நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1601 மே 05 ஒல்லாந்தைச் சேர்ந்த கடற்படை அட்மிரல் ஜோரிஸ் வான் ஸ்பில்பெர்கன் (Joris van Spilbergen) தனது நீண்டகால கடற் பயணத்தில் இலங்கைத் தீவை வந்தடைந்தார். இலங்கையின் முதலாவது டச்சு தூதுவரும் அவர் தான். உயர் தரம் மிக்க கருவா இலங்கையில் அவர் கண்ட பின்னர் அன்றைய கண்டி மன்னன் முதலாம் விமலதர்மசூரியவுடன் 1602 இல் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டது பற்றிய வரலாற்றுப் பதிவை அறிவீர்கள்.
ஸ்பில்பெர்கன் அவரின் நெடும் பயணம் பற்றி ஏராளமான குறிப்புகள் எழுதிவைத்திருக்கிறார். அவை சிங்களத்தில் நூலாகவும் இப்போது கிடைக்கிறது. அவரின் குறிப்பில் அந்த அற்புதத் தீவுக்கு செல்வது தனது வாழ்க்கையின் அதிசிறந்த பாக்கியம் என்று குறிப்பிடுகிறார். அவர் இலங்கை வந்த காலத்தில் டச்சு கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பித்திருக்கவில்லை. அவர் டச்சு நாட்டுக்கு திரும்பியதும் இலங்கை பற்றி அவர் வெளியிட்ட கருத்துக்களால் கவரப்பட்ட வியாபாரிகள் இலங்கைத் தீவுக்குச் செல்ல ஆர்வம் காட்டினர்.
அவர் இலங்கை வந்திருந்தபோது போர்த்துக்கேயர் கரையோரங்களை ஆண்டுகொண்டிருந்தார்கள். அதன் பின் நான்கு தசாப்தங்களின் பின்னர் டச்சுக்காரர்கள் போர்த்துகேயருடன் சண்டையிட்டு இலங்கையைக் கைப்பற்றிய கதையும் அறிவீர்கள்.
இலங்கையில் இருந்த போர்த்துக்கேய வம்சாவளியினரும், மக்களும் ஒன்று சேர்ந்து தன்னைக் கொன்றுவிட்டு கொழும்பு கோட்டையை கோவாவில் தரித்திருக்கின்ற போர்த்துக்கேயரிடம் ஒப்படைப்பதற்கு சதித்திட்டம் தீட்டுவதாக ஒரு மாயைக்குள் சிக்கினார். மலபாரில் இருந்த தளபதி ஜேக்கப் டி ஜாங் ஒரு கடிதத்தின் மூலம்; அப்படிபோர்த்துகேயர்களின் கப்பல்கள் எங்கும் காணப்படவில்லை என்றும், கோவாவில் ஒரே ஒரு கப்பல் மட்டுமே இருப்பதையும் மார்ச் மாதம் அறிவித்தார். தனக்கு எதிரான சதியில் இருந்து தப்பிச் செல்வதற்காக கப்பலில் தனது பொருட்களையும் ஏற்றி முடித்திருந்தார்.
ஆனால் வுயிஸ்ட் சந்தேகநபர்களை அடைத்து வைத்து சித்திரவதை செய்தார். அதே மார்ச் மாதம் அவர் பலரைக் கைது செய்து மேற்கொண்ட அட்டூழியங்களை எதிர்க்க எவரும் துணியவில்லை. மார்ச் ஏப்ரல் மாதங்களில் பலர் தூக்கிலிடப்பட்டனர்.
அவர்கள் மோசமாக சித்திரவதை செய்யப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானோர் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். அவரது குண்டர்கள் சந்தேகத்திற்குரிய குடிமக்களின் வீடுகளுக்குச் சென்று 19 பிரதேச அதிகாரிகள் கைது செய்தனர், அவர் அளித்த மரணதண்டையின் குரூரத்தால் நிர்வாகமே நடுநடுங்கிப் போயிருந்தது. 1929ஆம் ஆண்டு பெப்ரவரி 11 க்கும் ஏப்ரல் 30க்கும் இடையில் மொத்தம் 19 பேர் இவ்வாறு இந்த விசாரணையின் குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டார்கள். இவர்களில் ஆறு பேர் தூக்குமேடையில் தூக்கிடப்பட்டார்கள். ஆனால் எட்டு பேர் மரத்தில் தூக்கிலிடப்பட்டார்கள். சிலரது கைகால்கள் உடைக்கப்பட்டு பின்னர் தலை துண்டிக்கப்பட்டன. அப்படிப் பலியானவர்களில் ஒருவரின் மார்பு பிளக்கப்பட்டு அவரின் இதயம் நீக்கப்பட்டது. மூவர் அடித்து எலும்புகள் நொறுக்கப்பட்டு தலைகள் தனியாக வெட்டப்பட்டு அத்தலைகளை ஈட்டிகளில் வைத்து நடப்பட்டன. அதாவது கழுவேற்றம் செய்யப்பட்டனர்.
நூறாண்டுகளுக்கு முன்னர் (1907) கொழும்பு இல் கொழும்பு அரசாங்க சுவடிகூடத் திணைக்களம் வெளியிட்ட The dutch Records என்கிற டச்சு ஆவணத் தொகுப்பில் இப்படி குறிப்பிடப்படுகிறது.
“ஆனால் அவர்களில் மூன்று பேருக்கு, ஃபிரடெரிக் ஆண்ட்ரிஸ் (Frederick Andriesz,), ஜான் டி காவ் (Jan de Cauw), பேரன்ட் ஷூர்மன் (Barent Schuurman), ஆகிய மூவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை இந்த அனைத்து படுகொலையிலும் அதி கொடூரமான காட்டுமிராண்டித்தனமாக இருந்தது. அவர்களின் எலும்புகள் உடைக்கப்பட்டு, அவற்றின் சதை கிழிந்து, அவர்களின் தலைகள் கோடரியால் கொத்தப்பட்டு பிறகு, உடல் பகுதிகள் கிழித்து இழுக்கப்பட்டு, அவர்களின் தலைகள் கொய்யப்பட்டு இருப்புக் கம்பிகளில் குத்தி நிறுத்தப்பட்டன . இந்த அட்டூழியங்கள் பற்றிய செய்தி தொடர்ச்சியாக பதாவியாவை எட்டின. மேலும் ஒரு புதிய ஆளுநரை அங்கே அனுப்பிவதற்கு காலம் தாமதிக்கவில்லை. அந்தக் கொடுங்கோலரைக் கைது செய்து பத்தாவியாவுக்கு சங்கிலியால் பிணைத்து கொண்டுவர உத்தரவிடப்பட்டது. டச்சு ஆட்சியிலேயே இது தான் இருண்ட காலம்.” (Anthonisz, R. G)
டச்சு லெப்டினன்ட் பெஞ்சமின் பகலொட்டி (Lieutenant Benjamin Pegalotty), லெப்டினன்ட் அந்திரிஸ் ஸ்வார்ட்ஸ் (Lieutenant Andries Swarts) ஆகியோர் பெயிலிஸ் வீதி கட்டிடத்தில் வசித்து வந்தார்கள். அவர்கள் இருவரும் சதிகாரர்களாக குற்றம்சாட்டப்பட்டார்கள். 12 மார்ச் 1729 அன்று லெப்டினன்ட் அந்திரிஸ் ஸ்வார்ட்ஸ் மிக மோசமாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார். அவரின் நெஞ்சைக் குத்திக் கிழித்து இதயத்தை வெளியே எடுத்து அவரின் முகத்திலேயே எறிந்தார். அதன் பின்னர் ஆளுநர் வுய்ஸ்ட்டால் “இரத்த நீதிமன்றம்” (Blood Council) என்று அழைக்கப்பட்ட அவரின் கொண்டுங்கோன்மைச் சபையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர். பின்னர் சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார் பெஞ்சமின். இந்த தண்டனைக்குப் பிறகும் ஆளுநர் திருப்தியடையவில்லை. இந்த தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றார். அவர் தன்னிஷ்டமாக உருவாக்கிய அரசியல் சபையில் தீர்மானம் கொண்டு வந்து அந்த கட்டிடத்தை இடிக்கத் தீர்மானம் நிறைவேற்றினார்.
அது பற்றிய தீர்மானம் இப்படித்தான் நிறைவேற்றப்பட்டது
வியாழன் மதியம்,
ஜூன் 23, 1729
இன்றைய தினம்:
ஆளுநர் த Petrus Vuyst
ஹூயிட் நிர்வாகி, டிர்க் பைரன்ஸ்.
திசாவ, பீட்டர் கார்னெலிஸ் டி பாடோட்.
செயலாளர், ருடால்ப் பைசெலார்.
நிதிப் பொறுப்பாளர், ஜோஹன் பெர்னார்ட் வெயிட்னாவ்.
முதன்மை கிடங்கு காப்பாளர், கார்னெலிஸ் வான் ஏர்டன்.
இரண்டு பரம துரோகிகளான அந்திரிஸ் ஸ்வார்ட்ஸ் மற்றும் பெஞ்சமின் பெகலோட்டி ஆகியோருக்கு எதிராக கடந்த மார்ச் 11 ஆம் தேதி இங்குள்ள இராணுவ நீதிமன்றம் வழங்கிய தண்டனையின் மூலம், குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் வீட்டையும் இடித்து தரைமட்டமாக்குவது மட்டுமல்லாமல், ஏனைய தண்டனைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டைக்குள் உள்ள “கோர்னொன்தே ஸ்ட்ராட்” (பெய்லி தெரு) என்று அழைக்கப்படும் முதலில் பெயரிடப்பட்டவருக்குச் சொந்தமானது. அடுத்தது நகரத்தில் (பெட்டா (இன்றைய புறக்கோட்டை)) இரண்டாவது குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சொந்தமானது; அவை இடிக்கப்பட்டு இந்த இரண்டு கட்டிடங்கள் உள்ள இடத்தில் ஒரு கல்வெட்டு வைக்கப்பட வேண்டும், அது கவர்னர் அது எங்கு வைக்கப்பட வேண்டும் என்று கணிப்பார். மாண்புமிகு ஆளுநர் ஏழு அடியுள்ள நான்கு பக்க கல் தூண்கள் தயார் செய்து, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தலைகளை இரும்பு ஈட்டியில் குத்தி நிறுத்த வேண்டும். அதில் பின் வரும் வாசகம் கல்வெட்டாகப் பொறிக்கப்பட வேண்டும்.
1729 ஆம் ஆண்டில், தூக்கிலிடப்பட்ட துரோகி ஆண்ட்ரீஸ் ஸ்வார்ட்ஸின் சபிக்கப்பட்ட நினைவாக இந்த நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது - அவர் இடிக்கப்பட்ட வசிப்பிடத்தின் தளத்தில் - நீதிமான்களுக்கு கடவுள் அவருடைய நலனுக்காக இடைவிடாத நன்றியின் அடையாளமாகவும், துன்மார்க்கருக்கும், தீமைக்கு எதிராகவும் நிரந்தர எச்சரிக்கையாகவும் இருக்கும்.
“மேற்கூறிய இரண்டு இடங்களிலும், மற்ற தேசத் துரோகி பெஞ்சமின் பெகலோட்டியின் பெயருக்கான கல்வெட்டில் தேவையான மாற்றங்களுடன் இரண்டு தூண்களை அமைக்கின்ற வகையில் அமைப்பது தொடர்பாக அவையின் உறுப்பினர்களுக்கு ஆளுநர் முன் வைத்தார். டச்சு, சிங்களம் மற்றும் மலபார் (தமிழ்) மொழிகளில் உள்ள கல்வெட்டு, அனைவரும் படித்து புரிந்து கொள்ளக் கூடிய வகையில் மும்முமொழியிலும் அது வைக்கப்படவேண்டும்
"மேற்கூறியவை அனைத்தும் உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு, மாண்புமிகு ஆளுநரின் நோக்கத்துடன் அவர்கள் தங்கள் முழு உடன்பாட்டையும் அறிவித்து, ஒவ்வொரு மொழியிலும் மேற்கூறிய மூன்று மொழிகளிலும் மேற்கூறிய கல்வெட்டுடன் அத்தகைய தூணை அமைக்க தீர்மானிக்கப்படுகிறது. தேசத் துரோகி பெஞ்சமின் பெகலோட்டியின் பெயர்களில் தேவையான மாற்றங்களுடன் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.” (1)
இந்தத் தீர்மானத்தின் படி அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு அவர்கள் வசித்த பகுதியில் கல்வெட்டை நிறுவி மரணதண்டைக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் தலைகள் அங்கே ஈட்டியில் குத்தி காட்சிக்கு வைக்கப்பட்டதுடன். வாசகம் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் நிறுவப்பட்டது.
இக்கட்டிடம் பற்றி ஓரளவு அறிந்தவர்கள் கூட ஆளுநர் வுய்ஸ்ட்டால் அழிக்கப்பட்டு பின்னர் மீள கட்டப்பட்டது என்கிற சாராம்சக் கதையை மட்டும் தான் பெரும்பாலும் அறிந்திருப்பார்கள். ஆனால் அதை விட குரூரமான நிகழ்வுடன் தொடர்புபட்டது இக் கட்டிடம்.
இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் எங்கே என்று கேட்கிறீர்களா?
பெஞ்சமின், அந்திரிஸ் இருவரும் வசித்த அந்தக் கட்டிடம் பின்னர் கட்டப்பட்டது. அதைக் கொழும்பில் இப்போதும் காணலாம். அது கொழும்பு கோட்டையில் பெயிலிஸ் வீதி (Baillie Street) அமைந்திருந்ததாக பல ஆவணங்களில் காணக் கிடைக்கின்றன. இன்று அப்படி ஒரு வீதி இல்லை. ஆம் அந்த வீதி இன்று முதலிகே மாவத்தை என்கிற பெயரில் காணலாம். இன்றைய ஜனாதிபதி மாளிகைக்கு எதிரில் இந்த வீதி அமைந்துள்ளது. அதில் 41 வது இலக்கக் கட்டிடம் இன்றும் அப்படியே உள்ளது.
வூயிஸ்டை பதவி நீக்கம் செய்த பிறகு, அவரின் கொடுங்கோல் சட்டத்திற்குப் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் நடவடிக்கையை அதன் பின்னர் வந்த ஆளுநரும் அதிகாரிகளும் மேற்கொண்டார்கள்.
அதன்படி அதற்கு முன் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்வது, அவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டுக்கொடுப்பது என்பன மேற்கொள்ளப்பட்டன.
வுயிஸ்டுக்குப் பின் பெஞ்சமின், அந்திரிஸ் ஆகியோர் வாழ்ந்த வந்த பெயிலிஸ் வீதி கட்டிடம் புதிய ஆளுனரால் அந்தக் காணி உரிமையாளருக்கே திருப்பி அளிக்கப்பட்டது. அதை அவர் முன்னர் இருந்த அதே வடிவத்தில் அதைக் கட்டி முடித்தார். அக்கட்டிடத்தின் வாயிலில் இப்படி ஒரு கல்வெட்டை பதித்தார்.
‘DOOR GEWELT GEVELT,
DOOR’T REGT HERSTELT’
(அநீதியால் அழிக்கப்பட்டது... நீதியால் மீண்டும் எழுப்பப்பட்டது)
இன்றும் முதலிகே மாவத்தையில் அக்கட்டிடத்தையும் இந்த வாசகத்தையும் அப்படியே நம்மால் காணமுடியும். சுமார் முன்னூறு வருட கால பழமைவாய்ந்த டச்சு கல்வெட்டு அது என்று கூட நாம் கூறலாம். இன்றும் அந்த வாசகத்துடன் அக்கட்டிடத்தைப் பார்க்கலாம். இப்போது கடற்படையினர் அக்கட்டிடத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்று அவர்களிடம் கேட்டால் கூட இதற்கு பின்னால் இருக்கும் முக்கிய வரலாறு பற்றி அறிந்திருக்க மாட்டார்கள் என்றே கூறலாம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...