Headlines News :

காணொளி

2017 இலக்கிய சந்திப்பு மலையகத்தில்

சுவடி

'பெரியாங்கங்காணி முறையும் அவட்சோர்சிங் முறையும்' - மல்லியப்பு சந்தி திலகர்

தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 19)


தேயிலைத் தொழில் துறைக்குள் 'அவுட்குரோவர்' முறையின் உள்வருகை  தொடர்பில் அவதானம் செலுத்தும் தேவையும் காலமும் எழுந்திருப்பதன் காரணமே, தற்போதைய தோட்ட பிராந்திய கம்பனிகளின் ஒரே மாற்றுத்தெரிவாக இந்த 'அவுட்குரோவர்' முறை இருப்பதனாலாகும். பெருந்தோட்டக் கைத்தொழில் ஆரம்பிக்கப்பட்ட மிக ஆரம்ப காலத்தில் 'பெரியாங்கங்காணிகள்' முறையினூடாக தோட்டங்களை நடாத்தி வந்தது ஒரு வகை நிர்வாக முறை. குறித்த ஒரு பெரியாங்கங்காணியின் கீழ் ஒரு 'தொகுதி' தொழிலாளர்கள் இருப்பார்கள். அது அவர்களடைய 'கேங்' என சொல்லப்படும். தேயிலைத் தோட்டத்தின் குறித்த வேலை ஒவ்வொரு பெரியாங்கங்காணிகளுக்கும் பிரிக்கப்படும். ஓவ்வொரு தொழிலாளி பற்றிய தொழில் விபரங்களையும் தோட்ட நிர்வாகம் பராமரிக்காது அவர்களுக்கான கூலியை மொத்தமாக பெரியாங்கங்காணிகளிடத்தில் தோட்ட நிர்வாகம் வழங்கிவிடும். தொழிலாளிகளின் வருகை வேலைக்கு ஏற்ப அதனை பகிர்ந்தளிப்பது பெரியாங்கங்காணியின் பொறுப்பு. அந்த ஒவ்வொரு தொழிலாளியின் உழைப்பில் இருந்தும் பெரியாங்கங்காணிக்கு கமிஷன். அதனால் அவர்தான் தொழிலாளிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். 

இந்த பெரியாங்காணிகளின் மூலமான தோட்ட நிர்வாகத்தை இங்கு நினைவுபடுத்திச் செல்வதற்கான காரணமே அதுவும் ஒரு வகையான 'அவுட்சோர்சிங்' முறைதான் என்பதை விளக்குவதற்காகவே. அதாவது தோட்ட முதலாளி தனது வேலையின் பகுதிகளை ஒவ்வொரு ஏஜண்டுகளுக்கு (பெரியாங்கங்காணிகளுக்கு) பிரித்துக்கொடுத்துவிடுவார். தொழில் உரிமைகள் பற்றிய விடயங்களுக்கெல்லாம் முதலாளி பொறுப்பு கிடையாது. குறித்த ஏஜண்ட் அந்த தொழிலாளிகளை வைத்து வேலை வாங்கி முதலாளியின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கு மொத்தமாக முதலாளியினால் ஒரு தொகை வழங்கப்படும். குறித்த வேலைக்கான ஒப்பந்தத் தொகையில் தனது கமிஷனில் கழித்துக்கொண்டு தொழிலாளிகளுக்கு ஏஜண்ட் (பெரியாங்கங்காணி)  பகிர்ந்தளிப்பார். இந்த முறைமையின் காரணமாகவே பெரியாங்கங்காணிகள் தனவந்தவர்களாகவும், பின்னாளில் சிறு தோட்ட உடமையாளர்களாகவும், மலையக நகரங்களில் வட்டிக்கடைகாரர்களாகவும் வரலாயினர். அதேநேரம் தொழிலாளர்களை அடக்கி ஆளுபவர்களாகவும் பெரியாங்கங்காணிகள் திகழ்ந்தார்கள். ஒரு தோட்டத்தில் அவர்களது வீடு மாத்திரம் தனியானதாக சற்று வசதியானதாக அமைந்து காணப்படும். இன்றும் தோட்டங்களில் பெரியாங்காணிகள் வாழ்ந்த வீடுகள் அமைந்திருப்பதனை அவவதானிக்கலாம். 

இந்த பெரிய கங்காணிகள் பற்றி கவிஞர் ஸி.வி. வேலுப்பிள்ளை 'நாடற்றவர் கதை' எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

'தோட்டத் துரைக்கும் தோட்டத் தொழிலாளிக்கும் எவ்விதத்தொடர்புமில்லை. தொழிலாளி பெரிய கங்காணியின் சொத்து. தோட்டங்களில் ஜமீன் போல் அல்லது ர (ட்)ட மாத்தியா போல் சுகபோக வாழ்க்கை நடாத்தினார்கள். பட்டிணங்களில் வட்டிக்கடை, தாய் நாட்டில் (இந்தியாவில் ) நிலம், வீடு சிறுதோட்டங்களை வாங்கினார்கள். 2000 பெரிய கங்காணிகள்  இருந்தார்கள். இவர்கள் ஜமீன்தார்கள் போல தோட்டப் பெயர்களோடு சேர்த்து அழைக்கப்பட்டார்கள். அதாவது, 'தெமோதர' ராமநாதன், 'மஸ்கெலியா' செட்டியப்பன், 'பூச்சிக்கொடை' கருப்பையா, 'பாமஸ்டன்' சண்முகம், 'திஸ்பனை' சுப்பையாப்பிள்ளை, 'தலவாக்கலை' பாண்டியன், 'ஊவாக்கலை' தைலாம்பிள்ளை, 'டன்பார்' ரெங்கசாமி, 'மடகொம்பரை' குமரன், 'தெல்தொட்டை' சங்கரன், 'மொய்காகொலை' முனியாண்டி, 'நாப்பனை' பொக்குச்செல்லன் ஆகியோர் முக்கியஸ்தர்கள். இவர்களுடைய பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் சேர்த்து ஆங்கிலம் படித்தார்கள். படிப்பை முடித்துக் கொண்டபின்  தங்கள்  தகப்பன்களுக்கு உதவியாய் தோட்டத்தில் கணக்கப்பிள்ளை, கண்டக்டர், டீமேக்கர், கிளார்க் வேலை செய்தனர். (நாடற்றவர் கதை - பக்கம் 43)

இந்த பெரியாங்கங்காணிகளின் ராச்சியத்தை 'குடைநிழல்' எனும் நாவலின் ஒரு அங்கமாக தெளிவத்தை ஜோசப் அழகாக விளக்கியிருப்பார். இந்த அத்தியாயத்தின் முக்கியத்துவம் கருதி 'நந்தலாலா' கலை இலக்கிய இதழ் 'பன்னிரண்டு பக்கட் கோட்டு' எனும் தலைப்பில் ஒரு சிறுகதையாக அதனைப் பிரசுரித்திருந்தது. 

இன்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பில் இந்த முறை கையாளப்படுகின்றது. எழுத்தோட்டத்தின்போது 'துணை நடிகர்கள் ஏஜண்ட்' என்று ஒருவரின் பெயரினைப் போடுவார்கள். திரைப்படத்தில் பொதுமக்களாக, ஒரு காட்சியில் அங்கும் இங்கும் நடந்து திரிபவர்களாக, சந்தையில் கூட்டமாக வருபவர்கள் எல்லாம் கூட நடிகர்கள்தான். நாம் அவர்களை நடிகர்களாக கவனத்தில் கொள்வதில்லை. அந்த நடிகர்களுக்கும் தயாரிப் பாளர்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. அந்த துணை நடிகர்களுக்கு ஒரு ஏஜண்ட். அவர்தான் இவர்களுக்கு பொறுப்பு. அந்த ஏஜண்டுக்கு தயாரிப்பாளர் ஒரு தொகையை கொடுத்துவிடுவார். துணை இயக்குனர்கள் இந்த துணை நடிகர்கள் என்ன செய்ய வேண்டும் என சொல்லிக்கொடுப்பார்கள். பிரதான காட்சியில் பிரதான நடிகர்கள் வசனம் எல்லாம் பேசி நடித்துக்கொண்டிருக்கும்போது இடையிலே நடந்துசெல்ல வேண்டும். இந்த நடிப்புக்கான சம்பளத்தை துணை நடிகர்களின் ஏஜண்ட்தான் அவருக்கு கொடுப்பார். இப்படி நூறுரூபா, இருநூறு ரூபாவுக்கு வேலை செய்யும் ஏகப்பட்ட துணை நடிகர்கள் இன்றும் தமிழ் திரைப்பட உலகில் இருக்கிறார்கள். தயாரிப்பாளரை பொறுத்தவரையில் இவர்களைப் பயன்படுத்தும் இந்த முறை 'அவுட்சோர்ஸிங்'. 

இதுவே இந்தியாவில் பெருமளவில்; (இலங்கையில்; சிறு அளவில்) IT கம்பனிகளில் இடம்பெறுகின்றது.  பல்தேசிய கம்பனிகள் தங்களது வேலையின் பகுதிகளை வெவ்வேறு நாடுகளில் தங்களது ஏஜண்ட்கள் மூலமாக செய்விக்கின்றார்கள். அந்த வெவ்வேறு நாடுகளில் உள்ள ஏஜண்டுகளின் பெயர் 'அவுட்சோர்ஸ்'. (BPO- Business Process Outsourcing)அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் பல்தேசிய கம்பனி அங்கே பகலாக இருக்கும் தருணத்தில் இந்தியாவில் இரவாக இருக்கும் போதுகூட ஊழயர்களிடம் வேலை வாங்க முடிகின்றது. குறிப்பிட்ட நேரத்திற்குள் கணிணி ஊடாக அந்த வேலைகளை முடித்து அவர்களுக்கு இணைய வழியாக அனுப்பிக்கொண்டிருக்க வேண்டும். 

ஒப்பந்தத்தில் குறிப்பிட்டவாறு உரிய நேரத்தில் குறிப்பிட்ட வேலையை செய்து அனுப்பாவிடின் உரிய பணத்தினை பல்தேசிய கம்பனி செலுத்தாது. எனவே 'அவுட்சோர்ஸ' கம்பனிகளாக இருக்கும் ஏஜண்டுகள்  தொழில்நுட்ப துறையில்  ஊழியர்களை பிழிந்தெடுப்பார்கள். இதனால், இந்தத் துறையில் வேலை செய்வோர் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானவர்களாக உள்ளார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன. வார இறுதியில் இந்த மன உளைச்சலுக்கு நிவாரணமாக விருந்துகள் ஆட்டம்பாட்டங்கள் என ஒரு ஏற்பாடு. இது இந்திய சூழலில் ஒரு கலாசார மாற்றத்திற்கு வித்திட்டுள்ளதாக சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் இருந்து கொண்டு டொலர் முறையில் கணக்கிட்டு பெறும் சம்பளத்தொகை இந்திய மதிப்பில் அதிகம் என்பதால் அதிகம் கவர்ச்சி நிறைந்த ஒரு தொழிலாகவும் இத்தகைய தொழிலுக்காக அந்த IT தொழில்நுட்பதுறைக் கல்விக்கான கேள்வியும் இந்தியாவில் அதிகம் நிலவுகின்றது. அதேநேரம் ஒரே இரவில் இழுத்து மூடப்படும் அவுட்சோர்ஸிங் கம்பனிகளின் செயற்பாடுகளால் திடீரென வேலை இழந்து தவிக்கும் நிலையும் உழியர்களுக்கு எற்படுகின்றது.

கொழும்பு போன்ற பெருநகரங்களில் குப்பைசேகரிப்பதை கூட இப்போது அவுட்சோர்ஸிங் முறைக்கு மாற்றிவிட்டார்கள். உதாரணமாக கொழும்பு மாநகர சபை முன்புபோல் நேரடியாக தொழிலாளர்களை பராமரித்து நேரடியாக வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணியினைச் செய்வதில்லை. 

தனியார் கம்பனிகளுக்கு இந்த பணியை ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வருகின்றன. 'அபான்ஸ்' போன்ற கம்பனிகள் 'அவுட்சோர்ஸிங்' கம்பனிகளாக இந்த குப்பை சேகரிக்கும் தொழிலை தமதாக்கிக்கொண்டுள்ளன. கொழும்பு மாநகரசபையின் கீழ் இருந்த தொழில் உரிமைகளை குறித்த குப்பைசேகரிக்கும் ஊழியர்கள் இழந்துவிடுகிறார்கள் என்பதுதான் இதில் முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டியது.   

இத்தகைய தொழில் முறை பின்னணிகளுடன் கூடிய முறைதான் தற்போது தேயிலை, றப்பர் பெருந்தோட்டங்களை நோக்கி முன்வைக்கப்படும் 'அவுட்குரோவர்' முறை. பெருந்தோட்ட நிர்வாகம் உள்நாட்டு தொழில் சட்டதிட்டங்களுக்கு அமைவாக சம்பள நிர்ணய சபையினால் சம்பளம் தீர்மானிக்கப்பட்ட 1974-1992 காலப்பகுதிகளில் கூட 'கொத்தராப்பு' என மக்கள் மொழியில் அழைக்கப்பட்ட ஒப்பந்தமுறை (அவுட்சோர்ஸிங்) முறை பெருந்தோட்டங்களில் இருந்து வந்துள்ளது. அவை பொதுவான அல்லது வழமையான தொழிலுக்கு அப்பாற்பட்;டதான காடழித்தல், மரம்வெட்டுதல், தேயிலை மரங்களைப்பிடுங்குதல் (புதிய நடுகைகளுக்காக) போன்ற விஷேட தேவைகளுக்காக அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனை அப்போது சேவையில் இருக்கும் கங்காணிகளின் ஊடாக (இவர்கள் பெரியாங்கங்காணிகள் இல்லை) 'அவுட்சோர்ஸ்' முறையில் அதாவது 'கொந்தராப்பு' முறையில் செய்து வந்தார்கள்.

இவ்வாறு இந்த அவுட்சோர்ஸிங் முறை காலத்திற்கு காலம் அவ்வப்போது பெருந்தோட்;டங்களில் பகுதியளவில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. அன்று 'கொந்தராப்பு'போல் இன்று அதற்கு பல்வேறு பெயர்கள் கொண்டு அறிமுகங்கள் இடம் பெற்று வருகின்றன. அவுட்சோர்ஸ் (Outsource)  முறை, அவுட்குரோவர் (Out Grower) முறை, வருமானப் பங்கீட்டு முறை Kiw (Revenue Share Model) என வெவ்வேறு பெயர்களில் இந்த புதிய முறை பற்றிய கதையாடல்கள் இடம்பெறுகின்றன. ஆனாலும், மாத்தளை எல்கடுவை தோட்டத் தொழிலாளி ஒருவர் வெகுலாவகமாக 'அவுட்குராவர்' முறை எனும் சொல்லை உச்சரிப்பதை அவதானிக்க முடிந்தது. இதில் இருந்து 2005 முதல் வெளித்தெரியாத வகையில் 'அவுட்குராவர்' முறை நடைமறையில் இருக்கும் நாவலப்பிட்டி – நாகஸ்தன்னை, மாத்தளை எல்கடுவை, இரத்தினபுரி- ஹந்தான போன்ற தோட்டங்களில் 'அவுட்குராவர்' எனும் சொல்லாடலுக்கு மக்கள் பழக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. அடுத்துவரும் அத்தியாயங்களில் 'அவுட்குரோவர்' எனும் பெயரிலேயே அதன் உள்ளார்ந்த விடயங்களைப் பார்க்கலாம். 

(உருகும்)

நன்றி - சூரியகாந்தி

மலையகத்துக்கு "தமிழ்நாட்டு" ஆசிரியர்கள் எதற்கு? - ஜீவா சதாசிவம்


மலையக பெருந்தோட்டப்பாடசாலைகளில் விஞ்ஞான, கணித பிரிவுகளுக்கு கற்பித்தலுக் கென்று இந்தியாவின்,  தமிழ்நாட்டில்  இருந்து நூறு ஆசிரியர்களைக் கொண்டுவர தீர்மானித்துள்ள விடயம்   பெரும் பிரச்சினையாக பேசப்படுகின்றது. சகல மொழி ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகளும் அறிக்கைகளும் வெளிவரத் தவறவில்லை. இது பற்றி பலமுனை விவாதங்களை இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களில் அவதானிக்கலாம்.  தலைநகரை மாத்திரம் பிரதானமாகக் கொண்டிருந்த 'பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்' தற்போது ஏனைய பிரதேசங்களுக்கும் பரவிவிட்டது. 

இந்த விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டு ஆசிரியர்களின் தேவை ஏன் திடீரென ஏற்பட்டது என்பது பற்றிய கேள்வி எழுகிறது. அதனையே இவ்வார 'அலசல்' அலசுகிறது. இந்த விடயத்துக்கு முன்பதாக மலையகக் கல்வியின் பின்புலம் பற்றி  சிறு அலசல் பார்வை ஒன்றை செலுத்த வேண்டியுள்ளது. 

 கூலிகளாக வந்தவர்களுக்கு படிப்பு எதற்கு?' என்ற நிலையில் இருந்து பெற்றோரின் உழைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக அவர்களின் பிள்ளைகளை பராமரிக்கும் ஒரு நிலையமாக உருவாக்கப்பட்ட' பிள்ளைக்காம்பராக்கள்' (Creche) எனும் கொட்டகைகள் தான் பரிணாம வளர்ச்சிபெற்று இன்று மலையகத் தோட்டப்பாடசாலைகள் (Estate Schools) எனும் பெயருடன் இயங்கிவருகின்றன. மறுபுறத்தில் 'பிள்ளைக்காம்பரா'கலாசாரத்தில் இருந்தும் இன்னும் முழுமையாக விடுதலை  பெற்றதாகவும் இல்லை.

 1948 இல் சுதந்திரத்தின் தொடர்ச்சியாகவே இலங்கையில் இலவசக்கல்வி எனும் கோட்பாடு சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரவினால்  முன்வைக்கப்பட்டபோதும்  1972 ஆம் ஆண்டு காணி சுவீகரிப்புச்சட்டத்தின் பின்னர் தோட்டங்களை அரசு பொறுப்பேற்றது. இதன்  பின்னர்தான் படிப்படியாக தோட்டங்களுக்குள் இயங்கிய தோட்டப் பாடசாலைகள் அரசாங்க பாடசாலைகளாக மாற்றம் பெற்றன. எனவேதான் இலவசக்கல்வி–சமத்துவக்கல்வியாக இருக்கவில்லை என்கிற கருத்தை வலியுறுத்த வேண்டியிருக்கின்றது

எது எவ்வாறாயினும் இன்றைய இருநூற்றாண்டு கால மலையக வரலாற்றில் நூற்றாண்டு கடந்த வரலாற்றைக்கொண்ட பல பாடசாலைகளை மலையகத்தில் நாம் காணலாம். எனவே மலையக கல்வி, வரலாறு என்பது மலையக மக்களின் இன்னல்கள் நிறைந்த வாழக்கை வரலாற்றுடன் ஒன்றித்தே பயணித்துள்ளது. 

மலையகம் கல்வியில் பின்தங்கிய சமூகமோ, கல்விக்காக பின்நிற்கும் சமூகமோ இல்லை. ஆனால், அந்த தொழில்துறையில் அந்த நிர்வாக முறையில் உள்ள கட்டமைப்பு அவர்களுக்கான கல்விவாய்ப்பை குறைத்திருக்கிறது என்பதே உண்மையாகும். இந்தக் கல்வி வரலாற்று பின்புலத்துடன்தான் இன்று இலங்கையின் சட்டத்துறையில் நீதிபதிகளாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், நிர்வாகத்துறையில் ஆணையாளர் களாகவும், அதிகாரிகளாகவும்  ஊடகத்துறையில் பரவலாக பணியாற்றுபவர்களாகவும் பணி புரியும் ஆற்றலை மலையகத்துக்கு வழங்கியிருக்கிறது.

தோட்டப்பாடசாலைகள் கொண்ட ஒரு பிரிவு தனிப்பிரிவாக கல்வி அமைச்சில் ஒரு அலகாக (UNIT) தொழிற்படுகின்றது. இன்றைய நிலையில் இலங்கைக் கல்வி அமைச்சின் கீழ், கல்வித் திணைக்களத்தின் கீழ தோட்டப்பாடசாலைகளை விருத்திசெய்யும் நோக்கோடு அந்த அலகு செயற்படுவது நல்ல வாய்ப்பு. எனினும் அதன் மறுவடிவமாக தோட்டப்பாடசாலைகள் தேசிய கல்வித்துறை நீரோட்டத்திற்குள் இன்னும் முழுமையாக உள்வாங்கப்படவில்லை என்பதற்கான குறியீடும் அதுவாகவே இருக்கின்றது.. 

மொத்தமாக மலையகத்தில் 843 பெருந்தோட்டப்பாடசாலைகள் இருக்கின்றன. இதில்  1 AB தரப் பாடசாலையாக 22 பாடசாலைகள் இருக்கின்றன. தரம் 1 முதல் உயர்தரத்தில் கலை,வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய உயர்தரப் பிரிவுகளை உள்ளக்கிய பாடசாலைகளைக் கொண்டவையே தரம் 1AB பாடசாலையாகக் கணிக்கப்படுகின்றது. 

1C தரத்திற்குட்பட்ட  121 பாடசாலைகள் இருக்கின்றன. முதலாம் வகுப்பு முதல் கலை, வர்த்தக உயர்தரப்பிரிவுகளைக் கொண்ட பாடசாலையாக 1C தர பாடசாலை கணிக்கப்படுகின்றது. 

தரம் 2 பாடசாலைகள் மத்திய,  தென், வடமேல் ஆகிய மாகாணங்கள் களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக    252 பாடசாலைகள் இருக்கின்றன.    

இதில் மூன்றாந்தரப் பாடசாலைகளாக 448 பாடசாலைகள் இருக்கின்றது. இது கல்வி  அமைச்சின் தகவல். 
இவ்வாறு பாடசாலைகள் தரப்படுத்தப்பட்டிருக்கின்றபோதும்  அந்த தந்த பாடசாலைகளுக்கான ஆசிரியர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. 

இந்தப்பற்றாக்குறை  உடனடியாக   ஏற்பட்டது அல்ல. ஆரம்ப காலங்களில் மலையகப்பகுதிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களின் தேவை  வடக்கு, கிழக்கு  ஆசிரியர்கள் மூலம் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டது. அவர்கள் மூலம் பல பட்டதாரிகள் மலையகத்தில் உருவானார்கள். ஆனால்,  இப்போது குறிப்பிட்ட துறைகளுக்கு வடக்கு,  கிழக்கிலேயே பட்டதாரி ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

வடக்கு,  கிழக்கு பகுதியில் இருந்து விஞ்ஞான,  கணித பாடத் துறைகளுக்கு ஆசிரியர்களை  எடுப்பதற்கு தயாராக இருக்கின்றபோதும்   வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்ற போதும் தேவையான விஞ்ஞான பட்டதாரிகள் இல்லை.    

மலையகத்தில் நுவரெலியா தவிர்ந்த ஏனைய பாடசாலைகளுக்கு அதாவது விஞ்ஞான உயர்தர பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் உடனடி தேவை இருக்கின்றது. அதற்குரிய தற்காலிக தெரிவு இந்தியா என்பதற்கு பிரதான காரணம் போதனா மொழி தமிழில் இருக்கின்றமையே . இது அமைச்சரின் கூற்று.

அப்படியே அதனை ஏற்றுக்கொண்டாலும் அது   வெறுமனே தற்காலிக தீர்வாக இருக்கலாமே தவிர இது நிரந்தர தீர்வாக அமையாதிருந்தால் சிறப்பு. அதற்கான இடத்தை வழங்காது எதிர்வரும் காலங்களில் உள்நாட்டிலேயே  அதிகளவு விஞ்ஞான ,

கணித பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலை தெரிவுசெய்வதற்கு உட்படுத்தும் போது இவ்வாறானதொரு இறக்குமதிகளை தவிர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

மலையகத்தைப்பொறுத்தவரையில் கடந்த பத்து வருட காலத்தை நோக்குகையில்   கணித,  விஞ்ஞானத் துறையில்  அத்துறையைச் சார்ந்த பெருமளவானோர் உருவாகியிருக்கின்றார்கள். அட்டன் நகரில் நீண்டகாலமாக பல பொறியியல் துறை மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர் ஜீவராஜன் உட்பட பலரைக் குறிப்பிடலாம். இவர் கிழக்கை சேர்ந்தவராக இருந்தாலும் இவரது ஆசிரியர் சேவையின்  மூலம் சமூகத்தில் பல பொறியியலாளர்கள் உருவா கியிருக்கின்றார்கள். 

இந்த பத்து வருட காலப்பகுதிக்குள் எத்தனையோ விஞ்ஞான, கணித பட்டதாரிகளை உருவாக்கியிருக்கலாம். உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளைத் தெரிவு செய்யும் மாணவர்களின் மனநிலைபற்றி இங்கு பேசவேண்டியிருக்கிறது. கணிதத்துறையை தெரிவு செய்தவர் பொறியியலாளர் ஆவது என்றும் உயிரியல் விஞ்ஞான துறையை தெரிவு செயதவர் வைத்தியராவது என்ற இலக்குடன் மாத்திரமே களத்தில் இறங்குகின்றனர்.

உதாரணமாக  40 பேர் கல்வி கற்கும் ஒரு வகுப்பில் 12 பேர் பொறியியலாளராக/ மருத்துவராக உயர்கல்விக்கு  தெரிவானார்கள் என்று வைத்துக்கொள்வோம். குறைந்தது ஆறு பேராவது விஞ்ஞான பிரிவுக்கு (BSC) தெரிவாகாமலா இருந்திருப்பார்கள்? அப்படிப் பார்த்தால் குறைந்தது அறுபது விஞ்ஞான பட்டதாரிகள் இப்போது மலையகத்தில் இருந்தாக வேண்டும். அவர்கள் எங்கே என்பதுதான் கேள்வி.

பொறியியல் அல்லது மருத்துவம் கிடைக்காதபோது அதற்கு கீழான BSC போன்ற பட்டப்படிப்பை நம்மவர்கள் தெரிவுசெய்வதில்லை. அப்படியே தெரிவு செய்தாலும் இவ்வாறு படித்து விட்டுச் செல்பவர்களின் தொழிற்தெரிவில்  ஆசிரியர் தொழிலை தெரிவு செய்பவர்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே இருக்கின்றது. மலையகம் சார்ந்தவர்கள் இத்துறைகளில்  கற்றுத்தேர்ச்சி பெற்றாலும் அவர்களின் தொழில் தெரிவு ஆசிரியர் தொழிலாக அமைவதில்லை. 

எனவே சமூகம் என்ற வகையில் கணித, விஞ்ஞான பாட ஆசிரியர்களின் விடயத்தை ஒரு சமூகமாக எவ்வாறு இந்த பணியில் பங்கேற்க முடியும் என்பதிலேயே தீர்வு தங்கியுள்ளது. 

இப்போது கூட மத்திய மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டவர்களை அழைத்து ஒரு கட்சிக் காரியாலயத்தில் தங்களது கட்சிதான் இந்த தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தது என வகுப்பு எடுக்கப்பட்டதாம். இதுபோல தான் இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை இறக்குமதி செய்து மலையகக் கல்வி வளர்ச்சிக்கு உதவியதாக (இது நடைமுறைக்கு வந்தால்)  கல்வி இராஜாங்க அமைச்சரும் மார்தட்டிக்கொள்ளலாம். 

இவை போன்ற செயற்பாடுகள் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டவை.  இப்போதைய கல்வி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பும் ஏற்பாடும் தற்காலிகமானதே தவிர அதுவே நிரந்தரமாகிவிட முடியாது. மலையக சமூகம் தமக்கான விஞ்ஞான, கணித பாட ஆசிரியர்களை உருவாக்கும் பணியை தானே பொறுப்பேற்க வேண்டும். அதற்கு அர்ப்பணிப்பான சமூக அக்கறையாளர்களாக கல்விச் சமூகமும் கல்வி கற்கும் இளைய சமூகமும் செயற்பட முன்வரவேண்டும். அதுவரை இறக்குமதிகளை எதிர்ப்பதில் பயனில்லை என்றே தோன்றுகிறது.

நன்றி - வீரகேசரி

மத்திய மாகாண சபையில் ஆட்சி மாற்றம் சாத்தியமா? - செழியன் நல்லதம்பி


மத்திய மாகாண சபையிலும் வடமத்திய மாகாண சபையிலும் ஆட்சியை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இரண்டு மாகாண சபைகளிலும் தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சியே இடம்பெற்று வருகிறது.

வடமத்திய மாகாண சபையில் 33 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 21 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்கள். மிகுதி 12 பேரில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 11 பேரும் ஒரு மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினரும் அடங்குகின்றனர்.

ஐ.ம.சு.கூட்டமைப்பிலுள்ள 21 பேரில் 17 பேர் ஒன்றிணைந்த எதிரணிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதுடன் அவர்கள் தனித்துச் செயற்பட முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஐ.ம.சு.க்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைந்ததுடன் ஆட்சி கவிழும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் வடமத்திய மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சிலவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அது ஐ.ம.சு.கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனிடையே ஐ.தே.க.யின் 11 உறுப்பினர்களுடன் இணைந்து எஞ்சியுள்ள ஐ.ம.சு.முன்னணி உறுப்பினர்கள் ஆட்சியைத் தொடரச் செய்யும் நிலைமைகள் பற்றியும் ஆராயப்பட்டு வருகிறது. ஆனால், அது சாத்தியமாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

ஆனால், ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு இடமளிக்காதவகையில், அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ.ம.சு.தலைமையும் கட்சியும் முன்னெடுத்துவருகின்றது.

இவ்வாறானதொரு நிலைமையே மத்திய மாகாண சபையிலும் நிலவுகின்றது. மத்திய மாகாணசபையில் ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆட்சியே நடைபெறுகின்றது. மத்திய மாகாண சபையின் மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை 58 ஆகும். இதில் ஆளும் கட்சியான ஐ.ம.சு.மு.யின் சார்பில் 40 உறுப்பினர்கள் இருந்தனர். எதிர்க்கட்சி தரப்பில் 18 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆளுங்கட்சி தரப்பில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பிரமித்த தென்னக்கோன் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததுடன் தன்னுடன் இணைந்துள்ள 10 பேருடன் சேர்ந்து (11 பேராக) தனித்து இயங்கப்போவதாக அறிவித்திருந்தார்.

இந்த 11 பேரும் தனித்து இயங்குவார்களேயானால் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 29 ஆகக் குறைவடையக்கூடும். அத்துடன் 11 பேரும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்களேயானால் எதிர்க்கட்சியின் பலமும் 29 ஆக அதிகரிக்கக்கூடும்.

எவ்வாறெனினும் ஐ.ம.சு.கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தமது கட்சியிலுள்ள ஒரு பிரிவினரை தனித்துச் செயற்பட அனுமதிக்கப்போவதில்லை. அவ்வாறு செயற்பட முற்படுவோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து பதவியிலிருந்து நீக்கவும் கூடும் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.

கடந்த மாகாண சபைத் தேர்தலில் மலையக தமிழ் கட்சிகள் ஐ.ம.சு.கூ.சார்பிலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றன. இ.தொ.கா.சார்பில் 6 பேர் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் அவர்களில் எம்.ரமேஷ் மாகாண சபை அமைச்சராகவும் துரை மதியுகராஜா சபை முதல்வராகவும் பதவி வகிக்கின்றனர்.

அதேவேளை தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் 6 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் யாருக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்படவில்லை.

இவ்வாறானதொரு நிலையில் அதிருப்தி மாகாண சபை உறுப்பினர் பிரமித்த தென்னக்கோனின் ஆதரவாளர்கள் என கூறப்படும் உறுப்பினர்களும் கட்சியைவிட்டு வெளியேறி எதிர்க்கட்சியுடன் இணைந்துகொள்வதன் மூலம் ஆட்சியைக்கைப்பற்றக்கூடியதாக இருக்குமென்று ஒரு கருத்து நிலவுகிறது.

ஆனால், பிரமித்த தென்னகோன் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் ஆளுங்கட்சியின் கடைசி வரிசை ஆசனத்திலேயே தமக்கான ஆசனத்தைப் பெற்றுக்கொண்டு சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதாக மத்திய மாகாண சபை முதல்வரான துரைமதியுகராஜா தெரிவித்தார்.

அத்துடன் தமது தலைமையில் ஒரு குழுவினர் தனித்து செயற்படப்போவது பற்றி பிரமித்த தென்னக்கோன் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவோ அல்லது எழுத்துமூலமான ஆவணம் ஒன்றை இதுவரை கையளிக்கவோ இல்லையெனவும் துரைமதியுகராஜா குறிப்பிட்டார். இது இவ்வாறிருக்க ஐ.ம.சு.மு அதிருப்தியாளர்களுடன் அந்த முன்னணியிலுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் சேர்ந்து எதிர்க்கட்சியுடன் இணைந்து மாகாண ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சிலர் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இது சாத்தியமானதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏனெனில் ஆட்சி மாற்றம் இடம்பெறவேண்டுமானால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அரைவாசிப் பேருக்கு மேல் ஆதரவளிக்க வேண்டும். ஆனால் ஐ.ம.சு.முன்னணி சார்பில் கடந்த மாகாண சபைத் தேர்தலில் 36 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

அதிருப்தியாளர் எனக்கூறப்படும்.

பிரமித்த தென்னக்கோன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவருமே தற்போதும் ஆளும் கட்சியிலேயே இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் மத்திய மாகாண முதலமைச்சரை மாற்றவோ அல்லது ஆட்சியை கவிழ்க்கவோ முடியாத நிலைமையே காணப்படுகிறது.

இதனிடையே மத்திய மாகாண விவசாய இந்து கலாசார தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் எம்.ரமேஷிடம், மாகாண தமிழ்க் கல்வி அமைச்சையும் ஒப்படைத்திருக்கின்றனர். கடந்த 8 ஆம் திகதி மாகாண ஆளுநர் முன்னிலையில் எம்.ரமேஷ் தமிழ் கல்வி அமைச்சராகவும் சத்திய பிரமாணம் செய்து கொண்டார். 4 வருடங்களின் பின்னர் தமிழ் கல்வி அமைச்சு தற்போது வழங்கப்பட்டுள்ளமை பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மத்திய மாகாண சபைக்கான தேர்தல் 2013 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்றது. அந்த வகையில் மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் 1 ¼ வருடகாலமே இருக்கிறது. அடுத்தவருடம் 2018 இல் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறவேண்டும்.

இந்த இறுதிக் காலப்பகுதியில் தமிழ் கல்வியமைச்சை இ.தொ.கா.வுக்கு வழங்க வேண்டியதன் அவசியம் என்ன? ஆட்சிமாற்ற அச்சுறுத்தல், அடுத்த மாகாண சபைத் தேர்தல், ஐ.ம.சு.கூட்டமைப்பின் எதிர்கால வெற்றி என்பவற்றை முன்னிலைப்படுத்திதான் 4 வருடங்களின் பின்னர் மீண்டும் தமிழ்க் கல்வி அமைச்சு வழங்கப்பட்டிருக்கிறதா?

மத்திய மாகாணத்திற்கான தமிழ் கல்வியமைச்சை ஏற்கனவே வழங்கியிருந்தால் மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகள் எவ்வளவோ முன்னேற்றமடைந்திருக்குமல்லவா? இதை ஏன் புரிந்து கொள்ளவில்லை?

நன்றி - வீரகேசரி

"ஞானசார தேரரும் சிவாஜிலிங்கமும் மச்சான்மார்" சிங்களப் பத்திரிகைக்கு மனோ கணேசன்!


"கலகொட எத்தே ஞானசார தேரரும் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமும் மச்சான்மார் போல" என்றும் அவர்கள் இருவரும் ஒரே பணியைத்தான் மேற்கொள்கிறார்கள் என்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் “ரிவிர”வுக்கு (சிங்கள நாளிதழின் முற் பக்கத்தில்) தெரிவித்துள்ளார்.

நாளை காலை (மே22) இலங்கையில் வெளிவரவிருக்கும் "ரிவிர" பத்திரிகைக்கே இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

வடக்கில் சிவாஜிலிங்கம் இனவாதத்துடன் செயற்ப்பட்டுக்கொண்டு வேறொரு அரசியலை முன்னெடுத்துக் கொண்டு போவதாகவும் அதேவேளை தெற்கில் கலகொட எத்தே ஞானசார தேரர் இனவாதத்தைத் தூண்டிக் கொண்டு இன்னொரு அரசியலை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த இருவரும் இரு மச்சான்மார்களைப் போல பாதிரமாற்றி வருவதாகவும் , சிவாஜிலிங்கத்தை நோக்கும் சகல மக்களும் கலகொட எத்தே ஞானசார தேரரையும் அதே விதத்தில் பார்ப்பது அவசியம் என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

(சிங்களத்தில் இருந்ததை எந்த மாற்றமும் இன்றி அப்படியே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)


இந்தியப் பிரதமரின் வருகையை பயன்படுத்திக்கொள்வது எவ்வாறு? - பெ.முத்துலிங்கம்


ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தினத்தை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் தனித் தேசியமாக பரிணமித்து வரும் மலையக மக்களின் வாழ்விடத்துக்கு மேற்கொண்ட விஜயமானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தியப் பிரதமர் ஒருவர் மலையக தமிழ் மக்களை அங்கீகரித்து விஜயம் செய்தமை இதுவே முதற் சந்தர்ப்பமுமாகும். இன்றைய மலையக மக்கள் தாம் தனித்துவம் மிக்க தமிழர்கள் என்பதை 1930ஆம் ஆண்டுகள் முதலே பதிவு செய்ய ஆரம்பித்தனர். இப்பதிவானது 1939ஆம் ஆண்டு அன்றைய இந்திய தேசிய காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினராகவிருந்து, பின்னாளில் இந்தியாவின் முதற் பிரதமரான ஜவர்லால் நேருவின் விஜயத்துடன் வலுப்பெற்றது. நேருவின் ஆலோசனையின்படி இலங்கை இந்தியக் காங்கிரஸ் உருவாக்கம் பெற்றதுடன், அன்று முதல் தம்மை இந்தியத் தமிழரென இன்றைய மலையக மக்களின் மூதாதையர்கள் இனங்காட்டினர்.

இவ்வாறு இலங்கையின் பூர்வீகத் தமிழர்களிலிருந்து தனித்துவத்தை பேணிவந்த இத்தமிழர்கள் சுதந்திரத்தின் பின்னர் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டமையினால் தமக்கான வாழ்வுரிமைகளை இழந்தனர். இவ்வாழ்வுரிமை இழப்பு தேசிய தனித்துவத்தை நோக்கிய நகர்வினை மட்டுப்படுத்தியது. ஜவஹர்லால் நேருவின் மறைவின் பின்னர் இந்திய ஆட்சியாளர்களும் இவர்களது தனித்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்து அங்கீகரிக்கும் நிலைப்பாட்டினை கடைப்பிடிக்கத்தவறினர். இந்தியாவின் இந்த நிலைப்பாட்டின் காரணமாக 1964 ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டு, சுமார் ஐந்து லட்சம் பேர் இலங்கையை விட்டு தமிழ் நாட்டிற்கு செல்ல நேர்ந்தது.

எஞ்சிய நான்கு லட்சம் பேர் தொடர்ந்து இலங்கையின் மலைநாட்டிலும் அதனை அண்மித்த நகரங்களிலும் வாழ நேர்ந்தது. இன்று இந்த நான்கு லட்சம் மக்களும் சுமார் பதினாறு லட்சமாக அதிகரித்துள்ளதுடன், வெறுமனே தோட்டத்தொழிலாளர்களை மட்டும் கொண்டிருந்த இம்மக்கள் தற்போது மத்தியதர வர்க்கம் உட்பட பல வர்க்கத்தட்டுக்களைக் கொண்ட தேசிய இனமாக பரிணமித்துள்ளனர். இப்பரிணாம மாற்றம் இன்று தம்மை ஒரு தனி இனமாக புதிய அரசியல் யாப்பில் குறிப்பிடும்படி கோரிக்கையை முன்வைக்கச் செய்துள்ளது. இச்சந்தர்ப்பத்திலேயே இந்தியப்பிரதமர் மோடி மலையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவ்வகையில் இவ்விஜயமானது இந்திய அரசு மலையக மக்களை தனித்துவமான தமிழ் இனமாக அங்கீகரித்து, அதன் நிகழ்ச்சி நிரலில் உள்ளடங்க வழி சமைத்துள்ளது.

1977 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் இந்திய வம்சாவளி தமிழ் மக்களை தனி இனமாக இந்தியா அங்கீகரித்து, இலங்கை தொடர்பாக மேற்கொள்ளும் உடன்படிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளில் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை இம்மக்களின் தொழிற்சங்க மற்றும் அரசியற் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி, வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவை இலங்கைக்கு அனுப்பியபோது, மறைந்த சௌமிய மூர்த்தி தொண்டமான் நரசிம்மராவை மலையகத்திற்கும் அனுப்பிவைக்கும்படி கோரியபோதிலும் பிரதமர் இந்திராகாந்தி அதற்கு இணங்கவில்லை.

 அவர் நரசிம்மராவை அனுப்பிவைக்கவுமில்லை. 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் இக்கோரிக்கை மேலும் வலுப்பெற்றது. 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி தமது பிரதிநிதியாக ஜீ.பார்த்தசாரதியை அனுப்பியவேளை, இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களது பிரச்சினைகளுக்கும் செவிசாய்க்கவேண்டும் என கோரிக்கைவிடுத்தார். ஆனால் அக்கோரிக்கைக்கு முன்னுரிமையளிக்கப்படவில்லை எனினும் ஜீ. பார்த்தசாரதி சௌமிய மூர்த்தி தொண்டமானை சந்தித்துவிட்டுச் சென்றார்.

அதன் பின்னர் கடந்த முப்பது ஆண்டுகளின்போது இலங்கை வந்த இந்திய பிரதிநிதிகள் போகும் வழியில் மலையகத் தலைமைகளை பேருக்குச் சந்தித்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தி இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவுடன் செய்த ஒப்பந்தத்தின்போதும் மலையக மக்களின் பிரச்சினையின்பால் சிறப்புக் கவனம் செலுத்தப்படவில்லை. மாறாக ராஜிவ்  ஜே.ஆர். ஒப்பந்தம் சுமுகமாக அமுல்படுத்துகையில் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களையும் அவர்களது வழித்தோன்றல்களையும் இந்தியாவிற்கு அழைத்துக்கொள்ளும் சரத்தை இவ்வொப்பந்தம் உள்ளடக்கியிருந்தது. இவ்வகையில் இந்தியா இலங்கையின் மலையக மக்கள் தொடர்பாக தொடர்ச்சியாக அதிமுக்கியத்துவம் வழங்காது இருந்தது. ஆயினும் யுத்தம் முடிவடைந்தபின் இலங்கை தொடர்பான இந்திய நிகழ்ச்சி நிரலில் வடகிழக்கு தமிழ் மக்களுடன் மலையக மக்களுக்கும் முன்னுரிமை அளிக்க முனைந்துள்ளது என்பதனை அறிய முடிகின்றது.

இங்கு இன்னுமொரு இந்திய அரசியல் விடயத்தையும் மனதிலிருத்திக் கொள்ளவேண்டும். அதாவது பிரதமர் மோடியின் மலையக மக்கள் மீதான பாசம் திடீரென எழுந்த ஒன்றாக கருதலாகாது. இந்தியாவின் பல மாநிலங்களில் கால் பதித்துள்ள மோடியின் பா.ஜ.க. தமிழ்நாட்டில் தமது தடத்தை ஆழமாகப்பதிப்பதில் சவால்களை சந்தித்துள்ளது. தழிழகத்தின் அனைத்து திராவிடக்கட்சிகளும், தமிழ் தேசியக் கட்சிகளும் ஈழத்தமிழர்களின் விடயத்தின்பால் அக்கறை காட்டிவருகின்றமையினால் பா.ஜ.க.விற்கும் இந்தியக் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ் நாட்டில் தமது செல்வாக்கை வேரூன்றச் செய்வது பாரிய சவாலாக உள்ளது. இந்நிலையில் பா.ஜ.க.விற்கு தமிழ் நாட்டு மக்களின் மனங்களை கவரும் தேவை இருக்கின்றது. இலங்கையின் வடக்கு தமிழ் மக்களுக்கு பல உதவிகளை வழங்கினாலும் திராவிடக் கட்சிகளின்மேல் தமிழக மக்களுக்கு உள்ள ஆகர்சிப்பை உடைப்பது கடினமாகவுள்ளது. இந்நிலையில் தமிழக மக்களில் அண்மைய நேரடி தொப்புள்கொடி உறவான (திராவிடக் கட்சிகளும் தமிழ் தேசியக் கட்சிகளும் இதனைப் பற்றி பெரிதாக கதைக்காவிட்டாலும்) மலையக மக்களின் நலனுக்கு உதவிகள் வழங்குவதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை பதிக்கச் செய்யும் உபாயத்தை மோடி கடைப்பிடிக்கலாம்

இப்பின்புலத்தில் இந்தியாவின் மூலஉபாயத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது மலையக தலைமைகள் முன்னுள்ள சவாலாக உள்ளது. இந்தியாவின்பால் சிங்கள மக்களும் அதன் அனைத்து தலைமைகளும் வரலாறு முழுவதும் சந்தேகத்துடனேயே பார்க்கின்றன. எஸ்.டப்ளியூ.ஆர்.டீ. பண்டாராநாயக்க, டி.எஸ் சேனாநாயக்க முதல் விஜேவீரவரை இந்தியத் தோட்டத்தொழிலாளர்களை இந்தியாவின் ஐந்தாம் படையாகவே கருதினர். அத்துடன் இம்மக்கள் இந்தியாவிற்கு விசுவாசமானவர்கள் என்ற கருத்தினையே கொண்டிருந்தனர். 2003 ஆம் ஆண்டுக்குப்பின்னரே இந்த மனோநிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டதுடன் மலையக மக்களை இலங்கைத் தமிழர்களாக கருதும் மனோநிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை இன்றைய மலையக மக்கள் மத்தியிலும் நாம் இலங்கையர் என்ற மனோபாவம் ஏற்பட்டுள்ளது. இம்;மனோநிலைகளைக் காப்பாற்றிக்கொண்டே இந்தியாவுடனான உறவுகளை பேணுவதுடன் உதவிகளையும் பெறவேண்டியுள்ளது. எனவே மலையகத் தலைமைகள் இதனைக் கருத்திற் கொண்டு செயற்படுவது மிக அவசியமாகும்.

