நான்கரை நூற்றாண்டு காலனித்துவத்தின் கீழ் தேசாதிபதியின் பதவிக் காலம் முடியுமுன் அவரது பதவியைப் பறித்த நிகழ்வு இந்த 1915 கலவரத்தையே சாரும். பீதியின் நிமித்தம் அவருக்கு ஏற்பட்ட கலக்கம் அவரை பாரிய அடக்குமுறையைக் கட்டவிழ்ப்பதற்கு வழிவகுத்தது. இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் அதிகமாகக் கொண்ட பஞ்சாப் படையினரை உதவிக்கு கொணரச் செய்தார். இராணுவச் சட்டத்தை தன்னிஷ்டப்படி நிறைவேற்றி கிட்டத்தட்ட 100 நாட்கள் அமுலில் வைத்து அடக்குமுறைப் புரிந்திருந்தார் அவர். கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னரும் மிலேச்சத்தனமான படுகொலை, சித்திரவதை, கைது என போதிய ஆதாரமின்றி கட்டவிழ்க்கப்பட்டிருந்தது. சந்தேகத்துக்கிடமானவர்களை கண்ட இடத்தில் சுடும்படி உத்தரவிட்டதில் பலர் கொல்லப்பட்டனர். கலவரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்பினர், சம்பந்தமே இல்லாத அப்பாவிகளே பெருமளவில் பாதிக்கப்பட்டார்கள்.
பொலிஸ் நீதிமன்றங்களில் 9600 வழக்குகளும், இராணுவ நீதிமன்றத்தில் 412 வழக்குகளும் பதிவாகின.
தேசாதிபதி சேர் ரொபர்ட் சாமர்ஸ் (Sir Robert Chalmers) இலங்கையின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றத்தற்கு பெருமளவு காரணங்கள் இருக்கின்றன.
யார் இந்த சாமர்ஸ்.
லண்டனில் பிறந்த சாமஸ் (1858 – 1938) ஒரு சிறந்த கல்விமான் மட்டுமன்றி பல்வேறு அரச துறைகளில் தலைமைப் பதவிகளை வகித்த அனுபவமுடையவர். எட்வர்ட் ஸ்டப்ஸ்க்குப் பின்னர் 1913 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அவர் இலங்கையில் இங்கிலாந்துக்கான 21வது தேசாதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் பதவி வகித்த இரண்டே ஆண்டுகளுக்குள் (1915 டிசம்பர் வரை) கறைபடிந்த ஆட்சிக்காலமாக வரலாற்றில் பதிவானார்.
இங்கிலாந்தில் திறைசேரியின் நிரந்தச் செயலாளராக கடமையாற்றி வந்த சாமர்ஸ் அந்த பணியில் சோர்வுற்றிருந்தார். அப்படிப்பட்ட நிலையில் 1915 செப்டம்பர் அவரை இலங்கைக்கான தேசாதிபதியாக பதவி வகிக்க கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.
பாலி மொழியில் பாண்டித்தியம் பெற்ற அவர் பௌத்த நாகரிகம், பௌத்த இலக்கியம் என்பனவற்றை கற்று அது பற்றிய ஆழமான அறிவைப் பெற்றவர். அது மட்டுமன்றி பௌத்த ஜாதகக் கதைகள் குறித்தும், பௌத்தம் குறித்தும் மொழிபெயர்ப்புகள் பல செய்தவர். ஆய்வு நூல்களையும் எழுதியிருப்பவர். The Jātaka; (“or, Stories of the Buddha's former births”, “Further dialogues of the Buddha” போன்ற நூல்களை உதாரணத்திற்குக் கூறலாம். ஏறத்தாள 2000 க்கும் மேற்பட்ட பக்கங்களை பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்திருக்கிறார். எனவே இலங்கைக்கு ஆளுநராக போவதில் பெருமகிழ்ச்சி கொண்டிருந்தார். அடுத்த மாதமே (ஒக்டோபர்) இலங்கைக்கும் வந்துவிட்டார்.
இலங்கையில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பௌத்த மனநிலையானது கிறிஸ்தவ எதிர்ப்பையும் சேர்த்தே இருப்பதை அவர் வந்ததும் அறிந்துகொண்டார். இலங்கையில் கிறிஸ்தவ எதிர்ப்பு அதிகரித்து அது நிருவனமயப்பட்டிருந்த காலம் அது. கிறிஸ்தவ எதிர்ப்பு நூல்கள், அமைப்புகள், பிரச்சார இயக்கங்கள் என்பன உக்கிரம் பெற்றிருந்த காலம். பௌத்த மறுமலர்ச்சி முகிழ்த்திருந்த காலம் அது. ‘மதுவொழிப்பு இயக்கம்” போன்ற பெயர்களில் காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்களை அவர் நேரடியாகக் கண்டார்.
மதுவொழிப்பு இயக்கத்தின் செயற்பாடுகள் ஆங்கிலேயர்களின் மது உற்பத்திக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டன. இதனால் வரும் வருவாய் தனது காலத்தில் பாதிக்கப்படுவதை சார்மஸ் விரும்பவில்லை. ஒரு தேர்ந்த பொருளாதார அறிஞர் அவர். “பிரித்தானிய காலனியின் கீழ் நாணயங்களின் வரலாறு” (A History of Currency in the British Colonies by Robert Chalmers) என்கிற பிரசித்த நூலை எழுதியவர் அவர் அல்லவா. மதுவொழிப்பு இயக்கத்தை ஒடுக்குவதற்கும் இந்த இராணுவச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளளலாம் என்று அவர் நம்பினார்.
அநகாரிக தர்மபாலாவை சந்திப்பதற்காக ஒரு முறை அவருக்கு தூது அனுப்பி தர்மபாலாவை இரண்டு மணித்தியாலங்கள் காக்க வைத்ததனால் ஆத்திரமுற்ற தர்மபால “நீ சொன்ன நேரத்திற்கு நான் வந்துவிட்டேன். நீ உண்டு படுத்துவிட்டாய். எனது பெறுமதிமிக்க காலத்தை வீனடித்துவிட்டாய். எனவே நீ போய் படு. உன்னோடு நான் கதைக்க விரும்பவில்லை. கவர்னர் பதவிக்கு மட்டுமில்லை. ஒரு சில்லறைக் கடைக்குக் கூட நீ லாயக்கு இல்லை” என்று சூழ இருந்த ஊழியர்கள் முன்னிலையில் திட்டி விட்டு சென்றதை பெரும் அவமாரியாதயாகக் கருதினார். இராணுவச் சட்டத்தைப் பயன்படுத்தி தர்மபால இலங்கையில் இல்லாத நிலையில் அவரது இரு சகோதரர்களையும் சிறையில் அடைத்தார். இந்தியாவுக்கு தூது அனுப்பி தர்மபாலவையும் சில வருடங்களுக்கு வீட்டுச் சிறையில் வைத்திருந்தார். தர்மபாலாவின் சகோதரர்களில் ஒருவர் சிறையிலேயே இறந்துபோனார்.
கைது செய்யப்பட்டிருந்த சிங்களத் தலைவர்களின் விடுதலை கோரி வந்த இராமநாதன் போன்றோரை துப்பாக்கி முனையில் விரட்டியனுப்பியவர்.
கலவரம் தொடங்கிய முதல் மூன்று நாட்களும் தேசாதிபதி சாமர்ஸ் நுவரெலியாவிலுள்ள தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே இருந்தார். கலவரம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததன் பின்னர் தான் அவர் செயலில் இறங்கினார்.
போரில் மாண்ட மகன்மார்
இந்தக் கலவரத்தின் பின்னணியில் ஜெர்மனி இருக்கிறது என்றும், ஜெர்மன் உளவுத் துறையினரே பிரித்தானியாவுக்கு எதிரான சதியில் இலங்கையர்களைப் பயன்படுத்திவருகிறார்கள் என்று நம்பினார். பொலிசார் ஊதிப்பெருப்பித்து வெளியிட்டிருந்த உளவுத் தகவல்களை அவர் நம்பினார்.
ஜெர்மன் மீது அவர் ஆத்திரம் கொள்ள காரணங்கள் இருந்தன. அவருக்கு ஒரு மகளும் இரு மகன்களும் இருந்தனர். முதலாம் உலகப் போர் நிகழ்ந்துகொண்டிருக்கையில் 1915 மே மாதம் இரு மகன்களும் வெவ்வேறு போர்க்களத்தில் கொல்லப்பட்டனர். (Captain Ralph Chalmers, Lieutenant Robert Chalmers) அந்த இழப்பு அவரை வெகுவாகப் பாதித்திருந்தது. அதே மாதம் தான் இலங்கையில் கலவரமும் நிகழ்ந்தது குறிப்படத்தக்கது.
ஆட்சியில் நல்லவை
சாமர்ஸ் பதவி வகித்த இரண்டாண்டுகளுக்குள் கொழும்பில் பெரிய நெற்களஞ்சியம் உருவாக்கப்பட்டது. கோட்டையில் இன்று அமைந்துள்ள புதிய சுங்கத் திணைக்களக் கட்டடமே பல்வேறு இன்னல்கள் காரணமாக 1914இல் உருவாக்கப்பட்ட நெற்களஞ்சியமாகும். இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பரவிய பிளேக் நோய்க்குப் பலர் பலியானார்கள். சிறிய சிறிய களஞ்சியங்களில் எலிகளின் பெருக்கத்தின் காரணமாக மாற்று வழித் திட்டமாக சாமர்சால் 100 வருடங்களுக்கு முன்னர் 17 மில்லியனில் செய்து முடிக்கப்பட்டது தான் அந்த களஞ்சியம். அதற்கு மிகச் சமீப காலம் வரை சாமர்ஸ் களஞ்சியம் “Chalmers Granaries” என்றே அழைக்கப்பட்டது.
அதுபோல கொழும்பு பல்கலைக்கழகத்தின் தோற்றத்திற்குப் பின்னணியிலும் சாமசின் வகிபாகம் குறிப்பிடத்தக்கது. சாம்ரசின் இரண்டாண்டு ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த அபிவிருத்திப் பணிகள் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
பதவி துறப்புக்கு அழுத்தம்
சாமர்சை பதவி துறக்கச் செய்ததில் பல்வேறு தரப்புக் காரணிகள் தொழிற்பட்டிருந்தன.
- சேர் பொன் இராமநாதன், ஈ.டபிள்யு பெரேரா போன்றோறின் பிரித்தானிய பயணமும் அவர்களது முறைப்பாடுகளும்.
- சேர் பொன் இராமநாதன், ஆர்மண்ட் டீ சூசா போன்றோரின் விளக்கமான நூல்கள்.
- இலங்கையர்கள் மத்தியில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான வெகுஜன அபிப்பிராயத்தை உருவாக்கிய தினமின, டைம்ஸ் ஒப் சிலோன், மோர்னிங் லீடர் போன்ற பத்திரிகைகளின் பாத்திரம்,
- பிரித்தானிய அடக்குமுறையை வெளிக்கொணர்ந்த Nation, Review of the Reviews, Globe, London Daily News, New Statesman, Manchester Guardian, போன்ற ஐரோப்பிய பத்திரிகைகள் மற்றும் Ceylon Committee in London, Irish Women's League, London Buddhist Society, Humanitarian League, Lodon Temperance Society'' போன்ற அமைப்புகள்,
- தியோடர், டெய்லர் போன்ற பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு
என சகல மட்டங்களிலும் சாமசுக்கு பிரித்தானிய ஆட்சியதிகாரத்தில் இருந்த செல்வாக்கு சற்று சரிந்தது. சாமசின் சிவில் சேவை அனுபவத்தாலும், புலமைத்துவ சேவை என்பவற்றால் சாமசின் ஆளுநர் பதவியை தக்க வைக்க இயலவில்லை. இலங்கையின் வரலாற்றில் முதலாவதாகவும் இறுதியாகவும் பதவி பறிக்கப்பட்டு திருப்பி அழைக்கப்பட்ட ஒரே ஒருவர் சாமர்ஸ் பிரபு என்று பரவலாக வாசித்தறிந்திருக்கிறோம்.
அவரை பதவி விலக்கியதாக வரலாற்றில் பதிவாகியபோதும், அவர் திருப்பி அனுப்பட்டார் என்றே கூற வேண்டும். ஏனெனில் ஒரு சிவில் அதிகாரி என்கிற வகையில் அவர் வேறு ஒரு உயர் பதவிக்கு மாற்றப்பட்டார். இன்னொரு வகையில் சொல்லப்போனால் அவர் மேற்கொண்ட பிரித்தாளும் தந்திரத்துக்காகவும், இலங்கையின் முதல் இனக்கலவரத்தை உருவாக்கியதாலும் பதவி உயர்த்தப்பட்டார் என்றே கூற முடியும்.
எனவே பிரித்தானிய ஆட்சி தனது தரப்பு தவறை ஏற்றுக்கொள்ளவில்லை. வழிமுறை பிழையாக இருந்தபோதும் அடக்குமுறைக்கு நியாயமான காரணங்கள் இருந்தன என்றே முடித்தது. ஆனால் சாமஸ் திருப்பி அனுப்பப்பட்டதே தமது பெரிய வெற்றியென்று இலங்கை தரப்பு பெருமிதம் கொண்டது. பிரித்தானிய ஆட்சியாளர்களின் கண்துடைப்பு நாடகம் எளிமையாக வெற்றி கண்டது.
தொடரும்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...