கடந்த வாரம் சூரியகாந்தியில் உங்கள் கட்டுரை ஒன்று வாசித்தேன். தலைப்பு ஒரு மாதிரியாக இருந்தாலும் உள்ளே எழுதப்பட்ட விடயங்கள் ஆழமானவையாக இருந்தன என்றார் நண்பரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ். 'ஏன் தலைப்பு ஒரு மாதிரி என்கிறீர்கள் என்றேன்' வித்தியாசமான தலைப்பு விளங்கிக்கொள்ள சிரமமாக இருக்கிறது என்றார். முதலாம் அத்தியாயம் வாசித்தீர்களா? என்று கேட்டேன். அப்படியா! இது ஒரு தொடரா? என்று கேட்டவருக்கு கூடவே உரையாடிக் கொண்டிருந்ததால் 'முள்ளுத்தேங்காய்' படங்களைக் காட்டினேன். ஆச்சரியப்பட்டவராய் இது எங்கே என்றார். 'களுத்துறை' என்றேன். ஓ...!அப்படியா என ஆச்சரியப்பட்டவருடன் இதுபற்றிய உரையாடலைச் செய்து கொண்டிருந்தேன். இந்த உரையாடல் இடம்பெற்ற இடம் அல்லது அரங்கம் முக்கியத்துவமானது. ஆம்! அது தேசிய சுததந்திர தின விழா அரங்கம். காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த அந்த அரங்கத்தில் அமர்ந்து நிகழ்வுகள் தொடங்க முன்னர் நாங்கள் உரையாடிக்கொண்ட விடயங்கள்தான் இவை.
எந்த அடிப்படையில் இந்த நாள் முக்கியமாகிறது. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த அதே காலத்தில் மலையகத்தவர் சுதந்திரம் பறிக்கப்பட்டது. ஆம், அவர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டது. ஏறக்குறைய இலங்கை சுதந்திரமடைந்த போது இந்த நாட்டில் 130 வருட காலம் வாழ்ந்த மக்கள், அதற்கு முன்னர் 15 வருடங்களுக்கு முன்னர் அவர்களை அழைத்து வந்த பிரித்தானியர்களிடமே வாக்குரிமையைப்பெற்றுக்கொண்ட மக்கள் மலையக மக்கள். அவர்களின் வாக்குரிமைதான் சுதேச அரசாங்கம் அமைவதோடு பறிக்கப்படுகின்றது. அதற்கு இந்தியர்களான எம்மை அவர்கள் அந்நியர்களாக கருதியது ஒரு காரணம். இந்த நாடு கிராமிய பொருளாதார முறைமையில் இருந்த காலத்திலேயே ஏற்றுமதி பொருளாதாரம் உருப்பெற்றது. அதுதான் கோப்பி, தேயிலைப் பயிர்ச்செய்கைகளின் வருகை. இந்த பணப்பயிர்கள் அந்நிய முதலீட்டினால் மட்டும் உருவான பொருளாதாரம் இல்லை. கூடவே அந்நிய உழைப்பினாலும் உருவான பொருளாதாரம்.
மிக மோசமான நிலையில் உள்ளபாதை |
ஆம், இந்தியாவில் இருந்து இறக்குமதியான தொழிலாளர்களைக் கொண்டே இந்த பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டது. இந்த பணப்பயிர்ச்செய்கைக்காக இந்திய உழைப்பாளர்களாக எம்மவர்களை அழைத்து வந்த நேரம் அதனை கிராமிய இலங்கையர்கள் விரும்பவில்லை. அவர்கள் கிராமிய (தன்னிறைவு) பொருளாதாரத்தில் இருந்ததனால் பெருந்தோட்டக் கைத்தொழிலை உள்நாட்டு மக்கள் விரும்பியிருக்கில்லை. அந்த பெருந்தோட்ட கைத்தொழில் மீது மாத்திரம் அல்ல அதற்காக அழைத்து வரப்பட்ட மக்கள் மீதும் அவர்களுக்கு ஒரு வெறுப்பு. அதுவே பின்னாட்களில் இன வன்முறைகளின்போது இந்த மலையக மக்கள் இலக்கானதற்கு காரணமாகியது. இந்தியாவை அடிக்க வேண்டுமென்றால் எம்மவரை ஒரு தட்டுதட்டினால் போதும் என்கிற அளவில் மலையக மக்கள் ஆனார்கள். ஆனாலும் இந்தியா மீது மாறாத பற்றும் காதலும் மாறாமலேயே இருந்தது; இருக்கிறது. இப்போது கூட இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆதரவாகத்தான் இருப்போம் என இருக்கும் எம்மவர்கள் எத்தனைபேர் இருக்கின்றோம். அந்த இந்தியாவுக்கு திரும்பிப்போன 5 லட்சம் பேர் சம்பந்தமான தகவல்கள் ஏதும் தெரியாமலேயே நம்மவர்கள் 'இந்திய தமிழர்' என்பதுதான் சரியென வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் 'மலையகத் தமிழர்' ஒரு பண்பாட்டு அடையாளமாக வந்துவிட்ட நிலையில் அதனை அரசியல் மயப்படுத்துவதே இப்போதைய அரசியல்வாதிகளின் பொறுப்பு. உத்தேச அரசியல் அமைப்பு உருவாக்கம் இந்த ஆண்டு இடம்பெற்றால் 'மலையகத் தமிழர்' அரசியல் நாமமாவதற்கு சாத்தியங்கள் உண்டு.
அரசியல் அமைப்பு மாற்றம் என்றவுடன் எல்லை மீள்நிர்ணயம் குறித்து பேச வேண்டி வருகின்றது. உண்மையில் இது குறித்த உரையாடல் ஒன்றுக்காக நானும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிக்காக சென்று வந்த அனுபவம் இருக்கிறது. அதேநேரம் அரசியல் செயற்பாட்டாளர்களான நஜா முகம்மட் மற்றும் சண். பிரபாகரன் கலந்து கொண்ட 'மக்கள் சேவை' நிகழ்ச்சி அருமையான பல தகவல்களைத் தந்தது. சண்.பிரபாகரன் வளர்ந்துவரும் மலையக அரசியல் செயற்பாட்டளர்களுள் நம்பிக்கை தருபவராக அந்த நிகழ்ச்சி மூலம் வெளிப்பட்டு நின்றமையை அவதானிக்க முடிந்தது. இதே எல்லை மீள்நிர்ணய செயற்பாட்டில் (திருத்த யோசனைகள்) ஆர்வமாக தன்னை இணைத்துக் கொண்ட சமூக ஆய்வாளர் ஏ.ஆர். நந்தகுமார் இலங்கையின் சுதந்திரம் குறித்து இட்டிருந்த முகநூல் பதிவு சுவாரஷ்யமானது.
சுதந்திர தினம் தேசிய ரீதியாக 69 ஆண்டு என்றாலும் 2003ஆம் ஆண்டிலேயே மலையகத்தவர்க்கு முழுமையாக வாக்குரிமை; வழங்கப்பட்டதனால் நமக்கு சுதந்திரம் கிடைத்து 14 ஆண்டுகள் என்று கொள்ளலாமா? என்கின்ற கேள்வி நியாயாமானதுதான். அந்த கேள்வியை இன்னும் ஆழமாக்கினால் 2009 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் அகதியாக வாழும் மலையக மக்களுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டது என்று பார்க்கின்றபோது எமக்கு சுதந்திரம் கிடைத்து எட்டு வருடங்கள்தான் ஆகிறது என்று கூட கொள்ளலாம்.
ஏன் மலையகத்தவர் இந்தியாவுக்கு அகதியாக செல்லவேண்டும் என்பதெல்லாம் உங்கள் கேள்வியாக எழுந்தால் இதற்க முன்னர் சூரியகாந்தியில் எழுதிய 'தமிழ் நாட்டின் சிலோன்காரர்கள்' தொடரை (திரும்ப) வாசிக்க வேண்டும். விரைவில் அது நூலாக வெளிவரும் சாத்தியம் உள்ளது.
இந்த தமிழ் நாட்டின் சிலோன்காரர்கள் என்றவுடன் எனது ஆய்வுப்பயணங்களில் தமிழ்நாட்டின் 'கொல்லிமலைக்கு' சென்ற ஞாபகத்தை அசைபோடவைத்தது. அங்கதானே மரணப்படுக்கையில் கிடந்த முதியவர் 'அய்யா நீங்கள் இலங்கையில் எந்த ஊர் என்று கேட்ட போது 'மடகொம்பரை' எனச் சொல்லி ஆச்சரிய மூட்டினார். இது குறித்தும் 'தமிழ் நாட்டின் சிலோன்காரர்கள்' பதிவு செய்துள்ளது.
அந்தக் கொல்லிமலை என்பது 'நாமக்கல்' லில் இருந்து மேலே அமைந்த மலைத்தொடர். தமிழ் நாட்டில் மலைப்பாங்கான 'ஊட்டி', 'கொடைக்கானல்' மலைத்தொடர்களில் சென்று குடியேறிய தாயகம் திரும்பியோர் அளவுக்கு (1964 ஆம் ஆண்டு ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தில் இந்திய திரும்பியோர்) கொல்லிமலைப் பகுதிக்கு போனவர்கள் பற்றி பேசப்படுவதில்லை. அங்கேயும் 'தாயகம்' திரும்பிய எம்மவர்கள் இருக்கிறார்கள். அதில் எதேச்சையாக கண்டவர்தான் அந்த மடகொம்பரைகாரர். அந்த மலைப்பகுதியில் 'ஆகாய' கங்கை எனும் ஒரு நீர் வீழ்ச்சி உண்டு. அதனைப்பார்க்க போய்க்கொண்டிருக்கும்போதே நான் இலங்கை என்று தெரிந்துகொண்ட அன்பர் ஒருவர் 'இங்கேயும் கொஞ்சம் சிலோன் காரவுங்க இருக்கிறாங்க' என்று சுட்டிக்காட்டியதானால் பலரை சந்திக்க கிடைத்தது.
150 வருடங்களுக்கு முன் கட்டபட்ட லயன் அறைகள் |
இந்த கொல்லிமலை பெரும்பாலும் பழங் குடிமக்கள் வாழ்கின்ற பிரதேசம். தமிழ்நாட்டின் சட்டரீதியான சாதிய கட்டடைப்பில் (kattamaippu) கடைசி தட்டினர். 'மலை வாழ் மக்கள்' தான் இவர்கள். நாம் மலையக மக்கள் என்றதும் சில இந்தியர்களும் மெத்தப்படித்த இலங்கையர்களும்தான் 'மலையக மக்கள் என்றால் அது மலைவாழ் மக்களை குறித்து நிற்கும் நிற்பதாக இருக்கும் என்ற வசட்டரீதியானவாதத்தில் (varathu vatham ) ஈடுபடலாயினர். மலையக மக்கள் என்பதும் மலைவாழ் மக்கள் என்பதும் வெவ்வேறு அடையாளத்தைக்காட்டி நிற்பன. ஓன்று சாதியடையாளம் மற்றையது இன அடையாளம். இலங்கையில் மலையக மக்கள் ஒரு இன அடையாளம் என்பதனை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்த வேண்டியுள்ளது.
இந்த மலைவாழ் மக்கள் சேனைப்பயிர்ச் செய்கை முறையிலேயே இன்னும் வாழந்து கொண்டிருக்கின்றனர். அங்கு சென்று வாழ நிர்ப்பந்திக்கப்ப்பட்ட மலையகத்தில் இருந்து தாயகம் திரும்பியோர் நிலைமை பரிதாகரமானது. தேயிலைத் தொழிலுக்கு பழகிப்போன மக்கள் எவ்வாறு சேனைப் பயிர்ச்சொய்கைக்கு போவது. போயாகவேண்டிய கட்டாயத்தில் அங்கே சேனைப்பயிர்செய்கையில் நம்மவர்களும் ஈடுபடுகிறார்கள்.
இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் நம்மவர்கள் சேனைப்பயிர்ச்செய்கை முறையில் வாழந்துகொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தி எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
இலங்கையில் தேயிலைக்கு 150 வருடங்களைக்கொண்டாடும் இந்த கட்டத்தில் களுத்துறையில் 'முள்ளுத்தேங்காய் எண்ணை உற்பத்தி' பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில் நமது மலையக மக்கள் மொனராகலை மாவட்டத்தில் 'சேனைப்பயிர்ச்செய்கை' முறையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். மிக மோசமான ஒரு வாழ்க்கை முறைக்குள் சிக்கத்தவிக்கும் மொனராகலை மாவட்ட தமிழ் மக்கள் பற்றிய செய்திகள் பலருக்கு ஆச்சரியப்படவைக்கும். அது இலங்கையின் கொல்லிமலை என்பது என கணிப்பு. அங்கு வாழும் எம்மவர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது இந்த அரசியலில் நிலவும் இனவாத விடயங்களின் செயற்பாடுகள். அண்மையில் மொனராகலை மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள மொனராகெலே, சிரிகலே, அலியாவத்தை போன்ற தோட்டப்பகுதிக்கு செல்ல நேர்ந்தது. அச்ச அசலாக அந்த கொல்லிமலையை நினைவூட்டிய அந்த பயணம் தொடர்பான பதிவுகளை தொடர்ந்து வாசிக்கலாம்.
அது வரை எங்கே நிற்கின்றோம் என தெரிந்துகொள்ள தலைப்பை மீண்டும் வாசிக்க...
(வளரும்)
மொனராகலை பாடசாலை |
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...