Headlines News :
முகப்பு » » காணி அதிகாரம்; அரசியல் பேச்சுவார்த்தைகளும் நடைமுறைகளும் வேறுவேறா? - சபையில் திலகர் எம்.பி கேள்வி

காணி அதிகாரம்; அரசியல் பேச்சுவார்த்தைகளும் நடைமுறைகளும் வேறுவேறா? - சபையில் திலகர் எம்.பி கேள்வி


இன்று நாங்கள் புதிய அரசியலமைப்பு ஒன்றின் தேவை குறித்து கலந்துரையாடிக்கொண்டு இருக்கின்றோம். அதன்போது அதிகாரப்பகிர்வின் மிக முக்கியமான விடயங்களாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் அமைகின்றன. காணி அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது என பல்வேறு உரையாடல் இடம்பெறும் போது நடைமுறையில் நாட்டின் காணிகள் தொடர்பாக அவை பகிரப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடைமுறைகள் வேறானவையாக காணப்படுகின்றன. இது குறித்து காணி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
 பாராளுமன்றத்தில் இடம்பெற்ற காணி பாராதீனப்படுத்தல் மற்றும் மட்டுப்படுத்தல் திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே திலகர் எம்.பி மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

 அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

 நாட்டில் அதிகாரப்பகிர்வின் முக்கிய அம்சமாக காணி அதிகாரம் குறித்தே பேசப்படுகின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரச்சினைகளின் மையப்புள்ளியே இந்த காணி அதிகாரங்களை கொண்டமைந்ததாகவுள்ளது. ஆனால், உள்நாட்டில் காணி நிர்வாகம் தொடர்பான நடைமுறைகள் இந்த அரசியல் அதிகார பகிர்வு கலந்துரையாடலுக்கு மாறானதாக ஆங்காங்கே வெவ்வேறு அதிகாரத்தரப்பினரால் பராமரிக்கப்பட்டும் பகிரப்பட்டுவரும் சூழல் நிலவுவதனை அவதானிக்க முடிகின்றது.

 நமது நாட்டில் வெளிநாட்டவர் காணிகளை கொள்வனவு செய்வதுதொடர்பில் சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படுவது வரவேற்கத்தக்கது. கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த சட்டம் பல வெளிநாட்டவர்க்கு காணிகளை விற்க வழிசெய்தமை இதன் மூலம் தடுக்கப்படுகின்றது. அதேபோல உள் நாட்டில் வளம் கொழிக்கும் தேயிலை ரப்பர் தொழில்கள் முன்னெடுக்கப்படும் பெருந்தோட்டக் காணிகளை எடுப்பார் கைப்பிள்ளையாக கையாளும் நடைமுறைகள் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றன. இதனை அனுமதிக்க முடியாது. இது குறித்த முறையான சட்டம் ஒன்றை நிறைவேற்ற காணி

 அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இப்போது கூட நான் பிரதிநிதித்துவம் செய்யும் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள சிவனொளிபாதமலை அண்டிய பகுதிகளில் வெளியாருக்கு காணிகள் வழங்கப்பட்டு சட்டரீதியற்ற வகையில் சுற்றுலா விடுதிகளும் வியாபார தளங்களும் அமைக்கப்படுவதாக பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளில் அரச அதிகாரிகள் வெளியாருக்கு துணை போவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். முன்னாள் பிரதேச சபை தலைவர் ஜி.நகுலேஷ்வரன் தலைமையில் அங்கு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

 நமது பாரம்பரிய ஏற்றுமதிக் கைத்தொழிலான தேயிலை மற்றும் ரப்பர் இன்று வீழ்ச்சிப் போக்கில் சென்றுக்கொண்டிருக்கின்றது. அதற்காக பயன்படுத்தும் காணிகளை அதனை நிர்வகிக்கும் தனியார் கம்பனிகளும் அரச நிறுவனங்களான மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் அரச பெருந்தோட்ட யாக்கம் வெவ்வேறு தேவைகளுக்காக கையாண்டு வருகின்றன. திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆய்வாளருமான ஏ.எஸ். சுந்திரபோஸ், 'விற்பனைப் பண்டமாகியுள்ள பெருந்தோட்ட காணிகள்' என ஒரு கட்டுரையின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். காணியமைச்சர் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

 இப்போது வீழ்ச்சிப்போக்கில் சென்றுகொண்டிருக்கும் தேயிலைத் தொழில் நிர்வாக முறைமையை மாற்றியமைக்க முயற்சிகள் மேன்கொள்ளப்பட்டு வருகின்றது. மாற்றுத்திட்டத்தை முன்வைக்கும் தோட்டக் கம்பனிகள் காணி குறித்த எவ்வித நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துவதில்லை. அதேநேரம் நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் மூன்று அரசியல் கட்சிகள் மாத்திரம் அல்ல மூன்று தொழிற்சங்கங்களினதும் கூட்டணி என்ற வகையில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணிகளைப் பெற்றுக்கொடுக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எனினும் இப்போது அங்கு அந்த காணிகளைப் பராமரிக்கும் நிறுவனங்கள் நடந்துகொள்ளும் முறையைப்பார்த்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணிகளைப் பகிர மிச்சம் வைக்க மாட்டார்கள் போல தெரிகிறது. குறிப்பாக நாவலப்பிட்டி, கண்டி, மாத்தளை பகுதிகளில் அரச உடமையான காணிகள் தனியாருக்கு வேகமாக பகிரப்பட்டு வருகின்றது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என காணியமச்சர் ஜோன் அமரதுங்கவின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
 அண்மையில், மொனராகலை மாவட்டத்தை மையப்படுத்தி பெருந்தோட்டக்காணிகள் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை மொராகலை மக்கள் அபிவிருத்தி மன்றம் எனும் தன்னார்வ நிறுவனம் முன்nடுத்திருந்தனர். அந்த ஆய்வறிக்கை குறித்த கலந்துரையாடல்களுக்கு சென்றிருந்த சமயம் அங்கே பல் பெருந்தோட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் அங்கு வாழும் தொழிலாளர் குடும்பங்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பதான சேனைப்பயிர்ச்செய்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவலத்தை நான் நேரில் பார்வையிட்டேன். அங்கு தேயிலை, ரப்பர், கரும்பு என அனைத்து உற்பத்திகளும் கைவிடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் அல்லாத வெளியாருக்கு காணிகள் பங்கிடப்பட்டிருக்கின்றன. தொழிலாளர் மக்களோ சேனைப்பயிர்ச்செய்கை மூலம் அல்லாத அன்றாட கூலிகளாக அவல வாழ்க்கை வாழ்கின்றனர். இது மொனராகலை மாவட்டத்திற்கு மாத்திரமான நிலைமை என்று கொள்ள முடியாது. ஒட்டுமொத்த பெருந்தோட்டக் காணிகளையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் சூறையாடல் நிறுத்தப்படல் வேண்டும்.

 இன்றைய நல்லாட்சியில் மலையக மக்களின் வீட்டுரிமைக் காணியை நாங்கள் வென்றெடுத்திருக்கினறோம். வரலாற்றில் முதன் முறையாக மலையக மக்களுக்கான வீட்டுக்காணி உறுதியுடன் கூடியதாக வழங்கி வைக்கும் நிகழ்வு  ஜனாதிபதியின் கரங்களில் பெப்ரவரி மாதம் ஒன்பதாம் திகதி அக்கரப்பத்தன ஊட்டுவில் தோட்டத்தில் நடைபெறவுள்ளது. அதற்காக  நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அதேநேரம் 'நிலைத்துநிற்கும் அபிவிருத்தி ' இலக்குகளில் ஒன்றாக காடாக்கல் நடைமுறை பின்பற்றப்படுகின்றபோது பயிரிப்படாத காணிகளே காடாக்கலுக்கு உள்ளாக்கப்படல் வேண்டும். இயற்கையை  பாதுகாக்க மழை வீழ்ச்சியை அதிகரிக்க அது அவசியம் என்பதை நாம் அறிவோம். அதற்காக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தேயிலை மலைகளை காடாக்க அனுமதிக்க முடியாது.

 எனவே இத்தகைய காணி தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து உரையாக காணி அமைச்சு தனியான விவாதம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதோடு மொனராகலை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஹன்சாட் தேவைகளுக்காகவும் சமர்ப்பித்தார்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates