட்டு தெளிவுபடுத்த வேண்டியதாயிற்று.

அந்த அறிக்கையில் மார்ச் மாதம் நிகழ்ந்த சம்பங்களையும் கோர்வைபடுத்தி தமது நான்கம்ச கோரிக்கையை ஏற்க  டட்லி மறுத்ததையடுத்து டட்லிக்கு எதிராக வாக்களித்ததையும் விளக்கினார். சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இல்லாமையால் தமிழரசுக் கட்சி அவர்களிடம் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. தாம் அரசாங்கம் அமைத்தால் சிம்மாசனப் பிரசங்கத்தின் போது தமிழர் பிரச்சினை குறித்து தமது நிலைப்பாட்டை வெளியிடுவதாகவும் அதை நாங்கள் ஏற்றுக்கொண்டால் அரசாங்கத்தை ஆதரிக்குமாறு சுதந்திரக் கட்சியினர் கூறினார்கள். அது சரியாகப் பட்டதனால் சுதந்திரக் கட்சியுடன் எத்தகைய உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை என்று செல்வநாயகம் வெளியிட்ட அறிக்கை கூறியது.

1960இல் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? ஆட்சியமைத்ததும் எப்படி ஏமாற்றப்பட்டார்கள்.

துரோகங்கள் தொடரும்...



சிலோனுக்கான சமஷ்டி முறை
1926ம் ஆண்டு ஜுலை மாதம் யாழ்ப்பாணத்தில்
எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஆற்றிய உரை
மாணவர் காங்கிரஸ் ஆதரவிலான கூட்டமொன்றில் சட்டத்தரணி ((Barrister- at-law)) எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா பி.ஏ. (oxon) ‘எமது அரசியல் பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வாக சமஷ்டி முறை’ என்ற தலைப்பில் சுவாரஷ்யமாக உரையாற்றினார். டாக்டர் ஐசக் தம்மையா தலைமையில் அந்தக் கூட்டம் நடந்தது. பண்டாரநாயக்காவின் முழுமையான உரை வருமாறு:
தற்போதைய காலகட்டத்தின் முக்கியத்துவத்தை முதலில் நாம் புரிந்து கொள்வது அவசியம். 1928ம் ஆண்டு அரசியலமைப்பு மீளாய்வு செய்யப்பட உள்ளது. திருப்தியான அளவு கொண்ட சுயாட்சி எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, இதை உள்வாங்கி அரசியல் பிரச்சினையைக் குறித்து மிகத் தெளிவாக சிந்தித்து கிரகித்துக் கொள்வது அவசியமாகிறது. தற்போது நாம் எடுத்து வைக்கும் பிழையான அடியையோ முன்வைக்கும் தவறான பிரேரணையையோ பின்னர் சரிப்படுத்துவது கடினமாக இருக்கும். அவர்கள் சுயாட்சியை விரும்புகிறார்கள். எந்தளவு சுயாட்சி என்பது தான் இப்போதுள்ள கேள்வி.
கடந்த கால அரசாங்க மாதிரிகள் சுருக்கமாக கூறுவதென்றால் இரண்டு விதமான அரசாங்கங்கள் அப்போது இருந்தன. ஒன்று ‘நிந்தகம்’ என்ற பிரபுத்துவ அரசாங்கம். மற்றது கிராமத்து தலைவர் என்ற அமைப்பிலானது. பிரபுத்துவ அரசாங்கத்தில் கடன் தொகைகள் செலுத்தப்பட்டது வரையில் வேறொன்றைக் குறித்தும் அக்கறை இருக்கவில்லை. கிராமத்து தலைவர் என்ற அரசமைப்பில் கிராமமே தனிப்பிரிவாக கருதப்பட்டது. மன்னருக்கு நிலப்பரப்பு இருந்தது. அதற்குப் பொறுப்பான ஆட்கள் இருந்தனர். பல்வேறு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு ‘கங்சபாவ’ என்ற மக்கள் சபையாக உருவாக்கப்பட்டன. அந்த கங்சபாக்கள் கிராமத்திலிருந்த ஒவ்வொரு குடும்பத் தலைவரையும் கொண்டிருந்தன. வழக்கு தொடுப்பவர்களுக்கு மன்னருக்கே மேன்முறையீடு செய்யும் உரிமை இருந்தது. பிரித்தானியர் சிலோனுக்கு வந்தபோது அவர்கள் அதிகாரம் முழுவதும் மத்தியில் குவிந்ததான அரசமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்தினர். அது சுதந்திரமான நிறுவனம் ஒன்றைப் போலிருந்தது. இப்போதும் கூட அது அதிகார தோரணையுள்ள அரசமைப்பாகவே இருக்கிறது.
சீர்திருத்தத்துக்கான கிளர்ச்சி1915ம் ஆண்டு வன்முறை இடம்பெற்றது வரையில் சீர்திருத்தத்துக்கான அரசியல் கிளர்ச்சி ஆரம்பமாகவில்லை.  அதில் சேர். பி. இராமநாதன் ஆற்றிய பெரும் பங்குபற்றி பண்டாரநாயக்கா குறிப்பிட்டார். சேர்.பி. அருணாசலம் தேசிய காங்கிரசை உருவாக்கினார். சீர்திருத்தத்துக்கான கிளர்ச்சி இயக்கத்தின் தந்தையும் அவர் தான். தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதும் சாம்ராஜ்யத்தினுள் சுயாட்சி என்ற நோக்கத்தையும் இலக்கையும் கொண்டதான உறுப்பையே அங்கத்தவர்கள் அனைவரும் ஆதரித்தனர். மேல் சபையில் ஒரு சில் ஆசனங்கள் கிடைத்ததைத் தவிர வேறெதுவும் நடக்கவில்லை. அந்த கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் தவறான அடிப்படைகளில் நின்று கொண்டு இரண்டு திசைகளில் வாதிடுவதிலேயே தமது சக்தியை மையப்படுத்தினர். அந்த அரசமைப்பு பொருத்தமானது தானா என கேள்வி எழுப்பவில்லை. அடுத்ததாக, இங்கிலாந்தில் செயற்படும் மாதிரியான அரசமைப்பையே அவர்கள் இலக்காகக் கொண்டிருந்தனர். விளைவு தற்போதைய மேல் சபை. அப்போது மிகவும் சாதாரணமான ஒரு சபையாகவே இருந்தது. கோட்பாட்டு அளவில் அது மக்கள் சபையாக இருந்தாலும் உண்மையில் அதற்கு அதிகாரம் இருக்கவில்லை. பல விடயங்கள் விட்டுக் கொடுக்கப்பட்டன. வாக்காளர்களுக்கு பொறுப்பற்ற வெறும் அரசாங்க உறுப்பினர்களாகவே அவர்கள் இருந்தனர். நாட்டின் நிலப்பரப்பு தொடர்பான கொள்கை ஒப்புக் கொள்ளப்பட்டது. இனங்கள் தொடர்பான கோட்பாடு எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது. நிதி விடயத்தில் மேல் சபைக்கு ஓரளவு கட்டுப்படுத்தும் அதிகாரம் இருந்தது. நிறைவேற்று அதிகார பேரவை மேல் சபையிலிருந்து பிரிந்து பாடசாலை மாணவர்களின் விவாத அரங்கு போலக் காட்சியளித்தது. கடந்த சில வருடங்களாக நடந்த கிளர்ச்சிக்கு கிடைத்த பலன் இது தான். அதற்கு செலுத்தப்பட்ட விலை சிங்களவர் - தமிழர் என்ற பிரிவினை. தாழ்நிலப்பகுதி சிங்களவர் - கண்டிய சிங்களவர் என்ற பேதம். சிறுபான்மையினர் ஒருவரை ஒருவர் அவநம்பிக்கையுடன் நோக்கத் தொடங்கினர். அடிப்படையிலிருந்து அந்த வேற்றுமைகள் உருவாகவில்லை என நினைப்பது தவறு. ஒரு சிலர் மனதில் ஒரு நோக்கத்துடனேயே அந்தப் பிரிவினைகளை ஏற்படுத்தினர். அவர்கள் இறந்த பின் அந்தப் பிரிவினைகள் மறைந்துவிடும் என நினைத்தவர்களும் இருந்தனர். நூறு வருடங்களுக்கு முன்பு அவ்வாறான பிரிவினைகள் இருக்கவில்லை. காரணம் அப்போது இந்த நாட்டிலிருந்த சிங்களவர், தமிழர் தலைகளில் ஆங்கிலேயர் ஏறி அமர்ந்திருந்தனர். அரசாங்கத்தை தமது கரங்களில் எடுக்கப் போவதாக அவர்கள் கூறி வந்த கணப்பொழுதில் தான் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்த கனல் வெளிவந்தது. சரித்திரத்தை படித்துப் பார்த்தால் இந்த நாட்டில் மூவின மக்களும் ஆயிரம் வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருந்தாலும் ஒன்று சேர வேண்டும் என்ற மனப்போக்கு அவர்களிடம் காணப்படவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். அவர்கள் தமது மொழியை, சடங்குகளை, மதத்தைப் பாதுகாத்தனர். அந்த வேற்றுமைகள் படிப்படியாக மறையும் என நம்பும் எவரும் அவசரத்தில் காரியம் செய்பவனாகவே இருப்பான்.
மத்திய அரசாங்கத்தின் தவறுகள் இதனை அடுத்து, உருவாகக் கூடிய சிக்கல்களைப் பற்றி பண்டாரநாயக்கா கோடிட்டுக் காட்டினார். எதிர்பார்க்கப்படும் சீர்திருத்தங்கள் செய்யப்பட்ட அரசாங்கத்தின் கீழ் மேல் சபையானது பிரதமரையும் பல்வேறு அமைச்சர்களையும் தெரிவு செய்யும். தற்போது பல்வேறு சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குறிப்பிட்ட அளவிலான அமைச்சர்கள் இருக்கின்றனர். அந்த அளவு தொடர்ந்தும் இருக்குமென்றால் அமைச்சரவையிலும் ஒரு குறிப்பிட்ட அளவு பிரதிநிதித்துவம் தமக்கு வேண்டுமென சமூகங்கள் வலியுறுத்தும். மத்திய அரசாங்கத்தில் ஒரே மாதிரியான இனங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருப்பார்கள். இலங்கையைப் போன்ற மோதல் சூழ்நிலைகளில் செயற்படும் அரசாங்கமொன்று உலகின் வேறெப்பாகத்திலாவது செயற்படுகின்றதா என எனக்குத் தெரியாது. இனரீதியான பரந்த வேறுபாடுகளைக் கொண்ட நாடுகளின் மத்தியில் அதிகாரம் குவிந்த அரசாங்கம் அமையுமென்றால் இவ்வாறான சிக்கல்கள் தான் உருவாகும்.
சமஷ்டி முறை சமஷ்டி முறையில் அந்த அமைப்பிலுள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் தானாகவே ஆட்சி செய்வதற்கு முழுமையான அதிகாரம் உள்ளது. இருப்பினும் அவை இணைந்த இரண்டொரு சபைகளாகி நாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடும். அமெரிக்காவிலுள்ள அரசாங்கம் அப்படியானது தான். சுயாட்சி அதிகாரமுள்ள அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளிலும் இதே அரசமைப்புதான். இந்த விடயத்தில் சுவிட்சர்லாந்து, இலங்கைக்கு நல்லதோர் உதாரணம். அது சிறிய நாடாக இருந்தாலும் அங்கு ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி நாட்டவர்கள் வாழ்கின்றனர். இருப்பினும், அங்கு சமஷ்டி முறை வெற்றியளித்திருக்கிறது. அங்குள்ள ஒவ்வொரு அரச உப பிரிவும் தமது அலுவல்களை சுயமாகவே கவனித்துக் கொள்கின்றன. வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் சர்ச்சைக்குரிய விடயங்களை மேல்சபை கையாள்கிறது. சிலோனில் ஒவ்வொரு மாகாணத்துக்கும் சுயாட்சி வழங்க வேண்டும். நாட்டின் வருவாயைக் கையாள்வதற்கென இரண்டொரு மேல்சபைகள் இருக்க வேண்டும். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவிப்பர். இருப்பினும், பிரச்சினைக்கு ஏதோ ஒரு வகையான சமஷ்டி முறைதான் பொருத்தமானதாக இருக்கும் என்பது தான் தனது நம்பிக்கை என பண்டாரநாயக்கா கூறினார். சிறுபான்மை இனங்களுடன் தான் இன்னும் பணியாற்றத் தொடங்கவில்லை. ஏனென்றால் அவர்களுடைய தற்காலிக ஏற்பாடுகள் விசேட பிரதிநிதித்துவத்துக்கு பயன்படலாம். ஆனால், அந்த ஏற்பாடுகள் ஒரு சமூகம் இன்னுமோர் சமூகத்தை ஆதிக்கம் செய்கின்றது என்ற பயம் இருக்கும்வரை தொடர்ந்து இருக்கவே செய்யும். இதையே பண்டாரநாயக்கா கொழும்பு தமிழர்களுக்கான ஆசனம் தொடர்பான விடயத்திலும் தெரிவித்தார். எல்லா சமூகங்களையும் திருப்திப்படுத்தக் கூடிய அரசமைப்பொன்றை உருவாக்குவது கடினம். சமஷ்டி முறையே தீர்வு. இப்படி ஒரு பிரச்சினை இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாகவும் இதைவிட சிறந்த தீர்வுத்திட்டமொன்று எவரிடமாவது இருந்தால் அவர் அதை மக்கள் முன்பாக வைப்பார் என தான் நம்புவதாகவும் பண்டாரநாயக்கா தனது உரையில் மேலும் குறிப்பிட்டார். அவருடைய உரையை அடுத்து விறுவிறுப்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில் எழுப்பப்பட்ட முக்கியமான விடயங்கள் பற்றிய சுருக்கமான விபரம் வருமாறு:
இலங்கையின் சரித்திரத்தில் ஆரம்ப கட்டத்தில் சமஷ்டி முறை எவ்வாறு செயற்பட்டது என திரு. சண்முகம் புரிந்து கொள்ளவில்லை. பிழையான எண்ணங்கள் மனதை ஆக்கிரமிக்கும் சந்தர்ப்பத்திலும் சமஷ்டி முறையை எவ்வாறு செயற்படுத்த முடியுமென கொடுக்கப்பட்ட விளக்கத்தையும் அவர் புரிந்து கொள்ளவில்லை. கொழும்பு ஆசனத்துக்குப் போட்டியிட முயற்சி எடுத்தபோது சேர்.பி. அருணாசலம் நடத்தப்பட்ட விதம் மற்றும் மேல் சபையின் உப தலைவருக்கான தேர்தலில் சேர் இராமநாதன் நடத்தப்பட்ட விதம் குறித்தும் அவர் உதாரணம் காட்டி பேசினார். சமஷ்டி மேல்சபையில் கூட வேற்றுமைகள் உருவாகும் என சுப்பையா கூறினார். ஒரு இனம் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களில் சமஷ்டி முறை பொருந்தும். மேல் மாகாண விடயத்தில் அதை எவ்வாறு செயற்படுத்துவது என ஜுலியஸ் பிலிப்ஸ் கேட்டார். ஜே.எச்.பி. விஜயரட்ணம் வருவாய் பற்றாக்குறையால் சில மாகாணங்களில் நிர்வாகம் செயற்படுவதில் சிரமம் இருப்பதை எடுத்துரைத்தார். மதம், சாதி சம்பந்தமான பிரச்சினைகள் வட மாகாணத்தில் தீவிரமாக காணப்படுவதால் அவை எவ்வாறு தீர்த்து வைக்கப்படும் என தான் அறிய விரும்புவதாகவும் பிலிப்ஸ் கூறினார். பிரச்சினைகளை யார் தீர்த்து வைப்பது என்ற விடயத்தில் மூவின மக்களுக்குமிடையில் தகராறு எழுந்தால் எண்ணிக்கையைக் கணக்கிலெடுக்கும் போது தாழ்நிலப்பகுதி சிங்களவர்களின் கை ஓங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். சிறுபான்மை சமூகங்களை அலட்சியம் செய்யக் கூடாதென சுப்பிரமணியம் கூறினார். இந்த சூழ்நிலைகளின் கீழ் பிரிட்டிஷ் ஆட்சியே பாதுகாப்பானது என பெய்லி மயில் வாகனம் சொன்னார்.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஏன் தொடர்ந்து இருக்க கூடாது. இதற்கு பதிலளித்துப் பேசிய பண்டாரநாயக்கா பின்வருமாறு கூறினார். மதப்பிரச்சினை சட்டத்தால் தீர்க்கப்பட வேண்டியது. நிதி சமத்துவமின்மை மிகப்பெரிய தடை. கல்விப்பிரச்சினையும் அப்படியானது தான். நிதி தேவைப்படும் மாகாணங்களிடையே பொது நிதியைப் பகிர்ந்தளிக்கலாம். இந்த விடயம் சர்ச்சை நிறைந்தது. கடைசியாகப் பேசியவர் நாம் ஏன் தொடர்ந்தும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருக்கக் கூடாதெனக் கேட்டார். ஏன் இத்தனை பயமும், விவாதமும்? எந்த ஒரு நாடும் சுயாட்சியை விரும்பவில்லையென்றால் அது நாடாகவே இருப்பதற்குத் தகுதியில்லை. அப்படிப்பட்ட ஒரு நாடு நிர்மூலமாக்கப்பட வேண்டும். டாக்டர் ஐசக் தம்பையா பேசுகையில், பண்டாரநாயக்கவின் உரை நன்கு தயாரிக்கப்பட்டு செறிவுமிக்க வகையில் ஆற்றப்பட்டது. அது பெரும் ஆர்வத்தை தூண்டுமென தான் நம்புவதாகவும் சொன்னார். எனக்குத் தெரிந்தவரையில் சமஷ்டி முறை பிரிட்டிஷ மலாயாவில் தான் மிக நன்றாக செயல்படுகின்றது. சமஷ்டி முறை பற்றி சிந்திக்கும் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ளவர்களின் தலைவர்கள் மலாயா சென்று அங்கு அது எவ்வாறு செயற்படுகின்றது என மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
இறுதியில் தரமானதோர் உரையை தெரிவு செய்ததற்காக மாணவர் காங்கிரசுக்கு டாக்டர் தம்பையா பாராட்டு தெரிவித்தார். சில காலங்களுக்கு முன்பு யாரோ ஒரு கனவான் கல்விக் கொள்கையைப் பற்றிப் பேசினார். இன்றிரவு பண்டாரநாயக்கா அரசாங்கத்தின் கொள்கைகளைப் பற்றிப் பேசினார். இதையடுத்து டாக்டர் தம்பையா உரையாளருக்கு நன்றியுரை ஆற்றினார்.
சிலோன் மோர்னிங் லீடருக்காக யாழ் செய்தியாளர்
*சிலோன் மோர்னிங் லீடர் (The Ceylon Morning Leader) பத்திரிகையில் சமஷ்டி பற்றிய பண்டாரநாயக்கவின் கட்டுரைகள் 1926 இல் மே – 19,27, யூன் 02,09,23,30, யூலை 17 வெளியானது. இது அந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை.
நன்றி - தினக்குரல்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates