நாட்டில் இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின் பின்னர் இடம் பெற்ற நிகழ்வுகள் பல்வேறு படிப்பினைகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. பல்வேறு வகையில் சிக்கல்கள் நிறைந்ததாக அந்தத் தேர்தல் முறை காணப்பட்டது.
எதிர்வரும் மாகாண சபை தேர்தல்கள் புதிய இதே முறையின் கீழ் நடைபெற்றால் மலையக இந்திய வம்சாவளியினரின் அரசியல் அடையாளம் இல்லாமல் போய்விடும். இதனை அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் முடிவுகள் தெரிவிக்கின்றன. மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா உள்ளூராட்சி மன்றங்களில் இதை அவதானிக்க முடிந்தது.
ஒரு ஸ்திரமற்ற ஆட்சி நிலையே இன்று இந்நாட்டில் நிலவுகிறது. நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி உள்ளது. நல்லிணக்கம், சகவாழ்வு என்ற பூச்சாண்டி பிரசாரத்தால் மலையக மக்களுக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. எந்தவித முன்னேற்றமும் பெற போவதுமில்லை . சிந்தையும், செயலும் ஒன்று பட்டால் மலையகத்தில் மாற்றம் ஏற்படும். அதற்கு மணிக்கட்டுவது யார்? இன்று மலையக மக்கள் பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர். ஒரு தேங்காயின் விலை நூறு ரூபாவைத் தாண்டி விட்டதையும் நாம் சுட்டிக்காட்டவேண்டும்.
இவ்வாறான நிலையில் மலையக மக்கள் வானம் பார்த்து பூமியாகவே வாழ்கின்றனர்.
இன்று அரசியல் என்று பார்க்கும்போது அது பெரும் வருமானத்தை ஈட்டும் தொழிலாகிவிட்டது. அரசியலில் இலாபம் தேடுவதும், தேர்தலில் செலவிட்ட ரொக்கத்தை உழைப்பதும் பல அரசியல்வாதிகளினது நோக்கமாகவுள்ளது. இப்பெரும் பலவீனத்தை பேரினவாத சக்திகள் தங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்கின்றன. இன்று எந்தவொரு அரசியல்வாதியும் வறுமை நிலையில் இல்லை. பலமும், செல்வமும் படைத்த சீமான்களாகவே உள்ளனர்.
இந்நாட்டில் இலவசக் கல்வியை அறிமுகம் செய்து வைத்த அன்றைய கல்வி அமைச்சர் பேராசிரியர் சி.டபிள்யூ. டபிள்யூ கன்னங்கர தன் சொந்த ஊரான மத்துகமவில் பெரும் வறுமையில் வாழ்வதைக் கண்ணுற்ற முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, கண்கலங்கி பென்சன் வழங்கி, அவரை வாழ வைத்தார். 26.08.1959 இல் வி.தஹாநாயக்க பிரதமரானார். 1960 இல் இடம்பெற்ற தேர்தலில் ஸ்ரீ.ல.சு கட்சி படுதோல்வி அடைந்தது. பிரதமர் பதவியை துறந்த தஹாநாயக்க, தனது உடைமைகளை அட்டைப் பெட்டியில் அடுக்கி, பொதியாக்கி எடுத்துக்கொண்டு காலிக்கு பயணமானார். அவர், அலரிமாளிகைக்கு முன்னால் இருந்து சாதாரண இ.போ.ச. பஸ்ஸில் ஏறி தன்
சொந்த ஊரான காலிக்கு புறப்பட்டார். இன்று எந்தவொரு அரசியல்வாதியும் இவ்வாறு செயலாற்றுவார்களா? என்பது கேள்வியாகும். இன்று அரசியலில் சுத்தம் என்பது இல்லை . இதன் காரணமாகத்தான் பதுளை கல்லூரி அதிபர் ஒருவரின் பிரச்சினை முடியாத நிலையில் தவணையில் உள்ளது. | இவ்வாறான நிலையில் மீண்டும் கல்வி அமைச்சு ஊவா மாகாண முதலமைச்சரிடமே கையளிக்கப்பட்டுள்ளது. இது மலையக அரசியலில் ஏற்பட்ட அரசியல் பலவீனமாகும்.
இவ்வாறான நிலையில், மலையக அரசியலில் பெரும்பான்மை அரசியல் சக்திகளின் ஊடுறுவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. எதிர்வரும் மாகாண சபைக்கான தேர்தலில் சிங்கள பெரும்பான்மை கட்சிகள் இனவாதத்தையும் கக்கும். இதை கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்ணுற்றோம். தேசிய கட்சிகள் அனைத்தும் இனவாதத்தை மூலதனமாகக் கொண்டே செயல்படுகின்றன.
சிங்கள பேரினவாத கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சியை கைப்பற்றுவதற்காக மக்கள் மத்தியில் இனவாதத்தை கக்குகின்றனர். ஆனால், மலையக அரசியல்வாதிகளிடம் தங்கள் சமூகத்தினர் மத்தியில் முதலீடு செய்ய எந்தவொரு . திட்டமும் இல்லை . ஒருவரை ஒருவர் தாக்கி பேசும் அநாகரிக அரசியலையே பல தசாப்தங்களாக விதைத்து வருகின்றனர். மாகாண சபை தேர்தல்பற்றி வாய் திறக்காது உள்ளனர். மாகாண தேர்தல் எல்லை நிர்ணயத்தை மேற்கொண்டு புதிய முறையில் தேர்தல் நடத்துவதாயின், எல்லை நிர்ணய சபையின் அறிக்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட வேண்டும்.
இன்றைய நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பது மிக பெரிய கஷ்டமானதாகும். மத்திய மாகாண சபையின் ஆட்சி காலம் இவ்வருடம் ஒக்டோபருடன் நிறைவடைகிறது. புதிய மாகாண சபைத் தேர்தல்கள் விதிப்படி, மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெற்றால் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் கேள்விக் குறியாகவே காணப்படும். உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தேர்தல் முறை பாராளுமன்றத்துக்கு வந்த போது மலையக அரசியல்வாதிகள் மௌனம் காத்தனர்.
அரசியல்வாதிகள் அனைவரும் சிங்கள பேரினவாதிகளின் கைகளில் சிக்கி உள்ளனர். அவர்கள் தேர்தல் காலத்தில் அரசியல் முகவரியை மாற்றிக்கொள்வார்கள். பின்னர் பதவி வகித்த கட்சியையே விமர்சனம் செய்வர். இது அரசியல் வித்தை . மக்கள் உணர்வு பெற வேண்டும். அதுவரை மலையகத்தில் வசந்தம் ஏற்படாது.
சிலாபம் திண்ணனூரான்
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...