மலையக மக்களது அனைத்து அடிப்படை தேவைகளையும் இலங்கை அரசாங்கமே வழங்கவேண்டும்;. அதனைப் பெறுவதற்காக மலையக அரசியல் தலைமைகள் செயற்பட வேண்டும். மலையக மக்கள் தொடர்பாகவுள்ள இலங்கை அரசின் கடப்பாட்டை தட்டிக்கழிக்க வாய்ப்பளிக்கலாகாது. எனவே இலங்கை அரசாங்கம் ஊடாக முன்மொழியும் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவி செய்யும் வழிமுறைகளையே உருவாக்க வேண்டும். மாறாக இந்திய உதவிகள் வெறுமனே இந்தியத் திட்டங்களாக வரின் அதன் பேண்தகு நிலைக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்காது. இதற்கு மேற்கத்தைய நாடுகளின் உதவிகளுடன் மலையகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்கள் நல்ல உதாரணங்களாகும். மறுபுறம் இவ்வாறு மேற்கொள்கையில் இன எதிர்ப்பு மனோபாவம் சிங்கள மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் எழாது அல்லது குறைவடையலாம்.எனவே மலையகத் தலைமைகள் இந்தியாவுடனான உறவினை மிக அவதானமாக முன்னெடுக்க வேண்டும்.

இந்திய பிரதமர் மோடி, பத்தாயிரம் வீடுகளுக்கான உதவியை வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார். மறுபுறம் இலங்கைப் பிரதமர் அனைத்து மலையக மக்களுக்கும் ஏழு பேர்ச் காணியை வழங்குவதாக அதேமேடையில் வாக்குறுதியளித்துள்ளார். அத்துடன் எமது ஜனாதிபதி மலையக மக்களின் அபிவிருத்திக்கு தமது அரசாங்கம் முழு ஆதரவையும் வழங்கும் என உறுதியளித்துள்ளார்.இம்;மூன்று உறுதி மொழிகளையும் எவ்வாறு நிலையான அபிவிருத்திக்கு வித்திட்டுக்கொள்வது என்பது பற்றி கவனத்திற் கொள்ளவேண்டும். இன்று வாக்குறுதியளித்த மூன்று தலைவர்களும் மூன்று ஆண்டுகள் வரை ஆட்சியில் இருக்கும் வரத்தைக் கொண்டுள்ளனர். அடுத்து யார் வருவார்கள் எனத் தெரியாது.

ஆகையால் பத்தாயிரம் வீட்டுக்காக வழங்கவுள்ள நிதியை ஒரு நிலையான நிதியாக மாற்றிக்கொள்ள வேண்டும். பத்தாயிரம் வீட்டுக்கான நிதியைக்கொண்டு மலையக வீட்டுக்கான வீட்டுக்கடன் வங்கி ஒன்றை உருவாக்க வேண்டும். அந்த நிதி மூலம் குறைந்த வட்டியிலான கடனை வழங்க வேண்டும். நிதியினை மலையக மக்களுக்கானதாகவே உருவாக்கிக் கொள்ளவேண்டும். இந்நிதியினை இலங்கை வங்கி, மக்கள் வங்கி அல்;லது வேறு ஏதேனும் அரச வங்கியின் ஓர் அலகாக உருவாக்க வேண்டும் . இவ்வாறு செய்துக்கொண்டால் பத்தாயிரம் வீட்டுக்கு பதிலாக பல ஆயிரம் வீடுகளை மலையக மக்கள் தொடர்ந்து கட்டிக்கொள்ள வாய்ப்பேற்படும். (உதாரணத்திற்கு அரச உத்தியோகத்தர்களுக்கு மிகக் குறைந்த வட்டியிலேயே வீட்டுக்கடன் வழங்கப்படுகின்றது) மறுபுறம் இலங்கை அரசாங்கத்தையும் இவ்வங்கிக்கு முதலீடு செய்யும்படி கோரமுடியும். இலங்கையிலிருந்தும் பர்மாவிலிருந்தும் இந்தியாவிற்கு சென்ற மக்களுக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டு தற்போது பாரிய வங்கியாக செயற்பட்டு வரும் றேபியா (Repatriate cooperative finance and development bank) வங்கியை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மலையக மக்கள் தொடராக கடன்பெற்று தமது வீடுகளை கட்டிக் கொள்ள வாய்ப்பேற்படும். இவ்வாறு கோரும் வேளையில் இலங்கை அரசாங்கத்தை இவ்வருடத்திற்குள் அனைத்து தோட்டவாழ் மக்களுக்கும் ஏழு பேர்ச் காணியை வழங்கும்படி கோரி அதனை நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக மலையக மக்களின் பிள்ளைகளுக்கு நகர்சார் மலையக தொழிலாளர் பிள்ளைகள் உட்பட இந்தியாவில் கல்வி கற்பதற்கான சிறப்பு ( Special/Affirmative) புலமைபரிசில்களை வழங்கும்படி கோரவேண்டும். குறிப்பாக வைத்தியம், பொறியியல், விஞ்ஞானம் மற்றும் கணனி முதலிய துறைகளில் கற்க வாய்ப்பளிக்கவேண்டும் என்று கோரவேண்டும். இந்தியாவில் தலித் பிள்ளைகளுக்கு வழங்கும் சிறப்பு புலமைபரிசிலுக்கு சமமான திட்டத்தைக் வழங்கக் கோரவேண்டும். மலையக பிள்ளைகள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற்று மருத்துவம், கணிதம், விஞ்ஞானம் முதலிய துறைகளுக்கு போகமுடியாமல்; உள்ளது. இதனால் குறிப்பாக பத்தாம் வகுப்பில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இவ்வாய்ப்பினை வழங்க வேண்டும். அதாவது பன்னிரெண்டாம் வகுப்பிலிருந்து பட்டப்படிப்பு வரை கல்வி கற்க வாய்ப்பு அளிக்கும்படி கோரவேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மலையக மக்கள் மத்தியில் புலமைசார் கற்றோரை உருவாக்க முடிவதுடன் ஏனைய சமூகத்தினர் அடைந்திருக்கும் எல்லையை எட்டிப்பிடிக்க முடியும். வெறுமனே க.பொ.த உயர்தர பாPட்சையில் கற்றோருக்கு பல்கலைக்கழக புலமைப்பரிசில் வழங்கும் படி கோரினால் இன்னும் பல தசாப்தங்களுக்கு பின்னடைவினையே சந்திக்க நேரிடும்.

அதேவேளை இன்றைய உலகமயமாக்கல் தொழில்வாய்ப்பினைக் கருத்திற் கொண்டு இந்தியா உடனடியாக தொழிலில் அமரக்கூடியவாறான பல தொழில்சார் டிப்ளமோ கல்வி வாய்ப்பினை தமது நாட்டில் ஊக்குவித்து வருகின்றது. எனவே, பத்தாம் வகுப்பு சித்தியடைந்த அதேவேளை மேற்படிப்பை தொடர விரும்பாத மாணவர்களுக்கு தொழில்சார் டிப்ளமோ கல்வியை வழங்கும்படியும் கோரவேண்டும். ஆகக் குறைந்தது ஒரு வருடத்திற்கு 300 புலமைப்பரிசில் வழங்கப்படுமாயின் இதுவே நிலையான அபிவிருத்திக்கு வித்திடுவதுடன் நாட்டின் ஏனைய சமூகங்கள் கொண்டிருக்கும் வளர்ச்சியினை மிக இலகுவில் எட்டிப்பிடிக்க முடியும்.

எமது நாட்டினைப் போல் இந்திய வெளியுறவுக் கொள்கை ஆட்சி மாற்றத்துடன் மாறுபடும் தன்மை கொண்டதல்ல. மாறாக இந்தியாவின் நிர்வாகத்துறையினரே (bureaucracy) அதனைத் தீர்மானிக்கின்றனர். எனவே பிரதமர் மோடியின் நிலைப்பாட்டை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் மலையகத் தலைமைகள் டெல்லியிலுள்ள தென்மண்டலப் (South Block) அதிகாரிகளைச் சந்தித்து இக்கோரிக்கையை ஒரு முன்மொழிவாக முன்வைக்கவேண்டும். இத்தென்மண்டல அதிகாரிகளே வெளியுறவு கொள்கையின் திட்டங்களைத தீட்டுபவர்களாகக் காணப்படுகின்றனர். எனவே உடனடியாக டெல்லிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்வது அவசியமாகும். இவ்வாறு செல்லும் குழுவில் வெறுமனே அரசியல் வாதிகள் மட்டுமல்லாது புலமைசார் பிரிவினரையும் உள்ளடக்கிக் கொள்ளவேண்டும்.

நன்றி - வீரகேசரி

தரப்படுத்தலால் தட்டி பறிக்கப்பட்ட கல்வி - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 15

“ஒரு சமூகத்தின் சிந்தனைகள், அதன் புலமையாளர்களால் வெளிக்கொணரப்படுகின்றன.”
என்பார் பேராசிரியர் சிவத்தம்பி. இனத்துவ ஒடுக்குமுறைக்கு ஆளான மரபைக் கொண்ட தமிழ் சமூகத்தின் சொத்தாக “புலமை” (கல்வி) இருந்து வந்திருக்கிறது. தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் இந்த புலமையில் பாத்திரம் அளப்பரியது. அது தமிழர்களுக்கு காலனித்துவத்தாலோ, சிங்கள அரசாலோ வழங்கப்பட்ட சலுகையல்ல. தமது தன்முயற்சியால் அடைந்த நிலை.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் காலாகாலமாக ஏமாற்றங்களைச் செய்தும், இழுத்தடித்தும், குரூரமாக நசுக்கியும், ஒடுக்குமுறையைப் பிரயோகித்தும் இல்லாமல் செய்யலாம் என்று முயற்சித்தன இனவாத சிங்கள அரசாங்கங்கள். பொறுமையின் உச்சத்துக்குத் தள்ளித் தள்ளி சிறிமா அரசாங்கத்தின் போது தான் அது ஆயுதப் போராட்டமாக வெடிக்குமளவுக்கு தள்ளப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.

தமிழ் இளைஞர்களை சீற்றத்தின் உச்சத்துக்கு தள்ளிய பிரச்சினை கல்வித் தரப்படுத்தல் கொள்கை. ( The policy of standardization).

புள்ளி வரைமுறை
பல்கலைக்கழக அனுமதியில் சிறிமாவோ அரசாங்கம் முன்னெடுத்த 'தரப்படுத்தல்' கொள்கை, தமிழ் மக்களை, குறிப்பாக தமிழ் இளைஞர்களைக் கடுமையாகப் பாதித்தது. ஏற்கெனவே மொழியுரிமை பறிக்கப்பட்ட நிலையில், தமக்கான அரசாங்க வேலைவாய்ப்பு பாரபட்சத்துக்குள்ளான நிலையில், விரக்தியடைந்திருந்த தமிழ் இளைஞர்களுக்கு, இந்தத் 'தரப்படுத்தல்' நடவடிக்கையானது கடுஞ்சினத்தை ஏற்படுத்தியது.

புதிய தரப்படுத்தல் கொள்கையானது மாவட்ட அளவில் வெட்டுப்புள்ளி என்றதொரு புள்ளி வரைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்தந்த மாவட்டத்தின் கல்வி நிலையை அடிப்படையாகக் கொண்டும் அந்த ஆண்டில் நடத்தப்பட்ட பொதுத்தராதரப் பரீட்சையில் மணவர்கள் பெற்ற பெறுபேறின் அடிப்படையிலும் ஒவ்வொரு உயர்கல்வித்துறைக்கும் தனியாக புள்ளி வரன்முறை கொண்டுவரப்பட்டது. இதன்படி குறிப்பிட்ட புள்ளிக்கு அதிகமாக எடுத்தாலே பல்கலைக்கழகத்துக்கு குறிப்பிட்ட துறையில் உயர்கல்வியைத் தொடர அனுமதி கிடைக்கும்.

யாழ் மாவட்டத்துக்கான பல்கலை அனுமதி வெட்டுப் புள்ளியானது மிக உயர்வாக இருந்தது. அதேவேளை சிங்கள மக்களை அதிகமாகக் கொண்ட மாவட்டங்களின் வெட்டுப்புள்ளியானது குறைவாக இருந்தது. இதனடிப்படையில் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க விரும்பும் ஒரு யாழ்ப்பாண மாணவன் அதே பல்கலைக்கழகத்துக்கு மருத்துவம் படிக்க வரும் மாத்தறையைச் சேர்ந்த ஒரு மாணவனை விட மிக அதிகமாகப் புள்ளிகள் எடுக்கவேண்டி இருந்தது. வெட்டுப்புள்ளியை விட சில புள்ளிகள் குறைவாகப் பெற்ற தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் புகமுடியாமல் நிற்க அவர்களை விட மிகக் குறைந்த புள்ளிகளைப் பெற்ற சிங்கள மாணவர்கள் அந்த இடத்தை நிரப்பிக் கொண்டனர்.

'தமிழ் இளைஞர்கள், தமக்கெதிரான இந்த ஓரவஞ்சனை பற்றி கசப்படைந்திருந்தனர். இவர்களின் உந்துதலால் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (தமிழர் விடுதலைக் கூட்டணி) உருவானது. பலரும் தனித் தமிழீழம் அமைக்கப்படுவதற்காக வன்முறையைக் கையிலெடுக்க உந்தப்பட்டனர். பாரபட்சமான கொள்கை முன்னெடுப்புக்களும். சிறுபான்மையினரின் நலனைக் கருத்திற்கொள்ளாத நடவடிக்கைகளும் இனமுரண்பாட்டை எத்தனை தூரம் அதிகரிக்கும் என்பதற்கு இது மிகச்சிறந்த எடுத்துக்காட்டு' என்கிறார் வரலாற்றாய்வாளர் கே.எம்.டி.சில்வா.

தரப்படுத்தலின் மறுபக்கம்
தரப்படுத்தல் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் நிறையவே இருக்கின்றன. இதனால் யாழ்ப்பாண இளைஞர்கள் மட்டும் தான் பாதிக்கப்பட்டார்கள், ஆனால் ஏனைய பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த சமூகத்தினர் கணிசமான அளவு பயனடைந்திருக்கிறார்கள் என்கிற இன்னொரு அழுத்தமான வாதமும் முன்வைக்கப்படுவதுண்டு. குறிப்பாக இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டு முறைக்கு  நிகர் என்பார்கள் சிலர். 

அந்த கூற்றில் ஓரளவு உண்மை இருக்கிறது. சிக்கலும் இருக்கிறது. இந்தியாவில் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தலித் சமூகத்தினருக்கு நீதி வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடு அது. தலித் மக்களின் உரிமைகளை பறித்து வைத்திருந்த உரிமைகளை சரி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பொறிமுறை.

இந்தியாவில் மண்டல் கமிசனுக்கு ஊடாக கொண்டுவரப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, பட்டியலிடப்பட்ட சமூகத்தினருக்கான ஒதுக்கீட்டுமுறை அது. காலங்காலமாக அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட ஒரு சமூகம், அந்த அடக்குமுறையிலிருந்து வெளிவருவதற்கு ஒதுக்கீட்டு முறை தேவை. அமெரிக்காவில் கூட பழங்குடி அமெரிக்கர் மற்றும் கறுப்பின மக்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. ஆனால் இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். இவர்கள் யாவரும் சிறுபான்மையினர். காலங்காலமாக அடக்கியொடுக்கப்பட்டவர்கள். ஆனால் இலங்கையில் நிகழ்ந்தது அதுவல்ல. அரச இயந்திரத்தால்  சலுகைபெற்ற பெரும்பான்மையினர்; சலுகை மட்டுமல்ல உரிமையும் மறுக்கப்பட்ட ஒரு இனத்திடம் இருந்து இருப்பதையும் பறித்தெடுக்கும் முயற்சியே நிகழ்ந்தது.

அதிகாரத்துக்கு வெளியில் தள்ளப்பட்ட தமிழ்ச் சமூகம் தம் மீதான இருப்பைப் பாதுகாக்க குறைந்தபட்ச தயார்படுத்தலே கல்வியை ஒரு சொத்தாக வளர்த்துக் கொண்டது என்பதை மறந்துவிடக்கூடாது. கல்விச் சமூகமாக வளர்வதில் ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருந்தது.

அதிலும் இதில் அதிகம் தயார்படுத்திக்கொண்ட சமூகமாக யாழ்ப்பாண தமிழ்ச் சமூகம் இருந்தது. கல்வியை மட்டும் நம்பியிருந்த சமூகமாக வளர்ந்து இருந்தது. மிஷனரிக் கல்வி, சைவத்தின் துணை மற்றும் அதன் விளைவாக காலனித்துவ காலத்தில் அதிகாரத்திலும் நிர்வாகத்திலும்  பெற்றுக்கொண்ட பங்கு என்பன இந்த பாரம்பரியத்துக்கு வித்திட்டது. அதேவேளை தமிழ் மக்களிலேயே யாழ் – சைவ – வேளாள உயர்வர்க்கத்தினரே இந்த கல்விப் பாரம்பரியத்தின் நலன்களை அனுபவிப்பதில் முன்னுரிமை வகித்தனர் என்பது நுண்ணரசியல் பார்வை.

ஆக கல்வித் தரப்படுத்தலால் முதலில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் இவர்களே. அதேவளை யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இருந்த சிங்களவர்கள் மாத்திரமல்லாது தமிழர்களும் சேர்ந்து இந்த கல்வித் தரப்படுத்தலால் நன்மை பெற்றிருக்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை. குறிப்பாக யாப்பாணம் தவிர்ந்த பின் தங்கிய மாவட்டங்களான வன்னி, கிளிநொச்சி, மட்டக்களப்பு, மன்னார் உட்பட மலையகப் பகுதிகளில் உள்ளவர்களும் இந்த கல்வித் தரப்படுத்தலால் நன்மை பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மை.

மேலும் இந்த கல்வித் தரப்படுத்தல் யாழ்ப்பாணத்தை மாத்திரம் பாதிக்கவில்லை. கொழும்பு, கம்பஹா போன்ற மாவட்டங்களும் அதிகமாக பல்கலைக்கழக வாய்ப்புகளைப் பெற்ற மாவட்டங்களாக இருந்து வந்தன. எனவே அதுவும் கட்டுப்படுத்தப்பட்டு அந்த வாய்ப்புகள் ஏனைய பின் தங்கிய மாவட்டங்களுக்கு பகிரப்பட்டன.

இவர்களின் நன்மைக்காகத் தான் இந்த தரப்படுத்தல் என்று பூசி மொழுகினார்கள் ஆட்சியாளர்கள். அதில் உள்ள கணிசமான உண்மை மறுப்பதற்கில்லை. ஆனால் அதை மட்டும் வைத்துகொண்டு “தரப்படுத்தலை” நியாயப் படுத்திவிட முடியாது.


தமிழர் கல்வி வீழ்ச்சி
இது சிங்களவர்களுக்கே சாதகமாக அமைந்தது. ஏலவே திறனடிப்படையில் முன்னிலையிலிருந்த சிறுபான்மையினரை பின்தள்ளுவதாக அமைந்தது. இதுதான் இந்த 'தரப்படுத்தலில்' இருந்த சிக்கல். தரப்படுத்தலின் பின் ஒட்டுமொத்தமாக தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறும் அளவு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இதேவேளை  காலனித்துவ சட்டங்களால் பின்தள்ளப்பட்ட சிங்கள மாணவர்களுக்கு கூடிய வாய்ப்புக்கள் வழங்கி சிங்கள மக்களின் கல்வி நிலையில் ஒரு சீர் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்கிற இனவாதப் பார்வை வலுவடைந்திருந்தது. அதுபோல காலனித்துவ காலம் தொட்டு அரச நிர்வாகத் துறையிலும் தமிழர்கள் அதிகளவு இருப்பதையும் கண்டு இனவாத சக்திகள் வெறுப்புற்றிருந்தார்கள். அவர்கள் தமிழர்களாக இருப்பதால் அடைந்த பதவிகள் அல்ல அவை என்பதை அவர்களின் இனவாத பார்வை அறியாதிருந்தது. ஆனால் சிங்களவர்களாக இருப்பதால் தமக்கு உரியவை அவை என்கிற ஐதீகத்தை வளர்த்து வைத்திருந்தது இனவாத சக்திகள்.

தரப்படுத்தலுக்கு நியாயம் தேடல்
கலைப்பீடம் தவிர்ந்த ஏனைய துறைகளில் சிங்கள மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி போதவில்லை என்ற ஆதங்கம், சிங்கள இனவாத சக்திகள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் தமிழ் மாணவர்கள் அதிகளவு அனுமதி பெற்றமையானது, சிங்களவர்களின் வாய்ப்பினைத் தட்டிப்பறிப்பதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அம்மாணவர்கள் திறன், தகுதி அடிப்படையில்தான் அனுமதி பெற்றார்கள் என்பதை அவர்கள் கருத்திற்கொள்ள மறந்துவிட்டார்கள்.

யாழ் குடாநாட்டுப் பாடசாலைகளில் சிறந்த ஆய்வு கூட வசதிகளைக் கொண்டிருப்பதே அதிகப்படியான அம்மாணவர்களின் பிரவேசத்துக்குக் காரணம் என்றார்கள்.  குறிப்பாக விஞ்ஞானப் பரிசோதனைகளைச் செய்து பழகும் வாய்ப்பு யாழ் மாணவர்களுக்கு அதிகம் என்றார்கள். எனவே கல்வி அமைச்சு தலையிட்டு பரிசோதனைப் பரீட்சைகளைக் கைவிட்டு எழுத்துப் பரீட்சை மூலம் மாணவர்களை அனுமதிக்க முடிவு செய்தது. ஆனால் அதன் பின்னரும் தமிழ் மாணவர்களின் தொகை குறையவில்லை. எனவே தமிழ் மாணவர்களின் வினாத் தாள்களைத்த்திருத்தும் ஆசிரியர்களை சந்தேகத்தித்தார்கள். அதற்கான சாத்தியங்கள் குறைவு என்று பரீட்சைத் திணைக்களமும், வினாப் பத்திரங்களைத் திருத்துவோரும் கூறியபோதும் இந்த குற்றச்சாட்டை சிங்கள அரசியல் தரப்பு தொடர்ந்தும் வாதமாக முன்வைத்தது. இறுதியில் இந்த மாணவர்களுக்கு கல்வி கற்கும் வசதிகள் அதிகமாக இருப்பதனால் தரப்படுத்தல் முறை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற கருத்துக்கு வந்தடைந்தனர். தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் உள்ள வாய்ப்புகளை இதன் மூலம் சமன் செய்ய வேண்டும் என்கிற வாதத்தை உறுதியாக முன்வைத்தனர். அரசாங்கத்தையும் அந்த முன்மொழிவு கவர்ந்தது. அதன் விளைவு தான் “போதனா மொழிவாரி தரப்படுத்தல்”

பல்கலைக்கழகம்
தமிழர்
சிங்களவர்
பொறியியல்
(பேராதனைபல்கலைக்கழகம்) 
250
227
பொறியியல்
(கட்டுப்பெத்தை வளாகம்)
232
212
மருத்துவம் (பல்மருத்துவம்)
250
229
பௌதிகவிஞ்ஞானம்  
204
183
கட்டிடக்கலை
194
180
உயிரியல்விஞ்ஞானம்   
184
175

அந்தளவு அவர்கள் இந்த விடயத்தில் இனத்துவ நலனைத் தான் அடையத் தான் முற்பட்டார்கள். பின்னர் பல மாற்றங்களுக்குள்ளாக்கப்பட்டு, கடைசியில் மாவட்ட ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தினார்கள்.

1973 இல் மொழிவாரி தரப்படுத்தல், 1974 இல் மாவட்ட அடிப்படையிலான தரப்படுத்தலும், 1975 இல் 100 சதவீத மாவட்ட ஒதுக்கீடும், 1976 இல் 70 சதவீதம் மாவட்ட ஒதுக்கீடும் 30 சதவீதம் போட்டி பரீட்சையிலான திறமை அடிப்படையிலான ஒதுக்கீடும், ஒட்டு மொத்த தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் இனவிகித எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

1971இல் தரப்படுத்தல் கொள்கையை விளக்கி கல்வி அமைச்சு வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையின் தமிழாக்கம் நமக்கு இதனை தெளிவுபடுத்தும்.
“சிங்கள மாணவர்களின் புள்ளிகளையும் தமிழ் மாணவர்களின் புள்ளிகளையும் கொண்ட இரண்டு வெவ்வேறு பட்டியல்கள் முதலில் தயாரிக்கப்படும். அவை ஒன்றோடொன்று தரப்படுத்தப்படும். இவ்வாறு தரப்படுத்தப்பட்ட புள்ளிகள் மீண்டும் ஒரே பட்டியல் ஆக்கப்படும். அந்தப் பட்டியல் பல்கலைக்கழக மாணவரைத் தெரிவு செய்யப் பயன்படும்.”
தரப்படுத்தல் பற்றி வரலாற்றாசிரியரான கே.எம்.டி சில்வா எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையொன்றில் இப்படி குறிப்பிடுகிறார்.
“மருத்துவப் பிரிவில் தமிழ் மாணவர்கள் அனுமதி பெறுவதற்கு குறைந்தபட்ச புள்ளி 400க்கு 250ஆகவும் சிங்கள மாணவருக்கு அது  229ஆகவும் இருந்தது. இரண்டு வெவ்வேறு போதனா மொழிகளில் கற்றாலும் ஒரே பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் வெவ்வேறு குறைந்த பட்ச புள்ளிகளைப் பெற வேண்டி இருந்தது.”
தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சி சிங்கள அதிகார வர்க்கத்தால் வழங்கப்பட்ட சலுகையல்ல. அது இனத்துவ பாரபட்சத் தடைகளையும் மீறி தமது சொந்த முயற்சியால் ஆக்கிக்கொண்ட கல்வித் தகுதி. அப்படியிருக்க அதிகாரத்தில் சலுகை பெற்ற இனமொன்று ஒடுக்கப்பட்ட இனத்திடம் இருந்த குறைந்தபட்ச இருப்பையும் பறித்தெடுப்பது என்பதை எவரால் பொறுக்க முடியும்.

அரசசேவை ஆணைக்குழுவை இல்லாமலாக்கி அமைச்சரவைக்கு அந்த அதிகாரங்களை வழங்கியதன் மூலம் அரச சேவைகளில் தகுதிக்கு இடமிருக்கவில்லை. இனப்பாரபட்சம் மிக்க அரச உத்தியோகத் தெரிவுக்கு முழு வாய்ப்பையும் திறந்து விட்டிருந்தது. அதனை எதிர்த்து அடிப்படை உரிமை வழக்கைத் தொடரும் வாய்ப்பையும் அன்றைய அவசர கால சட்டம் பறித்திருந்தது. சிங்கள-பௌத்தமயமாக்கல் பரிபூரணப்படுத்தப்பட்ட காலம் அது.

1970ஆம்ஆண்டில் பல்கலைக்கழக அனுமதியைப் பார்த்தால் 40.8 வீதத்தினை பொறியியல் துறையிலும்இ 35 வீதத்தினை விஞ்ஞானத்துறையிலும் 50 வீதத்தினை மருத்துவத் துறையிலும் இலங்கைத் தமிழர்கள் பெற்றிருந்தனர். அப்போது இலங்கைத் தமிழர்கள் சனத்தொகையில் 11 வீதமே. தரப்படுத்திலின் விளைவாக தமிழ் மாணவர்களின் பல்கலைக்ககழக பிரவேசம் 35% வீதத்திலிருந்து 17 வீதத்துக்கு விழுந்தது.

எல்லே குனவங்ச 
சமீபத்தில் பிரபல சிங்கள பௌத்த தேசியவாத பிக்குவான எல்லே குனவங்ச தேரோவின் பேட்டியொன்றை காண நேரிட்டது. அதில் ஒரு கேள்வி

"வடக்கில் பயங்கரவாதம் தலை தூக்கியது கல்வித் தரப்படுத்தலால் அல்லவா?
அது பிழை. அதனால் ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்களும் பயனடைந்தார்கள். 77இல் ஜே.ஆர் பதவிக்கு வந்ததும் அமிர்தலிங்கத்துடன் இரகசிய ஒப்பந்தத்தை செய்துகொண்டு தரப்படுத்தலை நீக்கிவிட்டார். நான் அதனால் மிகவும் கவலையடைந்தேன். ஜே.ஆருக்கு எதிராக நான் வீதியில் இறங்கினேன். மாணவர்களை அணிதிரட்டி போராட்டங்களையும் வகுப்பு பகிஷ்கரிப்புகளையும் செய்தோம். இதனால் தான் ஜே.ஆர். என்னுடன் ஆத்திரமுற்றார். எனது பன்சலையை சுற்றி வளைத்து என்னை வீட்டுக் காவலில் அடைத்தார்."
தமிழ் பல்கலைக்கழகம்
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் இந்த 'தரப்படுத்தல்' முறையை முற்றிலும் கண்டித்து அறிக்கையொன்றை விடுத்தார். இந்த அடக்குமுறை தமிழ் இளைஞர்களிடையே கோபக்கனலைத் தோற்றுவித்தது. அந்த கோபக்கனல் விடுதலையை வேண்டி, தமிழ் இளைஞர்களை நகரச் செய்தது. தமிழ் இளைஞர் பேரவைக் கூட்டமொன்றில் உரையாற்றிய சத்தியசீலன், 'தரப்படுத்தலானது தமிழினத்தின் இருண்டகாலத்தைச் சுட்டும் சமிஞ்ஞையாகும். அது, உயர்தரத்தில் சித்தியடைந்த பல தமிழ் இளைஞர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்பை இல்லாது செய்துள்ளது. தரப்படுத்தல் தமிழ் மக்களுக்கிருந்த கடைசி வாய்ப்பையும் தட்டிப்பறித்துவிட்டது' என்றார்.

தமிழரசுக் கட்சி கல்வி சார்ந்த 4 பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து அன்றைய கல்வி அமைச்சர் பதியுதீன் முகமதை சந்தித்து பேசியது. அதில் ஆசிரியர் பிரச்சினையில் சாதகமான நடவடிக்கை எடுப்பதாகவும் தரப்படுத்தல் விடயத்தில் ஒன்றும்  செய்ய முடியாது என்றும் அரசாங்க அது கொள்கை என்றும் நழுவினார். அப்போது தமிழ்ப் பல்கலைக்கழகம் பற்றிய விடயத்தை தந்தை செல்வா கிளப்பியபோது உங்கள் கோரிக்கைக்கு நான் இணங்கினார் பொன்னம்பலம் என்னைத் திட்டுவார் என்று பதிலளித்தார். திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகத்தை நிறுவி அப்பிரதேசம் பறிபோகாதவகையில் பலப்படுத்தவேண்டும் என்பதே செல்வநாயகத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால் ஜீ.ஜீ. பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்றிருந்தார். திருகோணமலையில் தமிழர் பலம் பெறுவதை விரும்பாத அரசாங்கம் இந்த இழுபறியை சாதகமாக்கிக்கொண்டது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பலம் தமிழ்த் தலைமைகளிடம் இல்லை என்று உணர்ந்தனர் தமிழ் இளைஞர்கள். அவற்றுக்கான போராட்டத்தை தமது கையிலெடுக்க வேண்டும் என்கிற எண்ணக்கரு அவர்களிடம் உறுதிபெற்றது. 

தணல் நெருப்பாகிறது
தமிழ் மாணவர்கள் சிங்கள ஆட்சியாளர்களால் தம் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்தனர். அதற்கெதிராகப் போராடத் தலைப்பட்டனர். இந்த அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் இலக்கோடு உயர்கல்வி மாணவர்கள் ஒருங்கிணைந்த தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது. அதன் அங்குரார்ப்பன கூட்டம் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் நிகழ்ந்தபோது “தலைமை உரையாற்றிய சத்தியசீலம் “தமிழரசு கட்சி அதன் தீவிரத்தை இழந்து விட்டது என்றார்.

1971ல் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்த சிவகுமாரன் அவர்கள் சில தோழர்களை ஒருங்கிணைத்து சிங்கள அரசுக்கும் அதற்கு ஆதரவு வழங்கும் தமிழ் சக்திகளுக்கும் எதிராக போராட்டங்களை முன்னெடுத்தனர்.

வெட்டுப்புள்ளிகளால் பல்கலைக்கழகக் கல்வியை இழந்த மாணவர்கள் மட்டுமன்றி கல்வி வாய்ப்பையிழந்த தமது நண்பர்களுக்காகவும் உறவுகளுக்காகவும் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் கைகோர்த்தனர்.

1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி தமிழர் பிரதேசங்களில் தமிழ் மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டித்து மாபெரும் ஊர்வலமொன்று நடத்தப்பட்டது. இவ் ஊர்வலத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் பொன்.சிவகுமாரன். 

கல்வித் தரப்படுத்தலை அமுல்படுத்திய சிறிமா அரசின் துணை அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறி பயணம் செய்த வாகனத்திற்கு குண்டு வைப்பதோடு ஆரம்பமானது சிவகுமாரனது ஆயுதப்போராட்ட வரலாறு (செப் 1970). இச்சம்பவத்திலிருந்து சிங்கள அமைச்சர் உயிர்தப்பிய போதும், அச்சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைதான சிவகுமாரன் சிறையில் மோசமான சித்திரை வதைகளுக்குட்படுத்தப்பட்டார்.

1973 இல் செல்வநாயகம் கூறிய ஒரு கருத்தைப் பற்றி டீ.டி.எஸ்.ஏ.திஸாநாயக்க தரப்படுத்தல் பற்றி எழுதிய கட்டுரையொன்றில் இப்படி குறிப்பிடுகிறார்.
'சமஷ்டிக்கான எனது போராட்டத்தில், நான் தோல்வியடைகிறேன். இதற்கு காரணம் பண்டாரநாயக்க, அவரது பாரியார் மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. நான் எப்போதும் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன், சமஷ்டிக்கான எனது போராட்டத்தில் நான் தோல்வியடைந்தால், அதன் பின் தமிழ் மக்கள் சமஷ்டியைக் கோர மாட்டார்கள். மாறாக தனிநாட்டைத்தான் கோருவார்கள். ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கிறீர்கள்தானே, நான் அஹிம்சையையும், சத்தியாக்கிரகத்தையும், ஹர்த்தாலையும் முன்வைத்தேன், அவர்கள் வன்முறையை முன்வைக்கிறார்கள்'

துரோகம் தொடரும்...டொய்லியால் பறிபோன இலங்கை - என்.சரவணன்

“அறிந்தவர்களும் அறியாதவையும் - 12”


கடைசி ராஜ்ஜியமாக இருந்த கண்டி ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியோடு இலங்கை ஒட்டுமொத்தமாக இலங்கையரிடம் இருந்து பறிபோனது. அப்படி ஆங்கிலேயர்கள் ஒட்டுமொத்தமாக இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு  வருவதில் பிரதான பாத்திரமாற்றியவர் தான் இந்த ஜோன் டொயிலி.

பிரித்தானியர் கண்டியைக் கைப்பற்றுவதில் தொடர் தோல்விகளைத் சந்தித்துக்கொண்டிருந்த போது தான் டொயிலி இலங்கை வந்து சேர்ந்தார்.

நெப்போலியன் போனபர்ட்டை இறுதியில் தோற்கடித்த  6வது ரெஜிமென்ட் கண்டி மன்னனுடனான போரில் மண் கவ்வியது. சிலர் மட்டும் தான் உயிர் மீண்டு திரும்பினார்கள். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மட்டுமன்றி ஆங்கிலேயரும் கண்டியை போரின் மூலம் தோற்கடிக்கமுடியாது தவித்தனர். அதன் பின்னர் கண்டியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் பேரழிவின்றி சாணக்கியத்துடன் கைப்பற்றியது டொயிலியின் திட்டத்தால் தான்.

ஜோன் டொயிலி (John D'Oyly) 11.06.1774 இங்கிலாந்தில் பிறந்தவர். பல சிரேஷ்ட கல்விமான்களை உருவாக்கிய வெஸ்ட்மினிஸ்டர் கல்லூரியில் கற்று பின்னர் 1796இல்  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்றார். 

இலங்கையின் கரையோரங்களை மட்டும் அப்போது கைப்பற்றியிருந்த ஆகிலேயர்களின் முதலாவது தேசாதிபதியாக இருந்த பிரெடெரிக் நோர்த்தின் (Frederick North) காலத்தில்  ஆங்கில அரச அதிகாரியாக கடமையேற்று 1801இல் இலங்கை வந்தார். முதலில் அவர் மாத்தறை பகுதிக்கான வரி அறவிடும் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார். அதன் பின்னர் காலியிலும் அந்தப் பணிக்கு நியமிக்கப்பட்திருந்தார். இந்த காலப்பகுதியில் அந்தப் பகுதிகளில் நீதித்துறை அதிகாரமும் அவருக்கு இருந்தது.

தேசாதிபதிகள் பிரெடெரிக் நோர்த், - தோமஸ் மெயிற்லண்ட், - ரொபர்ட் பிரவுன்றிக்

டொய்லி அரச சேவையில் சிங்களம் கற்றிருக்கவேண்டியதன் நிபந்தனையை ஏற்று சிங்களம் மட்டுமன்றி பாளி மொழியையும் கற்று பிற்காலத்தில் சிங்களத்தில் கவிதை எழுதுமளவுக்கு தேர்ச்சி பெற்றார். மாத்தறையைச் சேர்ந்த அரசியல் செல்வாக்கு பெற்ற  கரதொட்ட தர்மாராம பிக்குவிடம் தான் அவர் சிங்கள கற்றார். 1805 ஆம் ஆண்டு அவர் பிரதான மொழிபெயர்ப்பாளராக பதவி உயர்வு பெற்று கொழும்பு அரசாங்க அதிபராகவும் பணியாற்றி பின்னர் கண்டிக்கு மாற்றலாகும் வரையான காலப்பகுதிக்குள் இலங்கையின் உள்ளூர் மொழியில் பாண்டித்தியம் பெற்றிருந்தார். 

இலங்கையின் 2வது தேசதிபதியான தோமஸ் மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 1759–1824) தான் முதலில் டொய்லியை ராஜதந்திர பணிகளில் ஈடுபடுத்தத் தொடங்கியவர். பிரித்தானியர் கண்டியிடம் கண்ட தோல்வி காரணமாக இனி கண்டியுடன் யுத்தத்துக்கு போவதை விட ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்படி அரசரிடமிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. (ஏற்கெனவே இந்த தொடரில் லொவினா – மெயிற்லண்ட் காதல் கதை பற்றி எழுதியிருந்தது நினைவிருக்கலாம்)

பிரித்தானியரின் நடவடிக்கைகள் அதுவரை “முதலி”, “மகாமுதலி” போன்றோரால் தான் சாத்தியப்பட்டன. ஆனால் மெயிட்லன்ட் இவர்களை நம்பவில்லை. தனது நம்பிக்கைக்குரிய சிறந்த ராஜதந்திரியாகவும், அறிவாளியாகவும், உள்ளூர் மொழியையும் இயல்பையும் அறிந்த ஒருவரைக் கண்டு பிடித்தார். அவர் தான் டொயிலி.


கண்டியைக் கைப்பற்ற வியூகம் அமைத்த இரகசிய வியூகம்
1811இல் 3வது தேசாதிபதியாக சேர் ரொபர்ட் பிரவுன்றிக் (Robert Brownrigg) வந்து சேர்ந்தார். பிரவுன்றிக் உளவுச் சேவைக்கு டொய்லியை அமர்த்தினார். 
டொய்லி ஒரு சிறந்த சாணக்கியனும், தேர்ந்த உளவாளியும், ராஜதந்திரியும் என்று கூறலாம். கண்டியரசனின் முடிவுக்கு பின்புலத்தில் இயங்கிய சூத்திரதாரி ஜோன் டொய்லி. டொய்லிக்கு வழங்கப்பட்ட பணிகளின் பட்டியல் நீண்டது. அவை அனைத்துமே கண்டியை சூழ்ச்சியின் மூலம் கைப்பற்றுவதற்கான வழிவகைகளைக் கொண்டவை. இரகசிய உளவுச் சேவையை ஆற்றுவதற்கு டொயிலியின் திட்டப் பட்டியல்.
 • அரசருக்கு எதிராக இருக்கும் லமடி பிரதானிகளை அடையாளம் கண்டு அவர்களை வழிநடத்துவது
 • அரசருக்கு நெருக்கமாக இருக்கும் பிரதானிகளை அடையாளம் கண்டு அவர்களுக்குள் அதிகாரப் போட்டிகளை ஏற்படுத்தல்
 • அப்போது இலங்கை முழுவதும் பரந்து வாழ்ந்த பிக்குமார் வலைப்பின்னலின் ஒத்துழைப்பைப் பெறுதல்
 • மலைநாட்டுக்கும், கரையோர பிரதேசங்களுக்கும் இடையில் முன்னர் இருந்த பாதைகளை கண்டு பிடித்தல்
 • தூரத்திலுள்ள கண்டி ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட சிற்றரசுகளுக்கு எதிரான கிளர்ச்சிகளை உருவாக்குதல்
 • கண்டி ராஜ்ஜியத்துடன் தொடர்புள்ள பிரதான குடும்பங்களுக்கிடையிலான சிக்கல்களையும் முரண்பாடுகளையும் கையாள்தல் (இப்போது “தெரண” தொலைக்காட்சியில் “முதுகுட” ('මුතුකුඩ') என்கிற பெயரில் தொடர் நாடகமாக  இந்த கதை ஒளிபரப்பப்பட்டு வருகிறது)
 • பிரித்தானியாவின் உயர்தர குடிவகைகளை சூட்சுமமாக மன்னருக்கு பழக்குதல்
 • கண்டி ராஜ்ஜியத்தில் நெருக்கடி ஏற்படும் காலத்தில் மன்னர் மறைந்திருக்கக் கூடிய பகுதிகளை அறிந்து வைத்திருத்தல்
 • அரசரின் போர் பலம் பற்றி விபரமாக அறிந்து வைத்திருத்தல்
 • உணவு, நீர், ஆயுத தளபாடங்கள், வெடிமருந்துகள் பற்றிய தகவல்களை தேடித் தெரிந்து வைத்திருத்தல்.
 • அவசர காலத்தில் மன்னரின் பொக்கிசங்களை மறைத்து வைத்திருக்கக் கூடிய இடங்களைப் பற்றி தேடி அறிந்து வைத்திருத்தல்

அரசரின் முக்கிய முடிவுகள் பல அவர் எடுக்குமுன்னமே டொய்லிக்கு தெரிந்திருந்தன. அல்லது ஊகிக்க முடிந்தன. அந்தளவுக்கு டொய்லியின் உளவாளிகள் கச்சிதமாக வழிநடத்தப்பட்டார்கள்.அப்பேர்பட்ட உலவாளிகளோடு நிகழ்ந்த உரையாடல்கள் கூட டொய்லியின் நாட் குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எஹெலபொல, மொல்லிகொட, உள்ளிட்ட பல முக்கிய கண்டி பிரதானிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அளவுக்கு நுணுக்கமாக டொய்லி தனது கடமையில் வெற்றி கண்டிருந்தார். கண்டி அரசவையில் இருந்த பலரதும் நம்பிக்கைக்கு பாத்திரமானார். டொய்லி தனது பணிகளுக்காக முதலில் பயன்படுத்தப்பட்டவர் தம்பி முதலி (ஜே.ஆரின் மூதாதையர்.).

டொய்லியின் நாட்குறிப்பு
டொய்லி தனது அனுபவங்களை பின்னர் எழுதினார். அது டொய்லியின் நாட்குறிப்பு (Diary of Mr. John D'Oyly) என்கிற தலைப்பில் வெளியானது. அதில் விரிவாக கண்டியில் நடந்த கதை அனைத்தும் எழுதப்பட்டிருக்கிறது. டொய்லி எழுதிய “மலைநாட்டு அரசாட்சி பற்றிய குறிப்புகள்” (A Sketch of The Constituton of The Kandyan Kingdom) என்கிற நூலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நூல் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மறுபடியும் மறுபடியும் வெளியிடப்பட்டிருக்கிறது. கண்டி ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற கையாண்ட சூட்சுமங்களைப் பற்றி நேரடியாக குறிப்பிடாத போதும் அதற்கான சூழலையும் வாய்ப்புகளையும் உருவாக்கிய விதம் குறித்து பல விபரங்கள் உள்ளன.

கண்டி ராஜ்ஜியத்தின் அரசாட்சி, பொருளாதாரம், சுற்றுச் சூழல், மன்னர், நீதி வழங்கல், வாழ்க்கைமுறை, பண்பாடு, சாதியம் போன்ற விபரங்களை மிகத் துல்லியமான பல தகவல்களை அவர் தனது நூல்களில் எழுதியிருக்கிறார்.  அவை ஒரு மிகப் பெரும் ஆதாரமாக பல எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் இன்று வரை கையாண்டு வருகிறார்கள். சிங்களம் உள்ளிட்ட பல மொழிகளிலும் அது மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நூல்கள் இலங்கையின் வரலாற்றில் முக்கிய நூல்களாக கருதப்படுகின்றன.

பலராலும் பயன்படுத்தப்படும் “சிங்கள சமூக அமைப்புமுறை” (Sinhalese Social Organization: The Kandyan Period. RALPH PIERIS) என்கிற முக்கிய ஆய்வு நூலை எழுதிய ருல்ப் பீரிஸ் அந்த நூலில் கையாண்ட அதிகமான ஆதாரங்கள் டொய்லியின் நூலில் இருந்து தான் பெறப்பட்டுள்ளது.


கண்டியில் புத்த பிக்கு வேடத்திலும், பிச்சைக்காரர் வேடத்திலும் பல ஒற்றர்களை வழிநடத்தியவர். கண்டி பிரதானிகளுடன் சதித் திட்டங்களை தீட்டிக்கொண்டே இருந்ததுடன் எஹெலபொல, பிலிமத்தலாவ போன்றோருடன் தொடர்புகளை பேணிக்கொண்டு இருந்தவர். தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பல பரிசுப் பொருட்களை பலருக்கும் வழங்கினார்.

குறிப்பாக கொழும்பிலிருந்து கண்டி பிரதானிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட குடிவகைகளைப் பற்றியும் அவரது நாட்குறிப்பில் தகவல்கள் உள்ளன. தொப்பிகள், உடைகள், புறாக்கள், விசித்திர பொருட்கள் என அனுப்பப்பட்டுள்ளன. தனக்கு ரகசிய தகவல் வழங்கிய பிக்குமார்களும் இப்படியான பரிசுப் பொருட்களை வழங்கியிருக்கிறார். மன்னர் ஸ்ரீ விக்கிரமசிங்கவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கத்தை ஏற்படுத்தி சாணக்கியமற்ற முடிவுகளை எடுக்கப்பன்ணினார். எஹெலபொல, மொல்லிகொட ஆகியோருக்கு இடையில் இருந்த பிணக்கை சாதகமாக ஆக்கிக்கொண்டு அந்த பிணக்கை அரசவைக்குள் பெரும் பிரச்சினைகளின் தோற்றுவாயாக ஆக்கி கண்டியைக் கைப்பற்றி முடிக்கும்வரை கொண்டு சென்றார் டொய்லி. ஒரு கட்டத்தில் டொய்லியின் உளவாளிகள் என்று சதேகிக்கப்பட்டவர்கள் மன்னரால் கடும் தண்டனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

சமரின்றி வீழ்ந்தது கண்டி
மன்னர் ஸ்ரீ விக்கிரமசிங்கனின் ஆட்சி நன்றாக பலவீனப்படுத்தியதன் பின்னர் தகுந்த சந்தர்ப்பத்தில் பார்த்து எஹெலபொல வழங்கிய இரகசிய தகவல்களைக் கொண்டு இறுதி ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது. கண்டியில் தமது அணிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தமக்கான ஆயுதங்களை கிடைக்கச் செய்யும்படியும் டொய்லிக்கு எஹெலபொல அனுப்பியிருக்கிறார்.

கொழும்பு, காலி, திருகோணமலை, கட்டக்களப்பு, நீர்கொழும்பு பகுதிகளிலிருந்து 8 இராணுவப் பிரிவுகள் கண்டியை நெருங்கிக் கொண்டிருந்த வேளை மன்னர் ஸ்ரீ விக்கிரமசிங்கனின் படை பலவீனமடைந்திருந்தது. அவர் கண்டியைக் கைவிட்டு தலைமறைவானார். 1815 பெப்ரவரி மாதம் எந்தவித மோதலுமின்றி கண்டியை கைப்பற்ற ஆங்கிலேயர்களால் முடிந்தது.

தலைமறைவான மன்னரைப் பற்றி கிடைத்த உளவுத் தகவலைக் கொண்டு மன்னரைப் பிடித்ததும் டொய்லி தலைமையிலான படை தான்.

மன்னரின் கைதுக்குப் பின்னர் கண்டி ராஜ்ஜியத்தின் செல்வாக்கு மிக்க குடும்பங்கள் இரண்டு. ஒன்று மொல்லிகொட குடும்பம் மற்றது எஹெலபொல இவர்களையும் இறுதியில் தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் இலங்கையை ஒட்டுமொத்தமாக தாரைவார்க்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஒப்பந்தம் 02.03.1815 இல் செய்துகொள்ளப்பட்டது. அவ் ஒப்பந்தத்தின் சிங்களப் பிரதியை தயார் செய்ததும் டொய்லி தான். அந்த ஒப்பந்தத்தில் ஆங்கிலேயர்கள் சார்பில் கையெழுத்திட்ட மூவரில் ஒருவர் டொய்லி.

அந்த தருணத்தை 02.03.1815 அன்று தனது நாட்குறிப்பில் இப்படி குறிப்பிடுகிறார்
“கண்டி மண்டபத்தில் பின்னேரம் 4 மணிக்கு கண்டி ராஜ்ஜியம் குறித்து எழுதப்பட்ட பட்டயத்தை தேசாதிபதியாழ் வாசிக்கப்பட்டது. அதனை செவிமடுக்க “அதிகாரம் மார்’, திசாவ மார் உள்ளிட்ட பல கண்டி பிரதானிகளும் வந்திருந்தார்கள். பின்னர் கீழ் மட்ட அதிகாரிகளைத் தவிர்ந்த முக்கிய பிரபுக்களுக்கு வாசித்து காட்டப்பட்டது. பிரித்தானிய ராஜ்ஜியத்தின் கொடி ஏற்றப்பட்டது. அரச வணக்கம் செலுத்தப்பட்டது. சிறந்த மகிழ்சிகரமான நாள். ஆகாயம் தெளிவாக இருக்கிறது.”
மன்னரையும் மன்னர் குடும்பத்தினரையும் கொழும்புக்கு பத்திரமாக அனுப்பிவைத்து வீட்டுக் காவலில் வைத்திருந்தார் டொய்லி. மன்னரின் பொக்கிசங்களைப் பற்றிய தகவல்களை மன்னரிடம் இருந்து கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

இங்கிலாந்துக்கு கடத்தப்பட்ட இலங்கை பொக்கிசங்கள்
மன்னர் ஸ்ரீ விக்கிரசிங்கனை அடிக்கடி சந்தித்து அவரின் தேவைகளை நிறைவேற்றுவதிலிருந்து இந்தியாவில் வேலூருக்கு குடும்பத்துடன் நாடு கடத்தும் வரையான அத்தனையையும் மேற்கொண்டதும் டொய்லி தான். மன்னர் பிடிபட்டதன் பின்னர் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவரது சொத்துக்களைத் தேடி கையகப்படுத்தும் வேலையும் டொய்லியால் சாத்தியப்பட்டது. வெவ்வேறு சுரங்கங்களில் வைக்கப்பட்டிருந்த அந்த பொக்கிசங்களை “அரச பொக்கிசங்கள்” என்கிற பெயரில் 1820 ஆம் ஆண்டு லண்டனில் ஏலத்துக்கு விடப்பட்டு ஏராளமான பணத்தை பிரிட்டிஷ் அரசு உழைத்தது. இவை டொய்லியால் சாத்தியமானது.

டொய்லி இலங்கையை விட்டுச் செல்லும் போது பெருமளவு நம் நாட்டு பொக்கிசங்களையும் எடுத்துச் சென்றார். பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட இராவணனின் சிலை உட்பட பலதும் இன்றும் பிரித்தானிய மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இராவணனின் சிலைகளும் ஆயுத பூஜைகளின் முக்கியத்துவத்தை மொல்லிகொட நிலமே டொய்லியிடம் கூறியதாகவும் சிங்களப் படைகளின் பலத்துக்கு இராவண பூஜையின் பங்கு முக்கியமானது என்றும் கூறப்பட்டிருப்பதாக சிங்கள ஊடகங்களிலும் நூல்களிலும் காணக் கிடைக்கிறன. அதனைத் தொடர்ந்து “மாறகலகந்த” எனும் இடத்தில நிலத்துக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பண்டைய கோவிலில் இருந்து எடுத்த இராவணனின் சிலையை டொய்லி இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்றதாக அந்த கட்டுரைகளில் காண முடிகிறது. இந்த தகவலின் நம்பகத் தன்மை ஆராயப்படவேண்டியவை. இங்கிலாந்து மியூசியத்திலுள்ள அந்த சிலை இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறபடுகிறது. ஆனால் அதே சிலைக்கு ஒப்பான சிலைகளை சிங்களவர்கள் வணங்கும் கோவில்களில் இன்றும் காண முடிகிறது.

கண்டி ஆங்கிலேயர்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் டொய்லியின் சேவைக்குப் பரிசாக பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் அதிகார பூர்வமான பிரதிநிதி (Recident என்று அழைப்பார்கள்) என்கிற பட்டம் வழங்கப்பட்டது. 06.03.1815 டொய்லி ஆளுநர் பிரவுன்றிக்குக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதமும் காணக் கிடைக்கிறது.
அதன் பின்னர் கெப்பட்டிபொல தலைமையிலான ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சியை அடக்குவதிலும் அன்றைய தேசாதிபதி டொய்லியின் ஒத்துழைப்பை அதிகம் நம்பியிருந்தார்.

1800களில் நடந்த நிகழ்வுகளை ஆராய்பவர்கள் ஜோன் டொய்லியின் நாட்குறிப்புகளையும் அவரின் நூல்களையும் தவிர்த்துவிட்டு ஆராய்வதில் பயனில்லை. 

இலங்கையில் இறந்த டொய்லி
25.05.1824 அன்று டொய்லி காய்ச்சலால் மரணமாகும்போது அவருக்கு வயது 49. இறுதி வரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. கண்டி கெரிசன் மயானத்தின் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். இலங்கையில் மரணமான ஆங்கிலேயர்களுக்காக கண்டியில் அமைக்கப்பட்டது தான் கெரிசன் (Garrison cemetery) மயானம். 

 இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் 2013 இல் இலங்கை வந்த வேளை இங்கு வந்து மரியாதை செலுத்தி விட்டுச் சென்றார். அந்த மயானத்தை இன்னமும் இங்கிலாந்து அரசாலேயே முகாமை செய்யப்பட்டு வருகிறது. தலதா மாளிகைக்கு உயரமான இடத்தில் இருப்பதால் அந்த மயானம் அகற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை சிங்கள பௌத்த தரப்பினரால் பலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.
கண்டி தலதா மாளிகைக்கு பின்னால் அமைந்துள்ள நூதனசாலையின் வாயிலில் உள்ள ஜோன் டொய்லியின் சிலை.
டொய்லியின் மாபெரும் சேவைக்காக பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் அரச விருதான “நைட்” பெயரும் அவருக்கு வழங்கப்பட்டது. ஒரு நாட்டைக் கைப்பற்றுவதற்கான சிறந்த நடைமுறை தந்திரோபாயங்கள் எவை என்பது பற்றிய வேலைத்திட்டத்தை மேற்குலகுக்கு கற்றுக்கொடுத்தவர் டொய்லி. நவகாலனித்துவத்தின் நவீன தந்திரோபாயத்தை போதித்தவ முக்கியமானவர் டொய்லி என்பார்கள்.

இலங்கையின் வரலாற்றில் டொய்லி ஒரு நயவஞ்சகன். ஆங்கிலேயர்களுக்கோ அதிக இரத்தம் சிந்தாமல்  இலங்கையைக் கைப்பற்ற காரணமாக இருந்த சாணக்கியன். 

நன்றி - வீரகேசரி (சங்கமம்)


மலையக வீடமைப்பு: மேற்கிளம்பும் இனவாதம் - ஜீவா சதாசிவம்


இனவாதம் தொடர்ச்சியாக தலைவிரித்தாடும் இலங்கையில் அதன் வளர்ச்சிவேகம் குறைந்த பாடில்லை. அதுவும் பாரதப்பிரதமரின் இலங்கை விஜயத்தின் பின்னர் எழும் பல இனவாத கருத்துக்கள் இந்நாட்டில் எப்போதும் ஒரு சமாதானத்திற்கான வழி இல்லை என்பதற்கு எச்சரிக்கை விடுப்பதாக  இருக்கின்றது. இதன் வாதப்பிரதிவாதங்கள் தென்னிலங்கையில் தலைவிரித்தாடுகின்ற நிலையில் அது பற்றி நாளுக்கு நாள் பலதரப்பட்ட கருத்துக்கள்  உருவகித்து வெளிப்படுத்தப்படுகின்றன.

பாரதப்பிரதமரின் மலையக விஜயத்தின் போது அறிவித்த கருத்துக்கள் கொழும்பு அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தாயிரம் வீடுகள் உட்பட இதர சில விடயங்களை மலையகத்துக்கு வழங்குவதாக அவரது அறிவித்தலின் பின்னர் பல  இனவாதிகள் தமது கருத்துக்களை கக்க தொடங்கி விட்டனர். இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவளியினரான மலையகத்தமிழ் மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் அவர்களின் அடிப்படை அரசியல் இருப்புக்களையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய தார்மீக  பொறுப்பும்  கடப்பாடும் இந்தியாவிற்கு இருக்கின்றது.

மலையக மக்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கிய ஸ்ரீமா –  சாஸ்தரி ஒப்பந்தத்தின் பின்னர் மலையகத் தமிழ் மக்கள் இந்நாட்டில் சனத்தொகையில் இரண்டாவது இடத்திலிருந்து  நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்ட விடயம் யாவரும் அறிந்ததே. அந்த ஒப்பந்தமே  அம்மக்களின் அரசியல் இருப்பினை கேள்விக்குறியாக்கியதுடன் இன அடையாளத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இம்மக்கள் இன்று இலங்கையில் இருந்தாலும் இவர்கள் இலங்கைத் தமிழர்களாக முழுமையாக இன்று அங்கீகரிகப்பட்டுள்ளார்களா? இப்படி பல தரப்பட்ட கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இது இவ்வாறிருக்க பாரதப்பிரதமரின் வருகையின் பின்னரான சில விடயங்களைப்பற்றி இக்கட்டுரையில் குறிப்பிடுகின்றேன்
''பாரதப் பிரதமர் மோடி மலையகத்துக்கு வருவதனால் மாத்திரம் எல்லாம் நடந்துவிடுமா?''. இவ்வாறானதொரு கேள்வி அவர் இலங்கை வருமுன் பலரது மனதிலும் எழுந்தது. அது பற்றிய கருத்து பரிமாற்றங்கள் வலைத்தளங்கள், சமூக ஊடகங்களிலும் ஆதிக்கம் செலுத்தின. ஆனால், அவரது விஜயத்தின் பின்னரே 'மலையகம்'  இன்று சர்வதேசரீதியில் பேசும் அளவுக்கு வந்துள்ளதனை கடந்தவாரத்தில் இந்தியாவில் உள்ள பிரபல ஊடகங்களில் மலையகம் தொடர்பாக வெளியான பல கட்டுரைகள், நேர்காணல்கள் என்பன வெளிப்படுத்தின.
ஏன்? உள்ளூரில் உள்ள ஆங்கில ஊடகங்களில் கூட மலையகம் பற்றியதான விடயம் அழுத்தமாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.

எப்படியோ ஒரு பெருந்தலைவரின் வரலாற்று முக்கியத்துவமிக்க விஜயத்தினால்  இவ்வளவு காலமும் 'பின்தங்கிய' சமூகமாக பேசப்பட்டு வந்த மலையகம் வெளி உலகுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த பின்தங்கிய சமூகத்தின் வளர்ச்சி குறித்து அவர்களின் நலன் குறித்து அதிகளவு கரிசனை கட்ட வேண்டிய இந்தியா பல அறிவிப்புக்களை விடுத்துள்ளமையானது இங்குள்ள இனவாதிகளுக்கு பெரும் வாதமாகவே இருந்துவிட்டது. இதே அறிவிப்பினை தெற்குக்கு அறிவித்திருந்தால் அவர்களின் மனம் எப்படி குளிர்ச்சியடைந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு தேவையும் இங்கு எழுகிறது. ஆனால், இந்த அறிவிப்பின் பின்னர், ''தெற்கிற்கு உதவினால் சகோதரத்துவம் ,மலையகத்திற்கு உதவினால் இனவாதம்'' எனும் தொனியில் கருத்துக்கள் வெளியாகின்றன. பொதுவாக தமிழர்களுக்கு வெளிநாடுகள் கரிசனை காட்ட முனையும் போது தென்னிலங்கை கொதித்தெழும்புவது புதிதான விடயமும் அல்ல.

மலையகத்துக்கான பத்தாயிரம் வீடுகள், இதர வசதிகள் வழங்குவது பற்றி மோடியின் அறிவிப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில கூறிய கருத்துக்கு அமைச்சர் மனோகணேசன் விடுத்திருந்த அறிக்கையின் ஒரு பகுதியை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும் ''மோடி, மலையகம் சென்று, தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை அமைத்து தர உறுதியளித்துள்ளார். அதேபோல், இலங்கையில், இந்தியா ஏற்கனவே வழங்கிவரும் இலவச அம்புலன்ஸ் என்ற மருத்துவ வாகன வசதியை இன்னும் ஏழு மாகாணங்களுக்கு விஸ்தரிப்பது தொடர்பாகவும் அறிவித்துள்ளது.  இவை பற்றிய பின்னணிகளை அறியாமல், புரிந்துகொள்ள முயற்சி செய்யாமல், இத்தகைய அறிவிப்புகளை செய்ய நரேந்திர மோடி யார்? இலங்கை இந்தியாவின் 30ஆவது மாநிலமா? என்ற கேள்விகளை எழுப்பி, அதன்மூலம் இவற்றுக்கு தவறான அர்த்தங்களை கற்பித்து, சிங்கள மக்களை தூண்டிவிடும் முகமாக, இனவாத பைத்தியம் பிடித்த நிலையில் கூட்டு எதிரணி எம்.பி உதய கம்மன்பில பேசி வருகிறார்'' என்று அமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாரதப்பிரதமரின் விஜயத்தின் பின்னர்  சிங்கள பத்திரிகைகள், சமூக ஊடகங்களில் பெரும்பான்மை தரப்பினரால் விடுக்கப்பட்ட  கருத்துக்கள் அவர்கள் எவ்வாறான ஆத்திரத்தில் இருக்கின்றார்கள் என்று எண்ணிக்கொள்ளலாம். முஸ்லிம்களுக்கு அரபு நாடுகள் வீடுகள் கட்டிக் கொடுக்கின்றன, வடக்கு கிழக்கிலுள்ளவர்களுக்கு டயஸ்போரா காரர்கள் கட்டிக் கொடுக்கிறார்கள், மலையகத்தவர்களுக்கு இந்தியா கட்டிக்கொடுக்கிறது. சிங்களவர்களுக்கு இப்படியொரு அநியாயம் நடக்கிறது என்பதையும் இத்தளங்களில் சுட்டிக்காட்டத்தவறவில்லை.

இதுவரை இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவி நடவடிக்கைகளில் மலையகத்துக்கு எவ்வளவு வந்து சேர்ந்தது என்று மலையகத்தில் இருந்து கேள்வி தான் எழுப்பியிருக்கிறோமா...? ஆம்!!! பத்தாயிரம் வீடுகள் குறித்து பேசுவதற்கு முன்பு இதுவரை இந்தியா இலங்கைக்கு எவ்வாறான உதவிகளை வழங்கியுள்ளது என்பது பற்றி குறிப்பிட வேண்டிய தேவையும் இங்கு எழுந்துள்ளது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு 458 மில்லியன் அமெரிக்க டொலர், இந்திய வீடமைப்புத்திட்டத்திற்கு 1372 கோடி இந்திய ரூபாய்கள். (இதில் 46,000 வடக்கு, கிழக்கு பகுதிக்கு – 4000 மலையகப் பகுதிக்கு) நடைபெறும் திட்டங்கள், யாழ்ப்பாணத்தில் கலாசார மத்திய நிலையம், திருக்கேதீஸ்வரம் ஆலயத்தினை புனரமைத்தல், வடக்கு, கிழக்கு பகுதியில் 3000 மழை நீர் சேமிப்புத்திட்டம், யுத்தத்தின் பின்னர் வடக்கிற்கான இரயில் பாதை புனரமைப்பு, சுனாமியின் பின்னர் தெற்கிற்கான இரயில் பாதை புனரமைப்பு, யாழ்ப்பாணத்தில் கைவினைப்பொருட்களின் உற்பத்தியை செய்யும் கிராமங்களை விருத்தி செய்தல், மட்டு. போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை பிரிவு ஒன்றை அமைத்தல், இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் புலமைப்பரிசில் பரீட்சை (இதில் சிங்கள மாணவர்களும் அடக்கம்), மாத்தளை, மகாத்மா காந்தி நிலையம், மேல்மாகாணத்திற்கு மாத்திரம் இந்தியா வழங்கி வந்த அம்புலன்ஸ் சேவைத் திட்டம் இப்போது எல்லா மாகாணங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

றுஹுணு பல்கலைக்கழகத்தில் ரவீந்திரநாத் தாகூரின் பெயரில் கேட்போர் கூடம், அம்பாந்தோட்டையில் கைவினைப்பொருட்களின் உற்பத்தியை செய்யும் கிராமங்களை விருத்தி செய்தல், அம்பாந்தோட்டையில் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் சைக்கிள்கள் போன்றவற்றை வழங்கிவைத்தமை, பொலனறுவையில் பல்லின மாணவர்கள் கற்கும் பாடசாலை ஒன்றை விருத்தி செய்தல் இந்த திட்டங்களுடன் ஒப்பிடும்போது மலையகத்திற்கான 10000 வீடுகள் என்பது இந்திய உதவித்திட்டத்தின் சிறு பகுதியே..

இந்தியா இலங்கையில் காலங்காலமாக  தனது உரித்தை நிலைநாட்டவும் தனது கையை வைத்திருப்பதற்கும் இலங்கையின் பிரச்சினைகளை கையாண்டு வந்திருக்கிறது. யுத்தத்தின் பின்னர் இப்போது மீண்டும் மலையகத்தில் இந்தியா நுழைந்திருக்கிறது, மலையகத்துக்கு வந்த முதலாவது இந்தியப் பிரதமர் மோடி. நேரு இலங்கை வந்திருந்த போது அவர் பிரதமராக இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. தனது பிடியை வைத்திருக்க வேண்டுமென்றால் முழுமையாக அந்த பிரச்சினையை இந்தியா தீர்க்கவும் விரும்பாது. தீர்க்க விரும்பியதும்  இல்லை. எனவே தான் இந்தியா மலையக விடயத்திலும் இம்முறை நிரந்தர அரசியல் தீர்வு விடயம் குறித்து ஒன்றும் பண்ணவுமில்லை. அதற்கான சிறு சமிக்ஞையைக் கூட காட்டவுமில்லை. ஆனால், நிவாரண விடயங்களில் அது கவனம் செலுத்தியிருக்கிறது.
காலங்காலமாக இந்த நிவாரண அரசியலுக்குள் சிக்கித் தவித்து, அடிப்படை அரசியல் தீர்வை அடுத்தடுத்த நிலைக்கு தள்ளிய கைங்கரியத்தை மலையக அரசியல் தலைவர்களும் காலங்காலமாக செய்து வந்திருக்கிறார்கள். “நிவாரண அரசியலுக்கு” மலையக மக்கள் பழக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்தியாவும் நன்றாக தெரிந்துதான் வைத்திருக்கிறது. அது மக்கள் மத்தியில் எவ்வாறான வரவேற்பை கொடுக்கும் என்பதையும் அறிந்து வைத்துள்ளது.

ஏன், அதற்கான தேவையும் இருக்கவே செய்கிறது. ஆனால், அதைத் தாண்டி ஏன் இந்தியாவால் எதையும் செய்ய முடிவதில்லை என்பதே நமக்கு இருக்கும் அடுத்த கேள்வி. பேரினவாதமயப்பட்ட இலங்கையின் அரசியல் இயந்திரம் மலையக மக்களுக்கு இத்தனை காலம் செய்து கொடுக்காததைத் தான் இன்னொரு நாடு வந்து செய்து தந்து போயிருக்கிறது.
சிங்கள மக்களின் வரிப்பணத்தில் அல்ல இந்த வீடு, ஆஸ்பத்திரி, கல்வி போன்ற அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படுகின்றன என்பதையும் பேரினவாத சக்திகளுக்கு நினைவுறுத்த வேண்டியிருக்கிறது.

மலையகத்தில் நிலவும் உயர்தர பாடங்களுக்கான கணித, விஞ்ஞான பிரிவுக்கான பட்டதாரி ஆசிரியர் பற்றாக்குறையின் காரணமாக இந்தியாவிலிருந்து தருவிக்க கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் கோரியிருந்தார். மோடி விஜயம் செய்த காலத்திலேயே இந்த செய்தியும் வெளியாகியிருந்ததால் ஒட்டுமொத்த இந்திய எதிர்ப்பு வாதத்துடன் இதனையும் இனவாதிகள் சேர்த்துக் கொண்டார்கள். இந்தியாவின் காலணியாக இலங்கையை ஆக்கிவிடுவதில் மலையகத் தலைவர்கள் எத்தனிக்கிறார்கள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இலங்கையின் அரசியல் இயந்திரம் மலையக மக்களையும் சமத்துவமாக நடத்தியிருந்தால் ஏன் இந்த உதவிகளை ஏற்க வேண்டும். சாதாரண அடிப்படை உரிமைகளுக்காகவும் போராடிக்கொண்டே இருப்பதை வாழ்க்கையாகக் கொண்ட மக்களின் முன் உள்ள தெரிவு தான் என்ன. நாட்டில் சுதந்திரக் கல்வி ஆரம்பிக்கப்பட்டு 70 வருடங்கள் ஆகியும் அதன் உள்ளடக்கத்தை மலையகம் எட்டுவதற்கு பல ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. இன்றும் மலையகத்துக்கு முழுமையாக போய் சேரவில்லை. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

பாரதப்பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் வெசாக் நிகழ்வுகளை மையப்படுத்தி அமைந்தது. மலையக விஜயம் இரண்டாம்பட்ச நிகழ்ச்சிநிரல் தான். இந்த பயணம் நேரடியாக மலையகத்தை மட்டுமே மையப்படுத்தி நிகழ்ந்திருந்தால். அதன் அரசியல் விளைவுகள் வேறு மோசமான வடிவத்தைத் தந்திருக்கும் என்பதை இப்போது எழும் இனவாதக் கருத்துக்கள் மூலம் அறியலாம்.

மோடியின் வருகையை ஏற்கனவே எதிர்க்கத் தொடங்கியிருந்தார்கள் இந்திய எதிர்ப்பு பெரும்பான்மை சக்திகள். இந்தியாவோடு மேற்கொள்ளவிருக்கும் ஒப்பந்தங்கள் உட்பட பலதரப்பட்ட விடயங்களையும் கறுப்பு கலரை மையப்படுத்தி கருத்துக்களை தெரிவித்தார்கள். ஆனால், இறுதியில் நடந்தது ஒன்றுமில்லை.

இதனை கடந்த வாரங்களில் பல செய்திகள் வெளிப்படுத்தியிருந்தன.  இந்த இனவாத நோக்கம் இருக்கும் வரைக்கும் இலங்கை அரசியலில் எந்தவொரு சமாதானத்துவத்தையும் உருவாக்க முடியாது. இனவாத பேச்சுக்காக விஜயன் இந்தியாவில் இருந்து வந்தார் என்று மகாவம்சம் குறிப்பிட்டிருப்பதையே பொய் என ஞானசார தேரர் சொல்வதற்கு கூட தயங்கவில்லை என்பதை அண்மையில் அமைச்சர் மனோவுடனான வாக்குவாதத்தில் அப்பட்டமாக வெளிப்படுத்தியிருந்தார்.

குறுகிய அரசியல் இலாபத்துக்காக எழும் தொடர் இனவாத பார்வையின் கண்ணோட்டமே தொடர்ச்சியாக இந்த நாட்டை இதே நிலைமையில் வைத்திருப்பதற்கும் சமாதானமற்ற நாடாகவும் ஒரு இன வன்முறைக்கான அறிகுறியாக தொடர்ச்சியாக தெரிகின்றது.

இந்நிலைமையின் உச்ச கட்டம் கடந்த ஆட்சியில் இருந்தமையினாலேயே அந்த ஆட்சி ஆட்டம் கண்டதுடன் அதன் விளைவாக மாற்றமும் ஏற்பட்டது. இந்த ஆட்சியிலும் இந்நிலை தொடர்வதை இந்நல்லாட்சி அனுமதிக்குமானால் கடந்த ஆட்சியில் இருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதாக இந்த ஆட்சி அமையாது.

நன்றி - வீரகேசரி


 

இணைந்திருங்கள்


Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates