Headlines News :
முகப்பு » , , , , » "நவம்பர் மாவீரர் மாதம்" கெப்பட்டிபொல - சங்கர் – விஜேவீர - (என்.சரவணன்)

"நவம்பர் மாவீரர் மாதம்" கெப்பட்டிபொல - சங்கர் – விஜேவீர - (என்.சரவணன்)


நவம்பர் மாதம் இலங்கையில் மூவருக்கு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதை நாம் கவனித்திருக்க மாட்டோம். கெப்பட்டிபொல, சங்கர், விஜேவீர ஆகியோரின் நினைவு நாட்கள் நவம்பர் மாதம் வந்து சேர்ந்தது தற்செயல் தான். இவர்கள் மூவருக்கும் உள்ள பொதுமை விடுதலைப் போரில் கொல்லப்பட்டவர்கள் என்பது தான்.

கெப்பட்டிபொல சிங்கள தேசியத்துக்காவும், சங்கர் தமிழ் தேசியத்துக்காகவும், விஜேவீர “சர்வதேசியத்துக்காகவும் கொல்லப்பட்டவர்களாக மேலோட்டமாக கூறலாம்.

நவம்பர் மாதம் 26ஆம் திகதி கெப்பட்டிபொலவின் நினைவு நாள் வருடாவருடம் நினைவு கூறப்படுகிறது. சென்ற 2015ஆம் ஆண்டு இந்த தினத்தில் ஜனாதிபதி மைத்திரிபால கெப்பட்டிபொலவுக்கு நினைவுச் சிலை திறந்து அனுஷ்டித்தார்.

விடுதலைப் புலிகளின் போராளி லெப் சங்கர் என்றழைக்கப்படும் செல்வச்சந்திரன் சத்தியநாதன் சமரின் போது வயிற்றில் குண்டடிப்பட்டு 1982 நவம்பர் 27ம் திகதி உயிர் துறந்தார்.

ஜே.வி.பி. தலைவர் ரோகண விஜேவீர தலைமறைவாக இருந்த போது உலப்பனையில் வைத்து கைது செய்யப்பட்டு 13.11.1989 அன்று பொரளை கனத்த மயானத்தின் அருகில் இரகசியமாக சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்.

இலங்கையின் வரலாற்றில் ஆங்கிலேயர் காலத்தில் போராடி உயிர்நீத்த சிங்கள வீரர்களை தேசிய வீரர்களாக பொதுமைப்படுத்துவதை விட சிங்கள வீரர்களாகவே முதன்மைப்படுத்தி வந்துள்ளனர். அவர்களில் ஊவா கிளர்ச்சி - கெப்பட்டிபொல (1818), மாத்தளை கிளர்ச்சி வீர புரன் அப்பு 1848, இவர்களைத் தொடர்ந்து (Utuwankande Sura Saradiel) உட்டுவங்கந்தே சூர சரடியெல் (1864) ஆகியோரே முக்கியமாக கொண்டாடப்படுபவர்கள். சூர சரடியெல் இலங்கையின் ரொபின் ஹூட் என ஆங்கிலேயர்களாலேயே அழைக்கப்பட்டவர். பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு கொடுத்துதவியதாலும் ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்றதாலும் பிடிபட்டதன்பின் தூக்கிட்டு கொல்லப்பட்டார். இவர்கள் மூவர் பற்றியும் சிங்களத்தில் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. தொலைக்காட்சித் தொடர் கூட வெளியாகியிருக்கிறது சரடியெல் பற்றி ஜோதிபால, சமீபத்தில் மறைந்த அமரதேவ போன்றோர் பாடிய பாடல் பிரசித்திபெற்றவை.

இம்முறை கெப்பட்டிபொலவின் 198 வது வருட நினைவு நாளை அவரின் தலை கொய்யப்பட்டு தண்டனையளிக்கப்பட்ட கண்டி தலதா மாளிகை முன்றலில் அவரின் நினைவுத் தூபியின் முன் அனுஷ்டிக்கப்பட்டது. ஆனாலும் அந்த தினத்தில் கெப்பட்டிபொலவின் நினைவு நாளுக்கு அரசு போதிய முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை என்று அந்நாளை வேறொரு இடத்தில் நினைவு கூரிய ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க  கண்டித்து உரையாற்றியிருந்தார். 

கருணா அம்மான் சென்ற வாரம் கைது செய்யப்பட்டதற்கு எதிராக உதய கம்மன்பில பத்திரிகையாளர் மாநாட்டில் இப்படி தெரிவித்திருந்தார்.
“கருணா அம்மான் நமது கெப்பட்டிபொல போன்றவர். இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்தவர். பிழையான இடத்திலிருந்து சரியான இடத்துக்கு வந்தவர். இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தின் உரிமையாளர்களில் ஒருவர்.”
இந்தக் கட்டுரை அந்த கெப்பட்டிபொல யார் என்பது பற்றித் தான்.

“வீர கெப்பட்டிபொல”வை சிங்கள தேசியவாதிகள் சமகாலத்தில் வெகுஜன தளத்தில் முன்னிறுத்துவதற்கு பல அரசியல் உள் நோக்கங்கள் உண்டு. ஆங்கிலேய காலனித்துவத்திற்கு எதிரான சிங்கள விடுதலைப் போராளி என்பது மட்டுமல்ல. அப்பேர்பட்ட போராளியை காட்டிக்கொடுத்தது முஸ்லிம்கள் தான் என்கிற பரப்புரைக்கும் சேர்த்துத் தான் அந்த முக்கியத்துவம். கெப்பட்டிபொலவை அனைத்து மக்களும் கொண்டாடும் ஒரு வீரனாக ஆகாமல் சிங்கள பௌத்தர்களால் மாத்திரம் கொண்டாடப்படும் ஒருவராக சுருங்கியது இதனால் தான். அவரின் நினைவு நாளை இனவிஷம் பூசிய ஒரு நினைவு நாளாகவே ஆக்கியிருகிறார்கள்.

“ஊவா வெல்லஸ்ஸ விடுதலைப் போர்”, “மலைநாட்டு மகா கலகம்” என்றெல்லாம் சிங்களத்தில் இந்தப் போராட்டம் அழைக்கப்படுகின்றன. அந்த கலகத்தின் இறுதியில் ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டும், கைதுக்கு உள்ளாக்கியும், நாடு கடத்தப்பட்டும் தண்டிக்கப்பட்டவர்கள்  778 பேர்.

கண்டி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்
கண்டி அரசன்
கண்டியை இறுதியாக ஆண்டவர் சிங்கள மன்னன் ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்க (1707-1739). ஸ்ரீ  வீர பராக்கிரமவுக்கு வாரிசு இல்லாத நிலையில் நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த அரசியின் சகோதரன் ஸ்ரீ விஜய ராஜசிங்கனை மதுரையிலிருந்து அழைத்து வந்து ஆட்சியிலமர்த்தப்பட்டார் (1739-1747), அதனைத் தொடர்ந்து கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747-1781) ராஜாதி ராஜசிங்கன் (1781-1798) ஆகிய நாயக்க வம்சத்து தமிழ் அரசர்களே ஆண்டார்கள். (தெலுங்கு பேசும் இந்த நாயக்க வம்சத்தவர்களை சிங்களவர்கள் வடுக மன்னர்கள் என்றே அழைக்கிறார்கள்)

1798இல் ராஜாதிராஜசிங்கனின் இறப்பையடுத்து அவருக்கு அடுத்ததாக அரசியின் சகோதரன் முத்துசாமியைத் தான் அரசராக தெரிவு செய்ய வேண்டும் என்பது மன்னரின் விருப்பாக இருந்தது. ஆனால் மன்னருக்கு அடுத்தபடியாக அதிகாரங்களைக் கொண்டிருந்த முதலமைச்சருக்கு (சிங்களத்தில் இந்தப் பதவியை “மஹா அதிகாரம்” என்பார்கள்) பிலிமத்தலாவ; தானே அந்தப் பதவிக்கு வர வேண்டும் என்கிற உள்நோக்கம் இருந்தது. ஏற்கெனவே பிரதானிகள் சபையில் தனக்கு எதிராக பல அதிருப்தியாளர்களைக் கொண்டிருந்த பிலிமத்தலாவ சூரிய வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் தான் பதவியில் அமர வேண்டும் என்பதை ஏனைய பிரதானிகள் நிர்ப்பந்திப்பார்கள் என்று அறிந்திருந்தார்.

தனக்கு கட்டுப்படக் கூடிய ஒருவரை அரசனாக ஆக்கும் முயற்சியில் இறங்கிய பிலிமத்தலாவையின் கண்டுபிடிப்பு தான் கண்ணுசாமி. கண்ணுசாமி ராஜாதி ராஜசிங்கனின் மனைவியருள் ஒருவரின் சகோதரன். இராமேஸ்வரத்தில் பிறந்தவர். தந்தை (அரசர்) இறந்ததும் தனது மாமனார் கொண்டசாமியோடு இலங்கை வந்து சேர்ந்த கண்ணுசாமி கண்டி ராஜ்ஜியத்தில் நாயக்கர் வம்சத்தவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் வாழ்ந்து வந்தார்.

மன்னரின் இறப்பு வெளித்தெரிவதற்குள் கண்ணுசாமியிடம் சென்ற பிலிமத்தலாவ கண்ணுசாமியை சமத்திக்கச் செய்துவிட்டு அதன் பின்னர் தான் மன்னரின் இறப்பையும் புதிய சிம்மாசனத் தெரிவையும் பிரதானிகளிடம் அறிவித்தார். ஆரம்பத்தில் அதிர்ந்துபோன பிரதானிகள் பின்னர் ஏற்றுகொண்டார்கள். கண்ணுசாமி அதன்படி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்கிற பெயருடன் 18 வது வயதில் சிம்மாசனம் ஏறினார்.

மதுரைத் தமிழர்களிடமிருந்து இனிவரும் காலத்தில் ஆட்சியைப் பறித்து சிங்கள ஆட்சியாக மாற்ற வேண்டும் என்கிற கனவில் பிலிமத்தலாவ மன்னரை தன்னிஷ்டப்படி ஆட்டுவிக்கத் தொடங்கினாலும் பிலிமத்தலாவையின் சதியை காலப்போக்கில் உணர்ந்த மன்னர் பிலிமத்தலாவையின் ஆலோசனைகள் பலவற்றை புறக்கணித்தார். பிரதானிகள் மத்தியிலும் பல்வேறு முரண்பாடுகளை வளர்த்து மன்னருக்கு எதிரான சதிகள் தொடர்ந்தன.

போதாததற்கு ஆங்கிலேயர்கள் கண்டியைப் பிடிக்க முற்பட்டுக்கொண்டிருந்த நிலையில் பிலிமத்தலாவ ஆங்கிலேய தேசாதிபதி பிரெடெரிக் நோர்த்துடன் இரகசிய கடிதப் பரிமாறல்களைச் செய்து அரச கவிழ்ப்பு சதியை மேற்கொள்ளத் தொடங்கியிருந்தார். ஆங்கிலேயர்களுடன் ஒரு சமரச ஒப்பந்தத்தின் மூலமாக அரசாட்சியை தான் கைப்பற்றலாம் என்பதே பிலிமதலாவையின் நோக்கம்.

ஆங்கிலேயர்களின் பாதுகாப்பில் இருந்த முத்துசாமியை ஆங்கிலேயர்கள் கண்டியின் அரசனாக பிரகடனப்படுத்தினார்கள். போரில் கண்டி கைப்பற்றப்பட்டதாக நம்பிய போதும் பின்வாங்கி மீண்டும் மூர்க்கத்தனமாக மோதிய மன்னர் படையுடன் தாக்கு பிடிக்க முடியாத ஆங்கிலேயர்கள் மீண்டும் பின்வாங்கி ஓடினார்கள். பலர் பிடிபட்டார்கள். ஆங்கிலேயப் படையுடன் இணைந்து போரில் அவர்களுக்கு வழிகாட்டிய முத்துசாமியையும் கூட இருந்த படையணியையும் மன்னர் மரணதண்டனை நிறைவேற்றி படுகொலை செய்தார்.

சதிக்கு மேல் சதி
தனக்குத் தெரியாமலேயே முத்துசாமியை அரசனாக பிரகடனப்படுத்திய ஆங்கிலேயர் மீது பிலிமத்தலாவ ஆத்திரமுற்றாலும் கையறுநிலையில் இருந்தார். ஒரு தடவை கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனின் மனைவியருள் ஒருவரின் மகளை தனது மகனுக்கு திருமணம் முடித்து தரும்படி கோரிக்கை விடுத்த போதும் அதன் உள் நோக்கத்தைப் புரித்துகொண்ட மன்னர் அதனை நிராகரித்தார்.

பிலிமத்தலாவ மன்னரை கொலை செய்வதற்கு செய்த சதிகளை இரண்டு தடவை பொறுத்திருந்த மன்னர் மூன்றாவது தடவை சாட்சிகளுடன் பிடிபடவே, பிலிமத்தலாவ கைது செய்யப்பட்டு 1811இல் வழக்கு விசாரணை நடந்தது. மொல்லிகொட, கெப்பட்டிபொல உட்பட முக்கிய பிரதானிகள் அந்த வழக்கு சபையில் இருந்தனர். மன்னர் அந்த விசாரணைச் சபைக்கு தலைமை தாங்கினார். இறுதியில் பிலிமதலாவைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தன்னால் ஆட்சிக்கமர்த்தியவராலேயே தான் மரண தண்டனைக்கு உள்ளானார்.

பிலிமதலாவையின் மருமகன் எஹெலபொல முதலமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவர் கெப்பட்டிபொலவின் சகோதரி குமாரிஹாமியைத் தான் திருமணம் முடித்தார். எஹெலபொலவும் பிலிமதலாவயைப் போல ஆங்கிலேய அதிகாரிகளுடன் சேர்ந்து மன்னருக்கு எதிரான சதி முயற்சியை தொடர்ந்தார். அதன் விளைவு எஹெலேபொலவின் மனைவி குமாரிஹாமியும் பிள்ளைகளும் உரலில் போட்டு இடித்தும், சிரச்சேதம் செய்தும் கொல்லப்பட்டதாக கதைகள் கூறுகின்றன. (ஆனால் இப்படி கொன்றதற்கான எந்த ஆதாரமும் இல்லையென்று இன்றும் சிங்கள அறிஞர்கள் பலர் வாதிடுகிறார்கள் என்பது இன்னொரு கதை).

எஹெலபொலவின் ஒத்துழைப்புடன் ஆங்கிலேயர் கண்டியை 1815 கைப்பற்றினர். ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தனது மனைவிமார் மற்றும் மாமியாரோடு தப்பிச் சென்று மெதமா நுவர என்கிற பிரதேசத்தில் தங்கியிருந்தபோது காட்டிக்கொடுக்கப்பட்டு 18.02.1815 இல் கைது செய்யப்பட்டார். அவர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் தான்  ஆங்கிலேயர்களுக்கும் எஹெலபொல தலைமையிலான பிரதானிகளோடு கண்டி ஒப்பந்தம் 02.03.1815இல் கைச்சாத்தானது.


கண்டி ஒப்பந்தத்தின் முதல் மூன்று பகுதிகளும் கவனிக்கத்தக்கது. “மலபார்” (மலபாரிலிருந்து வந்த தமிழ் அரசர்கள் என்றே பதிவுகள் பலவற்றில் உள்ளன.) அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனிடமிருந்து அரச ஆசனம் பறிக்கப்படுகிறது என்றும் அவரது (தமிழ்) பரம்பரையைச் சேர்ந்த எவரும் இனிமேல் ஆட்சியமர முடியாது என்றும், அவர்களின் சகல ஆண் உறவினர்களும் நாட்டை விட்டு வெளியேற்றப்படவேண்டும் என்றும் இருக்கிறது.

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் கொழும்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு 25.01.1816 கோர்ன்வெலிஸ் (Cornwallis) என்கிற கப்பலின் மூலம் மெட்ராசுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த கப்பல் பெப்ரவரி 21 தான் மெட்ராசை அடைந்தது. அங்கிருந்து வேலூருக்கு கொண்டு செல்லப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அவர் அங்கேயே வாழ்ந்து 30.01.1832 மரணமானார்.

ஆங்கிலேயர்களை நம்பி ஒப்பந்தம் செய்துகொண்ட பிரதானிகள் விரைவிலேயே தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.
கண்டி ஒப்பந்த சதி - 1815

கண்டி ஒப்பந்தத்தின் பின்னர் மொல்லிகொட முதலமைச்சராகவும், எஹெலபொல மலைநாட்டு பிரதானியாகவும், கெப்பட்டிபொல ஊவா பகுதிக்கு பிரதானியாகவும் நியமிக்கப்பட்டனர். ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் கிராமங்களில் ஆங்காங்கு தொடங்கியதைத் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்த ஆங்கிலேய அதிகாரிகள் ஊவாவுக்கு கெப்பட்டிபொல தலைமையிலான படையை 17.11.1817இல் அனுப்பினர். ஆனால் அங்கு உணர்ச்சிமிக்க சிங்களக் கிளர்ச்சியாளர்களை சந்தித்ததும் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு தனது ஆயுதங்களையும், ஆங்கிலேய கொடியையும் படையினரிடமே கொடுத்து அனுப்பிவிட்டு அந்த கிளர்ச்சிக் குழுவில் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்துக்கு தலைமை தாங்கினார் கெப்பட்டிபொல. மேலும் சில பிரதானிகளும் அவரோடு பின்னர் இணைந்து கொண்டனர். எஹெலபொலவும் இணைந்துகொண்டார். இதனால் கெப்பட்டிபொல உள்ளிட்ட 17 பிரமுகர்களின் பதவிகளைப் பறித்து அவர்களின் சொத்துக்களை அரசு சுவீகரித்துக்கொண்டதுடன் அவர்களைப் பிடித்து தருவோருக்கு பரிசு வழங்குவதாக ஆங்கில அரசு அறிவித்தது.

இந்த இடைக்காலத்தில் மக்களை தம் பக்கம் இருக்கச் செய்வதற்காக இரண்டு விடயங்களை கெப்பட்டிபொல அறிவித்தார். ஒன்று “புத்தரின் புனித தந்தத் தாது” சுமங்கல தேரருக்கூடாக தமக்கு கிடைக்கப்பெற்றிருப்பதால் பாதுகாப்பாக தம்மிடம் இருகிறது என்றும், ஆகவே அரசாட்சிக்குரிய உரிமை தம்மிடம்  இருப்பதாக தெரிவித்தார்.  அடுத்தது நாயக்கர் வம்சத்து இரத்தச் சொந்தமான அடுத்த வாரிசு “வில்பாவே” என்று அழைக்கப்பட்ட துரைசாமி தம்மோடு இருப்பதாகவும் அறிவித்தார். இதனால் குழப்பமடைந்த ஆங்கிலேய அரசு விசாரணை செய்ததில் அது போலிக் கதை என்றும் துரைசாமி மெட்ராசில் இருப்பதையும் ஆளுநர் ப்ரௌன்றிக் (Brownrigg) உறுதிபடுத்திக்கொண்டார். மக்களுக்கு அது பகிரங்கப்படுத்தப்பட்டது. உள்ளூரில் இருந்த வில்பாவே ஒரு பௌத்த துறவி என்றும் துரைசாமிக்குப் பதிலாக போலியாக உருவாக்கப்பட்டவர் என்றும் பல பதிவுகளில் காணக்கிடைக்கின்றன.

ஆனால் “புனித தந்தத் தாது” ஆங்கிலேயர் வசம் கிடைத்ததும் மக்கள் நம்பிக்கை இழந்தார்கள். “புனித தந்தத் தாது” யாரிடம் இருக்கிறதோ அவர்களிடமே ஆட்சி நிலைபெறும் என்கிற நம்பிக்கை மக்களிடம் இருந்தது. (இன்றும் கூட தேர்தலில் வெற்றி பெற்றதும் தலதா மாளிகைக்குச் சென்று வணங்கி ஆசி பெரும் வழக்கம் இருக்கிறது.) கிளர்ச்சியும் சோர்வடையத் தொடங்கியது. மெட்ராசில் இருந்து படையணிகளை இறக்கி கிளர்ச்சிப்படையை நசுக்கத் தொடங்கியது ஆங்கில அரசு.

ஒரு நாள் கெப்பட்டிபொல தங்கியிருந்த கிராமத்துக்கு வந்த முஸ்லிம் வியாபாரி ஒருவர் அங்கு உள்ளூர்காரர்களின் வழமைக்கு மாறான பாதுகாப்பு ரோந்தும், காவலையும் கண்டதும் அங்கு இரவு தங்கியிருந்து உளவுபார்த்து அந்தத் தகவலை ஆங்கிலேயர்களுக்கு தெரிவிக்கவே 23.10.1818 அன்று கெப்பட்டிபொல சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டார். 


1818 நவம்பர் 26 அன்று கண்டி போகம்பர வாவிக்கருகில் தலையை துண்டித்து சிரச்சேதம் செய்யப்பட்டார் கெப்பட்டிபொல. கொல்லப்படுமுன் தலதா மாளிகையில் வழிபட்டுவிட்டு சென்றார். ஒரே வெட்டில் தனது தலை துண்டாகவேண்டும் என்று வெட்டப் போபவரிடம் கூறியிருக்கிறார். கெப்பட்டிபொலவின் தலையை பரிசோதனைக்கென்று இங்கிலாந்துக்கு கொண்டு சென்று வைத்திருந்தது ஆங்கிலேய அரசு. பின்னர் 1954இல் அந்த மண்டையோடு கெப்பட்டிபொலவின் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க அந்த மண்டையோடு இலங்கையிடம் கையளிக்கப்பட்டது.

எஹெலபொல மொரிசியசுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கேயே இறந்தும் போனார்.

ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு சிங்கள பௌத்த ஆட்சியை நிறுவ முயன்ற விடுதலை வீரனாக சிங்கள வரலாறுகளில் குறிக்கப்படுகிறார் கெப்பட்டிபொல. ஆனால்  “சிங்கள சமூக அமைப்பு”  (Sinhalese social organization – Ralph Pieris) என்கிற நூலில் மலபாரிலிருந்து இலங்கை வந்த ஒரு அரசரோடு வந்த கெப்பட்டிபொல பரம்பரையைச் சேர்ந்தவர் தான் இந்த கெப்பட்டிபொல என்று நிறுவுகிறார் பிரபல வரலாற்று ஆசிரியர் ரல்ப் பீரிஸ். கெப்பட்டிபொல ஒரு தமிழர் தான் என்று அவர் சண்டே லீடருக்கு எழுதிய கட்டுரையிலும் நிறுவுகிறார். (18.10.98 p.11)

நவம்பர் மாவீரர் மாதத்தை நினைவு கூரும் இந்த சக்திகளில் கெப்பட்டிபொலவை முன்னிறுத்தும் அரசியல் பின்புலத்தை இந்தப் பின்னணியிலிருந்து தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேலதிக வாசிப்புக்கு
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates