இயற்கை எழிலிற்கும் வளங்களுக்கும் பெயர்போன இலங்கை திருநாடு அண்மித்த சில வருடங்களாக இயற்கையின் சீற்றத்தால் பாரிய பேரழிவுகளை சந்தித்து வருகின்றது. நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரலையுடன் கூடிய அனர்த்தங்களின் பின்னரான காலநிலை மாற்றம் முழு இலங்கையினது இயற்கை ஒரு சீர்மையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலநிலை மாற்றத்தின் காரணமாக பல மாகாணங்களின் சீதோஷ்ண நிலையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலைமைகள் காரணமாக நாட்டு மக்கள் கடந்த சில வருடங்களாக பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து உயிரிழப்புக்களையும் உடைமை இழப்புக்களையும் சந்தித்து வருகின்றனர்.
இம்முறை ஏற்பட்ட மழையுடன் கூடிய அசாதாரண காலநிலை முழு நாட்டையும் பதம் பார்த்துள்ளதென்றே கூற வேண்டும். கொழும்பு தொடங்கி அரநாயக்க மற்றும் கேகாலை களுப்பானை தோட்டம் வரை மக்கள் உயிர், உடைமை இழப்புக்களை சந்தித்து இன்றும் அகதி முகாம்களில் இருந்து கொண்டு நிவாரணம் பெற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட மீரியபெத்தை தோட்ட மண் சரிவு முழு உலகத்தையும் சோகத்திற்கு உள்ளாக்கி இருந்த வடு காய்வதற்குள் மீண்டும் அரநாயக்க மற்றும் கேகாலை களுப்பானை தோட்டங்களில் ஏற்பட்ட பேரழிவுகள் முழு நாட்டையும் சோகத்திற்குள் உள்ளாக்கி இருப்பதுடன் மக்கள் மனதில் தங்களது வாழ்விடங்களின் பாதுகாப்பு தொடர்பான ஒருவித அச்ச நிலைமையையும் தோற்றுவித்துள்ளன.
நாடு அடிக்கடி இயற்கை பேரழிவுகளை சந்தித்து வருவதால் அவற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மாவட்டங்கள் தோறும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் அதனையும் தாண்டி மழை, காற்று, வெள்ளம், நிலச்சரிவு என பல்வேறு வடிவங்களில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலை தொடருமானால் மக்கள் தொடர்ந்தும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலையே ஏற்படும்.
கடந்த மாதத்தில் பெய்த அடை மழை காரணமாக அதிகமான மாவட்டங்களுக்கு அனர்த்த அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடுக்கப்பட்டு வந்தது.
அதில் மலையக மக்கள் அதிகமாக வாழ்கின்ற நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை உட்பட ஏனைய மாவட்டங்களும் உள்ளடங்கி இருந்தன.
மலையகம் அடிக்கடி நிலச்சரிவுகளை சந்திப்பதற்கு காரணம் அதன் புவியியல் அமைப்பு மட்டுமின்றி அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள குடியிருப்பு முறைகளும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மலையகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தொடர் லயன் குடியிருப்புக்களின் ப.ைழமை அமைவிடம் அவற்றிற்கு அண்டியதாக அமைக்கப்பட்டுள்ள புதிய வீடுகள் அல்லது சிறு கட்டிடங்கள் என்பனவும் நிலம் தாழிறங்குவதற்கு காரணமாகி உள்ளன.
பதுளை மாவட்டத்தில் கடந்த மாதத்தில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையின் போது சுமார் 2500 இற்கும் மேலான இடங்களில் அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும் அதிர்ஷ்ட வசமாக பதுளை மாவட்டம் இம்முறை பாரிய அனர்த்தங்கள் எதனையும் சந்திக்கவில்லை. ஆனால் கடந்த காலங்களில் அனர்த்தத்தை சந்திக்காத பிரதேசங்கள் இம்முறை பாரிய அழிவுகளை சந்தித்துள்ளன. இதனால் அரசாங்கத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
தொடரும் இயற்கை அனர்த்தங்களை கட்டுப்படுத்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு செயற்றிட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு மாவட்ட அனர்த்த நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவித்திருந்தார்.
முறையற்ற கட்டட நிர்மாணங்களே பாரிய அனர்த்தங்களுக்கு காரணமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் குற்றம் சுமத்தியிருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள கட்டட நிர்மாணங்கள் தொடர்பாக முழுமையான ஆய்வறிக்கைகள் தேவை என்ற விடயம் கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.
மலையகத்தில் தொடர் லயன் குடியிருப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் தனி வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும், மலையகத்தில் ஏற்படுத்தப்பட்டு வரும் தனி வீட்டுத்திட்டத்தை எதிர்பார்க்கின்ற வேகத்தில் விரிவுபடுத்துவதென்பது சவாலான விடயமாகும். கடந்த வருடங்களில் நிலம் தாழிறங்கும் அபாயம் நில வெடிப்பு மற்றும் சிறியளவிலான மண் சரிவு அனர்த்தம் என்பவற்றிற்கு முகங்கொடுத்த மக்கள் அனர்த்த காலங்களில் அகதிகளாக பாடசாலைகள் வணக்க ஸ்தலங்கள் என்பவற்றில் தஞ்சமடைந்திருந்தனர்.
அனர்த்த நிலைமை குறைவடைந்ததும் அவர்களில் அனேகமானோர் தமது பழைய குடியிருப்புக்களுக்கே திரும்பி விட்டனர். அவர்களுக்கான மாற்று குடியிருப்புகள் வழங்கப்படும் என உறுதி மொழி வழங்கப்பட்ட போதிலும் அதிகமான இடங்களில் உள்ள மக்கள் அனர்த்த அச்சத்துடன் தமது பழைய குடியிருப்புக்களிலே வசித்து வருகின்றனர். பதுளை மாவட்டத்தில் இவ்வாறான நிலைமை ஹாலி எல ரொசட் தோட்டம், கவரகலை தோட்டம், எல்வட்டன தோட்டம், மீதும்பிட்டிய சீ பிரிவு, கோலண்டஸ் உட்பட பல தோட்டங்களில் காணப்படுகின்றது. இப்பகுதியில் இயங்கி வரும் பாடசாலைகளும் இவ்வாறான அனர்த்தத்தை சந்தித்து வருகின்றன.
நிலத்திற்கு கீழான பகுதியில் அடிக்கடி கட்டமைப்பு மாற்றம் ஏற்படுவதால் தாம் எதிர்பார்க்காத பகுதிகளிலும் நிலம் தாழிறங்குவதாக புவிச்சரிதவியல் ஆய்வு குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தமது குடியிருப்பு பிரதேசம் எந்தளவிற்கு பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...