Headlines News :
முகப்பு » » சுயநலம் + பொறாமை + ஏமாற்று + வெட்டுக்குத்து = மலையக அரசியல் - தேசியன்

சுயநலம் + பொறாமை + ஏமாற்று + வெட்டுக்குத்து = மலையக அரசியல் - தேசியன்


இலங்கையில் தமிழர் அரசியல் வித்தியாசமானது என்றால் அதிலும் மலையக அரசியல் சுயநலம்,ஏமாற்று,பொறாமை, மோசடி,வயிற்றெரிச்சல்கள், கபடநாடகங்கள், போட்டுக்கொடுத்தல்,வெட்டுகுத்து இப்படி நிறைந்ததாக இருக்கின்றது. கடந்த வாரத்தில் இதை கண்டு கொள்ளக்கூடியதாக இருந்தது. நல்லாட்சி அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவை புதுப்பித்து கொண்டுள்ளது இ.தொ.கா.அது தொடர்பான உடன்படிக்கை ஒன்றிலும் அது கைச்சாத்திட்டுள்ளது. அதற்கு பிரதிபலனாக அமைச்சுப்பதவிகளை இ.தொ.கா கேட்டிருக்கலாம். அல்லது இவர்கள் கேட்காமலேயே தருகிறோம் என ஜனாதிபதியோ ரணிலோ கூறியிருக்கலாம். அதற்கிடையில் இ.தொ.காவுக்கு அமைச்சுப்பதவி வழங்கக்கூடாது என தொழிலாளர் தேசிய சங்கமும் கிடைத்து விட்டால் பாருங்களேன் நடப்பதை என இ.தொ.கா ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் அறிக்கை மேல் அறிக்கை விட்டு மோதலை ஆரம்பித்திருக்கின்றனர்.

இ.தொ.காவும் பதவிகளும்

இ.தொ.காவின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் ஆரம்பத்திலிருந்து அக்கட்சி எப்போதுமே எதிரணி வரிசையில் அமர்ந்ததில்லை, அமைச்சுப்பதவிகள் இல்லாது வலம் வந்ததில்லை, ஆனால் இறுதியாக இடம்பெற்ற தேர்தல்களில் அந்நிலைமை மாறியது. எப்படியாவது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைமையில் அமைச்சுப்பதவிகளுக்கு இ.தொ.கா முயற்சித்தாலும் பிரதமர் ரணில் உட்பட தமிழ் முற்போக்குக்கூட்டணியினர் அதற்கு எதிராகவே காய்களை நகர்த்தினர். இருப்பினும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பிசுபிசுத்தாலும் மகிந்தவின் செயற்பாடுகளை நிரந்தரமாக முடக்குவதற்கு ரணிலுக்கும் மைத்ரிக்கும் சில வேலைத்திட்டங்கள் தேவைப்பட்டன. அதன் ஒரு கட்டமே மகிந்தவின் எதிரணியில் இருப்போருக்கு வலை வீசுவது. அதில் கிட்டத்தட்ட 20 பேர் வரை சிக்கிக்கொண்டனர் ஏனெனில் பொது எதிரணியில் இருந்து கத்திக்கொண்டு இருப்பதில் பிரயோசனம் இல்லை என்பதை அதில் உள்ள பெரும்பான்மையோனோர் விளங்கிக்கொண்டனர். அது அரசியல்வாதிகளின் பண்பு ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருப்பதில்லை. அவர்களுக்கு பதவி,அதிகாரம்,செல்வாக்கு தேவை. 

இந்நிலையிலேயே இ.தொ.காவின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் மற்றும் முத்து சிவலிங்கம் ஆகியோர் அரசாங்கத்திற்கு நிரந்தரமாக ஆதரவு தர முடிவு எடுத்துள்ளனர். உண்மையில் இரண்டு பேர் என்றாலும் இவர்களின் ஆதரவு அரசாங்கத்திற்குத்தேவை. ஏனெனில் இ.தொ.காவின் பாரம்பரியம் அப்படியானது. அதற்கு நிரந்தர வாக்குகள் மலையகத்தில் இருக்கின்றன. 

தோல்வி கண்டவர்களே அமைச்சர்களாகும் போது இ.தொ.காவுக்கு கிடைத்தால் என்ன?

இந்நிலையில் இ.தொ.காவுக்கு அமைச்சுப்பதவிகள் கிடைப்பதை முற்றும் முழுதாக எதிர்க்கும் நடவடிக்கையில் தமிழ் முற்போக்குக்கூட்டணி இறங்கியிருந்தாலும் அதன் தலைவர் மனோ கணேசனோ அல்லது அதன் சிரேஷ்ட உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனோ பகிரங்கமாக கருத்துக்களைகூறவில்லை. மாறாக அமைச்சர் திகாம்பரம் இ.தொ.காவுக்கு பதவிகள் கொடுப்பது பற்றி ஜனாதிபதி கூட்டணியிடம் பேச்சு நடத்த வேண்டும் எனக்கூறியிருக்கிறார். இது தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாத பண்பு. பெரும்பான்மை இனத்தவர்கள் இப்படி சண்டையிட்டுக்கொள்வதில்லை ஏனென்றால் யார் குற்றினாலும் அரிசி கிடைத்தால் சரி என சமூகம் சார்பாக சிந்திப்பவர்கள் இவர்கள். தற்போதைய அரசாங்கத்தில் பாராளுமன்ற அரசியலில் தோல்வி கண்டவர்கள் கூட தேசிய பட்டியலின் மூலம் உள்ளீர்க்கப்பட்ட அமைச்சுப்ப தவிகளையும் பிரதி அமைச்சுப்பதவிளையும் வகித்து வருகின்றனர். உதாரணமாக எஸ்.பி.திசாநாயக்க, மகிந்த சமரசிங்க,மற்றும் சரத் பொன்சேக்கா ஆகியோரை கூறலாம். பாராளுமன்ற தேர்தல் காலத்தில் எஸ்.பியின் சர்ச்சைக்குரிய அநாகரிகமான கருத்துக்கள் விமர்சிக்கப்ப ட்டன, எனினும்தோல்வி கண்ட அவர் இப்போது அமைச்சர். 

அவரை விடவா ஆறுமுகன் நாகரிகமற்றவர்? ஆகவே இப்போ தைய தேவை சிறுபான்மை பிரதிநி திகளுக்கு அதிகாரமே. அதை இ.தொ.காவுக்கு கொடுப்பதில் தவறுகள் இல்லை.ஆனாலும் தாம் பதவிகள் குறித்து அரசாங்கத்திடம் எதுவுமே கதைக்க வில்லை என இ.தொ.கா தெரிவி க்கிறது.கடந்த காலங்களில் இ.தொ.கா சில தவறுகளை விட்டிருக்கலாம்.

ஆனால் தற்போதைய நாட்டின் சூழ்நிலையை கருத்திற் கொண்டு மலையக மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவை அதிகம் உள்ளதை யதார்த்தமாக அது உணர்ந்து ள்ளது என்று கூறலாம். இ.தொ.காவுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைத்தால் பயப்பட வேண்டியது எதிர்ப்பு அரசியல் செய்பவர்களே ஒழிய சமூகத்திற்கு சேவை செய்பவர்கள் அல்லர். ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் காலத்தில் தாம் விரும்பும் தலைவருக்கு ஆதரவு அளித்தல் என்பது அரசியலில் சகஜமான ஒன்று ஆனால் வெற்றிக்கு பக்கபலமாக நாமே இருந்தோம் என்றும் இ.தொ.காவுக்கு மைச்சுப்பதவிகளை வழங்கக்கூடாது என்றும் என்றும் தொழிலாளர் தேசிய சங்கம் கூறுவதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை ஏனெனில் அவர்களும் மகிந்த பக்கம் இருந்து விட்டு தான் மைத்ரி ரணிலுக்கு ஆதரவு அளிக்க வந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி - தேசியன் (சூரியகாந்தி 22/06/2016)
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates