Headlines News :
முகப்பு » » 'அறுவடைக் கனவுகள்' மூலம் அழியாத நினைவுகள் தரும்; அல்அஸுமத் - மல்லியப்புசந்தி திலகர்

'அறுவடைக் கனவுகள்' மூலம் அழியாத நினைவுகள் தரும்; அல்அஸுமத் - மல்லியப்புசந்தி திலகர்


எந்தவொரு எழுத்தாளனுக்கும் அவனது பிறப்பும், அந்த பிறப்புசார் பிரதேசமும் அந்த பிரதேசம் சார்ந்து அவன் கொண்டிருக்கும் பிரக்ஞையும், அந்த பிரதேசம் சார் மக்களும், அந்த மக்களின் சமூகம்சார் வாழ்க்கையும் அவர்தம் மொழியும் கலையும்,பண்பாடும் படைப்பாற்றலுக்கான பின்புலத்தை கொடுக்கின்றன. அந்த பின்புலத்தோடு அவனது வாசிப்பு அனுபவங்களும், சமூகம் நோக்கிய பார்வையும் (Pநசஉநிவழைn)தேடலும் இரண்டரக்கலக்கும்போது அவனே ஒரு சமூக விஞ்ஞானியாகி அவன் ஆய்ந்தறிந்தவற்றை புனைவுகளாகவும் அபுனைவுகளாகவும் வெளிப்படுத்தி நிற்கும் தன்மை கலை, இலக்கியச் செயற்பாட்டுக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவை எழுத்துச் செயற்பாடாகவும், கலைச் செயற்பாடுகளாகவும் அளிக்கைகளாகவும் இந்த சமூகத்திற்கு நிரம்பல்செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. (ளுரிpடல). இதில் உள்ள சுவாரஸ்யமான அம்சம் என்னவெனில் இந்த நிரம்பல் கேள்வியினால் (னுநஅயனெ) எழும்புகின்ற நிரம்பல் இல்லை என்பதுதான். யாரையும் எழுதச்சொல்லியோ ஆடச்சொல்லியோ சமூகத்தில் எவரும் கேள்வி (னுநஅயனெ) விடுப்பதில்லை. ஆனால் ஒரு கலைஞனோ அல்லது எழுத்தாளனோ தன்னுடைய வெளிப்படுத்தலை செய்வதற்கு அதிக பிரயத்தனம் எடுத்துக்கொள்கிறான். இதற்குள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்களும் ஏராளம். தனது தனிப்பட்ட வாழ்க்கையை தனது கலை இலக்கிய செயற்பாடுகளினால் செழுமையாக்கிக் கொண்டவர்கள் பத்து வீதம் ஆனோர் என்றால் எஞ்சிய தொன்னூறு வீதமும் வறுமையாக்கிக் கொண்டவர்கள் என்பதுதான் யதார்த்தம்.இந்த யதார்த்த நிலை தொடரும்போதும் இந்த சமூகத்தில் கலை,இலக்கிய எழுத்துச் செயற்பாடுகளில் ஈடுபாடு குறைவதுமில்லை,ஈடுபடுவோர் குறைவதுமில்லை.

அத்தகைய குறையாத ஈடுபாட்டுடன் இலக்கியச் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் பன்முக ஆளுமைதான் அல்அஸுமத். மாத்தளையில் மலையகத்தவனாய், மலையாளத்தவனாய் வேலாயுதனாகப்பிறந்து அல் அஸுமத் எனும் ஆளுமையாக தன்னை அரைநூற்றாண்டுக்கு மேலாக இலக்கிய உலகில் நிiநிறுத்தியிருக்கும் இவருக்கு  75 வயது என்கிறபோது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இன்னும் இளைஞனாக 'ஸ்கூட்டி'யில் ஏறி அமர்ந்து இதோ திரும்பிவிடுகிறேன் என உற்சாகமாக தன் பிறந்த ஊரான மாத்தளைக்கு கொழும்;பில் இருந்து புறப்பட்டுவிடும்  அவரது சுறுசுறுப்பை நினைக்கையில் ஆச்சரியம் இன்னும் அதிகரிக்கிறது.

அல் அஸுமத் பற்றி சிந்திக்க நேரும்பேதெல்லாம் என் கண்முன்விரிவது  வேலாயுதனாக அவர் கடந்து வந்த வாழ்க்கையின் அரைவாசி சரிதத்தை 'அறுவடைக்கனவுகள்' என அழியாத நினைவுகளாக எழுதிவைத்திருப்பதுதான். கவிதை, சிறுகதை, நாவல், சிறுசஞ்சிகை ஆசிரியர் என பன்முக ஆளுமையுடன் தன்னை வெளிப்படுத்திய படைப்பாளி. இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு தான் பிறந்த இடமும் அது சார்ந்த மக்களும்,வாழ்வும் அல் அஸுமத்தின் ஆரம்ப கால எழுத்துக்கு பின்புலமாக அமைந்திருக்கினற என்பதற்கு அவரது ஆரம்பகால கவிதைகள் முதல் அறுவடைக்கனவுகள் நாவல் வரை சான்று பகரும். அவை அவரது பிரதேசம்'மலையகம்' என உரக்க சொல்லி நிற்கிறது. மலையாளியாக பிறந்தாலும் மலையகத்தின் தமிழ் சூழலும் தமிழ் கல்வியும் அவரை தேர்ந்த தமிழறிவாளனாகவே வாழவைத்திருக்கிறது. எழுத்தில் மத்திரமல்லாது உச்சரிப்பிலும் தமிழை பிழையின்றி கையாளும் எழுத்தாளர். இந்த ஒற்றுமை நிறையபேரிடம் காணக்கிடைக்காது. பின்னாளில் அவரது வாசிப்பு அனுபவங்களும் அவர் வரித்துக்கொண்ட வாழ்க்கையினாலான  அனுபவங்களும் மலையகத்துக்கு வெளியே சமூகத்தின் வௌ;வேறு தளங்களில் நின்று எழுதும்,செயற்படும் வாய்ப்பு அவருக்கு வாய்த்திருக்கிறது.

ஒரு மலையகத்தவனாக மலையக மக்களின் வாழ்க்கை பயணத்தில் மக்களோடு இணைந்திருந்தவராக அந்த பின்னணியில் நின்று எழுதிய 'மலைக்குயில்' (கவிதை)  'சுடுகந்தை' (தினகரனில் தொடராக வந்த நாவல்),'அறுவடைக்கனவுகள்' (நாவல்) என்பன என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அல்அஸுமத் அவர்களின் இளமைக்காலம் என்பது மலையக மக்கள் பிரஜாவுரிமை இழந்திருந்த காலம் அதேபோல தாயகம் திரும்பதல் என தமிழ்நாட்டிற்கு (இந்தியாவுக்கு) திரும்பிச்செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட காலம். இந்த இரண்டு நிலைமைகளையும் இவரது மலையகம் சார் படைப்புகளில் அவதானிக்க முடியும். இவரது மலையக்குயில் எனும் கவதைத்தொகப்பில் வரும் 'பிரஜாவுரிமைத்தூது' எனும் கவிதையும் 'புனர்வாழ்வு' (பாரதத்தில் இருந்து வந்த கடிதம்) ஆகிய கவிதைகள் மலையக மக்களின் வலிகளையும் அவர்கள் கண்டடையவேண்டிய வழிகளையும் பதிவு செய்வன.

இரண்டு தலைமுறைகளைத் தாண்டி இலங்கையின் மலையக மண்ணியல் வேர்விட்டிருந்த தொழிலாளர் சமூகத்தை வேரோடு பிடுங்கி தாயகம் திரும்பியோர் என தமிழ்நாட்டுத் தரையில் தூக்கி வீசிய ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் எனும் மக்களைப் பண்டமாக மாற்றிய 'அரசியல் கொடுக்கல்வாங்கல்' இன்றுவரை மலையக மக்களின் சனத்தொகை எண்ணிக்கையை இலங்கையில் இரண்டாம் நிலையில் இருந்து நான்காம் நிலைக்குத் தள்ளியது மட்டுமல்லாது ஒரு பிரஜையாகவும் அவர்களை நான்காம் தரத்திற்கே இட்டுச் சென்ற வரலாறு இலகுவில் மறக்கப்படக்கூடியது அல்ல. பிரஜாவுரிமை மறுக்கப்பட்டவனாக போராட சக்தி இழந்து தன் சமூகம் இந்த நாட்டைவிட்டு போகவேண்டும் என வற்புறுத்தப்பட்ட வேளை எழுத்துச் செயற்பாட்டாளர்களுக்கு இருந்த ஒரே வழி தங்களது எழுத்தினூடே தான் சார்ந்த சமூகத்திற்கு தகவல் அனுப்புவதாகத்தான் இருந்துள்ளது. அப்படியொரு தகவல்,தாயகம் (இந்தியா) திரும்பிய ஒருவனால் அனுப்பபப்படுவதாக கற்பிதம் செய்து அல் அஸுமத் எழுதிய கவிதை வரிகள்:
........
நீயும்
மலைநாட்டுச் சட்டியில் இருந்து
பாரத நெருப்புக்குள்
பாய முனையாதே
...
ஏன்பதாக அமைந்திருக்கிறது. இந்த வரிகளை உள்வாங்கிய கவிதைக்கு அவர் இட்ட தலைப்பு 'புனர்வாழ்வு' (பாரதத்தில் இருந்து வந்த கடிதம்) என்பதாகும். பாமரத் தொழிலாளிக்கும் புரியும் மொழியில் எழுதியிருப்பார். இதில் கவித்துவம் இருக்கிறதா என்பதிலும் பார்க்க, தான் ஒரு சமூக மனிதனாக சமூகத்திற்கு தன் எழுத்தின் ஊடாக எப்படியான தகவலை அனுப்புகிறார் என்பதே என்னுள் உயர்ந்துநின்றது. ஏற்கனவே தாயகம் திரும்பியனாக இந்தியா சென்றவன் எழுதும் கடிதமாக இந்த கவிதை கற்பிதம் செய்யப்பட்டிருந்தாலும் இன்றுவரை உண்மையும் அதுதான்2005 முதல் தொடர்ச்சியாக தமிழ் நாட்டுக்கு ஆய்வுநிமித்தமாக பயணித்து 2012-13 காலப்பகுதியில் 'சூரியகாந்தி' பத்திரிகையில் தொடராக நான் எழுதிவந்த 'தமிழ்நாட்டின் சிலோன்காரர்கள்' எனும் தொடர் பத்தி இந்த தாயகம் திரும்பிய மக்களைப் பற்றியதே. அவர்கள் பாரத நெருப்புக்குள் பாய்ந்து படும்பாட்டை பதிவுசெய்கின்ற பத்தி அது.

'அறுவடைக்கனவுகள்' எனும் நாவலின் இறுதி முடிவு கூட ஒரு மலையகத்தவன் இந்தியா செல்வதா அல்லது இலக்கையிலேயே தங்குவதா எனும் மனப்போராட்டத்தை பதிவு செய்துவிடுவதாகவே அமைந்தாலும் இந்த மனப்போராட்டத்தை பதிவு செய்வதற்கு அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட 'கதைக்களம்' வித்தியாசமானது.அதுவே அறுவடைக்கனவுகளின் அதிசிறப்பு என கொள்ளலாம்.

மலையகம் - என்றவுடன் தேயிலை நினைவுக்கு வருவது இயல்பு. தேயிலையும் இரப்பரும் தென்னையும் கூட இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் தட்டுத்தடுமாறி நின்று நிலைத்து இப்போது ஊசலாடிக்கொண்டிருக்கும் பெருந்தோட்டக் கைத்தொழில் துறையினை பாதுகாத்துக்கொண்டிருப்பதும் தேயிலைதான். அதற்கு காரணம் அதனை சார்ந்துவாழும் மக்கள் தொகையுமாகும். மலையக இலக்கியத்தில் தேயிலை சார்ந்து வாழ்ந்த மக்கள் பற்றி எழுந்த இலக்கியத்திலும் பார்க்க அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் 'ரப்பர்' சார்ந்து வாழும் மக்கள் பற்றி வெளிவந்த படைப்புகள் குறைவு என்பது எனக்குள் எப்போதும் இருக்கும் ஆதங்கம்.

 இலங்கையின் மத்திய, ஊவா மாகாணங்களின் நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை,போன்ற மாவட்டங்கள் புவியியல் தன்மைக்கு ஏற்ப தேயிலையை ஆக்கரமித்துக்கொள்ள எஞ்சிய சம்பரகமுவ, மேல்,  தென் மாகாண மாவட்டங்களான களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களும் ஊவாவின் மொனராகலையும ரப்பரை அதிகளவில் தனதாக்கிக்கொண்டன. சிலாபம், புத்தளம், குருநாகல் போன்ற வடமேல் மாகாணம் சாரந்த மாவட்டங்கள் தென்னைக் கைத்தொழில் சார்ந்து அமைந்தபோதும் தேயிலை, ரப்பர் சார்ந்தது போல் அந்த தொழில் சார்ந்து ஒரு சமூகக்கட்டுமானம் அங்கு எழும்பவில்லை. தொழில்சார்ந்து வளர்ந்துவந்த சமூகம் என்றவகையில் இலங்கையில் 'தேயிலைச் சமூகம்' சார்ந்து மட்டுமல்லாது இலக்கியம், தொழிற்சங்கம் அரசியல் என ஒரு இயக்கத்தை கொண்டு வந்து சேர்த்திருப்பதையும் மறுப்பதற்கில்லை.
ஏற்கனவே தென்னைப்பயிர்ச்செய்கை இலங்கையில் வீழ்ச்சியடைந்துவிட்ட நிலையில் ரப்பர் தோட்டங்கள் நாம் யாவரும் அறியாமலேயே 'பாம் ஒயில்' எனப்படும் எண்ணை உற்பத்திக்கு மாற்றப்பட்டுவருகின்றன. ரப்பர் பயிரச்செய்கையில் ஏற்பட்ட சிதைவைப்போலவே அது சார்ந்;து வாழும் மக்களின் வாழ்க்கையும் கலாசாரமும் மொழியும் பண்பாடுகளும் கூட சிதைந்து சிதறுண்டு சென்றுகொண்டிருக்கிறது என்பது யதார்த்தம்.

இரப்பர் என்றதும் ஜெயமோகனின் 'இரப்பர்' நாவலில் வரும் சில கதாபாத்திரங்களின் வசனங்கள்  நினைவுக்கு வந்தது.'இப்பம் இரப்பரையே எடுத்துக்கிடுங்க. அது நம்ம ராஜ்ஜியத்து மரம் இல்ல. எக்கச்சக்கமா மள பெய்யுத நாட்டில் உள்ள மரம். லாபத்துக்காக இஞ்ச கொண்டு வந்தாவ. மலையும், காடும் எல்லாம் ரப்பர் தோட்டமா மாறியாச்சு.மலைகள் முழுக்க இப்ப ஒரே மரம். ஒரே சருகு...ஒரே வேரு. சேன்னேன் இல்லியா - இயற்கையோட பேலன்ஸ் ஒக்கே போச்சு. ரப்பர் மரத்துல பறவைகள் கூடணஞ்சு பாத்திருக்கியளா? ரப்பர் காட்டுக்குள்ள புளு உண்டா? பூச்சி உண்டா? சந்தயா இருந்த எடம பட்டாளக் கேம்பா ஆனது மாதிரி இருக்கு சண்டா... வரிவரியா போட்டும், இப்ப நம்ம நதியில தண்ணி உண்டா? அணையில மணல்தானே கெட்டி கெடக்குகுது? ஏன் எண்ணு யோசிச்சியளா ஆரெங்கிலும்? ரப்பர் வந்த பெறவு மலையில் ஈரம் இல்ல, ஊற்று இல்ல, மலை ஊறாம நதியில எங்க தண்ணிவரும்? வாய்க்கால் மாதிரி போவுது வள்ளியாறு.....'

இப்படி தொடர்ந்திருந்த கொண்டிருந்த அந்த கதாபாத்திரத்தின் கேள்விகளிடையே எனக்குள் எமது ரப்பர் தோட்ட மக்களின் வாழ்க்கை நிலை குறித்த கேள்விகள் எழ, டாக்டர் ராம் என்ற கதாபாத்திரம் தரும் தகவல் என்னைத் திகிலடையச் செய்தது. 'இந்த ரப்பர் காற்று சுவாச நோய்களுக்குக் காரணம் என்று கட்டுரை சமீபத்தில் படித்தேன்'. இதற்கு பதிலளிக்கும் லோரன்ஸ் எனும் கதாபாத்திரம் இப்படி பதில் சொல்லும் ' அதுக்கு வேற எங்;க போகணும். இந்த ஊரு வயசாளிகளைக் கண்டா போதாதா?'

இப்போதும் ரப்பர் தோட்டம் வழியாக ருவன்வல, கரவனல்ல, யட்டியன்தொட்ட, வழியில் ஹட்டன் பயணிக்கும்போது கண்ணில்எதிர்படும் ஒவ்வொரு தொழிலாளியையம் 'இரப்பர்' நாவலில் லோரன்ஸின் கண்கொண்டே பார்க்கத் தோன்றுகிறது எனக்கு.இலங்கையில் ரப்பர் தோட்டத் தொழில்சார்ந்து வாழும் மலையக மக்களின் அவலங்களுக்குப்பின்னால் நிகழும் இனவாத தாக்குதல்களையும் தாண்டி இப்படியொரு கதையும் இருக்குமோ எனும் கேள்வி என்னைக் குடைவதுண்டு.

மறுபுறத்தில் 'தேயிலை' சார்ந்து கொழுந்தெடுக்கும் பெண்களையும் அதனோடிணைந்த துயரங்களையுமே பிரதானமாகக் கொண்டு மலையக இலக்கியங்கள் அமைந்த நிலையில் அந்த தேயிலைத் தொழில் துறைபற்றி அதன் நுணுக்கங்கள் பற்றியும் அதேவேளை அந்தத் தொழில் துறையில் தொழிலாளியாகவும் அல்லாமல் அதிகாரியாகவும் அல்லாமல்  இடையில் ஊசலாடும் 'சூப்பரவைஸராக' வேலைசெய்த வேலாயுத்தின் அனுபவங்களாகப் பதிவு செய்திருப்பது 'அறுவடைக்கனவுகளின்' சிறப்பு..

நான் தேயிலைத் தோட்டத்திற்குள் பிறந்து வளர்ந்தவன். அம்மா தேயிலைத் தோட்டத்தில் கொழுந்துபறித்த தொழிலாளி. அப்பா ஆரம்பத்தில் தொழிலாளியாகவும் பின்னாளில் தொழிலாளிகளை மேற்பார்வை செய்யும் கங்காணியாகவும் (கண்காணிப்பாளர்) வேலை செயதவர்.வீட்டில் இருந்து 100 அடி தூரத்தில் தேயிலை மலை. மலையே தேயிலை மரங்களாய் எங்கும் பசுமையாய் பச்சை கம்பளம் விரித்தால் போல இருக்கும். இதில் மறைந்திருக்கும் ஆச்சரியம் அங்கே உச்சியில் அழகாககத் தெரியும் அந்த ஒவ்வொரு தேயிலை மரத்தின் அடிவாரத்திற்கே சென்று 'ஈரிலையும் ஓர் துளிரும்' வருமாறு வேகமாக இலை பறிக்க வேண்டும். அவற்றைச் சேரத்து தலையில் தொங்கும் கூடையில் சுமந்து நிறுவை இடத்திற்கு கொண்டுவந்துசேர்க்க வேண்டும். இப்படி தேயிலை மலையில் வேலை செய்யும்; அம்மாவுக்கு 'தேத்தண்ணி' கொண்டுபோன நினைவுகள் அந்த தேயிலை மலைகளை எனக்கு இன்னும் பசுமையாகவே நினைவிலுண்டு. அப்போதல்லாம் தேயிலைகளுக்கு இடையே நடந்து செல்லும்போது தேயிலைமரத்தில் மேற்பரப்பில் கூர்..கூராக தன்னை நிமிர்த்திக்கொண்டு நிற்கும் 'அரும்பை' கிள்ளி வாயில் போட்டு மென்றுகொண்டு செல்வது இயல்பு. இப்போதும் தேயிலை மலைகளக்குள் இறங்க கிடைத்தால் இப்படி செய்வதும் இயல்பு. இந்த நினைவுகளை மீள்பதிவு செய்யும் அல்அஸ்மத் 'முத்தெல','கரட்டலெ','வங்கியெல' என தேயிலை இலைகளின் வகையறாக்களையும் மக்கள் மொழியில் பதிவு செய்கிறார். அந்த கடும்குளிரில், காட்டு மலையில் நின்றுகொண்டு இயந்திரமாய் வகைபிரித்து 'ஈரிலையும் ஓர் தளிரும்' மாத்திரம் கொய்யும் அம்மாவின் கைநுட்பத்தை எண்ணிப்பார்க்கிறேன். எத்தனை அம்மாக்கள் இந்த கலை தெரிந்தும் கவலை மாறாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அதேபோல ஆண்கள் செய்யும் வேலைகளை மேற்பார்வை செய்யும் அப்பா மலைக்கு 'கவ்வாத்து' வெட்டும் காலத்தில் விறகு பொறுக்க சென்றதுண்டு. அப்பா கவ்வாத்து கங்காணி. அது ஒரு நுட்பமான வேலை. வயது முதிர்ந்த தேயிலை மரத்தின் வாதுகளை வெட்டி மீண்டும் துளிரச்செய்து இளந்தளிர்களை பறிக்கச் செய்யும் கைங்;கரியம்தான் 'கவ்வாத்து'. இந்த கவ்வாத்து கலைதான் தேயிலை மரங்களை தெடியாக்கி வைக்கும் கலை. கவ்வாத்து இல்லாத காலத்தித்தில் மலைகளில் புல்லுவெட்டுதல், மருந்தடித்தல், உரம்போடுதல் என ஆண்கள் செய்யும் வேலைகளை மேற்பார்வை செய்வது அப்பாவின் வேலை. அப்பா இந்த வேலைகளைச் செய்து 'ப்ரோமாசனாகி' கங்காணியானவர்.. இந்த கங்காணிக்கு மேலே உள்ள தொழில்தான் 'சூப்பர்வைஸர்'. கணக்குப்பிள்ளை எனும் களமேற்பார்வையாளருக்கு கீழேதான் இந்த 'சூப்பவைசர்' அடங்குவார். இப்போதெல்லாம் பெண்கள் சுப்பர்வைசராக வேலை செய்யும் வழக்கும் உள்ளது. முன்பு பெண்களை மேற்பார்வை செய்வதும் ஆண்; சூப்பர்வைசர்கள்தான்.

இப்படியான 'சூப்ரவைஸராக' வலம்வந்த வேலாயுதம் எனும் அல் அஸுமத்தின் வாழ்க்கைதான் அறுவடைக்கனவுகள். இந்த 'சூப்பர்வைஸர்கள்' மேலதிகாரிகள் என்றவகையில் தொழிலாளிகளை அடக்கியாளும் தன்மைகளை அவதானித்து வந்திருக்கிறேன். அந்த கணிப்பு மாறாதவகையில் அவர்களின் மனநிலையைப் பதிவு செய்யும் அதேவேளை தொழிலாளர்கள்களின் உழைப்பில்தான் தங்கள் வாழ்க்கை ஓடுகிறது என ஒரு பாத்திரத்தின் ஊடாக வெளிப்படுத்தி தனது நன்றியுணர்வையும் பதிவு செய்கிறார் அல்அஸ்மத்.

என் அப்பாவின் மேலதிகாரிகளான இந்த சூப்பர்வைசர்கள் அப்பாவுடன் நெருக்கமாக பழகி வேலைகளைப் பழகிக் கொள்வதையும் உதவிகளைப் பெற்றுக்கொள்வதையும் அவதானித்திருக்கிறேன். 'ஸ்டாப்' என்ற மனநிலையில் இருந்து கீழே இறங்கிவிடாமலும் தொழிலாளி என்ற நிலைக்கு போய்விடாமலும் இடையில் அந்தரப்படும் 'சூப்பர்வைஸர்' நிலையில் இருந்துகொண்டு, தேயிலைத் தொழில் துறையில் என்ன நடக்கிறது என விபரித்துக் கொண்டுசெல்லும் காட்சிகள்தான் 'அறுவடைக்கனவுகளை' ஆக்கிரமித்திருக்கும். தேயிலையின் தரம் என்பது முதலில் பறிக்கப்படும் கொழுந்தில்தான் இருக்கிறது. 'ஈரிலையும் ஓர் தளிரும்' (வுறழ டுநயஎநள யனெ ய டிரன) தான் அதன் தத்துவம். அத்தனைப் பெரிய மரங்களின் கம்பள விரிப்பில் மேலெழுந்தவாரியாக வளர்நது நிற்கும் 'ஈரிலையும் ஓர் தளிரும்' மாத்திரம் கூடைக்குள் வந்துசேரவேண்டும். அவ்வாறில்லாதவை பறிப்பது தவறு. அந்த தவறான இலைகளின் பெயர்களைத்தான் மேலே சொன்னேன். இத்தனைப்பெரிய பெருந்தோட்டத்தில் இவ்வளவு மக்களைக்கொண்டு எப்படி அது சாத்தியமாகிறது? தோட்ட நிர்வாகம் எத்தகையது. அதுவும் வெள்ளைக்கார துரைகளின் நிர்வாக முறைகள் எவ்வாறானவை, அங்கே ஊடாடும் வௌ;வேறு வர்க்க நிலைப்பட்ட மனிதர்கள் யார்? அங்கே பதவிகளுக்காக நடக்கும் வெட்டுக்குத்துகள் என்ன? என விரிந்துசெல்கிறது நாவல்.

தேயிலைத் தொழில் துறை பற்றிய நிர்வாகமாக மாத்திரம் 'தோட்ட நிர்வாகம்' இருந்துவிட்டுப்போனால் நான் சொல்கிற அளவுக்கு அங்கு ஆச்சரியம் இல்லை. ஆனால்,'தோட்ட நிர்வாகம்' என்பது அங்கு வாழும் சமூகத்தையும் சேர்த்து நிர்வகிப்பதுதான் இங்கேயுள்ள பெருநுட்பம்.  அவர்களது இலங்கை வதிவிடத்தை உறுதிசெய்வதே தோட்ட நிர்வாகத்தின் செக்ரோல்தான் (உhநஉமசழடட), அதேபோல அவர்களுக்கு வழங்கப்படும் கோதுமை, தேயிலை, முதலான உணவுப்பண்ட விநியோகத்தைப் பதிவுசெய்யும் 'புஃட் ஸ்டப்.ஃ' என ஏகப்பட்ட பதிவேடுகள். இவற்றை அன்றாடம் இற்றைப்படுத்தும் (ருpனயவந) கணக்குப்பிள்ளையின் உதவியாளராகவும் இந்த சூப்பர்வைசர்கள்தான். அந்த சூழலில் வாழ்ந்த காரணத்தாலும் அப்பாவின் தொழில் நிமித்தம் பல்வேறு பதிவேடுகளின் பெயர்களை தெரிந்து வைத்திருந்தாலும் கூட எனக்கு தெரியாத சில பதிவேடுகள் பற்றி அறுவடைக்கனவுகள் சொல்ல,வாசிக்கும் இடைவெளியில் அவ்வப்போது 'டவுட்டு' கேட்டு தொலைபேசியில் அல்அஸ்மத் அவர்களை. தொல்லைப்படுத்தியிருக்கிறேன். மலையக தொழிலாளர் சமூகம் அரசாங்க பொறுப்பில் இல்லாது எவ்வாறெல்லாம் தனியார் கம்பனிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளார்கள் என்பதை 'அறுவடைக்கனவுகளை' வாசிப்பதனூடாகத் தெரிந்துகொள்ளலாம்.

தேயிலை மலைகளில் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த வளர்ந்தவன் என்ற வகையில் எங்கள் 'எசமானர்களின்' வாழ்க்கைப்பக்கத்தையும் எங்களுக்கு உணவளிக்கும் இந்த தேயிலைத் தொழில் எவ்வாறு இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் ஒரு எழுத்தாளர் மனநிலையோடு சூப்பரவைஸர் வேலாயுதமாக வலம் வரும் நாவலாசிரியர் அல் அஸுமத் அதிகமே பங்களிப்பு செய்துள்ளார் என எண்ணுகிறேன். இந்த படைப்பினூடே அல் அஸுமத் வெளிப்படுத்தும் மலையகம் வித்தியாசமானது.

இந்தத் தேயிலைத் தோட்டத்துறையின் நுட்பங்கள்,அதனைக் கொண்டு நடாத்தும் தோட்டத்துறையில்பேசப்படுகின்ற மொழிநடைகள், தோட்டத்துரையான வெளளைக்காரன் பேசும் தமிழ்,தமிழர்கள் பேசும் இங்கிலீஸ், இதற்கிடையே அல் அஸ்மத் அவர்களிடம் இயல்பாகவே இழையோடும் நகைச்சுவை உணர்வின் பதிவுகள் போன்றன நாவல் வுhசிப்பை இலகுபடுத்திவிடுகின்றன.

எப்போதுமே சூழ நடப்பதை அவதானிக்கும் எழுத்தாளனின் மனநோக்கும்(Pநசஉநிவழைn) அதனை படைப்புக்குள் எவ்வாறு கொண்டுவருவது என்ற மனோபாவமும் (யுவவவைரனந) அல்அஸ்மத் அவர்களிடம் இயல்பாகவே இருப்பதனால், பிழையறா தமிழிலக்கணம் கற்றும்  வறுமையின் பிடியில் தன் வாழ்வில் ஒரு பகுதியை தேயிலைத் தோட்ட 'சூப்பரவைஸராக'வாழ நேர்ந்த அனுபவத்தை நாவலாக பதிவு செய்துள்ளார். இனி ஒரு 'சூப்பர்வைசர்' இவ்வாறு கிடைக்க வாய்ப்பே இல்லை என்கிற நிலையில் 'அறுவடைக்கனவுகள்' இலங்கையில் தேயிலைத் தொழில்துறை சார்ந்த அழியாத நினைவுகளைப் பதிந்து செல்கிறது.

 நான் இவ்வாறு சொல்வதன் காரணம் இனிமேல் 'சூப்பரவைஸர்கள்' இல்லாத தொழில் துறையாக தேயிலைத் தொழில் துறை மாறும் காலம் நம்மை அண்மித்துக்கொண்டிருக்கிறது. 1815 முதல் 'லாபத்துக்காக இங்கே கொண்டுவரப்பட்ட இந்த மரமும் அது சார்ந்து அழைத்துவரப்பட்ட மக்களும்'  1972 ஆண்டு வரை வெள்ளையர் கைகளிலேயே பாரமாக்கப்பட்டு, பின்னர் 1972 முதல் 1992 வரை அரசு கையிலெடுத்து அந்த தொழில் துறையை சின்னாபின்னமாக்கி, 1992 ல் தனியாருக்கு குத்தகைக்கு விட்டு மக்களை மட்டுமல்லாது அங்குள்ள மரங்களையும், செடிகொடிகளையும், ஆறுகளையும், குளங்களையும் கூட சூறையாடி இன்று 'எங்களால் இதற்குமேல் கொண்டுநடாத்த முடியாது' என நாளாந்த தொழிலாளிகளின் நாளாந்த சம்பளவுயர்வையே தரமறுத்து கைவிரித்துள்ள நிலையில், தாம் வளர்க்கும்'மர'த்தை தாமே 'செடி'யாக்கி வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களே இந்த தொழிலில் துறையின் எதிர்காலத்தையும் அதில் தங்களின் எதிர்காலத்தையும் தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தேயிலை தொழில் துறையின் வீழ்ச்சி பற்றிய விஞ்ஞான ஆய்வறிக்கைகளுக்கு அப்பால் அதனுள்ளே வாழ்ந்த மனிதனாக தனது வாழ்க்கையின் ஒரு பகுதியை புனைவாக்கி நாவலாக இறக்கிவைத்திருக்கும் இந்த வரலாற்று ஆவணத்தை வாசிக்க வேண்டிய கடப்பாடு இலங்கையின் மலையகத்தையும், மக்களையும் நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு. அத்தகைய ஒரு அனுபவத்தை நம் எல்லோருடனும் பகிர்ந்துகொண்ட, இன்று அல்அஸுமத் ஆகிப்போன அந்த வேலாயுதனுக்கு எனது வாழ்த்துகள் உரித்தாகின்றன. இலங்கையில் இன்று தென்னையைப்போல, இரப்பரைப்போல நாளை 'தேயிலைக்கும்' ஒரு தேய்வுநிலை வருமானால் அந்த தொழில்துறைசாரந்த வாழ்க்கையை நம் முன் அழியாத நினைவுகளாகக் கொண்டுவரும் அருகதை 'அறுவடைக்கனவுகளுக்கு' உண்டு.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates