Headlines News :
முகப்பு » » ஆயிரம் ரூபா சம்பளம் : இலக்கு நோக்கிய பயணமா? அமைச்சுப்பதவிக்கான பணயமா? - கபில்நாத்

ஆயிரம் ரூபா சம்பளம் : இலக்கு நோக்கிய பயணமா? அமைச்சுப்பதவிக்கான பணயமா? - கபில்நாத்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் கடந்த கால்நூற்றாண்டு காலப்பகுதியில் அதிக இழுபறிநிறைந்த ஒரு விடயமாக இந்த முறை மாற்றம் பெற்றுள்ளது. இதனை ஆழமாக பாரத்தால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தனியே தொழிற்சங்க பிரச்சினை மாத்திரமல்ல அது அரசியல் பின்புலங்களையும் கொண்டது என்பது புலப்படும்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் சமபந்தப்படுவோர் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் ஆயினும் அவர்களுக்கு வெளியே இந்த விடயம் தொடர்பில் அக்கறைபடுவோர் அல்லது அனுதாபப்படுவோர் அநேகம் பேர். இதில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகத்துறைசார்ந்தோர், அரசியல் விமர்சகர்கள், தூய்மைமிக்க தொழிற்சங்கவாதிகள், முகநூல் போராளிகள் என பலதரப்பினர் உள்ளனர்.

இவர்களின் கருத்துப்பகிர்வுகள் மற்றும் நடைமுறையில் சம்பளவிடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குறித்து அவதானிப்புகள் பின்வருமாறு அமைகின்றன.

*தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 'கூட்டு ஒப்பந்தத்தினால்' மாத்திரமே தீர்மானிக்கப்படல் வேண்டும் என்பதாக சிலர் கருதுகின்றனர். 1992 ம் ஆண்டு பெருந்தோட்டங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டபோதுதான் இந்த 'கூட்டு ஒப்பந்த முறை' மூலமாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நடைமுறைக்கு வந்தது என்பது இங்கு நினைவுபடுத்தத் தக்கது. இதன் மூலம் 'வாழ்க்கைச் செலவு புள்ளி அடிப்படையில் (Cost of Living Allowance- COLA) வருடாந்தம் அதிகரிக்கப்படக்கூடிய ஊதிய அதிகரிப்பு தொகையை தொழிலாளர்கள் இழந்து விடுகின்றனர்.

* இரண்டு வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுவதாக புரிந்துணர்வுக்கு உட்பட்ட நிலையில் கைச்சாத்திடப்பட்டுவரும் நிலையிலும் கடந்த கால் நூற்றாணடு காலமாக ஒவ்வொரு இரண்டு வருட ஒப்பந்த முடிவிலும் நிச்சயமான கால இடைவெளியில் கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. அத்தகைய நிச்சயமான இடைவெளி காலம் ஒன்றை பிரதான ஒப்பந்த தருணத்தில் ஒப்பந்த தரப்பினர் தீர்மானித்துக்கொண்டதாகவும் தெரியவில்லை. ஒவ்வொரு ஒப்பந்த கால முடிவிலும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் ஒப்பந்தம் செய்யாத தரப்பினர் அதற்கு தலைமை கொடுப்பதன் ஊடாக அதற்கு அழுத்தம் கொடுப்பது எனும் போக்கை கடைபிடித்து வந்தன.

*ஒப்பந்தம் செய்யும் தரப்பில் பிரதான தரப்பான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடந்த கால் நூற்றாண்டு முழுவதும் ஆளும் கட்சியில் அங்கம் வகித்து வந்துள்ளதுடன் ஒப்பந்த தரப்பின் இரண்டாம் நிலையினரான ஐ.தே.க சார்பான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) இருந்து வந்துள்ளது. மூன்றாவது தரப்பான கூட்டு தொழிற்சங்க சம்மேளனம் பாரிய செல்வாக்கு செலுத்த முடியாத சில சிறு தொழிற்சங்ககங்களின் கூட்டு என்றவகையில் ஒப்பந்த பிரதான சங்கத்தின் ஒத்தோடிகளாகவே இருந்து வந்துள்ளனர்.

*ஆளும் கட்சியில் அங்கம் வகித்த இ.தொ.கா தனது அமைச்சுப்பதவி தோரணைகளைக் காட்டி இந்த ஒப்பந்த செயற்பாட்டில் செல்வாக்கு மிக்க சக்தியாக இருந்து வந்துள்ளது. ஐ.தே.க சார்பான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் (LJEWU) எதிர்கட்சி பக்கத்தில் நின்று பாரிய செல்வாக்கு செலுத்த முடியாத நிலையில் இ.தொ.காவுடன் இணக்கப்போக்குடன் பேச்சுவார்த்தைகளின்போது நடந்துகொண்டே ஒப்பந்தத்ததை செய்து வந்துள்ளது.

*2015 மார்ச் 31 ம் திகதி முடிவடையவிருந்த ஒப்பந்தை புதுப்பிக்க வேண்டிய தருவாயிலும் அதற்கு பின்னரும் மேலே குறிப்பிட்ட காட்சிகளில் மாற்றங்கள் தலைகீழ் நிலையை அடைந்தன. 2015 மார்ச் 31 ஒப்பந்தம் முடிவடையவிருந்த நிலையில் ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் இந்த காட்சி மாற்றத்துக்கு காரணமாகியது. மகிந்த அணியினருக்கு ஆதரவாக செயற்பட்ட இ.தொ.கா அணியினர் தமது அணி வெற்றிபெற்றால் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா பெற்றுக்கொடுக்க போவதாக அறிக்கை விட்டனர். மாற்றுத் தரப்பினர் குழப்பாமல் இருந்தால் தாங்கள் அதனைச் சாத்தியப்படுத்துவோம் என்றும் கோரிக்கை வைத்தனர். மாற்றுத்தரப்பினரும் இந்த அறிவிப்பை வரவேற்றனர். இது பாரிய கவர்ச்சிகரமான அறிவிப்பாக மாறியது. 450ரூபாவிலிருந்து 1000ரூபாவை நோக்கிய இந்தப்பாய்ச்சல் மிகுந்த அறிவிப்பு மேலே சொன்ன தூய்மைமிக்க அரசியல் தொழிற்சங்க தரப்புகளான இடதுசாரி சிந்தனையாளர்களிடமும் கூட ஒரு மாயையை உண்டாக்கியது. எதனையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் நோக்கும் இவர்கள் 1000ஃ- ஆதரவாளர்கள் ஆகிப்போனார்கள். அதன் நடைமுறைச்சாத்தியம் பற்றி சிநத்திக்காததது அவர்களது அரசியல் செயற்பாடுகள் போன்றே தூரநோக்கற்றதாக அமைந்ததுஃஅமைகின்றது

* எனினும், இந்த 1000ஃ- கவரச்சி அறிவிப்பையும் தாண்டி மலையக மக்கள் மாற்றுத்தீர்மானம் ஒன்றை ஜனாதிபதி தேர்தலில் எடுக்க மகிந்த அணி தோல்வியடையவும் இ.தொ.கா எதிர்தரப்பானது. மைத்திரி அணிக்கு ஆதரவளித்த கூட்டு ஒப்பந்த எதிர் தரபபான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அரசியல் ரீதியாக பலம்பெறத் தொடங்கினர். ஐ.தே.க ஆளும் கட்சியானது. எனவே அதன்சார்பு தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (டுதுநுறுரு) இ.தொ.கா வை பின்தொடர்வதை விடுத்து தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இசைந்து கொடுக்க வேண்டியதாயிற்று.

* பொதுத் தேர்தல் காலத்தில் இந்த அறிவிப்புகள் இன்னும் அரசியல் மயப்பட்டதாக மாறியது. இ.தொ.கா 1990களுக்குப்பின்னான கால்நூற்றாண்டு காலத்தில் பாரிய ஒரு சரிவினை 2015 பாராளுமன்ற தேர்தலில் சந்திக்க நேரிட்டது. அவர்களின் குறைந்தபட்ச 3 ஆசனங்களைக் கூட நுவரெலியா மாவட்டத்தில் உறுதிப்படுத்த முடியாமல் போனது.

மேலே சொல்லப்பட்ட அக்கறையுடைய தரப்புகளில் ஒரு அங்கத்தினரான ஊடகத்துறை சார்ந்தோர் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டுகளில் ஒன்று தமிழ் முற்போக்கு கூட்டணி இப்போது ஆளும் தரப்பாக தானே இருக்கிறது. இ.தொ.கா ஆளும் தரப்பில் இருந்து சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டது என்பதாகும். இந்த தவறான புரிதலுக்கு காரணம் மலையக மக்கள் அனைவருமே தோட்டத்தொழிலாளர்கள் அல்லது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த உயர்ந்த பட்ச ஒரு லட்சம் வாக்குகள் தனியே தொழிலாளர்களுடையது என்பதாகக் கொள்வது. கடந்த கால நூற்றாண்டு காலமாகவும் இ.தொ.கா அரசதரப்பு அல்லது அமைச்சராக இருந்த காரணத்தால் சம்பளதொகையை தீர்மானிக்கும் சக்தியாக திகழவில்லை. மாறாக தென்னாசியாவிலேயே பாரிய தொழிற்சங்கம் எனும் நிலையில் இருந்த அளவுக்கு பாரிய தொழிற்சங்க சகதியாக இ.தொ.கா இருந்து வந்துள்ளது. இப்போது அந்த கட்டமைப்பிலும் இ.தொ.கா பாரிய வீழ்ச்சி போக்கைக் கண்டுள்ளது என்பது ஒரு புறமிருக்க தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1992 ஆண்டு தனியார் மயப்படுத்தப்பட்டதன் பி;ன்னர் 5 லட்சத்தில் இருந்து 1 லட்சத்து அறுபது ஆயிரமாக குறைந்துள்ளார்கள் என்கின்ற விடயமும் பிரதானமானது.

* எனவே அரசியல் ரீதியாக பலம் பெற்றுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி ஒப்பநதத்தில் கைச்சாத்திடுகின்ற அளவிலான தொழிற்சங்க பலத்தை பெறாமலேயே (தொழிலாளர் தேசிய சங்கம், மலையக தொழிலாளர் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்) தமது அரசியல் முன்னெடுப்புகள் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஒரு உள்நுழைவைச் செய்திருக்கிறது.

*2015 பொதுத் தேர்தலுக்குப்பின்னர் சம்பள விவகாரத்தில் நடைபெற்றுள்ள மிக முக்கியமான காட்சி மாற்றம் கூட்டு ஒப்பந்த முறை மூலம் நாட் சம்பளம் தீர்மானிக்கப்படுவதை எதிர்த்து வந்த தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இந்த கால் நூற்றாண்டு காலம் முழுவதும் பேச்சுவார்த்தை மேசையில் சந்தித்திராத தோட்ட கம்பனிகளை (தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தை) பேச்சுவார்த்தை மேசையில் சந்தித்தது. எனவே இத்தனைக்காலம் வெளியில் இருந்து அழுத்தம் என்ற நிலைமையை மாற்ற pஉள்ளே சென்று தோட்ட முதலாளிகளை பேச்சுவார்த்தையில் மேசையில் சந்தித்து அவர்களது அழுத்தத்தை நேரடியாக பிரயோகிக்கும் சூழ்நலையை தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாக்கியமை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அவர்கள் அடைந்த பாரிய பாய்ச்சல் என்பதனை மறுப்பதற்கில்லை. இந்த பாய்ச்சலை 2500- நிவாரணக் கோரிக்கையினூடாக 'அரசியல்' தமிழ் முற்போக்கு கூட்டணி சாத்தியப்புடுத்தியிருக்கிறது.

* மறுபுறத்தில் கூட்டு ஒப்பந்த தரப்பில் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய ஐ.தே.க தரப்பினரை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில ஒரு முக்கிய புள்ளிக்கு கொண்டுவந்திருக்கிறது. ஐ.தே.க வின் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் முக்கிய புள்ளிகளாக இருந்த இரண்டு தொழிற்சங்க வாதிகளின் மறைவு ஐ.தே.க தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவிடயத்தில் எத்தகைய முடிவினை எடுப்பது என்பது தொடர்பாக ஐ.தே.க தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை இந்த காட்சிக்குள் கொண்டு வந்திருக்கினறது. அந்த தொழிற்சங்கத்தின் சிரேஷ்ட உறப்பினர்களான மொஹிதீன் அதன் பின்னர் கே.வேலாயுதம் ஆகிய இருவரின் அளவுக்கு குறித்த விடயத்துடன் பரிச்சயமான யாரும் இப்போது ஐ.தே.கவில் இல்லை. ஓரளவுக்கு தொடர்புமிக்கவர் என்று அடையாளப்படுத்த கூடிய பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க தலைவருமான ரவீ சமரவீரவும் தொழில் ராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நியமிக்கப்பட்டிருப்பது அரசாங்க தரப்பில் இருந்துகொண்டு ஐ.தே.கவினர் பொறுப்படன் செயலாற்ற வேண்டிய ஒரு நிலைமையை உருவாக்கியுள்ளது.

* 2500ரூபா மதாந்த சம்பளம் பெறுவோருக்கான வரவு செலவுத்திட்ட நிவாரணப்படியை பெற்றுக்கொடுப்பதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரேரணை முன்வைப்பும் அரசியல் அழுத்தமும் ஒரு புறமிருக்க ஐ.தே.க தனது பங்கிற்கு ஏதாயினும் செய்தாகவேண்டும் என்ற நிலைப்பாடும் ஒரு காரணமாகியது. எனவேதான் 'கூட்டு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசாங்க நிவாரணப்படி அறிவிப்பு பொருந்தது' என்ற சட்ட வரையறை இருந்தும் கூட 2015 மார்ச் மாதத்துடன் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதாக காரணம் காட்டி தொழில் அமைச்சரும் தொழில் ராஜாங்க அமைச்சரும் முன்னின்று சட்ட ஏற்பாடுகளை செய்து தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த நிவாரணத்தொகையை நாளொன்றுன்னு 100ரூபா வீதம் பெற்றுக்கொடுக்க முன்வந்தமையாகும். இதன் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவின் அழுத்தமும் ஆதரவும் அமைச்சர்களுக்கு இருக்கின்றது.

இந்த நகர்வினை எதிர்பார்க்காத இ.தொ.கா தான் முன்வைத்த 1000 ரூபா தொகையை அடைவதற்கான இலக்கு நோக்கிய பயணமாக அல்லாமல் அதனை ஒரு நிபந்தனையாக மாற்றி எப்படியாயினும் ஆளும் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப்பதவியைப் பெறுவதற்கான மூலோபயமாக மாற்றி வருவதனை அவதானிக்க முடிகின்றது. தனது அரசியல் பலத்தை இழந்துள்ள நிலையில் கடைசி ஆயுதமாக தமது பாரம்பரிய தொழிற்சங்க பலத்தை பிரயோகித்து சம்பளப்பிரச்சினையை தீர்க்க தாம் வழங்க வேண்டிய ஒத்துழைப்பை நிபந்தனையாக மாற்றி 'அமைச்சுப்பதவியைப்' பெறுவது தற்போதைய இறுதி உபாயமாக மாறியுள்ளதனை அவதானிக்க முடிகின்றது. அவ்வாறு அமைச்சுப் பதவி வழங்க முன்வந்தால் 1000 கோரிக்கை எவ்வித காரணங்களுமின்றி 800 ரூபாவு க்கு உட்பட்ட ஒரு தொகைக்கு கீழிறக்கப்படும் என்பது நிச்சயமான உண்மை. இந்த சமிக்ஞையை உறுதிப்படுத்தும் மூன்று விடயங்களை இ.தொ.கா காட்டியுள்ளது.புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் எதிர்கட்சி வரிசையில் அமரந்தவாறே மூன்று தடவைகள் அரசாங்கத்திற்க ஆதரவாக பாராளுமன்றில் வாக்களித்துள்ளது. (அமைச்சர்களின் எண்ணிக்கை தீர்மானம், வரவு செலவுத்திட்டம், நிதி அமைச்சர் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை).

*தமது மகளிர் தின விழாவிற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவை பிரதம அதிதியாக அழைத்து 1000 க்கு குறைந்த ஒரு தொகைக்கு தாம் தயார் என்ற அறிவிப்புக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளமை. அமைச்சர் நவீன் திசாநாயக்க 770 ரூபாவுக்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்றில் அறிவித்துள்ளமையை இங்க நினைவுபடுத்துவது பொருந்தும்.

*தமிழ் முற்போக்கு கூட்டணியின் 2500 மாதாந்த நிவாரணப்படி கோரிக்கை ஏதோ ஒரு வடிவத்தில் இரண்டு மாதங்களுக்கு அரச கடன் அடிப்படையிலாவது வழங்கப்படும் எனும் உத்தரவாதம் வழங்கப்படும் நிலையில் இரண்டு மாத்திற்கு அப்பாலும் அதனை வழங்குவதில் உள்ள சிக்கலை அiடாளம் இட்டு காட்டும் வகையல் தான் வெளிநாட்டில் இருநது நாடு திரும்பினாலம் கூட பாராளுமன்றத்திற்க சமூகமளிக்காமல் இருக்க விடுமுறை விண்ணப்பித்து எச்சரிக்கை செய்திருத்தல்.

* இ.தொ.கா அரசாங்கத்தில் இல்லாதபோதும் இன்னும் கூட தொழிற்சங்க பலத்துடன் இருப்பதன் காரணமாக கம்பனிகள் 'இ.தொ.கா'வின் அறிவிப்புகளுக்கு அஞ்சுகின்ற ஒரு நிலைமையை அவதானிக்க முடிகின்றது. அரசாங்கத்தின் அறி;விப்பை நடைமுறைப்படுத்துவதிலும் கூட கம்பனிக்ள தயக்கம் காட்டுவதற்கும் இதுவே காரணமாக அமைகின்றது. கடந்த வாரம் கம்பனிகளின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த பிரதமர் கடும்தொணியில் உத்தரவிட்டு 2500 நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக அறியக்கிடைக்கின்;றது. கம்பனிகளும் ஜீன் 15-20 க்கு இடைப்பட்ட காலத்தில் அதனைப்பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிகிறது.

* மறுபுறத்தில் நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்த முறைமை ஒரு தோல்வியடைந்த முறைமை என உறுதிபடத் தெரிவிக்கும் 'தோட்ட முதலாளிமார் சம்மேளனம்' வெளியக பயிரிடல் முறை (ழுரவ புசழறநச ளலளவநஅ) அல்லது லாபப் பகிர்வு முறை (Pசழகவை ளூயசiபெ அநவாழன) எனப்படும் முறையில் பெருந்தோட்டங்களை நிர்வகிப்பதனை அமுல்படுத்துவதில் உறுதியாக உள்ளன. இந்த முறைமை பற்றி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே கூட்டு ஒப்பந்த தரப்பினருடன் (குறிப்பாக இ.தொ.காவுடன்) கலந்துரையாடியுள்ளதாகவும் அடுத்த முறை ஒப்பந்தம் செய்யுமபோது பார்க்கலாம் என இரண்டு தவணைகளும் காலம் கடத்தப்பட்டுவிட்டதாகக் கூறும் கம்பனிகள் இம்முறை தாம் இந்த புதிய முறைமைக்கு இணங்கினாலே எந்த ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடுவோம் எனும் நிபந்தனை முன்வைப்பதாக தெரிகிறது.

* இப்போது அரசாங்கம் அறிவித்திருக்கும் இரண்டு மாத கால இடைவெளியில் இந்த முறைமைக்குள் பெருந்தோட்டங்கள் தள்ளப்படுமானால் அது மலையக தொழிலாளர் சமூகத்தின் எதிர்காலத்தை எவ்வாறு தீர்மானிக்கப்போகின்றது எனும் கேள்விக்குறி மலையக சமூகத்தின் மீது மக்களை கொண்ட அனைத்து தரப்பினரினதும் கடப்பாடாகும். இந்த நிலைமைகளை தீர ஆராயமால் 1000 ரூபா அல்லது 2500 ரூபா 100 ரூபா என தொகைப்பெறுமானங்களில் ஆய்வுகளையும் நிபந்தனைகளையும் முன்வைக்காமல் கம்பனிகளால் திணிக்கப்படப்போகும் புதிய முறைமைபற்றி ஆய்வு செய்ய அனைவுரும் குறிப்பாக ஊடகத்துறை சார் தரப்பினர், தூய்மைமிக்க தொழிற்சங்க தரப்பினர் தலைப்படல் வேண்டும்.

* இ.தொ.கா தாம் அறிவித்த 1000 தொகையை இலக்கு நோக்கிய பயணமாக அல்லாமல் தமது அமைச்சு பதவியைப் பெறுவதற்கான பணயமாக மாற்றுவதனைக் கைவிடல் வேண்டும். தமது அற்ப நலன்களுக்காக லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழக்கையோடு விளையாடுவதை முடிவுக்கு கொண்டுவரல் வேண்டும்.

* தமிழ் முற்போக்கு கூட்டணியினர் 2500 நிவாரணப்படியை இரண்டு மாதத்துக்கு பெற்றுக்கொடுப்பதோடு (கிடைக்கும் வரை இதில் உறுதிப்பாடு இல்லை) தங்களது பணி நிறைவடைந்ததாக எண்ணாமல், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவிடயத்தில் அரசாங்கத்தை தலையிடச் செய்தது போல கம்பனிகள் முன்வைக்கும் புதிய முறைமை தொடர்பிலும் அரசாங்கத்தின் கவனத்தை திசை திருப்ப தங்களது அரசியல் பலத்தை பிரயோகிக்க வேண்டும். ஆனாலும், தமிழ் முற்போக்கு கூட்டணியினர் கூட்டணியாக அல்லாதபோது தனித்தும் ஒன்றாக சேர்ந்தும் சம்பள விடயம் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து அழுத்தம் கொடுத்ததுபோல் ஆளும் தரப்பாக இருந்துகொண்டும் கூட்டணியாக இயங்குகையில் 'அழுத்தம் கொடுக்கும்' போராட்டத்தை முன்னெடுத்த போது 'இலக்கு' எது? அல்லது யார்? என்ற தெளிவில்லாமல் முன்னெடுத்த தமது போராட்டத்தை பிசுபிசுப்பான ஒன்றாக மாற்றிக் கொண்டமை அவர்களது தொழிற்சங்க நிலையிலான பலவீனத்தை வெளிப்படுத்தி நின்றமையை மறுப்பதற்கில்லை. அது பற்றி அவர்கள் தம்மை சுயவிமர்சனம் செய்து கொண்டு மீளமைத்துக் கொள்ளும் கடப்பாட்டைக் கொண்டுள்ளார்கள்.

* அக்கறையுடைய ஏனைய தரப்பினர் கூட்டு ஒப்பந்த தரப்பினர், அதனை எதிரக்கும் அணியினரின் அரசியல் காய்நகர்த்தல்களின் ஊடாக நிகழும் காட்சி மாற்றங்களை கட்டுரைகளாக்கி சுவாரஷ்யம் காண்பதோடு தங்களது சமூக பணி நிறைவடைந்துவிட்டதாக எண்ணிவிடாமல் மலையக தொழிலாளர்களின் எதிர்காலம் குறித்த சிந்தனையோடு யதார்த்தபூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு தமது கருத்துக்களால் மக்களிடையே 'கருத்துருவாக்கம்' செய்வதாகவும் பணிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

ஏனெனில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் என்பது வெறுமனே ஒரு தொழிற்சங்க பிரச்சினை மாத்திரமல்ல, இதன் பின்னணியில் மலையகத்தின் அரசியல் செல்நெறிகளும் தீர்மானிக்கப்படுகின்றன. மலையக அரசியலின் வேர்களாக இந்த தொழிலாளர்களாக திகழ்கின்றனர் என்றவகையில் அவர்களது ஜீவனோபாயம் குறித்து முன்வைக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் அவரகளது வாழ்வாதாரத்தை மாத்திரமல்ல மலையக அரசியலின் எதிர்காலத்தையும் தீர்மானிப்பதாகவும் அமையும். 

நன்றி - தினக்குரல்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates