Headlines News :
முகப்பு » , » வீரகேசரி ஆசிரியர் தேவராஜாவை TNA ஊடகத்துறையில் இருந்து வெளியேற்றியது

வீரகேசரி ஆசிரியர் தேவராஜாவை TNA ஊடகத்துறையில் இருந்து வெளியேற்றியது

- த ஜெயபாலன்


வீரகேசரி பத்திரிகையின் ஊடகத்துறையில் 25 ஆண்டுகள் சேவையாற்றி இலங்கையின் முதல்தர பத்திரிகை ஆசிரியராக இருந்த வி தேவராஜா பத்திரிகையின் ஊடகப் பகுதியில் இருந்து நிர்வாகப் பிரிவுக்கு மாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய தூதரகத்தினூடாகவும் வீரகேசரி இயக்குநர்கள் அவைக்கூடாகவும் வழங்கிய அழுத்தங்களை அடுத்து வி தேவராஜா அவரது ஆசிரியர் பொறுப்பில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார்
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிகையின் நிறுவனருமான பா உ சரவணபவனின் மைத்துனர் சு வித்தியாதரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஆகியோரே வி தேவராஜாவை வீரகேசரியின் ஆசிரியர் பதவியில் இருந்து வெளியேற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சு வித்தியாதரன் யாழ் உதயன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இந்தியத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து வி தேவராஜாவை ஆசிரியர் பீடத்தில் இருந்து வெளியேற்ற வற்புறுத்தி உள்ளனர். இந்த அழுத்தம் வீரகேசரி இயக்குனர் அவைக்கு இந்தியத் தூதரகத்தால் வழங்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் சு வித்தியாதரனும் இரா சம்பந்தனும் வீரகேசரியின் இயக்குநர் அவையினருடன் பேசி வி தேவராஜாவின் வெளியேற்றத்தை உறுதிப்படுத்தி உள்ளனர்.
வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர்கள்; வீரகேசரி தினசரி பத்திரிகைகளுக்கும், வாரமலருக்கும், வீரகேசரியின் வார வெளியீடுகளுக்கும் பொறுப்பாக இருந்தனர். ஆனால் வி தேவராஜா பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்ட போது வீரகேசரியின் தினசரி பதிப்புக்கு பிரபாகரன் என்பவர் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். வீரகேசரியின் வாரமலர் மெற்றோ மித்திரன் உட்பட்ட 5 சஞ்சிகைகளுக்கு வி தேவராஜா பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த வேலைப் பகிர்வு என்பதும் பிரித்தாளும் நோக்குடனேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
செப்ரம்பர் முற்பகுதியில் இருந்து வீரகேசரியின் தினசரி பத்திரிகைக்கு பொறுப்பாக இருந்த பிரபாகரன் வீரகேசரியின் வாரமலர் உட்பட வீரகேசரியின் சஞ்சிகைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட உள்ளார். வி தேவராஜா பதவி உயர்வு என்ற பெயரில் ஊடகத்துறையில் இருந்து நீக்கப்பட்டு நிர்வாகப் பகுதிக்கு மாற்றப்பட உள்ளார்.
வி தேவராஜா இலங்கையில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகுந்த கல்வித் தரமும் திறமையும் மிக்கவர் அவர் ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்திலேயே வீரகேசரி கூடுதல் வாசகர்களைக் கொண்டு திகழ்ந்தது. மேலும் “வி தேவராஜா தான் ஏற்றுக்கொண்ட, நம்புகின்ற கருத்துக்களை ஆணித்தரமாக எழுதத் தயங்காதவர்” என்கிறார் ஆய்வாளர் மு நித்தியானந்தன். ”இதுவே அவரை ஊடகத்துறையில் இருந்து வெளியேற்ற நிர்ப்பந்தித்தது” என்றும் “வி தேவராஜா வின் மலையகப் பின்னணியும் அதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்” எனவும் மு நித்தியானந்தன் தேசம்நெற் க்கு தெரிவித்தார். மலையகத்தை பூர்வீகமாகக் கொண்ட மு நித்தியானந்தன் வி தேவராஜாவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
வி தேவராஜா ஊடகத்துறையில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதன் பின்னணி:
வி தேவராஜா தமிழீழ விடுதலைப் புலிகள் மீது மிகுந்த மென்போக்கு உடையவர். அன்றைய கால கட்டத்தில் அவருக்கு மிகுந்த அச்சுறுத்தல் இருந்த போதும் அவர் தொடர்ந்தும் தனது ஊடகத்துறையில் தனக்கு நியாயம் எனப்பட்டதை ஆணித்தரமாக எழுதி வந்தார்.
2009 மே 18இற்குப் பின்னும் தேவராஜா தொடர்ந்தும் அரசுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் மிக உறுதியாகவே கருத்துக்களைப் பதிவு செய்து வந்தார். 2010 இல் லண்டனில் இடம்பெற்ற சர்வதேச தமிழ் பத்திரிகையாளர் ஒன்றியத்தின் மாநாட்டில் இலங்கை அரசு மீதான காட்டசாட்டமான விமர்சனத்தை வைத்திருந்தார். சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகவியலாளர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
மே 2009 இற்குப் பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான மென்போக்குடனேயே வி தேவராஜா காணப்பட்டார். “அவர் தீவிர தமிழ் தேசியவாதிகள் மீது குறிப்பாக கஜேந்திரகுமார் குழுவினருடன் கருத்தியல் நட்பு உடையவர்” எனத் தேசம்நெற்க்கு தெரிவிக்கிறார் ஆய்வாளர் இதயச்சந்திரன். வீரகேசரியில் பத்தி எழுதி வருகின்ற இதயச்சந்திரன் வி தேவராஜாவுடன் மிக நெருக்கமானவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் தலைமை மீது மிகுந்த மதிப்புடைய இதயச்சந்திரன் “மகிந்த அரசுக்கு எவ்விதத்திலும் குறையாத ஊடக அடக்குமுறையை தமிழ் தலைமைகள் கொண்டிருப்பதை இச்செயல் காட்டுகின்றது” எனத் தெரிவித்தார்.
வி தேவராஜா தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை கொண்டவர் என்றும் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் கட்சிகளின் தலைமைகள் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் என அவர் நம்புவதாகவும் அதனையே வி தேவராஜா தனது பத்தியில் எழுதி வருவதாகவும் இதயச்சந்திரன் குறிப்பிட்டார். இதற்காகவே தேவராஜாவை வீரகேசரியின் ஊடகப் பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறியாக இருந்ததாக இதயச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.
இதனை உறுதிப்படுத்திய மு நித்தியானந்தன் அரசாங்கத்துடன் என்ன பேசுகின்றோம் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட வேண்டும்; தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வேலைத்திட்டத்தை வெளியிட வேண்டும்; காலம் காலமாக தமிழரசுக் கட்சியினர் மேற்கொள்ளும் ஏமாற்று அரசியலை அனுமதிக்க முடியாது போன்ற தீவிரமான அரசியல் கருத்துக்களை வி தேவராஜா எழுதி வந்துள்ளார் எனத் தெரவித்தார். மு நித்தியானந்தன் மேலும் தெரிவிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு பிரிவினர் மகிந்த ராஜபக்ச அரசுடன் மிக நெருக்கமாக இருப்பது போன்ற இரகசியங்களை வி தேவராஜா அறிந்து வைத்திருந்தமை போன்ற விடயங்களும் அவரை வெளியேற்ற வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.
 “சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரசிங்கவை வெளியேற்ற முடியாமல் போனதால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். வி தேவராஜாவை வெளியேற்ற முடிந்ததால் அவர் சுட்டுக் கொல்லப்படவில்லை” எனத் தெரிவித்த மு நித்தியானந்தன் இருவருமே அதிகார சக்திகளால் தாங்கள் நேசித்த ஊடகத்துறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர் எனத் தெரிவித்தார். வி தேவராஜா வுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த அநீதிக்கு எதிராக இலங்கை ஊடகங்கள் குரல் எழுப்பாதது வேதனையானது என்றும் மு நித்தியானந்தன் தெரிவித்தார்.

நன்றி - தேசம்நெட்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates