Headlines News :
முகப்பு » , , , , » விக்டோரியா கண் ஆஸ்பத்திரியும் ஸ்கின்னரின் தற்கொலையும் (கொழும்பின் கதை - 47) - என்.சரவணன்

விக்டோரியா கண் ஆஸ்பத்திரியும் ஸ்கின்னரின் தற்கொலையும் (கொழும்பின் கதை - 47) - என்.சரவணன்

விக்டோரியா மெமோரியல் கண் மருத்துவமனையானது (Victoria Memorial Eye hospital) அதன் கம்பீரமான கட்டிடக்கலையுடன் கொழும்பில் ஒரு முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. இது லிப்டன் சுற்றுவட்டத்தைச் சூழ்ந்த கட்டிடங்களில் பெரிய கட்டிடம் இது. உலகம் முழுவதும் பிரபலமான சிலோன் தேயிலையை நினைவுகூருவதற்காக பெயரிடப்பட்ட சுற்று வட்டமே லிப்டன் சுற்றுவட்டம் என்பதை நாம் அறிவோம். மகப்பேறு மருத்துவமனையை நடத்தி வந்த பரோபகாரரும் தொழில்முனைவோருமான சார்ள்ஸ் ஹென்றி டி சொய்சாவின் பெயரால் டி சொய்சா சுற்று வட்டம் என்று அழைக்கப்படுகிறது. 1906 இல் நிறுவப்பட்ட விக்டோரியா நினைவு மருத்துவமனைக்கு விக்டோரியா மகாராணியின் வைர விழாவைக் கௌரவிக்கும் வகையில் பெயரிடப்பட்டது.

இந்த சிவப்பு செங்கல் கட்டிடமானது காலனித்துவ காலத்தை நினைவு கூறும் முக்கிய கட்டிடங்களில் ஒன்று. 1894 ஆம் ஆண்டு இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞரான எட்வர்ட் ஸ்கின்னரால் (Edward Skinner) இது வடிவமைக்கப்பட்டது. அதன் கட்டுமான வெளித்தோற்றத்தில் பயன்படுத்தப்பட்ட சிவப்பு செங்கற்கள் பிரமாண்டமானதும் தனித்துவமானதுமான தோற்றத்தை அளிக்கிறது. சிவப்பு செங்கற்களினாலான கட்டிட அமைப்புமுறையின் வரலாறானது மத்திய, வடமேற்கு ஐரோப்பாவில் 12 ஆம் நூற்றாண்டுக்கும் முந்தையது. லண்டனில் உள்ள பல பிரபலமான 19 ஆம் நூற்றாண்டின் மருத்துவமனைகள் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனை மற்றும் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனை (Moorfields Eye Hospital) போன்றவை சிவப்பு செங்கற்களால் செய்யப்பட்டவை.


கொழும்பில் காலி முகத்திடல் ஹோட்டல் (மீள் நிர்மாணம்), கார்கில்ஸ் கட்டிடம், விக்டோரியா மேசோனிக் தேவாலயம், வெஸ்லி கல்லூரி, கோட்டையில் உள்ள லொய்ட்ஸ் (Lloyds) கட்டிடம், மற்றும் காலி வீதியில் உள்ள செயின்ட் அன்ட்ரூஸ் ஸ்கொட்ஸ் தேவாலயம் (St. Andrew’s Scots Kirk) உள்ளிட்ட பல முக்கிய கட்டிடங்களை வடிவமைத்தவர் எட்வர்ட் ஸ்கின்னர். மேற்கத்திய கட்டிடக்கலையில் கோதிக் மறுமலர்ச்சி 20 ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தாலும், எட்வர்ட் ஸ்கின்னர் இந்த கண் மருத்துவமனைக்கு இந்தோ-சராசெனிக் (Indo-Saracenic) வடிவத்தை முடிவு செய்தார். குவிமாடங்களின் வடிவமைப்பும் கட்டுமானமும் முகலாயர் காலத்து கட்டிடக்கலையை நினைவூட்டுகிறது. அதுபோல் கதவுகளிலும், ஜன்னல்களின் நேர்த்தியான, அழகான பாலிக்ரோம் (polychrome) செங்கல் வளைவுகள் உள்ளன. கட்டிடக்கலை ரீதியாக அது உலகின் சிறந்த காலகட்டத்தின் நினைவைத் தொடர்ந்தும் தக்க வைத்திருக்க முடியும். 


அன்றைய பிரிட்டிஷ் ஆளுநர் சேர் ஜோசப் வெஸ்ட் ரிஜ்வேயின் (Sir Joseph West Ridgeway) மனைவி, லேடி ரிட்ஜ்வே என்று அழைக்கப்பட்ட கரோலினா எலன் (Carolina Ellen), 1903 ஓகஸ்ட் 6 அன்று விக்டோரியா கண் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இக்கட்டிடத்தைக் கட்டும் யோசனையை முன்வைத்தவரும் லேடி ரிஜ்வே தான். 1902ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி அவர் ஊடகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இப்படிப்பட்ட ஒரு ஆஸ்பத்திரியை நமது இராணியின் நினைவாக கட்டுவதற்கு ஆதரவு தரும்படி வேண்டினார். அதன் விளைவாக பல தனவந்தர்களும் பொது மக்களும் நிதியளித்தார்கள். உடனடியாக 30,000 ரூபா சேர்ந்தது. இறுதியில் அது ஒரு லட்சம் வரை உயர்ந்தது. அன்று நாட்டுக் கோட்டை செட்டியார்கள் மாத்திரம் 4000 ரூபாய் இதற்காக வழங்கினார்கள். திருமதி ஜேம்ஸ் பீரிஸ் 5000 ரூபாய் வரை சேகரித்துக் கொடுத்தார்.


இதற்காக நிதி வழங்கிய பலரின் பெயர் பட்டியல் Arnold Wright, எழுதிய “Twentieth Century Impressions of Ceylon” நூலில் காணக்கிடைகிறது. பி.குமாரசுவாமியின் பெயரும் அதில் அடங்கும். அன்று தனவந்தர்களாக இருந்த சேனநாயக்க குடும்பத்தைச் சேர்ந்த டீ.எஸ்.சேனநாயக்க இக்கட்டிடத்துக்காக வழங்கிய நிதிப் பங்களிப்பின் காரணமாக ஆங்கிலேய ஆளுநர் ரிஜ்வே முதலியார் பட்டம் வழங்கி கௌரவித்தார். பொது மக்களிடம் இருந்து அவர்கள் எதிர்பார்த்ததை விட கிடைத்தது. அரசும் தனது பங்கையும் சேர்த்து கட்டிய கட்டிடம் தான் இது. சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் மொத்தம் இரண்டரை லட்சம் ரூபாய் இந்த ஆஸ்பத்திரியை உருவாக்கி முடிக்க செலவாகியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பலரின் மிகுந்த நம்பிக்கையுடன் சிறந்த கண் மருத்துமனையாக 1906 ஏப்ரல் 2ஆம் திகதி பொதுப்பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.  அது திறந்து புதிய ஆளுநர் மாற்றப்பட்டிருந்தார் எனவே புதிய ஆளுநரின் மனைவி லேடி எஷ்மோர் (Lady Ashmore) திறந்து வைத்தார்.  1906 ஆம் ஆண்டில் இது காலனி நாடுகளிலேயே சிறந்ததாகக் கருதப்பட்டது. இது இப்போது இலங்கையின் தேசிய மருத்துவமனையின் ஒரு பகுதியாகும்.  

பிற்காலத்தில் கண் மருத்துவ சேவைகள் பழைய மருத்துவமனையிலிருந்து எதிர் மூலையில் இருந்த புத்தம் புதிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 1962 இல் கொழும்பு புதிய தேசிய கண் மருத்துவமனை நிறுவப்பட்டது. பழைய விக்டோரியா நினைவு மருத்துவமனையின் சில பகுதிகள் சிதைக்க அனுமதிக்கப்பட்டாலும், இம்மருத்துவமனை தொடர்ந்தும் சேவை அளித்து வந்தது. சுகாதாரத் துறையில் இடத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் 1967 ஆம் ஆண்டு பிரதமர் டட்லி சேனாநாயக்க விக்டோரியா ஞாபகார்த்த வைத்தியசாலையில் திடீர் விபத்து சேவையை திறந்து வைத்தார். அதனைச் சூழ இருந்த பகுதியானது சின்னபொரளை வரை கொழும்பின் மருத்துவ மனைகளின் மத்திய தளமாக மாறியது. கொழும்பு மட்டுமன்றி இலங்கையின் மூளை முடுக்கெங்கிலும் இருந்து தரமான மருத்துவ சேவையை நாடிவரும் சாதாரண குடிமக்களின் நம்பிக்கை ஆலயங்களாக இந்த மருத்துவக் காடு திகழ்கிறது. நாளாந்தம் உடல்நலம் வேண்டி, நாடி  வரும் லட்சோப பாமர மக்கள் இன்றும் பயனடையும் இடமாக இது இன்று மாறியிருக்கிறது.


லிப்டன் சுற்றுவட்டத்தின் இன்னொரு புறத்தில் இன்று இருக்கிற அரச மருந்தகற் கூட்டுத்தாபனமான “ஒசுசல” கட்டிடம் ஒரு காலத்தில் அழகான பீக்கிங் ஹோட்டலாக இருந்தது. இன்று அப்படி ஒன்று இருந்ததை அறிந்தவர்கள் குறைவு.

விக்டோரியன் கட்டிடங்களின் பொது மருத்துவமனையானது குறுகிய தாழ்வாரங்களையும், ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு கட்டிடத்துக்குச் செல்லும் கூரைபோட்ட பாதைகளும், அவற்றைக் கடந்து வரும் கலவரப்பட்ட சோக மனிதர்களும், நோயாளிகளும், எப்போதும் பல மருந்துகளின் கலவை மணம் பரவிய சூழலும் எவருக்கும் மகிழ்ச்சியைத் தந்து விடாது.

இங்கே பல ஆண்டுகளாக பணிபுரிந்த டொக்டர் நிமால் அமரசேகர இந்த மருத்துவமனை குறித்து எழுதிய விபரங்கள் சுவாரசியமானவை.

“...இரவில், அதன் பெரும்பகுதி இருட்டாகவும், வெளிச்சமின்றியும் சமீப காலம் வரை இருந்தது. இருளில் அவை அச்சுறுத்தும் பாதைகளாக இருந்தன. பெரும்பாலான பழைய கட்டிடங்கள் பேய் குடிகொண்டிருக்கும் கட்டிடங்களாக உலகளவில் ஒரு விசித்திரமான நம்பிக்கை உள்ளது. அங்கெல்லாம் இரவில் மர்மமான நிகழ்வுகள் நடந்ததாக பல கதைகள் உள்ளன. சிலர் மருத்துவமனையை சூழ பேய் உருவங்கள் உலாவுவதாக நம்பினர். அந்தக் கட்டிடத்தில் தூங்கிக் கொண்டிருந்த மருத்துவர்கள் விசித்திரமான சத்தங்களைக் கேட்ட கதைகளை பகிர்ந்திருக்கிறார்கள். மற்றவர்கள் மூடிய கதவுகளின் வழியாக மனித உருவங்கள் தோன்றுவதைப் பார்த்தார்கள். நான் இரத்த வங்கியில் ஒரு மங்கலான அறையில் தூங்கினேன். எனது எல்லா வருடங்களிலும் எனக்கு கீழே இருந்த விபத்து சேவையிலிருந்து அவ்வப்போது வலியின் அழுகை அல்லது விரக்தியின் அலறல்களைத் தவிர வேறு எதையும் நான் பார்த்ததில்லை அல்லது கேட்டதில்லை....”


விக்டோரியா கண் மருத்துவமனை, கட்டிடக் கலைஞர்கள் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் அக்கட்டிடங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அனால் அது இன்று அதன் முக்கியத்துவம் அலட்சியம் செய்யப்பட்ட ஒன்றாக ஆகியிருக்கிறது. அதன் செங்கற்களால் ஆன முகப்பின் பிரமாண்டத்தையும் மகத்துவத்தையும் மறைக்கும் வகையில் பெரிய விளம்பரப் பலகைகளாலும் கதைகளாலும் மூடப்பட்டு காட்சி தருகின்றன. அற்புதமான நுழைவு வாயில்களும் நேர்த்தியான தாழ்வாரமும் இப்போது பயன்பாட்டில் இல்லை.

இலங்கையின் தேசிய வைத்தியசாலையின் ஒரு அங்கமாகவே இந்த வைத்தியசாலை உள்ளது. அவசர விபத்து சேவை, அவசர சேவை, தீக்காயங்கள் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் சில நரம்பியல் சத்திரசிகிச்சை சேவைகளையும் கொண்டிருப்பதுடன், ஆயிரக்கணக்கான நோயாளிகள் தங்கி சிகிச்சை பெரும் வைத்தியசாலை தொகுப்பாக இன்று விரிந்திருக்கிறது.


புதிய கண் மருத்துவமனை ஒரு பெரிய கான்கிரீட் தொகுதியாகத் தோன்றினாலும், இது நவீன அமைப்பைக் கொண்ட அதிநவீன மருத்துவமனை மற்றும் மிக சமீபத்திய வசதிகளைக் கொண்டது. பெரிய வார்டுகள், சிறந்த வெளிச்சம் மற்றும் சத்திரசிகிச்சை வசதிகளுடன், மருத்துவ நிபுணர்களுக்கு மிகவும் சிறந்த பணிச்சூழலாக இருக்கிறது. விசாலமான காத்திருப்பு அறைகள் மற்றும் வெளிநோயாளர் கிளினிக்குகளுக்காக ஒதுக்கப்பட்ட பெரிய காற்றோட்டமான பகுதிகள் பொதுமக்களுக்கு வசதியாக காணப்படுகிறது.

நிகழ்காலம் அனைவரையும் பிடிக்கும், ஆனால் கடந்த காலம் நம் வாழ்வில் எப்போதும் நிலைத்து இருக்கும். நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றாலும், இப்போது கூட வண்ணப்பூச்சு வேலைபாடு சூரிய ஒளியில் அக்கட்டிடத்தின் புறத்தோற்றம் ஒரு தலைசிறந்த படைப்பென வெளிப்படுத்துகிறது.

எட்வர்ட் ஸ்கின்னர் (15.03.1869 – 26.12.1910)

ஸ்கின்னர் ஒரு தலைசிறந்த கட்டிடக் கலைஞர். 1893ஆம் ஆண்டு அவர் கட்டிடக் கலைஞராக உயர்கல்வியைக் கற்று பிரித்தானிய ராஜரீக கட்டிடக்கலை அமைப்பில் இணைந்த கையோடு அதே ஆண்டு தனது 24வது வயதில் இலங்கைக்கு குடிபெயர்ந்தார். 1897இல் இருந்து தான் அவர் கொழும்பில் தனது கட்டிட வடிவமைப்புகளை தொடங்கினார். அவரது கட்டிடக்கலை ஞானமும் வடிவமைப்பும் கொழும்பு நகரத்தின் பாராட்டைப் பெற்றன. கொழும்பின் காலனித்துவ கால கட்டிடங்களை நினைவு கொள்ள எஞ்சியிருக்கும் அழகான கட்டிடங்கள் பல அவரால் வடிவமைக்கப்பட்டவை. அவரின்  அலுவலகம் கொழும்பு கோட்டையில் இருந்தது.


அவர் கொழும்பு நகர வீதிகளில் அவர் சைக்கிளில் பயணம் செய்தார். திருமணமாகி சில மாதங்களில் 1910 யூலையில் அவர் ஒரு சைக்கிள் விபத்தில் சிக்கினார். அதனால் அவர்  மூளையதிர்ச்சியால் அவதிப்பட்டார். அதில் இருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை. இறுதியில் 1910ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி அவரது உடல் கோட்டையிலுள்ள அவரின் அலுவலகத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதைப் பற்றி அன்றைய சிங்கப்பூர் பத்திரிகையில் (டிசம்பர் 27 வெளியான சிலோன் ஒப்சேர்வர் பத்திரிகையை ஆதாரம் காட்டி) அன்று வெளிவந்த செய்தியொன்றை கண்டெடுக்க முடிந்தது.  அதில் காலை உணவுக்கு வேளைக்கு வந்துவிடுவதாக கூறி மனைவியிடம் இருந்து விடைபெற்றுச் சென்ற ஸ்கின்னர் மதியம் தாண்டியும் வராத நிலையில் அவரைத் தேடி ஒஸ்திரேலியா கட்டிடத்தில் (Australia Building) இருந்த அவரின் அலுவலகக் கதவைத் திறந்த போது அவர் அங்கே தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்றும், சைக்கிள் விபத்தின் பின் அவர் முற்றிலும் மாறிய மனிதாகவும், அடிக்கடி ஆத்திரமும், கவலையும் கொண்ட நபராக காணப்பட்டார் என்றும் அதில் காணக் கிடைக்கிறது.

கோட்டை கார்கில்ஸ் கட்டிடத்தை அன்று ஒஸ்திரேலியா கட்டிடம் என்று அழைத்தார்கள். இன்றும் கோட்டையில் பிரமிக்க வைக்கும் அக்கட்டிடத்தை வடிவமைத்தவர் கூட ஸ்கின்னர் தான். அவர் இறக்கும்போது அவரின் வயது 41 மட்டும் தான். இந்த குறுகிய காலத்துக்குள் அவர் முடித்து விட்டுச் சென்ற அற்புத படைப்புகள் காலத்தால் அழியாதவை. அப்படி அவரின் நினைவின் ஒரு பகுதி எப்போதும் விக்டோரியா நினைவு கண் மருத்துவமனையும் இருக்கும்.

நன்றி தினகரன் - 20.11.2022Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates