Headlines News :
முகப்பு » » இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பை தணிப்பதற்கு முயற்சிக்கின்றது

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பை தணிப்பதற்கு முயற்சிக்கின்றது


அக்டோபர் 18 அன்று பெருந்தோட்ட தொழிற்சங்கங்களும் தோட்ட உரிமையாளர்களும் கையெழுத்திட்ட ஒரு புதிய கூட்டு ஒப்பந்தத்தின் கீழ், கம்பனிகளால் வேலை இலக்கு அதிகரிக்கப்படுவதற்கும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வெட்டப்படுவதற்கும் எதிராக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பு மற்றும் கோபத்தை தணித்துவிடும் அவநம்பிக்கையான முயற்சியில் பெருந்தோட்ட தொழிற்சங்க தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தலைவர்களால் நவம்பர் 17 ஹட்டனில் நடத்தப்பட்ட பிரச்சாரமும், கூட்டமும் இதன் ஒரு பாகமாகும்.

இ.தொ.கா., கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொழிற்சங்கங்களில் ஒன்றாகும். அதன் ஆர்ப்பாட்டத்திலும் கூட்டத்திலும் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையானவர்கள், நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா. உள்ளூர் கிளை தலைவர்களும், தொழிற்சங்க தலைவர்களுமே என்பது குறிப்பாக முக்கியமானதாகும். அவர்களை இயக்குவதன் மூலம், தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்பினை அடக்கி, ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை தொழிலாளர்கள் மீது சுமத்துவதே ஆறுமுகம் தொண்டமான் உட்பட இ.தொ.கா. தலைவர்களின் இலக்காக உள்ளது.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு மை காய்வதற்கு முன்னரே தோட்டக் கம்பனிகளால் பல தோட்டங்களில் நாளொன்றுக்கு பறிக்க வேண்டிய தேயிலைக் கொழுந்தின் அளவை இரண்டு கிலோவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தினசரி உற்பத்தியை அவ்வாறு அதிகரிப்பதற்கு எதிரக, நுவரெலியா மாவட்டத்தில் பெல்மோரல், அக்கரபத்தனை மற்றும் சாமிமலையில் டீசைட் மற்றும் டிக்கோயாவில் போடைஸ் போன்ற தோட்டங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களில் குதித்த அதேவேளை, பல தோட்டங்களில் தொழிலாளர்கள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கொழுந்து பறிக்கும் அளவு அதிகரிக்கப்படுவதனால் அடுத்து வரும் மாதங்களில் சம்பளம் குறைவதற்கான ஆபத்தை எதிர்கொண்டிருப்பதாக பெல்மோரல் தோட்டத்தின் ஒரு பெண் தொழிலாளி கூறினார். "தொழிற்சங்கத் தலைவர்கள் கொழுந்து பறிக்கும் அளவை அதிகரிக்க ஒப்புக்கொண்டதாக தோட்ட முகாமையாளர் கூறினார். அதன்படி ஒரு நாளுக்கு 18 கிலோ பறிக்காவிட்டால் ரூ 140 கிடைக்காது. முதலில் 16 கிலோவாகத்தான் இருந்தது. இரண்டு கிலோவால் அதிகரித்துள்ளனர். இந்த மாதம் இரண்டு நாட்களும் 13 கிலோ தான் பறிக்க முடிந்தது.

"நாம் வேலைநிறுத்தங்கள் செய்தபோது தொழிற்சங்கங்கள் எந்தவொரு ஆதரவும் கொடுக்காததால், கொழுந்து பறிக்கும் அளவு அதிகரிக்கப்படுவதை நிறுத்த முடியாமல் போனது. அரசாங்கம், தொழிற்சங்கங்கள் இரண்டுமே எங்களை ஏமாற்றிவிட்டன. எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஒவொரு நாளும் விலைவாசி அதிகரிக்கும்போது கிடைக்கும் அற்ப தொகையில் எப்படி பாடசாலைக்கு அனுப்ப முடியும், சாப்பாடு கொடுக்க முடியும்" என்று அவர் கேட்டார்.

மற்றொரு தொழிலாளி, கூட்டு ஒப்பந்தத்தின் பின்னர் ஆண் தொழிலாளர்களின் வேலை அளவு அதிகரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். "வேலை அதிகரிக்கப்பட்டதோடு முன்னர் எமக்கு இருந்த வசதிகளும் குறைக்கப்பட்டு விட்டன. புதிய வேலை இலக்கை முடித்தாலும் கூட, இம்மாதம் 25 அன்று, 45 தொழிலாளர்கள் ஒரு மணிநேரம் தேநீர் இடைவேளை எடுத்ததாக கூறி அன்று அவர்களுக்கு சம்பளம் கொடுக்க நிராகரித்துவிட்டனர். அது முன்னர் எங்களுக்கு இருந்த ஒரு வசதி. அதை இப்போது அரை மணி நேரம் வெட்டிவிட்டுள்ளனர். இப்போது எமக்கு தொழிற்சங்கங்களில் நம்பிக்கை கிடையாது" என்று அவர் கூறினார்.

இ.தொ.கா. உட்பட தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் இந்த எதிர்ப்பை பற்றியே கவலை அடைந்துள்ளனர். இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான், நவம்பர் 17 கூட்டத்தில் பேசுகையில், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொழிற்சங்கங்கள் உற்பத்தி திறனை அதிகரிக்க உடன்படவில்லை என்று காட்ட தோல்வியுற்ற முயற்சியில் ஈடுபட்டார். "உங்கள் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தத்தில், உற்பத்தி இலக்குகளை அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். அதன் அடிப்படையிலேயே நாம் உற்பத்தி இலக்கை அதிகரிக்கின்றோம்" என தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்கள் மத்தியில் பிழையான பிரச்சரத்தை முன்னெடுப்பதாக அவர் தோட்டக் கம்பனிகள் மீது குற்றம் சாட்டினார்.

அதன் பின்னர் அவர் ஒப்பந்தத்தில் இருந்து மேற்கோள் காட்டிய பகுதி, அவரது குற்றச்சாட்டு மோசடியானது என்பதை அம்பலத்துக்கு கொண்டுவந்துள்ளது. குறிப்பிட்ட நிபந்தனைகளின் படி, தோட்டங்களில் ஸ்தாபிக்கப்படும் தொழிற்சங்க கிளைகளின் தலைவர்களும் மாதர் சங்க தலைவிகளும் அடங்கிய தொழிற்சங்க நடவடிக்கை குழுவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்படும் உடன்பாட்டின் அடிப்படையில், தோட்டக் கம்பனிகளால் உற்பத்தித்திறனை அதிகரித்துக்கொள்ளலாம். இது உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு தோட்ட உரிமையாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள உடன்பாடு இல்லை என்றால் வேறு என்ன?

தொழிலாளர்களுக்கும் தோட்ட உரிமையாளர்களுக்கும் உரிய சில நிபந்தனைகள் உடன்படிக்கையில் இருந்தாலும், ஒரு மாதம் கடப்பதற்கும் முன்னரே உரிமையாளர்களால் உடன்படிக்கையின் நிபந்தனைகள் “மீறப்பட்டுள்ளதாக” தொண்டமான் பாராளுமன்றத்தில் நவம்பர் 24 அன்று கூறினார். உடன்படிக்கையின் படி ரூபா 140 உற்பத்தி கொடுப்பனவு நாளாந்தம் கொடுக்கப்பட வேண்டும், ஆனாலும், வேலை இலக்கை அதிகரித்து அதை கொடுக்க கம்பனிகள் தவறியுள்ளதாகவும், அது பற்றி "தொழில் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவும்," தோட்டக் கம்பனிக்களுக்கு எதிராக "சட்டபூர்வ நடவடிக்கைகளை" எடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் அங்கு மேலும் கூறினார்.

தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க உட்பட அரசாங்கத்தின் பல அமைச்சர்களின் நேரடி சமூகமளிப்புடனேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இ.தொ.கா., பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் ஒப்பந்தத்துக்கு மட்டுமன்றி, எஞ்சிய சம்பளம் மற்றும் ரூபா 1000 நாள் சம்பள கோரிக்கையையும் கைவிட ஒப்புக் கொண்டன.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின், கம்பனிகள் தொழிற்சங்க தலைவர்களின் ஒத்துழைப்பை பாராட்டியதோடு எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் கம்பனிகளால் திட்டமிடப்பட்டுள்ள முற்றிலும் உற்பத்தி திறனை அடிப்படையைக் கொண்ட சம்பளத் திட்டத்தை செயல்படுத்துவதாக பெருந்தோட்ட உரிமையாளர் சங்க தலைவர் சுனில் பொஹோலியத்த உறுதியாக கூறினார்.

இதனால், ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை “மீறி” உற்பத்தி இலக்குகளை கூட்டுவது மற்றும் உற்பத்தித்திறன் கொடுப்பனவை கொடுக்காமல் இருப்பது சம்பந்தமாக, தொழில் அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகவும் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தொண்டமான் கூறும் கதைகள், தொழிலாளர்களை ஏமாற்றும் திட்டமிட்ட மோசடி நடவடிக்கையாகும்.

உற்பத்தி இலக்குகளை அதிகரிப்பதற்காக, கூட்டு ஒப்பந்தத்தில் கம்பனிகளுக்கு உரிமைகளை கொடுத்து, தாங்கள் நினைத்தவாறு உற்பத்தி இலக்குகளை கூட்டுவதற்கு அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது இ.தொ.கா. உட்பட தொழிற்சங்கங்களே ஆகும். தமது சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலக்குகளை அதிகரிப்பதை ஒப்பந்தத்துக்குள் உள்ளடக்கியது, தொழிலாளர்களை அவற்றுக்கு அடிபணியச் செய்யும் பொலிஸ்கார வேலையை பொறுப்பெடுப்பதற்கே ஆகும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், "சமீப ஆண்டுகளில் வாழ்க்கை நிலைமைகள் மோசமாக சீரழிவதை எதிர்கொண்டிருக்கும் தோட்டத் தொழிலாளர்களை சுரண்டுவதை உக்கிரமாக்குவதன் மூலம், பெருந்தோட்டத் தொழிற்துறையில் ஆழமடைந்து வரும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு அரசாங்கமும் தோட்டக் கம்பனிகளும் மற்றும் தொழிற்சங்கங்களும் முயற்சிக்கின்றன” என உலக சோசலிச வலைத் தளமும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) வலியுறுத்தின.

“இந்த தாக்குதல்கள், மைத்திரிபால சிறிசேன-ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தினால் கட்டளையிடப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதன் பாகமாகும்” என மேலும் சுட்டிக்காட்டிய சோ.ச.க., தோட்டத் தொழிலாளர்கள் "தங்கள் ஊதியங்கள், தொழில், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க, தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து, ஒவ்வொரு தோட்டத்திலும் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பிக்கொண்டு அவற்றை சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இயக்க வேண்டியதன்” அவசியத்தையும் சுட்டிக் காட்டியது.

சோ.ச.க. அழைப்புக்கு பிரதிபலித்த சாமிமலையில் கிளனியூஜி பெருந்தோட்டத்தின் டீசைட் பிரிவு தொழிலாளர்கள் குழுவினர், இப்போது ஒரு நடவடிக்கை குழுவை கட்டியெழுப்பிக்கொண்டு, சோ.ச.க. வழிகாட்டுதலின் கீழ், அரசாங்கம் மற்றும் கம்பனிகளின் தாக்குதல்களுக்கு எதிராக வேலை, சம்பளம் மற்றும் அடிப்படை உரிமைகளைக் பாதுகாக்கும் ஒரு சக்திவாய்ந்த போராட்டத்தை ஏற்பாடு செய்ய முன்னணிக்கு வந்துள்ளதோடு பல தோட்டங்களிலும் தொழிலாளர்கள் சோ.ச.க. உடன் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பிக்கொண்டு இந்த போராட்டத்துக்கு பங்களிப்பு செய்ய உடன்பட்டுள்ளனர்.

நடவடிக்கை குழு என்பது தொழிற்சங்கங்களுக்கு பதிலான மற்றொரு மாற்று அமைப்பு அல்ல. அது அரசாங்கம் மற்றும் முதலாளிகளின் தாக்குதல்களுக்கு எதிராக ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தையும் ஒருங்கிணைக்கும் மற்றும் முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்புமுறையை தூக்கி வீசுவதற்காக சர்வதேச சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை உருவாக்குவதை இலக்காக கொண்ட, துரோக தொழிற்சங்கங்களில் இருந்து முற்றிலும் சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக அமைப்பாகும்.

ஒவ்வொரு தோட்டத்திலும் இத்தகைய நடவடிக்கை குழுக்களை உருவாக்க முன்வருமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.

By A. Suresh and M. Thevarajah

நன்றி - wsws
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates