Headlines News :
முகப்பு » , , , , » இராமநாதன் : “இலங்கையின் முதிய நாயகன்”? (1915 கண்டி கலகம் –36) - என்.சரவணன்

இராமநாதன் : “இலங்கையின் முதிய நாயகன்”? (1915 கண்டி கலகம் –36) - என்.சரவணன்


எம்.எம்.போல் லெகாட் (M.M.Paul Lecat)  என்கிற அந்தக் கப்பல்  உயர்ந்தெழும் அந்த அலைகளை எதிர்கொண்டு இங்கும் அங்குமாக பெரும் ஆட்டத்துடன் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. ஏற்கெனவே அந்தக் கப்பல் ஐஸ் பாறைகளுடன் மோதி சரிசெய்யப்பட்ட ஒன்று. மேலும் கப்பலை இடதும் வலதுமாக திருப்பிக்கொண்டு செள்ளவேண்டியிருந்ததன் காரணம் கற்பாறைகளில் இருந்து கப்பலைப் பாதுகாப்பதற்காக. முதலாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்ததால் நடுக்கடலில் கப்பல்கள் மாறி மாறி மூழ்கடிக்கப்பட்டு வந்த காலம் அது. ஜேர்மன் எண்ணெய்க் கப்பலொன்றும் சமீபத்தில் மூழ்கடிக்கப்பட்டிருந்ததால் அதிலிருந்து வெளியான எண்ணைக் குமிழ்களைக் காட்டி கப்டன் பயணிகளுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார். ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பலால் தமது கப்பலுக்கும் ஆபத்து நேரிடும் என்பதால் பல சந்தர்ப்பங்களில் இசட் வடிவில் (zig-zag) அந்தக் கப்பல் பயணித்தது. ஆம் அந்தக் கப்பலில் தான் சேர் பொன் இராமநாதனும் பயணித்துக்கொண்டிருந்தார்.
இராமநாதன் லண்டன் பயணம் செய்த M.M.Paul Lecat கப்பல்

இந்தக் கப்பல் இங்கிலாந்தை நோக்கி 30 ஒக்டோபர் 1915 அன்று கொழும்பிலிருந்து கிளம்பியது. (1928ஆம் ஆண்டு இந்தக் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது என்பது இன்னொரு செய்தி) உயிராபத்து நிறைந்த அந்தப் பயணத்தை இராமநாதன் அந்த வயதில் மேற்கொண்டது மேலும் பல இலங்கையர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே. கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், கைதுக்குள்ளாகியிருந்த அப்பாவிகளின் விடுதலையைக் கோரியும் மேற்கொள்ளப்பட்ட பயணம் அது. சுகவீனமாக இருந்த இராமநாதனின் உடல் நிலையின் காரணமாக அவரை அந்த பயணத்தை மேற்கொள்ளவேண்டாம் என்று அவரது துணைவியார் கேட்டுக்கொண்டார். அவர் அதனை புறக்கணித்து விட்டு சென்ற பயணம் அது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பயணம் இலங்கையின் அரசியல் திசைவழியில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஒன்று என்றால் அது மிகையாகாது.

இதே காலத்தில் டீ.பீ.ஜயதிலக, ஈ.டபிள்யு.பெரேரா சேர்.ஜேம்ஸ் பீரிஸ் போன்றோரம் இங்கிலாந்து பயணமாகி அவர்களும் இராமநாதன் போன்றே முறைப்பாடுகளை முன்வைத்தனர். இவர்களில் ஈ.டபிள்யு பெரேரா தனது சப்பாத்துக்கடியில் வைத்து ஆதாரங்களைக் கொண்டு போய் சேர்த்தவர். அவரும் கைது செய்யப்பட்டு விடுவிப்பட்டவர் தான். ஆனால் சில சிங்கள நூல்கள் இராமநாதனின் பெயரை தவிர்த்து விட்டு ஏனைய மூவரின் முயற்சியால் தான் விடுதலை சாத்தியமானது என்று முடிப்பதையும் வாசிக்கக் கிடைக்கிறது.

இவர்களில் இரமானாதனின் பாத்திரம் இவர்களில் இருந்து வேறுபட்டது. அவர் இங்கிலாந்தில் மேற்கொண்ட சந்திப்புகளும், முறைப்பாடுகளும் உரியவகையில், உரிய இடங்களுக்கு காத்திரமாக கொண்டு போய் சேர்க்கப்பட்டன என்பது தான் நிதர்சனம். காலனித்துவ செயலாளரையும், முக்கிய பல அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அவர் சந்தித்தார். அதனை உணர்ந்திருந்ததால் தான் சிங்களத் தலைவர்கள் இராமனாதனைக் கொண்டாடினார்கள். சில வேளை இராமநாதனின் இந்த முயற்சி நடக்காதிருந்தாலோ, அல்லது தோல்வியடைந்திருந்தாலோ பல சிங்களத் தலைவர்கள் மரணத்தை சந்தித்திருக்கக் கூடும். அப்படி விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான டீ.எஸ்.சேனநாயக்க தான் இலங்கையின் முதல் பிரதமராகத் தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

1915 கலவரத்தைக் காரணமாக வைத்து ஆங்கிலேயர்களுக்கு அரசியல் ரீதியில் ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்களாக கருதப்பட்ட கலவரத்துடன் தொடர்பே இராத சிங்களத் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள்.

டீ.எஸ்.சேனநாயக, எப்.ஆர். டீ.பீ.ஜயதிலக, லடிபில்யு, ஏ.டீ.சில்வா, டீ.ஆர்.விஜேவர்தன, எப்.ஆர்,டயஸ் சேனநாயக்க, டொக்டர் கேசியஸ் பெரேரா, ஈ.டீ.டீ.சில்வா, எச்.அமரசூரிய, ஏ.எச்.மொலமூரே, சீ, டீ, பட்டுவன்தொட்டுவ, ஜோன்.எம்.செனவிரத்ன, டபிள்யு.எச்.டபிள்யு.பெரேரா, மார்டினஸ் பெரேரா, ஜீ.டீ.லேநேரோல், ஜோன் டீ.சில்வா,பத்தரமுல்ல தேரர், எட்மன்ட் ஹேவா விதாரண, டொக்டர் சீ, ஏ.ஹேவா விதாரண (இருவரும் அநகாரிக தர்மபாலாவின் சகோதரர்கள்)  போன்றோர் அப்படி கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.

தந்தி அனுப்பி அழைப்பு
இராமநாதனின் இங்கிலாந்து பயணித்திற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் 1915 மே மாதம் நிகழ்ந்த கலவரத்தின் போது இராமநாதன் இந்தியாவில் – கொடைக்கானலிலுள்ள அவரது ஓய்வு இல்லத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு சொத்துக்கள் இருந்தன. அந்த சூழலில் அவரது சிங்கள நண்பர்கள் அவருக்கு நிலைமையை விளக்கி அவசரத் தந்தி அனுப்பி அவரை அவசரமாக கொழும்பு புறப்பட்டு வரும் படி அழைப்புவிடுத்தனர். இராமநாதன் அவசரமாக இலங்கை வந்து சேர்ந்தார். இலங்கையின் நிலைமை என்றும் கண்டிராத சூழலை விளங்கிக் கொண்டார். சீர்குலைந்த சிவில் வாழ்க்கை, இராணுவ சட்டதின் பேரால் எங்கும் அடக்குமுறை, அப்பாவிகள் கண்ட இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டமை, வெறிச்சோடிய பாதைகள், சீர்குலைந்திருந்த பாதைகள் என்பனவற்றைக் கண்டார். சிறையில் இருக்கும் தனது நண்பர்களைச் சென்று சந்தித்தார். சட்டப்படி மேற்கொள்ளக்கூடியவை அனைத்தும் இராணுவச் சட்டதத்தின்பேரால் மறுக்கப்பட்டது. எனவே அவர் நேரடியாக தேசாதிபதியையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், பொலிஸ் அதிகாரிகளையும் சந்தித்து தன்னால் முடிந்தவற்றை மேற்கொள்ள முயற்சித்தார். ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கே துப்பாக்கி முனையைக் காண்பித்து எச்சரிக்கை செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

வரவேற்புக் கொண்டாட்டம்
இந்த நிலையில் தான் இராமநாதனின் அந்தப் பயணம் நிகழ்ந்தது. நான்கு மாதங்களின் பின்னர் அவர் P. & 0. Malwa என்கிற கப்பலில் 17.பெப்ரவரி 1916 அன்று கொழும்பு வந்தடைந்தார். 21.02.1916 வெளியான “The Ceylonese” பத்திரிகையில் இப்படி வெளியானது.

“அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் பற்றி வரவேற்புக்காக அமைக்கப்பட்ட குழுவொன்றைச் சேர்ந்த ஒரு இளைஞர் அணி வந்து விளக்கமாக எமக்கு கூறினர்... “மால்வா” என்கிற அந்தக் கப்பல் 8 மணிக்கு வந்தடைவதாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அதிகாலை வெளிச்சம் தொடங்கும் போது பெருமளவு மக்கள் துறைமுகத்தைச் சூழ குவிந்துகொண்டிருந்தனர். நேரம் கடந்துகொண்டிருந்தது. ஆனால் கூட்டமோ மேலும் பெருகிக்கொண்டிருந்தது. ஏற்பாட்டை செய்தவர்கள் அனைவரும் வெள்ளை உடையணிந்து தயார் நிலையிலிருந்தனர். அவரை கொழும்பு ஜெட்டியிலிருந்து வீடு வரை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கான வண்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் வேளைக்கே வந்து விட்டது. மதியத்தைக் கிட்டிக் கொண்டிருந்த போது கப்பல் கரையை அடைந்தது. குழுமியிருந்தவர்களின் உணர்ச்சியும், அவாவும் மேலும்  அதிகரித்திருந்தது. அங்கிருந்த பொலிஸ் எவரையும் உள்ளே செல்லவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தது. பின்னர் வரவேற்புக் குழுவைச் சேர்ந்த சிலர் மட்டும் உள்ளே சென்றார்கள். ஏ.ஈ.குணசிங்க, அ.டபிள்யு.பி.ஜயதிலக. ஆர்.ஈ.டபிள்யு.பெரேரா, பீ.என்.ஜெயநெட்டி ஆகியோரே அவர்கள்.

மக்கள் வெள்ளம் மேலும் பெருகியது. உள்ளேயிருந்து வெளியே வந்த இராமநாதனின் உருவத்தை தூரத்தில் இருந்து கண்டவுடன் மக்கள் வெள்ளம் பெரும் ஆரவாரத்துடன் சத்தமெழுப்பி வாழ்த்தினர். “நீடூழி வாழ்க இலங்கையரே”, “எங்களை மரியாதைப் படுத்தியவருக்கு கனம் செய்கிறோம்”, “இளம் இலங்கையர் கழகம் முதிய நாயகனை வரவேற்கிறது” போன்ற சுலோகங்களைக் கொண்ட பதாகைகள் சூழ காணப்பட்டன. ஊர்வலம் தயாரானது. முதலில் கொடிகள் தாங்கிய பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு, அதன் பின்னர் தாள வாத்திய அணிகள், பின்னர் நடனக் கலைஞர்கள் அதன் பின்னர் இராமநாதனை அழைத்து வருவதற்கான தேர். அதன் பின்னால் மீண்டும் நடன கலைஞர்கள். பின்னர் மக்கள் ஊர்வலம்.

ஆனால் அங்கிருந்த உணர்ச்சியும், உற்சாகமும் மிகுந்த நிலையில் தேரின் குதிரைகளைக் கழற்றிவிட்டு ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த 30 பேர் அந்தத் தேரை தமது தோளில் மாறி மாறி சுமந்தனர். கொழும்பு கோட்டைப் பகுதியில் போக்குவரத்து பாதைகள் அனைத்தும் ஸ்தம்பித்தது. அவரை நோரிஸ் வீதி வழியாக, டெக்னிக்கல் கல்லூரி, ரயில்வே களஞ்சிய பகுதியில் ட்ராம் வண்டி பாதை வழியாக மருதானைச் சந்தியினூடு, டீன்ஸ் வீதி பின்னர் வார்ட் பிளேஸ் வீதிக்கு வந்து அங்கு அவரது “சுகாஸ்டன் இல்லம்” (Sukhastan) வந்தடைந்தபோது பிற்பகல் 4.30 மணியானது.

ஊர்வலத்தில் சிங்களத் தலைவர்களால் இராமநாதன் தூக்கிக் கொண்டாடப்பட்ட இந்த சந்தர்ப்பம் குறித்து அன்றைய பத்திரிகைகள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தன. இராமநாதனின் இல்லத்தை சூழ கூடியிருந்த மக்கள் மத்தியில் கூட்டமும் பேச்சும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இராமநாதனும் உணர்ச்சிமிகுந்த அந்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
ஏ.ஈ.குணசிங்க
ஏ.ஈ.குணசிங்காவின் பேச்சானது மிகவும் முக்கியமானது. அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் இருந்த அரசியல் சிக்கல்களைப் பற்றி விளக்கினார். முதலில் கப்பலுக்கு சென்ற லயனல் கொத்தலாவல (பிற் காலத்தில் சேர் ஜோன் கொத்தலாவல) மற்றும், ஏ.ஈ.குணசிங்க ஆகியோர் வரவேற்பு ஏற்பாடு பற்றி இராமநாதனிடம் விளக்கியபோது அந்த ஏற்பாட்டை இரத்து செய்யும்படி கூறினார். “அப்போதைய பதட்ட நிலையில் வெளியில் இருந்து சில திட்டமிட்டு கற்களை வீசி குழப்பினால் கூட நிலைமை மோசமாகிவிடும் என்று. ஊர்வலம் போவதற்கான மாற்று திட்ட வரைவையும் கூறினோம். கூட்டத்தை அமைதிகாக்கும் படி எர்பாட்டாளர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டு இராமநாதனை வெளியில் அழைத்து வந்தோம். அவர் ஆரம்பத்தில் இந்த கூட்டத்தை விரும்பியிருக்கவில்லை. ஆனால் வண்டிக்கு அருகில் வந்ததும் கண்டி நடனம் ஆடி அவரை வரவேற்கத் தொடங்கியதும் அவர் அதனை ஏற்று வண்டியில் வந்து அமர்ந்தார்.” என்றார் ஏ.ஈ.குணசிங்க.

இராமநாதனை சுமந்துவரும் காட்சிகொண்ட ஓவியத்தை இன்றும் பல இடங்களில் காணலாம். இராமநாதன் கட்டிய கொழும்பு - கொச்சிக்கடை பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் உள்ள மண்டபத்திலும் அந்த ஓவியம் புகைப்படமாக சுவரில் இன்றும் தொங்குகிறது.

ராமநாதன் ஏற்படுத்திய விளைவு
இங்கிலாந்தில் அவர் இராணுவச் சட்டத்தின் பேரால் நடந்த அநீதிகளையும், அப்பாவிகள் பலர் பாதிக்கப்பட்டதையும் விரிவான தரவுகளுடன் ஆங்கிலேய அதிகாரிகளிடம் விபரித்தார். தகுந்த நீதி விசாரணைக் கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். அதன் விளைவாக இலங்கையில் விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டது. பல சிங்களத் தலைவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். இலங்கைக்கான ஆங்கில தேசாதிபதி சேர் ரொபர்ட் சார்மர்சம், இராணுவத் தளபதியும் திருப்பி அழைக்கப்பட்டனர். அவருக்குப் பதிலாக புதிய ஆளுநர் அனுப்பட்டார். இலங்கையின் வரலாற்றில் குற்றச்சாட்டொன்றின் விளைவாக தேசாதிபதி ஒருவர் நீக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமும் இறுதி சந்தர்ப்பமும் அது தான்.

இராமநாதன் நாடு திரும்பிய பின்னர் இலங்கையில் நடந்தவற்றை தொகுத்து வெளியிட்ட நூல் தான் “இலங்கையில் 1915 கலவரமும் இராணுவச் சட்டமும்” ("Riots and Martial Laws of Ceylon, 1915") என்கிற நூல். இன்றும் அந்தக் கலவரம் பற்றி அறிபவர்களுக்கு மூலாதாரமாக விளங்கும் முக்கிய நூல் அது.

இந்த கலவரத்தின் காரணமாக இராமநாதன் உள்நாட்டில் மேற்கொண்ட நீதிகோரிய முயற்சிகள் ஆங்கிலேயர்களை ஆத்திரத்துக்குள்ளாக்கிக் கொண்டிருந்தது. உள்நாட்டில் நீதி சாத்தியமாகாத நிலையிலேயே அவர் இங்கிலாந்துக்கு நேரடியாக சென்று நீதி கோரி, அதில் வெற்றியும் பெற்று வந்தார். அவரது பயணம், அவர் மேற்கொண்ட முறைப்பாடுகள் என்பன முக்கிய அரசியல் விளைவுகளை ஏற்படுத்திய காரணிகள்.  அவர் எழுதிய நூல் ஆங்கிலேயர்களுக்கு என்றென்றும் வரலாற்றுக் களங்கத்தை பதிவு செய்த நூல். சிங்களத் தலைவர்களின் வெற்றிக்களிப்பு, தேசாதிபதியும், இராணுவத் தளபதியும் திருப்பியழைப்பு. புதிய தேசாதிபதி நியமிப்பு, அதன் பின்னர் மேற்கொண்ட நீதி விசாரணைகள் என்பன இராமநாதனின் வரலாற்றுப் பாத்திரத்துக்கு மிகப் பெரும் சான்றுகள். இலங்கையின் வரலாற்றில் இராமநாதனின் பாத்திரத்தை இருட்டடிப்பு செய்கின்ற இனவாதப் போக்கையும் மீறி வரலாற்றில் தவிர்க்க முடியாத நாயகனாக இலங்கையர்களுக்கு அவர் என்றும் இருக்கின்றார். சிங்களவர்களை மீட்ட இன்னொரு துட்டகைமுனு என்று அவரை இன்றும் புகழ்கின்றனர்.
குறிப்பு:
இந்த இதழில் இராமநாதன் பற்றி தொகுக்கப்பட்ட சில தகவல்கள் எம்.வைத்திலிங்கம் எழுதிய “சேர் பொன்னம்பலம்இ ராமநாதனின் வாழ்க்கை சரிதம்” (The Life of Sir Ponnambalam Ramanathan) என்கிற நூலில் இருந்து பெறப்பட்டவை. இராமநாதன் பற்றி வெளிவந்த நூல்களில் முக்கிய நூலாக கருதப்படுபவை எம்.வைத்திலிங்கம் அவர்களின் நூல்கள். இந்த நூல் இரண்டு பாகங்களாக (பாகம் 1 - 605 பக்கங்கள்), (பாகம்  2- 760 பக்கங்கள்) 1977 இல் வெளிவந்தது.
சேர் பொன் இராமநாதன் பற்றி அரச தொலைக்காட்சியில் சிங்களத்தில் வெளியான ஒரு ஆவணப்படம்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates