தோழர்களே!
கடந்த சனியன்று (24) என்னைத் தேடி பொலிஸ் குழுவொன்று கொழும்பிலுள்ள எனது வீட்டுக்கு நடு ராத்திரி 1.30 மணியளவில் சென்றுள்ளது. முதலில் அவர்கள் வீட்டுக்கதவை பெரும் சத்தத்துடன் தட்டியதில் எனது தாயார் பீதியுடன் யார் என்று கேட்டிருக்கிறார். நாங்கள் போலீசில் இருந்து வந்திருக்கிறோம் என்று சத்தம் வந்திருக்கிறது. வந்தவர்கள் மூவர். முன்னால் வந்து விசாரித்துக்கொண்டிருந்தவர் அவர் அணிந்திருந்த நட்சத்திரங்களும், அதிகளவு பெட்ஜ்களும் அவர் ஒரு உயர் அதிகாரி என்பதை உணர்ந்துகொண்டதாக அம்மா கூறினார்.
அம்மா பீதியுடன் சென்று கதவைத் திறந்திருக்கிறார்.
“இது சரவணனின் வீடு தானே... ஆளைக் கூப்பிடுங்கள்.." என்று கேட்டிருக்கிறார்கள்.
“அவர் இங்கே இல்லை” என்று அம்மா கூறியிருக்கிறார்
“அப்படியென்றால் எங்கே” என்று இன்னொரு போலீஸ்காரர் கேட்டிருக்கிறார்
“வெளிநாட்டில்” என்றிருக்கிறார் அம்மா
“வெளிநாட்டில் எங்கே” என்று மீண்டும் பொலிஸ்காரர் வினவ
“நோர்வேயில்” என்று கூறியிருக்கிறார்.
தூசனத்தால் கடுமையாகத் திட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அதிகாலை எனக்கு எனது தங்கையிடம் இருந்த தொலைபேசி அழைப்பு வந்தது. இவர்கள் வந்ததற்கான காரணங்கள் ஏதும் எனக்குப் புலப்படுகிறதா என்று கேட்டாள். உறுதியாக சொல்லமுடியவில்லை என்றேன். நிலைமை குறித்து சற்று சீரியஸாக உரையாடிக்கொண்டோம். வந்தவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று சுய அறிமுகம் செய்யும் மரபு எங்கே நம் நாட்டுப் பொலிசாரிடம் இருந்திருக்கிறது. எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்கும் துணிச்சல் தான் மக்களுக்கு - குறிப்பாக தமிழர்களுக்கு எங்கு இருந்திருகிறது?
ஒரு பொலிஸ் முறைப்பாட்டை செய்வதன் மூலம் மேலதிகமாக அறிந்துகொள்வதற்கும், தற்காப்புக்கும் உதவலாம் என்கிற முடிவுக்கு வந்தோம். அதற்கான சட்டவாய்ப்புகளை ஆராய்ந்தோம். வழக்கறிஞரும் ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான தோழர் ஜனரஞ்சனவோடு உரையாடிதன் பின் எமது பகுதி பொலிஸ் நிலையத்துக்கு அம்மாவும் தங்கையும் சென்று முறையிட்டிருக்கிறார்கள்.
தங்கையும் ஊடக நிறுவனத்தில் நீண்ட காலமாக பணியாற்றிவருபவர், ஒரு சமாதான நீதவானும் கூட அந்த அறிமுகத்துடன், எனது ஊடகப் பின்னணியையும் கூறித் தான் அவர்களை மரியாதையுடன் நடக்கச் செய்ய வேண்டியிருந்திருக்கிறது.
பதிவுகளைப் பார்த்துவிட்டு கோட்டை 911இல் இருந்து வந்தவர்களா என்றும் பார்க்கவேண்டும் என்று அந்த போலீஸ்காரர் கூறிக்கொண்டிருக்க, நள்ளிரவு வந்தவர்களில் ஒருவரை அங்கு அம்மா அடையாளம் கண்டிருக்கிறார்.
அதெப்படி போலிசார் வந்து விசாரித்ததை முறையிடமுடியும் என்றெல்லாம் வம்பு பண்ணியிருக்கிறார் அந்த பொலிசார்.
"ஏன் வந்தீர்கள்.." என்று அம்மா கேட்டதற்கு நான் தான் (சரவணன்) தொலைபேசியில் தொடர்புகொண்டு வீட்டில் பிரச்சினை என்று கூறி அழைத்தேனாம்.
சரி... அது அனாமதேய தொலைபேசி அழைப்பாக நாம் கருதிக்கொண்டால் கூட,
ஒரு வீட்டில் பிரச்சினை என்றதும் அந்தளவு வேகமாக வந்து தீர்க்கும் அளவுக்கு அந்தளவு நல்லவனாடா நீங்கள்... அதுவும் பெரிய அதிகாரிகளுடன். அமைதியான இருட்டுச் சூழலில் இருந்த வீட்டின் கதவை உடைப்பது போல ஏன் தட்டினீர்கள்? ஏன் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதை அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை? ஏன் எனது தாயை தூசனத்தால் திட்டினீர்கள்?
தங்கை அவர்களிடம் “அப்படி அண்ணா தொலைபேசியில் அழைத்திருக்க வாய்ப்பில்லை. அண்ணாவுடன் நாங்கள் கதைத்தோம் அப்படி அவர் யாருக்கும் தொலைபேசி அழைக்கவில்லை” என்றும் தங்கை விளக்கியிருக்கிறார்.
இந்த உரையாடல்; இறுதியில் உத்தியோகபூர்வமாகத்தான் வந்தோம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்று முறைப்பாடின்றி கலைக்கப்பட்டிருக்கிறது.
நேரடியாக என்னைத் தூக்க வந்தவர்களா? அல்லது குடும்பத்தை மிரட்டி பீதிக்குள் வைத்திருக்க எடுக்கப்பட்ட முயற்சியா என்று தெரியவில்லை.
இந்த இடைவெளிக்குள் எனது பத்திரிகைத் தோழர்களுக்கும், மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சில சிங்களத் தோழர்களுடன் உரையாடி அவர்களினதும் ஆலோசனைகளை பெற்றேன். அவர்களை சற்று Alert பண்ணினேன். ஜே.வி.பி தலைவர் அனுரா குமார திசாநாயக்கவின் கவனத்துக்கு கொண்டுபோனார் ஒரு தோழர்.
ஒரு தமிழ் அரசியல் தலைவர் ஒருவருக்கு நட்பு பூர்வமாக இதனை தெரிவிக்க முயற்சித்தேன் அவரசமாக தொடர்புகொள்ளும்படியும் வேண்டியிருந்தேன். ஆனால் அவர் ஏனோ இந்த நிமிடம் வரை திருப்பி தொடர்புகொள்ளவில்லை.
2014 ஆம் ஆண்டு (கோட்டபாயவின் அட்டகாசம் தலைதூக்கியிருந்த நேரத்தில்) இலங்கைக்கு சென்றிருந்த போது கோட்டை பொலிசில் இருந்து வந்ததாகக் கூறி சிவில் உடை தரித்த புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் என்னைத் தேடி வந்தார். என்னைப் பற்றி நிறைய விசாரித்துவிட்டுச் சென்றார். அப்போதும் உடனடியாக அரசியல் பிரமுகர்களாக இருந்த முக்கிய சிங்களத் தோழர்களுக்கு விடயத்தை தெரிவித்தேன். என்னை உடனடியாக நாட்டை விட்டு போகும்படி ஆலோசனை கூறினார்கள். தற்போதைய நிலைமை சரியில்லை என்றும் நான் நோர்வே திரும்பும்வரை எனது வீட்டில் - குறிப்பாக இரவு நேரங்களில் தங்கியிருக்க வேண்டாம் என்றும் கூறினார்கள். நாங்கள் ஏற்பாடு செய்திருந்த ஊடக பயிற்சிநெறியையும் கைவிட்டோம்.
அன்றே நான் கொழும்பை விட்டு வெளியேறி குற்றவாளியைப் போல வேறு இடங்களுக்கு ஒளிந்து திரிய நேரிட்டது. என்னுடன் பாதுகாப்புக்காக எனது உறவினர்கள் இருவர் வந்தார்கள். எனது தொலைபேசி சிம் கார்டை மாற்றிவிட்டு இருவரைத் தவிர வேறெவருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினேன். ஒன்றரை வயதுடைய கைக்குழந்தையுடன் இருந்த எனது மனைவிக்கும் கூட உண்மை நிலைமையைப் பற்றிக் கூறவில்லை. ஒரு பயணம் சென்று வருவதாக மட்டும் கூறிவிட்டுக் கிளம்பினேன். என் மனைவி என் விடயத்தில் அதிகம் பயப்படுபவர். பின்னர் நோர்வே வந்ததன் பின்னர் தான் நடந்ததைக் கூறினேன்.
2012 ஆம் ஆண்டு நான் பத்தாண்டுகளுக்குப் பின்னர் இலங்கை சென்றிருந்த வேளை என்னைப் பற்றி திவயின சிங்களப் பத்திரிகையின் பாதுகாப்பு பத்தியில் வெளிவந்த தகவல்களால் (பொய்ப் புரளிகளால்) எனது துணைவியும் குடும்பமும் கலக்கமடைந்திருந்தது. அதன் பின்னர் தொடர்ந்து மூன்று வருடங்கள் இலங்கை செல்கின்ற வேளைகளில் துணைக்கு ஆளில்லாமல் என்னை என் குடும்பத்தவர்கள் வெளியில் அனுப்புவதில்லை.
2012 ஆம் ஆண்டு நான் பத்தாண்டுகளுக்குப் பின்னர் இலங்கை சென்றிருந்த வேளை என்னைப் பற்றி திவயின சிங்களப் பத்திரிகையின் பாதுகாப்பு பத்தியில் வெளிவந்த தகவல்களால் (பொய்ப் புரளிகளால்) எனது துணைவியும் குடும்பமும் கலக்கமடைந்திருந்தது. அதன் பின்னர் தொடர்ந்து மூன்று வருடங்கள் இலங்கை செல்கின்ற வேளைகளில் துணைக்கு ஆளில்லாமல் என்னை என் குடும்பத்தவர்கள் வெளியில் அனுப்புவதில்லை.
சில வேளைகளில் இந்த சம்பவங்கள் பற்றிய அனுமானங்கள் மிகையானதாக இருக்குமோ என்று தோணலாம். இப்பேர்பட்ட அலட்சியங்களால் தான் நம் சக தோழர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காணாமல் போயிருக்கிறார்கள். எனவே இன்னும் திட்டமிடப்பட்ட கொஞ்சம் பணிகள் இருக்கின்றன அதுவரை விட்டுவையுங்களேன். வாழ விடுங்களேன்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...