Headlines News :
முகப்பு » , , , , » கொழும்பின் மணிக்கூட்டுக் கோபுரங்கள் - (கொழும்பின் கதை - 46) - என்.சரவணன்

கொழும்பின் மணிக்கூட்டுக் கோபுரங்கள் - (கொழும்பின் கதை - 46) - என்.சரவணன்

“நகரமொன்றின் தரம் எப்பேர்பட்டது என்பதை பறைசாற்றும் குறியீடாக மணிக்கூட்டுக் கோபுரங்கள் இருந்திருக்கின்றன” என்கிறார் மணிக்கூட்டுக் கோபுரங்களைப் பற்றிய ஆய்வு நூலை வெளியிட்டுள்ள கார்லோ கிபல்லோ. 

கொழும்பின் மையப் பகுதிகளில் இன்றும் காணப்படுகிற மணிக்கூட்டுக் கோபுரங்கள் கொழும்பின் முக்கிய நினைவுக் கோபுரங்களாகத் திகழ்கின்றன.

இத்தகைய மணிக்கோட்டுக் கோபுரங்கள் இலங்கையில் அறிமுகமாக்கியவர்களும் ஆங்கிலேயர்கள் தான். ஐரோப்பாவெங்கும் குறிப்பாக தேவாலயக் கோபுரங்களில் இத்தகைய பிரமாண்டமான மணிக்கூடுகள் அமைக்கப்பட்ட பெரிய கிறிஸ்தவ தேவாலயங்கள் பலவற்றைக் காணலாம். பெரிய கடிகாரங்கள் 13ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் புழக்கத்துக்கு வந்தபோதும் இந்த கோபுர மணிக்கூட்டு கலாசாரம் 19ஆம் நூற்றாண்டில் தான் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு வெளியில் வேறு கட்டிடங்களுக்கும், கோபுரங்களுக்கும் புழக்கத்துக்கு வந்தன. இவ்வாறு உயரமான இடத்தில் பிரமாண்டமான கடிகாரத்தை வைப்பதன் மூலம் தூர இருந்தே மக்கள் நேரத்தை அறிந்துகொள்ள முடியும். அதற்கு முன்னர் தேவாலய மணிகளை ஒலிக்கச் செய்து சுற்றி உள்ளவர்களுக்கு நேரத்தை அறியத் தரும் வழிமுறை இருந்தது. மணிக்கூடுகளை தேவலாய கோபுரங்களில் நாற்திசையிலும் வைத்தபோதும் கூட மணிகளை அடித்து நேரத்தை அறிவிக்கும் மரபு இன்று வரை தொடர்கிறது. ஆரம்பத்தில் இந்த தேவாலய மணிக் கோபுரங்கள் பிராரத்தனை நேரத்தை அறிந்துகொள்வதற்காகத் தான் பிரதானமாக நிறுவப்பட்டன.

இப்போதெல்லாம் இந்த மணிக்கூண்டுகள் அதிகம் பயன்படாவிட்டாலும், ஒரு காலத்தில் இந்த மணிக்கூண்டுகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இப்போதெல்லாம் கையில் கைக்கடிகாரம்  கட்டிக்கொள்வது கூட அருகிப்போய் விட்டது. கைக்கடிகாரம் வெறும் அழகுசாதனப் பொருளாக மட்டுமே குறுகிப் போய்விட்டது. ஸ்மார்ட்போன்கள் அந்த இடத்தை எடுத்துவிட்டன. கடிகாரங்களும், கைக்கடிகாரங்களும் வசதிபடைத்தவர்களின் சாதனங்களாக இருந்த காலத்தில் இத்தகைய மணிக்கூட்டுக் கோபுரங்கள் மிகுந்த பலனளித்தன. 

இலங்கையில் பின்னர் இந்தக் மணிக்கோட்டு கோபுரங்கள் பல நகரங்களின் மையத்தில் வைக்கப்பட்டன. இது நகரத்தின் மையம் என்பதை பறைசாற்றும் ஒன்றாகக் கூட இந்த மணிக்கோட்டுகோபுரங்கள் திகழ்ந்தன. கொழும்புக்கு வெளியில் காலி, யாழ்ப்பாணம், குருநாகல், கோட்டை, போன்ற இடங்களில் பழமையான மணிக்கூண்டுகள் உள்ளன. பிற்காலத்தில் இரத்தினபுரி, காலி, மாத்தறை, கண்டி, பதுளை போன்ற நகரங்களில் போன்ற ஏனைய நகரங்களில் கட்டப்பட்டன.

இப்படி கட்டப்பட்ட பல கோபுரங்களின் தோற்றத்தின் பின்னணியில் சுவாரசியமான கதைகள் பல உள்ளன. உதாரணத்துக்கு 135 வருடங்கள் பழமை வாய்ந்த யாழ்ப்பாண மணிக்கூண்டைக் கூடச் சொல்லலாம். 1875 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த அன்றைய வேல்ஸ் இளவரசராக இருந்த இளவரசர் ஆல்பர்ட்டுக்கு அன்பளிப்பு வழங்குவதற்காக சேகரிக்கப்பட்ட பணத்தில் இருந்து இந்த மணிக்கூட்டு கோபுரம் கட்டப்பட்டது. வேல்ஸ் இளவரசர் இலங்கை வரும்போது கொழும்பில் யாழ்ப்பாணத்துக்கென தனி வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவேற்புக்காக ஏற்பாட்டுக் குழுவினர் 10,000.00 ரூபாய் நன்கொடையாகச் சேகரித்திருந்தனர். 

வேல்ஸ் இளவரசருக்குப் பரிசளிக்க 4000 ரூபாய்க்கு வெள்ளி மஞ்சுசாவையும் நகைகளையும் வாங்கினர். இந்தப் பரிசு வேல்ஸ் இளவரசருக்கு டிசம்பர் 1 , 1875 அன்று வழங்கப்பட்டது. பின்னர் இந்த வரவேற்புக்குழு யாழ்ப்பாணம் சென்று மீதி ரூ6000 ஐ என்ன செய்வது என்று சிந்தித்தனர். இது குறித்து முடிவெடுக்க 1880 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி யாழ்ப்பாணம் கச்சேரியில் நடைபெற்ற கலந்துரையாடலில் வேல்ஸ் இளவரசரின் இலங்கை பயணத்தை நினைவு கூறும் வகையில் ஒரு நினைவுச் சின்னம் அமைப்பது நல்லது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அந்த மணிக்கூண்டு கட்டப்பட்டுள்ளது.


கொழும்பின் முதல் கலங்கரை விளக்கம்.

கொழும்பில் முதன் முறையாக கலங்கரை விளக்கம் 1829 இல் கட்டப்பட்டது. அதாவது போர்த்துகேய, ஒல்லாந்தர் காலத்தில் கொழும்பில் முறையான கலங்கரை விளக்கம் இருக்கவில்லை. ஆங்கிலேயர் கொழும்பைக் கைப்பற்றி சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் தான் அதற்குரிய அவசரத்தை உணர்ந்தார்கள்.

இருப்பினும் இந்த கலங்கரை விளக்கம் குறித்து இலகுவாகத் தேடிக்கண்டுபிடிக்க முடிவதில்லை. பழைய ஆவணங்கள், வெளியீடுகளில் கூட எந்த குறிப்பும் அரிதாகவே காணப்படுகின்றன. ஆனால் இப்படி ஒரு கலங்கரை விளக்கம் இருந்ததை பிரிட்டிஷ் நூலகத்தின் இணையத்தளத்தில் சில படங்கள் காணக் கிடைக்கின்றன. அதன் கீழ் சில விளக்கங்களும் உள்ளன. இந்தப் படத்தை அப்போது எடுத்தவர் பிரபல புகைப்படப் பிடிப்பாளர் ஃபிரடெரிக் ஃபீபிக் (Fiebig, Frederick). 

கொழும்பு கோட்டையின் கொடிக் கம்பமும் பீரங்கிகளையும் அப்படத்தில் காணக் கிடைக்கிறது. கொழும்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில் கலங்கரை விளக்கம் கடற்கரையின் ஓரத்தில் அமைந்திருந்ததைக் காண முடிகிறது. இக்கலங்கரை விளக்கம் இரவு நேரத்தில் கொழும்பு துறைமுகத்தை ஒரு நிலையான ஒளியைக் காண்பிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வட்டமான நான்கடுக்கு வீடுபோல அமைக்கப்பட்டிருக்கும் அந்த கோபுரம் நான்காவது அடுக்கில் சிறியதாக காணப்படுகிறது. அடிப்பகுதியிலிருந்து உச்சி வரை அதன் உயரம் 74 அடியாகும் (22.5 மீட்டர்). மேலும் ஒளியைப் பாய்ச்சும் கோபுரம் கடல் மட்டத்திலிருந்து 97 அடி உயரத்தில் அமைந்திருந்தது. கீழ் அறைகளின் விட்டம் 21 அடி 6 அங்குலம் (6.5 மீட்டர்) மற்றும் ஒளி பாய்ச்சும் அறை 11 அடி (6.4 மீட்டர்) ஆகும். 16 மைல் வரை இதைக் காணக் கூடியதாக இருந்திருக்கிறது. கடலில் இருந்து கிட்டத்தட்ட 120 கெஜம் (110 மீட்டர்) தொலைவில் அமைந்திருந்தது. அதுபோல் கடல் மட்டத்திலிருந்து 12 கெஜம் (10.9 மீட்டர்) உயரத்தில் அது இருந்தது.

இது 1844 ஆம் ஆண்டு பழுதுபார்க்கப்பட்டு 1849 இல் வர்ணம் பூசப்பட்டிருக்கிறது.  அப்போது உள்நாட்டில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி விளக்குகள் ஏற்றப்பட்டன. இக் கலங்கரை விளக்கம் 1867 வரை செயல்பட்டது. 1869 க்கும் 1871க்கும் இடையில் கொழும்பு கோட்டையின் அரண்களை இடித்து அகற்றினார்கள் ஆங்கிலேயர்கள். அப்போது இந்த கலங்கரை விளக்கமும் சேர்த்தே இடிக்கப்பட்டது. அப்படி இடிக்கப்பட்ட போது அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்னர் கொழும்பு கோட்டை கலங்கரை விளக்க மணிக்கூட்டுக் கோபுரம் கட்டப்பட்டிருந்தது.

ஃபிரடெரிக் ஃபீபிக் அப்படத்தை 1852இல் எடுத்திருக்கிறார். அவர் எடுத்த புகைப்படங்களை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி 1856 இல் வாங்கியிருக்கிறது. 

1864 ஆம் ஆண்டு 17ஆம் திகதி வெளியான “The illustrated London news” என்கிற சஞ்சிகையில் 280ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிற கோட்டோவியத்தில் இந்த கலங்கரை விளக்கத்தைத் தெளிவாகக் காண முடிகிறது. இக்கட்டுரைக்காக அச் சஞ்சிகையை தேடிக்கண்டுபிடித்த போது காண முடிந்தது. 285 ஆம் பக்கத்தில் அந்தப் படத்திற்கான மேலதிக விளக்கங்களை அதில் வெளியிட்டிக்கிறார்கள். “Photograph by messrs Slinn & Co, of Colombo” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

கொழும்பில் இருந்த கலங்கரை விளக்கங்களுக்கும், இந்த மணிக்கூட்டுக் கோபுர கலங்கரைக்குமான பராமரிப்புச் செலவாக 1916-1917 ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுக திணைக்களத்தால் 13,190 ரூபாய் செலவளித்திருப்பதை 1917 ஆண்டின் நிர்வாக அறிக்கை தெரிவிக்கிறது. 


கலங்கரையும், மணிக்கூண்டும்

இலங்கையில் கலங்கரை விளக்கங்களின் வரலாறு பிரித்தானிய காலனித்துவ காலத்தில் இருந்து தொடங்குகிறது. 1815-1948 வரை ஆங்கிலேயர்கள் இலங்கையை ஆண்டனர். இன்று இலங்கையில் உள்ள பெரும்பாலான கலங்கரை விளக்கங்கள் இந்தக் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த கலங்கரை விளக்கங்கள்; இம்பீரியல் லைட்ஹவுஸ் சர்வீஸ் (Imperial Lighthouse Service) என்ற நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்பட்டன. 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் கலங்கரை விளக்கங்களின் செயற்பாடுகள் கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த போதிலும் இன்றைய நிலையில் இலங்கை துறைமுக அதிகாரசபை அவற்றை நிர்வகித்து வருகின்றது. இன்று இலங்கையில் 25 கலங்கரை விளக்கங்கள் உள்ளன, அவற்றில் 14 மட்டுமே செயல்படுகின்றன. எனினும், இலங்கையின் 25 கலங்கரை விளக்கங்களில் நான்கு கொழும்பில் அமைந்துள்ளன. கொழும்பு கலங்கரை விளக்கம், கொழும்பு வடக்கு பிரேக் வாட்டர், கொழும்பு தெற்கு பிரேக் வாட்டர் மற்றும் பழைய கொழும்பு கோட்டை கலங்கரை விளக்கம் என்பவையே அவை. இந்த நான்கு கலங்கரை விளக்கங்களில், பழைய கொழும்பு கோட்டை கலங்கரை விளக்கத்தைத் தவிர, மீதமுள்ள மூன்று கலங்கரை விளக்கங்கள் இன்றும் செயல்படுகின்றன.


கொழும்பு கோட்டையில் உள்ள இந்த பழமையான மணிக்கூண்டு பல வழிகளில் முக்கியமான வரலாற்று நினைவுச்சின்னமாகும். இந்த மணிக்கூட்டு கோபுரத்தின் நிர்மாணமானது கொழும்பில் வசிப்பவர்களுக்கு மட்டுமன்றி முழு இலங்கையர்களுக்கும் ஒரு வகையான ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒன்றுமாக இருந்தது. கொழும்பில் குவியும் உல்லாசப் பிராணிகளையும் அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது. ஏனெனில் இவ்வாறான ஒரு மணிக்கூட்டு கோபுரத்தை இந்நாட்டு மக்கள் இதற்கு முன் பார்த்ததில்லை. பிரித்தானிய அரசாங்கம் இலங்கையில் நிறுவிய முதலாவது மணிக்கூண்டு இதுவாகும். கொழும்பு கோட்டையில் சதாம் வீதி மற்றும் ஜனாதிபதி மாவத்தை (முன்னாள் இராணி வீதி) என்பவை சந்திக்கும் சந்தியில் கடிகாரத்துடனான இந்தக் கலங்கரை விளக்கம் இன்று செயலற்ற நிலையில் உள்ளது. இந்த கோபுரத்தை சுற்றி சுமார் 20 மீற்றர் சுற்றுவட்டத்துக்குள் மத்திய வங்கி, ஜனாதிபதி மாளிகை, முன்னாள் தபால் தலைமையகம் என்பவை உள்ளன.

இது கொழும்பு நகரின் மிகவும் தனித்துவமான வரலாற்று நினைவுச்சின்னமாக கருதப்படுகிறது. 1860 இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கம் இலங்கையில் கடிகாரம் பொருத்தப்பட்ட ஒரேயொரு கலங்கரை என்பது அதன் விசேடத் தன்மையாகும். “கொழும்பு கோட்டை பழைய கலங்கரை விளக்கம்” என்று அது அழைக்கப்பட்டாலும், கடிகாரம் மட்டும் இன்றும் செயல்படுவதால், தற்போது அது மணிக்கூண்டு கோபுரமாக பயன்படுத்தப்படுகிறது. வரலாற்றுத் தகவல்களின்படி, இது 1856-57 இல் ஒரு மணிக்கூட்டு கோபுரமாக கட்டப்பட்டது. பின்னர் 1860ல் இந்த மணிக்கூண்டு கோபுரத்தில் கலங்கரை விளக்கு ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


1906 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “A guide to Colombo with maps”  என்கிற கொழும்பின் வழிகாட்டி நூலில் இந்த கலங்கரை விளக்கத்துடன் சேர்ந்த மணிக்கூட்டுக்கோபுரமானது ஒளிக் குவிவை பாய்ச்சும் விசேட அம்சம் பொருந்திய ஒன்றென்றும் அது உலகத் தர வரிசையில் உலகின் மிகச்சிறந்த ஒன்றென்றும் குறிப்பிடுகிறது. கடல் மட்டத்திலிருந்து அந்த கலங்கரை உயரம் 132 அடி உயரத்தில் இருப்பதால் கொழும்புத் துறைமுகத்தின் வழிகாட்டலுக்கு மிகவும் உதவும் ஒன்றென்றும்  தெளிவான காலநிலையில் 17 மைல் தொலைவு வரை கடலில் தெரியும் என்றும் குறிப்பிடுகிறது.  அதுமட்டுமன்றி ஆரம்பத்திலிருந்து மண்ணெண்ணை மூலம் விளக்கெரிக்கப்பட்டுத் தான் கலங்கரை விளக்கை ஒளிர்க்கச் செய்தார்கள். அந்த ஒளியைக் கொண்டு தான் பல கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை அடைந்தன. ஆனால் 1907 ஆம் ஆண்டு தொடக்கம் எரிவாயு மூலம் விளக்கெரிக்கப்பட்டது. பின்னர் 1933 இல் இருந்து 1500 மெழுகுவர்த்திகளின் ஒளிக்கு நிகரான ஒளியைத் தரக்கூடிய மின்சார மின்விளக்கு நிர்மாணிக்கப்பட்டது. உள்ளே வைக்கப்பட்டிருக்கும் மணியின் எடை மாத்திரம் 250 கிலோகிராம் ஆகும்.

கோபுரத்திற்கான அனைத்து வடிவமைப்புத் திட்டமும் அப்போது இலங்கையின் ஆளுநராக பணியாற்றிய சர் ஹென்றி ஜார்ஜ் வார்டின் (Sir Henry George Ward -1797 – 1860) மனைவி எமிலி எலிசபெத் வார்டால் (Emily Elizabeth Ward) வடிவமைக்கப்பட்டது. அவர் ஒரு சிறந்த ஓவியரும் கூட. அவரது வடிவமைப்பின்படி, கடிகார கோபுரத்தின் கட்டுமானத்தின் இயக்குனரான கட்டிடப் பொறியியலாளர் ஜோன் ஃப்ளெமிங் சர்ச்சிலின் (J. F. Churchill) மேற்பார்வையின் கீழ் பொதுப்பணித் துறையால் 1957 பெப்ரவரியில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த 95 அடி உயர கோபுரமே அன்றைய கொழும்பில் மிக உயரமான கோபுரமாக இருந்தது.

இந்த கோபுரத்தை ஆரம்பத்தில் அப்போது ஆளுநராக இருந்த சேர் ரொபர்ட் பிரவுன்ரிக், கோபுரத்தை நிறுவுவதற்காக 1814 ஆம் ஆண்டு 1,200 பவுண்டுகள் செலவில் ஒரு கடிகாரத்தை வடிவமைத்தார். ஆனால் பொருளாதாரச் சிக்கலில் அந்தத் தொகையைச் செலுத்த முடியாமல் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும், கடிகாரம் 1857 இல் கோபுரம் நிறுவப்படும் வரை ஒரு பழைய களஞ்சியத்திலேயே அக்கடிகாரம் இருந்தது. சுமார் நாற்பதாண்டுகளுக்குப் பின்னரும் அது நல்ல நிலையிலேயே இருந்தது. எனவே மேலதிகமாக 280 பவுண்டுகள் அக்கடிகாரத்தை கடிகாரத்தை சுத்தம் செய்வதற்கும் எண்ணெய் தடவி புதுப்பிப்பதற்கும் செலவிடப்பட்டிருக்கிறது.


இந்த கடிகாரம் மிகவும் உயர்தர கடிகாரம் என்று அதன் மதிப்பில் இருந்து உணர்ந்து கொள்ளலாம். இதனை தயாரித்தது பிரிட்டனில் அங்கீகரிக்கப்பட்ட புகழ்பெற்ற வணிக நிறுவனமான டென்ட் (Dent) நிறுவனமாகும். இதில் உள்ள இன்னொரு விசேடத்துவம் என்னவென்றால் லண்டனில் புகழ்பெற்ற “பிக் பென்” கடிகாரத்தை நீண்ட உத்தரவாதக் காலத்துடன் தயாரித்த டென்ட் (Dent) நிறுவனம் அது. “பிக் பென்” என்பது இங்கிலாந்து பாராளுமன்றக் கட்டிடமான வெஸ்ட்மின்ஸ்டர் வளாகத்தில் உள்ள பிரபலமான மணிக் கூட்டுக் கோபுரம் என்பதை அறிவீர்கள். இலங்கைக்கு தயாரித்த தரம்வாய்ந்த கடிகாரம் இங்கு கொண்டுவரப்பட்டது. மணிக்கூட்டு கோபுரத்தின் பிரதான மணி சுமார் 250 கிலோகிராம் எடையைக் கொண்டது. இந்த மணியைத் தவிர வேறு இரண்டு துணை மணிகளும் இருந்தன. அவற்றின் எடை 135 கிலோ.

Big Ben  என்பது இங்கிலாந்து பாராளுமன்றக் கட்டிடமான வெஸ்ட்மின்ஸ்டர் கட்டிடத்தில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரம்
இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். இங்கிலாந்தில் “பிக் பென்” கோபுரம் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்னரே இந்த கலங்கரை மணிக்கூண்டு (Lighthouse Clock Tower) கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. 1859ஆம் ஆண்டு மே31 அன்று தான் “பிக் பென்” திறக்கப்பட்டது. ஆனால் கோட்டை மணிக்கோட்டு கோபுரம் 1857 ஆம் ஆண்டு மார்ச் 25 அன்றே திறக்கப்பட்டுவிட்டது. இந்த கடிகாரத்தை வடிவமைத்த அதே டென்ட் தான் “பிக்பென்” கடிகாரத்தையும் வடிவமைத்தார். 

1907 அளவில் இந்த கடிகாரம் பழுதானது. எனவே அந்தக் கடிகாரத்தை அகற்ற வேண்டியதாயிற்று. மீண்டும் 22.10.1913 அன்று இங்கிலாந்தில் இருந்து புதிய கடிகாரம் தருவிக்கப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டது. இன்று இருக்கும் 6-அடி கடிகார முகப்பும் பொருத்தப்பட்டது. ஆனால் அதனை உடனடியாக திறந்து வைக்க முடியவில்லை. முதலாம் உலக யுத்தம் தொடங்கப்பட்டு இருந்ததால் இழுபறிப்பட்டு பின்னர் 1914 ஏப்ரல் 04 அன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

இந்த காலத்தில் கோட்டை கடற்கரையோரத்தில் புதிய கலங்கரை (“கல்பொக்க லைட் ஹவுஸ்” என்று அழைக்கப்படும் “Galle Buck Lighthouse”) 1952 கட்டப்பட்டதால் யூலை 12 ஆம் திகதியிலிருந்து இந்தக் கோபுரத்தின் கலங்கரை வெளிச்சம் நிறுத்தப்பட்டது. அதேவேளை இந்த மணிக்கூண்டு கோபுரத்தை சுற்றி கட்டிடங்கள் எழத் தொடங்கின. தூரத்திலிருந்து வரும் கப்பல்களுக்கு வழிகாட்ட இந்த கோபுரத்தின் தேவை அற்றுப் போன நிலையில் இது நிறுத்தப்பட்டது.


கொழும்பு கோட்டையில் உள்ள இந்த பழைய கலங்கரை விளக்கமே இலங்கையின் முதலாவது கலங்கரை விளக்கம் என்கிறனர் சிலர். ஆனால் சில தகவல்களின்படி காலி கோட்டையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கமே இந்நாட்டின் முதல் கலங்கரை விளக்கமாகும். எவ்வாறாயினும், கொழும்பு கோட்டையின் பழைய மணிக்கூட்டு கோபுரம் இலங்கை நெடுஞ்சாலைகளின் தூரத்தை (Mileage) அளவிடுவதற்கான மையப் புள்ளியாக இன்றும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது கொழும்பின் மையம் இந்த கோபுரத்தின் அடிவாரத்தில் இருந்து தான் நாளா திசைகளுக்கும் அளவிடப்படுகிறது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும், காலிக்கும் இங்கிருந்து கணக்கெடுக்கப்படுகிறது. முதற் தடைவையாக கொழும்புக்கும் கண்டிக்குமான தூரத்தை இதன் அடிவாரத்திலிருந்து தான் கணக்கெடுக்கப்பட்டது. இங்கிருந்து கண்டி 115.6 கிலோமீட்டர் தூரம் என கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது.


கான் மணிக்கூண்டு கோபுரம்

கொழும்பில் உள்ள இந்த கலங்கரை விளக்கக் கோபுரத்தைப் பற்றிப் பேசும் போது மறக்க முடியாத இன்னொரு மணிக்கூண்டும் உள்ளது. அதுதான் கோட்டை மல்வத்தை வீதி மற்றும் பிரதான வீதி என்பன சந்திக்கும் இடத்தில் உள்ள கான் நினைவு மணிக்கூண்டு கோபுரம். கொழும்பு மத்திய இரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நேராக வந்தால் இந்த இடத்தை வந்தடையலாம். ஹன்டர் என்ட் கொம்பனிக்கு எதிரில் துறைமுகத்தின் நுழைவாயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது இது. கான் மணிக்கூட்டுக் கோபுரம் என்று இது அழைக்கப்படுகிறது.

பேர்சி குடும்பத்தைச் சேர்ந்த கான் (Framjee Bhikhajee Khan) என்பவரின் 45 ஆண்டின்  நினைவாக அவரின் புதல்வர்களால் இது அமைத்துக் கொடுக்கப்பட்டது. இலங்கைக்கு பல்வேறு வழிகளில் முஸ்லிம்கள் வந்து குடியேறியிருக்கிறார்கள். 7ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தின் மீதான அரேபிய ஆக்கிரமிப்பின் போது அங்கிருந்து தப்பி சிதைந்து பல்வேறு இடங்களில் குடியேறியவர்கள் பார்சி இனத்து\முஸ்லிம்கள். அவ்வாறு குஜராத்தில் குடியேறி வாழ்ந்து வந்தவர்களின் சந்ததியினர் தான் ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் பெரிய வர்த்தக வியாபார  நோக்கத்துக்காக குடியேறிய பேர்சியர்கள்.


நிலையாக தம்மை பல துறைகளில் நிலைநிறுத்திக்கொண்ட அவர்கள் குறிப்பாக தரம் வாய்ந்த எண்ணெய் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்தார்கள். 1878ஆம் ஆண்டு அந்தக் குடும்பத்தின் தலையாய நபரான கான் இறந்து போனார். அவர்களின் இரு புதல்வர்கள் அந்த வியாபாரத்தை பெரிதாக வளர்த்தெடுத்தார்கள். அதற்கு மூலாதாரணமான தமது தந்தையின் பெயரை என்றென்றும் சொல்லக் கூடியவாறு அரசின் முழு சம்மதத்துடன் 1923 இல் இந்த மணிக்கூட்டுக் கோபுரத்தை அன்று 17,113 ரூபாய் செலவில் கட்டி முடித்தார்கள். அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே நூறாண்டுகளை எட்டும் அந்த கோபுரம் இன்றும் கானின் பெயரால் நிலைத்து நிற்கிறது. இந்த நூறாண்டில் கொழும்பின் தோற்றத்தில் பல்வேறு மாற்றங்களை நகர, மற்றும் வீதி அபிவிருத்தியின் பெயரால் செய்ய நேரிட்டாலும் இந்த மணிக்கூட்டுக் கோபுரத்தைக் கொண்ட சுற்று வட்டத்தை சேதப்படுத்தியதில்லை. அதில் உள்ள கல்வெட்டில் இப்படிப் பொறிக்கப்பட்டிருக்கிறது.

"இந்த மணிக்கூட்டு கோபுரமும் நீரூற்றும் ஃபிராம்ஜி பிகாஜி கானின் நினைவாக அவரது மகன்களான பிகாஜி மற்றும் மன்சர்ஷோ ஃப்ரம்ஜி கான் ஆகியோரால் அன்பான நன்றியின் அடையாளமாக அமைக்கப்பட்டது. மேலும் 1923 ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் தேதி, கானின் நினைவாக கொழும்பு குடிமக்களுக்கு மாநகர சபையின் மூலம் அர்ப்பணிக்கப்பட்டது.”

இதில் அமைக்கப்பட்டிருந்த நீருற்று எப்போதோ நின்றுவிட்டது. இப்போது அது இல்லை. ஆனால் கடிகாரக் கோபுரம் அனைவருக்கும் வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. ஒன்றரை நூற்றாண்டையும் கடந்து விட்ட வரலாற்றை தன்னகத்தே கொண்டிருக்கும் முக்கிய ஆங்கிலேய காலனித்துவத்தின் எஞ்சிய அடையாளம் இவை.

நன்றி - தினகரன் - 30.10.2022


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates