மலையகத்தில் சிறுத்தைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, மலையக தோட்டத்தொழிலாளர்களை காட்டு மிருகங்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தேயிலை மலைகளில் சுதந்திரமாக வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தற்போது சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், நச்சுப்பாம்புகள், அட்டைகள் என அனைத்துக்கும் பயந்து அச்சத்துடன் தொழில் செய்ய வேண்டியதொரு நிலையிலேயே உள்ளனர்.
சிலதோட்டங்களில் காலையில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் பட்டாசுகளையும் எடுத்துச்செல்கின்றனர். தேயிலை மலைக்குள் இறங்குவதற்கு முன்னர் பட்டாசுகளை கொளுத்திப்போட்டு விட்டு வேலையைத் தொடங்குவதையே தற்போதைய வழக்கமாகக் கொண்டுள்ளனர். பட்டாசு கொளுத்துவது கொண்டாட்டங்களுக்காக அல்ல. தேயிலை செடிகளுக்கிடையில் வாழ்விடங்களை அமைத்துக்கொண்டிருக்கும் சிறுத்தைகள், பன்றிகள் போன்ற மிருகங்களை விரட்டுவதற்காகத்தான்.
பட்டாசைக் கொளுத்தி போட்டால் மிருகங்கள் ஓடி விடுகிறதாம். இதனால் தினமும் பட்டாசு வாங்குவதற்கென தனியாக பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. தோட்ட நிர்வாகம் பட்டாசு வாங்க பணம் கொடுப்பதுமில்லை. வேலை செய்யும் இடங்களில் பதுங்கியிருக்கும் மிருகங்களை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதுமில்லை.
இந்த நிலையில் தோட்டப்புறங்களில் நடமாடும் சிறுத்தைகளை பாதுகாப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுத்தைகளை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கையை வரவேற்கும் அதேவேளை, தமக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு தோட்டத்தொழிலாளர்கள் கோருகின்றனர்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது மலையகத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. சிறுத்தைகளினால் தோட்டத்தொழிலாளர்கள் தாக்குதலுக்குள்ளாவதும் அவர்களின் வளர்ப்புப்பிராணிகள் காணாமல் போவதும் அதிகரித்துள்ளது.
இதனிடையே, தற்போது சிறுத்தைகள் கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு சில மாத காலத்தில் குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் ஏழு சிறுத்தைகள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் அக்கரப்பத்தனை பிரஸ்டன் தோட்டத்தின் தேயிலை மலையில் அடுத்தடுத்த தினங்களில் இரண்டு சிறுத்தைகள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சிறுத்தைகள் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது விஷம் கலந்த உணவை உட்கொள்ளச்செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்பதே அந்த சந்தேகம்.
ஏற்கனவே, சில நாட்களுக்கு முன்னர் நோர்வூட் பகுதியில் தொழிலாளர்களின் குடியிருப்புப்பகுதியில் சிறுத்தை வலையில் சிக்கி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, கடந்த மாதம்10 ஆம் திகதியன்று பொகவந்தலாவை கியூ தோட்டத்தில் தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகி காயங்களுடன் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கனவே, டிக்கோயா ஒஸ்போன் தோட்டத்திலும் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
சிறுத்தைகளின் நடமாட்டம் பொகவந்தலாவ, நோர்வூட், டயகம, அக்கரப்பத்தனை பொகவத்தை, மேபீல்ட் போன்ற பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. சிறுத்தைகளின் நடமாட்டம் அச்சுறுத்தல்கள் ஒருபுறம் இருக்க, தொழிலாளர்கள் வேலைக்கு தற்போது செல்வதற்கு இதனால் பயந்து கொண்டிருக்கின்றார்கள்.
முன்பெல்லாம் காடுகளில் வசித்து வந்த சிறுத்தை, காட்டுப்பன்றி போன்றவை தற்போது தேயிலை மலைகளில் வாழத்தொடங்கியுள்ளதுடன், தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிகளிலும் நடமாடத்தொடங்கி விட்டன. தொழிலாளர்களின் வளர்ப்புப் பிராணிகளான நாய்கள், பூனைகள், கோழிகள் போன்றவற்றை இந்த சிறுத்தைகள் பிடித்துச் சென்று விடுகின்றன.
முன்னர் ஆங்கிலேயர் காலத்திலும் அதன் பின்னரும் தேயிலைத் தோட்டங்கள் புற்கள், காடுகள், செடிகொடிகளின்றி மிகவும் சுத்தமாக காணப்படும். ஆனால், தற்போது அப்படியல்ல, தோட்டங்கள் கவனிப்பாரற்ற நிலையிலேயே காணப்படுகின்றன. தேயிலைச் செடியை விட புற்கள் உயரமாக வளர்ந்து காணப்படுகின்றன. புதர்களும் காடுகளும் மண்டிக்கிடக்கின்றன. இந்த நிலைமை சிறுத்தை போன்ற மிருகங்கள் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்துள்ளன. அதனால்தான் சிறுத்தைகள் அதிகமாக தேயிலை மலையை வாழ்விடங்களாக்கிக் கொண்டுள்ளன.
தோட்டத்தொழிலாளர்கள் இதனால் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் அண்மையில் குறித்த அக்கரப்பத்தனை தோட்டப்பகுதி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கை தோட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, சிறுத்தைகள் நாட்டில் அருகி வரும் மிருக இனமென்றும் அதனை பாதுகாக்க வேண்டுமென்றும் இலங்கை வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம் அறிவித்துள்ளது.
இது பற்றி தகவல் தருவோருக்கு சன்மானம் தருவதாகவும் அறிவித்துள்ளது.
ஆனால், தொழிலாளர்கள் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிறுத்தைக்கு பயந்து தொழிலை கைவிட வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர். அச்சத்துக்கு மத்தியில் வேலை செய்ய முடியாது. பாதுகாப்புத்தேவை!
எனவே, சிறுத்தைகளுக்காக தொழிலாளர்களை தோட்டங்களிலிருந்து வெளியேற்றுவதா? அல்லது சிறுத்தைகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு அப்புறப்படுத்துவதா? எதைச் செய்யப்போகிறது அரசு என்கின்றனர் தோட்டத்தொழிலாளர்கள்.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...