"கூடியவிரைவில் நான்கைந்து சோமராமக்கள் இந்த நாட்டில் உருவாகப் போகிறார்கள்."
என்று ஞானசார தேரர் இப்போது மிரட்டியிருகிறார். (“அத” பத்திரிகை -09.02.2017)
சென்ற வருடம் ஜனவரி 26 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க “இந்த நாட்டில் புத்த ரக்கித்த, சோமராம போன்றோருக்கு எந்த இடமும் கிடையாது” என்று பாராளுமன்றத்தில் கூறினார். ஞானசார தேரரை கைது செய்வதற்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்த போது தான் இந்த கருத்தை அவர் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
அது சரி இந்த சோமராம யார்? அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பிக்குதான் சோமராம தேரர்.
பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் விளைவாக பண்டாரநாயக்கவை கடும்போக்கு சிங்கள இனவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதனை கிழித்தெறியச் செய்ததோடு நிற்காமல் பிக்குவால் சுட்டுக் கொல்லப்பட்டார் பண்டாரநாயாக்க.
![]() |
சோமராம தேரோ சிவில் உடையில் நீதிமன்றத்திலிருந்து வெளிவரும் போது |
இன்று இனப் பிரச்சினைத் தீர்வுக்கு மீண்டும் அதே சமஷ்டி யோசனைகளும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான ஏற்பாடுகளில் முன்வைக்கப்பட்டு வருகிறது. உயிரைக் கொடுத்தென்றாலும் அதனை செய்ய விட மாட்டோம் என்கிற குரல்கள் இனவாத தரப்பிலிருந்து கடுமையாக எழத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சகல பௌத்த நிக்காயக்களையும் சேர்ந்த மகா சங்கத்தினர் ஒருமித்து காத்திருக்கிறார்கள். குறிப்பாக வடக்கு - கிழக்கு இணைப்பு. சமஷ்டி (அல்லது அதற்கொத்த தீர்வு) என்பவற்றை எதிர்த்தே தீருவோம் என்று உறுதியாக உள்ளார்கள். நாடெங்கிலும் ஊர்வலம், கூட்டங்கள் நடத்தி பிரச்சாரங்களையும் முடுக்கி விட்டுள்ளார்கள்.
சமீபகாலமாக ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு சிங்கள இனவாதிகளால் உருவாகியுள்ள உயிர் அச்சுறுத்தல் பற்றி நாம் அறிந்ததே.
இந்த பின்னணியில் இருந்து தான் ஞானசார தேரர் “சோமராம” உருவாகப் போகிறார்கள் என்று அச்சுறுத்தல் விடுத்திருப்பதை கவனிக்க வேண்டும்.
இன்று இந்த தீர்வு முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும் சதிக்கு பின்னால் நின்று தலைமை தாங்குவது மகிந்த ராஜபக்ஷ. அன்று பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்ப்பதில் பின்னின்று தலைமை தாங்கியது ஜி.ஆர்.ஜெயவர்த்தனா. சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு ஜே.ஆர் அளித்த பேட்டியொன்றில் (28.07.89 திசை பத்திரிகையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது) ஏன் அன்று பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்தீர்கள் என்று கேட்ட கேள்விக்கு “முதற் தடவையாக அதில் தான் வடக்கையும் கிழக்கையும் இணைக்க பண்டாரநாயக்க முயற்சித்தார்.” என்றார்.
“சமஷ்டி”, “வட-கிழக்கு இணைப்பு” என்பது சிங்களவர்களுக்கு தீண்டத்தகாத பேசுபொருளாகவும் அரசியல் சொல்லாடலாகவும் இன்று வளர்ந்துவிட்டுள்ளது. அதே சமஸ்டி உள்ளடக்கத்தை வேறு ஒரு பெயரில் அரசியல் அரங்கில் பயன்படுத்துவோம் இல்லையென்றால் தொடங்குமுன்னே முடித்து விடுவார்கள் என்று முனகும் பலரை நாம் இன்றும் காண முடியும்.
கடந்த 99 வருடகாலமும் நம்பிக்கைத் துரோகங்களினாலும், நம்பவைத்து கழுத்தறுத்த அரசியல் வரலாறு நிகழ்ந்த போதெல்லாம் சிங்கள தரப்பில் பேரினவாத சக்திகளின் ஆதிக்கம் வெற்றிகண்டுள்ளது. அதன் தொடர்ச்சியே 1957 சம்பவங்கள். 60 வருடங்களுக்குப் பின்னர் அன்று நடந்த காட்சிகள் அனைத்தையும் இன்றைய அரசியல் களத்தில் காண்கின்றோம்.
அன்று கிழித்தெரியப்பட்டதைப் போல இன்று யாப்பு கைவிடுவது தான் பாக்கி.
பண்டா செல்வா ஒப்பந்தம் = புதிய அரசியல் யாப்பு
ஜே.ஆர்.ஜெயவர்த்தன = மகிந்த
பண்டாரநாயக்க = மைத்திரிபால
சோமராம = ஞானசார?
“தர்ம யுத்தம்”
1956 அரசியல் மாற்றத்துக்கான போராட்டத்தை “தர்ம யுத்தம்” என்றே பெயர் சூட்டியிருந்தனர் சிங்கள பௌத்த தரப்பினர். பிரபல வரலாற்றாசிரியர் கே.எம்.டீ.சில்வா அந்த ஆட்சி மாற்றத்தை “மொழித் தேசியவாதத்தின் விளைவு” என்று அழைப்பார். மைக்கல் ரொபர்ட்ஸ் அதையே “கலாச்சார தேசியவாதம்” என்றே அழைக்கிறார்.
1956 ஆம் ஆண்டின் பௌத்தம் புத்துணர்ச்சியையும், எழுச்சியுணர்வையும் பெறுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் அந்த வருடம் புத்தரின் 2500 புத்த ஜயந்தி வருடம். அப்படி புத்த ஜயந்தி வருடம் என்று அதனை அழைத்தாலும் கூட அது புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததன் 2500 வருடமாகவே கொள்ளப்படுகிறது. அதாவது புத்தர் மரணித்த அந்த வருடம் கி.மு.544. அதே நாளில் தான் விஜயன் இலங்கை வந்தடைந்ததும், சிங்கள இனத்தின் உருவாக்கமும், இலங்கை ராஜ்ஜியமும் உருவாக்கப்பட்ட ஆண்டாகக் கொள்ளப்படுகிறது. இந்த சிறப்புகளும் பௌத்த உணர்வைத் தூண்டி பலன்களை அடைய வாய்ப்பு விரிந்தது என்றே கூறலாம்.
சிங்கள பௌத்த புத்தெழுச்சிக்கு வித்திட்ட பல முக்கிய அமைப்புகள் இயங்கின. பிக்கு பெமுன, பாஷா பெரமுன, ஏ.எச்.மெத்தானந்த தலைமையிலான பௌத்த தேசிய படை, சிங்கள மகா சபை என்பவற்றுடன் சுயபாஷா கொள்கையை வலியுறுத்திய பௌத்த தகவல் அறியும் ஆணைக்குழுவின் அறிக்கை (பௌத்த மகா சம்மேளனத்தின் தலைமையில்) போன்றன பலமான அழுத்தக் குழுக்களாக அதிகார அமைப்பை ஆட்டுவித்து வந்தது.
1956இல் சிங்களம் மட்டும் சட்டம் என்கிற அநீதிக்கு எதிராக தமிழரசுக்கட்சி நடத்திய உண்ணாவிரதத்தைப் போலவே சிங்களம் மட்டுமே அரச மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் பெரிய உண்ணாவிரதத்தை சிங்கள பேரினவாதத் தரப்பிலும் நடந்தது. அதற்குத் தலைமை தாங்கியவர் தான் எப்.ஆர்.ஜெயசூரிய.
பண்டாரநாயக்கவை சிங்கள பௌத்தர்களின் மீட்பராக உருவகித்துக் கொண்டிருந்தபோது பண்டா செல்வா ஒப்பந்தத்தைக் கிழிக்கக் கோரி ஐ.தே.கயும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. “முதல் காலடி” (“First step”) என்கிற வெளியீடோன்றை வெளியிட்டு இனவாத பரப்புரையில் ஐ.தே.க ஈடுபட்டது. அக் கட்சியில் உத்தியோகபூர்வ பத்திரிகையான “சியரட்ட” பத்திரிகையில் இந்த இனவாத பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டது. தமிழர்களுக்கு சமஷ்டி கொடுக்கப் போகிறார்கள் என்று அந்தப் பத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதிய ஜே.ஆர். வரைபடங்களையும் வெளியிட்டு சிங்கள மக்களுக்கு பயத்தையும், தமிழர் மீதான வெறுப்பையும் பரப்பினார். ஜே.ஆர்.ஜெயவர்தனா நிலையத்தில் அவர் எழுதிய இந்த கட்டுரைகள் அவரின் கையெழுத்துடன் இன்றும் காணக் கிடைக்கிறது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை விட தீவிர சிங்கள பௌத்தர் என்பதைக் காட்டுவதற்கு ஸ்ரீ ல.சு.க. தாம் ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்தது. அதே போல் தேர்தலில் வெற்றி பெற்றதும் பண்டாரநாயக்காவால் சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சத்தியாக்கிரகம் இருந்த தமிழரசுக் கட்சியினர் கொடுரமாக தாக்கப்பட்டு கலைக்கப்பட்டதுடன் அது கலவரத்தில் வந்து முடிந்தது. 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 1957 சுதந்திர பகிஷ்கரிப்பு செய்து, கறுப்புக் கொடியேற்ற முனைந்த நடராசன் எனும் இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் 1957 யூலை 20 திகதியன்று ஒரு மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கான எற்பாடுகளை செய்து கொண்டிருந்த வேளையில் தான் பண்டாரநாயக்கா தமிழ் மக்களின் எதிர்ப்பை கண்டு சமரசத்துக்கு வரத் தொடங்கினார்.
1957ஆம் ஆண்டு யூலை 27ஆம் திகதி நள்ளிரவு பண்டாரநாயக்கா-செல்வநாயகம் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தானது
![]() |
ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆரின் கண்டி யாத்திரை |
இவ்வொப்பந்தத்தைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சி நடாத்தவிருந்த மாபெரும் ஹர்த்தால் நிறுத்தப்பட்டது. இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டவுடன் தென்னிலங்கையில் ஆங்காங்கு தாக்குதல்கள் நடந்தன. ஒக்டோபர் 4இல் ஒப்பந்தத்தை எதிர்த்து 03.10.1957 அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே.க வின் பிரதித் தலைவருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் இந்த ஒப்பந்தத்தைக் கிழிக்கக்கோரி ஆயிரக்கணக்கான ஐ.தே.க உறுப்பினர்கள் கண்டிக்கு பாதயாத்திரை சென்றார்கள். கொழும்பிலிருந்து புறப்பட்ட இந்த பாதயாத்திரை துவேசம் கக்கும் கோசங்களை எழுப்பியபடி நகர்ந்தது. இம்புல்கொட சந்தி வரை மட்டுமே அந்த பாத யாத்திரை செல்ல முடிந்தது. கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.டீ.பண்டாரநாயக்க தலைமையிலான குழு இதனை நிறுத்தி திருப்பியனுப்பியது. ஒரு இடதுசாரியாக அறியப்பட்ட எஸ்.டீ.பண்டாரநாயக்க ஒரு வீரராக புகழப்பட்டார்.
ஒன்பது மாதங்களாக இவ்வொப்பந்தத்தை நடைமுறைப் படுத்துவதில் இழுத்தடிக்கப்பட்டது. 1958 ஏப்ரல் 8 அன்று பண்டாரநாயக்காவின் றோஸ்மீட் பிளேஸ் இல்லத்துக்கு முன் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களும் பிக்கு எக்ஸத் பெரமுனவைச் சேர்ந்த பிக்குமாரும் சத்தியாக்கிரகம் இருந்ததைத் தொடர்ந்து அவர்களின் முன்னால் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டதுடன். ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டதாக அன்றே பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இந்த துரோகத்தனம் சிங்கள அரசாங்கத்தின் முதற் துரோகமாகவும் அமைந்தது. இவர்களை நம்பிப் பயனில்லை என்ற நிலைக்கு இது கொண்டு சென்றது. மேலும் 1957இல் ”ஸ்ரீ” சட்டம் கொண்டு வரப்பட்டது. இவற்றை எதிர்த்து சாத்வீக முறையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து 1958 இனக்கலவரம் நடந்தேறியது தமிழ் மக்களுக்கெதிரான பலாத்காரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பல தமிழர்கள் இதில் கொல்லப்பட்டனர். வீடுகள் கொழுத்தப்பட்டன. அகதிகளாக்கப்பட்டனர். தமிழரசுக் கட்சி தடை செய்யப்பட்டதுடன் தொண்டர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டன ர், சுதந்திரன் பத்திரிகையும் தடை செய்யப்பட்டது.
![]() |
ரோஸ்மீட் இல்லத்திற்கு வெளியில் ஒப்பந்தத்துக்கு எதிரான பிக்குகளை சந்திக்கும் பண்டாரநாயக்க |
இதற்கிடையில் பண்டாரநாயக்காவும் 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் திகதி பிக்குவால் கொலை செய்யப்பட்டார்.
1944 இல் அரசாங்க சபையில் சிங்களமும் தமிழும் அரச உத்தியோகபூர்வ மொழி என்று வலியுறுத்திய ஜே.ஆர் 1956 இல் சிங்களம் மட்டும் கொள்கையை முதலில் தொடக்கிவைத்தார். அதைத் தொடர்ந்து தான் பண்டாரநாயக்கவும் தன்னை ஆட்சியில் அமர்த்தினால் 24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொணர்வதாக போட்டிக்கு வாக்குறுதி அளித்தார்.
அது போல 1926 இல் சமஸ்டியே இலங்கையின் இலங்கைக்கு சிறந்த அரசியல் தீர்வு என்று வலியுறுத்தி பிரசாரம் செய்த பண்டாரநாயக்க 1956 இல் சமஷ்டிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.
இந்த இருவரும் சுதந்திரத்துக்கு முன்னர் இருந்த நிலைப்பாட்டை – சுதந்திரத்துக்குப் பின்னர் மாற்றிக்கொண்டதற்கு இடையில் இருந்த இடைவெளியே பேரினவாதத்தின் வெற்றி என்பதைக் கவனிக்க வேண்டும். சுதந்திரமும், ஆட்சியும், அதிகாரமும் சிங்களவர்களுக்கு கைமாற்றப்பட்டதன் விளைவு எத்தகைய அநீதிகளை உருவாக்கியது என்பதை கவனிக்க வேண்டும். சற்று தாராளவாதிகள் போல இருந்தவர்கள் இனச்சார்பு நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டிய சிங்கள – பௌத்த அமைப்புமுறையை கணக்கில் எடுக்கவேண்டும். அதன் நீட்சி அதன் பின்னரும் தொடர்ந்தது. மேலும் பலத்துடன் தொடர்ந்து வருகிறது.
துரோகங்கள் தொடரும்...
26.07.1957 பண்டா - செல்வா ஒப்பந்தத்தின் உள்ளடக்கம்பகுதி – அ
நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியாக இலங்கை தமிழரசுக்கட்சி புரதிநிதிகளுக்கும் அப்போது ஆட்சியிலிருந்த பிரதமர் S.W.R.D.பண்டாரநாயக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. பேச்சுவார்த்தை ஆரம்பத்திலேயே சமஷ்டி அமைப்புமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு அல்லது பிராந்திய சுயாட்சியை ஏற்படுத்துவது அரச கருமமொழி என்ற அந்தஸ்த்தை (தனிச்சிங்கள சட்டம்) மாற்றுவது ஆகியவை தொடர்பானாடிப்படை விடயங்களில் மாற்றங்கள் செய்யமுடியாது என கலந்துரையாடலின் ஆரம்பத்திலேயே அமரர் பண்டாரநாயக்கா தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து தமிழரசுக்கட்சி பல அடிப்படைக் கொள்கைகள், கோட்பாடுகளைக் கைவிடாமல் மாற்று ஒழுங்குகளை ஏற்படுத்தமுடியுமா? என்பது பற்றி ஆராய இணக்கம் தெரிவித்தது. அரசின் பிராந்திய சபைகள் மசோதாவை ஆராய்ந்து உரிய யோசனைகளை முன் வைக்க முடியுமா என்று பிரதமர் தமிழருசுக்கட்சிக்கு ஆலோசனை வழங்கினார்.
இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்பாடுகள் கீழே..
மொழி விடயத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி சம அந்தஸ்த்து கோரிக்கையை வலியுறுத்தியது. ஆனால், இவ்விடயத்தில் பிரதமரின் நிலையை உத்தேசித்து இடைக்கால ஏற்பாடாக ஓர் உடன்படிக்கைக்கு வந்தனர். தமிழ் ஒரு தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படுவதும், வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிர்வாக அலுவல்கள் தமிழில் நடைபெறுவதும் மிக்கியமானவை என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். தான் முன் குறிப்பிட்டது போன்று உத்தியோக மொழிச்சட்டத்தை அழிக்கக்கூடிய எந்த நடவடிக்கையும் எடுப்பது சாத்தியமற்றது என்று பிரதமர் கூறினார். கருத்துப் பரிமாறலின் பின் இயற்ற உத்தேசிக்கப்படும் சட்டத்தில் இலங்கையின் சிறுபான்மையோரின் மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டுமென்றும், உத்தியோக மொழியின் நிலையைப் பாதிக்காத வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாக தமிழே இருக்கும் வகையில் பிருதமரின் நான்கு அம்ச திட்டத்தில் ஏற்பாடு இருக்க வேண்டிமென்றும், வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வசிக்கும் தமிழ் பேசுவோரல்லாத சிறுபன்மையோருக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்றும் இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
இந்திய வம்சாவளியினருக்கு இலங்கை குடியுரிமை வழங்குவது பற்றியும் குடியுரிமைச் சட்டம் பற்றியும் தமது கருத்துக்களை இலங்கைத் தகிழரசுக் கட்சிப் பிரதிநிதிகள் பிரதமருக்கு எடுத்து விளக்கி, விரைவிலிப்பிரச்சனை தீரவேண்டுமென்றும் வற்புறுத்தினர். இப்பிரச்சனை விரைவில் பரிசிலனைக்கு எடுத்டுக்கொள்ளப்படும் என்று பிரதமர் அறிவித்தார். இம்முடிவுகளின் காரண்மாக தம்து உத்தேச சத்தியாக்கிரக நடவடிக்கையை கைவிடுவதக தமிழரசுக்கட்சி அறிவித்தது.
பகுதி – ஆ
- வடமாகாணம் ஒரு பிராந்திய அலகாகவும் கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்திய அலகுகளாகவும் இருத்தல்.
- பாராளுமன்றத்தினால்அங்கீகரிக்கப்படுவதற்கு உட்பட்டதாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்திய அலகுகள் மாகாண எல்லைகளுக்கு அப்பாலும் ஒன்றிணைவதும் ஒரு பிராந்திய அலகு பலவாகப் பிரிவதும்.
- பிராந்திய சபைகளுக்கு நேரடியான தேர்தல்.
- விவசாயம், கூட்டுறவு, காணிகளும் காணி அபிவிருத்தியும், குடியேற்றம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில், கடற்தொழில், வீடமைப்பு, சமூக சேவைகள், மின்சாரம், நீர்ப்பாசனம், வீதிகள் உட்பட பிராந்திய சபைகளுக்கான விடயங்களைச் சட்டத்தில் உள்ளடக்குதல்,
- மத்திய அரசாங்கம் பிராந்திய சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்.
- வரி விதிப்பதற்கும் கடன் பெறுவதற்கும் பிராந்திய சபைகளுக்கு அதிகாரம் உண்டு.
- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் நிர்வாக மொழி.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...