‘யாழ்ப்பாண பொது நூலகம் எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்த மக்களிடம் மன்னிப்பு கோரியதைப்போன்று தோட்டப்புற மக்களின் இன்றைய நிலைக்காக அவர்களிடமும் மன்னிப்புக் கோரவேண்டும்’ என்று ஜே.வி.பி.தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும். எனினும் ஐ.தே.க மன்னிப்பு கேட்குமா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.
இது ஒட்டுமொத்த மலையக மக்களுடைய கடுமையான உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் அதேவேளை அவர்கள் காலங்காலமாக இந்த நாட்டில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் அவர்களை உதாசீனம் செய்து தொடர்ந்து அடிமைகளாகவும் உரிமைகளை வழங்காமல் வறிய நிலையில் வைத்திருப்பதற்கு கண்டனத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மலையக மக்களுக்காக பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. சரியான தகவல்களை புள்ளி விபரத்துடனும் தகுந்த ஆதாரங்களுடனும் வெளியிட்டு வருகின்றது. அந்தவகையில் அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட ஐந்து அமைச்சுகள் மீதான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் (09 ஆம் திகதி) கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்திருக்கிறார்.
தமது உரையில் அவர் 180 வருடங்களுக்கு மேலாக மலையக தோட்ட மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் பேரனர்த்தங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் இந்த நாட்டின் ஆட்சியாளர்களே பொறுப்புக் கூறவேண்டும். இந்த நாட்டுக்கான தேசிய வருமானத்திற்கு பெரும்பங்கினை இவர்கள் ஈட்டிக் கொடுத்துள்ளனர். ஆடைத் தொழிற்துறை முன்னேற்றமடைவதற்கு முன்னர் நாட்டின் ஏற்றுமதி துறையில் தேயிலைக் கைத்தொழில்துறையே பெரும்பங்கினை வகித்திருக்கின்றது.
அந்த மக்கள் எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆற்றியுள்ள சேவை கணக்கில் அளவிட முடியாததொன்றாகும். ஆனால் அந்த மக்களை இந்த நாட்டின் பிரஜைகளாக ஏற்று அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோமா? அந்த மக்களுக்கு குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தையேனும் வழங்கத் தவறியுள்ளோம்.
எனவே யாழ். நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு பிரமர் ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரியிருந்தார். ஆனால் தோட்டப்புற மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை குறித்தும் அந்த மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
தோட்டப்புற மக்களின் வாக்குகள் மூலம் எம்.பிக்களாகவும் அமைச்சர்களாகவும் பதவிகளைப் பெற்ற மலையகத் தலைவர்கள் தமது சமூகத்திற்குரிய நலன்களைப் பெற்றுக் கொடுக்காமல் சொந்த நலன்களுக்காகவே அதனைப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1948 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இலங்கை குடியுரிமைச் சட்டத்துக்கு அமைவாக பெரும்பாலான இந்திய வம்சாவளி தோட்டத் தமிழர்கள் இந்த நாட்டு குடியுரிமையை இழந்து நாடற்றவர்களாகினர். இதன் காரணமாகவே வாக்களிக்கும் உரிமையும் இல்லாமல் போனது. அன்றைய தமிழ் தலைவர்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே அரசாங்கம் குடியுரிமையை பறித்தது. இது மலையகத் தமிழருக்குக் கிடைத்த முதலாவது அடியாகும்.
அதன் பின்னர் இலங்கை – இந்தியாவுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழர்களின் அரைப்பகுதியினரை இந்தியாவுக்கு திருப்பியனுப்பவும் ஏனையோருக்கு இலங்கை குடியரிமை வழங்கவும் இணக்கம் காணப்பட்டது. இந்த நாட்டுக்கு உழைத்துக் கொடுத்தவர்கள் மீண்டும் சொந்த மண்ணுக்கு அகதிகளாக திருப்பியனுப்பப்பட்டமை மற்றொரு அடியாகும்.
பின்னர் 1983 ஜுலை மாதத்தில் இடம்பெற்ற கலவரத்தில் இலட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இது இலங்கை வரலாற்றில் என்றும் மறக்க முடியாத சம்பவமாகும். இதுவும் ஐ.தே.க .ஆட்சியிலேயே இடம்பெற்றது. இதுபோன்று காலத்துக்கு காலம் இடம்பெற்ற தாக்குதல்களில் ஒன்றுமறியாத அப்பாவி தோட்ட மக்களே பாதிக்கப்பட்டனர்.
1979 ஆம் ஆண்டு புதிய அரசியல்யாப்பிற்கமைய சகல இந்திய வம்சாவளி தமிழருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது. எனினும் குடியுரிமையும் வாக்களிப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டதே தவிர நாட்டின் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் உரிமைகள் எதுவும் அதில் உள்ளடக்கப்படாத நடைமுறை சிக்கல்களைக் கொண்டுள்ளது.
காணியுரிமை, வீட்டுரிமை மட்டுமன்றி தோட்ட மக்கள் உள்ளூராட்சி சபைகளுக்குரிய உரிமைகளை பெறமுடியாத சிக்கல் நிலைமை தொடர்கிறது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சகல துறைகளிலிலும் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். உழைப்புக்கேற்ற சம்பளத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நீண்ட போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.
எனவே நீண்டகாலமாக பாகுபடுகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் உள்ளாகி வரும் மலையக தொழிலாளர் சமூகத்தின் இன்றைய நிலைமைக்கு இந்நாட்டில் மாறிமாறி ஆட்சி செய்யும் அரசாங்கங்களே காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது. அது எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் சரி அவை மலையக மக்கள் விடயத்தில் ஒரே கொள்கையையே கடைப்பிடித்து வந்துள்ளன – வருகின்றன.
இதேவேளை ஜே.வி.பி தலைவரின் கருத்துத் தொடர்பாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவருமான மனோ கணேசன் தமது அபிப்பிராயத்தை தெரிவித்திருக்கிறார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட குடியுரிமை பறிப்பு, வாக்குரிமை பறிப்பு என்பன மலையகத் தமிழரின் இருப்பையே அசைத்துவிட்டன என்பதில் மாற்றுக்கருத்து இல்லையெனவும் எனவே ஐ.தே.க மலையக மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியிருப்பது நியாயமானதுதான் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதே கருத்தினை மலையக சமூக ஆர்வலர்கள், தலைவர்கள் என பலரும் கொண்டிருப்பார்கள் என்பது உண்மை. அதேவேளை கடந்த காலத்தில் மலையக மக்கள் தொடர்பில் ஜே.வி.பி. கொண்டிருந்த நிலைப்பாடு பற்றியும் அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியிருந்தார். அதனையும் மறுப்பதற்கில்லை. எனினும் காலம் கடந்தாவது புதிய தலைமையின் கீழ் செயற்படும் ஜே.வி.பி. யிடம் மலையக மக்கள் பற்றிய எண்ணக்கரு மாற்றம் பெற்றிருப்பதை வரவேற்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் ஜே.வி.பி. மலையக மக்களின் உரிமைகளுக்காகவும் நலன்புரி விடயங்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...