Headlines News :
முகப்பு » , , » தமிழகம் அனுப்பப்பட்ட தோட்டத்தொழிலாளர்களின் அவலம்

தமிழகம் அனுப்பப்பட்ட தோட்டத்தொழிலாளர்களின் அவலம்

19ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்
இலங்கையின் மலையகப் பகுதிகளில் இருந்து இலங்கை – இந்திய அரசுகளின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருப்பி அனுப்பப்பட்ட மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்நிலை இன்றும் மிகவும் மோசமாக உள்ளதாக ஹிந்து பத்திரிகை தெரிவிக்கின்றது. தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கூட்டுத்தாபனத்தால் நிரந்தர வேலை வழங்கப்பட்டோரில் 3850 பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. வரிசையாகக் கட்டப்பட்டுள்ள 400 சதுர அடி பரப்பையே கொண்ட இவ்வீடுகள் லையன்கள் ஆகவே உள்ளன. இவ்வீடுகள் தற்போது குடியிருக்க முடியாத அளவுக்கு சீரழிந்தும் உள்ளதாக அப்பத்திரிகைச் செய்தி தெரிவிக்கின்றது. இவ்வீடுகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாது உள்ளதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது.
இலங்கையில் இருந்து வருகின்ற தேயிலைத் தோட்டப் பணியாளர்களை மீளக் குடியமர்த்துவதற்காக 1975இல் உருவாக்கப்பட்ட தமிழ் நாடு தேயிலைத் தோட்டக் கூட்டுத்தாபனம் நீலகிரி மாவட்டத்தில் 8 பிரிவுகளில் 2513 இலங்கையில் இருந்து திரும்பிய குடும்பங்களை குடியமர்த்தி உள்ளது. இவர்களின் வீடுகளின் நிலை மட்டுமல்ல தொழில் நிலைமைகளும் கடினமானதாகவே உள்ளது.
இவர்கள் இன்னமும் தினக் கூலிகளாகவே உள்ளனர். இதுவரை இவர்கள் புடுங்குகின்ற தேயிலையின் நிறைக்கு ஏற்பவே கூலி வழங்கப்பட்டு வந்தது. தற்போது இவர்களுக்கு குறைந்தபட்ச தினக் கூலி 78 ரூபாய் உம் மேலதிக கொடுப்பனவாக 67 ரூபாய் உம் ஆக 145 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. 
இலங்கை பிரித்தானியாவின் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருந்த காலத்தில் 1870க்களில் இந்தியத் தமிழர்கள் மலையகத் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காகக் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் அன்றைய காலகட்டத்தில் அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட போது மோசமான கஸ்டங்களை எதிர்கொண்டதுடன் ஆயிரக் கணக்கில் உயிரிழந்தனர்.
1948இல் சுதந்திர இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றிய டி எஸ் செனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜிஜி பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் கொங்கிரஸ் ஆதரவளித்தது. ஜிஜி பொன்னம்பலம் அந்த அரசாங்கத்தில் அமைச்சராக்கப்பட்டார்.
மலையகத்தில் இருந்து கூடுதலான இடதுசாரிகள் பாராளுமன்றம் சென்றதனைத் தொடர்ந்து அதனைத் தடுக்கவும்; இனவாத அடிப்படையிலும் மலையகத் தமிழரின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. 1948இல் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டம், 1949இல் கொண்டுவரப்பட்ட இந்திய – பாகிஸ்தான் பிரஜாவுரிமைச் சட்டம் என்பவற்றின் கீழ் மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு; அவர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர். இப்பிரஜாவுரிமையைப் பறித்த அரசாங்கத்தில் அமைச்சராக ஜிஜி பொன்னம்பலம் (கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பேரன்)இருந்தார்.
மலையகத் தமிழரின் வாக்குரிமையைப் பறிக்க தமிழ் கொங்கிரஸின் தலைவர் ஜிஜி பொன்னம்பலம் அதரவளித்தமையே எஸ் ஜே வி செல்வநாயகம் தமிழ் கொங்கிரஸில் இருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியை உருவாக்கக் காரணமாய் இருந்தது.
ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீபம் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தமிழ் கொங்கிரஸ் மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொடுக்க போராடியதாகவும் அவர்களில் குறிப்பிடத்தக்க அளவினருக்கு அவர்கள் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுத்ததாகவும் உண்மைக்குப் புறம்பாகத் தெரிவித்து இருந்தார்.
1964, 1974 ஆகிய ஆண்டுகளில் இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட இரு நாட்டு உடன்படிக்கைக்கு அமைய 10 இலட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் இன்றும் கடினமான வாழ்வை எதிர்கொள்கின்றனர்.
நன்றி. தேசம்நெட்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates