Headlines News :
முகப்பு » , , , , » ஜே ஆரால் மீண்டெழுந்த ஜப்பான் - என்.சரவணன்

ஜே ஆரால் மீண்டெழுந்த ஜப்பான் - என்.சரவணன்


இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மன், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் ஏனைய மேற்கத்தையே நாடுகளுக்கும் இடையில் கடும் போர் நிகழ்ந்து வந்தது. இந்தப் போரில் கிழக்காசிய நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக கைப்பற்றி வந்தது ஜப்பான். பல நாடுகளின் மீது போர் தொடர்ந்தும் இருந்தது. 1941இல் அமெரிக்காவையும் தாக்கியது.

ஐரோப்பாவில் ஜெர்மனை வீழ்த்துவதில் ரஷ்யா பெரும்பங்கு வகித்தது. அது போல ஜப்பானில் 1945 ஓகஸ்ட் மாதம் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களில் அமெரிக்கா அணுக்குண்டை போட்டு பாரிய மனிதப் பேரழிவை நடத்தியதுடன் மட்டுமன்றி அந்த நாட்டை பெரும் சேதத்துக்கு உள்ளாக்கி சரணடைய வைத்தது. அத்தோடு இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்தது.

ஜப்பான் இராணுவம் கலைக்கப்பட்டது. ஜப்பானை குற்றம் சாட்டி அமெரிக்காவின் நிரந்தர இராணுவத் தளம் அங்கு அமைக்கப்பட்டது. ஆசியாவில் உள்ள அமெரிக்காவின் மிகப் பெரிய விமானப்படைத்தளம் ஒக்கினாவில் தான் அமைந்துள்ளது.

இரண்டாம் உலகப்போரை அதிகாரபூர்வமாக முடிவுக்கு கொணர்வதற்காக 08.09.1951 அன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் 48 நாடுகள் சமாதான மாநாடொன்றை கூட்டினார்கள். மாநாட்டு மண்டபத்துக்கு வெளியில் 51 நாடுகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. ஜப்பானின் கோடி மட்டும் அங்கு காணப்படவில்லை. ஆனால் ஜப்பானை வரவழைத்திருந்தனர்.
அங்கு உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் “ஜப்பான் இதற்கு மேல் ஒரு இராணுவ அரசுமல்ல இரகசிய சமூகமும் அல்ல. அது புனருத்தாபனம் செய்யப்பட்ட நாடு. யுத்த உரிமையை கைவிட்டிருக்கிற அந்த நாட்டுக்கு பாதுகாப்பளிக்கும் கடமை ஐ.நாவுக்கு உண்டு” என்றார்.
அந்த மாநாட்டின் இரண்டாவது நாள் அனைத்து நாடுகளும் கையெழுத்திடுவதற்கான சமாதான ஒப்பந்தம் தயாராகியிருந்தது. ரஷ்யா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் ஜப்பானின் மீது  மேலும் தடைகளை போடவேண்டும் என்று உரையாற்றினர்.


ஏற்கனவே, ஹிரோஷிமா, நாகசாகி மீதான அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சால் சின்னாபின்னமான தேசத்தை அப்போதுதான் மீட்டெடுக்கும் பணியை தொடங்கியிருந்த ஜப்பானுக்கு இந்தப் பிரேரணை இன்னொரு அழிவென பதறியது. அந்த நிலையில், ஜே.ஆரின் அந்த உரை இழப்பீடு குறித்த அந்தத் தீர்மானத்தை அந்த மாநாடு கைவிடுவதற்கு முக்கிய காரணமானது.

அந்த மாநாட்டில் இரண்டாம் உலகயுத்தத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான இழப்பீட்டை ஜப்பான் வழங்க வேண்டும் என்கிற தீர்மானத்தை கொண்டு வந்தனர். அந்தத் தீர்மானம் மனிதாபிமானமற்றது என்று நீண்ட உரையாற்றினார் இலங்கை பிரதிநிதியாக கலந்துகொண்ட அன்றைய நிதியமைச்சர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன.


அந்த பேச்சு மிகவும் பிரசித்தமானது. பல வல்லரசு நாடுகள் ஜப்பானிடம் நட்ட ஈட்டை அறவிடுவதற்கான கோரிக்கைகளை உறுதியாக அந்த மாநாட்டில் முன்வைத்தபோது வறிய நாடான இலங்கையின் பிரதிநிதி தமக்கு எந்த நட்ட ஈடும் வேண்டாம் என்றார். அது ஜப்பானின் பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்றார். “அதிர்ஷ்டவசமாக எங்கள் நாடு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகவில்லை, ஆனால் விமானத் தாக்குதல்களினால் சேதங்களை உருவாக்கியிருந்தது....” என்றார்.

“நஹி வேறேன வேறானி” அதாவது “அன்பாலன்றி, வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழியில்லை” என்கிற புத்தரின் தம்மபதத்திலிருந்து மேற்கோள் காட்டி ஆற்றிய உரை அது.

இந்தப் உரையும் ஜப்பானுக்கு ஆதரவான பிரேரணையும் முடிந்ததும் பல நாட்டுத் தலைவர்களும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரித்தனர்.

இத்தனைக்கும் 2ஆம் உலகப்போரில் ஜப்பானால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கும். ஜப்பானிய விமானங்களால் கொழும்பு துறைமுகம், இரத்மலானை விமானத்தளம் (05.04.1942), திருகோணமலை துறைமுகம் (09.04.1942) ஆகியன தாக்கப்பட்டிருந்தன.

ஜப்பானை தண்டிக்கவேண்டும், நட்ட ஈட்டை சுமத்த வேண்டும் என்றிருந்த நாட்டுத் தலைவர்கள் அந்த உரையின் பின்னர் உருகினார்கள். ஒரு வசதி குறைந்த நாடொன்றே தமக்கு எதுவும் வேண்டாம், நலிந்த ஒரு நாட்டை மேலும் கஷ்டத்தில் தள்ளாதீர்கள் என்று கூறியதை கேட்டு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தமது முடிவைக் கைவிட்டன.

அந்த பிரேரணை மட்டும் நிறைவேற்றப்பட்டிருந்தால் கொரியா, சீனா, ரஷ்யா, கனடா போன்ற நாடுகள் ஜப்பானை மூன்றாக பிளவுபடுத்தி தனித்தனியாக ஆண்டிருக்கும். ஜப்பான் என்று இன்று இருக்கிற நாடே வரைபடத்தில் இருந்து காணாமல் போயிருக்கும் என்று கூறுவார்கள்.

ஜப்பான் மீண்டு எழுவதற்கு கைகொடுத்த ஜே.ஆரின் இந்த உரை அந்த நாட்டு மக்களுக்கு நெகிழ்ச்சியான வரலாற்று நினைவாக ஆக்கியிருக்கிறார்கள். ஜப்பானின் புத்தரின் படத்துக்கு அடுத்தபடியாக ஜே.ஆரின் புகைப்படத்தை வைத்து மரியாதை காலம் ஒன்று இருந்தது. இன்றும் பல வீடுகளில் காண முடியும். அந்த சம்பவத்தை அவர்கள் “மறு சுதந்திரம்” (“Re-independence”) என்கிற வார்த்தையால் அழைக்கிறார்கள். ஜே.ஆர். ஜெயவர்தனவுக்காக பல பௌத்த விகாரைகளில் நினைவுத்தூபி எழுப்பியிருக்கிறார்கள். அதில் அவரின் பிரசித்திபெற்ற “அன்பாலன்றி, வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழியில்லை” தம்மபதம் என்கிற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

மிகக்குறுகிய காலத்தில் ஜப்பான் உலகத்தில் ஏனைய வல்லரசுகளுக்கு நிகராக பொருளாதார ரீதியில் வளர்ந்து வந்ததும்; அந்த வரலாற்றுபூர்வமான நன்றிக்காக பல உதவிகளை இலங்கைக்கு செய்திருக்கிறது. இன்றும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளில் முன்னணி நாடாக ஜப்பான் திகழ்கிறது. சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் ஜப்பான் சமாதான தூதுவர்களில் ஒன்றாக பாத்திரமாற்றியிருந்தது. சமாதான காலத்தில் நோர்வே வழங்கிய நிதியுதவிகள் போலவே ஜப்பானும் சமாதானத்துக்காக கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கியது. யுத்தத்தின் பின் மீள் குடியேற்றத்துக்கும், பின்னர் கண்ணிவெடி அகற்றும் பணிக்காக 03 பில்லியன் நிதியையும் கொடுத்துதவியது.


1953இலேயே இலங்கையில் ஜப்பான் தூதரகத்தை நிறுவியது. ஜே.ஆர். ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஏராளமான நிதியுதவிகளையும், கடனுதவிகளையும் வழங்கியது. மேல்கொத்மலை மின்னுற்பத்தித்திட்டம், கொழும்பு துறைமுக விரிவாக்கத் திட்டம், மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதி, கட்டுநாயக்க விமானநிலைய அபிவிருத்தி, டெலிகொம் திட்டம், இரயில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், பாலங்கள் அமைப்பது என்று ஒரு தொகை அபிவிருத்திப் பணிகள் ஜப்பானின் உதவியால் இலங்கை பலனடைந்திருக்கிறது.

இலங்கையின் அடிப்படை உட்கட்டமைப்பு சார்ந்த திட்டங்கள், பேராதனை, ஜெயவர்த்தனபுர ஆஸ்பத்திரிகள் வைத்திய பரிசோதனை நிலையங்கள் என்பன மட்டுமல்ல இலங்கையின் ரூபவாஹினி நிறுவனத்தையும் ஜப்பான் தான் அன்றே அமைத்துக்கொடுத்தது. சுனாமி அழிவின் போது இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 50%வீதத்தை ஜப்பான் தான் வழங்கியிருந்தது.


2013 ஆம் ஆண்டு இலங்கை – ஜப்பானிய ராஜதந்திர உறவின் 60வது ஆண்டு நிறைவையொட்டி அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபஷ ஜப்பான் சென்றிருந்த வேளை இலங்கையின் அபிவிருத்திக்காக 57.8 பில்லியன் ரூபாயை இலங்கைக்கு வழங்கியது.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களின் போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்ததும் இந்தத தாமீக நன்றியுணர்வின் பின்னணியினால்தான். ஆனால் அந்த ஆதரவில் நியாயம் இல்லை என்பதை உணர்ந்ததும் வாக்களிப்பில் கலந்துகொள்வதைத் தவிர்த்தது.

ஏற்கெனவே ஜே.ஆர். நினைவாக ஜப்பானில் சிலைகளும், நினைவுக் கல்லும் சில இடங்களில் உள்ளன. ஜப்பானில் சுகியானோ பிரதேசத்தில் ஜே.ஆரின் சிலை பெரிய சிலையுடன் அவருக்கான அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. 2020இல் அது திறக்கப்படவிருக்கிறது. அந்த நாட்டில் வேறு நாட்டைச் சேர்ந்த ஒருவருக்காக கட்டப்படும் ஒரே ஒரு நினைவகம் அது மட்டும் தான். அங்கு அவரின் சான் பிரான்சிஸ்கோ உரை தினசரி ஒலிபரப்படவிருக்கிறது.

இலங்கை செய்ததற்கு பேருதவிக்கு நன்றிக்கடனாக இன்னும் இலங்கையின் பிரதான நட்பு நாடாக பல காலம் கைமாறு செய்துவருகிற நாடு ஜப்பான்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates