இது ஸ்ரீ பாத பருவ காலம் (சீசன்). மார்கழிப் பௌர்ணமியிலிருந்து வைகாசி வரை யாத்திரிகர்கள் அங்கு செல்வார்கள். மிகவும் குளிரும், காற்றும் அதிகமுள்ள இந்த மாதங்களில் அதுவும் இரவு வேளைகளில் மலையேறத் தொடங்குவார்கள். உச்சிக்குப் போய் சேர 6-8 மணித்தியாலங்கள் ஆகும். அதிகாலை உதயசூரியனைக் காண்பது இலக்குகளில் ஒன்றாக இருக்கும். அழகு மிகுந்த சோலைகளைச் சூழ உள்ள மலை இது. மகாவலி, களனி, களு கங்கை போன்ற ஆறுகள் இங்கிருந்து தான் உற்பத்தியாகின்றன.
உலகில் நான்கு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தை சர்ச்சையின்றி வணங்கிச் செல்லும் ஒரே இடம் நம் இலங்கையில் தான் இருக்கிறது. பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் தத்தமது புனித மலையாக கருதி வருகிறார்கள். அந்த நம்பிக்கையின் பின்னணியில் அந்தந்த மதம் சார்ந்த புனிதக் கதைகளாக புனைகதைகள் பல இருக்கின்றன.
இன்றைய பேரினவாத நிகழ்ச்சிநிரலில் என்றுமில்லாதவாறு இந்த மலை இப்போது சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதுவரை காலம் அமைதியாக நான்கு மதத்தவர்களும் எந்த கெடுபிடியுமில்லாதவாறு சங்கமித்து வந்த மலை; சிங்கள பௌத்த இனவெறியாளர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது. இனவெறுப்பைத் தூண்டும் ஆயுதங்களில் ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கிறது “ஸ்ரீ பாத”. அந்த மலையின் பின்னணி பற்றியது தான் இந்தப் பதிவு.
நான்கு மதங்களும்
சிவனொளி பாத மலை என்று தமிழர்களாலும், ஸ்ரீ பாத என்று சிங்களத்திலும் அழைக்கப்படும் இந்த மலை சிங்களவர்களால் “சமனல கந்த” என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கடல் மட்டத்திலிருந்து 2243 மீற்றர் உயரத்தில் உள்ள இந்தத் தளம் இலங்கையில் மூன்றாவது உயரமான மலையாகும்.
உலகின் முதல் மனித படைப்பான ஆதம் (அலை) இலங்கையில் நூத் அல்லது றாஹூன் என்று அக்காலத்திலும் தற்காலத்தில் பாவா ஆதம் மலை எனவும் முஸ்லிம்களால் அழைக்கப்படும் மலையில் இறங்கினார்கள் என்று முஸ்லிம்களின் புனித குர் ஆன் கூறுகிறது. மலையின் உச்சியில் இருப்பது நபி ஆதம் அவர்களின் கால்சுவடே என்பாது முஸ்லிம்களின் நம்பிக்கை.
அதுபோன்றே கிறிஸ்தவர்கள் மத்தியிலும் உலகின் முதல் மனிதன் ஆதாமின் கால் சுவடு அது என்கிற நம்பிக்கையும் கணிசமாக இருக்கவும் செய்கிறது. ஆதாம் வாழ்ந்த ஏடன் தோட்டம், இன்றைய ஈராக்கில் உள்ளதென்றே கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். எனவே கிறிஸ்தவ போர்த்துக்கேயர்கள் அதனை ஆதாமின் காலடித் தடம் என்பதை நம்பவில்லை. அவர்கள் அதனை "புனித தோமஸின் மலை" என்று அழைத்தனர். (தோமஸ் இந்தியா வந்த இயேசுவின் சீடர்களில் ஒருவராவார்.) 19 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆதாமின் மலை என்கிற பெயர் கொண்டு அழைக்கத் தொடங்கினார்கள். அதுவே பல இடங்களிலும் பதிவு பெற்றது.
திருமாலும் பிரம்மாவும் தங்களுக்கிடையில் யார் பெரியவர் என்று போட்டியிட்டு அடியையும், முடியையும் தேடி கிடைக்காத நிலையில் சிவனிடம் பூசை செய்த வேளை சிவன் ஒளியாக எழுந்தருளி பாதம் பதித்த இடம் சிவனொளி பாதமலை என்கிற ஒரு நம்பிக்கை இந்துக்களிடம் இருக்கிறது. எனவே இதை “சிவனொளி பாதமலை” என்கின்றனர்.
புத்தரின் விஜயம்
புத்தர் மூன்று தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்ததாக மகாவம்சம் என்கிற சிங்கள புனித வரலாற்று நூல் கூறுகிறது. அரசர்களுக்கு இடையில் நிகழ்ந்த மோதலைத் தவிர்க்க மத்தியஸ்தம் வகிக்கும்படி புத்தரை மன்னர் மெனியக்கித்த வேண்டிக்கொண்டதாகவும் அதன் பிரகாரம் புத்தர் 500 பிக்குகள் சகிதம் களனிக்கு (கி.மு 519/520 அளவில்) விஜயம் செய்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இலங்கையில் பல பிரதேசங்களுக்கு அவர் சென்றார் என்றும் அதே வேளை (அன்று சுமனகூத (சமனல கந்த) என்று அழைக்கப்பட்ட இன்றைய) “ஸ்ரீ பாத” மலையில் புத்தர் தனது கால் தடத்தைப் பதித்துச் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பௌத்த ஆண்டு 236 தொடக்கம் “ஸ்ரீ பாத” வணக்கத்துக்கு உரிய தளமாக இருந்து வருகிறது என்று பௌத்த நூல்கள் தெரிவிக்கின்றன.
முதலாவது விஜயபாகு (ஆட்சி 1055–1110) அரசாண்ட காலத்தில் “ஸ்ரீ பாத” மலைக்குச் செல்வதற்கான வழிகளை புனரமைத்தும், அப்பகுதிகளை சீரமைத்தது மட்டுமன்றி சுற்றியுள்ள பல கிராமங்களை இதனைப் பராமரிப்பதற்காக நன்கொடையாக எழுதிக் கொடுத்ததாகவும், எப்போதும் யாத்திரிகர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான வழிகளையும் செய்து கொடுத்ததாக கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன.
அதேவேளை “ஸ்ரீ பாத”வில் சூத்திரர்கள் பூஜை செய்து வணங்குவதற்கு மன்னன் விஜயபாகு தடை விதித்ததாகவும் அவர்களுக்கென்று தூரத்தில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றன.
அதன் பின்னர் மகா பராக்கிரம பாகுவும் அங்கு சென்று வணங்கியதாகவும்பின்னர் நிஸ்ஸங்கமல்லன் போர் காலத்தில் தனது படையுடன் சென்று வணங்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது. கண்டியை ஆண்ட அனைத்து நாயக்கர் வம்சத்து தமிழ் மன்னர்கள் அனைவரும் வணங்கச் சென்றிருக்கிறார்கள். துட்டகைமுனு போன்றோர் வணங்கியதாக வரலாற்றுத் தகவல்கள் கிடையாது.
அதன் பின்னர் ஆண்ட பல மன்னர்கள் மலைக்குச் சென்று வணங்கியதாகவும் பல வசதிகளை செய்ததாகவும் கல்வெட்டுகள் இருக்கின்றன.
போர்த்துக்கேயர்களுடன் சேர்ந்து அரசைக் காட்டிக்கொடுத்த பிக்குமார்களை தண்டிப்பதற்காக “ஸ்ரீ பாத” வின் பொறுப்புகளை அரசர் சைவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் 150 வருடங்களின் பின்னர் அரசன் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747-1781) பிக்குகளின் வசம் மீண்டும் சேர்த்தார்.
போர்த்துக்கேயர்கள் தான் முதன் முதலில் இதனை “ஆதம்ஸ் பீக்” என்று அழைத்தனர் என்று கூறப்பட்டாலும் கூட அதற்கு முன்னரே முஸ்லிம் யாத்திரிகர்களால் அப்படி அழைக்கப்பட்டிருக்கிறது என்று அறியக் கிடைக்கிறது.
851 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த மொரோக்கோ நாட்டு யாத்திரிகர் சுலைமான் தாஜீர் (Sulaiman Tajir) இந்த மலைக்குச் சென்று அதனை “அல்லாவின் மலை” (Al-Rohun) என்று அழைத்தார். இப்னு பதுதா (Ibn Battuta) என்கிற முஸ்லிம் யாத்திரிகர் 1344 இல் இலங்கை வந்தார். அப்போது மன்னர் உனக்கு என்ன வேண்டுமென்றாலும் கேள், என்று கூறவே தனக்கு ஆதாமின் பாதத்தை தரிசிக்கக் கேட்டதாகவும் மன்னன் ஒரு பல்லக்கையும், பல்லக்கு காவுவோர் நால்வரையும். பத்து பிரமுகர்களையும், வழித்துணைக்கு பதினைந்து பேரையும் (வீரரையும்) கூடவே அனுப்பி வைத்து அந்த வேண்டுகோளை நிறைவேற்றியதாவும் அவர் எழுதியுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை பற்றி எழுதிய பல ஆங்கிலேயர்கள் இந்த மலை குறித்த பல செய்திகளை குறிப்பிட்டுள்ளனர். மார்க்கோ போலோ, டேவி, ரொபர்ட் நொக்ஸ், டென்னென்ட் போன்றோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
புத்தர் இலங்கைக்கு வந்ததற்கான எந்தவித தொல்பொருள் வரலாற்றுச் சான்றுகளும் கிடையாது, அது புனைகதை என சிங்களவர்களால் போற்றப்படும் வரலாற்று ஆசிரியர் செனரத் பரணவிதாண உள்ளிட்ட பலரும் கூறிவிட்டார்கள் என்பதையும் இந்த இடத்தில் கருத்திற் கொள்க.
உலகத்தவர் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்ற “ஸ்ரீ பாத” மலை யாத்திரிகர்கள் மட்டுமன்றி உல்லாசப் பயணிகளும் சென்று வரும் ஒரு தளமாக பல காலமாக இருந்து வருகிறது.
இனவாத நிகழ்ச்சி நிரலில்
சமீபகாலமாக ஸ்ரீ பாதவை முஸ்லிம்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்கிற வதந்தியைப் பரப்பி முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்தன இனவாத சக்திகள்.
எடிசலாத் (etisalat) என்கிற சவுதி நாட்டு தொலைபேசி நிறுவனம் “ஸ்ரீ பாத” மலையில் பெரும் ஓட்டலை கட்டி ஏராளமான நிலங்களை சொந்தமாக்கியிருப்பதாக கடன சில மாதங்களாக ஒரு வதந்தியைக் கிளப்பி ஊடக பரபரப்புக்குரிய செய்தியாக ஆக்கியிருந்தது இனவாதத் தரப்பு. இனவாதத் தரப்பின் பிரச்சாரம் வெற்றிகரமாக மேலோங்கியிருந்ததை நாம் அனைவரும் கவனித்திருந்தோம். அது ஒரு இஸ்லாமிய ஆக்கிரமிப்பு என்றும் “ஸ்ரீ பாத” வை காக்க வேண்டும் என்றும் கிளப்பிய சர்ச்சையின் விளைவு அங்கே ஒரு பௌத்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
நவம்பர் 5 அன்று கொழும்பிலிருந்து சிங்கக் கொடியையும், பௌத்த கொடியையும் தாங்கிய பல வாகனங்களில் ஒரு பெரும் குழு டொன் பிரியசத் தலைமையில் சென்றது.
சிவனொளிபாத மலையின் அடிவாரத்தில் இதுவரை ஒரு பௌத்தச் சிலையும் கிடையாது என்றும். அங்கெல்லாம் பௌத்த சிலைகளை வைத்தால் தான் முஸ்லிம்கள் அங்கு நெருங்க மாட்டார்கள் என்றும் கூறி, அங்கு ஒரு பௌத்த சிலையை நிறுவி உடனடியாகவே சிறிய வணக்கஸ்தளத்தைக் கட்டிமுடித்தனர்.
இதன் போது தெரிவித்த கருத்துக்கள் கவனிக்கத்தக்கது. “முஸ்லிம்களுக்கு அந்நிய மதச் சின்னங்களும், சிலைகளும் ஹராம் (தவிர்க்கப்பட்டது) எனவே நாங்கள் இந்த இடத்தில் இந்த முஸ்லிம் சிலையை நிறுவினோம். அவர்களுக்கு “ஹராம்” ஆன இந்த இடம் அவர்களுக்கு இனி எப்படி புனிதமாக ஆகப் போகிறது பார்ப்போம்.” என்ரு ஒரு இனவாதி அங்கு உரையாற்றினார்.
இதுவரை காலம் சிவனொளி பாத மலைக்கு வழிகாட்டும் நூற்றுக்கணக்கான வழிகாட்டல் பதாகைகளில் சிங்களத்தில் ஸ்ரீ பாத என்றும், தமிழில் சிவனொளி பாதமலை என்றும், ஆங்கிலத்தில் “ஆடம்ஸ் பீக்” (Adam’s Peak) என்றும் தான் இருந்து வருகிறது. மேற்படி கும்பல் ஆங்கிலத்தில் “ஆடம்ஸ் பீக்” (Adam’s Peak) என் கருப்பு சாயத்தைக் கொண்டு அழித்தார்கள். அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட இத்தகைய வழிகாட்டல் பதாகைகள் சிதைக்கப்பட்டதற்கு எதிராக எவரும் வழக்கு தொடர்ந்ததாக அறியப்படவில்லை. அவர்கள் அப்படி அழித்ததை வீரப் பெருமிதத்துடன் போட்டோ எடுத்து துணிச்சலாக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரப் படுத்தியுமிருந்தனர். சிவனொளி பாத மலை என்று தமிழில் எழுதியிருந்ததை எங்கும் அழிக்கவில்லை. தற்போதைய பிரதான இலக்கு முஸ்லிம்கள் என்பதால் இப்போதைக்கு தமிழை விட்டுவைத்துள்ளார்கள் என்றே கூறவேண்டும்.
கூகிளில் மாற்றினார்கள்
ஆனால் இந்த இனவாதக் கும்பல் அத்துடன் விடவில்லை பிரசித்திபெற்ற கூகிள் வரைபடத்தில் ஆங்கிலத்தில் உள்ள “adam’s peak” (ஆதம்ஸ் பீக்) என்கிற பெயரை “ஸ்ரீ பாத” என்று மாற்றும்படி கூகிள் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்தார்கள். கூகிளுக்கு எப்படி முறையிடுவது என்று வழிகாட்டுகின்ற வீடியோப் பதிவுகளையும் கூட வெளியிட்டார்கள். இறுதியில் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். கூகிள் ஒரு சில தினங்களுக்கு முன்னர் “sri pada” என்று வரைபடத்தில் மாற்றம் செய்தது. இதனை எதிர்த்து அவர்களுக்கு எதிராக ஏனையோரும் ஒரு சைபர் போரையே நடத்தினார்கள். “Adam’s peak” என்ரு முன்னர் இருந்ததே சரியானது என்று ஏனையோரும் கூகிளுக்கு முறைப்பாடு செய்தததைத் தொடர்ந்து கூகிள் “Adam’s peak” என்று ஆங்கிலத்தில் இட்ட அதேவளை கூடவே சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் “ஸ்ரீ பாத” என்றும் இட்டிருப்பதை நீங்கள் காணலாம். தமிழில் இவை எதுவும் இல்லை என்பது வேறு கதை.
இந்தளவு அவர்கள் திட்டமிட்டும், பலமாகவும் இருக்கிறார்கள் என்பதும் ஒடுக்கப்படும் சமூகத்தினர் இதில் கூட பலவீனமாகவே இருக்கிறார்கள் என்றே உறுதியாகக் கூறலாம்.
“சிவனொளிபாதமலை” என்கிற பெயர் இலங்கைச் சூழலில் மாத்திரமல்ல தமிழர்கள் மத்தியில் இருந்தும் அழிந்துபோய் “ஸ்ரீ பாத” என்று அழைக்கிற நிலை நிலைபெற்றுள்ளதைக் காண முடிகிறது. முஸ்லிம்கள் கூட அதனை ஆதாமின் மலை என்று அழைத்ததாக அறிவோம். ஆனால் “ஸ்ரீ பாத” மட்டுமே அதன் பெயர் என்று நிலைநிறுத்தும் இனவெறிக் கூட்டத்தின் இலக்கு சாத்தியப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.
பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையாக பூஜிக்கப்பட்டு வந்த ஒரு ஸ்தலம் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மத ஒதுக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இது இன்றைய இனவாத போக்கின் உச்ச வளர்ச்சியையே எடுத்துக் கூறுகின்றது. உலா மத ஒற்றுமைக்கே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்துவந்த ஒரு பிரதேசம் ஒரு மதத்தவர் மாத்திரம் சொந்தம் கொண்டாடும் நிலை ஏற்பட்டதற்கு அரச இயந்திரம் வழங்கி வரும் ஆசீர் வாதமும், நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதமும்அடிப்படையான காரணங்கள். இந்த சக்திகளை எதிர்கொள்ளும் வலிமை ஏனையோருக்கு இல்லாமல் போனதும் அதே காரணங்கள் தான்.
இனிவரும் காலங்களில் “ஸ்ரீ பாத” மதவொற்றுமைக்கு சிறந்த ஸ்தளமாக இல்லாமல் போனாலும் பரவாயில்லை. ஆனால் மத முரண்பாடுகளின் உலக முன்னுதாரணமாக மட்டும் ஆகிவிடாமல் பாதுகாப்பது முக்கியமாக அரசின் கடமை.
----------
இப்னு பதூதா : சில குறிப்புகள் இப்னு பதூதா (Ibn Battuta-1304-1378) என்றழைக்கப்படும் அபு அப்துல்லா முகமது இபின் பதூதா மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் ஒரு நாடுகாண் பயணியும் ஆவார். இவரது பயணங்களும் அவை குறித்த குறிப்புகளும் இன்றளவும் உலகளவு பிரசித்தமானவை. பல வரலாற்று ஆசிரியர்கள் அந்த குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு மேலதிக வரலாற்றை ஆராய பயன்படுத்தி வருகிறார்கள். இலங்கை பற்றி அவர் எழுதிய குறிப்புகள் கூட இலங்கை குறித்த பல விடயங்களை ஆராய உதவி வருகின்றன. இவரது பயணங்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்தது. 44 நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார்.
அவர் இலங்கையில் கரையிறங்கிய காலத்தில் யாழ்ப்பாண மன்னன் மார்த்தாண்ட சிங்கை பரராஜசிங்கம் (ஆரியச்சக்கரவர்த்தி) அவர்களின் விருந்தினராக ஆனது எப்படி என்பது பற்றிய குறிப்புகளும் காணக் கிடைக்க்ன்றன.
“ஆரியச்சக்கரவர்த்தி என்னை வரும்படி ஆளனுப்பினான். நான் அவனது தலைநகரான பத்தளத்தில் அவனிடம் சென்றேன். அந்த இடம் துப்பரவாகவும் சுற்றுமதிலையும் கொண்டிருந்தது. அண்மையான கரைப்பகுதியில் கறுவா அடிமரங்கள் நிறைந்திருந்தன. பட்டை உரிக்கப்பட்ட கறுவாக்கள். ஏற்றுமதிக்காக, கரையில் குவிக்கப்பட்டிருந்தன. கறுவா மரங்கள் நிறைந்திருந்ததால், வத்தளைப்பகுதியாக இருந்திருக்கலாம். உருவவழிபாட்டு மன்னனின் சமூகத்தில், நான் சென்றபோது. அவன் தன்னருகில் என்னை அமரச் செய்து, கனிவுடன் உரையாடினான். உமது நண்பர்களும் பாதுகாப்பாக கரையிறங்கட்டும். திரும்பிச்செல்லும்வரை அவர்கள் எனது விருந்தாளிகளாவர் என்றான்.
அதன்பின். எனக்குத்தங்குமிடவசதிசெய்து கொடுக்கும்படி மன்னன் கட்டளை இட்டான். அங்கு நான் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். எனக்குப் பெரும் முக்கியத்துவம் தரப்பட்டது. நாளுக்கு நாள் அது அதிகரித்தது. மன்னன் பாரசீகமொழியை அறிந்திருந்தான். நான் பிறநாடுகள். மன்னர்கள் பற்றிசொன்ன கதைகளை அதிக விருப்புடன் செவிமடுத்தான். ஒருநாள். மன்னன் கரங்களில் முத்துக்களை வைத்திருந்த சமயத்தில். அவன் முன்னிலையில் சென்றேன். அம்முத்துக்கள். அவனது ஆளுகைக்குட்பட்ட கடற் பிராந்தியத்தில். முத்துக் குளிப்பால் பெறப்பட்டவை. மன்னனின் பணியாட்கள் அங்கு முத்துக்களைத்தரம் பிரித்துக் கொண்டிருந்தனர்.
நீர் சென்று வந்த நாடுகளில், எங்கேனும் முத்துக்குளிப்பைப் பார்த்திருக்கிறீரா? என்று மன்னன் கேட்டான். ஆம். இபின் அஸ்லாமலிக்குச் சொந்தமான கொயிட்தீவில். முத்துக்குளிப்பு நடைபெறுவதைக் கண்டிருக்கிறேன் என்றேன் நான். மன்னன் தன் கையிலிருந்த முத்துக்களைக் காண்பித்து.
அத்தீவில் இத்தகைய முத்துக்களுக்கு ஈடிணையாக யாதாயினும் முத்துக்கள் கண்டிருக்கிறீரா? என்று கேட்டான். இப்படியான சிறந்த முத்துக்கள் ஒன்றைத் தானும் நான் பார்க்கவில்லை என்றேன். எனது பதிலால் மகிழ்ச்சியடைந்த மன்னன். இவை உம்முடையதே என்றான். அத்துடன் நீ விரும்பும் எதனையும் என்னிடம் கேட்கலாம். நாணமுற வேண்டாம் என்றும் மன்னன் கூறினான்.
அதற்கு நான் ஆதாமின் பாதத்தினை தரிசிப்பதை ஆவலாகக் கொண்டுள்ளேன் என்றேன். அது சுலபமானது என்று சொன்ன மன்னன். வழிகாட்டுவதற்கு ஆட்கள் அனுப்பி வைப்பதாக சொன்னான். மன்னன் ஒரு பல்லக்கையும், பல்லக்கு காவுவோர் நால்வரையும். பத்து பிரமுகர்களையும், வழித்துணைக்கு பதினைந்து பேரையும் (வீரரையும்) கூடவே அனுப்பி வைத்தான். .”
+ comments + 2 comments
Good
Good
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...