Headlines News :
முகப்பு » , , , » என்.சரவணனின் "தலித்தின் குறிப்புக்கள்". வாசிப்பு அனுபவப் பகிர்வு - விதுர்ஷா

என்.சரவணனின் "தலித்தின் குறிப்புக்கள்". வாசிப்பு அனுபவப் பகிர்வு - விதுர்ஷா

தலித்தியம் எனும் சொல் இலங்கையில் பரவலான பாவனையில் இல்லை. இலங்கையில் குறித்த சொல்தான் இல்லையே தவிர ஆதிக்க சக்திகள் கட்டமைத்துள்ள ஆதிக்கப்படிநிலையின் விளிம்புநிலையில் உள்ள மக்களும் அவர்களது வாழ்வியல்சார் பிரச்சனைகளும் இல்லாமலில்லை. எனவே தலித்தியம் என்ற சொல்லின் அவசியப்பாடு தவிர்க்கமுடியாத ஒன்றாக உள்ளது.  

என்.சரவணன் "தலித்தியம்" என்ற சொல்லினை , சாதிய கருத்துடைப்பிற்கும்   சாதியத்திற்கு எதிரான கருத்தமைவிற்கும் வேண்டி  "தலித்தின் குறிப்புகள்" என்ற புத்தகத்தில் சமூகமயப்படுத்த முயன்றுள்ளார். 

ஆதிக்க சக்திகளால் சமூகத்தின் விளிம்புநிலையில் வைத்து நோக்கப்படும் தலித்மக்கள்

தம் அடையாளங்களோடு அல்லது அடையாளங்களைக் கருத்துடைத்து வாழத்தலைப்படும் போது சமூகத்தில் எதிர்நோக்கும் உடலியல் உளவியல் சமூகப் பொருளாதார அரசியல் சிக்கல்களை மிக ஆழமான  அனுபவங்களோடு பிரக்ஞை பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். 

இலங்கையில் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் சாதிய முறைகள், ஆதிக்கமனநிலை போன்ற பிரதான விடயங்களே சமூகத்தில் ஓரளவாவது பேசுபொருளாகின்றது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட நகரசுத்திகரிப்புத் தொழிலாளர்கள் (அருந்ததியர்கள்) சமூகத்தில் ஆதிக்க மற்றும் இடைநிலை சாதிகளால் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அவர்களது வாழ்தல் மீதான அச்சுறுத்தல்கள், வசை மொழிகள் பற்றி பெரும்பாலும் யாரும் பேசத் துணிந்ததில்லை.

ஆயினும் என்.சரவணன் ஆதிக்கசக்திகளது படிமுறையில் இறுதியில் வைத்து நோக்கப்படும் அருந்ததியர்களது வாழ்வியலை  தன் அனுபவங்களூடாக முன்வைக்கின்றார்.

90 களில் இருந்து எழுதப்பட்டு வந்த கட்டுரைகள் இலங்கையில் 80 களிலிருந்தே எவ்வாறு சாதியமொழிகள் அச்சு ஊடகங்களூடாக  தன்முனைப்பு பெற்றன,எவ்வாறு சமூகமயமாகின (சாதியூறிய மொழி) போன்ற விடயங்களோடு நவீனகாலச்சாதிய அமைப்பு எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதனையும் ஆய்வுக்குட்படுத்துகின்றார். 

இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் சிதறி வாழும் இவர்கள் பெரும் சமூகமாக அல்லாது குறிப்பிட்ட சிறு குழுமமாக இருப்பதால் எந்தவொரு அரசியல்வாதிக்கும் வெற்றிபெறுதற்கு இவர்களது வாக்குத் தேவையில்லாது போகின்றது. இதனால்  மிகச் சுலபமாகவே  இவர்கள் அரசியல் நீக்கம் செய்யப்படுகின்றனர். அரசியல் ரீதியான தீர்வு என்பது இவர்களது வாழ்வியலைப் புரிந்துகொள்ளாத அரசாங்கத்தாலும் அரசியல்வாதிகளாலும் கிடைக்குமென்பது கேள்விக்குறியே என்பது என்.சரவணனின் எழுத்துக்களில் எடுத்துக்காட்டப்படுகின்றது.

"ஏற்கனவே மலையகத்துல டீச்சர்மார்கள் எல்லாம் வீடு கேக்கிறாங்க, தாதிமார் வந்து எங்களுக்கும் வேணுமெங்கிறாங்க... இப்ப நகர சுத்தித் தொழிலாளர்களும் வந்து இப்படிக் கேக்குறீங்க ... அது கஷ்டம்" -அமைச்சர் திகாம்பரம் ("அமைச்சரிடம் நீதி கோரிப் போன கதை.." பக்.9)

நவீன காலத்தில் சாதி தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு இருப்பதில்லை மாறாக அவை அகமணமுறைகள் மற்றும் ஊர்காரராக ஒருங்கிணைவது, கோவில்களை ஊர்க்கோவிலாக அடையாளப்படுத்துவது, ஏனையோரையும் இணைத்து வாழ்வது என்ற போலித்தனங்களுடன் தம் சாதிப்பெருமிதத்தை வெளிப்படுத்துவது போன்ற  நவீன வடிவங்கள் பெற்று உள்ளது என்பதனை என்.சரவணன் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றார்.

"எனக்கெண்டா சாதிபாக்கிறது பிடிக்காது. கிட்டடியில் கூட எங்கட சொந்தக்காரப் பிள்ளைக்கு ஒரு வரனைப் பாக்கச் சொன்னாங்க.. நான் எந்த சாதியா இருந்தாலும் பிரச்சனை இல்ல பையன் நல்லவனா இருந்தா சரி எண்டு மட்டும்தான் சொன்னேன். ஆனால் ஆகவும் குறைஞ்ச பள்ளர், பறையர், சக்கிலியர் என்று இல்லாம இருக்கவேணும் என்ன சொல்றீங்க.." 

"நான் ஒரு போதும் சாதி எல்லாம் பார்ப்பதில்லை . உங்களுக்கே தெரியும். ஏன் நீங்கள் எல்லாம் எங்கள் வீட்டுக்கு வருவதில்லையா..? சாப்பிடுவது இல்லையா..?" 

வெள்ளைத் திமிரும் வெள்ளாளத் திமிரும் -1 பக். 112, 113)

ஆதிக்க சாதியம் தன்னை தக்கவைத்துக்கொள்ள அகமணமுறைகளை சமூகத்தின்  வேராகத் திணிக்கின்றது. இதன் மூலம் சாதிக்கலப்பு ஏற்படாமல் தன்னை தற்காத்துக்கொள்கின்றது. இந்த அகமணமுறைகள் ஆதிக்கசாதிகளால்  வலிந்து விரும்பி ஏற்பதாகவும் தலித்சாதிகள் வாழ்வில் திணிக்கப்படும் ஒன்றாகவும் அடையாளப்படுத்துகின்றார். இதனால் ஏற்படும் மரபியல் நோய்களின் பரிமாணத்தினையும் நோய்களைத் தடுப்பதற்கான அல்லது அவற்றிலிருந்து பாதுகாப்புப்பெறுவதற்கான பொருளாதார வசதிகளும் அற்ற நிலையையும்  என்.சரவணன் எடுத்துக்காட்டுகின்றார். 

என்னுடன் கூடப்படிக்கிற ஒருவன்,  "ஜேய் சும்மா எல்லாப் பெட்டையளோடையும்* பழகலாம் கதைக்கலாம் ஆனால் கலியாணம் என்டு வரேக்க வீட்டை சொல்றவளத் தான் கட்டுவன். இல்லாட்டி சீதனமும் இல்லை அப்பாட சொத்தும் இல்லை." 

இதில் எங்குமே சாதி என்ற சொல் பாவிக்கப்படவில்லை. ஆனாலும் இந்த வசனம் முழுவதும் யாழ்ப்பாண சைவ ஆணாதிக்க வேளாள மனநிலையால் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

இன்றைய சமூகத்தில் வாழும் இளம்தலைமுறையினரது சிந்தனை கூட சாதியூறிய மொழி சாதியூறிய கலாசாரத்தின் பாற்பட்டுத் தான் செயற்படுகின்றது என்பதற்கு எனது அனுபவத்தின் வாயிலான  ஒரு சிறிய எடுத்துக் காட்டு. 

ஆனாலும் பெரும்பாலும் நம் சமூகத்தில் சாதி என்பது எல்லாவற்றையுமே அடையாளப்படுத்தும் ஒரு சொல்லாக எமக்கு பழகிப்போயுள்ளது. நான் கூட சிலவேளை பிரக்ஞை அற்ற நிலையில் "ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்" என்ற சொல்லுக்குப் பதிலா "ஏன் ஒரு ஜாதியா இருக்காய் " என பாவிப்பது இப்போது நெருடலாய் இருக்கின்றது. ஆனாலும் ஒரு தலித் பெண் என்ற  அடிப்படையில் எனக்கும் சாதி என்ற சொல் வெளியில் யாரேனும் சொல்லிக் கேள்விப்பட்டவுடன் உள்ளூர ஏதோ ஒன்று குத்துவது போன்ற உணர்வை பலதடவை நான் உணர்ந்திருக்கின்றேன். இப்போதெல்லாம் "தலித்தியம்" எனும் சொல்லை எனக்குப் பொருத்தமான அடையாளமாக கொள்ளும் மனோபாவத்தை உணர்கின்றேன். 

"தமிழ் சமூகத்தில் மனைவி கூட பெண்சாதி தான். யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பொருட்களின் தரநிர்ணயம் கூட சாதியாகத்தான் பார்க்கப்படுகின்றது. " (சாதிய திமிராளர்களின் கடைந்தெடுத்த ஆயுதம்:  சாதியைச் சாடல் பக்.124)

"ஒரு சாதி ஆட்கள் , சாதிப்புத்திய காட்டிட்டினம்" போன்ற சொற்கள் சாதாரண புழக்கத்தில் இருக்கின்றன.  ("வெள்ளைத் திமிரும் வெள்ளாளத் திமிரும் "பக்121)

சாதிய மனநிலை மற்றும் சொற்பிரயோகங்கள் இலங்கையில் மட்டுமல்லாது புகலிடத்தில் எவ்வளவு வீரியமாக வாழ்கின்றது என்பதனை சரவணன் பல நிகழ்வுகள் ஊடாக சுட்டிக்காட்டுகின்றார். 

"புகலிடத்தில் சாதியத்தின் பண்பு மாறவில்லை. அதன் வடிவங்கள் மாறியுள்ளன. குறிப்பாக, அதுவும் சேர்ந்து இன்று நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது" 

("புகலிடச் சாதியம்" பக்.37)

"நாளைக்கு தமிழீழம் கிடைச்சாப் பிறகுதான் பிரச்சனை இருக்குது. என்னதான் இருந்தாலும் குறைஞ்ச சாதிக்காரரை என்னென்டு நாட்டுத் தலைவரா நாங்க ஏக்கிறது"  (வெள்ளைத் தமிழும் வெள்ளாளத் தமிரும் -1 பக்.113)

"...தனது 3 வயது மகனைக் காட்டி இவன் நாளைக்கு ஒரு வெள்ளைக்காரிச்சியைக் கூட இழுத்துக் கொண்டு வரட்டும். ஆனால்,ஏதாவது கீழ்சாதிப் பெட்டையை மட்டும் இழுத்து வந்துவிடக்கூடாது"  என்றார்"  ("யாழ் சாதி :இரத்தம் கேட்கிறதா? தர மறுக்கிறதா?" பக். 145)

சாதிய நிலைத்திருப்பிற்கு சாதிய வசைச்சொற்கள் காலம் காலமாக உயிர்ப்புக் கொடுக்கின்றன. ஆதிக்க சாதிகள் மட்டுமல்லாது இடைநிலைச் சாதிகளும் இவ் ஆணாதிக்க சாதிய வசைச் சொற்களை கையிலெடுத்து தம் கோபங்களைத் தீர்த்துக்கொள்கின்றனர். இதற்கு ஊடகங்களும் பாடப்புத்தகங்களும் கூட விதிவிலக்கல்ல என்பதனைச் என்.சரவணன் சுட்டிக்காட்டுகின்றார்.   

இவ் வசைச் சொற்கள் மத்தியில் வாழும் ஆதிக்கசக்திகளால் விளிம்புநிலையில் வைத்து நோக்கப்படும் சாதியைச் சேர்ந்தவர்களது உளவியல் சிக்கல்களை தன் அனுபவத்தோடும் தன் தோழர்களின் அனுபவத்தோடும் இணைத்து பகிர்ந்துள்ளார். 

"மேல்சாதி ஆண்மனம் என்பது மேலதிகமாகப் பெண்பாலுறுப்பை, அல்லது பெண் பாலுறவைச் சாடுகின்ற தூஷணத்தையும் இந்தச் சாதியச் சாடலுடன் கோர்த்துச் சொல்லும் போது, அதற்கு மேலதிக பலம் கிடைப்பதாக நம்புகின்றது. அதனையே நிறைவேற்றியும் விடுகிறது" 

(சாதிய வசை பக்.15)

அத்துடன்  ஆதிக்கசக்திகளின் நோக்கில் சமூகத்தில் விளிம்புநிலையில் வைத்துப் பார்க்கப்படுபவர்களின் இறுதியான நிலையில் "தமிழ்த் தொழிலாள தலித்திய பெண்கள் எவ்வாறு நோக்கப்படுகின்றர். என்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

"ஒடுக்கப்படும் விளிம்பு வர்க்கத்தினர் எல்லோரும் தலித்துக்கள் இல்லை. பெண்கள் எல்லோரும் தலித்துக்கள் இல்லை. தமிழர்கள் எல்லோரும் தலித்துக்கள் இல்லை. ஆனால் இந்த அத்தனை பண்புகளும் இவர்களுக்கு உள்ளமையால் அத்தனை  அடக்குமுறைகளும் தலித் பெண்களுக்கே உண்டு" ("சிவில் சமூகத்தில் நலமடித்தல்! அரசியல்வாதிகள் சக்கிலியர்கள்" பக். 109) 

தமிழ்த் தலித்திய பெண்களது உளவியல் சிக்கல்கள் இங்கு முக்கியத்துவப்படுத்தப்படாவிட்டாலும். "இலங்கையில் தலித்தியப் பெண்களது நிலை - ஆரம்ப கலந்துரையாடல்" என்ற அடிப்படையில் நோக்கமுடிகின்றது.

தலித் பெண்ணியம் தொடர்பான ரூத் மனோரமா ஊடான கலந்துரையாடல் இந்தியாவில் எவ்வாறு தலித் பெண்ணியம் நோக்கப்படுகின்றது என்பதுடன் அவர்களது உளவியல் சிக்கல்களையும் வெளிக்கொணர்ந்து உள்ளது. அத்தோடு இலங்கையிலும் மேலும் பல தலித்கள் தொடர்பான ஆய்வுகளும் செயற்பாடுகளும் அவசியமாக உள்ளன என்பதை தலித்தின் குறிப்புகள் வெளிப்படுதியுள்ளது.

"எவ்வாறு வர்க்கப் பாலின சாதியம் போன்ற அக போராட்டங்களை பின்தள்ளிவிட்டு இனத்துவப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் தோல்வி எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றது.   போராட்டத் தோல்விக்கான அகக்காரணிகளை விட்டுவிட்டு புறக்காரணிகளை மட்டும்  எவ்வாறு ஆதிக்கசக்தி இன்னமும் நொந்துகொண்டுள்ளன" என்பது பற்றிய ஒரு பார்வையை குறிப்பாக "முரண்பாடுகளும் படிநிலையொழுங்கும் தலித்தியமும்" முன்வைக்கின்றது.

"என் குடும்பத்தில் உள்ள அனைவருமே தமிழீழம் கிடைச்சா எங்கபாடு கஸ்ரம்தான்"  என அடிக்கடி சொல்லிக் கேட்டிருக்கன். அதன் உண்மையான பின்னணியாக எம் சாதிய அடையாளம் தான் இருந்துள்ளது."

தலித்துக்களாக சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்போர் குறிப்பாக அருந்ததியினர் சமூகத்தவர்கள் பொருளாதார ரீதியிலும் மிகப்பின்தங்கிய நிலையில் தேங்கவைக்கப்படுகின்றனர். குறிப்பாக அவர்களுக்கு போதிய கூலி இன்மை, சொந்த வீடு இன்மை, கல்வி கற்கவசதிகள் இன்மை போன்றவற்றால் தொடர்ந்தும் அவர்கள் அதே நிலையில் இருக்கவும், அதே குறிப்பிட்ட சாதித் தொழில்களை செய்யவும் சமூகத் திணிப்பிற்கு உள்ளாகின்றனர். 

" அண்ணா நான் அட்வான்ஸ் லெவலுக்குப் பாஸாகிட்டேன். பாடசாலையும் கூடக் கிடைத்துவிட்டது. அம்மாவும் அப்பாவும் நான் போவதை விரும்புகிறார்கள். ஆனால் பாடசாலைக்கான ஆரம்பச் செலவுகளைக் கூடச் சமாளிக்க முடியாத நிலையில் உள்ளனர். என்னத்த படிப்பு, சும்மா வீட்டில கிட" என்று சொல்லிவிடுவார்களோ என்று பயமாக இருக்குறது அண்ணா" ("பொறுப்பேற்பது யார்?" பக்.68)

"இந்தத் தொழிலை விட்டு வெளியேற முடியாமைக்கான ஒரு காரணம் தொழிலை இழந்தால் தமக்கு இதுவரை சொந்தமில்லாத குடியிருப்பை இழக்க நேரிடும் என்கிற பீதி தொடர்கிறது." ( "அமைச்சரிடம் நீதி கோரிப் போன கதை.."பக்9)

"அடையாளங்களைத் தற்கொலை செய்தல்.." எனும் தலைப்பில் மூன்று கட்டுரைகளில் அடையாளங்களது தன்மை சாதியத்தினுள் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள், எவ்வாறு ஒரு ஆதிக்கசக்தி தன் ஆதிக்க சிந்தனையின் பாற்செயற்படும் போது அவற்றோடு இணைந்து தலித்மக்கள் இழிநிலையை தம்மீது சுமத்துவது, சமூகத்திலிருந்து விலத்தி வாழ்வது போன்றவற்றை தம் தெரிவாகக் கொள்வது போன்றவற்றை ஆராய்கின்றார். 

ஆரம்பகாலத்தில் தெலுங்கு பேசி வந்தாலூம் கால ஓட்டத்தில் தாம் வசிக்கும் இடங்களுக்கு ஏற்ப தம் மொழியை மாற்றி தமிழாகவும் சிங்களமாகவும் பேசுவது, தம் கவுச்சி சாமிகள் ஆகம சாமியாவது போன்றவற்றின் ஊடாக எடுத்துக்காட்டுகின்றார். 

சாதிய ஒழிப்பின் படிநிலைகளாக சாதிய கட்டவிழ்ப்பு, கட்டுதல் போன்றவற்றினை முன்வைக்கின்றார். 

"சாதி மறுப்பு, சாதியெதிர்ப்பு, சாதியடைப்பு ஆகிய செயற்பாடுகளின் முன்நிபந்தனைகளாக ஒன்று சாதியக்கட்டமைப்பைக் கட்டவிழ்ப்பது மற்றது கட்டுவது. நமக்கான விடுதலைக் கருத்தமைவை கட்டமைப்பது. கருத்துடைப்பும் கருத்தமைப்பும் இணைந்தே மேற்கொள்வதன் அவசியம் பற்றிக் குறிப்பிடுகின்றார். ("சாதிய வசைபாடல்: அருந்ததியர் சமூகத்தை முன்வைத்து பக்.16)

"அடையாளங்களைத் தற்கொலை செய்தல்" கட்டுரைகளின் இறுதியாக 

"அடையாளங்களை மறுப்பது ஒடுக்கும் சக்திகளின் பண்பாக இருக்கின்றது என்பதற்காக, அடையாளங்களை மறைப்பது ஒடுக்கப்படும் சக்திகளின் போக்காக அமைந்துவிடக்கூடாது. மாறாக அதனை எதிர்கொண்டு விடுதலைக்கான வழிவகைகளைக் காண்பதே சிறந்த பணியாக இருக்க முடியும்" 

(அடையாளங்களைத் தற்கொலை செய்தல் -3 பக். 85)

அனைத்து கட்டுரைகளிலும் அடக்குமுறைக்கு உட்படும் ஆதிக்கசக்திகளால் சமூகத்தின் விளிம்புநிலையில் வைத்து நோக்கப்படும் அருந்ததியர் சமூகத்தின் அரசியல் , பொருளாதார, சமூக, பால்நிலை, கலாசார,புகலிட மனநிலை, நோய்நிலை, தொழிலாளர் ,ஊடகம் போன்ற பல்வேறு பார்வைகளில் ஆராயப்படுகின்றது. சாதியம் தொடர்பான ஒரு காத்திரமான படைப்பாக தலித்தின் குறிப்புக்கள் உள்ளது. 

2020.01.08

விதுர்ஷா தனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த நூலின் வாசிப்பனுபவத்தை நன்றியுடன் பகிர்கிறோம்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates