Headlines News :
முகப்பு » » இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் (தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 5) - திலக்

இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் (தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 5) - திலக்

 கடந்த வாரம் முள்ளுத்தேங்காய் 4 ல் மொனராகலை பற்றி பேசுவோம் எனகுறிப்பட்டதனால் 'முள்ளுத் தேங்காய்க்கும் மொனராகலைக்கும் என்ன தொடர்பு ' எனும் கேள்வியை இந்தத் தொடர் எழுத காரணமாக இருந்தவர்களில் ஒருவரான லுணுகலை ஶ்ரீ எழுப்பியிருந்தார். கூடவே 'இத்தனை வேலைப்பளுக்களுக்கு மத்தியில் ஒரு தொடரை அதுவும் முள்ளுத் தேங்காய் எனும் யாரும் அறிந்திராத ஒரு விடயம் பற்றி எழுதுகிறீர்களே.... அதுபற்றி கொஞ்சம் பேசவேண்டும்' என மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தொடர்பில் வந்தார்.

மேல் எழும்பிய இரண்டு கேள்விகளுக்கும் தனிப்பட்ட ரீதியில் பதில் வழங்கியிருந்தாலும் எல்லோருக்குமாக அந்த பதில்களை இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமானது. முதலில் தெளிவத்தையாரின் கேள்விக்கான பதில்.

மலையக சமூகம் பெருந்தோட்டத்துறைத் தொழிலை பின்புலமாகக் கொண்டு உருவான ஒரு சமூகம். ஆரம்பத்திலேயே (பாகம் 1) தென்னைத் தொழிலில் இருந்து எப்படி நாம் ஓரம் கட்டப்பட்டோம் என்பதை குருநாகல் - குளியாப்பிட்டிய எல்லைக் கிராமத்தில் என்க்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்திருந்தேன். இன்னும் விரிவாக அந்த மலையக மக்களின் 'தென்னை' வாழ்க்கைப் பற்றி எழுத வேண்டியுள்ளது. 'தேயிலை' வாழ்க்கை பற்றி எழுதிய மலையக இலக்கியம் 'றப்பர்' வாழ்க்கை பற்றி மிக குறைவாகவும், 'தென்னை' வாழ்க்கைப் பற்றி அறவே எழுதாமலும் விட்டிருக்கிறது. ஆய்வாகவோ, அல்லது புனைவாகவோ மலையக மக்களின் வாழ்க்கைக் கோலம் தொழில்சார்ந்த சூழலில் எழுதப்பட்டு வந்துள்ளது. ஆனால் தென்னைத் தொழில் சார்ந்து 'தென்னை ஓலைகொண்டு வேயப்பட்ட ஒரு லயம்' தொடர்பில் இதுவரை நான் வாசித்ததில்லை. ஆனால் அப்படியான லயங்களும் அதுசார்ந்த வாழ்க்கையும் இருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். நம்மவர்கள் அங்கு தேர்தல் காலத்தில் சென்று போட்டியிட்டு 'வாக்கு' கேட்டிருப்பது எனக்கு நினைவிருக்கிறது. அது குருநாகல் மாவட்டம். இப்போது கூட அத்தகைய 'தென்னை ஓலை வேயப்பட்ட கூரை லயங்களுக்கு' என்னை அழைத்துச் செல்ல தயாராகிறார் இளம் எழுத்தாளரும் ஆய்வாளருமான சுப்பையா கமலதாசன். விரைவில் அங்கு பயணம் செய்து அத்தகைய 'தென்னை ' மலையக வாழ்க்கைப் பற்றி பதிவுகளைத் தருகிறேன்.

இப்படியான ஒரு பதிவுதான் மொனராகலை பற்றியதும். மொனராகலை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 15000 மலையகத் தமிழ் மக்கள் வாழக்கூடும். ஆனால் அவர்களின் வாழ்க்கை மட்டத்தை பார்க்கின்றபோது பெருந்மோட்டக் கைத்தொழிலுக்காக அங்கு அழைத்து வரப்பட்டு சில பகுதிகளில் றப்பர், சில பகுதிகளில் தேயிலை பயிரிடப்பட்டு பின்னாளில் கைவிடப்பட்டு இப்போது மக்கள் வாழ வழியின்றி அன்றாடம் காய்ச்சிகளாக, அடிமைகள் போன்று கூலிகளாக நகரங்களில் மூடைத் தூக்குபவர்களாக மாறிப்போய் இருக்கிறார்கள். இந்த மொனராகலை மலையகத் தமிழ் மக்கள் நோக்கிவந்த ஒரு ஆபத்தை மலையகத்தின் எல்லை மாவட்டங்கள் தோறும், அல்லது பிரதான மாவட்டங்களின் எல்லைக்கிராமங்கள் தோறும் எம்மால் அவதானிக்க முடிகின்றது. அந்த ஆபத்து என்னவெனில்  மலையக எல்லை மாவட்டங்களான களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, மொனராகலை, கண்டியின் சில பகுதி (உன்னஸ்கிரிய, திகன, கலபட, ஹப்புகஸ்தன்ன) நுவரெலியாவின் சில பகுதி (உடபுசல்லாவை, ஹங்குரங்கத்தை) பெருந்தோட்டத்துறை சார்ந்த தேயிலை அல்லது இறப்பர் தொழில் இன்றைய காலத்தில் அடைந்திருக்கக் கூடிய நிலைமைகளை அவதானத்தில் கொள்ளவேண்டியுள்ளது. 

அண்மையில் கேகாலை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சப்புமல்கந்தை, அம்பன்பிட்டிய, வரக்காப்பொல, கந்தலோயா போன்ற பிரதேசங்களில் பெருந்தோட்டக்கைத்தொழில் வேகமாக கைவிடப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருப்பதையும் அதனால் மலையக தமிழ் மக்கள் ஜீவனோபாயம் கருதி வெளியேறிக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. இதனைப் புள்ளிவிபரங்களுடன் விபரிப்பதற்கு இரத்தினபுரி சார்ந்து அரசியல் செயற்பாட்டாளரான ஆசிரியர் சந்திரகுமார் தயாராகவே உள்ளார். கந்தலோயா எனும் மூன்று பிரிவுகளைக் கொண்டத் தோட்டம் இப்போது பெருந்தோட்டக் கைத்தொழில்களை இழந்து, இருக்கின்ற ஒரு தமிழ்ப் பாடசாலையை மாத்திரம் மையமாக வைத்து இயங்கும் குறைந்துசெல்லும் சனத்தொகையைக் கொண்ட பிரதேசமாக மாறிவருகிறது.

இவ்வாறு பெருந்மோட்டக் கைத்தொழிலில் இருந்து நமது மக்கள் ஓரம்கட்டப்பட்டு வரும் சூழலில் செயற்கையான ஒரு இடப்பெயர்வுக்கு மலையக பெருந்தோட்ட சமூகம் உள்ளாகி வருகிறது. இவ்வாறு இடம்பெயர்ந்து செல்வோர் எங்கு போகிறார்கள் எனக்கேட்டபோது 'அங்கங்க எங்கேயோ' போய்சேருகிறார்கள் எனும் பதிலே கிடைக்கப்பெறுகிறது. இதே மறுபக்கத்தில் மரபு ரீதியாக இருந்துவந்த தென்னை, றப்பர், தேயிலை எனும் பெருந்தோட்டப் பயிர்களுக்குள் 'முள்ளுத் தேங்காய்த் தொழில்' (பாம் ஒயில் ) வேகமாக பரவி வருகின்றது. 2006 ஆம் ஆண்டு களுத்துறை மாவட்டத்தில் பாம்ஒயில் அறிமுகமாகும் போது அங்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்திருக்கிறது. அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம், பாம் ஒயில் கைத்தொழிலுக்கு ஒத்துழையாமை போராட்டம் செய்திருக்கின்றார்கள்.  அவர்களுக்கு 'மேலை மலையகம்' எந்தவகையிலும் ஒத்துழைத்ததாகத் தெரியவில்லை. மேலும் சொல்லப்போனால் பாம் ஒயில் உற்பத்தி சார்ந்து பெருந்தோட்டக்கைத்தொழில் மாற்றப்பட்டு வருவதை இப்போதுதான் 'மேலை மலையகம்'  உணரத்தொடங்குகிறது என்று கூட சொல்லலாம்.  அதற்கு தெளிவத்தையாரே சாட்சி பகர்ந்தார். 'நான் இடையிடையே வீட்டுப்படம் பாவனைக்கு பாம் ஒயில் வாங்குகிறேன்' என தெளிவத்தையார் கேட்டு இன்னுமொரு ஆய்வுத் தேவையையும் வலியுறுத்திச் சென்றுள்ளார்.

இந்தக் கைத்தொழில் தொழில் மொனராகலை நோக்கித் தாவும் அபாயம் இருப்பதை உணர்ந்தே மொனராகலை மாவட்ட நிலைமைகள் குறித்து முன் கூட்டிய ஒரு பார்வையை தர முனைகிறேன். களுத்முறையில் மக்கள் பாம் ஒயில் தொழிலுக்கு ஒத்துழைக்க மறுத்தபோது கம்பனிகள் அவர்களை அழைத்துச்சென்று காலியில் மேற்கொள்ளப்படும் தோட்டங்களைக்காட்டி சமாதானம் செய்யப்பட்டதுபோல் களுத்முறையைக் காட்டி மொனராகலை சமாதானம் செய்யப்படலாம். இதில் உள்ள அச்சமே பாம் ஒயில் (முள்ளுத் தேங்காண்ணை) உற்பத்தி முறை, அதனால் சூழலுக்கு உண்டாகப்போகும் ஆபத்துகள், அதில் தொழிலாளர்களுக்கு ஏற்படப்போகும் சமூக ஆபத்துகள் குறித்த எச்சரிக்கை முன்கூட்டி அவசியமாகிறது. மலேசிய நாட்டில் இந்தக் கைத்தொழில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்ற அடிப்படையில் அங்கிருந்து படிப்பினைகளை நாம் பெறவேண்டியவர்களாக உள்ளோம்.

இந்த அத்தியாயம் இங்கிலாந்தில் நிற்கும் நாளில் எழுதப்படுகின்றது. இது ஒரு உணர்வு பூர்வமான பகுதியாக கூட அமைகிறது. விமானத்தில் வரும்போது '12  years a slave"  ( அடிமையாக 12 வருடங்கள்) எனும் திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது. சொலமன் பிளட் எனும் கறுப்பினத்தவர் அமெரிக்க பருத்திக் காட்டுத் தொழிலுக்கு நயவஞ்ச்சகமாக அவரின் சமூகத்துடன் இணைத்து அழைத்துச் செல்லப்பட்டு அங்கு எவ்வாறு அடிமைகளாக நடாத்தப்பட்டார்கள் என்பது பற்றி இந்தத் திரைப்படம் விபரிக்கின்றது. சொலமன் படித்த நாகரீகமான சமூக உறுப்பினராக இருக்கின்ற நிலையில்தான் அந்த நயவஞ்சக வலையில் தானும் வீழ்ந்து தனது சமூகத்தின் ஒருபகுதியையும் பலிகொடுத்து அடிமையாகிறார். 12 வருட அடிமை வாழ்வின் பின்னர் தனது விடாமுயற்சியால் அங்கிருந்து வெளியேறி ஊர்திரும்பும் சொலமன் தனக்கு நேர்ந்த அனுபவங்களை நூலாக எழுதி அதுவே திரைப்படமாக வெளிவந்து இருக்கிறது.  முதன்முதலாக 'இங்கிலாந்துக்கு ' பயணிக்கையில் இந்த படத்தை பார்க்க நேர்ந்தது, நமது மக்கள் அழைத்து வரப்பட்டதையும் அவைகுறித்த பதிவுகளின் அவசியத்தையும் உள்ளூற உணர்த்தியது. இப்படித்தானே இருநூறு வருடங்களுக்கு முன்னர் எம்மவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பார்கள். இந்தப் படத்தின் எழுத்தோட்ட ஆரம்பத்தில் இந்த திரைப்படம் வன்முறைகளை காட்டுவதால் சிறுபிள்ளைகள் பார்வையிடுவதில் கவனம் தேவை என ஒரு எச்சரிக்கை செய்யப்படுகின்றது. நமது தமிழ் திரைப்படங்கள் காட்டும் வன்முறைகளுடன் ஒப்பிடும்போது அங்கு காட்டப்படும். வன்முறைகள் ஒன்றும் பாரியதாக தெரியவில்லை. 12 மணித்தியாலம் விமானத்தில் அமர்ந்தாகவேண்டிய நிலையில் கூடவே 'பூலோகம்' (இயக்கம் இரவிச்சந்திரன்இ கதாநாயகன் ஜெயம் ரவி) எனும் புதிய தமிழ்த் திரைப்படத்தையும் பார்க்க நேர்ந்தது. வழமையான கோமாளித்தனங்கள் இருந்தபோதும் கூட இறுதிக்கட்டத்தில் அந்த பூலோகம் விடும் எச்சரிக்கை மிக முக்கியமானது. நம்மைச்சூழ நிலவும் ஒவ்வொரு அசைவுக்கும் பின்னால் ஒரு அரசியல் பின்புலம் இருப்பது சுட்டிக்காட்டப்படுகின்றது. நாம் அவதானமாக இருக்க வேண்டும் என்பது  வலியுறுத்தப்படுகின்றது.அந்த காட்சிக்காக இங்கே பூலோகத்தை பரிந்துரைக்கிறேன். இயக்குனர் 'பூலோகம்'(Global) என கதாநாயகனுக்குப் பெயரிட்டு ஒரு குறியீட்டை முன்வைக்கிறார்.

இங்கே எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் விபரங்கள் கூட சொலமன் பிளட் எழுதிவைத்துவிட்டு சென்றது போன்ற ஒரு நோக்கம் கருதியதுதான். நமது மலையக மக்களின் வரலாறுகள் பற்றி புனைவுகளும், அபுனைவுகளும் முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவை எல்லாம் வாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டு சமூக பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படல் வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடுதான் இந்த தொடரும் கூட முன்வைக்கப்படுகின்றது. டொனவன் மோல்ரிச் சின் bitter berry bondage  நூலை இங்கே லன்டனில் திரு. காதர் அவர்களின் நூலகத்தில் தொட்டுப்பார்க்க கிடைத்தது. கூடவே பி.ஏ.காதர் மோகன்ராஜ் எனும் பெயரில் எழுதிய 'இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்' நூலையும் கூட பல ஆண்டுகளுக்கும் பின்னர் அவர் கரங்களில் தர தொட்டுப்பார்க்க கிடைத்தது. தொழிற்சங்கவாதி எஸ்.நடேசன் எழுதிய "history of upcountry Tamils in Sri Lanka  நூல் பற்றிய ஞாபகமூட்டல் நிகழ்ந்தது. காரணம், "Endless Inequality" - the rights of the plantation Tamils in Sri Lanka  எனும் நூல் லன்டனில் வெளியாகி இருக்கிறது. யோகேஸ்வரி விஜயபாலன் எனும் சட்டத்தரணி அந்தப் பெரிய புத்தகம் ஒன்றை எழுதும் தேவை வெறுமனே எழவில்லை. இப்படி சர்வதேச ரீதியாக பேசப்படவேண்டிய எழுதப்பட வேண்டிய பல்வேறு மலையக விடயங்கள் நம்மிடையே விரிந்து கிடக்கிறது. களுத்துறை முள்ளுத்தேங்காய்த் தோட்டங்களில்  சிதறும் கொட்டைகளை நமது தொழிலாளர் மக்கள் பொறுக்கிச் சேர்த்து பையிலிடுவதுபோல சர்வதேசம் எங்கும் சிதறிவாழும் மலையக உணர்வாளர்கள் ஒன்று திரட்டி உணர்வு பெறவேண்டிய காலத்தில் இந்த முள்ளுத்தேங்காய் நமது சூழலுக்குள் பெருந்தோட்டக் கைத் தொழிலாக உள்வருவதை நாம் அவதானமாக கையாளவேண்டியவர்களாக உள்ளோம். அதுவரை மீண்டும் தலைப்பை வாசிக்க... தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத் தேங்காய் எண்ணைக்கு ...

(உருகும்)
முழுமையாக நூலை வாசிப்பதற்கு...
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates