மலையக பெருந்தோட்டங்களில் தற்போது தேயிலைக்கொழுந்தின் அறுவடை அதிகரித்துள்ளதாக பெருந்தோட்டத்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதென்றே கூற வேண்டும்.
மழை, குளிர், இடைக்கிடையே வெயில் இந்தக் காலநிலை தேயிலை விளைச்சலை அதிகரிக்கும் என்பது அனுபவமாகும். சில மாதங்களுக்கு முன்னர் நிலவிய கடும் வரட்சி காலநிலை மாறி தற்போது மழையுடனான காலநிலை காணப்படும் நிலையில் தேயிலை விளைச்சல் அதிகரித்துள்ளது.
சில தோட்டங்களில் தொழிலாளர்கள் வழமையான நேரத்தை விட ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே (காலை 6.00 மணி) வேலைக்குச்சென்று விடுகின்றனர்.
அதேபோன்று மாலை 6.00 மணிக்கே வேலை முடிந்து வீடு திரும்புகின்றனர். மேலதிக நேரத்தில் பறிக்கப்படும் கொழுந்துக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுவதால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வதில் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதேவேளை, இவ்வாறான தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகமும் தமது பங்குக்கு (தற்போது) உணவுப் பொதிகளையும் தேனீர், கோப்பி போன்றவற்றையும் மேற்படி தொழிலாளர்களுக்கு வழங்கி வருகிறதாம். ஒரு சில தோட்டங்களில் மட்டுமே இவ்வாறு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழுந்து உற்பத்தி அதிகரித்துள்ள இந்தக்காலத்தில் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அதிகரித்துக் கொடுப்பதற்கு கம்பனிகள் முன்வருமா என்று தொழிலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நியாயமான கேள்விதானே?
தோட்டத்தொழிற்சங்கங்கள் நாளொன்றுக்கான சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டுமென்று கடந்த 14 மாதங்களுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றன. பல போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளன. ஆனால் இதுவரை 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. சம்பள உயர்வை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை.
உலகச்சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அதனால் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் கம்பனிகள் கடந்த 14 மாதங்களாக கூறி வருவதுடன், அதனால் தோட்டத்தொழிலாளருக்கு சம்பள உயர்வு வழங்க முடியாதிருப்பதாகவும் தெரிவித்து வருகின்றன. உண்மையில் தொடர்ச்சியாக 14 மாத காலமாக உலக சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சி கண்டு வருகிறதா ? ஒரு போதும் விலை உயரவில்லையா?
ஆனால் மலையக பெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக தெரிவிப்பதில் எந்தவித உண்மையும் இல்லை என்று அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியும் என்றும் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கம்பனிகள் கூறுமானால் அனைத்துத்தோட்டங்களையும் பொறுப்பேற்க அரசாங்கம் தயார் என்றும் அமைச்சர் ல்க் ஷ்மன் கிரியெல்ல பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் இதேபோன்று அமைச்சர் கம்பனிக்கு அறிவித்திருந்தார். ஆனால் எந்தவொரும் கம்பனியும் குறிப்பாக நட்டத்தில் தோட்டங்கள் இயங்குவதாகக் கூறிய கம்பனிகள் அமைச்சரின் அறிவிப்புக்கு பதிலளிக்கவே இல்லை.
எல்லா பெருந்தோட்டக்கம்பனிகளும் வாயை மூடிக்கொண்டு மௌனிகளாக இருந்து விட்டன.
அத்துடன் அமைச்சர் மேலும் பல விடயங்களை தெரிவித்துள்ளார். பெருந்தோட்டக்கம்பனிகள் அனைத்தும் இலாபத்தில் இயங்குகின்றன. அவ்வாறு கிடைக்கும் இலாபங்கள் அனைத்தும் இரகசியமாக சேமிக்கப்படுகின்றன. இலாபத்தை மறைத்து நஷ்டம் என கம்பனிகள் பொய் கூறுகின்றன.
பெருந்தோட்டக்கம்பனிகள் நஷ்டத்தில் இயங்குவதென்றால் அவையனைத்தையும் பொறுப்பேற்பதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கிறது. அத்துடன் வெளிநாட்டுக்கம்பனிகள் தோட்டங்களைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு தயாராக உள்ளன. எனவே தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறும் கம்பனிகள் தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் நோக்கும் போது தோட்டக் கம்பனிகள் தமது இலாபத்தை மறைத்து நட்டம் ஏற்படுவதாக பொய் கூறி வருகின்றன என்பதைக் காண முடிகிறது.
உண்மையில் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குமானால் அவற்றை தொடர்ந்தும் தமது பிடிக்குள் கம்பனிகள் ஏன் வைத்திருக்க வேண்டும்? நட்டத்தில் ஒரு நிறுவனம் இயங்குவதை யார்தான் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்? அதனை அரசாங்கத்திடம் கையளித்து விட்டு வெளியேறி வேறு வேலையைப் பார்க்கலாமல்லவா? இதிலிருந்து கம்பனிகளின் நட்டக்கணக்கு தொடர்பான உண்மையை புரிந்து கொள்ள முடிகிறதல்லவா? இதனையே அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போது மலையக தோட்டங்களில் கொழுந்து அறுவடை அதிகரித்துள்ள நிலையில் தொழிலாளர்களுக்கு உணவு, கோப்பி மற்றும் மேலதிக வேலைக்கான வேதனங்களை வழங்கும் கம்பனிகள் ஏன் அவர்களுக்கான அடிப்படை சம்பளத்தை உயர்த்த முடியாது. அல்லது 100 ரூபாவை நாள் சம்பளமாக வழங்க முடியாது? இது மிகவும் சிந்தனைக்குரிய விடயமாகும்.
இதேவேளை, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் இனிமேலும் தொழிலாளர்களை ஏமாற்ற முடியாது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தோட்டத் தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள் அமைச்சர் ல்க் மன் கிரியெல்ல தெரிவித்திருந்த விடயங்கள் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும். அதனடிப்படையில் 1000 ரூபா சம்பள உயர்வைக் கேட்க வேண்டும்.
கடந்த 14 மாதங்களாக மெளனமாக இருந்தது போதும் தவறாமல் நீண்ட அறிக்கைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பதும் தாம் எதனையும் பேசாமல் தமது உபதலைவர்கள், உப செயலாளர்களை கொண்டு அறிக்கை அனுப்புவதையும் இனிமேலும் தொடரக்கூடாது. அறிக்கை விடுவதில் மன்னர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.
எனவே, தற்போதாவது செயற்படுவதற்கு முன்வர வேண்டும். தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் கம்பனிகளுக்கு நிச்சயமாக அதிக இலாபம் கிடைக்கும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தொழிலாளருக்கு 1000 ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...