Headlines News :
முகப்பு » » மலையக தேசிய பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவம் - அருள் கார்க்கி

மலையக தேசிய பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவம் - அருள் கார்க்கி


இலங்கையின் சுமார் 15 தேசிய பல்கலைக்கழகங்கள் இன்று உயர் கல்வியில் பங்களிப்பு செய்துவருகின்றன. இந்நாட்டின் முதலாவது பல்கலைக்கழகமே மலையகத்தில் தான் அமைந்ததை நாம் கவனத்தில் கொள்ளத்தக்கது. எனினும் சுமார் 15 இலட்சம் மக்கள் தொகையினைக் கொண்ட மலையக இனத்தின் சார்பில் ஒரு தேசிய பல்கலைக்கழகம் இன்றுவரை அமையாதது எமது அரசியல் இயலாமையை பறைசாற்றும் உறுதியான ஆதாரமாகும்.

மலையகத்துக்கென தனியான ஒரு பல்கலைக்கழகம் அவசியம் என்று இன்று பரவலான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் அதனை நடைமுறை சாத்தியமாக்கும் நகர்வுகள் பாராளுமன்றத்தின் மூலமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனினும் உதிரிகளாக ஆங்காங்கே சிலர் கூச்சலிட்டுக் கொண்டிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

சிறுபான்மை இனத்தின் சார்பில் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஈழத்து சமூகத்தின் மையப்புள்ளியாக விளங்குகின்றது. யாழ்ப்பாணச் சமூகத்தின் கலை, கலாசார அடையாளமாக மட்டுமின்றி முக்கிய சமூக நகர்வுகளை தீர்மானிக்கும் சக்தியாக யாழ். பல்கலைக்கழகம் விளங்குகின்றது. மலையக தேசியம் குறித்து விவாதிக்கப்படும் இக்காலச் சூழலில் எம்மக்களின் வாழ்வியல் ஆவணப்படுத்தலுக்கான ஒரு மத்திய நிலையமாக மலையக பல்கலைக்கழகம் அமையும் என்பதில் தவறில்லை. காரணம் பல்லின கலாசாரத் தன்மை கொண்ட இலங்கையை ஒத்த நாடுகளில் தேசிய கல்விக் கட்டமைப்பின் கீழ் செயற்படும் இனங்கள் சார்ந்த பல்கலைக்கழகங்கள் உண்டு. அந்தந்த இனங்கள் சார்ந்த ஆய்வுகள், ஆவணப்படுத்தல் சார்ந்த செயற்பாடுகளில் அப்பல்கலைக்கழகங்கள் காத்திரமான பங்களிப்பைச் செய்கின்றன. இவ்வாறான உதாரணங்களை ஆய்வு செய்தல் எமக்கு பயனுடையதாக இருக்கும்.

உலகிலேயே அதிகமான பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. அரச பல்கலைக்கழகங்களுக்கு அதிகமான தனியார் பல்கலைக்கழகங்களும் உயர் கல்வியில் பங்களிப்புச் செய்கின்றன. இவ்விடயத்தில் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் கல்வியில் பங்களிப்புச் செய்ய வேண்டிய கடமை அயல் நாட்டுக்கு உண்டு எனும் நிலையில் மலையகத்தில் ஒரு தேசிய பல்கலைக்கழகம் அமையும் சந்தர்ப்பத்தில் இந்திய பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். அது மட்டுமன்றி சர்வதேச தரம் வாய்ந்த கற்கை நெறிகளை அறிமுகம் செய்து எமது சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைத்துக் கொள்ளலாம்.

கியூபா நாட்டின் பல்கலைக்கழகங்கள் மிகத் தரமானவையாக இன்று காணப்படுகின்றன. எம்மைப் போன்ற இன அடக்கு முறையை எதிர்கொண்ட ஒரு நாட்டின் உயர்கல்வி இன்று விதந்துப் பாராட்டப்படுமானால் அதற்கான காரணங்களை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

சாத்தியமான உதாரணங்களை ஆய்வுசெய்து தரமான வெளியீடுகளை தரக்கூடிய ஒரு கல்வி நிலையமே இன்று எமக்கு தேவை. அதேபோல் ஆளணி விடயத்தை எடுத்துக் கொண்டால் உயர் கல்வியில் திறமையான விரிவுரையாளர்கள், நிர்வாகிகள் இன்று மலையகம் சார்ந்து உருவாகி வருகின்றனர். சமூக நோக்கோடு உழைக்கும் இவர்களின் அறிவையும் திறனையும் ஒரு புள்ளியில் குவிவடையச் செய்யும் ஒரு விடயமாக மலையக தேசிய பல்கலைக்கழகம் அமைய வேண்டும்.

மலையகம் சார்ந்த ஆய்வுகள் சர்வதேச மட்டத்துக்கு எடுத்துச் செல்ல இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு.

 மாணவர் அனுமதியிலும் மலையக சமூகத்துக்கான முக்கியத்துவமும் முன்னுரிமையும் இங்கு வழங்கப்பட வேண்டியதன் தேவைப்பாடு உள்ளது. காரணம் ஏனைய பல்கலைக்கழகங்களிலும் மலையக மாணவர்கள் அனுமதி இன்று கிடைக்கப் பெறினும் விசேட ஏற்பாடுகள் மூலம் அதிகமான உள்ளீர்ப்புகளை செய்வதற்கான வசதிகளை நாம் அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி இன்று மலையக சமூகத்தின் ஆசிரியர் தேவையை மாத்திரம் பூர்த்தி செய்யும் ஒரு உயர்கல்வி நிறுவனமாகும். எனினும் பாடசாலை கல்வி கட்டமைப்பு மாத்திரம் எமது சமூகத்தின் தேவை அல்ல. ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியானது சில வரையரைகளுக்கு உட்பட்டே செயற்பட வேண்டிய நிலை உள்ளது. எனினும் ஒரு மலையக பல்கலைக்கழகம் ஒன்று அமையும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான வரை முறைகளுக்கு அப்பாற்பட்டு எமக்குச் செயற்பட முடியும். குறிப்பாக இன்று தேசிய கல்வியற் கல்லூரிகள் பயிற்றப்பட்ட ஆசிரியர்களை சமூகத்துக்கு வழங்குகின்றது. எனினும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேவையை கல்வியியற் கல்லூரிகளால் நிரப்ப முடியாது. 

குறிப்பாக கணித, விஞ்ஞான தொழில்நுட்ப பிரிவுகளில் உயர்தரத்துக்கான ஆசிரியர் தேவை பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. ஊவா மாகாணத்தில் அண்மைக் காலமாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களை விண்ணப்பிக்கும் படி சமூக அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்தன. இவ்வாறான சமூக அவலம் எம் சமூகத்துக்கு மாத்திரமே விதிக்கப்பட்டனவா? திட்டமிடப்பட்ட கல்விக் கட்டமைப்பின்றி 3000 ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனம் அண்மையில் வழங்கப்பட்டது. எனினும் அவர்களுக்கான பயிற்சிக் களமாக பாடசாலைகளை அவர்கள் பயன்படுத்தும் நிலையே இன்றும் காணப்படுகின்றது. மறுபக்கம் அவசியமான ஆளணிக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. ஒரு சமூகத்தின் முக்கிய மையப் புள்ளியாகவும் கல்விக் கொள்கைகளை உருவாக்கும் உயர் நிறுவனங்களாகவும் பல்கலைக்கழகங்கள் விளங்க வேண்டும். அதனை மலையக தேசிய பல்கலைக்கழகத்தின் மூலம் சாத்தியமாக்கிக் கொள்ளலாம்.

பெரும்பான்மை இனத்தைப் பொறுத்தவரை அனைத்து தேசிய பல்கலைக்கழகங்களிலும் அவர்களின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படும் நிலையில் நவீன பாடநெறிகளை உள்ளீடுச் செய்து உலகத்தரமான வெளியீடுகளை சமூகத்துக்கு வழங்குகின்றனர். அதற்கு சிறந்த உதாரணமாக அண்மையில் இலங்கையில் நிறுவப்பட்ட சமுத்திரப் பல்கலைக்கழகத்தை குறிப்பிடலாம்.

எம்மோடு வாழும் ஒரு சமூகம் கடல் அனர்த்த ஆய்வுகளை மேற்கொள்ள தயாரான நிலையில் நாம் கலாசார மதிப்பீடுகளை பாதுகாக்கவே நிறுவன மயப்படாத நிலையில் இருக்கின்றோமேயானால் எமது பின்னடைவுக்கு இதைவிட வேறு என்ன கேவலம் இருக்க முடியும். கட்சிகள் சார்ந்து செயற்படாமல் பொதுவான ஒரு ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும். மலையகத்துக்கு தனியான பல்கலைக்கழகம் ஒன்று அமைப்பதற்கான அனைத்து சாத்தியமான விடயங்களும் ஆய்வு செய்யப்பட வேண்டும். முழுமையான ஒரு அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு சட்ட மூலமாக கொண்டு வரப்பட வேண்டும். மலையகம் சார்ந்து பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ உறுப்பினர்கள் அனைவரும் இருக்கையை விட்டு எழுந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இது விடயத்தில் மலையக சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள், ஊடக ஒழுங்கமைப்புகள் அனைத்தும் தத்தமது மட்டத்திலிருந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். 

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates