Headlines News :
முகப்பு » , , , , » “Order Please…!” - இலங்கையின் “கதாநாயகர்கள்” - என்.சரவணன்

“Order Please…!” - இலங்கையின் “கதாநாயகர்கள்” - என்.சரவணன்


இன்றைய அரசியல் களத்தில் பாராளுமன்ற சபாநாயகர் பற்றி நிறையவே உரையாடப்பட்டுவருகிறது. குறிப்பாக தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரிய மீது ஆளும் மகிந்த தரப்பு; அவர் பக்கச்சார்பானவர் என்று பிரச்சாரம் செய்து வருவதுடன் அவரை தனிப்பட தாக்கிவருகிறார்கள். இலங்கையின் வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் இந்தளவு பேசுபொருளான சந்தர்ப்பம் இதற்கு முன்னர் இருந்திருக்க வாய்ப்பில்லை.

சபையை நடத்தவிடாத படி சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்து சேதப்படுத்தி, அங்கிருந்த அவரது ஆவணங்களையும், உபகரங்களையும் சேதப்படுத்தி, அவரை சபைக்குள் வரவிடாதபடி தடுத்தனர். அதையும் மீறி அவர் தனது கடமையை செய்ய பொலிஸ் பாதுகாப்பு சூழ தாக்குதல்களில் இருந்து பாதுகாத்தபடி வந்து வேறொரு ஆசனத்தில் இருந்தபடி சபையை நடத்துமளவுக்கு சம்பவங்கள் அரங்கேறின. இலங்கை ஆசியாவிலேயே மூத்த பாராளுமன்ற மரபைக் கொண்ட நாடு. ஆசியாவில் பல நாடுகள் வாக்குரிமை பெற்றிராத காலத்தில் இலங்கை 1931இலேயே ஆணுக்கும் பெண்ணுக்குமான சர்வஜன வாக்குரிமையைப் பெற்று வெகுஜன தேர்தல் முறைக்கு முன்னோடியாக ஆன மூத்த நாடு.

அந்த எடுத்துக்காட்டுக்கு உலக அளவில் மரியாதை உள்ள நாடும் கூட. அப்பேர்பட்ட பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் செயல்கள் ஆங்காங்கு நமது வரலாற்றில் நிகழத்தான் செய்திருக்கின்றன. ஆனால் உலகே பரிகசிக்கும் வகையிலான உச்சமான சம்பவங்கள் தான் இந்த மாதம் அரங்கேறின. சபாநாயகர் கரு ஜயசூரியவை பாராளுமன்றத்துக்கு வெளியில் மாத்திரமன்றி சபைக்குள்ளேயே மோசமான அவதூற்றுச் சொல்களால் தாக்குவதை வீடியோ பதிவுகள் உறுதிசெய்துள்ளன. சபாநாயகர் என்பவர் சபையை நடத்தும் தலைவர் மாத்திரமல்ல. அப்பதவி  நாட்டின் ஒரு உயர் கௌரவத்துக்கு உரிய பதவி.

மொலமூறே முதல்
இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் 1947ஆம் ஆண்டு நடத்தப்பட்டு அதன் பிரகாரம் உருவான பாராளுமன்றத்தின் முதலாவது சபாநாயகர் சேர் பிரான்சிஸ் மொலமூரே.

தமிழில் சபாநாயகர் என்று அழைக்கப்படுவதை சிங்களத்தில் “கதாநாயக” என்றே அழைப்பார்கள். ஒரு வகையில் இப்பதவியை “பாராளுமன்றத்தின் கதாநாயகர்” என்று சொன்னால் அது மிகையில்லை தான்.

சேர் அலெக்சாண்டர் பிரான்சிஸ் மொலமுறே பிரித்தானிய இலங்கையில் இலங்கை சட்டவாக்கப் பேரவை, இலங்கை அரசாங்க சபை ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தவர். டொனமூர் திட்டத்தின் கீழ் உருவான அரசாங்க சபைத்தேர்தலில் தெடிகம தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று அவையின் முதல்வராக தெரிவானவர். சுதந்திரம் அடைந்ததன் பின்னர் உருவான பிரதிநிதிகள் சபையில் சபாநாயகராக தெரிவானார். அரசாங்க சபையின் முதலாவது சபாநாயகராகராக தெரிவானபோதும் பதவிக்காலம் முடியுமுன் அவர் 1951இல் இறந்துபோனார்.

டொனமூர் காலத்தில் பெண்களின் வாக்குரிமைக்காக குரல் கொடுத்த சொற்பத் தலைவர்களில் இவரும் ஒருவர். அவரது மனைவி அடலின் மீதெனிய மொலமூரே தனது தந்தையாரின் மரணத்தைத் தொடர்ந்து ருவன்வெல்ல தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இலங்கை  அரசாங்க சபையின் முதலாவது பெண் உறுப்பினர்.

இரண்டாவது உலக யுத்தம் காரணமாக பல வருடங்கள் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டன. அதன் பின்னர் 1947இல் தான் மறு தேர்தல் நடத்தப்பட்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான டீ.எஸ்.சேனநாயக்கவை பிரதமராகக் கொண்ட அரசாங்கம் அமைக்கப்பட்டது.

1947இல் பாராளுமன்றம் கூடியபோது எதிர்க்கட்சி தரப்பில் அன்றைய குருநாகல் மாவட்ட உறுப்பினர் ஸ்ரீ நிஷ்ஷங்க மொலமூறேவுக்கு எதிராக சபாநாயகர் ஆசனத்துக்கு போட்டியிட்டார். இறுதியில் மொலமூரே அதிக வாக்குகளுடன் தெரிவானார்.

மொலமூரே காலத்தில் சபையில் நிகழ்ந்த பல சுவாசியமான சம்பவங்கள் உள்ளன.

ஒருமுறை தண்டகமுவே தொகுதி உறிப்பினர் I.M.R.A.ஈரியகொல்ல பாராளுமன்றத்தில் தனது பேச்சின் போது எதிர்த் தரப்பிலிருந்த அரசாங்க உறுப்பினர்களைப் பார்த்து “எனக்கு இந்த சேனாக்களும், புக்குசாக்களும், தேவிந்தலாக்களின் மீதும் நம்பிக்கை கிடையாது” என்று கூறிவிட்டார். ஈரியகொல்ல சபையில் தூசனம் பேசிவிட்டார் என்று கூறி சபாநாயகர் மொலமூரே அவரை சபையை விட்டு வெளியேற்ரும் அறிவித்தலைச் செய்தார்.

ஈரியகொல்ல உடனடியாகச் ஓடிச்சென்று அங்கிருந்த பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர்களின் பொறுப்பாளரை சந்தித்து தனது வசனத்தை விளங்கப்படுத்தி சபாநாயகருக்கு அதனை விளங்கப்படுத்தும் படி வேண்டினார்.

அவர் சபாநாயகருக்கு விளக்கத்தை அளித்தார். சிங்கள இலக்கியங்களில் வந்த ஒரு அரச அவையில் இருந்த புலவர்களின் பெயர்களே அவை என்றும் அது அவதூறுக்குரிய சொல் அல்ல என்றும் விளக்கினார்.

தான் தெரியாமல் செய்த தவறுக்கு வருந்துவதாகக் கூறி ஈரியகொல்லவிடம் மன்னிப்பு கோரினார் மொலமூரே. அதன் பின்னர் தனக்கு தெரியாத சொற்களை மொழிபெயர்ப்புப் பிரிவினரிடம் கேட்டு விளக்கம் பெரும் வழிமுறையை அவர் கைக்கொண்டார். தனது மொழி ஆளுமையை வளர்த்துக்கொள்ள அவர் பல இலக்கியப் புலவர்களுடன் நெருங்கிய தொடர்பையும் நட்பையும் பேணி வந்தார். இலக்கியவாதிகளை அழைத்து விருந்துகொடுத்து மகிழ்ந்தார்.

ஒரு முறை பாராளுமன்றத்தில் சபையை நடத்திக்கொண்டிருக்கும் போதே அவருக்கு ஏற்பட்ட நெஞ்சடைப்பினால் அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் இரண்டாவது நாள் காலமானார்.


மொலமூறேவுக்குப் பின்னர் சபாநாயகர் பதவியில் இருந்தவர்கள்
  • எல்பர்ட் எப்.பீரிஸ்
  • ஹமீட் ஹுசைன் ஷேக்
  • டிகிரி பண்டார சுபசிங்க
  • ஆர்.எஸ்.பெல்பொல
  • ஸ்டான்லி திலகரத்ன
  • ஹியு பெர்னாண்டோ
  • ஷேர்லி கொறயா
  • ஆனந்த திஸ்ஸ டீ அல்விஸ்
  • பாக்கீர் மாக்கார்
  • ஈ.எல்.சேனநாயக்க
  • எம்.எச்.மொஹமட்
  • கிரி பண்டார ரத்னாயக்க
  • அனுரா பண்டாரநாயக்க
  • ஜோசப் மைக்கல் பெரேரா
  • வி.ஜே.மு.லொக்குபண்டார
  • சமல் ராஜபக்ஷ
  • கரு ஜயசூரிய
இருபது வருடகாலமாக இலங்கையின் முக்கிய அமைச்சுப் பதவிகள் இரண்டை வகித்த சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர (இலங்கையின் சுதந்திரக் கல்வியின் தந்தை) தனது இறுதிக்காலத்தில் வறுமையில் காலம் தள்ளினார். இறுதியில் இயலாத நிலையில் அவர் அன்றைய சபாநாயகர் பெல்போலவிடம் “நான் எனது இறுதிக் காலத்தில் இருக்கிறேன். மிகவும் நலிந்த நிலையில் இருக்கிறேன். எஞ்சிய காலத்தைக் கழிக்க எனக்கு பிச்சை சம்பளமாவது போடுங்கள்” என்று எழுதினார். அப்போது அவரின் சிஷ்யனான சேர் ஒலிவர் குணதிலக்க ஆளுநராக இருந்த காலம். ஏதோ காரணங்களால் கன்னங்கரா ஓரங்கட்டப்பட்டு பழிவாங்கப்பட்டிருந்ததாக சில சிங்களக் கட்டுரைகளில் கூறப்படுகிறது.

பாக்கீர் மாக்கார் சபாநாயகராக பதவி வகித்த போது “எனது ஒரு கையில் அல் – குர் ஆன் இருக்கிறது. மறு கையில் தம்மபதம் இருக்கிறது. அவற்றின்படியே நான் ஒழுகுவேன்” என்றார். 1983 கலவரத்தைத் தொடர்ந்து அதே யூலையில் நிகழ்ந்த பாராளுமன்றக் கூட்டத்தில் அக்கலவரத்தின் சூத்திரதாரிகளில் ஒருவரான சிறில் மெத்தியூவின் இனவாத பரப்புரைக்கு எதிராக “இந்தப் பொய் பிரச்சாரங்களுக்கு சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது” என்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் குறுக்கிட்டார். ஆனால் பாக்கீர் மாக்கார் (ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்) அவரைப் பேசவிடாது மெத்தியூவை இனவாதம் காக்க அனுமதித்தார் என்கிற குற்றச்சாட்டு  அன்று எழுந்திருந்தது.

சுதந்தரத்திற்குப் பின்னரான இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் இன்று வரை தமிழர் எவரும் சபாநாயகராக தெரிவானது கிடையாது. சுதந்திரத்திற்கு முன்னர் அரசாங்க சபையில் 1936-1947 வரையான காலப்பகுதியில் வைத்திலிங்கம் துரைசுவாமி சபாநாயகராக பதவி வகித்திருந்தார்.

பாராளுமன்றத்தில் குறைந்த குறைய பேசி, நிறைய கடமைகளை நிறைவேற்றுபவர் சபாநாயகர். இலங்கையின் முதலாவது பிரஜையாக ஜனாதிபதி அழைக்கப்படுகிறார். இரண்டாவது பிரஜையாக பிரதமர் அழைக்கப்படுகிறார். மூன்றாவது பிரஜையாக அழைக்கப்படுபவர் பாராளுமன்ற சபாநாயகர். இலங்கையின் அரசியலமைப்பின்படி ஜனாதிபதி பதவி இழக்கும், துறக்கும் காலப்பகுதியில் அடுத்த ஜனாதிபதி தெரிவாகும் வரை சபாநாயகரே ஜனாதிபதியாக இருப்பார்.

சபாநாயகர்களை “கதாநாயகர்களாக” கௌரவித்து ஒழுகும் பாராளுமன்ற சம்பிரதாயம் எப்போது முடிவுக்கு வருகிறதோ அன்று பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஜனநாயகத்துக்கு சரிவு தான் எஞ்சும்.



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates