Headlines News :
முகப்பு » , , , , » 19வது திருத்தச்சட்டம் : 212 MPக்கள் தமக்குத் தாமே வைத்துக்கொண்ட சூனியம் - என்.சரவணன்

19வது திருத்தச்சட்டம் : 212 MPக்கள் தமக்குத் தாமே வைத்துக்கொண்ட சூனியம் - என்.சரவணன்


பாராளுமன்றத்தை ஜனாதிபதி சிறிசேன கலைத்தது தொடர்பிலான விசாரணை 13 அன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தனது விளக்கத்தை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்திருந்தார். அதன்படி அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமையவே கலைக்கப்பட்டிருப்பதாகவும் தற்போதைய முறைப்பாடுகளை நிராகரித்து தள்ளுபடி செய்யும்படியும் அவர் உயர் நீதிமன்றத்தைக் கோரியிருந்தார்.

இங்கு தான் நமக்கு இன்னொரு கேள்வி எழுகிறது. அதாவது ஏதேச்சதிகாரம் மிக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது அல்லவா 19வது திருத்தச் சட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று. அப்படியிருக்க தான் விரும்பும் வகையில் பாராளுமன்றத்தைக் கலைத்து மக்கள் ஆணையை மீறும் வழிகள் ஜனாதிபதிக்கு அந்த யாப்பின் மூலம் இருக்கிறது என்றால் அதற்கான பொறுப்பு யாருடையது. இப்போது “பாராளுமன்ற ஜனநாயகம் மீறப்பட்டுவிட்டது”, “மரபு மீறப்பட்டுவிட்டது”, “தார்மீகம் இழக்கப்பட்டுவிட்டது” என்று குய்யோ முறையோ என்று கத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரை பார்த்து கோபிக்க முடியும். அண்ணாந்து தான் உமிழ முடியும்.

19வது திருத்தச் சட்டம் எப்படி நிறைவேறியது?
19வது திருத்தச் சட்டம் 28.04.2015 அன்று பாராளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பின் பின் நிறைவேற்றப்பட்டபோது மொத்த 225 உறுப்பினர்களில் 215 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தார்கள். சரத் வீரசேகர மாத்திரமே எதிர்த்து வாக்களித்தார். 10 பேர் சமூகமளிக்கவில்லை. ஒருவர் (அஜித் குமார - முன்னிலை சோசலிசக் கட்சி)  நடுநிலை வகித்தார், சபாநாயகர் வாக்களிப்பதில்லை.

சமூகமளிக்காதவர்கள் பிரபா கணேசன், டீ. எம்.ஜயரத்ன, எச்.எல். பிரேமலால் ஜயேசகர, ஜானக பண்டார, கலாநிதி ஜகத் பாலசூரிய, வண. எல்லாவல மெத்தானந்த தேரர், கெஹலிய ரம்புக்வெல்ல, பசில் ரோஹண ராஜபக்ஷ, ரத்னசிறி விக்கிரமநாயக்க, அ. விநாயகமூர்த்தி.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ரியல் அட்மிரல் சரத் வீரசேகர மாத்திரமே அதற்கு எதிராக வாக்களித்தவர். இன்றைய இனவாத தரப்பின் முக்கிய பேச்சாளர் அவர். போர்க்குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்காக மகிந்த தரப்பில் சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் பிரதான ஆயுதம் அவர். ஜெனிவாவில் தமிழர் தரப்புக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர். 

ஆனால் 25.04.2015 அன்று தந்தை செல்வா நினைவு தினத்தின் போது சொற்பொழிவாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க 
“நாட்டின் பிரதான பிரச்சினைகளுக்குக் காரணம் சிங்கள பெரும்பான்மை அரசாங்க ஆட்சியே... அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொண்டு சிறுபான்மை சமூகங்கள் ஓரங்கட்டப்படுகின்றனர்... 19 வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவது சிங்களப் பெரும்பான்மை இனத்தின் அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்குத் தான்”
என்றார். அந்த பேச்சை அடுத்த நாள் சிங்களப் பத்திரிகைகள் பல சந்திரிகாவுக்கு எதிரான பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டன. 19வது திருத்தச் சட்டத்தை எதிர்த்த ஒரே ஒரே நபரான சரத் வீரசேகர சந்திரிகாவின் இந்த வாசகத்தைப் பாராளுமன்ற உரையில் பயன்படுத்திக்கொண்டார்.

ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைப்பதன மூலம் சிறுபான்மை இனங்களுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்றும், தமிழர்களும், பிரிவினைவாத உணர்வும் பலப்படும் என்றும் பாரளுமன்றத்துக்கு வெளியில் உள்ள இனவாதத் தரப்பினர் கொக்கரித்தத்தது போலவே பாராளுமன்றத்திலும் சரத் வீரசேகர கர்ஜித்தார்.
“நாட்டின் பிரதான பொலிஸ் பாதுகாப்புக்கு அதிகாரியான பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் கூட அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு பிரதமரின் கைக்கு செல்கிறது...
அன்று புலிகளுடன் போலிப் பேச்சுவார்த்தை நடத்திய ரணிலின் அரசாங்கத்தை ஒரே வருடத்தில் சந்திரிகாவால் கலைக்க முடிந்தது இந்த ஜனாதிபதிக்கு இருந்த நிறைவேற்று அதிகாரத்தால் தான். இப்போது இதன் மூலம் நான்கரை வருடங்களுக்கு பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாதபடி செய்யப்பட்டிருக்கிறது.”
என்றெல்லாம் அவர் உரையாற்றினார்.  இதுபற்றி சரத் வீரசேகர 24.12.2017 அன்று திவயின பத்திரிகைக்கு எழுதிய கட்டுரை முக்கியமாக கவனிக்கத்தக்கது.

மகிந்த குடும்பத்தினரை இலக்கு வைத்து முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சார்ந்த தரப்பினர் குற்றம் சுமத்தினர்.
  1. மூன்றாவது தடவையாக ஒருவர் ஜனாதிபதியாக போட்டியிட முடியாது.
  1. ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் வயதெல்லை 30இலிருந்து  35ஆக அதிகரிக்கப்பட்டமை.
  1. இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் பங்குபற்ற தகுதியற்றவர்கள்

ஆகிய திருத்தங்களை சுட்டிக்காட்டினார்கள்.

19வது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசியலமைப்பில் மொத்தம் 174 இடங்களில் திருத்துவதற்கான யோசனை 2015 மார்ச் 13 அன்று வர்த்தமானிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. அதில் இவையும் உள்ளடங்கும்.

நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடம் இருந்து பறிக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு அந்த அதிகாரத்தை வழங்குவது நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான இலட்சியம் என்று 2015 ஆரம்பத்தில் கூறப்பட்டது.

1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பில் பிரதான அம்சம் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி முறை. ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதை தவிர எதையும் செய்யும் அதிகாரம் தனக்கு இருப்பதாக கூறிக்கொண்டார் ஜே.ஆர். ஜெயவர்த்தனா. 

அப்பேர்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர் நடத்திய ஏதேச்சதிகார ஆட்சியினால் நாடு பட்ட துன்பங்கள் அதிகம். ஜனாதிபதியின் இந்த அதிகாரங்களை அகற்ற வேண்டும் என்று நாடளாவிய ரீதியில் எதிர்ப்பலை உருவானது. 90களின் ஆரம்பத்தில் இந்த அலை பெருகியது. சந்திரிகா 1994இல் ஆட்சியேறியபோதும் நிறைவேற்று ஜனாதிபதிமுறையை ஒழிப்பேன் என்றே சூளுரைத்தார். ஆனால் அவர் ஜே.ஆரை விட மோசமான நிலைக்குச் சென்று பொதுத் தேர்தலின் மூலம் தெரிவான ஆட்சியை ஒரே ஆண்டில் கலைத்தார். அப்போது விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்திக்கொண்டிருந்தது ரணில் ஆட்சி

அதன் பின்னர் மகிந்த மற்றவர்கள் செய்யத் தவறிய அந்த நிறைவேற்று அதிகார ஒழிப்பை தான் ஒழிப்பதாக உறுதியளித்துக்கொண்டு வந்தார். ஆனால் மகிந்த ராஜபக்ச அளவுக்கு இலங்கையில் இந்த நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்த ஒரு ஆட்சியாளரும் இல்லை எனும் அளவுக்கு நிலைமை உச்சம் பெற்றது. நிறைவேற்று அதிகாரங்களை இல்லாது செய்வதற்குப் பதிலாக 18 வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து ஜே.ஆர் உருவாக்கிய அதிகாரங்களை விட மேலதிகமான அதிகாரங்களை தனதாக்கிக்கொண்டார். அடுத்த தடவை தானே மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்காக இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக தெரிவாக முடியாது என்கிற அரசியலமைப்பு வரையறையை அகற்றினார். அதுமட்டுமன்றி முக்கிய அரச அதிகாரிகளின் நியமனங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தை இத்திருத்தத்தின் மூலம் தனதாக்கிக்கொண்டார்.


18வது திருத்தச் சட்டம் 09.09.2010அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளை அதற்கு ஆதரவாக வாக்களித்த தமிழர்கள் 
  1. பீ.திகாம்பரம்,
  2. பிரபா கணேசன்,
  3. ஜே ஸ்ரீ ரங்கா

ஆகிய மூவரே என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். முஸ்லிம்கள் தரப்பில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேரும் ஆதரவாகத் தான் வாக்களித்தார்கள்.

மகிந்த அரசின் கொடுமைகளை எதிர்த்து எதிர்க்கட்சிகளுடன் சமூக – ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்த போது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, நிறைவேற்றதிகாரத்தை ஒழித்தல் ஆகிய இரண்டு காரணிகளையும் முதன்மைப்படுத்தினர். அதை செய்வதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைப் பலத்தை உருவாக்கிக்கொள்ளும் நோக்குடன் பிரதான கட்சிகள் இரண்டும் மகிந்தவையும் எதிர்த்துக்கொண்டு வரலாற்றில் ஒன்றிணைந்தன. ஆனால் ஆட்சியமைத்த இந்த மூன்று ஆண்டுகளில் அவர்களால் அந்த இரண்டு பிரதான விடயத்தையும் சாதிக்க முடியவில்லை. 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரத்தை எதிர்பார்த்தபடி குறைக்கமுடியவில்லை. 1978இல் இருந்தது போல இன்றும் ஜனாதிபதி தான் முப்படைகளின் தளபதி.

இப்போது நிகழ்ந்துள்ள தேசிய நெருக்கடி அரசியலமைப்பு நெருக்கடியாக உருவெடுத்திக்கிறது. ஜனநாயக நெருக்கடியாக பூதாகரமாகியுள்ளது.

ஜனாதிபதியும், பாராளுமன்றமும், சட்ட மா அதிபரும், உயர் நீதிமன்றமும் ஆளாளுக்கு அரசியலமைப்பை வெவ்வேறு அர்த்தம் கொள்ளத் தக்க வகையில் வியாக்கியானப்படுத்துமளவுக்கு பலவீனமான ஒரு அரசியலமைப்பை ஆக்கியது யார் பொறுப்பு? ஜனநாயகத்தைப் இழுக்காகக் கூடிய ஓட்டைகளை அடைப்பதாகக் கூறிக்கொண்டு அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழிவகுக்கக்கூடிய அளவுக்கு ஓட்டைகளை மிச்சம் வைத்தவர்கள் யார்? இதுவா மாதக்கணக்கில் விவாதித்து கொண்டு வந்த திருத்தம்? இன்று ஜனாதிபதியைக் குற்றம் கூறுபவர்கள் தமது அசட்டைத் தனத்தை சுயவிமர்சனம் செய்துகொள்வார்களா? நாட்டை தாங்கி வைத்திருக்கும் அரசியலமைப்பின் ஓட்டைகளால் நாடு வரலாறு காணாத பாரிய நெருக்கடியை சந்தித்திருகிறதே அதற்கு பொறுப்பேற்பார் யார்? அரசியலமைப்பை திருத்தும் அளவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மீண்டும் இலங்கையின் வரலாற்றில் அமைவது என்பது அவ்வளவு எளிதான காரியமா? இன்னும் இந்த நாடு எத்தனை காலம் தான் அதற்குத் தவம் இருக்க வேண்டும்?

நன்றி - அரங்கம்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates