Headlines News :
முகப்பு » , , , , , » "ஹியு நெவில்" (அறிந்தவர்களும் அறியாதவையும்) என்.சரவணன்

"ஹியு நெவில்" (அறிந்தவர்களும் அறியாதவையும்) என்.சரவணன்


இலங்கையின் வரலாற்றை மீள் கண்டுபிடிப்பு செய்ததில் காலனித்துவ ஆங்கிலேயர்களுக்கு பெரும் பங்குண்டு. தொல்பொருள் ஆவணப்படுத்தல் என்பவற்றை ஒரு முறையியலுக்கு கொண்டுவந்து அவற்றைப் பேணிப் பாதுகாப்பது குறித்த பிரக்ஞையையும், ஏற்பாடுகளையும் ஆரம்பித்துக் கொடுத்து விட்டு சென்றதில் அவர்களுக்கு இருக்கும் வகிபாகத்தை நாம் மறுக்க முடியாது.

இன்று இலங்கையின் வரலாற்றை சிங்கள பௌத்த வரலாறாக நிறுவும் இனவாத போக்கிற்குக் கூட ஆதாரங்களை பொறுக்கி எடுப்பதற்கு ஆங்கிலேயர்கள் தேடித்தந்துவிட்டுச் சென்ற ஆதாரங்களில் இருந்து தான் புனைகின்றனர் என்பதை கவனித்தல் அவசியம். அந்த வரிசையில் ஹியு நெவில் மேற்கொண்ட ஆய்வுகள் முக்கியமானவை. புராதனம், அரசியல், வரலாறு குறித்து அறிந்து கொள்ள முற்படுபவர்களுக்கு அவை அதி முக்கியமானவை.

1848 ஜூன் 19இல் பிறந்த ஹியு நெவில் (Hugh Nevill) 17வயதில் பிரதம நீதிபதியின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்ற இலங்கைக்கு வந்து சேர்ந்தவர். பணிபுரிந்த காலப்பகுதியில் இலங்கை நிர்வாக சேவையில் லிகிதராகவும், மட்டக்களப்பு மாவட்ட நீதவானாகவும், திருகோணமலை அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியிருக்கிறார். 1865 – 1897 க்கு இடைப்பட்ட 35 வருட காலத்திற்குள் அவர் இலங்கை முழுவதும் தேடி கண்டு பிடித்த பல ஓலைச்சுவடிகளை சேகரித்து வைத்திருந்தார். மொத்தம் 2227 ஓலைச்சுவடிகள் அதில் அடங்கும். சிங்களம், தமிழ், பாளி மொழிகளில் அவை உள்ளன. இலங்கையின் வரலாறு பற்றி அதுவரை அறியப்படாத அரிய பல உண்மைகள் அதன்பின்னர் ஸ்தூலமானது.

சிங்களவர்களின் வரலாறு மட்டுமல்ல மருத்துவம், கலை இலக்கியம் குறித்தும் பல குறிப்புகள் கண்டு பிடிக்கப்பட்டன. துரதிருஷ்டவசமாக அவர் இந்த ஓலைகளை நம் நாட்டவர்களுக்கு விட்டுச் செல்லவில்லை. அவர் அத்தனையையும் கப்பலில் ஏற்றிக்கொண்டு பிரான்சுக்கு கொண்டு சென்றார்.

10.04.1897 இல் அவர் பிரான்சில் மரணமானார். 1904 ஆம் ஆண்டு அவர் தொகுத்த ஓலைச்சுவடிகளை பிரிட்டிஷ் நூதனசாலை விலைக்கு கொள்வனவு செய்தது. அவை சிங்களவர்களின் ஓலைச்சுவடித் தொகுப்பு (Catalogue of the Hugh Nevill Collection of Sinhalese Manuscripts in the British Library) எனும் பேரில் அல்லது “Hugh Nevill collection” எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. Or. 6606 (54) and Or. 6606 (139) ஆகிய இலக்கங்களின் கீழ் அவற்றை அங்கு காண முடியும். இவற்றை பேணிப் பாதுகாப்பதற்கான அனுசரணையை பிரிட்டிஷ் நூலகம் வழங்கி வருகிறது. ஓலைச்சுவடிகளை பட்டியல்படுத்தி விளக்கும் இரண்டு தொகுதி நூல்களை அவர் எழுதியிருந்தார். ஆனால் அது வெளிவருவதற்குள் அவர் மரணமானார். பின்னர் கே.டி.சோமதாச அவற்றைக் கொண்டு ஏழு தொகுதிகளாக பாளி எழுத்துச் சங்கத்தின் மூலம் (Påli Text Society) வெளியிட்டார்.

அண்மையில் பிரபல சிங்களத் தேசியவாதியான நளின் த சில்வா “நெவில் கொண்டுபோய் சேர்த்த நமது ஓலைச்சுவடிகளை பிரித்தானிய மகாராணியிடம் பேசி மீளப் பெற்றுத் தருவாரா ஜனாதிபதி மைத்திரி” என்று வினவியிருந்தார் அவரது இணையத்தளத்தில். (09.09.2016)

இலங்கை பற்றி மட்டுமல்ல, இந்தியா பற்றியும், சிங்களவர்கள், தமிழர்கள் பற்றியும் பல தகவல்களை வெளிக்கொணர்ந்ததில் அவரது பாத்திரம் முக்கியமானது. இவற்றைக் கொண்டு நெவில் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். இன்றும் வரலாற்றாளர்கள் பலர் அவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இலங்கையில் இந்த ஆதாரங்களை அவரவர் தத்தமகேற்றாற் போல் பயன்படுத்தி வருவதை பல நூல்களின் வாயிலாகவும், கட்டுரைகளின் வாயிலாகவும் அறிய முடிகிறது. குறிப்பாக இது சிங்கள பௌத்த நாடு தான் என்பதைப் புனையவும் கூட நெவில் கண்டெடுத்த இந்த ஆதாரங்களில் உள்ள தமக்கு வசதியான பகுதிகளை மாத்திரம் திரித்துப் பரப்புவதை நிறையவே காண முடிகிறது. அதுமட்டுமன்றி மத்திய கால சாதிகள் பற்றியும், காப்பிலி இனத்தவர், பறங்கியர், வன்னி மக்களின் அரசு (பனையோலைச் சுவடிகள்) மற்றும் அம்மக்களின் பழக்க வழக்கங்கள் குறித்தும், வேடுவர்கள் பற்றியும் எழுதும் பலரும் கூட நெவிலின் தொகுப்புகளை கையாள்வது வழக்கம்.

அவர் கண்டெடுத்த ஒலைச்சுவடிகளில் 931 சுவடிகள் கவிதை வடிவத்திலானவை. அவற்றை பிற்காலத்தில் பீ.ஈ.பீ.தெரணியகல “சிங்கள கவி” என்கிற பெயரில் வெளியிட்டார்.

இவற்றில் “இலங்கையில் போர்த்துக்கீச கிரியோல் மொழி சுவடிகள்” என்கிற ஆய்வு (the Sri Lanka Portuguese Creole Manuscript) முக்கியமானவற்றுள் ஒன்று. போர்த்துக்கேயர் ஆட்சி செய்த காலத்திலும் அதற்குப் பின்னரும்  (16-19 நூற்றாண்டுகள்) சுமார் 350 வருடங்கள் இந்த கிரியோல் மொழி இலங்கையின் மூன்றாவது மொழியாக இருந்து வந்திருக்கிறது. பறங்கி மொழி என்றும் அழைப்பார்கள். இந்த சுவடிகளில் 1,049 சுவடிகளை மொழிபெயர்த்த ஷிஹான் டீ சில்வா அவற்றை மூன்று பகுதிகளாக வகுத்தார்.

1. மட்டக்களப்பு போர்த்துகீச பாடல்கள்
2. போர்த்துகீச கப்ரிங்கா பாடல்கள் (நீக்ரோ பாடல்கள்)
3. ஓர்சோன், வேலன்டீனா கதை

இவை இன்றும் கலை வடிவங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையின் பாடாசலைகளில் வரலாற்று பாடநூல்களில் நெவில் மற்றும் அவரது வகிபாகம் பற்றியா விபரங்களும் கற்பிக்கப்படுகின்றன. க.பொ.த பரீட்சை வினாத்தாள்களிலும் அவர் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டிருகின்றன.

அனுராதபுரத்தில் எல்லாளனின் சமாதிக்கு நேர்ந்த கதி என்ன என்பது குறித்து தொல்பொருள் -வரலாற்றாசியர்கள் பலருக்கு இடையில் சில வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த உரையாடல்களில் நெவிலின் ஆவணங்கள் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டன. 

இவற்றிலுள்ள உண்மைகளை காய்தல் உவத்தலின்றி வெளிக்கொணரவேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ் அறிஞர்களுக்கு உண்டு.

மகாவம்சத்தில் வரும் எல்லாளன் – துட்டகைமுனு போரில் எல்லாளனைக் கொன்று ஆட்சிபுரிந்து பின்னர் இறந்த துட்டகைமுனுவின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த சர்ச்சை இன்றும் பல விவாதங்களுக்குள் சிக்கியுள்ளது. அந்த சர்ச்சைகளுக்கு ஒரு காரணம் நெவிலின் கண்டுபிடிப்பும் கூட. நெவில் கண்டுபிடித்தவற்றில் சிங்கள நாட்டுப்புற பாடல்களில் இது பற்றி அறியக் கிடைக்கின்றன. 

துட்டகைமுனு நான்கு நாகக்கன்னிகளை பாலியல் வல்லுறவு புரிந்ததாகவும் அதனால் திசாவெவ பகுதியில் நாகம் தீண்டி விஷமேறி துட்டகைமுனு இறந்ததாகவும் மரபுவழி வந்த நாட்டுப்புற சிங்களப் பாடல் ஓலைச் சுவடிகளில் பதியப்பட்டுள்ளது. சிங்களவர்களின் புனிதக் காவியத் தலைவனாக போற்றப்படும் துட்டகைமுனுவின் இறப்புக் காரணத்தை ஒழித்து மறைத்து விட்டு ஏனைய இனங்களுக்கு எதிரான கருத்துகளை மட்டும் கையாளும் போக்கே இன்று எஞ்சியுள்ளது.

இலங்கை குறித்து ஆய்வு செய்தவர்களிலேயே ஒரு பல்துறை சார்ந்த ஆய்வாளராக ஹியு நெவில்  ஒருவரையே குறிப்பட முடியும். மானுடவியல், தொல்லியல், தாவரவியல், இனப்பண்பாட்டியல், நாட்டுப்புறக் கதைகள், புவியியல், நிலவியல், வரலாறு, புராணம், பாளிச்சுவடித்துறை, வரலாற்றாய்வின், மற்றும் விலங்கியல் என அனைத்து துறையிலும் அவர் ஆழமான அறிவைக் கொண்டிருந்தார். எனவே தான் அவரது கண்டுபிடிப்புகளும் இத்தனை ஆளுமையையும் உள்ளடக்கிய பலமான மூலமாக இன்று நம்மிடையே பயன்படுத்தப்பட்டு வருகிறது.


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates